உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • es25 பக். 107-119
  • செப்டம்பர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • செப்டம்பர்
  • சிந்திக்க தினம் ஒரு வசனம்—2025
  • துணை தலைப்புகள்
  • திங்கள், செப்டம்பர் 1
  • செவ்வாய், செப்டம்பர் 2
  • புதன், செப்டம்பர் 3
  • வியாழன், செப்டம்பர் 4
  • வெள்ளி, செப்டம்பர் 5
  • சனி, செப்டம்பர் 6
  • ஞாயிறு, செப்டம்பர் 7
  • திங்கள், செப்டம்பர் 8
  • செவ்வாய், செப்டம்பர் 9
  • புதன், செப்டம்பர் 10
  • வியாழன், செப்டம்பர் 11
  • வெள்ளி, செப்டம்பர் 12
  • சனி, செப்டம்பர் 13
  • ஞாயிறு, செப்டம்பர் 14
  • திங்கள், செப்டம்பர் 15
  • செவ்வாய், செப்டம்பர் 16
  • புதன், செப்டம்பர் 17
  • வியாழன், செப்டம்பர் 18
  • வெள்ளி, செப்டம்பர் 19
  • சனி, செப்டம்பர் 20
  • ஞாயிறு, செப்டம்பர் 21
  • திங்கள், செப்டம்பர் 22
  • செவ்வாய், செப்டம்பர் 23
  • புதன், செப்டம்பர் 24
  • வியாழன், செப்டம்பர் 25
  • வெள்ளி, செப்டம்பர் 26
  • சனி, செப்டம்பர் 27
  • ஞாயிறு, செப்டம்பர் 28
  • திங்கள், செப்டம்பர் 29
  • செவ்வாய், செப்டம்பர் 30
சிந்திக்க தினம் ஒரு வசனம்—2025
es25 பக். 107-119

செப்டம்பர்

திங்கள், செப்டம்பர் 1

‘சூரிய உதயத்தைப் போன்ற ஓர் ஒளி மேலே இருந்து நம்மிடம் வரும்.’—லூக். 1:78.

எல்லா பிரச்சினைகளையும் சரிசெய்யும் சக்தியை இயேசுவுக்கு யெகோவா கொடுத்திருக்கிறார். இயேசு அற்புதங்களைச் செய்வதன் மூலம், நம்மால் சரிசெய்ய முடியாத பிரச்சினைகளை தன்னால் சரிசெய்ய முடியும் என்று காட்டினார். நம் பிரச்சினைகளுக்கு ஆணிவேராக இருக்கும் பாவத்திலிருந்தும், அதனால் வரும் வியாதியிலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் சக்தி அவருக்கு இருக்கிறது என்பதைக் காட்டினார். (மத். 9:1-6; ரோ. 5:12, 18, 19) “எல்லா விதமான” நோய்களையும் இயேசுவால் குணப்படுத்த முடியும், இறந்தவர்களைக்கூட உயிரோடு எழுப்ப முடியும் என்று அவர் செய்த அற்புதங்கள் காட்டுகின்றன. (மத். 4:23; யோவா. 11:43, 44) பயங்கரமான புயல்காற்றை அடக்குவதற்கும் பேய்களை அடக்குவதற்கும்கூட இயேசுவுக்குச் சக்தி இருக்கிறது. (மாற். 4:37-39; லூக். 8:2) தன்னுடைய மகனுக்கு யெகோவா எவ்வளவு சக்தியைக் கொடுத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும்போது நமக்குப் புதுத்தெம்பு கிடைக்கிறது! கடவுளுடைய அரசாங்கத்தில் நமக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று நாம் நிச்சயம் நம்பலாம். பூமியில் இயேசு அற்புதங்களைச் செய்தது, பரலோகத்தில் அவர் ராஜாவாக ஆட்சி செய்யும்போது இன்னும் பெரிய அளவில் அற்புதங்களைச் செய்வார் என்பதைக் காட்டுகிறது. w23.04 3 ¶5-7

செவ்வாய், செப்டம்பர் 2

அந்தச் சக்தி எல்லா காரியங்களையும், சொல்லப்போனால் கடவுளுடைய ஆழமான காரியங்களையும்கூட, ஆராய்கிறது.—1 கொ. 2:10.

ஒரு பெரிய சபையில் இருந்தால் பதில் சொல்ல அடிக்கடி வாய்ப்புக் கிடைக்காமல் போய்விடலாம். ‘இனிமேல் கையே தூக்க வேண்டாம்’ என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். தொடர்ந்து பதில் சொல்ல முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு கூட்டத்துக்கும் நிறைய பதிலை முன்கூட்டியே தயாரித்துவிட்டு வாருங்கள். ஆரம்பத்தில் உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்காவிட்டால்கூட போகப்போக வாய்ப்புக் கிடைக்கலாம். காவற்கோபுர படிப்புக்குத் தயாரிக்கும்போது, ஒவ்வொரு பாராவும் கட்டுரையின் முக்கியப் பொருளோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். அப்போது, படிப்பு முழுவதும் சொல்வதற்கு நிறைய குறிப்புகள் இருக்கும். ஆழமான விஷயங்கள் இருக்கும் பாராக்களை நன்றாகத் தயாரித்துவிட்டு வாருங்கள். ஏனென்றால், அதை விளக்கிச் சொல்வது கஷ்டம் என்பதால் நிறைய பேர் கை தூக்க மாட்டார்கள். அடுத்தடுத்து பல கூட்டங்களில் உங்களுக்குப் பதில் சொல்ல வாய்ப்பே கிடைக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்? கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே, படிப்பை நடத்துகிறவரிடம் போய், எந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல விரும்புகிறீர்கள் என்று சொல்லி வைத்துவிடுங்கள். w23.04 21-22 ¶9-10

புதன், செப்டம்பர் 3

‘யோசேப்பு யெகோவாவின் தூதர் சொன்னபடி தன்னுடைய மனைவியை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார்.’—மத். 1:24.

யோசேப்பு யெகோவாவின் பேச்சுக்கு உடனே கீழ்ப்படிந்து நடந்தார். அதனால், ஒரு நல்ல கணவராக இருக்க அவரால் முடிந்தது. குறைந்தது மூன்று சந்தர்ப்பங்களிலாவது, யெகோவா அவரிடம் சில விஷயங்களைச் செய்யும்படி சொன்னார். அந்த ஒவ்வொரு தடவையும் யோசேப்பு பெரிய மாற்றத்தைச் செய்ய வேண்டியிருந்தாலும் உடனடியாகக் கீழ்ப்படிந்தார். (மத். 1:20; 2:13-15, 19-21) கடவுளுடைய பேச்சைக் கேட்டதால் மரியாளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்... ஆதரவாக இருக்கவும்... தேவையானதைச் செய்யவும்... முடிந்தது. இப்படிப்பட்ட கணவர்மேல் அன்பும் மரியாதையும் காட்டுவது மரியாளுக்கு எவ்வளவு சுலபமாக இருந்திருக்கும்! கணவர்களே, பைபிள் சொல்லும் ஆலோசனைகளின்படி உங்கள் குடும்பத்தைக் கவனித்துக்கொண்டால் நீங்களும் யோசேப்பைப் போலவே நடந்துகொள்ளலாம். நீங்கள் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யும்போது, மனைவிமேல் இருக்கும் அன்பைக் காட்ட முடியும், திருமண பந்தத்தைப் பலப்படுத்தவும் முடியும். வனுவாட்டு தீவில் இருக்கும் ஒரு சகோதரிக்குக் கல்யாணமாகி 20 வருஷத்துக்கும் மேல் ஆகிறது. அவர் இப்படிச் சொல்கிறார்: “என் கணவர் ஒரு விஷயத்தைச் செய்வதற்கு முன்பு அதைப் பற்றி யெகோவா என்ன சொல்லியிருக்கிறார் என்று தேடிக் கண்டுபிடித்து அதன்படி செய்வார். அதனால், அவர்மேல் நான் வைத்திருக்கும் மரியாதை இன்னும் அதிகமாகிறது. அவர் ஒரு முடிவை எடுத்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்னால் பயப்படாமலும் கவலைப்படாமலும் இருக்க முடிகிறது.” w23.05 21 ¶5

வியாழன், செப்டம்பர் 4

ஒரு நெடுஞ்சாலை இருக்கும். அது பரிசுத்தமான வழி என்று அழைக்கப்படும்.—ஏசா. 35:8.

