ஈக்வடார்—பூமத்திய ரேகைக்கு குறுக்கே அமைந்துள்ள நாடு
ஐரோப்பாவிலிருந்து வரும் பயணிகளாக எனக்கும், என் மனைவிக்கும் ஈக்வடாரில் முதன்முதலில் தென்பட்டது பூமத்திய ரேகைதான். அது கண்ணுக்குத் தெரியாத ஒரு கோடு என்பது உண்மையே, ஆனால் ஈக்வடாரின்மீது அதன் பாதிப்பு மிகவும் தெளிவானது.
ஸ்பானிய மொழியில் ஈக்வடார் என்பது “பூமத்திய ரேகை”யைக் (equator) குறிக்கிறது. ஈக்வடாரின் தட்பவெப்ப நிலையை பூமத்திய ரேகைதான் கட்டுப்படுத்துகிறது என சிலர் நினைக்கலாம். என்றாலும், வெப்பமான அல்லது குளிரான வானிலை, புவியியல்-சார்ந்த எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதைவிட எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்பதையே அதிகம் சார்ந்திருந்ததை நாங்கள் அங்கு போய்சேர்ந்த கொஞ்ச நேரத்திலேயே கண்டுணர்ந்தோம். இந்த அட்சரேகைகளில் வருடம் முழுவதும் சூரியன் ஏறக்குறைய தலைக்கு மேலேயே சுற்றுவதனால், கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்பதே, ஒன்றன்மேல் ஒன்றாக எத்தனை உடைகளை உடுத்தவேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கான மிகச் சிறந்த வழிகளுள் ஒன்று.
ஈக்வடார் என்றாலே பூமத்திய ரேகைதான் மனதிற்கு வருகிறபோதிலும், ஆண்டீஸ் மலைகளே அந்நாட்டிற்கு தனித்தன்மையை தருகின்றன. அதன் முதுகெலும்புபோல நீண்டுகிடக்கும் கம்பீரமான இந்த மலைகள், எண்ணிலடங்கா விதவிதமான நிலப்பரப்புகளை தோற்றுவிக்கின்றன.
விதவிதமான நிறங்கள்
ஈக்வடாரைப் பற்றிய எங்கள் இரண்டாவது அபிப்பிராயம் நிறமே. அங்கு போய்சேர்ந்த உடனேயே ஒருநாள் காலை, சில பெரிய மரங்களின் நிழலில் அமர்ந்திருந்தோம். ஓரியோல்களின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி போன்ற ஓசைகளும், ரென்களின் தொடர்ச்சியான கலகலப்பொலியும், துடுக்குத்தனமுள்ள ஆன்ட்பிட்டாக்களின் சத்தமான ஒலிகளுமே எங்களை வரவேற்றன. ஆனால் அந்த ஓசைகளைவிட அவற்றின் நிறங்களே அதிக கவர்ச்சியாய் இருந்தன.
கருஞ்சிகப்பு நிறமுடைய செந்நிற ஃபிளைகாட்சர் ஒன்று, ஒரு கொசுவைப் பிடிப்பதற்காக அது அமர்ந்திருந்த இடத்திலிருந்து விருட்டென வெளியே பறந்தது. அடர் பச்சை நிறமுள்ள பச்சைக்கிளிகளின் ஒரு கூட்டம், தலைக்கு மேல் வட்டமிட்டுக் கொண்டிருந்த ஒரு டர்க்கி கழுகை விரட்டுகையில் கவனத்தைப் பெற பெருங்கூச்சலிட்டன. பளிச்சென்ற மஞ்சளும் கருப்பும் கலந்த ஓரியோல்களும் நீலநிறமுள்ள மார்ஃபோ பட்டாம்பூச்சிகளும் அந்த மறக்கமுடியாத காட்சிக்கு அவற்றின் விதவிதமான நிறங்களை கூட்டின.
அந்நாட்டினூடே பயணம் செய்கையில், பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளின் பளபளப்பான வண்ணங்களை ஈக்வடாரின் துணிகளிலும் கைவினைப் பொருட்களிலும் கவனித்தோம். உதாரணத்திற்கு, கன்யார் இந்தியப் பெண்களின் அடர் சிகப்புநிற பாவாடைகள் ஃபிளைகாட்சரின் செந்நிறத்தை போன்றிருந்தன. அதோடுகூட, ஓட்டவாலூ இந்தியர்களின் பளபளப்பான சித்திரத் தொங்கலாடைகள், ஈக்வடாரிலுள்ள எல்லா நிறங்களையும் ஒருங்கே கொண்டுள்ளதைப்போல் இருந்தன.
