ஏன் இவ்வளவு—வெறுப்பு?
ஜெர்மனியிலிருந்து விழித்தெழு! நிருபர்
“ஏன்” என்பது ஒரு சுருக்கமான வார்த்தையே; ஆனாலும் ஒரு பதிலை வற்புறுத்திக் கேட்கும் ஒன்று. உதாரணமாக, மார்ச் 1996-ல், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டன்பிளேன் என்ற இடத்திலுள்ள ஒரு பள்ளியின் வெளிப்புறத்தில், குவியலாக இருந்த மலர்க்கொத்துக்களோடும் கரடி பொம்மைகளோடும் இந்த வார்த்தை ஒரு காகிதத்துண்டில் எழுதி இணைக்கப்பட்டிருந்தது. சில நாட்களுக்கு முன்புதான், ஒரு ஆள் அத்துமீறி உள்ளே நுழைந்து 16 சின்னஞ்சிறிய மழலைகளையும் அவர்களுடைய ஆசிரியையையும் சுட்டுக்கொன்றான். இன்னும் பலரை காயப்படுத்தினான்; பிறகு தன்னையே சுட்டுக்கொண்டான். தெளிவாகவே, தன்மீதும், பிறர்மீதும், பொதுவாக சமுதாயத்தின்மீதும் அவ்வளவு வெறுப்படைந்தவனாய் இருந்தான் அவன். துயரக்கடலில் மூழ்கியிருந்த பெற்றோர்களும் நண்பர்களும், உலகமுழுவதிலுமுள்ள கோடிக்கணக்கான மக்களும் ‘ஏன்? ஏன் ஒருபாவமும் அறியாத குழந்தைகள் இவ்வாறு சாகின்றன?’ என்ற அதே கேள்வியைக் கேட்கின்றனர்.
இந்த உலகம் அநியாயமும் விளக்கமளிக்க முடியாத அளவுக்கு வெறுப்பும் நிறைந்ததாக இருக்கிறது என்பதை நீங்களும் கவனித்திருக்கலாம். உண்மையில், ஏதாவது ஒரு காரணத்தால், நீங்களுமே வெறுப்புணர்வுக்கு ஆளாகியிருக்கலாம். நீங்களும், ‘ஏன்?’ என்ற கேள்வியை ஒருவேளை பல தடவை கேட்டிருப்பீர்கள்.
வெறுப்பு—நல்லதும் கெட்டதும்
“வெறுப்பு,” “வெறுப்புணர்வு” ஆகியவை “மிகுந்த பகைமையும் அருவருப்பும்” என்று வரையறுக்கப்படுகின்றன. சந்தேகமின்றி, தீங்கு விளைவிக்கும், அல்லது தனிப்பட்ட உறவுகளுக்குக் கேடு விளைவிக்கும் விஷயங்களினிடமாக “மிகுந்த பகைமையும் அருவருப்பும்” காட்டுவது நன்மையானதே. ஒவ்வொருவரும் இந்த வகையான வெறுப்புணர்வைக் காட்டியிருந்தால், இந்த உலகம் உண்மையிலேயே வாழ்வதற்கு ஒரு மேம்பட்ட இடமாய் இருந்திருக்கும். என்றாலும், விசனகரமாக, அபூரண மனிதர்கள் தவறான விஷயங்களைத் தவறான காரணங்களுக்காக வெறுக்க முற்படுகின்றனர்.
தப்பெண்ணம், அறியாமை, அல்லது தவறான தகவல் ஆகியவற்றால் அழிவுக்கேதுவான வெறுப்புணர்வு ஏற்படுகிறது; மேலும் “பயம், கோபம், அல்லது புண்பட்ட உணர்வு” ஆகியவற்றால் பொதுவாக வெடித்தெழுகிறது என்பதாக ஒரு வரையறை கூறுகிறது. சரியான அடிப்படையின்றி, இந்த வெறுப்புணர்வு தீங்கில் விளைவடைகிறது; மேலும், ‘ஏன்?’ என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப எழுப்புகிறது.
நமக்குத் தெரிந்தவர்களில் சிலரோடு பழகுவது ரொம்பவும் கஷ்டம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும்; அவர்களுடைய பண்புகள் அல்லது பழக்கவழக்கங்கள் சில சமயங்களில் நமக்கு எரிச்சலூட்டுவதாய் இருக்கலாம். ஆனால் எரிச்சல் என்பது ஒரு விஷயம்; உடல் ரீதியில் மக்களுக்குத் தீங்கு விளைவிப்பது என்பது வேறு விஷயம். ஆகவே, ஒரு நபர், ஒரு முழு மக்கள் தொகுதியின் பேரிலும், பெரும்பாலும் தனக்குத் தெரியாத மக்களின் பேரிலும் வெறுப்புணர்வை மனதில் வைத்துக்கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள நமக்குச் சிரமமாக இருக்கலாம். அவருடைய அரசியல் கருத்துக்களை அவர்கள் ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம்; வேறொரு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்; அல்லது மற்றொரு இனத்தவராய் இருக்கலாம்; ஆனால், அவர்களை வெறுக்க அது ஒரு காரணமாய் இருக்கிறதா?