பாபிலோனைவிட்டு இஸ்ரவேலுக்குத் திரும்பிவரும் யூதர்கள் யெகோவாவுக்கு ‘பரிசுத்தமான ஜனங்களாக’ இருப்பார்கள். (உபா. 7:6) அதற்காக, யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்கு இனி எந்த மாற்றங்களும் செய்ய வேண்டியதில்லை என்று அர்த்தம் கிடையாது. யூதர்களில் பெரும்பாலானோர் பாபிலோனில் பிறந்ததால் சில விதங்களில் பாபிலோனியர்களைப் போலவே யோசித்திருக்கலாம், நடந்திருக்கலாம். இஸ்ரவேலுக்கு வர ஆரம்பித்து பல வருஷங்கள் பிறகும் கூட, இஸ்ரவேலில் பிறந்த பிள்ளைகளுக்கு யூதர்களுடைய மொழியே தெரியவில்லை! (உபா. 6:6, 7; நெ. 13:23, 24) கடவுளுடைய வார்த்தை முக்கியமாக எபிரெய மொழியில்தான் எழுதப்பட்டிருந்தது. அந்த மொழியே தெரியவில்லை என்றால் எப்படி யெகோவாமேல் அன்பு காட்ட கற்றுக்கொண்டு அவரை வணங்க முடியும்? (எஸ்றா 10:3, 44) யூதர்கள் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. இஸ்ரவேலில் உண்மை வணக்கம் படிப்படியாகப் பழைய நிலைமைக்கு வந்துகொண்டிருந்ததால் அங்கிருந்து அந்த மாற்றங்களைச் செய்வது அவர்களுக்குச் சுலபமாக இருந்திருக்கலாம்.—நெ. 8:8, 9. w23.05 15 ¶6-7

வெள்ளி, செப்டம்பர் 5

கீழே விழுகிற எல்லாரையும் யெகோவா தாங்கிப்பிடிக்கிறார். துவண்டுபோனவர்களைத் தூக்கி நிறுத்துகிறார்.—சங். 145:14.

சிலசமயம், நமக்கு என்னதான் ஆசை இருந்தாலும்... எவ்வளவுதான் சுயக்கட்டுப்பாடு இருந்தாலும்... குறிக்கோளை அடைய முடியாத மாதிரி ஏதாவது தடங்கல் வந்துவிடலாம். உதாரணத்துக்கு, “எதிர்பாராத சம்பவங்கள்” நடந்துவிடலாம்; அதனால், குறிக்கோளை அடைவதற்காக உழைக்க நேரம் இல்லாமல் போய்விடலாம். (பிர. 9:11) அல்லது, ஒரு பிரச்சினையால் நாம் மனம் உடைந்துபோய்விடலாம், எதையுமே செய்ய பலம் இல்லாமல் போய்விடலாம். (நீதி. 24:10) ஒருவேளை, பாவ இயல்பினால் அவ்வப்போது நாம் சறுக்கிவிடலாம். (ரோ. 7:23) சிலசமயம், வெறுமனே களைப்பாக இருப்பதுகூட நமக்கு ஒரு தடங்கலாக இருக்கலாம். (மத். 26:43) இந்த எல்லா தடங்கல்களையும் தாண்டி நம் குறிக்கோளை அடைய எது உதவி செய்யும்? தடங்கல் தோல்விக்கு அறிகுறி அல்ல! நமக்குப் பிரச்சினைகளும் கஷ்டங்களும் திரும்பத் திரும்ப வரலாம் என்று பைபிள் சொல்கிறது. அவற்றையெல்லாம் நம்மால் தாண்டிவர முடியும் என்றும் அது சொல்கிறது. உங்களுக்கு வரும் தடங்கல்கள் எல்லாவற்றையும் தாண்டி முன்னேறிப் போய்க்கொண்டே இருந்தால், யெகோவாவின் மனதைச் சந்தோஷப்படுத்துவீர்கள். உங்களுடைய குறிக்கோளை அடைவதற்காக தொடர்ந்து முயற்சி செய்வதைப் பார்க்கும்போது யெகோவா எவ்வளவு சந்தோஷப்படுவார்! w23.05 30 ¶14-15

சனி, செப்டம்பர் 6

மந்தைக்கு முன்மாதிரிகளாக இருங்கள். —1 பே. 5:3.

இளம் வயதிலேயே நீங்கள் பயனியர் செய்ய ஆரம்பித்தால், வித்தியாசமான ஆட்களோடு சேர்ந்து வேலை செய்ய கற்றுக்கொள்வீர்கள். கிடைக்கிற வருமானத்தை வைத்து பட்ஜெட் போட்டு வாழவும் கற்றுக்கொள்வீர்கள். (பிலி. 4:11-13) துணைப் பயனியர் சேவைதான் முழுநேர சேவைக்கு ஆரம்பப் படி. ஒரு ஒழுங்கான பயனியராக ஆவதற்கு நிறைய பேருக்கு இது உதவியிருக்கிறது. பயனியர் சேவை, மற்ற முழுநேர சேவை செய்வதற்கான வாய்ப்புகளையும் திறந்துவைக்கும். கட்டுமான வேலை அல்லது பெத்தேல் சேவையைக்கூட நீங்கள் பிற்பாடு செய்யலாம். ஒரு மூப்பராக ஆகி சகோதர சகோதரிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் ஒவ்வொரு கிறிஸ்தவ ஆணுக்கும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட குறிக்கோளை வைத்து உழைக்கிறவர், “சிறந்த வேலையை விரும்புகிறார்.” (1 தீ. 3:1) முதலில், ஒரு சகோதரர் உதவி ஊழியராக ஆவதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். உதவி ஊழியர்கள் மூப்பர்களுக்கு நிறைய விதங்களில் உதவி செய்கிறார்கள். மூப்பர்களும் சரி, உதவி ஊழியர்களும் சரி, சகோதர சகோதரிகளுக்கு மனத்தாழ்மையாக சேவை செய்கிறார்கள். ஊழியத்தையும் சுறுசுறுப்பாக செய்கிறார்கள். w23.12 28 ¶14-16

ஞாயிறு, செப்டம்பர் 7

இன்னும் சின்னப் பையனாக இருந்தபோதே, தன்னுடைய மூதாதையான தாவீதின் கடவுளைத் தேட ஆரம்பித்தார்.—2 நா. 34:3.

