இரத்தமேற்றாமல் ஆபரேஷன் டாக்டர்களின் புதிய கண்ணோட்டம்
எய்ட்ஸின் வலையில் தான் சிக்கிக்கொண்டதற்கான காரணத்தை ஜானட் தனது மகனிடம் விளக்கினாள். கணவர் மரணமடைவதற்கு முன்பு அவரிடமிருந்து எய்ட்ஸ் ஜானட்டை தொற்றிக்கொண்டது. அவளது கணவருக்கு இரத்த ஒழுக்கு நோய் (Hemophiliac) இருந்தது. சிகிச்சையின் போது இரத்தத்தினால் தயாரிக்கப்பட்ட மருந்து கொடுக்கப்பட்டதால் எய்ட்ஸ் அவரை பீடித்துக்கொண்டது. மருத்துவ உலகம் கவலையோடு எதிர்ப்படும் அநேக பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. இவை இரத்தமேற்றுதலை நிரந்தர பழக்கமாக கொண்டிருப்பதை மறுபரிசீலனை செய்வதற்கு டாக்டர்களை தூண்டியிருக்கின்றன. இந்த வருடம், த நியூ யார்க் டைம்ஸ் தன்னுடைய தலையங்கத்தில் இவ்வாறு அறிவித்தது: “இரத்தமேற்றாமல் ஆபரேஷன் செய்வது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.”
இரத்தமேற்றாமல் ஆபரேஷன் செய்வதில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அனேக மருத்துவ மாநாடுகளில் இது சிறப்பித்துக் காட்டப்பட்டிருக்கிறது. கடந்த வருடம் இப்படிப்பட்ட மாநாடுகள் அமெரிக்காவில் இரண்டு இடத்தில் (பாஸ்டன் மற்றும் அட்லான்டா) நடைபெற்றன. ஒரு மாநாடு கனடாவில் (வின்னிபெக்) நடைபெற்றது. லாட்வியாவில் (ரிஹா) நடைபெற்ற கிழக்கு ஐரோப்பாவிற்கான சர்வதேச மாநாடும் இதில் உள்ளடங்கும்.
ஐம்பது வருடங்களுக்கும் அதிகமாக, இரத்தமேற்றுதலை விட்டால் வேறு வழியில்லை என எண்ணிக்கொண்டிருந்த 12 நாடுகளை சேர்ந்த 1,400 மருத்துவ வல்லுநர்கள் இந்த நான்கு மாநாடுகளில் கலந்து கொண்டனர். ஒரு செய்தித்தாள் தனது தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டது; இம்மாநாடுகளில் கலந்து கொண்டவர்கள் இரத்தமேற்றாமல் ஆபரேஷன் செய்வதே “எதிர்காலத்திற்கான வழி” என்பதாக ஏன் குறிப்பிட்டார்கள்? அப்படியென்றால் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும் மருத்துவ சிகிச்சை முறைகளை பாதிக்கக்கூடிய புதிய மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் தொழில்நுட்பங்களையும் குறித்து இம்மாநாடுகளில் என்ன குறிப்பிடப்பட்டது?
மாற்றுச் சிகிச்சைகளை தேடுவதேன்?
இரத்தத்தை பாதுகாப்பாக சேமிக்க முடியாததே இதற்கு முக்கிய காரணமாகும். உதாரணமாக ஜனவரி 31, 1998-ல் டோரன்டோவின் க்ளோப் அண்ட் மெயில், 1980-களில் கனடாவின் “இரத்தத்தின் கறைபடிந்த துயரம்” பற்றி இவ்வாறு குறிப்பிட்டது: “ஹெப்படைட்டஸ் சி, கல்லீரலைப் படிப்படியாக வலுவிழக்கச் செய்யும் நோய். இதை குணப்படுத்தவே முடியாது. கனடாவைச் சேர்ந்த 60,000-க்கும் அதிகமானோர் சுத்தமில்லாத இரத்தத்தின் மூலமாக பரவும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அப்படியென்றால், இதன் காரணமாக கல்லீரல் அழற்சியால் 12,000-பேர் இறந்து விடுவார்கள்.”
