எந்த மாதிரி ஆடை அணிகிறோம்—அது அவ்வளவு முக்கியமா?
“எந்த ட்ரெஸ்ஸ போட்டுக்கிறதுன்னு எனக்கு ஒன்னுமே புரியல!” இந்த வார்த்தைகளை நீங்கள் அடிக்கடி கேட்டிருக்கிறீர்களா? இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவிசெய்ய இன்றுள்ள ஃபேஷன் நிறுவனங்கள் எப்பொழுதும் தயாராயிருக்கின்றன. அதே சமயம் தங்களுடைய லேட்டஸ்ட் ரகங்களினால் தலைகால் புரியாதபடி உங்களை குழப்புவதற்கும் இவை ரெடி.
இப்போதெல்லாம் கண்ணியமாக உடுத்தவேண்டியதில்லை, ஏனோதானோ என்று எப்படியும் உடுத்தலாம் என்று உற்சாகப்படுத்துகிறார்கள். இதைக் கேட்டால், ஏற்கெனவே எதை உடுத்துவது என்று குழப்பத்தில் இருக்கும் உங்களுக்கு மேலும் குழப்பம்தான் அதிகரிக்கும். இது உங்களுடைய தீர்மானத்தை இன்னும் குளறுபடி செய்கிறது. 1990-களின் இப்படிப்பட்ட தலைகீழான போக்கைப் பற்றி ஃபேஷன் பத்திரிகையின் தலையங்கம் பின்வருமாறு கூறுகிறது: “நம்பிக்கையான விஷயம் என்னவென்றால், வேண்டுமென்றே வயதான தோற்றம் தருவதற்காக, பழைய, வெளுத்துப்போன உடைகளை அணிவது ஏற்றுக்கொள்ளப்படுவதோடு, விரும்பி அணியப்படுகிறது.”
சமீப சில ஆண்டுகளில் கவர்ந்திழுக்கும் விளம்பரங்கள், சின்னத்திரையின் மாடல்கள், இளம் நண்பர்கள் கூட்டம், தன்னைத் தானே உயர்த்தும் மனம், தான் பெரிய ஆள் என காட்டிக்கொள்ளும் எண்ணம் போன்றவை இன்று மக்களின் உடுத்தும் பாணியில் பலமான செல்வாக்குச் செலுத்துகின்றன. இது இளசுகளின் விஷயத்தில் மிகவும் உண்மையாக இருக்கிறது. இவ்வாறு உடுத்துவதற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும்கூட, தங்களது உரிமை என்று அவர்களில் சிலர் சொல்லுகின்றனர்.
1990-களின் அநேக பிரபலமான ஸ்டைல்கள் 1960-களில் மேற்கத்திய கலாச்சாரத்தை கலக்கிய ஹிப்பிக்களின் இயக்கத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. எனவேதான் சமீப வருடங்களில் நாகரிக உடையின் மிதமிஞ்சிய போக்கு தென்படுகிறது. தாடிகள், நீண்ட பரட்டை முடிகள், சுருங்கிய, அழுக்குப்பிடித்த உடைகள் போன்றவை பாரம்பரியங்களின் மதிப்புகளை குப்பையில் தூக்கி எறிந்துவிட்டன. நண்பர்களின் அழுத்தத்தின் காரணமாக, அடங்காப்பிடாரி என்பதை வெளியே காட்டுவதற்காக உடுத்துவதும் புதியபாணி.
உடைக்கு பொதுவாக அங்கீகாரம் கிடைத்துவிடுவதால், ஒரு நபர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிக்காட்டுவதற்கும் உடையே முக்கிய பங்கை வகிக்கிறது. உடைகள் விஷேசமாக T-சர்ட்கள் விளம்பரப் பலகைகளாக இருக்கின்றன. ஏனெனில் இவை பிரபலமான விளையாட்டுகளையும் விளையாட்டு வீரர்களையும் ஜோக்குகளையும் ஏமாற்றங்களையும் வீண்வம்பையும் நல்லொழுக்கத்தையும் அல்லது ஒழுக்கங்கெட்ட நடத்தையையும் வியாபாரப் பொருட்களையும் மெளனமாக விளம்பரம் செய்கின்றன. இதுமட்டுமல்ல, இவை கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தலாம். சமீபத்திய நியூஸ்வீக் பத்திரிகையின் தலைப்பை பாருங்களேன்: “மறைமுக கொடூரமே இளைஞர்களின் நவீன ஃபேஷன்.” தன்னுடைய T-சர்ட்டை குறித்து 21 வயதான வாலிபன் பின்வருமாறு சொன்னான்: “நான் பேச்சுதிற இந்தச் சட்டை என் மனசுல இருக்கிறதை அப்படியே வெளிக்காட்டுது. என்ன செய்றேன்றத பத்தி யாரும் எதுவும் சொல்லத் தேவயில்ல. அப்படியே சொன்னாலும் நான் கேட்கப்போறதில்ல.”