டீனேஜ் வயதில் இருந்தபோது யோசியா ராஜா யெகோவாவைத் தேட ஆரம்பித்தார். யெகோவாவையும் அவருடைய விருப்பத்தையும் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார். ஆனால் சின்ன வயதிலேயே ராஜாவான யோசியாவுக்கு வாழ்க்கை ஈசியாக இல்லை. அந்த சமயத்தில் பொய் வணக்கம்தான் கொடிகட்டி பறந்துகொண்டிருந்தது. அதனால் உண்மை வணக்கத்தின் பக்கம் யோசியா உறுதியாக நிற்க வேண்டியிருந்தது. அதைத்தான் அவர் தைரியமாக செய்தார். 20 வயது ஆவதற்கு முன்பே தேசத்திலிருந்து பொய் வணக்கத்தை ஒழித்துக்கட்ட ஆரம்பித்தார். (2 நா. 34:1, 2) சின்ன பிள்ளைகளே, யோசியா மாதிரியே யெகோவாவை தேடுவதற்கும் அவருடைய குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும் நீங்கள் முடிவு செய்யலாம். அப்படி செய்தால் யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்று ஆசைப்படுவீர்கள். அர்ப்பணித்த பிறகு, தினமும் உங்களுடைய வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் தருவீர்கள்? 14 வயதில் ஞானஸ்நானம் எடுத்த லூக், “இனி என் வாழ்க்கையில் யெகோவாவுடைய சேவைக்குத்தான் முதலிடம்! அவர் மனதை சந்தோஷப்படுத்துவதுதான் எனக்கு முக்கியம். மற்றவை எல்லாமே அப்புறம்தான்” என்று சொல்கிறார். (மாற். 12:30) நீங்களும் அப்படி செய்தால் உங்கள் வாழ்க்கையும் அழகாக இருக்கும்! w23.09 11 ¶12-13

திங்கள், செப்டம்பர் 8

‘உங்கள் மத்தியில் கடினமாக உழைத்து, நம் எஜமானுடைய சேவையில் உங்களை வழிநடத்துகிறவர்களுக்கு மரியாதை காட்டுங்கள்.’—1 தெ. 5:12.

பவுல் தெசலோனிக்கேயர்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதியபோது, அந்தச் சபை உருவாகி ஒரு வருஷம்கூட ஆகவில்லை. அந்தச் சபையை முன்நின்று வழிநடத்தியவர்களுக்கு அவ்வளவாக அனுபவம் இருந்திருக்காது. அவர்கள் சில தவறுகளைக்கூட செய்திருக்கலாம். இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை கொடுப்பது அவசியமாக இருந்தது. மிகுந்த உபத்திரவம் நெருங்கி வர வர, வழிநடத்துதலுக்காக மூப்பர்களை நாம் இன்னும் அதிகமாக நம்ப வேண்டியிருக்கும். அந்தச் சமயத்தில் நம் தலைமை அலுவலகத்தோடும் கிளை அலுவலகத்தோடும் இருக்கும் தொடர்பு துண்டிக்கப்படலாம். அதனால், மூப்பர்கள்மேல் அன்பும் மரியாதையும் காட்ட இப்போதே கற்றுக்கொள்வது ரொம்ப முக்கியம். என்ன நடந்தாலும் சரி, மூப்பர்களிடம் இருக்கும் குறைகளைப் பார்க்காமல், இயேசு மூலமாக யெகோவாதான் அவர்களை வழிநடத்துகிறார் என்பதை மனதில் வைத்து தெளிந்த புத்தியோடு நாம் நடந்துகொள்ள வேண்டும். தலைக்கவசம் போர்வீரரின் தலையைப் பாதுகாப்பதுபோல் மீட்புக்கான நம்பிக்கை நம் யோசனைகளைப் பாதுகாக்கிறது. இந்த உலகம் கொடுக்கும் எல்லாமே வெறும் குப்பைதான் என்பதைப் புரிந்துகொள்வோம். (பிலி. 3:8) பதட்டம் இல்லாமல், தடுமாறாமல் இருப்பதற்கு நம் நம்பிக்கை உதவி செய்யும். w23.06 11-12 ¶11-12

செவ்வாய், செப்டம்பர் 9

புத்தியில்லாத பெண் வாயடிக்கிறாள். அவளுக்கு அறிவில்லை. —நீதி. 9:13.

“புத்தியில்லாத பெண்” கொடுக்கும் அழைப்பைக் கேட்கிறவர்கள் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. நாம் ஏன் ஒழுக்கக்கேடாக நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்கு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. நாம் பார்த்த அந்த “புத்தியில்லாத பெண்,” “திருட்டுத் தண்ணீர் தித்திப்பாக இருக்கும்” என்று சொல்கிறாள். (நீதி. 9:17) கணவனும் மனைவியும் அனுபவிக்கிற தாம்பத்திய உறவு புத்துணர்ச்சி தரும் தண்ணீர்போல் இருப்பதாக பைபிள் சொல்கிறது. (நீதி. 5:15-18) சட்டப்படி கல்யாணம் செய்துகொண்ட ஆணும் பெண்ணும் இயல்பான முறையில் செக்ஸ் வைத்துக்கொண்டு அதை சந்தோஷமாக அனுபவிக்கலாம். ஆனால், ‘திருட்டுத் தண்ணீரை’ பற்றி என்ன சொல்லலாம்? முறைகேடான உடலுறவு வைத்துக்கொள்வதை இது ஒருவேளை குறிக்கலாம். பொதுவாக, இது திருட்டுத்தனமாகத்தான் நடக்கிறது, ஒரு திருடன் திருட்டுத்தனமாகத் திருடுவதுபோல்! முறைகேடான உறவு வைத்துக்கொள்கிறவர்கள் தாங்கள் செய்வது யாருக்கும் தெரியவராது என்று நினைக்கும்போது, “திருட்டுத் தண்ணீர்” அவர்களுக்கு இன்னும் தித்திப்பாகத் தெரியலாம். ஆனால், அவர்களே அவர்களை ஏமாற்றிக்கொள்கிறார்கள்! ஏனென்றால், யெகோவாவின் பார்வையிலிருந்து எதுவுமே தப்ப முடியாது! அதுவும், அவர்கள் தித்திப்பு என்று நினைப்பது உண்மையில் கசப்பான ஒரு அனுபவமாகத்தான் இருக்கிறது. யெகோவாவின் தயவை இழப்பதைவிடக் கசப்பான ஒரு அனுபவம் வேறு எதுவும் கிடையாது!—1 கொ. 6:9, 10. w23.06 22 ¶7-9

புதன், செப்டம்பர் 10

அதை விருப்பமில்லாமல் செய்தால்கூட, என்னிடம் ஒரு நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.—1 கொ. 9:17.

ஏதோவொரு கட்டத்தில் நீங்கள் மனதிலிருந்து ஜெபம் செய்யாதது போலவோ, ஊழியத்தைக் கடமைக்காக செய்வது போலவோ தோன்றலாம். உடனே கடவுளுடைய சக்தி உங்களை விட்டுப் போய்விட்டது என்று நினைக்காதீர்கள். நாம் பாவ இயல்புள்ள மனிதர்களாக இருப்பதால் நம் உணர்ச்சிகள் நேரத்துக்கு நேரம் மாறலாம். உங்களுடைய ஆர்வம் குறைய ஆரம்பித்தால், பவுலுடைய உதாரணத்தை யோசித்துப் பாருங்கள். அவர் இயேசுவைப் பின்பற்றுவதற்கு கடினமாக முயற்சி செய்தார். இருந்தாலும், ஒருசமயத்தில் இருந்த ஆர்வம் இன்னொரு சமயத்தில் இல்லாததை உணர்ந்தார். அவருக்குள் எப்படிப்பட்ட உணர்ச்சிகள் இருந்தாலும் அதை ஓரங்கட்டி வைத்துவிட்டு ஊழியத்தை முழுமையாக செய்து முடிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். நீங்களும் உணர்ச்சிகளை வைத்து மட்டுமே முடிவெடுக்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் சரியானதை செய்ய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருங்கள். போகப்போக நீங்கள் யோசிக்கிற விதம் மாறிவிடும்.—1 கொ. 9:16. w24.03 11-12 ¶12-13

வியாழன், செப்டம்பர் 11

‘உங்களுடைய அன்பு உண்மையானது என்பதை சபைகளுக்கு நிரூபியுங்கள்.’—2 கொ. 8:24.