இரத்தத்தை சுத்தப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் பெரிதளவில் ஆபத்தைக் குறைத்திருத்தாலும் வின்னிபெக்கில் நடந்த மாநாட்டில் ஜஸ்டிஸ் ஹோரேஸ் க்ரிவர் இவ்விதம் குறிப்பிட்டார்: “கனடாவின் இரத்த வங்கிகளில் கிடைக்கும் இரத்தம் ஒருபோதும் முழுமையாக சுத்தமாக இருந்ததில்லை; இனி இருக்கப்போவதுமில்லை. இரத்தத்தைப் பயன்படுத்துவது தவிர்க்கமுடியாத அபாயத்தை கொண்டு வருகிறது.” ஒவ்வொரு பாட்டில் இரத்தம் ஏற்றும்போதும் நோய்கள் பரவுவதற்கும் மோசமான எதிர்விளைவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
பாரிஸிலுள்ள க்ளினிக் டி மோசனின் டாக்டர் ஜான்-மார்க் டெபியூ, ரிஹாவில் நடந்த மாநாட்டில் பேசியபோது, “நோயாளிகளைக் குணப்படுத்தும் நமது வழக்கமான அணுகுமுறையை மருத்துவர்களாகிய நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் . . . இரத்தமேற்றுதல் அநேக நோயாளிகளுடைய வாழ்நாளைக் கூட்டியிருக்கிறது. அதே சமயம் குணப்படுத்தப்பட முடியாத நோய்களை ஏற்படுத்துவதன் மூலம் மற்றவர்களுடைய வாழ்க்கையை அழித்திருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
இரத்தத்தை சுத்தப்படுத்தும் வழிமுறைகள், புதிது புதிதாக நோய் ஏற்படுவதற்கான அச்சுறுத்துதல்களை குறைத்துக் காட்டுகின்றன. எனவே இவற்றாலும் நோய்களை முற்றிலுமாக தடுக்கமுடியாது. உதாரணமாக கனடாவின் ஒன்டாரியோவிலுள்ள ஒட்டாவாவைச் சேர்ந்த டாக்டர் பால் கெலி இவ்வாறு குறிப்பிட்டார்: “ஹெப்படைட்டஸ் ஜி, என்பது புதிதாக விவரிக்கப்பட்ட ஆர்என்ஏ வைரஸாகும்; இது இரத்தமேற்றுதலால் பரவுகிறது. ஆனால் இதன் அபாயம் தற்சமயம் அறியப்படாததாக இருக்கிறது.”
மற்றொரு ஆபத்தைக் குறித்து டைம் பத்திரிகையின் ஸ்பெஷல் மருத்துவ வெளியீடு, “இரத்தமேற்றுதல் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கக்கூடும் . . . இதனால் நோய் எளிதில் தொற்றிக்கொள்ளும் ஆபத்திருக்கிறது. மேலும் நோய் குணமாகி, நல்ல உடல் நலத்தை மீண்டும் பெற நீண்ட காலமும் எடுக்கலாம்” என்பதாக அறிவித்தது.
பணப்பிரச்சினையும் ஒரு காரணம். டைம் பத்திரிகையின்படி, ஐக்கிய மாகாணங்களில் ஒருமுறை இரத்தமேற்றுவதற்கு 500 டாலர் செலவாகிறது. மேலும் சில இடங்களில் இரத்தம் கையிருப்பில் இருப்பதில்லை. ஏனெனில் வெகு சிலரே இரத்த தானம் செய்கின்றனர்.
இரத்தமேற்றாமல் ஆபரேஷன் செய்தவர்களுக்கு செலவு குறைவே. காரணம் என்னவெனில், அவர்களுக்கு நோய் தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு கம்மி. மேலும் அவர்கள் ஹாஸ்பிடலில் தங்கியிருக்கும் நாட்களும் குறைவு. வின்னிபெக்கில் பேசும்போது, கனடியன் ஹீமோஃபிலியா சொஸைட்டியைச் சேர்ந்த டர்ஹேனி வோன்-ரெஜர், இரத்தமேற்றாமல் ஆபரேஷன் செய்வதைக் குறித்து பின்வருமாறு கூறினார்: “இது மிகவும் அவசியமானது. இதில் அதிக செலவும் இல்லை, குணமடையும் சாத்தியமும் அதிகம்” என்பதாக குறிப்பிட்டார்.