ஒவ்வொருவருடைய T-சர்ட்டிலும் வித்தியாசமான சுலோகங்கள் முன்னும் பின்னும் எழுதப்பட்டிருக்கலாம். இருப்பினும் ஒரு கும்பலோடு தங்களை அடையாளம் காட்டுவது அல்லது கலகத்தனமான உணர்வை, எப்போதும் நெ.1 என்ற எண்ணத்தை, ஆணவத்தை, வன்முறையே பிரதிபலிப்பதும் உடையே. டிசைனர் ஒருவர் தன்னுடைய வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப உடைகளை துப்பாக்கியால் சுட்டு துளைகளை உண்டாக்குகிறார். “கை துப்பாக்கி, சுழல் துப்பாக்கி, எந்திரத் துப்பாக்கி என்று எந்த வகையான துப்பாக்கியால் சுட்டு, ஓட்டையாக்கப்பட்ட உடை வேண்டுமென்றாலும், தங்கள் இஷ்டம்போல் எடுத்துக்கொள்ளலாம். எல்லாமே ஒரு ஃபேஷன்தான்” என்கிறார் இவர்.
அட ஃபேஷனில் அப்படி என்னதான் இருக்கு?
“பொதுவாக சொல்லப்போனால், உங்களை சமுதாயத்திலுள்ள ஒரு இனத்தோடு அடையாளப்படுத்துவது உங்களுடைய உடைகளே” என்பதாக ஆஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள பவர்ஹவுஸ் பொருட்காட்சிச்சாலையில் ஃபேஷன் பொறுப்பாளரான ஜான் டி செலிகா சொல்லுகிறார். “எந்த இனத்தோடு உங்களை அடையாளப்படுத்த விரும்புகிறீர்களோ, அதற்கேற்ற விதமாக ட்ரெஸ் பண்ண வேண்டியதுதான்” என்று மேலுமாக இவர் சொல்லுகிறார். சிட்னி யுனிவர்சிட்டியின் உளவியல் விரிவுரையாளர் டாக்டர் டையான்னா கென்னி, மக்களைப் பிரிப்பதற்கு மதம், செல்வம், வேலை, இனம், கல்வி, வீட்டு விலாசம் போன்றவை எவ்வளவு அவசியமோ, அதேபோல உடுத்துவதும் மிகவும் அவசியம் என்பதாக குறிப்பிட்டார். அமெரிக்காவில், கிட்டத்தட்ட வெள்ளைக்காரப் பிள்ளைகள் மாத்திரம் படிக்கும் பள்ளியில் ஒன்றில் “பெண்கள் தலையில் நிறைய பின்னல்களைப்போட்டு, தொளதொள பேஃகிஸ் டைப் ஆடைகளையும் ‘ஹிப்-ஹாப்’ பாணி ஆடைகளையும் உடுத்தியதால்” இனக்கலவரம் வெடித்திடும் என்ற பதட்டநிலை உருவானது என்று ஜெட் பத்திரிகை குறிப்பிட்டது. “ஏனெனில் இப்படிப்பட்ட உடைகள் கருப்பினத்தவரோடு தொடர்புடையவை.”
