தேனீ தேனீயல்ல, எப்போது?
ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மலர்களைச் சுற்றி வட்டமடித்து, அவற்றிலுள்ள தேனை உறிஞ்சி கூட்டிற்கு எடுத்துச்சென்று, அப்பப்பா எத்தகைய சுறுசுறுப்பான வாழ்க்கை தேனீக்களுக்கு. வசந்தகாலம் வந்ததும் ஆண் தேனீக்கள் துணை தேட ஆரம்பிக்கின்றன. அவை தோற்றத்தையும் வாசனையையும் சார்ந்து இணைசேருகின்றன. ஆனாலும், கிட்டப்பார்வையுள்ள தேனீயின் கடைக்கண் பார்வை தன்மீது விழாதோவென ஏங்கித் தவிக்கிறாள் ஒரு விசித்திரக் காதலி. அவளே ஆர்க்கிட் மலர்.
தென் ஐரோப்பாவில் அநேக காட்டு ஆர்க்கிட் மலர்கள் பெண் தேனீக்களைப் போன்று பாவனை செய்கின்றன; இதன் காரணமாகவே அவற்றில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த மலர்கள் தங்கள் மகரந்தத் தூள்களை மற்ற ஆர்க்கிட் மலர்களுக்கு அனுப்ப வேண்டும். தேனீக்களே அவற்றை சுமந்து செல்வதற்கு பொருத்தமானவை. ஆனால் தேனீக்களைக் கவருவதற்கு ஆர்க்கிட் மலர்களிடம் சுவையான தேன் இல்லை; ஆகவே அவை ஏதாவதொரு ஏமாற்றுவேலை செய்தே ஆகவேண்டும். அதாவது, அம்மலரின் தோற்றமும் வாசனையும் ஒரு பெண் தேனீயினுடையதைப் போலவே இருப்பதால் ஆண் தேனீ அதனுடன் இணைசேர முன்வருகிறது! இந்த ஆர்க்கிட் மலர்களில் ஒவ்வொரு வகையும் அதற்கேயுரிய பொய்தோற்றத்தையும் வாசனையையும் பெற்றிருக்கிறது.
தேனீ தன் தப்பை உணருவதற்குள்ளாகவே, அந்த ஆர்க்கிட் மலரின் பிசுபிசுப்பான மகரந்தங்கள் தேனீயின் உடலில் ஒட்டிக்கொண்டுவிடுகின்றன. அதன்பின் பறந்துசெல்லும் தேனீ இன்னொரு ஆர்க்கிட் மலரிடம் ஏமாறுகிறது. அம்மலருக்கோ மகரந்தம் கிடைத்துவிடுகிறது. இவ்வாறு பலமுறை ஏமாந்த பிறகு, ஆர்க்கிட்டுகளை நம்பவேகூடாது என்பதை தேனீ உணருகிறது. அதற்குள் அது சில மலர்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெற வழிவகுத்திருக்கும்.
யோசிக்கத் தெரியாத இந்த ஆர்க்கிட் மலர்கள், தேனீக்களை முட்டாளாக்க தகுந்த வாசனையையும் தோற்றத்தையும் எப்படிப் பெற்றன? இப்படிப்பட்ட வியத்தகு செயல்கள், ஓர் புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகர் இருக்கிறார் என்பதற்கு அத்தாட்சி அளிக்கின்றன; அவரது படைப்பு நம்மைத் திகைப்பூட்டி வசீகரிக்க ஒருபோதும் தவறுவதில்லை.