பெருவாரியான நோயாளிகளிடையே இரத்தமேற்றாமல் ஆபரேஷன் செய்வதற்கு அதிக டிமாண்ட் இருக்கிறது. லீஹசி போர்ட்லண்ட் மருத்துவமனையைச் (ஆரிகான், அ.ஐ.மா.) சேர்ந்த, டாக்டர் டேவிட் ரோசன்க்ரன்ஸ் இவ்வாறு சொல்கிறார்: முன்பெல்லாம், “இரத்தமேற்றாமல் ஆபரேஷன் செய்ய வேண்டும் என மதவிசுவாசத்தின் அடிப்படையில்தான் எல்லாரும் விரும்பினார்கள்.” ஆனால் இப்பொழுதோ, குறைந்தபட்சம் 15 சதவிகிதத்தினர் மத நம்பிக்கையின் அடிப்படையின்றி இரத்தமேற்றாமல் மாற்றுவகைச் சிகிச்சைகளை நாடுகின்றனர்.
கருத்துக்கள் பல வண்ணம்
மற்றவர்களால் தானம் செய்யப்பட்ட இரத்தத்தைவிட நோயாளியின் சொந்த இரத்தத்தை பயன்படுத்துவதே மிகவும் பாதுகாப்பானது என்ற முக்கியமான கருத்து இந்த நான்கு மாநாடுகளிலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, ஆபரேஷனுக்கு முன்பாக நோயாளியினுடைய சொந்த இரத்தத்தை சேமித்து வைக்கும்படி சிலர் சிபாரிசு செய்கின்றனர். இருப்பினும் எமர்ஜென்சியின் போது இரத்தத்தை சேமித்து வைப்பதற்கு நேரமில்லை என அநேகர் குறிப்பிட்டனர். மேலுமாக யெகோவாவின் சாட்சிகள் சேமிக்கப்பட்ட இரத்தத்தைப் பயன்படுத்துவதையும் தங்களுடைய மதவிசுவாசத்தின் காரணமாக ஆட்சேபிக்கின்றனர்.a
“ஆபரேஷனுக்கு முன்பாக ஒருவருடைய இரத்தத்தை சேமிப்பதற்கு அதிக செலவாகிறது. அதிக வேலையையும் இது உட்படுத்துகிறது. இதற்கு போதுமான கால அவகாசமும் தேவை. இருப்பினும், [சேகரிக்கப்பட்ட இரத்தத்தை கையாளும் சமயத்தில் தவறுகள் ஏற்படும்போது] இரத்தமேற்றுதலோடு தொடர்புடைய நோய்நொடிகள் ஏற்படுகின்றன” என அ.ஐ.மா., வட கலிபோர்னியாவிலுள்ள டியூக் யுனிவர்சிட்டியின் டாக்டர் புரூஸ் லியோன் கனடாவில் நடந்த மாநாட்டில் குறிப்பிட்டார்.
மருத்துவத்துறையும் அதனுடைய தொழில்நுட்பமும் வளர்ந்து வருவதால் இரத்தமேற்றுவதும் படிப்படியாக குறைந்து விடும் என மருத்துவர்கள் வாதிடுகின்றனர். மேலும், அவசரத்தின் போது மட்டுமே இரத்தம் ஏற்றப்பட வேண்டும் என்பதாக அவர்கள் வற்புறுத்துகிறார்கள். மறுபட்சத்தில், மற்ற மருத்துவர்களோ இப்பொழுதே முற்றிலுமாக இரத்தமேற்றுதலை தவிர்க்கிறார்கள். இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை, சிக்கலான நரம்பியல் அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமான திறந்த இருதய அறுவை சிகிச்சை போன்ற மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைகள் கூட இரத்தமேற்றாமலேயே செய்யப்பட்டன. இம்முறையில் ஆபரேஷன் செய்யப்பட்ட நோயாளிகள் சீக்கிரமாக குணமடைந்தனர் என்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.