பல்வேறுபட்ட வானிலை
பூமத்திய ரேகையும் ஆண்டீஸும் இணைந்து ஈக்வடாரில் பல்வேறுபட்ட வானிலையை தோற்றுவிக்கின்றன. ஒரு கான்டார் கழுகு பறப்பதைப்போல நேர் கோட்டில் அளந்தால், வானிலையானது சில கிலோமீட்டர் தூரத்திற்குள் அமேசானின் ஈரப்பதமான வெப்பமண்டல உஷ்ணத்திலிருந்து மலை உச்சிகளின் பனிக் குளிர்வரை மாறலாம்.
ஒருநாள், அமேசான் ஆற்றுப்படுகைக்கு அருகிலிருக்கும் அடிவாரத்திலிருந்து க்விடோவை சுற்றியுள்ள உயர்ந்த மலைகளுக்கு சென்றோம். காரில் நாங்கள் மேலே செல்கையில், வெப்ப மண்டல மழைக்காடு கொஞ்சம் கொஞ்சமாக மேகக் காடாக மாறி, கடைசியில் தரிசுநில காட்டுப்பகுதியாக அல்லது பாராமோவாக மாறுவதை கவனித்தோம். காட்சியில் ஏற்பட்ட வியக்கத்தக்க மாற்றங்கள், சில மணிநேர இடைவெளிக்குள் பூமத்திய ரேகையில் அமைந்துள்ள ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்காட்லாந்தின் மேட்டு நிலங்களுக்கு நாங்கள் பயணப்பட்டு வந்ததைப் போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தின.
ஈக்வடாரின் அநேக நகரங்களும் மாநகரங்களும், பாதுகாப்பான, மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்குகளில் அமைந்திருக்கின்றன. அங்கே வானிலை, வருடமுழுவதும் இளவேனிற்காலம் போலிருக்கும் என்று விவரிக்கப்படுகிறது. என்றபோதிலும், ஆண்டீஸ் மலையின் உச்சியில் இருக்கும் நகரங்கள், நான்கு பருவ காலங்களில் எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அனுபவிக்கலாம்—சில சமயங்களில் அவை நான்கையும் ஒரே நாளில்கூட அனுபவிக்கலாம்! அனுபவமிக்க ஒரு பயணி கூறியதுபோல, “ஈக்வடாரின் வானிலையைப் பற்றிய மிகவும் நம்பத்தக்க விஷயமானது அதன் நம்பமுடியாத தன்மையே.”
ஹம்மிங் பறவைகளும் கான்டார் கழுகுகளும்
பல்வேறுபட்ட வானிலைகள், செடிகள் மற்றும் மிருகங்களின் எண்ணற்ற வகையை உண்டுபண்ணுகின்றன. ஈக்வடாரில் 1,500-க்கும் அதிகமான பறவை வகைகள் இருக்கின்றன. அது, ஐக்கிய மாகாணங்களிலும் கனடாவிலும் இருக்கும் மொத்த எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கும், உலகத்திலிருக்கும் அறியப்பட்ட வகைகளில் ஆறில் ஒரு பங்கும் ஆகும். இவை எல்லாமே, இத்தாலியைவிட சிறியதாக இருக்கும் ஒரு நாட்டில் காணப்படுகின்றன.
சின்னஞ்சிறிய ஹம்மிங் பறவைகள்தான் எங்களை மிகவும் கவர்ந்தன. அவற்றில் ஏறக்குறைய 120 வகைகள் ஈக்வடாரில் இருக்கின்றன. அதிகாலையில், பூத்துக்குலுங்கும் புதர்செடி பூங்கொத்துக்களை சுறுசுறுப்பாக வலம்வந்து கொண்டிருந்தபோது மாநகர பூங்காக்களில் அவற்றை நாங்கள் முதலில் பார்த்தோம். அமேசான் மழைக்காட்டிற்குள்ளும் காற்று பலமாக வீசும் ஆண்டீஸின் உயர்ந்த சரிவுகளிலும்கூட அவை காணப்படுகின்றன.
