தந்தம்—எந்தளவு மதிப்புமிக்கது?
கென்யாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
ஜூன் 1997-ல் ஜிம்பாப்வியிலுள்ள ஹராரேயில் நடந்த ஒரு சர்வதேச மாநாட்டில், உலகளவில் தந்த விற்பனையின் மீதான ஏழு-வருட தடையை தளர்த்த 138 நாடுகளின் பிரதிநிதிகள் வாக்களித்தனர். கடுமையான வாக்குவாதத்திற்கு பின் செய்யப்பட்ட தீர்மானம், தெற்கத்திய ஆப்பிரிக்காவிலுள்ள போட்ஸ்வானா, நமிபியா, ஜிம்பாப்வி ஆகிய மூன்று தேசங்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு நாட்டுக்கு, அதாவது ஜப்பானுக்கு தந்தத்தை விற்க அனுமதியளிக்கிறது. அத்தீர்மானம் தெற்கத்திய ஆப்பிரிக்க பிரதிநிதிகளுக்கு பெருமளவு சந்தோஷம் அளித்ததால் பாட்டு பாட ஆரம்பித்தனர். ஆப்பிரிக்க யானையின் நிலைமையை சிந்தித்த மற்ற பிரதிநிதிகள் கவலையுற்றனர்.
ஹனிபல், ரோம சேனையை பொ.ச.மு. மூன்றாம் நூற்றாண்டில் எதிர்த்தபோது பயிற்றுவிக்கப்பட்ட ஆப்பிரிக்க யானைகளின் படை ஒன்று அவரிடம் இருந்தது. அந்நாட்களில் ஆப்பிரிக்க யானைகள் கேப்பிலிருந்து கெய்ரோ வரை ஒருவேளை கோடிக்கணக்கில் செழித்தோங்கி இருக்கலாம்.
ஆனால் சூழ்நிலை மாறியது. “யானைகளின் கடலில் ஆங்காங்கே இருந்த மனித தீவுகள் என்ற நிலை மாறி, மனித கடலில் யானைகளின் சிறிய தீவுகள் பெருகும் நிலை ஏற்பட்டுவிட்டது” என பார்வையாளர் ஒருவர் கூறினார். மனிதர்கள் அதிகரிக்கையில், நிலத்திற்கான போட்டியில் யானைகள் தோற்றுப்போயின. சஹாரா பாலைவனம் தெற்கு நோக்கி விரிவடைவதும் அவை எண்ணிக்கையில் குறைந்ததற்கு மற்றொரு காரணமாகும்.
என்றபோதிலும், தந்தத்திற்கான மவுசு இந்தக் காரணங்களை விஞ்சி நின்றது. புலி எலும்பையும் காண்டாமிருக கொம்பையும் போல், தந்தத்திற்கு மருத்துவ குணம் இருப்பதாக எந்த மூட நம்பிக்கையும் இல்லை. ஆனாலும் அது விலையுயர்ந்தது, அழகானது, நீடித்துழைப்பது, சுலபமாக செதுக்கக்கூடியது. பூர்வ காலங்களிலிருந்தே, யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள் மதிப்புமிக்கதும் விரும்பப்பட்டதுமான பொருட்களுள் ஒன்றாக இருந்திருக்கின்றன.
ஹனிபலுக்குப் பின் நானூறு வருடங்கள் கழித்து, தந்தத்திற்கான ஆசையை திருப்தி செய்ய வடக்கு ஆப்பிரிக்காவிலுள்ள யானைக் கூட்டங்களின் பெரும் தொகுதிகளை ரோம பேரரசு அழித்தது. அப்போதிலிருந்து, முக்கியமாக மேலை நாடுகளில் அதற்கான ஆசை கொழுந்துவிட்டு எரிந்திருக்கிறது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அந்த ஆசை தீவிரமானது. ஆனால் முன்பிருந்ததைப் போல கலை பொருட்களுக்காகவும் மத சிற்பங்களுக்காகவும் இல்லாமல் பியானோ கீ-போர்டு செய்வதற்காக அதிகம் விரும்பப்பட்டது. ஐக்கிய மாகாணங்களில் 3,50,000 கீ-போர்டுகளை செய்ய (13,000 யானைகளைக் கொன்றதால் கிடைத்த) ஏறக்குறைய 700 டன் தந்தம் 1910-ல் மட்டுமே உபயோகிக்கப்பட்டது என யானைகளுக்காக யுத்தம் (ஆங்கிலம்) என்ற புத்தகம் சொல்கிறது.