இன்று உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இரத்தம் ஏற்றாமலேயே ஆபரேஷன்கள் செய்யப்படுகின்றன. இவற்றில் 70-க்கும் மேற்பட்டவை ஐக்கிய மாகாணங்களில் இருக்கின்றன. உண்மையில், உலகமுழுவதிலும் 88,000-க்கும் அதிகமான மருத்துவர்கள் இரத்தம் ஏற்றிக்கொள்ள விரும்பாத நோயாளிகளுடன் நன்கு ஒத்துழைக்கின்றனர்.
தொழில்நுட்பங்களில் புதுமை
ஆபரேஷனுக்காக வந்த யெகோவாவின் சாட்சிகளுக்கு முதன்முதலில் சிகிச்சை அளித்தபோது, குறிப்பிட்ட தொழில்நுட்பங்களை உருவாக்கியதாக அட்லான்டா மாநாட்டில் அடுத்தடுத்து பேசிய பேச்சாளர்கள் ஒத்துக்கொண்டார்கள்.b லாஸ் ஏஞ்சலிஸிலுள்ள என்சினோ-டார்ஸனா ரீஜனல் மெடிக்கல் சென்டரின் டாக்டர் ஜேம்ஸ் சிக்கினுடைய கருத்தை அநேகர் ஒப்புக்கொண்டனர். இம்மருத்துவர், குறைப்பிரசவத்தில் பிறந்த யெகோவாவின் சாட்சிகளுடைய குழந்தைகளுக்கு ஆபரேஷன் செய்ததால் கிடைத்த புதிய தொழில்நுட்பங்களினால், தன்னுடைய குட்டி நோயாளிகளுக்கு 50 சதவிகிதம் குறைவாகவே இரத்தத்தை பயன்படுத்துகிறார். சந்தேகமில்லாமல், வயதானவர்களுக்கும் இப்படிப்பட்ட புதிய வழிமுறைகள் பலனுள்ளவையாக நிரூபித்திருக்கின்றன.
மான்ட்ரீல் ஹார்ட் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த டாக்டர் ஜான்-பிரான்ஸ்வா ஹார்டி பின்வருமாறு குறிப்பிட்டார்: “ஒரு புதிய மருத்துவ கண்டுபிடிப்பை வைத்து இரத்தமேற்றாமல் ஆபரேஷன் செய்வது இயலாத காரியம் . . . மாறாக பல்வேறு யுக்திகளின் கூட்டு முயற்சியினால் மட்டுமே இந்த இலக்கை எட்டமுடியும்.”
இப்படிப்பட்ட புதிய தொழில்நுட்பங்களில் பின்வருபவையும் அடங்கும். (1) ஆபரேஷனுக்கு முன் தயாரிப்பு, (2) ஆபரேஷன் செய்யும்போது இரத்த இழப்பை தவிர்த்தல், (3) ஆபரேஷனுக்குப் பின் கவனிப்பு. தெளிவாகவே, ஆபரேஷனுக்கு முன்பாக நோயாளியினுடைய உடல்நலத்தை முன்னேற்ற போதுமான சமயம் இருக்கிறதா அல்லது எமர்ஜென்சி சமயத்தில் உடனடியாக ஆபரேஷன் செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டிருக்கிறதா போன்ற சூழ்நிலைகளை கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இச்சூழ்நிலைகள் ஆபரேஷன் சம்பந்தப்பட்ட அணுகுமுறைகளை பெரிதளவில் பாதிக்கின்றன.
ஆபரேஷனுக்கு முன்பாக கொடுக்கப்படும் சிகிச்சைகள்தான் இரத்தமேற்றாமல் செய்யப்படும் ஆபரேஷனுக்கான சரியான அணுகுமுறையாகும். ஏனெனில் இது இரத்த செல்களின் எண்ணிக்கையை அதிகரித்து ஆரோக்கியத்தை கூட்டுகிறது. இது வீரியமுள்ள இரும்புச் சத்துக்களையும் விட்டமின்களையும் கொடுப்பதை உட்படுத்தும். பொருத்தமான சமயத்தில், சிந்தடிக் எரித்ரோபொய்யட்டின் டோஸ்களை கொடுக்கலாம். இவை நோயாளியின் எலும்பு மச்சைகள், சிவப்பு இரத்த அணுக்களை படுவேகமாக உற்பத்திச் செய்யத் தூண்டுகின்றன. பரிசோதனைக்காக குறைந்தளவே இரத்தத்தை எடுத்து, அதில் அனேக பலன்தரக்கூடிய சோதனைகளை செய்வதற்கு மைக்ரோ அனாலிஸிஸ் தொழில்நுட்பம் அனுமதிக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் இரத்தத்தை கணிசமான அளவு இழந்திருக்கும் முதிர்வயதான நோயாளிகளுக்கும் இது மிகவும் அவசியம்.
