நீங்கள் பல்லைக் கடிக்கிறீர்களா?
மக்கள் பிரச்சினையில் இருக்கும்போது தங்கள் பல்லைக் கடிப்பது பூர்வ காலத்திலிருந்தே பழக்கமாக இருந்திருக்கிறது. பல்லைக் கடிப்பதை அல்லது நறநறவென செய்வதை, கடுங்கோபத்தை அல்லது வேதனையை சுட்டிக்காட்டுவதற்கு அடையாளமாக பைபிள் அடிக்கடி பயன்படுத்துகிறது. (யோபு 16:9; மத்தேயு 13:42, 50) கோபமும் மன அழுத்தமும் நிறைந்த இன்றைய உலகில் கோடிக்கணக்கான மக்கள் உண்மையிலேயே தங்கள் பல்லைக் கடிக்கிறார்கள். பெரும்பாலானோர் தங்களை அறியாமலேயே அவ்வாறு செய்கிறார்கள். தங்கள் பற்கள் தேய்ந்துபோகும்படி அவர்கள் செய்துகொண்டிருக்கலாம்.
சிலர் தங்கள் பல்லை ஏன் கடிக்கிறார்கள்? இதற்கான காரணங்கள், சிக்கல் நிறைந்தவையாகவும் இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளப்படாதவையாகவும் இருக்கின்றன. ஆனால் சில சந்தர்ப்பங்களில் உணர்ச்சி சம்பந்தப்பட்ட அழுத்தமே முக்கிய காரணமாக இருக்கிறது. “தங்கள் பல்லை அடிக்கடி கடிப்பவர்கள், மண வாழ்க்கையில் அல்லது பண சம்பந்தமான கஷ்டத்தில் இருப்பதாக, இறுதி பரீட்சை எழுதுவதாக, தங்கள் வேலை போய்விடுமோ என்ற பயத்தில் அல்லது வேறுவித நெருக்கடியில் இருப்பதாக கூறுகிறார்கள்” என UC பர்க்லி வெல்னஸ் லெட்டர் சுட்டிக்காட்டுகிறது. மேல் வரிசை பற்களும் கீழ் வரிசை பற்களும் சரியாக பொருந்தாதிருப்பது, நிம்மதியற்ற தூக்கம் அல்லது மதுபானம் உட்கொள்வது போன்றவை, சாத்தியமான மற்ற காரணங்களாகவும் வழிநடத்தும் காரணிகளாகவும் இருக்கலாம். ஆகவே, கஷ்டப்படுபவர்கள், மதுபானம் உட்கொள்வதை குறைக்க முயலுவது, அமைதியாக உணருவதற்காக தூங்க செல்வதற்குமுன் வெந்நீரில் குளிப்பது போன்ற சில எளிய காரியங்களை செய்வது அல்லது கஷ்டந்தரும் பிரச்சினையைப் பற்றி ஒரு நண்பரிடமோ நம்பகமான ஆலோசகரிடமோ மனம்விட்டு பேசுவது போன்ற ஆலோசனைகளை வெல்னஸ் லெட்டர் சிபாரிசு செய்கிறது.
நீங்கள் பல்லைக் கடிப்பதை அல்லது ஒன்றோடு ஒன்று உராய்வதை பகல் நேரத்தில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் தூக்கத்தில் அப்படி செய்கிறீர்களா என்பதை எப்படி அறிவது? புருக்ஸிஸம் என்றழைக்கப்படும் நாள்பட்ட பற்கடித்தல் பழக்கம், சில சமயங்களில், அதே அறையில் உறங்கிக்கொண்டிருக்கும் மற்றொருவரை எழுப்பிவிடும் அளவுக்கு அதிக சப்தத்தை ஏற்படுத்தும். நீங்கள் எழுந்திருக்கும்போது நெற்றிப்பொட்டில் வலியை உணரலாம் அல்லது தாடை ‘கிளிக்’ என்ற சப்தத்தை ஏற்படுத்தலாம். a உங்கள் பற்கள் அதிகமாக தேய்ந்து போயிருப்பதையும்கூட பல் மருத்துவர் கவனிக்கலாம். ஓரளவு நிம்மதி பெறுவதற்காக, இரவில் பற்களுக்கு மத்தியில் ஏதாவது ஒரு கருவியை வைத்துக்கொள்வது போன்ற வழிமுறைகளை அவர் சிபாரிசு செய்யலாம். இப்படிப்பட்ட ஒரு பாதுகாப்பு கருவி பல்லைக் கடிப்பதிலிருந்து உங்களை தடுப்பதற்காக தயாரிக்கப்படாவிட்டாலும், உங்கள் பற்கள் அதிகம் தேய்ந்துபோவதை அது தடுக்கும். எப்படியிருந்தாலும், அமைதலாக இருங்கள்! நீங்கள் அதிகம் கவலைப்படாவிட்டால், பல்லை அதிகம் கடிக்கமாட்டீர்கள்.
[அடிக்குறிப்புகள்]
a கூடுதலான தகவலுக்கு ஜூன் 22, 1991 ஆங்கில விழித்தெழு!-வில் பக்கங்கள் 20-22-ஐ தயவுசெய்து காண்க.