“ஜீவ அப்பம்” அனைவருக்கும் கிடைக்கிறது
“நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே.”—யோவான் 6:51.
1. என்ன துயர்தரும் நிலைமையை இன்று மனிதவர்க்கம் எதிர்படுகிறது?
மனிதவர்க்க உலகமானது நீண்ட காலமாக அப்பத்தினால் உயிர்வாழ்ந்து வருகிறது. அப்பம் பூமியில் பெரும்பாலும் உண்ணப்பட்டு வரும் ஒரு உணவாக இருக்கிறது. இது உயிரின் ஆதாரம் என்பதாக அழைக்கப்படுவது பொருத்தமாகவே இருக்கிறது. ஆனால் இன்றோ, அப்பத்துக்கான பசி ஒரு துயர்தரும் பிரச்னையாக ஆகிவிட்டிருக்கிறது. இன்றைய பூமியின் குடிமக்களில் கால் பகுதியினர் பசியினாலும் பஞ்சத்தினாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சமீபத்தில் கனாடாவின் டொரான்டோவின் தி க்ளோப் அண்டு மெயில், “யுத்தத்தைப் போலவே பஞ்சத்துக்கு எல்லை கிடையாது” என்பதாக குறிப்பிட்டிருந்தது. ஆப்பிரிக்காவில் ஐ.நா.வின் நெருக்கடி இயக்கத்தின் செயற் குழுவினர் ஒருவர், “ஆப்பிரிக்கா, மிகப் பெரிய மனித விபத்தின் விளிம்பிலும், இதுவரை எதிர்பட்டிராத மிகப் பெரிய மனித சவாலை எதிர்பட்டுக் கொண்டும் இருக்கிறது,” என்று சொன்னதாக அது மேற்கோள் காட்டியிருந்தது.
2, 3. (எ) உணவு பற்றாக்குறைகள் எதன் பாகமாக இருக்கின்றன? (பி) உணவு பிரச்னைகள் எவ்வாறு தீர்க்கப்படும்? ஏசாயா 25:8 என்ன மகிழ்ச்சியைத் தரும் நம்பிக்கையை கொடுக்கிறது?
2 உணவு பற்றாக்குறைகள், ராஜ்ய வல்லமையில் தாம் வந்திருப்பதற்குரிய அடையாளத்தின் பாகமாக இருக்கும் என்பதாக இயேசு முன்னறிவித்திருக்கிறார். (மத்தேயு 24:3, 7, 32, 33; 25:31, 32; லூக்கா 21:11) அவருடைய ராஜ்யம் சமீபித்து விட்டதற்காக நாம் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கலாம்! சீக்கிரத்தில் மகிமைப் பொருந்திய இந்த ராஜா மனிதவர்க்கத்தின் எல்லா சத்துருக்களையும் முறியடித்துவிடுவார். இத்தகைய கொடுமையான துயரத்தைக் கொண்டு வந்திருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார அநீதிகளை அவர் அழித்துவிடுவார். அப்பொழுது எல்லா மனுஷரும் அன்றன்றுள்ள ஆகாரத்தைப் பெற்றுக்கொள்வதில் சந்தோஷமுள்ளவர்களாக இருப்பார்கள்.—மத்தேயு 6:10, 11; 24:21, 22; தானியேல் 2:44; நீதிமொழிகள் 29:2.
3 நீதியான அரசாங்கத்தின் கீழ், நம்முடைய வளமான பூமி, மிக அதிகமான விளைச்சலைக் கொடுக்க ஆற்றலுள்ளதாக, இன்றைய உலகின் மக்கள் தொகையைக் காட்டிலும் இன்னும் அதிகமான ஆட்களை திருப்தி செய்வதற்கு போதுமான உணவை அது விளைவிப்பதாகவும் இருக்கும். (சங்கீதம் 72:12-14, 16, 18) யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு மகிழ்வூட்டும் ஒரு “விருந்தை” ஆயத்தம் பண்ணுவார். (ஏசாயா 25:6) ஆனால் கூடுதலாக வேறொன்றும் அவசியமாக இருக்கிறது. வருடங்கள் செல்ல செல்ல, மனிதர்கள் நோயுற்றும் மரித்தும் கொண்டிருப்பார்களா? யெகோவாவைக் குறித்து ஏசாயா 25:8 தொடர்ந்து இவ்விதமாகச் சொல்வது மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது: “அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; யெகோவாவாகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கி விடுவார்.” இது எவ்விதமாக நடக்கிறது?