இவ்வாறு மற்ற இனத்தோடு அடையாளம் காட்டி உடுத்தும் பாணியில் இசையும் செல்வாக்கு செலுத்துகிறது. மக்லீன்ஸ் பத்திரிகை இவ்வாறு கூறுகிறது: “அநேக சமயங்களில் இசை மீதான ஒருவருடைய காதல், அவருடைய ஆடைகளில் தெளிவாக தெரிந்துவிடுகிறது. ஜமைக்காவில் புகழ்பெற்ற இசை ரெஹ்ஹி. இதனுடைய ரசிகர்கள் பளிச்சிடும் வண்ணங்களில் உடுத்தி, ஜமைக்காவின் தொப்பியையும் அணிந்துகொள்கின்றனர். க்கிரஞ் ராக் ஸ்போர்ட் இசையை ஆதரிப்பவர்கள் ஸ்கை குல்லாக்களையும் கலர்கலர் கட்டங்கள் போட்ட சட்டைகளையும் விரும்புகின்றனர்.” ஏனோதானோ என்று உடுத்துவது, பரதேசி போல் காட்சியளிக்க உடுத்துவது, க்கிரஞ் க்ரூப் என்று அழைக்கப்படுவதற்காக உடுத்துவது என்று எதை விரும்பினாலும் சரி, கணிசமான பணம் செலவாகும்.
உடைக்கே உரிய ஒழுங்கு எங்கே?
“எல்லாம் நீங்கள் நினைப்பதற்கு தலைகீழாக இருக்கிறது” என்கிறார் செய்தித்தாள் எழுத்தாளர் வூடி ஹோச்வன்டர். “ஒரு காலத்தில் ஆண்களின் உடை பாணியில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒழுங்கு, கட்டுப்பாடில்லாமல் எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. கன்னாபின்னா என்று காட்சியளிக்க வேண்டும் என்பதே நியதியாகிவிட்டது” என்பதாக இவர் மேலுமாக கூறுகிறார். சில சந்தர்ப்பங்களில் இப்படிப்பட்ட போக்கானது அக்கறையற்ற மனப்பான்மையை குறிப்பிடலாம். கூடுதலாக, சுயகௌரவம் அற்ற அல்லது மற்றவர்களை மதிக்காத குணத்தை வெளிக்காட்டலாம்.
மாணவர்கள் தங்களுடைய ஆசிரியர்களைப் பற்றி என்ன நினைக்கின்றனர்? இது சம்பந்தப்பட்ட ஒரு கட்டுரையில், பர்செப்சுவல் அண்ட் மோட்டார் ஸ்கில்ஸ் என்ற பத்திரிகை பின்வருமாறு சொல்லுகிறது: “ஒரு ஆசிரியர் ஜீன்ஸ் போட்டுக்கொண்டு கிளாஸ் ரூமுக்கு வருகிறார் என்றால் மாணவர்களுக்கு இவர் ஒரு ஜோக்கர் மாதிரிதான். அவருடைய கருத்துகளை யாருமே அவ்வளவாய் கண்டுகொள்வதில்லை. இவர் ஒப்புக்குத்தான் வாத்தியாராக இருக்கிறாரே தவிர, இவருக்கு ஒன்றுமே தெரியாது என்பதாகத்தான் மாணவர்கள் நினைக்கிறார்கள்.” அதே பத்திரிகை “ஒரு ஆசிரியை ஜீன்ஸ் அணிந்து வருகிறாரென்றால் இவரையும் வேடிக்கையாக பார்க்கிறார்கள். ஆனால் மாணவர்களால் நன்றாக அணுகக்கூடியவராக இருக்கிறார். சிறந்த ஞானமுள்ளவராக அல்ல, ஆனால் இவரது வார்த்தைக்கு ஓரளவு மரியாதை இருக்கும். ஒரு டீச்சரைப்போல தோற்றமுடையவராக இல்லாவிட்டாலும் பொதுவாக மதிப்பிற்குரியவராக கருதப்படுகிறார்.”
அதே சமயத்தில் வியாபார உலகில் இன்னுமொரு வகையான ஃபேஷன் டைப் இருக்கிறது. அதுதான் வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்கும் வண்ணமாக உடுத்துதல். சமீபத்திய வருடங்களில் அநேக பெண்கள் தொழிலில் கொடிகட்டி பறக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். பப்லிஸிங் ஹவுஸில் உயர் அதிகாரியாக இருக்கும் மேரி சொல்லுவதை கேளுங்களேன்: “மற்றவர்களை கவர்ந்திழுப்பதற்காக நான் உடுத்துகிறேன். நான் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவளாக, அட்டகாசமாக தோற்றமளிக்க விரும்புகிறேன்.” தன்மீதே தான் அதிக கவனம் செலுத்துவதாக மேரி வெளிப்படையாக ஒத்துக்கொண்டார்.