கட்டுப்பாடற்ற சட்டவிரோத வேட்டை
முதல் உலக யுத்தத்தை தொடர்ந்து தந்தத்திற்கான மவுசு குறைந்தது. வன விலங்குகளை பாதுகாக்க புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன, யானைகள் எண்ணிக்கையில் அதிகரிக்க ஆரம்பித்தன. ஆனாலும் 1970-களின் ஆரம்பத்தில் படுகொலை மறுபடியும் ஆரம்பித்தது. இப்போது, புதிதாக செழிக்க ஆரம்பித்திருந்த ஆசிய நாடுகளில் தந்தத்திற்கான கிராக்கி ஏற்பட்டது.
இச்சமயம், இரண்டு காரணங்கள் ஆப்பிரிக்க யானைகளுக்கு பேராபத்தை முன்குறித்தன. இலேசான, அதிநவீன ஆயுதங்கள் எளிதில் கிடைத்தது முதல் காரணமாகும். திடீரென்று, தனித்தனி யானைகளை மட்டுமல்ல முழு கூட்டத்தையுமே சுட்டுக்கொல்வது எளிதாக ஆனது. இரண்டாவதாக, செதுக்குவதற்கான மின் கருவிகள் கிடைப்பது, குறைந்த நேரத்திற்குள் தந்தத்தை விற்பனைக்கு தயாரான பொருட்களாக செய்வதை சுலபமாக்கியது. முற்காலங்களில், ஒரே ஒரு தந்தத்தை செதுக்க ஜப்பானிய சிற்பிக்கு ஒரு வருடம் ஆகியிருக்கும். என்றாலும், ஆபரணங்களையும் ஹான்கோவையும் (ஜப்பானில் பிரபலமாய் இருக்கும் பெயர் முத்திரைகள்) தயாரிக்கும் எட்டு வேலையாட்கள் கொண்ட ஒரு தொழிற்சாலை, மின் கருவிகள் உதவியால் ஒரே வாரத்தில் 300 யானைகளின் தந்தங்களை உபயோகிக்க முடியும். தந்தத்திற்கான மவுசு அதிகரித்ததால் அதன் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. அதில் அதிகமான பணம், சட்டவிரோத வேட்டைக்காரர்களிடம் போய் சேருவதற்கு மாறாக மத்தியஸ்தர்களையும் டீலர்களையுமே அடைந்தது. அவர்களில் அநேகர் நம்பமுடியாத கோடீஸ்வரர் ஆனார்கள்.
யானைகளின் இழப்போ பயங்கரமாய் இருந்தது. சுமார் இருபதே வருடங்களுக்குள், டான்ஜானியா தன் யானைகளில் 80 சதவிகிதத்தை பெரும்பாலும் சட்டவிரோத வேட்டைக்காரர்களிடம் இழந்தது. கென்யா 85 சதவிகித யானைகளையும் உகாந்தா 95 சதவிகிதத்தையும் இழந்தன. ஆரம்பத்தில், சட்டவிரோத வேட்டைக்காரர்கள் முக்கியமாக வளர்ந்த ஆண் யானைகளையே கொன்றனர்; ஏனென்றால் அவற்றிற்கே மிகப்பெரிய தந்தங்கள் இருந்தன. ஆனால் வயதான யானைகள் எண்ணிக்கையில் குறைய ஆரம்பித்தபிறகு, குட்டி யானைகளையும்கூட அவற்றின் சின்னஞ்சிறிய தந்தங்களுக்காக கொன்றனர். அச்சமயத்தில் அவற்றின் தந்தத்திற்காக பத்து லட்சத்திற்கும் அதிகமான யானைகள் கொல்லப்பட்டிருக்கலாம். அதனால் ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை 6,25,000-ஆக குறைந்தது.
உலகளாவிய தடை
தந்த வியாபாரத்தை கட்டுப்படுத்தவும் படுகொலையை நிறுத்தவும் எடுத்த முயற்சிகள் படுதோல்வி அடைந்தன. கடைசியாக, அக்டோபர் 1989-ல் ஸ்விட்ஸர்லாந்தில் நடந்த ஒரு மாநாட்டில், மறைந்துவரும் தாவர மற்றும் மிருக இனங்களில் சர்வதேச வாணிகம் பற்றிய மாநாடு, (Convention on International Trade in Endangered Species of Flora and Fauna [CITES]) அதன் அங்கத்தின நாடுகள் மத்தியில் நடைபெற்ற எல்லாவித தந்த வியாபாரத்தையும் தடை செய்தது. யானைகளைப் பாதுகாக்க அதிகப்படியான நிதி கிடைத்ததும் இத்தடையை வலுப்படுத்தியது.