பான்யாஸ் நகரில், ஊதா-காது (violet-ear) என்றழைக்கப்படும் பளபளக்கும் ஹம்மிங் பறவை ஒன்று, சிகப்புநிற செம்பருத்திப் பூங்கொத்து ஒன்றில் தேனருந்துவதை ரசிப்பதிலேயே ஒரு மணிநேரம் செலவழித்தோம். ஒவ்வொரு பூவுக்கு முன்பாகவும் அது சளைக்காமல் வட்டமிட்டு, அருமையான தேனை சாமர்த்தியமாக உறிஞ்சி வந்தது. அப்போது, அலட்டிக்கொள்ளா வண்ணம் ஓர் எதிரி அப்பக்கம் வந்தது. அது ஒரு கருப்புவால் டிரெய்ன்பாரர்; தன் பிராந்தியத்தில் அத்துமீறி நுழையும் எதிரிகளைத் துரத்த சுற்றிவருகையில், அதன் நீண்ட கருப்புநிற வால் அதற்கு கருப்புநிற வால்நட்சத்திரம் போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுப்பதால் அவ்வாறு பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த ஹம்மிங் பறவை, வானில் வட்டமிடுவதற்கு பதிலாக கிளையில் உட்கார்ந்து, பின்னாலிருந்து பூக்களை துளையிட்டு தேனை உறிஞ்சியது.
ஈக்வடாரின் எல்லா பறவைகளும் இந்தளவு சிறியதாக இருப்பதில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தபோதிலும், கம்பீரமான கான்டார் கழுகு இன்னமும் ஆண்டீஸ்மீது வட்டமிடுகிறது. கொன்றுதிண்ணும் பறவைகளுள் அதுவே மிகப் பெரியது. அதன் தோற்றத்தை நன்றாகப் பார்ப்பதற்காக உயர்ந்து நிற்கும் மலையுச்சிகளில் நாங்கள் விடாது தேடியும் எந்தப் பயனும் இல்லை. அமேசான் பகுதியில் ஹார்ப்பி கழுகை பார்ப்பதும்கூட கடினமானதே. உலகின் கொன்றுதிண்ணும் பறவைகளில் அதுவே மிகவும் வலிமையுள்ளது. எச்சரிக்கையாய் இல்லாத ஒரு தேவாங்கை அல்லது குரங்கை தூக்கிச் செல்வதற்காக, ஒரு நாளின் பெரும்பகுதி, சந்தடியற்ற மழைக்காட்டில் ஒரு பெரிய மரத்தின் கிளையில் தென்படாத வண்ணம் அமர்ந்திருக்கும்.
குணமளிக்கும் செடிகள்
ஈக்வடாரில் காணப்படும் செடிகளில் அநேகம், பார்வைக்கு அழகாக இருப்பது மட்டுமல்ல குணப்படுத்தும் பண்புகளும் உள்ளவை. நாட்டின் தெற்கில் இருக்கும் போடோகார்பஸ் தேசிய பூங்காவிற்கு நாங்கள் சென்றிருந்தபோது, செந்நிற பழங்கள் நிறைந்த ஒரு மரத்தை எங்கள் வழிகாட்டி சுட்டிக்காண்பித்தார். “அதுதான் காஸ்கரில்லா மரம். பல நூற்றாண்டுகளாக கொய்னாவின் முக்கிய மூலப்பொருளாக அதன் பட்டை இருந்து வந்திருக்கிறது” என அவர் விளக்கினார். அருகிலுள்ள லோஜாவில், மலேரியாவினால் சாகக்கிடந்த ஸ்பானிய உயர்குடி பெண் ஒருவரின் உயிரை கொய்னா இருநூறு வருடங்களுக்கு முன்பு காப்பாற்றியது. இன்கா மக்கள் நீண்டகாலமாக அறிந்திருந்த அதன் புகழ் சீக்கிரத்தில் உலகமுழுவதும் பரவியது. காஸ்கரில்லா மரம் முதலில் பார்ப்பதற்கு அவ்வளவு வசீகரமானதாக தோன்றாவிட்டாலும் அதன் பட்டையிலிருந்து எடுக்கப்படும் மருந்து அநேக உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது.