பிரபலமான ஃபேஷன்கள் சர்ச்சுகளையும் விட்டு வைக்கவில்லை. பெரும்பாலான ஃபேஷன் பிரியர்கள் தங்களுடைய புதுப்பாணிகளை வெளியிடுவதற்கு சர்ச்சுகளையும் பயன்படுத்தினர். இன்றும் நேர்த்தியான நீண்ட மேலங்கியைத் போட்டுக்கொண்டு சர்ச் மேடையிலிருந்து போதிக்கும் மதக்குருமார்கள், பார்க்கிறதென்னவோ ஸ்போர்ட்ஸ் ஷூக்களோடு ஜீன்ஸ்களைப் போட்டுக்கொண்டும் அல்லது அதிநவீன பாணியில் உடுத்திக்கொண்டும் சர்ச்சுக்கு வருபவர்களைத்தான்.
நான் என்ற எண்ணமும், தனித்துவ வெறியும் எதற்கு?
மற்றவர்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக, எதற்கெடுத்தாலும் ‘நான்’ என்ற எண்ணமே அதிநவீன உடைப்பாணிகளுக்கு காரணமாக இருக்கிறது என்பதாக மனோவியல் வல்லுநர்கள் சொல்லுகிறார்கள். விசேஷமாக இளைஞர்களிடையே இது உண்மையாக இருக்கிறது. “வளரும் இளம் பருவத்தினரிடையே, மற்றவர்களை தங்களிடமாக காந்தம்போன்று கவர்ந்திழுப்பதற்கான ஆவல் ஒரு தொற்று நோயைப்போன்றது” என்பதாகவும் அவர்கள் விளக்குகிறார்கள். இதன் விளைவாக “நீங்கள் என்னை கண்டு அசந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். நான் என்னைப் பார்த்தே சொக்கிப்போயிருக்கிறேன்” என இளசுகள் கூறுகின்றனர்.—அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ஆர்த்தோசைச்கியாட்ரி.
இன்றைய தத்துவங்கள் மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. கடவுளை எதற்கும் ஒத்துவராத நபர் என புறக்கணிக்கின்றன. கூடுதலாக இந்த சர்வலோகத்தில் நீங்களே மிகவும் முக்கியமான நபர் என்ற எண்ணத்தை வியாபார உலகம் வேறு பால் ஊட்டி வளர்க்கிறது. இப்படிப்பட்ட ‘மிகவும் முக்கியமான நபர்’களின் எண்ணிக்கை 600 கோடியை எட்டிவிட்டதுதான் பிரச்சினை. கிறிஸ்தவ மண்டலத்திலுள்ள லட்சக்கணக்கான மக்களும் பொருளாசை வெறியின் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதன் விளைவாக “இங்கேயே இப்போதே நல்ல வாழ்க்கை” வாழ்வதற்காக கடுமையாக முயற்சிக்கின்றனர். (2 தீமோத்தேயு 3:1-5-ஐ ஒப்பிடுக.) விஷயங்கள் இதோடு நின்று விடவில்லை. குடும்பப் பிணைப்புகளும் உண்மையான அன்பும் மறைந்து கொண்டிருக்கின்றன. ஆகவே பெரும்பான்மையினர் விசேஷமாக சின்னஞ்சிறுசுகள் தங்களுக்கு தனித்துவமும் பாதுகாப்பான உணர்வும் வேண்டும் என்று அலையும்போது கையில் எது கிடைத்தாலும் பற்றிக்கொண்டிருக்க விரும்புவதில் ஆச்சரியமேதுமில்லை.
இருந்தபோதிலும் தங்களுடைய உடையைப் பற்றியும் கடவுளுக்கு முன்பாக தங்களுடைய நிலைநிற்கையைப் பற்றியும் அக்கறையுடைய நபர்கள் இயல்பாகவே பின்வருமாறு கேட்கிறார்கள்: உடைகளின் பாணிகள் மாறிக்கொண்டிருக்கின்றன. இந்த வேளையில் நான் எதுவரைக்கும் இப்பாணிகளுக்கு ஒத்திணங்குவது? என்னுடைய உடைகள் பொருத்தமாக இருக்கின்றன என்பதை நான் எவ்வாறு தெரிந்துகொள்வது? என்னுடைய உடையைப் பார்த்து மற்றவர்கள் எப்படி எடை போடுவார்கள்? என்னைப் பற்றி புரிந்து கொள்வார்களா? குழம்பி போவார்களா?