தந்தத்திற்கு தடை விதிப்பது, பிளாக் மார்க்கெட்டில் அதன் விலையை உயர்த்தி சட்டவிரோத வேட்டையை அதிகரிக்கும் என சிலர் முன்னறிவித்தனர். அதற்கு நேர்மாறானதே நிகழ்ந்தது. விலைகள் சரிந்தன, முன்பு லாபம் ஈட்டிய வியாபாரம் படுத்துவிட்டது. உதாரணமாக இந்தியாவில், தந்தத்தின் சில்லறை விற்பனை 85 சதவிகிதம் குறைந்தது. நாட்டின் தந்த சிற்பிகளில் பெரும்பாலானோர் மற்ற வேலைகளை தேட வேண்டியிருந்தது. சட்டவிரோத வேட்டை பெருமளவு குறைந்தது. தடைக்கு முன்பு கென்யாவில், சட்டவிரோத வேட்டைக்காரர்கள் ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் 2,000 யானைகளைக் கொன்றனர். 1995-க்குள் அந்த எண்ணிக்கை 35-ஆக குறைந்தது. மேலும், கென்யாவில் யானைகளின் எண்ணிக்கை 1989-ல் 19,000-ஆக இருந்தது இன்று ஏறக்குறைய 26,000-மாக அதிகரித்திருக்கிறது.
இந்தக் காரணங்கள் நிமித்தமாக தந்தத்தின் மீதான வியாபார தடை, “சமீபகால பாதுகாப்பு சரித்திரத்திலேயே மிகப்பெரிய சாதனைகளுள் ஒன்று” என லண்டனிலிருக்கும் சுற்றுச்சூழல் ஆய்வு ஏஜன்ஸி புகழ்ந்தது. என்றாலும், இந்த சந்தோஷத்தில் எல்லாரும், முக்கியமாக தெற்கத்திய ஆப்பிரிக்காவில் இருப்பவர்கள் பங்குகொள்வதில்லை.
தெற்கத்திய ஆப்பிரிக்காவின் யானைகள்
ஆப்பிரிக்க யானைகளின் மொத்த எண்ணிக்கையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்காகிய 2,00,000-த்திற்கும் அதிகமான யானைகள் தெற்கத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கின்றன. இதற்கு திறம்பட்ட பாதுகாப்பு கொள்கைகள் ஓரளவு காரணம். அதோடு, கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவின் யானைக் கூட்டங்களை அழித்த ஆயுதப்போர்களுக்கு இந்த நாடுகள் தப்பித்ததும் ஓரளவு காரணமாகும்.
என்றபோதிலும், யானைகள் அதிகரிக்கையில் அவற்றிற்கும் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கும் மத்தியில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுகின்றன. முதிர்ந்த ஒரு யானை, ஒரு நாளில் ஏறக்குறைய 300 கிலோவிற்கும் அதிகமான தாவர உணவை உட்கொள்ள முடியுமாதலால் அது அகோரப் பசி உள்ளது என்றே சொல்லலாம். நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் ஒரு யானை இருந்தால் உங்களுக்கு இது நன்றாக புரியும்.
ஜிம்பாப்வியிலுள்ள ஆப்பிரிக்க வளங்கள் டிரஸ்ட் இவ்வாறு கூறுகிறது: “பெரும்பாலான கிராமப்புற ஆப்பிரிக்கர்கள் யானையை பயத்தோடும் சந்தேகக் கண்ணோடும் பகைமையோடும் பார்க்கின்றனர். பயிரை தின்றுவிடுவதன் மூலம் அல்லது கால்நடைகளை மிதித்து கொன்றுவிடுவதன் மூலம் கொஞ்ச நேரத்திற்குள் மக்களின் பிழைப்பையே யானைகள் நாசப்படுத்திவிடக்கூடும். வீடுகள், பள்ளிகள், கால்நடை கொட்டகைகள், கனி மரங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நில அமைப்புகளையும் அவை சேதப்படுத்துகின்றன. ஒவ்வொரு நாளும் யானைகளால் ஏற்பட்ட சேதத்தைப் பற்றி உள்ளூர் செய்தித்தாள்கள் அறிக்கை செய்கின்றன.”