கன அளவைப் பெருக்கிடும் திரவங்களை இரத்தக் குழாய்கள் வழியாக உடலுக்குள் செலுத்துவது இரத்தத்தின் அளவை அதிகரிக்கிறது. அதிகளவு இரத்தத்தை இழந்த நோயாளிக்கு தேவையான ஆக்ஸிஜனை கொடுப்பதற்கு உதவியாக அதி அழுத்த ஆக்ஸிஜன் சேம்பர் சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. அட்லாண்டாவில் டாக்டர் ராபர்ட் பார்லட் பின்வருமாறு விளக்கினார்: “இந்த ஆக்ஸிஜன் சேம்பர் மிகவும் பயனுள்ள ஒரு சொத்துதான். ஆனால் இதில் அதிக கவனம் தேவை. ஏனெனில், அளவுக்கு அதிகமான ஆக்ஸிஜன் விஷமாகி விடும்.”
இரண்டாவது படியானது, ஆபரேஷன் செய்யும்போது இரத்தம் இழப்பதை தடுப்பதாகும். இதில் உதவுவதற்கு ஆபரேஷனுக்கு தேவையான புதிய மருத்துவ உபகரணங்களும் தொழில்நுட்பங்களும் அணிவகுத்து நிற்கின்றன. இவைகள் இரத்த இழப்பை குறைக்கின்றன; அவசியமான உடல் பகுதிகளை மட்டும் அறுப்பது அதிக இரத்த இழப்பையும் வேதனையையும் குறைக்கிறது; அல்லது ஆபரேஷன் சமயத்தில் வெளிவரும் நோயாளியின் இரத்தத்தை உடனடியாக சேகரித்து அதை மீண்டும் பயன்படுத்த உதவுகின்றன. இந்த புதிய தொழில்நுட்பங்களை சற்று ஆராய்ந்து பார்ப்போமாக.
◼ ஒரு பகுதியை அழிக்கும் கருவி (எலக்டிரிக் காட்டரி டிவைஸ்) வெப்பத்தைப் பயன்படுத்தி இரத்தம் வெளியேறுவதை தடுக்கிறது.
◼ ஆர்கன் கதிர்களுள்ள குருதி ஒழுக்கு மின் தடுப்பி ஆபரேஷனின் போது இரத்தம் வெளியேறுவதை தடுக்கிறது.
◼ ஹார்மோனிக் ஸ்கால்பல், அதிர்வின் மூலமாகவும் உராய்த்தலின் மூலமாகவும் உடற்பகுதிகளை அறுத்து, அதே சமயம் இரத்தத்தையும் உறைய வைக்கிறது.
◼ குறிப்பிட்ட வகையான ஆபரேஷன்களில் டிரானெக்சாமிக் அமிலம் மற்றும் டெஸ்மோபிரசின் போன்ற மருந்துகள் இரத்தம் உறைதலை அதிகரிப்பதுடன் இரத்தம் வெளியேறுவதையும் குறைக்கின்றன.
◼ இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஹைபொடென்சிவ் அனஸ்தீசியா அதிக இரத்த இழப்பைத் தவிர்க்கிறது.
ஆபரேஷன் நடக்கும்போது இரத்தத்தை பாதுகாக்கும் மெஷின்களின் முன்னேற்றங்களும் குறிப்பிடத்தக்கது. இந்த மெஷின்கள் ஆபரேஷனின்போது நோயாளியின் இரத்தத்தை சேமித்து வைப்பதோடு, இழக்கப்படும் இரத்தத்தை மீட்டு உடனடியாக மீண்டும் அதைப் பயன்படுத்த உதவுகின்றன.c புதிய மெஷின்களை நோயாளியினுடைய உடலோடு இணைத்திருப்பதால், அவை இரத்தத்தை பல்வேறு பகுதிகளாக பிரித்து, அவசியமானதை மீண்டும் பயன்படுத்த உதவுகின்றன.