அந்த மரம் செழித்தோங்கும் மேகக் காட்டில், அநேக பழம்பெரும் மரங்களும் இருக்கின்றன. முடிச்சுகள் நிறைந்த அவற்றின் கிளைகளில், பளபளப்பான சிகப்பு நிறத்தில் சில பூங்கொத்துக்களை உடைய, குலைக்கதிர்களுள்ள புரோமிலியாட்கள் தோரணங்களாக தொங்குகின்றன. ஒதுக்குப்புறமாக இருக்கும் இந்தக் காடுகள், கண்ணாடி அணிந்தது போன்ற கரடி, காட்டுப்பூனை (ocelot), காட்டுப்புலி (puma), போன்ற மிருகங்களுக்கும் எண்ணற்ற தாவர வகைகளுக்கும் இருப்பிடமாக இருக்கின்றன. இவற்றைப் பட்டியலிட தாவரவியல் வல்லுநர்கள் இன்றும் முயன்று கொண்டிருக்கிறார்கள்.
மேம்பட்ட வலி நிவாரணிகளை கண்டுபிடிக்கும் நம்பிக்கையுடன், ஈக்வடாரில் உள்ள ஒரு சிறிய தவளையை விஞ்ஞானிகள் கவனமாக ஆராய்ந்து வருகின்றனர். விஷத்தை வெளியேற்றும் இந்தத் தவளையின் தோல் ஒருவித வலி நிவாரணியை சுரக்கிறது. அது மார்ஃபினைவிட 200 மடங்கு அதிக சக்தியுள்ளதாக எண்ணப்படுகிறது.
ஆண்டீஸ் மலையுச்சியில், இதுவரை நாங்கள் பார்த்திராத சில வகை தாவரங்களை பார்த்தோம். ஹம்மிங் பறவைகளை ஈர்க்கும் ஒருவித புரோமிலியாடான புயா, ஒரு பெரிய பழங்கால துடைப்பத்தை எங்களுக்கு நினைப்பூட்டியது. யாராவது ஒருவர் அதை எடுத்து சுற்றுப்புற நிலப்பகுதியை கூட்டுவதற்காகவே காத்திருப்பதைப்போல் அது தோற்றமளித்தது. தரிசான பாராமோவின் பாதுகாப்பான பள்ளத்தாக்குகளில், கினுவா மரங்களின் சிறிய காடுகள் இருக்கின்றன. கட்டுறுதியான மரங்களாகிய இவை, இமயத்தின் ஊசியிலை மரங்கள் வளரும் அதே உயரத்தில் வளர்கின்றன. இரண்டு முதல் மூன்று மீட்டர் உயரமே இருக்கும் அடர்த்தியான இந்த மரங்கள், ஏறக்குறைய உள்ளே நுழைய முடியாத வண்ணம் அடர்ந்த புதர்காடுகளை உண்டுபண்ணுகின்றன. மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் இவை மிகவும் விருப்பமான புகலிடமாகும்.
என்றபோதிலும், அமேசான் மழைக்காட்டிலுள்ள மரங்கள் உயரமாகவும் அதிகளவிலும் காணப்படுகின்றன. ஹாடுன் சாஷா உயிரியல் பூங்காவிற்கு சென்றிருந்தபோது, முப்பது மீட்டருக்கும் அதிகமாக ஓங்கி வளர்ந்திருந்த காட்டின் ஒரு ராட்சத மரத்திற்குக்கீழ் நாங்கள் நின்றிருந்தோம். திடீரென்று, அதன் பெரிய பக்கவேர்கள் அருகில் ஏதோ சலசலப்பு ஏற்பட்டதைக் கண்டு திடுக்கிட்டோம். பிறகுதான், வேர்களுக்கிடையே உள்ள சிறு துவாரங்களுள் ஒன்று, சிறிய வௌவால்களின் ஒரு குடும்பத்திற்கு வீடாக இருந்ததை உணர்ந்தோம். இரண்டு உயிரினங்கள் ஒன்றாக சேர்ந்து வாழும் இதைப்போன்ற அநேக உறவுகள்மீதே காடு சார்ந்திருக்கிறதை அச்சம்பவம் எங்களுக்கு நினைப்பூட்டியது. மழைக்காடுகளில் விதைகளைப் பரப்புவதற்கும் மகரந்தச் சேர்க்கைக்கும் முக்கிய காரணமாக இருக்கும் வௌவால்கள், அவற்றிற்கு பாதுகாப்பு அளிக்கும் மரங்களின் முக்கிய நண்பர்கள்.