தழைத்தோங்கும் யானைக் கூட்டங்களை காத்துவர முடிந்த வெற்றியில் தெற்கத்திய ஆப்பிரிக்க தேசங்கள் பெருமிதம் கொள்கின்றன. ஆனால் பாதுகாப்பு நடவடிக்கை பெரும் செலவு பிடிக்கிறது. ஆகவே மற்ற ஆப்பிரிக்க தேசங்கள் எதிர்ப்படும் பிரச்சினைகளுக்காக தாங்கள் தண்டிக்கப்படுவதை அவை விரும்புகிறதில்லை. கட்டுப்படுத்தப்பட்ட தந்த வியாபாரம், பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிக்க தேவையான பணத்திற்கு வழிசெய்யும் எனவும் கிராமப்புற விவசாயிகள் அனுபவிக்கும் இழப்புகளை ஈடுகட்ட உதவும் எனவும் அவர்கள் நியாயம் பேசுகின்றனர்.
தந்த குவியல்கள்
யானைகள் உலாவும் நாடுகளில் தந்தம் குவிகிறது. சட்டப்பூர்வமாக கொல்லப்படும் யானைகள், இயற்கையாக சாகும் யானைகள், கைப்பற்றப்படும் சட்டவிரோத தந்த குவியல்கள் ஆகியவற்றிலிருந்து இவை வந்து குவிகின்றன. இந்தத் தந்தங்களை என்ன செய்கிறார்கள்?
கென்யா இந்தத் தந்தங்களை எரித்துவிடுகிறது. ஜூலை 1989-லிருந்து, மற்றவர்களிடமிருந்து எந்த நேரடியான இழப்பீட்டையும் பெறாமல் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தந்தங்களை பொதுமக்கள் முன்னிலையில் கென்யா எரித்திருக்கிறது. 1992-ல் ஜாம்பியாவும் அதன் தந்த குவியலை எரித்தது. கென்யாவும் ஜாம்பியாவும் தந்த வியாபாரத்தில் எந்தப் பங்கும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை என்பது தெளிவாக இருந்தது.
மற்ற நாடுகள் தங்கள் குவியல்களை எதிர்கால முதலீடாக வைத்திருக்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் இப்போது குவித்து வைக்கப்பட்டிருக்கும் தந்தத்தின் மொத்த அளவு குறைந்தபட்சம் 462 டன் ஆக, 170 கோடி ரூபாய் மதிப்புள்ளதாக இருக்கலாம் என உலகிலேயே மிகப்பெரிய வனவிலங்கு கண்காணிப்பு அமைப்பாகிய டிராபிக் (TRAFFIC) கணிக்கிறது. ஜப்பானுடன் இப்போது வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கும் போட்ஸ்வானா, நமிபியா, ஜிம்பாப்வி ஆகிய மூன்று தேசங்கள் 120 டன் தந்தம் வைத்திருக்கின்றன. ஆகவே அநேகர் இவ்வாறு கேட்கின்றனர்: ‘பொருளாதார ரீதியில் மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நாட்டில், கிடங்குகளில் தூசிபடியும்படி தந்தத்தை ஏன் வைத்திருக்க வேண்டும்? அதை விற்று அந்தப் பணத்தை திரும்ப பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஏன் செலவிடக்கூடாது?’
தீராத கவலைகள்
தந்தத்தின் மீதான தடையை தளர்த்துவது யானைகளை பாதுகாக்க உதவும் என சில ஆப்பிரிக்க தேசங்கள் வாதிடுகையில், சட்டவிரோத வேட்டை புதுப்பிக்கப்பட்ட வேகத்துடன் நிகழ்வதை தடுக்க முழுமையான தடைதான் ஒரே வழி என்று மற்றவை உறுதியாக நம்புகின்றன. இப்போது கவலையெல்லாம், இந்த வியாபாரம் எவ்வளவு கண்டிப்புடன் கட்டுப்படுத்தப்படும் என்பதே. சட்டவிரோத தந்தத்தை சட்டப்பூர்வ வியாபாரத்தில் நுழைப்பதற்கு ஏற்றவாறு, வியாபார ஏற்பாடுகளில் ஏதாவது குறுக்குவழிகள் இருக்குமா? துணிகரமான சட்டவிரோத வேட்டையைப் பற்றி என்ன? இத்தடையை தளர்த்துவது, எதிர்காலத்தில் தடை மேலுமாக தளர்த்தப்படும் என்ற நம்பிக்கையில் யானைகளைக் கொன்று தந்தத்தை பதுக்கி வைப்பதற்கு வழிநடத்துமா?
