அதிகாரம் 12
நீங்கள் ஒரு முக்கிய விவாதத்தில் உட்பட்டவர்களாக இருக்கிறீர்கள்
உங்கள் வாழ்க்கையை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்பது மெய்யாகவே முக்கியத்துவமுடையதாயிருக்கிறது. அது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான எதிர்காலத்தையோ அல்லது துயர் மிகுந்த எதிர்காலத்தையோ குறிக்கும். கடைசியாக, நீங்கள் இந்த உலகத்தோடு கடந்துபோய்விடுவீர்களா அல்லது அதன் முடிவைத் தப்பிப்பிழைத்து என்றும் வாழக்கூடிய கடவுளுடைய நீதியுள்ள புதிய ஒழுங்குக்குள் நீங்கள் செல்வீர்களா என்பதை இது தீர்மானிக்கும்.—1 யோவான் 2:17; 2 பேதுரு 3:13.
2 ஆனால் உங்கள் வாழ்க்கையை எப்படி நடத்துகிறீர்கள் என்பது வெறுமென உங்களை மாத்திரமேயல்ல மற்றவரையும் பாதிக்கிறது. மற்றவர்களும் அதில் உட்பட்டிருக்கிறார்கள். நீங்கள் செய்வது அவர்களையுங்கூட பாதிக்கிறது. உதாரணமாக, உங்கள் பெற்றோர் உயிரோடிருக்கிறார்களென்றால், நீங்கள் செய்வது அவர்களுக்குக் கனத்தையோ, வெட்கத்தையோ, இரண்டில் ஒன்றைக் கொண்டுவரக்கூடும். “ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.” (நீதிமொழிகள் 10:1) மிக அதிக முக்கியமாக, நீங்கள் உங்கள் வாழ்க்கையை நடத்தும் முறை யெகோவா தேவனைப் பாதிக்கிறது. அது அவரை மகிழ்விக்கலாம் அல்லது அவருக்கு விசனத்தை உண்டாக்கலாம். ஏன்? ஏனெனில் நீங்கள் மிக முக்கியமான விவாதத்தில் உட்பட்டிருக்கிறீர்கள்.
மனிதர் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருப்பார்களா?
3 இந்த விவாதமே பிசாசாகிய சாத்தானால் எழுப்பப்பட்டது. அவன் ஆதாமையும் ஏவாளையும் கடவுளுடைய சட்டத்தை மீறும்படி செய்து இவ்வாறாகக் கடவுளுக்கு விரோதமான கலகத்தில் தன்னைச் சேர்ந்து கொள்ளும்படி அவர்களைச் செய்விக்கக் கூடியவனானபோது இந்தக் கேள்வியை அவன் எழுப்பினான். (ஆதியாகமம் 3:1-6) யெகோவாவை நோக்கிப் பின்வருமாறு சவால் விடுவதற்கு இது தனக்குப் போதிய அடிப்படையை அளித்ததாக சாத்தான் உணர்ந்தான்: ‘உம்மிடமிருந்து தாங்கள் பெறக்கூடியவற்றிற்காகவே மனிதர் உம்மைச் சேவிக்கிறார்கள். எனக்கு வாய்ப்பைக் கொடுத்துப் பாரும் நான் எவரையும் உம்மிடமிருந்து விலகிச் செல்லும்படி செய்யக்கூடும்.’ இந்த வார்த்தைகள் பைபிளில் இப்படியே காணப்படுகிறதில்லையென்ற போதிலும், சாத்தான் இதைப்போல் ஒன்றைக் கடவுளிடம் சொன்னான் என்பது தெளிவாய் இருக்கிறது. இது யோபு என்ற பைபிள் புத்தகத்தில் காட்டப்பட்டிருக்கிறது.