மலைகளில் சந்தைகள்
ஈக்வடாரின் ஜனத்தொகையில் ஏறக்குறைய 40 சதவீதத்தினர் இந்தியப் பழங்குடியினரே. அவர்களுக்கே உரிய தனிப்பட்ட விதமான உடையைக் கொண்ட பல்வேறுபட்ட இனத் தொகுதிகளே பெரும்பாலான ஆண்டீஸ் பள்ளத்தாக்குகளின் முக்கிய அம்சமாகும். மலைச் சரிவுகளிலுள்ள செங்குத்தான பாதைகளில் ஏறுகையில், இந்தியப் பெண்கள் ஆட்டு மயிரை நூற்றுக்கொண்டே நடந்ததையும் அடிக்கடி பார்த்தோம். அவர்களால் பயிர் செய்யமுடியாத அளவுக்கு எந்த மலைச் சரிவும் செங்குத்து அல்ல என்பதுபோல் தோன்றியது. குறைந்தபட்சம் 45 டிகிரி சாய்ந்திருப்பதாக கணக்கிடப்பட்ட மக்காச்சோளம் பயிர் செய்யப்பட்டிருந்த ஒரு நிலத்தை நாங்கள் ஆராய்ந்தோம்!
ஓட்டவாலூவில் உள்ளதைப் போன்ற ஈக்வடாரின் சந்தைகள் பிரபலமடைந்திருக்கின்றன. இவையே, மிருகங்கள் மற்றும் பண்ணை விளைச்சல்கள் உட்பட பாரம்பரிய நூற்பு அல்லது மற்ற கைவினைப் பொருட்களை உள்ளூர் மக்கள் வாங்குவதற்கான அல்லது விற்பதற்கான மையங்களாகும். சந்தைக்குப் போகும்போது உள்ளூர் மக்கள் அவர்களுக்கே உரிய ஆடை அணிந்துகொள்வதால், அது அநேக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் கண்கவர் காட்சியாகும். மக்களுடன் பைபிளின் செய்தியை பகிர்ந்துகொள்ள சந்தை நாட்களை யெகோவாவின் சாட்சிகளும் பிரயோஜனப்படுத்திக் கொள்கிறார்கள்.
நெசவு துணிகளின் கவர்ச்சிக்கு, அவற்றின் பழமையும் பாரம்பரிய நிறங்களும் வேலைப்பாடுகளும் அதிகளவில் உபயோகிக்கப்பட்டிருப்பதுமே காரணம். ஸ்பானியர்கள் வருவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, ஆண்டீஸில் வாழும் மக்கள் பிரசித்திப்பெற்ற தங்களுடைய நீண்ட அங்கிகளை (poncho) நெய்து வந்தனர். அவர்களுடைய உத்தி நவீனமயம் ஆக்கப்பட்டிருந்தபோதிலும், கடினமாக உழைக்கும் இந்த இந்தியர்கள் இன்னமும் மிகச்சிறந்த நெசவாடைகளையும் தொங்கலாடைகளையும் தயாரிக்கின்றனர்.
மூடுபனியில் மலைகள்
பயணத்தின்போது மயக்கம் ஏற்படுபவர்கள், ஆண்டீஸ் மலைத்தொடரில் காரில் செல்வது நல்லதல்ல. வளைந்து வளைந்து செல்லும் பள்ளத்தாக்குகளின் பக்கங்களை அந்தச் சாலைகள் தழுவிச் செல்கையில், அவை வளைந்தும், நெளிந்தும், மேலெழுந்தும், திடீரென்று கீழிறங்கியும் செல்கின்றன. தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் கண்கொள்ளா காட்சிகளே துணிச்சல்மிக்க ஒரு பயணிக்கு கிடைக்கும் விருந்து. மலைக்க வைக்கும் ஒன்று என்றே அதை வர்ணிக்க முடியும்.