ஆப்பிரிக்காவில் முன்பு இருந்ததைவிட இப்போது துப்பாக்கிகள் ஏராளமாய் கிடைப்பது இருக்கிற கவலையை இன்னும் அதிகரிக்கிறது. இங்கு நடக்கும் உள்நாட்டுக் கலவரங்கள் காரணமாக தானியங்கி துப்பாக்கிகள் மக்கள் கைகளில் கிடைத்திருக்கின்றன. கடினமான பொருளாதார நிலைமைகளை எதிர்ப்படும் அந்த மக்கள் அவற்றை உபயோகித்து பணம் சம்பாதிக்க தயாராய் இருக்கின்றனர். கிழக்கு ஆப்பிரிக்க வனவிலங்கு சங்கத்தின் இயக்குநரான நெகேமியா ரோடிக் இவ்வாறு எழுதினார்: “[புதுப்பிக்கப்பட்ட வியாபாரத்தின் காரணமாக] தந்தம் விலையுயர்ந்ததாக ஆகியிருப்பதால், இந்தத் துப்பாக்கிகள் யானைகளைக் குறிவைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மாநகர வங்கியை கொள்ளையடிப்பதைவிட பரந்துகிடக்கும் பூங்காவில் யானையைக் கொல்லுவது சுலபம் தானே.”
கூடுதலான ஒரு பிரச்சினை என்னவென்றால், சட்டவிரோத வேட்டையை தடுக்கும் முறைகள் அதிக செலவு பிடிப்பவை மட்டுமல்ல அதிக கஷ்டமானவையும்கூட. யானைகள் அலைந்து திரியும் பரந்த இடங்களை ரோந்து செய்வதற்கு அதிக பணம் தேவை. கிழக்கு ஆப்பிரிக்காவிலோ இதற்கு அதிக தட்டுப்பாடு.
யானைக்கு என்ன எதிர்காலம்?
தந்த விற்பனை மீதான தடையை தளர்த்த தீர்மானித்ததன் விளைவை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எல்லாம் சுமுகமாக நடந்தாலும், யானை மீதான அச்சுறுத்துதல் முழுவதும் நீங்காது. பயிர் செய்வதற்காகவும் மற்ற காரணங்களுக்காகவும் அதிகரிக்கும் எண்ணிக்கையான மக்களுக்கு அதிக நிலம் தேவைப்படுவதால் யானைகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது. தெற்கத்திய ஆப்பிரிக்காவில் மட்டும் பெரும்பாலும் வேளாண்மைக்காகவே, ஒவ்வொரு வருடமும் 20 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான காடுகளை அழிக்கின்றனர். அது இஸ்ரேல் பரப்பளவில் ஏறக்குறைய பாதியாகும். மனித கடலின் அளவு அதிகரிக்கையில் யானைகளின் தீவுகள் நிச்சயமாக இன்னும் குறையும்.
உவர்ல்ட் வாட்ச் பத்திரிகை இவ்வாறு கூறுகிறது: “இந்தப் பிரச்சினையை ஆராய்ந்திருக்கும் எவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம்: ஆப்பிரிக்க யானையின் எதிர்காலம் நிச்சயமற்றது என்பதே. [அதிகரிக்கும் எண்ணிக்கையான மக்களால் ஏற்படும்] வாழிட தட்டுப்பாடு, அநேக யானைகள் ஏதாவது ஒருவிதத்தில் உரிய காலத்திற்கு முன்பே இறந்துவிடும் என்பதை நிச்சயமாக அர்த்தப்படுத்தும். உரிமம் அளிக்கப்பட்ட வேட்டையால் அல்லது சட்டப்பூர்வமாக கொல்லப்படுவதால்—சட்டவிரோத வேட்டைக்காரர்களால் கொல்லப்படுவதால்—அவை இறக்காவிட்டாலும் பட்டினியால் அநேகம் இறந்து அவற்றின் எண்ணிக்கை சரியும்.”