நான் பொருத்தமாக உடுத்துகிறேனா?
நாம் எதை உடுத்த விரும்புகிறோம் என்பது நம்முடைய தனிப்பட்ட தீர்மானம். நம்முடைய பொருளாதார சூழ்நிலைமைகளை அனுசரித்து நம்முடைய தெரிவுகள் வித்தியாசப்படலாம். ஒவ்வொரு இடத்திற்கும் நாட்டிற்கும் கலாச்சாரங்கள் மாறுபடுகின்றன. ஒவ்வொரு நாட்டினுடைய சீதோஷ்ண நிலையும் மாறுகின்றன. ஆனால் உங்களுடைய சூழ்நிலைமை எப்படியிருந்தாலும் பின்வரும் நியமத்தை எப்பொழும் மனதில் வையுங்கள்: “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.“ (பிரசங்கி 3:1) வேறு வார்த்தைகளில் சொன்னால், சமயத்திற்கு ஏற்றவிதமாக உடுத்துங்கள். அடுத்ததாக “உங்கள் தேவனுக்கு முன்பாக பணிவடக்கத்தோடு நடந்துகொள்ளுங்கள்.”—மீகா 6:8, NW.
அடக்கமாக உடுத்த வேண்டும் என்றால் ஒரேயடியாக இழுத்து போர்த்திக்கொண்டிருக்க வேண்டும் என்பது அல்ல. மாறாக “தெளிந்த புத்தி”யுள்ளவர்களாக நாம் ‘தகுதியான வஸ்திரத்தை‘ உடுத்தவேண்டும். (1 தீமோத்தேயு 2:9, 10) இதன் அர்த்தம், புதுப்பாணிகள் நம்மீது செல்வாக்கு செலுத்தாதபடிக்கு அவற்றிற்கு ப்ரேக் போடவேண்டும் என்பதே. ஒர்க்கிங் உமன் என்ற பத்திரிகை இப்படி கட்டுப்பாடோடு இருக்கும் தன்மையை நல்ல ரசனையோடும், அழகுணர்ச்சியோடும் இணைத்து கூறுகிறது. அறையில் நுழையும்போது, உங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, உங்கள் உடை முந்திக்கொள்ள கூடாது, அதாவது உங்களைவிட உங்கள் உடை முக்கியத்துவம் பெற்றுவிடக்கூடாது என்பதை ஒரு கொள்கையாக வைத்து பின்பற்றுங்கள். ஒர்க்கிங் உமன் சொல்லுகிறது: “தனிநபராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை மக்கள் பார்க்கும் விதத்தில், அவர்களுடைய கவனம் சிதறாதபடி . . . உடை உடுத்துங்கள்.”
பர்செப்சுவல் அண்ட் மோட்டார் ஸ்கில்ஸ் என்ற பத்திரிகை சொல்லுகிறது: “ஒருவர் உடுத்தும் விதம் அந்த நபரைப்பற்றி எப்படிப்பட்ட செய்தியை அனுப்புகிறது என்பதை அநேக பிரசுரங்கள் ஆராய்ந்தன. ஆகவே ஒருவர் உடுத்தும் உடைகளே, அவர் எப்படிப்பட்டவர் என்பதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட முக்கியமான ஆதாரமாக இருக்கிறது.” இதே கருத்தை 40-களில் உள்ள பெண்மணியும் ஒத்துக்கொள்கிறார். முன்பெல்லாம் மற்றவர்களை கவர்ந்திழுப்பதற்காகவே உடை உடுத்தினார். அப்போது நிகழ்ந்ததை கூறுகிறார்: “நான் இவ்வாறு மற்றவர்களை கவருவதற்காக உடுத்தியது எக்கச்சக்கமான பிரச்சினைகளை கிளப்பிவிட்டது. ஏனெனில் இவ்வாறு செய்ததானது என்னுடைய வேலையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் வித்தியாசப்படுத்த முடியாமல் போய்விட்டது. வியாபார விஷயமாக என்னிடம் வருபவர்கள் ஹோட்டலுக்கு சாப்பிட வரும்படி அழைத்து ஆண்களின் கூட்டம் எப்போதும் என்னை மொய்க்கத் தொடங்கியது.” அக்கவுண்டன்டாக இருக்கும் ஒரு பெண், இப்படி வித்தியாசமாக உடுத்துவதன் விளைவை பின்வருமாறு சொல்லுகிறாள்: “கவர்ச்சியாக அல்லது ஆண்களைப்போல அப்படியே உடுத்திவரும் பெண்கள் பாடு கஷ்டம்தான். இவர்களிடம் ஆண்கள் எவ்விதமாக நடந்து கொள்கின்றனர் என்பதை நான் கவனித்திருக்கிறேன். இப்பெண்கள் முரட்டு சுபாவம் உள்ளவர்கள், அடித்து வீழ்த்துவதில் கைதேர்ந்தவர்கள் என்று ஆண்கள் கருதுகின்றனர். அதனால் வியாபாரத்தொடர்புகளில் இப்பெண்களுக்கு ஆண்கள் எந்தவித தயவுதாட்சண்யத்தையும் காட்டுவதில்லை.”