ரிஹாவில் நடைபெற்ற மாநாட்டிற்கு பின்பு, லாட்வியாவின் தேவையை அறிந்த ஸ்வீடன் நாட்டிலுள்ள யெகோவாவின் சாட்சிகள், செல்களைப் பாதுகாக்கும் இரண்டு மெஷின்களை லாட்வியாவிற்கு நன்கொடையாக அளித்தனர். அந்த மெஷின்களில் முதலாவது லாட்வியாவிற்கு வந்து சேர்ந்தது. இச்சமயத்தில் இரத்தம் ஏற்றிக்கொள்ளாமல் ஆபரேஷன் செய்வதன் நன்மைகளைக் குறித்து லாட்வியாவிலுள்ள ஏராளமானோர் அறிந்தனர். விளைவு? இரத்தமில்லாமல் ஆபரேஷன் செய்வதில் அவர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கினர். லாட்வியாவின் தேசிய தொலைக்காட்சியும் இச்செய்தியை ஒளிபரப்பியது.
இரத்த அளவை அதிகரிப்பதற்கு, ஆபரேஷனுக்கு முன்பாக என்ன மருத்துவ வழிமுறைகள் பின்பற்றப்பட்டனவோ அதே வழிமுறைகள்தான் ஆபரேஷனுக்கு பின்பாகவும் பின்பற்றப்படுகின்றன. இருந்தபோதிலும் இரத்தமேற்றிக்கொள்ளும் நோயாளிகளைவிட இரத்தமேற்றிக்கொள்ளாத நோயாளிகளை கவனிப்பது அநேக சமயங்களில் எளிதாக இருக்கிறது. அது ஏன்?
வியப்பூட்டும் விளைவுகள்
இரத்தத்தை பயன்படுத்துவதை தவிர்க்கும் தொழில்நுட்பங்கள் ஆபரேஷன் சமயத்திலும் அதற்கு முன்பாகவும் அதிக வேலையை உட்படுத்துகின்றன. ஆனாலும், ஆபரேஷனுக்கு பின்பு குறுகிய காலத்துக்குள் நோயாளிகள் குணமடைவதை மருத்துவர்கள் கவனித்திருக்கிறார்கள். இரத்தமேற்றுவதால் வரக்கூடிய பாதிப்புகள் இரத்தமேற்றிக்கொள்ளாதவர்களுக்கு இல்லை. இவர்கள் ஹாஸ்பிட்டலில் குறைந்த காலத்திற்கே தங்கியிருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
த நியூ யார்க் ஹாஸ்பிடல்-கார்னெல் யுனிவர்சிட்டி மெடிக்கல் சென்டரின் டாக்டர் டாட் ரோஜென்கார்ட், இரத்தத்தைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட தங்களுடைய எட்டு அம்சங்கள், சிக்கலான திறந்த இருதய அறுவை சிகிச்சைகளை இரத்தமேற்றாமல் செய்வதற்கு தைரியமளித்தது என்பதாக குறிப்பிட்டார். லாஸ் ஏஞ்சலிஸிலுள்ள குட் சமாரிடன் ஹாஸ்பிடலை சேர்ந்த டாக்டர் மேனுவல் எஸ்டியாகோ, “இரத்தமேற்றாமல் நூற்றுக்கணக்கான திறந்த இருதய அறுவை சிகிச்சைகள் செய்த தனது நீண்டநாளைய அனுபவம்” குறித்துப் பேசினார். மியாமி சில்ரன்ஸ் ஹாஸ்பிடலில், பிள்ளைகளுக்கு இரத்தமில்லாமல் திறந்த இருதய அறுவை சிகிச்சை செய்வதில் வெற்றியடைந்ததைப் பற்றி டாக்டர் எஸ். சுப்ரமணியன் அறிக்கை செய்தார்.