4 யோபு ஏதேன் தோட்டத்தில் நடந்த கலகத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் வாழ்ந்த ஒரு மனிதன். அவன் நீதிமானும் கடவுளுடைய உண்மையுள்ள ஊழியனுமாயிருந்தான். யோபு உண்மையுள்ளவனாயிருந்தது கடவுளுக்கோ சாத்தானுக்கோ உண்மையில் முக்கியத்துவமுடையதாயிருந்ததா? இருந்ததென்று பைபிள் காட்டுகிறது. பரலோகப் பேரவைகளில் சாத்தான் யெகோவாவுக்கு முன்பாகத் தோன்றினதைப் பற்றி அது நமக்குச் சொல்லுகிறது. அவர்களுடைய உரையாடலின் பொருளைக் கவனியுங்கள்:
5 “ஒரு நாள் தெய்வதூதர் யெகோவாவின் சந்நிதியில் வந்து நின்றபோது சாத்தானும் அவர்கள் நடுவில் வந்து நின்றான். யெகோவா சாத்தானைப் பார்த்து, நீ எங்கே போய் வருகிறாய் என்று கேட்கச் சாத்தான், நான் பூமியெங்கும் போய்ச் சுற்றித்திரிந்து வருகிறேன், என்று யெகோவாவுக்குப் பதிலுரைத்தான். பின்னும் யெகோவா சாத்தானிடம்: என் தொண்டனாகிய யோபைக் கவனித்தாயா? பூமியிலே அவனைப்போல் குற்றமற்றவனும் நேர்மையாளனுமாய்க் கடவுளுக்குப் பயந்து தீமைக்கு விலகி நடக்கிறவன் எவனுமில்லை, என்று சொன்னார்.”—யோபு 1:6-8, தி.மொ.
6 யோபு நேர்மையாளன் என்று யெகோவா ஏன் சாத்தானிடம் குறிப்பிட்டார்? யோபு யெகோவாவுக்கு உண்மையுள்ளவனாக நிலைத்திருப்பானா இல்லையா என்பதைப் பற்றி ஒரு விவாதம் இருந்ததென்பது தெளிவாய் இருக்கிறது. “நீ எங்கே போய் வருகிறாய்?” என்ற யெகோவாவின் கேள்வியையும், “நான் பூமியெங்கும் போய்ச் சுற்றித்திரிந்து வருகிறேன்,” என்ற சாத்தானின் பதிலையும் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். இந்தக் கேள்வியும் சாத்தானின் பதிலும், சாத்தான் தான் எவரையும் கடவுளிடமிருந்து விலகும்படி செய்யக்கூடுமென்ற தன் சவாலை நிறைவேற்ற யெகோவா அவனுக்கு முழு வாய்ப்பை அனுமதித்தாரென்பதைக் காட்டினது. யோபின் உண்மைத்தவறாமையைப் பற்றிய யெகோவாவின் கேள்விக்குச் சாத்தானின் பதில் என்னவாக இருந்தது.
7 “அது கேட்ட சாத்தான் யெகோவாவினிடம்: ‘யோபு லாபமில்லாமலா கடவுளுக்குப் பயந்து நடக்கிறான்! நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்குரிய யாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் செய்வதையெல்லாம் நீர் ஆசீர்வதித்தீர்; அவன் சம்பத்து தேசத்திலே பெருகிற்று. உமது கையை நீட்டி அவனுக்குரியவற்றையெல்லாம் தொடும், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரேயே உம்மைத் தூஷிக்க மாட்டானோ பாரும்’ என்றான்.”—யோபு 1:9-11, தி.மொ.
8 யோபு கடவுளுக்கு உண்மையுள்ளவனாயிருப்பதற்குச் சாத்தான் ஒரு சாக்குப் போக்கைத் தன் பதிலில் கொடுத்துக் கொண்டிருந்தான். ‘யோபு உம்மை நேசிப்பதன் காரணமாக அல்ல, நீர் அவனுக்கு கொடுத்துவரும் காரியங்களுக்காகவே உம்மைச் சேவிக்கிறான்,’ என்று சாத்தான் விவாதித்தான். மேலும் யெகோவா தம்முடைய மிகுந்த வல்லமையைச் சரியில்லாத முறையில் பயன்படுத்துவதாகவும் அவன் குறை கூறினான். ‘நீர் அவனை எப்பொழுதும் பாதுகாத்து வந்திருக்கிறீர்,’ என்று அவன் சொன்னான். ஆகவே, இந்த விவாதத்தைத் தீர்க்க யெகோவா பின்வருமாறு பதிலளித்தார்: “இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல் மாத்திரம் உன் கையை நீட்டாதே.”—யோபு 1:12.