சகோதர சகோதரிகளை நம் நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொண்டு அவர்களிடம் நேரம் செலவழிப்பது மூலமாக அவர்கள்மேல் அன்பு காட்டலாம். (2 கொ. 6:11-13) நிறைய சபைகளில், வித்தியாசமான பின்னணியைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் இருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருப்பார்கள். அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களை மட்டும் பார்க்கும்போது அவர்கள்மேல் இருக்கும் அன்பு பலமாகும். மற்றவர்களை யெகோவா பார்க்கிற மாதிரியே பார்ப்பதற்கு கற்றுக்கொண்டால், அவர்கள்மேல் அன்பு வைத்திருக்கிறோம் என்பதைக் காட்ட முடியும். மிகுந்த உபத்திரவம் சமயத்தில் சகோதர சகோதரிகள்மேல் நாம் அன்பு காட்ட வேண்டியிருக்கும். மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கிற சமயத்தில் யெகோவா நம்மை எப்படிப் பாதுகாப்பார்? பாபிலோன்மேல் தாக்குதல் நடந்த சமயத்தில், தன்னுடைய மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா சொன்னார்: “என் ஜனங்களே, உங்களுடைய உள்ளறைகளுக்குப் போங்கள். கதவுகளை அடைத்துக்கொள்ளுங்கள். கடவுளுடைய கோபம் தீரும்வரை கொஞ்ச நேரத்துக்கு ஒளிந்துகொள்ளுங்கள்.” (ஏசா. 26:20) மிகுந்த உபத்திரவத்தைச் சந்திக்கப்போகிற நமக்கும்கூட இந்த வார்த்தைகள் பொருந்தலாம். w23.07 6-7 ¶14-16

வெள்ளி, செப்டம்பர் 12

இந்த உலகத்தின் காட்சி மாறிக்கொண்டே இருக்கிறது. —1 கொ. 7:31.

நீங்கள் நியாயமானவர் என்ற பெயரை எடுக்க வேண்டும். உங்களை இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? வளைந்துகொடுக்கிறவர், விட்டுக்கொடுக்கிறவர், பொறுத்துக்கொள்கிறவர் என்று நான் பெயர் எடுத்திருக்கிறேனா? அல்லது, ரொம்ப கறார், கடுகடு பேர்வழி, பிடிவாதக்காரர் என்று பெயர் எடுத்திருக்கிறேனா? மற்றவர்களுடைய கருத்தை காதுகொடுத்துக் கேட்கிறேனா? மற்றவர்கள் சொல்கிற மாதிரி ஒன்றை செய்ய முடியுமென்றால் அதற்கு ஒத்துப்போகிறேனா?’ நாம் எந்தளவுக்கு வளைந்துகொடுக்கிறவர்களாக இருக்கிறோமோ, அந்தளவுக்கு யெகோவா மாதிரியும் இயேசு மாதிரியும் நடந்துகொள்வோம். நம் சூழ்நிலை மாறும்போது நாம் வளைந்துகொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால், அப்படிப்பட்ட மாற்றங்கள் எதிர்பார்க்காத கஷ்டங்களைக் கொண்டுவரலாம். திடீரென்று நமக்கு ஏதாவது பெரிய நோய் வந்துவிடலாம். அல்லது, பொருளாதார நிலைமையோ அரசியல் நிலைமையோ திடீரென்று மாறிவிடலாம். அதனால் வாழ்க்கையை ஓட்டுவதே கஷ்டமாகிவிடலாம். (பிர. 9:11) நியமிப்புகளில் மாற்றம் வரும்போதுகூட நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். இந்த நான்கு படிகளை எடுத்தால் புதிய சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி நம்மையே மாற்றிக்கொள்ள, வளைந்துகொடுக்க முடியும்: (1) எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள், (2) கடந்த காலத்தை விட்டுவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசியுங்கள், (3) வாழ்க்கையில் இருக்கிற நல்ல விஷயங்களைப் பற்றி யோசியுங்கள், (4) மற்றவர்களுக்காக ஏதாவது செய்யுங்கள். w23.07 21-22 ¶7-8

சனி, செப்டம்பர் 13

கடவுளுக்கு நீ மிகவும் பிரியமானவன்.—தானி. 9:23.

தானியேல் ஒரு போர்க் கைதியாக போனபோது அவருக்குச் சின்ன வயதுதான். சொந்த ஊரைவிட்டு ரொம்பத் தூரத்தில் இருந்த பாபிலோனுக்கு அவரை இழுத்துக்கொண்டு போனார்கள். அவர் இளைஞராக இருந்தாலும், பாபிலோன் அதிகாரிகளுக்கு அவரை ரொம்பப் பிடித்துப்போய்விட்டது. ஏன்? அவர்கள் தானியேலின் “வெளித்தோற்றத்தை” பார்த்தார்கள். (1 சா. 16:7) அவர் ‘எந்தக் குறையும் இல்லாமல், அழகாக’ இருப்பதைப் பார்த்தார்கள். அவர் செல்வாக்கான குடும்பத்திலிருந்து வந்ததையும் பார்த்தார்கள். அதனால்தான், ராஜாவின் அரண்மனையிலேயே சேவை செய்வதற்காக அவருக்குப் பயிற்சி கொடுத்தார்கள். (தானி. 1:3, 4, 6) யெகோவாவுக்கும் தானியேலைப் பிடித்திருந்தது. அவருடைய மனதையும் குணத்தையும் பார்த்துதான் யெகோவாவுக்குப் பிடித்திருந்தது. சொல்லப்போனால், நோவாவையும் யோபுவையும் போலவே தானியேல் நீதியாக நடப்பதாக யெகோவா சொன்னபோது தானியேலுக்குக் கிட்டத்தட்ட 20 வயதுதான். ஆனாலும், எத்தனையோ வருஷங்களாக கடவுளுக்கு உண்மையோடு சேவை செய்த நோவாவுக்கும் யோபுவுக்கும் சமமாக தானியேலைப் பற்றி யெகோவா பேசினார். (ஆதி. 5:32; 6:9, 10; யோபு 42:16, 17; எசே. 14:14) அவர் வாழ்ந்த காலமெல்லாம் யெகோவா அவரை உயிருக்கு உயிராக நேசித்தார்.—தானி. 10:11, 19. w23.08 2 ¶1-2

ஞாயிறு, செப்டம்பர் 14

‘அகலமும் நீளமும் உயரமும் ஆழமும் என்னவென்று நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.’—எபே. 3:18.

ஒரு வீட்டை வாங்க முடிவு செய்வதற்கு முன்பு நேரில் போய் அதைப் பற்றி எல்லா விவரங்களையும் தெரிந்துகொள்வீர்கள். இந்த விஷயத்தை பைபிள் படிப்பதோடு ஒப்பிட முடியும். பைபிளை வெறுமனே மேலோட்டமாகப் படித்துக்கொண்டு போனால், “கடவுளுடைய பரிசுத்த வார்த்தைகளில் இருக்கிற அடிப்படை விஷயங்களை” மட்டும்தான் தெரிந்துகொள்ள முடியும். (எபி. 5:12) ஒரு வீட்டை வாங்குவதற்குமுன் எப்படி வீட்டுக்குள் போய் ஒவ்வொரு விஷயத்தையும் நன்றாகக் கவனிப்பீர்களோ, அதேபோல் பைபிளுக்கு “உள்ளே போய்” எல்லா விவரங்களையும் அலசிப் பாருங்கள். பைபிளில் இருக்கும் விஷயங்கள் எப்படி ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டிருக்கின்றன என்று பாருங்கள். எந்தெந்த உண்மைகளை நீங்கள் நம்புகிறீர்கள் என்பதை மட்டுமல்ல, அவற்றை ஏன் நம்புகிறீர்கள் என்பதையும் ஆராய்ந்து பாருங்கள். கடவுளுடைய வார்த்தையை நன்றாகப் புரிந்துகொள்வதற்கு ஆழமான சத்தியங்களை ஆராய்ச்சி செய்ய வேண்டும். அன்று வாழ்ந்த கிறிஸ்தவர்களிடமும் அதைத்தான் பவுல் சொன்னார். கடவுளுடைய வார்த்தையின் ‘அகலமும் நீளமும் உயரமும் ஆழமும் என்னவென்று நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்’ என்று சொன்னார். அப்படிச் செய்தால் விசுவாசத்தில் “வேரூன்றியவர்களாகவும் அஸ்திவாரத்தின்மேல் நிலையாய் நிற்கிறவர்களாகவும்” அவர்களால் இருக்க முடியும் என்று சொன்னார். (எபே. 3:14-19) இன்று நாமும் அதைத்தான் செய்ய வேண்டும். w23.10 18 ¶1-3

திங்கள், செப்டம்பர் 15

சகோதரர்களே, கஷ்டத்தைத் தாங்கிக்கொள்வதிலும் பொறுமையைக் காட்டுவதிலும், யெகோவாவின் பெயரில் பேசிய தீர்க்கதரிசிகளை உங்கள் முன்மாதிரிகளாக வைத்துக்கொள்ளுங்கள்.—யாக். 5:10.