ஜெஃப்பி என்ற இளம் பெண் தன்னுடைய ஹேர் ஸ்டைலை நவீன பாணிக்கேற்றவிதமாக மாற்றிக்கொண்டாள். விளைவு? மற்றவர்களெல்லாம் அவளை ஒருமாதிரியாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். “ஏதோ கொஞ்சம் ‘வித்தியாசமா’ இருக்கட்டுமேன்னுதான் நினைச்சேன். ஆனா, ‘நீ உண்மையிலேயே ஒரு யெகோவாவின் சாட்சியா?’ன்னு நிறையப்பேரு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு ரொம்ப தர்மசங்கடமா போச்சு” என்கிறாள் ஜெஃப்பி. தன்னை சோதித்தறிவதற்காக பின்வரும் கேள்விகளை இவள் கேட்டுக்கொண்டாள்: “இருதயத்தின் நிறைவினால்” நம்முடைய வாய் மட்டுமல்ல, உடையும் சிகையலங்காரமும் பேசும் என்பது உண்மையல்லவா? (மத்தேயு 12:34) உங்கள் இதயத்தின் விருப்பத்தை பற்றி உங்களுடைய உடை என்ன தெரிவிக்கிறது? கவனத்தை யாருக்கு கொடுக்கிறீர்கள்? படைப்பாளருக்கா அல்லது உங்களுக்கா?
‘தெளிந்த புத்தியோடு’ உடுத்துங்கள்
உங்களது உடை உங்களை எப்படி பாதிக்கிறது என்பதை சற்று கவனியுங்கள். மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்கும் வண்ணமாக உடுத்துதல் மற்றும் மிதமிஞ்சிய பாணிகளில் உடுத்துதல் போன்றவை, உங்களுக்கு நீங்கள்தான் முக்கியம் என்ற எண்ணத்தை வளர்க்கலாம். அக்கறையில்லாமல் உடுத்துவதும் உங்களைப் பற்றி, நீங்கள் கொண்டிருக்கும் தாழ்வான எண்ணத்தை இன்னும் வலுப்படுத்தும். உங்களுக்கு பிரியமான சினிமா, விளையாட்டு அல்லது வேறு துறையைச் சார்ந்த நட்சத்திரங்களின் படம் T-சர்ட்டில் விளம்பரம் செய்யப்படுகிறதென்றால் அப்பொழுது என்ன? இது உருவ வழிபாட்டிற்கு வழிநடத்துமல்லவா! சந்தேகமில்லாமல் உங்களுடைய உடை உங்களைக்குறித்து மற்றவர்களிடம் பேசுகிறது.