9 உடனடியாக சாத்தான் யோபுக்குத் தொல்லைக் கொடுக்க ஆரம்பித்தான். யோபின் வீட்டு மிருகங்கள் யாவும் கொல்லப்படும்படி அல்லது திருடப்படும்படி செய்தான். பின்பு யோபின் 10 பிள்ளைகளும் கொல்லப்படும்படி பார்த்துக் கொண்டான். யோபு ஏறக்குறைய எல்லாவற்றையும் இழந்துவிட்டான், என்றாலும் அவன் யெகோவாவுக்கு உண்மையுள்ளவனாக நிலைத்திருந்தான். அவன் கடவுளைத் தூஷிக்கவில்லை. (யோபு 1:2, 13-22) ஆனால் அந்தக் காரியம் இத்துடன் முடிந்து விடவில்லை.
10 சாத்தான் மறுபடியுமாக மற்றத் தூதர்களுடன் யெகோவாவுக்கு முன்பாகத் தோன்றினான். மறுபடியும் யெகோவா சாத்தானிடம், யோபின் உண்மைத் தவறாமையைக் கண்டாயாவென்று கேட்டு: “அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறான்,” என்று சொன்னார். சாத்தான் பதிலுரைத்து: “தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும் மனுஷன் கொடுத்துவிடுவான். ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவன் எலும்பையும் அவன் மாம்சத்தையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான்.”—யோபு 2:1-5.
11 யெகோவா, சாத்தானுக்குப் பதில் தருபவராய், அவன் யோபுக்குச் செய்யக் கூடியதையெல்லாம் செய்யும்படி அனுமதி கொடுத்தார், என்றபோதிலும், ‘நீ அவனைக் கொல்லக்கூடாது,’ என்று கடவுள் சொன்னார். (யோபு 2:6) ஆகவே சாத்தான் யோபுக்கு ஒரு பயங்கர நோயுண்டாகும்படி தாக்கினான், யோபின் வேதனை அவ்வளவு கொடியதாக இருந்ததனால் தான் சாகும்படி அவன் விண்ணப்பம் செய்தான். (யோபு 2:7; 14:13, 14) அவனுடைய சொந்த மனைவிதானேயும் அவனுக்கு விரோதமாகத் திரும்பி: “தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்!” என்று சொன்னாள். (யோபு 2:9) ஆனால் யோபு அதைச் செய்ய மறுத்துவிட்டான். “என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னை விட்டு விலக்கேன்,” என்று அவன் சொன்னான். (யோபு 27:5) யோபு கடவுளுக்கு உண்மையுள்ளவனாக நிலைத்திருந்தான். ஆகவே, யோபு, அன்பின் காரணமாக அல்ல, பொருள் சம்பந்த லாபத்திற்காக மாத்திரமே கடவுளைச் சேவித்தான் என்ற சவாலில் சாத்தான் தவறாக இருந்தானென்று நிரூபிக்கப்பட்டது. மேலும் கடவுளைச் சேவிப்பதிலிருந்து எல்லோரையுமே விலகிப் போகச் செய்ய சாத்தானால் முடியாதென்றும் காட்டப்பட்டது.
12 யோபின் உண்மைத் தவறாத போக்கு, யெகோவாவை எப்படி உணரச் செய்திருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அது அவரை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது! கடவுளுடைய வார்த்தை பின்வருமாறு நம்மை ஏவுகிறது: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.” (நீதிமொழிகள் 27:11) யெகோவாவை நிந்திக்கிறவன் சாத்தானே. யோபு தன்னுடைய உண்மைத் தவறாதப் போக்கின்மூலம் கடவுளுடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்தினான். இது, சோதனையின் கீழ் மனிதர் கடவுளைச் சேவிக்கமாட்டார்கள் என்று ஆணவத்துடன் கூறும் சாத்தானின் நிந்திப்புக்கு அல்லது சவாலுக்கு ஒரு பதிலைக் கடவுளுக்குக் கொடுத்தது. மற்றும் அநேகர் இப்படிப்பட்ட ஒரு பதிலைக் கடவுளுக்குக் கொடுத்திருக்கின்றனர். இதில் மிக மேலான முன்மாதிரி பரிபூரண மனிதனாகிய இயேசுவே. சாத்தான் அவர்பேரில் கொண்டுவந்த எல்லா சோதனைகளுக்கும் கடுந்துன்பங்களுக்கும் மத்தியில் அவர், கடவுளிடமாக, தம்முடைய உண்மைத் தவறா பற்றுறுதியை விடாமல் கடைப்பிடித்தார். இது, பரிபூரண மனிதனாகிய ஆதாம், தான் விரும்பியிருந்தால் அதே விதமாகச் செய்திருக்கக்கூடுமென்றும், மனிதனிடமிருந்து முழு கீழ்ப்படிதலைக் கேட்பதில் கடவுள் நீதியற்றவராக இல்லை என்றும் நிரூபித்தது.
நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்?
13 உங்கள் வாழ்க்கையைப் பற்றியதென்ன? நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பது உண்மையில் முக்கியத்துவமுடையதென்று நீங்கள் ஒருவேளை நினைக்கமாட்டீர்கள். என்றாலும் அது உண்மையில் முக்கியத்துவமுடையதாயிருக்கிறது. உங்களுக்குத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அது இந்த விவாதத்தில் கடவுளின் சார்பாக அல்லது சாத்தானின் சார்பாக ஆதரிப்பதாயிருக்கிறது. யெகோவா உங்களுக்காகக் கவலைகொள்ளுகிறார். நீங்கள் அவரைச் சேவித்து பரதீஸான பூமியில் என்றும் வாழும்படி பார்த்துக்கொள்ள அவர் விரும்புகிறார். (யோவான் 3:16) இஸ்ரவேலர் கடவுளுக்கு விரோதமாகக் கலகஞ் செய்தபோது, அவர் விசனப்பட்டார் அல்லது வருத்த உணர்ச்சியடைந்தார். (சங்கீதம் 78:40, 41) உங்களுடைய வாழ்க்கைப்போக்கு கடவுளைச் சந்தோஷப்படுத்தும் ஒன்றாக இருக்கிறதா அல்லது அது அவருக்கு விசனத்தை உண்டாக்குவதாய் இருக்கிறதா? நிச்சயமாகவே கடவுளைச் சந்தோஷப்படுத்த நீங்கள் அவருடைய சட்டங்களைக் கற்றறிந்து அவற்றிற்குக் கீழ்ப்படிய வேண்டும்.
14 மக்கள் தங்களுடைய இனப்பெருக்க ஆற்றல்களைப் பயன்படுத்துவதன் பேரில் கடவுள் கொடுத்திருக்கும் சட்டங்களையும், திருமணத்துக்கும் குடும்பத்துக்குமுரிய அவருடைய ஏற்பாட்டையும் மீறும்படி செய்வதே சாத்தானின் ஒரு முக்கிய நோக்கமாய் இருக்கிறது. நம்முடைய சந்தோஷத்தைப் பாதுகாப்பதற்கான கடவுளுடைய சட்டங்கள், திருமணமாகாத ஆட்கள் பாலுறவுகளில் ஈடுபடக்கூடாது என்றும், திருமணமாகியுள்ள ஆட்கள் தங்கள் விவாகத் துணைவரைத் தவிர வேறு எவருடனும் பாலுறவு கொள்ளக்கூடாதென்றும் சொல்லுகின்றன. (1 தெசலோனிக்கேயர் 4:3-8; எபிரெயர் 13:4) கடவுளுடைய சட்டம் மீறப்படுகையில், பிள்ளைகள் அடிக்கடி பெற்றோருடைய அன்பும் ஆதரவும் இல்லாத நிலையில் பிறக்கின்றனர். தாய்மார்கள் கருச்சிதைவுங்கூட செய்துகொண்டு, பிள்ளைகள் பிறக்கக்கூடியதற்கு முன்பே அவர்களைக் கொன்று விடுகின்றனர். கூடுதலாக, வேசித்தனக் குற்றஞ்செய்யும் பலர், பால்சம்பந்த பயங்கர நோய்களுக்கு ஆளாகின்றனர், இவை அவர்கள் பிறப்பிக்கக்கூடிய பிள்ளைகளுக்குச் சேதம் உண்டாக்கும். தான் விவாகம் செய்திராத ஒருவருடன் பாலுறவு கொள்வதானது துரோகச் செயலாயிருக்கிறது, கடவுளுக்கு, விரோதமான கடுமையான குற்றமாயிருக்கிறது. யோபு பின்வருமாறு கூறினான்: “என் மனம் மோசம்போய் ஒருத்திபாற்செல நான் அயலான் வாசலிலே காத்து நின்றதுண்டானால் . . . என் செயல் மகா பெரும் தோஷமாகும், நியாயாதிபதிகள் விசாரிக்கும் குற்றமாம்.—யோபு 31:1, 9, 11, தி.மொ.