பொறுமையாக நடந்துகொண்ட நிறைய பேரைப் பற்றி பைபிள் சொல்கிறது. அவர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து பாருங்கள். உதாரணத்துக்கு, இஸ்ரவேலின் ராஜாவாக தாவீது சின்ன வயதிலேயே அபிஷேகம் செய்யப்பட்டார். ஆனால், ஆட்சி செய்ய ஆரம்பிக்க அவர் நிறைய வருஷங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. சிமியோனும் அன்னாளும்கூட, மேசியா வருவதற்காக நிறைய வருஷங்கள் காத்திருந்தார்கள். ஆனால், அதுவரை யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்தார்கள். (லூக். 2:25, 36-38) இப்படிப்பட்ட பதிவுகளைப் படிக்கும்போது, ‘பொறுமையாக இருக்க எது இவருக்கு உதவி செய்திருக்கும்? பொறுமையாக இருந்ததால் இவருக்கு என்ன பலன் கிடைத்தது? இவரைப் போலவே நானும் எப்படிப் பொறுமையாக நடந்துகொள்ளலாம்?’ என்றெல்லாம் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். பொறுமை காட்டாதவர்களைப் பற்றிப் படிப்பதும்கூட உங்களுக்கு உதவியாக இருக்கலாம். (1 சா. 13:8-14) அவர்களைப் பற்றிப் படிக்கும்போது, ‘இவர் பொறுமை காட்டாததற்கு எது காரணமாக இருந்திருக்கும்? என்னென்ன பின்விளைவுகள் அவருக்கு வந்தது?’ என்றெல்லாம் யோசித்துப் பாருங்கள். w23.08 25 ¶15

செவ்வாய், செப்டம்பர் 16

நீங்கள்தான் கடவுளால் அனுப்பப்பட்ட பரிசுத்தர் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும், நாங்கள் அதை நம்புகிறோம்.—யோவா. 6:69.

பேதுரு உண்மையாக இருந்தார், என்ன நடந்தாலும் அவர் இயேசுவை ஒரேயடியாக விட்டுவிட்டு போகவே இல்லை. ஒருசமயம் இயேசு சொன்ன விஷயம், அவருடைய சீஷர்களுக்கு புரியவில்லை. அப்போதும் பேதுரு உண்மையாக இருந்தார். (யோவா. 6:68) நிறையப் பேர் இயேசு என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்யவே இல்லை. அவர் விளக்கும்வரை பொறுமையாக காத்திருக்கவும் இல்லை. அவரை பின்பற்றுவதையே நிறுத்திவிட்டார்கள். ஆனால், பேதுரு அப்படியில்லை. “முடிவில்லாத வாழ்வைத் தருகிற வார்த்தைகள்” இயேசுவிடம்தான் இருக்கின்றன என்பதை அவர் புரிந்துகொண்டார். பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் தன்னை விட்டு ஓடிவிடுவார்கள் என்று இயேசுவுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும், பேதுரு தன் தவறை திருத்திக்கொள்வார் என்றும் தொடர்ந்து உண்மையாக இருப்பார் என்றும் இயேசு நம்பினார். (லூக். 22:31, 32) “உள்ளம் ஆர்வமாக இருக்கிறது, உடலோ பலவீனமாக இருக்கிறது” என்று இயேசு புரிந்துகொண்டார். (மாற். 14:38) தன்னை யாரென்றே தெரியாது என பேதுரு சொன்ன பிறகும்கூட இயேசு அவர்மேல் வைத்திருந்த நம்பிக்கையை விட்டுவிடவில்லை. உயிர்த்தெழுந்த பிறகு, பேதுருவைப் போய் பார்த்தார். அநேகமாக, பேதுரு அப்போது தனியாக இருந்திருக்க வேண்டும். (மாற். 16:7; லூக். 24:34; 1 கொ. 15:5) செய்த தவறை நினைத்து உடைந்து போயிருந்த பேதுருவுக்கு இது எவ்வளவு தெம்பை கொடுத்திருக்கும்! w23.09 22 ¶9-10

புதன், செப்டம்பர் 17

யாருடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, யாருடைய பாவங்கள் மூடப்பட்டதோ அவர்கள் சந்தோஷமானவர்கள்.—ரோ. 4:7.

தன்மேல் விசுவாசம் வைக்கிறவர்களுடைய பாவங்களை யெகோவா முழுமையாக மன்னிக்கிறார்; அதை மூடுகிறார். அதற்குமேல் அவர் அதை கணக்கில் எடுத்துக்கொள்வது கிடையாது. (சங். 32:1, 2) அவர்களுடைய விசுவாசத்தின் அடிப்படையில் அவர்களை குற்றமற்றவர்களாகவும் நீதிமான்களாகவும் பார்க்கிறார். பாவிகளாக இருந்தாலும், ஆபிரகாமையும் தாவீதையும் மற்ற உண்மையுள்ள ஊழியர்களையும் கடவுள் நீதிமான்கள் என்று சொன்னார். அதற்கு காரணம், அவர்களுடைய விசுவாசம்! தன்னை வணங்காத மக்களோடு ஒப்பிடும்போது, அவர்கள் காட்டிய விசுவாசத்தால் கடவுள் அவர்களை குற்றமற்றவர்களாகவும் நீதிமான்களாகவும் பார்த்தார். (எபே. 2:12) யெகோவாவோடு ஒரு நல்ல பந்தம் வேண்டுமென்றால், விசுவாசம் தேவை என்று பவுல் விளக்கினார். விசுவாசத்தைக் காட்டியதால்தான் ஆபிரகாமும் தாவீதும் யெகோவாவின் நண்பர்களாக ஆனார்கள். நாமும் விசுவாசத்தைக் காட்டினால் கடவுளுடைய நண்பராக ஆகலாம். w23.12 3 ¶6-7

வியாழன், செப்டம்பர் 18

இயேசுவின் வழியாகக் கடவுளுக்கு எப்போதும் நம்முடைய உதடுகளின் கனியைப் பலி செலுத்துவோமாக. அதாவது, கடவுளுடைய பெயரை எல்லாருக்கும் அறிவிப்பதன் மூலம் அவருக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவோமாக.—எபி. 13:15.