எலும்பியல் அறுவை சிகிச்சை, அதிலும் விசேஷமாக இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை மிகவும் சவாலானது. இருப்பினும், “அறுவை சிகிச்சை யுக்திகளையும் நுணுக்கங்களையும்” ஒருங்கிணைத்து யெகோவாவின் சாட்சிகளாயிருக்கிற நோயாளிகளுக்கு செய்யப்பட்ட ஆபரேஷன்களில் குறிப்பிடத்தக்க முறையில் இரத்த இழப்பு குறைவாக இருந்தது என்பதாக ஸ்வீடனிலுள்ள அடவல்லா ஹாஸ்பிடலின் டாக்டர் ஓலா ஹாக், ரிஹா மாநாட்டில் அறிக்கை செய்தார். இங்கிலாந்திலுள்ள ஹர்பீல்டு மெடிக்கல் சென்டரைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்டு கூம்ஸ் கூறினார்: உண்மையில் “99.9 சதவிகித எலும்பியல் ஆபரேஷன்களை . . . இரத்தம் ஏற்றாமல் செய்ய முடியும்.”
எதிர்காலம்
ஹாஸ்பிட்டல்களும் டாக்டர்களும் இரத்தம் ஏற்றப்படாத முறைகளை பயன்படுத்துவது அதிகரித்துக்கொண்டே வருகிறது. மருத்துவ மாநாடுகளில் இப்படிப்பட்ட தகவல்களை கலந்தாலோசிப்பது அதிக பயனுள்ளது. ஏனெனில் இங்கு இரத்தமேற்றுதலுக்கு மாற்றுவகைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு, தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை மருத்துவர்கள் கற்றுக்கொள்கின்றனர்.
“முன்னொருபோதும் இராத வண்ணம் பெரும்பாலானவர்கள் இரத்தமில்லாத மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறைகளை விரும்புகின்றனர். இரத்தமில்லாத மருந்துகளும் அறுவைச் சிகிச்சைகளும் நவீன வளர்ச்சியால் ஏற்பட்ட தொழில்நுட்பமே தவிர குறைந்த பயனையுடைய ‘மாற்றுவகைச் சிகிச்சை’ என்பதாக கருதக்கூடாது” என்பதாக யுனிவர்சிட்டி ஆஃப் சதர்ன் கலிஃபோர்னியா ஸ்கூல் ஆஃப் மெடிசனைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்டு நலிக் கூறினார்.
இரத்தமேற்றுவதால் வரக்கூடிய பிரச்சினைகள் ஒரு தொடர்கதையே. இதனால் மாற்றுவகைச் சிகிச்சைகளுக்கான பொதுமக்களின் கோரிக்கைகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. ஆகவே இரத்தமேற்றா அறுவைச் சிகிச்சைகளுக்கான எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகள் தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் மருத்துவ சிகிச்சைகளை ஏற்றுக் கொள்கின்றனர். இருப்பினும், உடலுக்குள் இரத்தத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாதென்ற பைபிளின் தெளிவான தடையின் காரணமாக அவர்கள் இரத்தமேற்றுதலை மறுக்கின்றனர். (ஆதியாகமம் 9:3, 4; அப்போஸ்தலர் 15:28, 29) இன்னும் கூடுதலான விவரங்களுக்கு உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்த உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்? என்ற புரோஷரைப் பார்க்கவும்.
b இம்மாநாடுகளில் அளிக்கப்பட்ட வித்தியாசமான தொழில்நுட்பங்களை கலந்தாலோசிப்பதால் விழித்தெழு! இம்முறைகளை சிபாரிசு செய்கிறதாக நினைத்துவிடாதீர்கள். நாங்கள் வெறுமனே மருத்துவத்துறையின் வளர்ச்சிகளை அறிக்கை செய்கிறோம்.
c இப்படிப்பட்ட மெஷின்களின் சரியான உபயோகத்தைக் குறித்தும் இதை பயன்படுத்துவது சம்பந்தமாக ஒருவருடைய மனசாட்சியைக் குறித்தும் தெரிந்துகொள்ள ஆங்கில காவற்கோபுரம் மார்ச் 1, 1989, பக்கம் 30-1-ஐப் பாருங்கள்.
[பக்கம் 20, 21-ன் படம்]
இரத்தமேற்றாமல் அறுவை சிகிச்சை செய்ய விரும்பும் நோயாளிகளின் விருப்பங்களை அதிகமதிகமான டாக்டர்கள் மதிக்கிறார்கள்