15 பிசாசினால் ஆளப்படும் இந்த உலகமானது, நீங்கள் விவாகம் செய்திராத ஒருவருடன் பாலுறவுகள் கொள்வது இயல்பானதாகவும் சரியானதாகவும் தோன்றும்படி செய்யுமென்பதில் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஆனால் நீங்கள் அப்படிச் செய்வீர்களானால், யாரைப் பிரியப்படுத்துகிறீர்கள்? சாத்தானையே, யெகோவாவை அல்ல. கடவுளைச் சந்தோஷப்படுத்த நீங்கள் “வேசித்தனத்திற்கு விலகியோட” வேண்டும். (1 கொரிந்தியர் 6:18) மெய்யே, கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருப்பது எப்பொழுதும் சுலபமாயில்லை. யோபுக்குங்கூட அது சுலபமாக இருக்கவில்லை. ஆனால் கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது ஞானமான காரியம். கீழ்ப்படிவீர்களானால் இப்பொழுது மேலும் சந்தோஷமுள்ளவர்களாக நீங்கள் இருப்பீர்கள். ஆனால் மிக முக்கியமாக, இந்த விவாதத்தில் கடவுளுடைய சார்பை ஆதரிக்கிறவர்களாக நீங்கள் இருந்து அவரைச் சந்தோஷப்படுத்துவீர்கள். அவர் உங்களை பூமியில் சந்தோஷத்தில் நித்திய ஜீவனை அடையும்படி ஆசீர்வதிப்பார்.
16 சாத்தான் யோபை ஏழ்மைக்குத் தாழ்த்தவும், அவனுடைய 10 பிள்ளைகளுக்கு மரணத்தை உண்டாக்கவும் கூடியவனாயிருந்தது உண்மையே. சந்தேகமில்லாமல், இது யோபுக்கு மிகக் கடுமையான இழப்பாக இருந்தது. ஆனால் யோபு உண்மைத் தவறாதவனாக நிரூபித்தபோது, அவன் சோதிக்கப்படும்படி சாத்தானை அனுமதித்ததற்கு முன்பாக அவனுக்கிருந்த எல்லாவற்றிற்கும் இரட்டிப்பாய்க் கடவுள் அவனை ஆசீர்வதித்தார். மேலும் யோபு இன்னும் 10 பிள்ளைகளுக்குத் தகப்பனானான். (யோபு 42:10-17) அல்லாமலும், சாத்தானால் கொல்லப்பட்ட யோபின் 10 பிள்ளைகள், மரித்தோரின் உயிர்த்தெழுதலில் திரும்ப உயிருக்குக் கொண்டுவரப்படுவார்கள் என்றும் நாம் நிச்சயமாயிருக்கலாம். மெய்யாகவே சாத்தான் உண்டுபண்ணும்படி அனுமதிக்கப்பட்டிருக்கிற தீங்கு அல்லது தொல்லை எதுவாயிருந்தாலும், அது நம்முடைய அன்புள்ள தகப்பனாகிய யெகோவாவால் அவருடைய உரிய காலத்தில் சரி செய்யப்படாமல் விட்டு வைக்கப்படும் காரியமாக இராது.