யெகோவாவுக்கு பலி கொடுக்கும் வாய்ப்பு எல்லா கிறிஸ்தவர்களுக்குமே இருக்கிறது. நம் நேரம், சக்தி, வளங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி கடவுளுடைய அரசாங்கத்துக்கு சேவை செய்யும்போது கடவுளுக்கு பலி கொடுக்கிறோம் என்று அர்த்தம். மிக சிறந்த பலிகளை செலுத்துவதன் மூலம், ஆன்மீக ஆலயத்தில் யெகோவா நமக்கு கொடுத்திருக்கும் இடத்தை பெரிதாக மதிக்கிறோம் என்பதை காட்டலாம். நாம் கண்டிப்பாக செய்ய வேண்டிய சில விஷயங்களைப் பற்றி பவுல் எழுதினார். (எபி. 10:22-25) ஜெபம் செய்வது, நம்முடைய நம்பிக்கையைப் பற்றி எல்லாரிடமும் சொல்வது, கூட்டங்களுக்கு வருவது, யெகோவாவின் ‘நாள் நெருங்கி வருவதை எந்தளவுக்குப் பார்க்கிறோமோ, அந்தளவுக்கு ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவது,’ போன்றவற்றை கண்டிப்பாக செய்ய வேண்டும். வெளிப்படுத்துதல் புத்தகத்தின் முடிவில், “கடவுளை வணங்கு” என்று ஒரு தேவதூதர் இரண்டு தடவை வலியுறுத்தினார். (வெளி. 19:10; 22:9) யெகோவாவின் மாபெரும் ஆன்மீக ஆலயத்தைப் பற்றிய ஆழமான சத்தியத்தை நாம் மறந்துவிட வேண்டாம். யெகோவாவை வணங்கும் பாக்கியம் நமக்கு கிடைத்திருப்பதையும் மறந்துவிட வேண்டாம்! w23.10 29 ¶17-18

வெள்ளி, செப்டம்பர் 19

தொடர்ந்து ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவோமாக. —1 யோ. 4:7.

நாம் ‘தொடர்ந்து ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டும்’ என்றுதான் ஆசைப்படுகிறோம். ஆனால், “பெரும்பாலானவர்களின் அன்பு குறைந்துவிடும்” என்று இயேசு எச்சரித்தார். (மத். 24:12) சீஷர்களில் பெரும்பாலானவர்கள் அன்பு காட்டுவதை நிறுத்திவிடுவார்கள் என்று இயேசு சொல்லவில்லை. இருந்தாலும், உலகத்தில் அன்பு குறைந்துகொண்டே வருகிறது. அது நம்மைப் பாதிக்காத மாதிரி கவனமாக இருக்க வேண்டும். இந்த முக்கியமான கேள்வியை யோசித்துப்பார்க்கலாம்: ‘சகோதரர்கள்மேல் எனக்கு இருக்கிற அன்பு குறைந்திருக்கிறதா என்று எப்படித் தெரிந்துகொள்வது?’ சில சூழ்நிலைகளில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை வைத்து தெரிந்துகொள்ளலாம். (2 கொ. 8:8) சகோதரர்கள் சில தவறுகளை செய்யும்போது அல்லது நம்மை காயப்படுத்தும்போது நாம் அவர்கள்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறோம் என்பது தெரிந்துவிடும். “எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்; ஏனென்றால், அன்பு ஏராளமான பாவங்களை மூடும்” என்று பேதுரு சொன்னார்.—1 பே. 4:8. w23.11 10-11 ¶12-13

சனி, செப்டம்பர் 20

ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள்.—யோவா. 13:34.

சபையில் இருக்கும் ஒருசிலரிடம் மட்டும் அன்பு காட்டிவிட்டு மற்றவர்களிடம் அன்பு காட்டாமல் இருந்தால் இயேசு சொன்ன மாதிரி அன்பு காட்டுகிறோம் என்று சொல்ல முடியாது. உண்மைதான், இயேசுவை மாதிரியே நாமும் ஒருசிலரிடம் ரொம்ப நெருக்கமாக இருப்போம். (யோவா. 13:23; 20:2) அதேநேரம், “சகோதர பாசத்தை” எல்லா சகோதர சகோதரிகளிடமும் காட்ட வேண்டும் என்று பேதுரு ஞாபகப்படுத்துகிறார். நாம் ஒரு குடும்பம்போல் பாசமாக இருக்க வேண்டும். (1 பே. 2:17) “இதயப்பூர்வமான அன்பை ஒருவருக்கொருவர் ஊக்கமாகக் காட்டுங்கள்” என்று பேதுரு நம்மை உற்சாகப்படுத்துகிறார். (1 பே. 1:22) “ஊக்கமாக அன்பு காட்டுங்கள்” என்று சொல்லும்போது, ஒருவர்மேல் மனதார அன்பு காட்டுவது கஷ்டமாக இருந்தாலும் அன்பு காட்ட முயற்சி செய்வது என்று அர்த்தம். ஒரு சகோதரர் ஏதோ ஒரு விதத்தில் உங்கள் மனதை காயப்படுத்திவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். முதலில் அவரிடம் அன்பு காட்ட வேண்டும் என்று தோன்றாது. அவர் எப்படி நடந்துகொண்டாரோ அப்படித்தான் நானும் இருப்பேன் என்று தோன்றும். ஆனால், பதிலுக்கு பதில் செய்வது யெகோவாவுக்கு சுத்தமாக பிடிக்காது என்ற பாடத்தை பேதுரு இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டார். (யோவா. 18:10, 11) பேதுரு இப்படி எழுதினார்: “யாராவது கெட்டது செய்தால் பதிலுக்குக் கெட்டது செய்யாதீர்கள், யாராவது அவமானப்படுத்தினால் பதிலுக்கு அவமானப்படுத்தாதீர்கள்; அதற்கு மாறாக, அவர்களை ஆசீர்வதியுங்கள்.” (1 பே. 3:9) நமக்கு ஊக்கமான அன்பிருந்தால் எல்லாரிடமும் அன்பாக, கரிசனையாக நடந்துகொள்வோம். w23.09 28-29 ¶9-11

ஞாயிறு, செப்டம்பர் 21

‘பெண்கள் பழக்கவழக்கங்களில் அளவுக்குமீறி போகாதவர்களாகவும், எல்லா விஷயங்களிலும் உண்மையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.’—1 தீ. 3:11.

ஒரு குழந்தை வேகமாக வளர்ந்து பெரிய ஆளாக ஆவதைப் பார்க்கும்போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்த வளர்ச்சி தானாக நடக்கிறது. ஆனால், முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவராக வளருவது, தானாக நடக்கிற விஷயம் கிடையாது. (1 கொ. 13:11; எபி. 6:1) அதற்கு யெகோவாவோடு ஒரு நல்ல பந்தம் இருக்க வேண்டும். அவருடைய சக்தியும் நமக்குத் தேவை. அப்போதுதான், நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ள முடியும், வாழ்க்கைக்கு உதவுகிற திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும், எதிர்காலத்தில் வருகிற பொறுப்புகளை செய்யவும் தயாராக முடியும். (நீதி. 1:5) யெகோவா மனிதர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார். (ஆதி. 1:27) ஆண்களும் பெண்களும் பார்க்க வேறு வேறு மாதிரி இருக்கிறார்கள் என்பது உண்மைதான். வேறு சில விதங்களிலும் அவர்கள் வித்தியாசப்பட்டிருக்கிறார்கள். வெவ்வேறு பொறுப்புகளை செய்கிற மாதிரி யெகோவா அவர்களைப் படைத்திருக்கிறார். அந்த பொறுப்புகளை நன்றாக செய்வதற்கு சில குணங்களும் திறமைகளும் அவர்களுக்குத் தேவை.—ஆதி. 2:18. w23.12 18 ¶1-2

திங்கள், செப்டம்பர் 22

எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி, பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் ஞானஸ்நானம் கொடுங்கள்.—மத். 28:19.

யெகோவாவுடைய பெயரை மற்றவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று இயேசு நினைத்தார். அன்றிருந்த சில மதத் தலைவர்கள், கடவுளுடைய பெயர் ரொம்ப புனிதமானது, அதை உச்சரிக்கவே கூடாது என்று சொன்னார்கள். இதுபோன்ற சம்பிரதாயங்களுக்கு இயேசு கட்டுப்படவில்லை. தன் அப்பாவுடைய பெயருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்தார். கெரசேனர் பகுதியில் பேய் பிடித்த ஒருவனை இயேசு குணப்படுத்தினார். அந்த ஊர் மக்கள் இயேசுவைப் பார்த்து பயந்து அங்கிருந்து அவரைப் போக சொன்னார்கள்; இயேசுவும் அங்கிருந்து போனார். (மாற். 5:16, 17) ஆனால் யெகோவாவுடைய பெயரை அந்தப் பகுதியில் இருந்தவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால், குணப்படுத்திய அந்த மனிதனிடம் தான் செய்ததைப் பற்றி அல்ல, ‘யெகோவா உனக்கு செய்ததைப் பற்றி எல்லாரிடமும் சொல்’ என்றார். (மாற். 5:19) நாமும் யெகோவாவுடைய பெயரை உலகம் முழுதும் சொல்ல வேண்டும் என்று இயேசு ஆசைப்படுகிறார்! (மத். 24:14; 28:20) அப்படி செய்யும்போது இயேசு ரொம்ப சந்தோஷப்படுகிறார். w24.02 10 ¶10

செவ்வாய், செப்டம்பர் 23

என்னுடைய பெயருக்காக எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டாய். —வெளி. 2:3.