என்றபோதிலும், அப்படிப்பட்ட வெறுப்பு இருக்கத்தான் செய்கிறது! ஆப்பிரிக்காவில் வெறுப்புணர்வு, 1994-ல் ருவாண்டாவைச் சேர்ந்த ஹூட்டு, டூட்ஸி இனத்தவர் ஒருவரையொருவர் கொல்லும்படி வழிநடத்தியது; அது, “இவ்வளவு சிறிய ஒரு நாட்டில் எப்படி இவ்வளவு வெறுப்பு சேர்ந்தது?” என்று ஒரு செய்தியாளர் கேட்கும்படி செய்தது. மத்தியக் கிழக்கு நாடுகளில், அராபிய மற்றும் இஸ்ரேலிய வெறியர்களால் செய்யப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு வெறுப்புணர்வே காரணமாய் இருந்திருக்கிறது. ஐரோப்பாவில் வெறுப்புணர்வுதான் முன்னாள் யுகோஸ்லாவியாவின் பிரிவுக்கு வழிநடத்தியது. ஒரு செய்தித்தாளின் அறிக்கையின்படி, ஐக்கிய மாகாணங்களில் மட்டும் “தோராயமாக 250 வெறுப்புணர்வு தொகுதிகள்” இனவேறுபாட்டு கருத்துக்களைப் பரப்பிவருகின்றன. ஏன் இவ்வளவு வெறுப்பு? ஏன்?
வெறுப்புணர்வு அவ்வளவு ஆழமாய் வேரூன்றியிருப்பதால், அது பிறப்பித்திருக்கும் சண்டைகள் தீர்த்துவைக்கப்படுகிறபோதிலும் அது நிலைத்திருக்கிறது. போர் மற்றும் பயங்கரவாதிகள் நிறைந்த நாடுகளில் சமாதானத்தையும் போர் நிறுத்தத்தையும் நிலைநாட்டுவதில் சிரமம் இருப்பதற்கு இதையல்லாமல் வேறெதைக் காரணம் காட்ட முடியும்? சரஜெவோ நகர், பாஸ்னியா மற்றும் ஹெர்ஸகோவினா-குரோஷிய கூட்டாட்சியின்கீழ் மீண்டும் ஒன்றுசேரும்படி 1995-ன் இறுதியில் பாரிஸில் ஒப்பமிடப்பட்ட சமாதான ஒப்பந்தத்திற்குப் பிறகும், நடந்தவற்றுக்கு வேறெதைக் காரணமாய் விளக்கமளிக்க முடியும்? அங்கு வாழ்ந்த செர்பியர்களில் பெரும்பாலோர், பதில்கொள்ளை அடிக்கப்படுமோ என்ற பயத்தில் அந்த நகர்ப்பகுதியையும் புறநகர்ப் பகுதியையும் விட்டு ஓடிச்செல்ல ஆரம்பித்தனர். மக்கள் கொள்ளையடித்ததையும், தாங்கள் விட்டுச்சென்ற கட்டடங்களை எரிப்பதையும் பற்றிய அறிக்கையில், “சரஜெவோ மறுபடியும் ஒன்றுசேர்ந்திருக்கிறது; அதன் மக்களோ சேரவில்லை” என்று டைம் பத்திரிகை சொல்லி முடிக்கிறது.
ஒருவரையொருவர் வெறுக்கும் மக்களுக்கிடையே நிலவும் சமாதானம், சிறந்த சாதகமான சூழ்நிலைகளில்கூட, போலிப் பணம் போன்ற ஒரு போலி சமாதானமாகவே மதிப்பற்றதாக இருக்கிறது. அதற்கு நிஜ மதிப்பு எதுவும் இன்றி இருப்பதால், லேசான அழுத்தம் தந்தால் போதும் அது முறிந்துவிடலாம். ஆனால், இந்த உலகில் அளவுக்கதிகமான வெறுப்புணர்வு இருக்கிறது, வெகு குறைவான அன்பே இருக்கிறது. ஏன்?
[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]
தப்பெண்ணம், அறியாமை, அல்லது தவறான தகவல் ஆகியவற்றால் அழிவுக்கேதுவான வெறுப்புணர்வு ஏற்படுகிறது