17 ஆகவே, உங்கள் வாழ்க்கையை நீங்கள் எப்படி நடத்துகிறீர்களென்பது உண்மையாகவே முக்கியத்துவமுடையதாயிருக்கிறதென்பதை நீங்கள் எப்பொழுதும் மனதில் வைத்து வர விரும்புவீர்கள் முக்கியமாய் இது யெகோவா தேவனுக்கும் பிசாசாகிய சாத்தானுக்கும் முக்கியத்துவமுடையதாயிருக்கிறது. இது ஏனென்றால், மனிதர் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருப்பார்களா இல்லையா என்ற இந்த விவாதத்தில் நீங்கள் உட்பட்டவர்களாக இருக்கிறீர்கள்.
[கேள்விகள்]
1, 2. (எ) நீங்கள் வாழும் முறை ஏன் உங்களுக்கு உண்மையில் முக்கியத்துவமுடையதாயிருக்கிறது? (பி) வேறு எவருக்கும் அது முக்கியத்துவமுடையதாயிருக்கிறது? ஏன்?
3. சாத்தான் யெகோவாவிடம் என்ன சவால் விட்டான்?
4, 5. (எ) யோபு யார்? (பி) யோபின் நாளில் பரலோகத்தில் என்ன நடந்தது?
6. யோபின் நாளில் என்ன விவாதம் இருந்துவந்ததாக பைபிள் காட்டுகிறது?
7, 8. (எ) யோபு என்ன காரணத்துக்காக கடவுளைச் சேவித்தானென்று சாத்தான் சொன்னான்? (பி) இந்த விவாதத்தைத் தீர்க்க யெகோவா என்ன செய்தார்?
9. சாத்தான் யோபுக்கு என்ன தொல்லைகளை உண்டுபண்ணினான், அதன் விளைவென்ன?
10. சாத்தான் இதோடு விட்டுவிடவில்லை என்று எது காட்டுகிறது?
11. (எ) மேலுமாக என்ன சோதனைகளைச் சாத்தான் யோபுக்கு உண்டுபண்ணினான்? (பி) இதன் விளைவென்ன?
12. (எ) சாத்தானின் சவாலுக்கு என்ன பதிலை யோபு கடவுளுக்குக் கொடுத்தான்? (பி) இயேசு கடவுளுக்கு உண்மைத் தவறாதவராக இருந்தது எதை நிரூபித்தது?
13. (எ) உங்கள் வாழ்க்கையை நீங்கள் நடத்தும் முறைக்கும் இந்த விவாதத்துக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? (பி) நாம் எப்படிக் கடவுளைச் சந்தோஷப்படுத்தக்கூடும் அல்லது அவருக்கு விசனத்தை உண்டுபண்ணக்கூடும்?
14. (எ) கடவுளைச் சந்தோஷப்படுத்த, பாலுறவுகளைக் குறித்ததில் எந்தச் சட்டங்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும்? (பி) இப்படிப்பட்ட சட்டங்களை மீறுவது ஏன் பெருங்குற்றமாகும்?
15. (எ) நாம் வேசித்தனக் குற்றம் செய்கிறோமென்றால் யாரைப் பிரியப்படுத்துகிறோம்? (பி) கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது ஏன் ஞானமான காரியம்?
16. (எ) யோபு உண்மையுள்ளவனாய் நிலைத்திருந்ததற்காக எப்படி ஆசீர்வதிக்கப்பட்டான்? (பி) யோபின் 10 பிள்ளைகளைக் கொன்றது போன்ற, சாத்தான் உண்டுபண்ணுகிற தீங்கைப் பற்றி என்ன சொல்லப்படலாம்?
17. நாம் வாழும் முறை ஏன் உண்மையில் முக்கியத்துவமுடையதாய் இருக்கிறது?
[பக்கம் 106-ன் படம்]
சோதனையின் கீழ் ஒருவரும் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாய் நிலைத்திரார் என்ற சாத்தானின் சவாலை யோபு எதிர்ப்பட்டான்
[பக்கம் 110-ன் படம்]
நீங்கள் விவாகம் செய்திராத ஒருவருடன் பாலுறவு கொள்வது கடவுளுக்கு விரோதமான ஒரு குற்றமாகும்
[பக்கம் 111-ன் படம்]
யோபு உண்மைத் தவறாதவனாக இருந்ததால் அவனை யெகோவா முன்னிலும் அதிகமாய் ஆசீர்வதித்தார்