கொந்தளிப்பான கடைசி நாட்களில் யெகோவாவுடைய அமைப்பின் பாகமாக இருப்பது ஒரு பெரிய ஆசீர்வாதம்! உலக நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போனாலும் ஒற்றுமையான ஒரு பெரிய குடும்பத்தை யெகோவா கொடுத்திருக்கிறார். சகோதர சகோதரிகள்தான் அந்த குடும்பம். (சங். 133:1) அதோடு, நம்முடைய சொந்த குடும்பத்திலும் சந்தோஷமாக இருக்க உதவுகிறார். (எபே. 5:33–6:1) அதுமட்டுமல்ல, மனசமாதானத்தை அனுபவிப்பதற்குத் தேவையான ஞானத்தையும் கொடுக்கிறார். இருந்தாலும், (1) ஒரு சகோதரரோ சகோதரியோ நம்மைக் காயப்படுத்தும்போது, (2) நம்முடைய துணை நம்மைக் கஷ்டப்படுத்தும்போது, (3) நாம் செய்த ஏதோவொரு தவறால் சோர்ந்துபோகும்போது யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்ய நாம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் மற்றவர்கள் சொல்கிற-செய்கிற விஷயங்கள் நம்மைக் காயப்படுத்தலாம். அல்லது, நாம் ஏதாவது தப்பு செய்யும்போது, அதுவும் திரும்பத் திரும்ப செய்யும்போது, நாம் நொந்துபோகலாம். w24.03 14 ¶1-2

புதன், செப்டம்பர் 24

முன்னேற்றப் பாதையில் நாம் எதுவரை போயிருந்தாலும் சரி, அதே பாதையில் தொடர்ந்து சீராக நடக்க வேண்டும்.—பிலி. 3:16.

யெகோவாவுக்கு நிறைய சேவை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த சகோதர சகோதரிகளுடைய அனுபவங்களை நீங்கள் பார்க்கலாம். ஒருவேளை, அவர்கள் ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்திருக்கலாம் அல்லது, தேவை அதிகம் இருக்கிற இடத்துக்குக் குடிமாறி போயிருக்கலாம். முடிந்தால், நீங்களும் அப்படியொரு குறிக்கோளை வையுங்கள். நாம் எல்லாருமே ஊழியத்தை அதிகமாக செய்ய ஆசைப்படுகிறோம். (அப். 16:9) ஒருவேளை அவர்களைப் போல் செய்ய முடியவில்லை என்றால், உங்களையே தாழ்வாக நினைத்துக்கொள்ளாதீர்கள். தொடர்ந்து சகித்திருப்பதுதான் ரொம்ப முக்கியம். (மத். 10:22) உங்களுடைய திறமைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற மாதிரி யெகோவாவுக்கு சேவை செய்யுங்கள். அந்த சேவையைக் குறைத்து எடைபோடாதீர்கள்.—சங். 26:1. w24.03 10 ¶11

வியாழன், செப்டம்பர் 25

நம்முடைய எல்லா குற்றங்களையும் தயவாக மன்னித்தார். —கொலோ. 2:13.

உண்மையிலேயே மனம் திருந்தினால் யெகோவா நம்மை மன்னிப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறார். (சங். 86:5) நீங்கள் செய்த தவறை நினைத்து வருத்தப்பட்டு மனம் திருந்தியபோதே கடவுள் உங்களை மன்னித்துவிட்டார் என்று நீங்கள் நம்பலாம். யெகோவா உண்மையிலேயே எப்படிப்பட்ட கடவுள் என்று யோசிப்பது உங்களுக்கு உதவும். அவர் கறாரானவர் கிடையாது; வளைந்துகொடுக்கும் கடவுள்! நம்மால் முடியாததை அவர் எதிர்பார்ப்பது கிடையாது. முடிந்ததை மனசார செய்யும்போது அவர் சந்தோஷப்படுகிறார். பைபிளில் இருக்கும் உதாரணங்களை யோசித்துப் பாருங்கள். பவுல் நிறைய வருஷங்கள் ஊழியம் செய்தார்; ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்தார்; நிறைய சபைகளை உருவாக்கினார். இருந்தாலும், சில சூழ்நிலைகளில் அவராலும் நிறைய செய்ய முடியாமல் போனது. அப்போதெல்லாம் கடவுள் அவரை ஏற்றுக்கொள்ளாமல் போய்விட்டாரா? இல்லை! தன்னால் முடிந்ததை பவுல் தொடர்ந்து செய்தார்; யெகோவாவும் அவரை ஆசீர்வதித்தார். (அப். 28:30, 31) நம்முடைய சூழ்நிலையும் சிலசமயத்தில் மாறலாம். நாம் எவ்வளவு செய்கிறோம் என்று யெகோவா பார்ப்பதில்லை, மனசார செய்கிறோமா என்றுதான் பார்க்கிறார். w24.03 27 ¶7, 9

வெள்ளி, செப்டம்பர் 26

‘விடியற்காலையில், இன்னமும் இருட்டாக இருந்தபோதே, இயேசு எழுந்து வெளியே போய்த் தனிமையான ஓர் இடத்தில் ஜெபம் செய்ய ஆரம்பித்தார்.’—மாற். 1:35.

ஜெபம் செய்யும் விஷயத்தில் இயேசு தன் சீஷர்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருந்தார். ஊழியம் செய்த காலப்பகுதி முழுவதும் அவர் அடிக்கடி ஜெபம் செய்தார். இயேசுவுக்கு நிறைய வேலை இருந்தது, அவரைச் சுற்றி எப்போதும் நிறைய பேர் இருந்தார்கள். ஆனாலும், ஜெபம் செய்வதற்கு நேரத்தை ஒதுக்கினார். (மாற். 6:31, 45, 46) விடியற்காலையில், இன்னமும் இருட்டாக இருந்தபோதே, எழுந்து தனிமையான ஓர் இடத்துக்குப் போய் ஜெபம் செய்தார். ஒரு தடவை, முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்பு ராத்திரி முழுக்கக்கூட அவர் ஜெபம் செய்தார். (லூக். 6:12, 13) இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரியும் அவர் திரும்பத் திரும்ப ஜெபம் செய்துகொண்டே இருந்தார். ஏனென்றால், உச்சக்கட்ட சோதனையைத் தாங்கிக்கொண்டு, பூமியில் தனக்குக் கொடுக்கப்பட்ட மிக முக்கியமான பொறுப்பை அவர் செய்து முடிக்க வேண்டியிருந்தது. (மத். 26:39, 42, 44) நாமும் எவ்வளவு வேலையாக இருந்தாலும், ஜெபம் செய்வதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். இயேசுவைப் போலவே நாம் ஒருவேளை காலையில் கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஜெபம் செய்யலாம் அல்லது ராத்திரி இன்னும் கொஞ்ச நேரம் விழித்திருந்து ஜெபம் செய்யலாம். அப்படிச் செய்யும்போது, இந்த விசேஷமான பாக்கியத்துக்காக நாம் யெகோவாவுக்கு நன்றியோடு இருக்கிறோம் என்பதைக் காட்ட முடியும். w23.05 3 ¶4-5

சனி, செப்டம்பர் 27

கடவுள் தன்னுடைய சக்தியை நமக்குத் தந்து தன்னுடைய அன்பை நம் இதயங்களில் பொழிந்திருக்கிறார்.—ரோ. 5:5.