முதல் முறையாக நாங்கள் ஆண்டீஸ் மலைமீது காரில் பயணம் செய்கையில், ஏறக்குறைய பிரியா நண்பனாக மூடுபனி எங்கள் காரை அணைத்துக்கொண்டது. சில சமயம் மூடுபனியிலிருந்து வெளியே வருகையில், தூரத்தில் பரவிக்கிடந்த அலையலையாய் மூடுபனி நிறைந்த பள்ளத்தாக்குகள் தென்பட்டன. ஆண்டீஸ் மலைத்தொடரில் பயணம் செய்கையில், மூடுபனி எங்களோடு விளையாடுவதைப் போலிருந்தது. ஒரு நிமிடம், நாங்கள் கடந்துவந்த ஒரு கிராமம் முழுவதுமாக மூடப்பட்டிருக்கும். மறுநிமிடம் மற்றொரு கிராமம் பிரகாசமான சூரியவொளியில் மூழ்கியிருக்கும்.
சில சமயங்களில் மூடுபனி கீழிருந்து மேலெழும்பிச் செல்லும்; சில சமயங்களில் மலை உச்சியிலிருந்து கீழே உருண்டோடிவரும். ஓர் அழகான காட்சி மறைக்கப்படுவதால் எரிச்சல் ஏற்பட்டாலும்கூட, மூடுபனிக்கு மேல் ஓங்கி நின்ற மலைச் சிகரங்களுக்கு அவை மேன்மையையும் புதிரையும் கூட்டின. மிக முக்கியமாக, அதிலிருந்து மதிப்பு வாய்ந்த ஈரப்பதத்தைப் பெறும் மேகக் காட்டிற்கு அது ஊட்டமளிக்கிறது.
ஈக்வடாரில் நாங்கள் இருந்த கடைசிநாள் காலையில் மூடுபனி விலகியிருந்தது. ஏறக்குறைய முழுமையான கூம்பாக இருந்த, பனிமூடிய கோட்டபாக்ஸி சிகரத்தின் அற்புதகரமான காட்சியை பல மணிநேரத்திற்கு நாங்கள் கண்டுகளித்தோம். உலகிலேயே மிகவும் உயர்ந்ததாக இருக்கும் இந்தச் செயல்படும் எரிமலை, ஒரு தேசியப் பூங்காவின் மையமாக ஆக்கப்பட்டிருக்கிறது. மலை உச்சியை நெருங்குகையில், அதன் மேல் சரிவுகள் ஒன்றில் ஒரு பெரிய பனிக்கட்டி மெல்லமெல்ல நகருவதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தோம். ஏறக்குறைய 6,000 மீட்டர் உயரத்தில், பூமத்திய ரேகையின் வல்லமைமிக்க சூரிய கிரணங்களை அது வெற்றிகரமாக எதிர்த்து நிற்கிறது.
அடுத்த நாள் எங்கள் விமானம் க்விடோவைவிட்டு சொந்த ஊரை நோக்கி கிளம்பியபோது, ஈக்வடாரை கடைசி முறையாக நாங்கள் பார்த்தோம். அதிகாலை வெளிச்சத்தில், மூடுபனிக்கு மேல் நீட்டிக்கொண்டு சூரியவொளியில் தங்கம்போல ஜொலிக்கும் மற்றொரு பனிமூடிய எரிமலை சிகரமான காயாம்பேவை பார்த்தோம். அதன் சிகரம் ஏறக்குறைய பூமத்திய ரேகையிலேயே அமைந்திருக்கிறது. நாங்கள் சந்தித்த கவர்ச்சிமிக்க நாட்டிற்கு மிகவும் பொருத்தமான வழியனுப்பும் அடையாளம்போல இந்த எரிமலை இருந்தது. காயாம்பேவைப்போல ஈக்வடாரும் பூமத்திய ரேகைக்கு குறுக்கே கம்பீரமாய் அமர்ந்திருக்கிறது.—அளிக்கப்பட்டது.
[பக்கம் 25-ன் குறிப்பு]
பின்னணியில் கோட்டபாக்ஸி எரிமலையுடன் ஆண்டீஸ் நிலப்பரப்பு
இந்திய பூ வியாபாரி
[பக்கம் 26-ன் குறிப்பு]
1. காட்டு வாழை
2. தூகான் பார்பட்
[படத்திற்கான நன்றி]
Foto: Zoo de Baños