நம்பிக்கையற்ற இந்த நோக்குநிலை, யானையின் படைப்பாளராகிய யெகோவா தேவனுடைய எண்ணத்தையோ நோக்கத்தையோ கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. கடவுள் தம்முடைய சிருஷ்டிகள் மேல் வைத்திருக்கும் அக்கறையை இயேசு கிறிஸ்துவின் பின்வரும் வார்த்தைகள் காண்பிக்கின்றன: “இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை.” (லூக்கா 12:6) ஒரு சிறிய குருவியை கடவுள் மறக்கவில்லை என்றால் பெரிய யானையின் சோகமான நிலைமையைப் பற்றியும் அவர் அசட்டையாக இருக்கமாட்டார் என நாம் உறுதியாக இருக்கலாம்.
[பக்கம் 16-ன் பெட்டி]
தந்தத்தைப் பற்றி
“தந்தம் அழகான பொருள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆபரணங்களுக்காக அல்லது சிற்பத்திற்காக பயன்படுத்தப்படும் எந்தப் பொருளுக்கும் இல்லாத பளபளப்பும் கவர்ச்சியும் அதற்கு இருக்கிறது. ஆனால் தந்தம் என்பது ஒரு யானையின் பல் என்பதை மக்கள் மறந்துவிடுகின்றனர் என்றே எப்போதும் உணருகிறேன். தந்தம் என்ற வார்த்தை, யானை பற்றிய எண்ணத்தையே நம் மனதிலிருந்து அகற்றிவிடுகிறது. ஒருவர் அதை, பச்சை மணிக்கல், தேக்கு, இபோனி, அம்பர், தங்கம், வெள்ளி போன்றவற்றோடு குருட்டுத்தனமாக இணைத்துவிடுகிறார். ஆனால் மிகப்பெரிய ஒரு வேறுபாடு இருக்கிறது: மற்றவை ஒரு மிருகத்திலிருந்து வரவில்லை; தந்தமோ மாற்றியமைக்கப்பட்ட வெட்டுப் பல். ஓர் அழகான தந்த கைவளையை அல்லது நுட்பமான சிற்ப வேலைப்பாட்டை கையில் பிடித்திருக்கையில், சாப்பிட, தோண்ட, குத்த, விளையாட, சண்டைபோட என அந்தத் தந்தத்தை ஒருசமயம் உபயோகித்து சுற்றித்திரிந்த ஒரு யானையிலிருந்து அது வந்தது என்பதையும் அந்தத் தந்தம் அவர் கையில் இருப்பதற்கு அந்த யானை இறக்க வேண்டியிருந்தது என்பதையும் உணர ஒருவர் தன் புரிந்துகொள்ளுதலை விரிவாக்க வேண்டும்.”—யானை நினைவுகள், (ஆங்கிலம்) சிந்தியா மாஸ்.
[பக்கம் 19-ன் பெட்டி]
யானைகளைப் பற்றி
யானைகள் மிக அதிக பலம் வாய்ந்தவை. அவை கோபப்பட்டால் பூமி அதிரும். ஒரு யானை உங்களை அதன் துதிக்கையில் அலக்காக தூக்கி ஒரு கல்லைப்போல வீசி எறிய முடியும். ஆனாலும், அதன் துதிக்கையால் உங்களை மெதுவாக வருடிவிட முடியும் அல்லது உங்கள் கையிலிருந்து உணவை மெல்ல எடுக்க முடியும். யானைகள் புத்திக்கூர்மையுள்ளவை, புரிந்துகொள்ள கடினமானவை மேலும் வேடிக்கையானவை. அவற்றின் குடும்பப் பற்று உறுதியானது; ஒன்று மற்றொன்றின் காயங்களைப் பேணும், வியாதியாய் இருப்பவற்றை கவனித்துக்கொள்ளும், குடும்பத்தைச் சேர்ந்த ஒன்று இறக்கையில் அவை வேதனைப்படும். மற்ற மிருகங்களின் சடலத்தை அவை அசட்டை செய்தாலும் மற்ற யானைகளின் எலும்புகளை அடையாளம் கண்டுகொண்டு அவற்றை சிதறிவிடுகின்றன அல்லது புதைத்து விடுகின்றன.
[பக்கம் 18-ன் படங்கள்]
இரண்டு நாடுகள் தங்கள் தந்தத்தை எரித்திருக்கின்றன; மற்ற நாடுகள் அந்தக் குவியல்களை எதிர்கால முதலீடாக வைத்திருக்கின்றன