இந்த வசனத்தில், அன்பு இதயங்களில் ‘பொழியப்பட்டிருக்கிறது’ என்ற வார்த்தையைப் பார்க்கிறோம். இது “தண்ணீர் பாய்ந்து வருவதை” குறிப்பதாக ஒரு ஆராய்ச்சிப் புத்தகம் சொல்கிறது. கடவுளுடைய அன்பு அப்படித்தான் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள்மேல் பாய்ந்துவருகிறது! அவர்கள்மேல் யெகோவா நிறைய அன்பு வைத்திருக்கிறார். அதை வெளிப்படையாகவும் சொல்லியிருக்கிறார். கடவுளுக்குத் தங்கள்மேல் அன்பு இருப்பதை அவர்களும் புரிந்து வைத்திருக்கிறார்கள். (யூ. 1) அதைப் பற்றி யோவான் இப்படி எழுதினார்: “நாம் கடவுளுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிறோம் என்றால், பரலோகத் தகப்பன் எந்தளவுக்கு நம்மேல் அன்பு காட்டியிருக்கிறார் என்று பாருங்கள்!” (1 யோ. 3:1) ஆனால், யெகோவா பரலோக நம்பிக்கையுள்ளவர்கள்மேல் மட்டும்தான் அன்பு காட்டுகிறாரா? இல்லை, நம் எல்லார்மேலும் அவருக்கு அன்பு இருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்திலேயே வேறு யாரும் காட்டாத அன்பை யெகோவா காட்டியிருக்கிறார்—மீட்புவிலை என்ற ஏற்பாட்டை செய்ததன் மூலமாக!—யோவா. 3:16; ரோ. 5:8. w24.01 28 ¶9-10

ஞாயிறு, செப்டம்பர் 28

உதவிக்காக நான் உங்களைக் கூப்பிடும் நாளில், என் எதிரிகள் பின்வாங்கி ஓடுவார்கள். கடவுள் என் பக்கத்தில் இருக்கிறார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.—சங். 56:9.

பயத்தை மேற்கொள்வதற்காக தாவீது செய்த ஒரு விஷயத்தைப் பற்றி இந்த வசனம் சொல்கிறது. தன்னுடைய உயிர் ஆபத்தில் இருந்தபோதுகூட யெகோவா இனிமேல் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பற்றி அவர் யோசித்தார். சரியான நேரத்தில் யெகோவா தன்னைக் காப்பாற்றுவார் என்று உறுதியாக நம்பினார். ஏனென்றால், இஸ்ரவேலுடைய அடுத்த ராஜா தாவீதுதான் என்று யெகோவா ஏற்கெனவே வாக்குக் கொடுத்திருந்தார். (1 சா. 16:1, 13) தாவீதைப் பொறுத்தவரை, யெகோவா ஒரு வாக்கைக் கொடுத்தால் அது ஏற்கெனவே நிறைவேறிவிட்டது போல் இருந்தது. உங்களுக்கு என்ன செய்யப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார்? கஷ்டமே வராதபடி யெகோவா நம்மைப் பாதுகாப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், நாம் படுகிற கஷ்டங்களைப் புதிய உலகத்தில் யெகோவா இல்லாமல் செய்துவிடுவார். (ஏசா. 25:7-9) இறந்தவர்களை உயிரோடு கொண்டுவருவதற்கும், நம்மைக் குணப்படுத்துவதற்கும், எதிரிகளை அழிப்பதற்கும் நம்மைப் படைத்தவருக்கு சக்தி இருக்கிறது என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளலாம்.—1 யோ. 4:4. w24.01 6 ¶12-13

திங்கள், செப்டம்பர் 29

யாருடைய குற்றம் மன்னிக்கப்படுகிறதோ, யாருடைய பாவம் மூடப்படுகிறதோ, அவர் சந்தோஷமானவர்.—சங். 32:1.

நீங்கள் ஏன் உங்களை அர்ப்பணித்தீர்கள், ஞானஸ்நானம் எடுத்தீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். யெகோவா பக்கம் நிற்பதற்காகத்தான் நீங்கள் அதைச் செய்தீர்கள். இதுதான் சத்தியம் என்று நீங்கள் எதை வைத்து முடிவு செய்தீர்கள் என்றும் யோசித்துப் பாருங்கள். நீங்கள் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டீர்கள். உங்கள் பரலோக அப்பாவாக அவர்மேல் மரியாதையும் அன்பும் காட்ட ஆரம்பித்தீர்கள். உங்களுடைய விசுவாசம் வளர்ந்தது. நீங்கள் மனம் திருந்த வேண்டும் என்று நினைத்தீர்கள். யெகோவாவுக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்வதை நிறுத்தினீர்கள். அவருக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய ஆரம்பித்தீர்கள். கடவுள் உங்களுடைய பாவங்களை மன்னித்துவிட்டார் என்று தெரிந்துகொண்டபோது உங்களுக்கு நிம்மதியாக இருந்தது. (சங். 32:2) சபைக் கூட்டங்களில் நீங்கள் கலந்துகொண்டீர்கள். கற்றுக்கொண்ட அருமையான விஷயங்களை மற்றவர்களிடம் சொல்ல ஆரம்பித்தீர்கள். உங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்தீர்கள். இப்போது நீங்கள் வாழ்வுக்கான வழியில் நடந்து போய்க்கொண்டிருக்கிறீர்கள். வழிமாறி போய்விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறீர்கள். (மத். 7:13, 14) யெகோவாமேல் நமக்கு இருக்கிற அன்பிலும் பக்தியிலும் உறுதியானவர்களாக இருங்கள். அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் அசைக்க முடியாதவர்களாக இருங்கள். w23.07 17 ¶14; 19 ¶19

செவ்வாய், செப்டம்பர் 30

கடவுள் நம்பகமானவர்; உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு எந்தச் சோதனையையும் அவர் அனுமதிக்க மாட்டார். அதைச் சகித்துக்கொள்வதற்கும் அதிலிருந்து விடுபடுவதற்கும் அவர் வழிசெய்வார்.—1 கொ. 10:13.

அர்ப்பணித்தபோது கொடுத்த வாக்குறுதியை யோசித்துப் பார்ப்பது தவறான ஆசைகளைக் கட்டுப்படுத்த உதவும். உதாரணத்துக்கு, இன்னொருவருடைய மணத்துணையோடு நெருக்கமாக பழகுவதை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கண்டிப்பாக அப்படி செய்ய மாட்டீர்கள்! ஏனென்றால், அப்படி செய்யக் கூடாது என்று நீங்கள் அர்ப்பணித்தபோதே முடிவெடுத்திருக்கிறீர்கள். தப்பான எண்ணங்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்துவிட்டால், பிற்பாடு அதோடு போராட வேண்டிய அவசியமே இருக்காது. ‘பொல்லாதவர்களின் பாதையில் போகாமல்’ ‘அதைவிட்டு விலகியே’ இருப்பீர்கள். (நீதி. 4:14, 15) இயேசுகூட தன்னுடைய அப்பாவை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவரை மாதிரியே நீங்களும் இருக்க நினைப்பீர்கள்; யெகோவாவுக்குப் பிடிக்காத எதையும் செய்ய மாட்டீர்கள். (மத். 4:10; யோவா. 8:29) சோதனைகளும் கஷ்டங்களும் ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுக்கிறது. இயேசுவை “தொடர்ந்து” பின்பற்றுவதற்கு உறுதியாக இருக்கிறோம் என்பதைக் காட்ட வாய்ப்பு கொடுக்கிறது. யெகோவாவும் உங்களுக்குக் கண்டிப்பாக உதவி செய்வார். w24.03 9-10 ¶8-10

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்