நீங்கள் கவர்ச்சியாக தோன்ற அல்லது கிளர்ச்சியூட்ட உடுத்துகிறீர்கள் என்றால், உங்களுடைய உடை உங்களைப் பற்றி என்ன சொல்லும்? விட்டுவிட நீங்கள் போராடிக்கொண்டிருக்கும் குணங்களையே வலியுறுத்தும் வகையில் உடுத்துகிறார்களா? மேலும், எத்தகைய நபரை கவருவதற்காக நீங்கள் உடுத்துகிறீர்கள்? நானே முதல் என்ற எண்ணத்தையும் வீண் தற்பெருமையையும் எதிர்மறையான யோசனைகளையும் தவிர்ப்பதற்கு ரோமர் 12:3-ல் பதிவு செய்யப்பட்டுள்ள அறிவுரை நமக்கு உதவும். இந்த வசனத்தில் “உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல் . . . தெளிந்த எண்ணமுள்ளவனாய் [“புத்தியுள்ளவனாய்,” NW] எண்ணவேண்டும்” என்பதாக அப்போஸ்தலனாகிய பவுல் ஆலோசனை கொடுக்கிறார்.
நம்பிக்கைக்கு பாத்திரமாக, பொறுப்பான ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு இது மிகவும் அவசியம். இவர்களுடைய முன்மாதிரி மற்றவர்கள் மீது அதிக செல்வாக்கை செலுத்துகிறது. கிறிஸ்தவ சபைகளில் மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதாக விரும்பும் கிறிஸ்தவ ஆண்களும் அவர்களுடைய மனைவிகளும் தங்களுடைய உடை, சிகையலங்காரம் செய்வதில் வரம்புமீறாமல் கண்ணியமாக இருக்கவேண்டும். கல்யாண விருந்தை பற்றிய உதாரணத்தில் தனித்து காணப்பட்ட ஒரு நபரை இயேசு குறிப்பிட்டார். அந்த நபரைப்போல நடந்துகொள்ள நாம் ஒருபோதும் விரும்பக்கூடாது: “விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்”டார். இந்த மனிதன் இப்படி மரியாதையில்லாமல் உடுத்தி வந்ததற்கு சரியான காரணம் இல்லை என்பதை அறிந்த ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: “இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், புறம்[பே] போடுங்கள் என்றான்.”—மத்தேயு 22:11-13.
ஆகவே உடுத்துவது சம்பந்தமாக பெற்றோர்கள் நல்ல ஆரோக்கியமான மனப்பான்மைகளையும் ரசனைகளையும் தங்களுடைய பிள்ளைகளிடம் வளர்க்கவேண்டும். சில சமயங்களில் தங்களுடைய பிள்ளைகளிடம் உடுத்துவது சம்பந்தமாக விஷயங்களை காரணம்காட்டி விவாதிக்கும்போது உறுதியாக இருக்கவேண்டும். நம்முடைய இளம் வயது பிள்ளைகள் உட்பட, நமது சொந்த உடை நடை பாணிகள் மற்றவர்களால் மனமார பாராட்டப்படுகின்றன. இப்படிப்பட்ட எதிர்பாராத பாராட்டுகள் நமக்கு உற்சாகமளிப்பதாய் இருக்கின்றன.
வீண் தற்பெருமை, விலையுயர்ந்த ஃபேஷன்கள், தன்னைப்பற்றி மட்டுக்குமீறி எண்ணுதல் போன்றவற்றிலிருந்து யெகோவாவின் சாட்சிகள் விடுபட்டிருக்கின்றார்கள். இவர்களை வழிநடத்துவது தெய்வீக நியமங்களே அல்லாமல் உலகத்தின் போக்கு அல்ல. (1 கொரிந்தியர் 2:12) நீங்கள் இந்த நியமங்களை பின்பற்றினால் உங்களுடைய உடைகளை தெரிந்தெடுப்பதில் அவ்வளவு கஷ்டம் இருக்காது. படத்திற்கு சரியான ஃப்ரேம் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் படத்தின் அழகையே மறைத்துவிடும் அல்லது கெடுத்துவிடும். அதேபோல் உடைகளும் உங்கள் பண்புகளை மறைக்கவும் கூடாது அல்லது கெடுத்துவிடவும்கூடாது. நீங்கள் எந்தளவுக்கு கடவுளைப் பின்பற்ற முயற்சிக்கிறீர்களோ அந்தளவுக்கு உங்களுடைய ஆன்மீக அழகும் கூடிக்கொண்டே இருக்கும். சந்தேகமில்லாமல் அலமாரியில் எத்தனையோ வகை வகையான துணிமணிகள் இருந்தாலும் இந்த ஆன்மீக அழகுக்கு ஈடாகாது!