யெகோவாவின் அன்பான ஏற்பாடு
4. எகிப்தில், யெகோவா என்ன அன்பான ஏற்பாட்டை செய்திருந்தார்?
4 யோசேப்பு எகிப்தில் உணவு மந்திரியாக இருந்த சமயத்தில் அங்கு தானியம் ஏராளமாக இருந்தது. இது ஏனென்றால், யோசேப்பு பார்வோனால் நியமனம் செய்யப்பட்ட பின்பு முன்னறிவிக்கப்பட்ட ஏழாண்டு பஞ்சத்துக்காக அவன் ஞானமாக முன்னேற்பாடுகளைச் செய்திருந்தான். அதோடுகூட யெகோவா அவருடைய ஆசீர்வாதங்களை கூட்டினார். (ஆதியாகமம் 41:49) எல்லோருக்கும் அங்கு நிறைவாக இருந்தது. தேவைக்குப் போக மீதமும் இருந்தது. யோசேப்பின் தகப்பனும், யோசேப்பின் சகோதரர்களும் அவர்களுடைய குடும்பங்களும் எகிப்தில் யோசேப்போடு சேர்ந்து கொள்ள வந்தபோது, அந்த தெய்வீக ஏற்பாட்டினால் அவர்கள் வெகுவாக நன்மையடைந்தார்கள். அந்த இஸ்ரவேலர்கள் எகிப்தின் கோதுமையால் செய்யப்பட்ட புளித்த மாவு அப்பங்களைச் சாப்பிட பழகிக் கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
5. (எ) வனாந்தரத்தில் யெகோவா எவ்விதமாக உணவளித்தார்? (பி) இந்த ஆசீர்வாதத்தில் இஸ்ரவேலரோடு பங்குகொண்டது யார்? ஏன்?
5 பின்னால், யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு இன்னும் கூடுதலான அன்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். எகிப்தைவிட்டு புறப்பட்ட லட்சக்கணக்கான இஸ்ரவேலர் சீனாய் வனாந்தரத்தினூடே வந்து கொண்டிருந்தபோது இதைச் செய்தார். வறட்சியான நட்பற்ற அந்தப் பாலைவனத்தில் இந்த திரளான கூட்டம் தங்களுக்குத் தேவையான உணவை எங்கே கண்டடையும்? அவர்களுடைய விசுவாச குறைவின் காரணமாக யெகோவா கோபங் கொண்டாலும் அவர் “வானத்தின் கதவுகளைத் திறந்து மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப் பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.” நாற்பது நீண்ட வருடங்களாக, “வான அப்பத்தினாலும் அவர்களை திருப்தியாக்கினார்.” (சங்கீதம் 78:22-24; 105:40; யாத்திராகமம் 16:4, 5, 31, 35) மன்னாவை புசித்தது இஸ்ரவேலர் மாத்திரமே அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள். இஸ்ரவேலரல்லாத “பலஜாதியான ஜனங்கள் அநேகர்” யெகோவாவில் விசுவாசம் வைத்து எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலரோடு வந்தார்கள். ஆகவே கடவுள் அவர்களுக்கும்கூட மன்னாவை கொடுத்தார்.—யாத்திராகமம் 12:38.
6. (எ) என்ன அதிகமான ஒரு தேவை மனிதனுக்கு இருந்து வருகிறது? ஏன்? (பி) இஸ்ரவேலரின் பலிகள் அழுத்திக் காண்பித்தது என்ன? அவை எதற்கு முன்நிழலாக இருந்தன?
6 மனிதவர்க்கத்துக்கு எப்பொழுதும் சொல்லர்த்தமான அந்த “வான அப்பத்தைக்” காட்டிலும் அதிகமான ஒன்று தேவையாக இருந்திருக்கிறது. அற்புதமாக அளிக்கப்பட்ட மன்னாவை சாப்பிட்டவர்களும்கூட வயோதிபம் அடைந்து மரித்துப் போனார்கள். ஏனென்றால் மனிதனின் சுதந்தரிக்கப்பட்ட பாவத்தன்மை, அவனுடைய உணவு என்னவாக இருந்தபோதிலும் மரணத்தை தவிர்க்க முடியாததாக ஆக்கிவிடுகிறது. (ரோமர் 5:12) இஸ்ரவேலர் செலுத்திய பலிகள், கடவுளோடு ஒரு நல்ல உறவை காத்துக் கொள்ள ஒரு வழியாக இருந்தது. ஆனால் அந்த பலிகளும்கூட தேசத்தின் பாவத்தன்மையையே அழுத்திக் காண்பித்தன. அவைகளால் “பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்தி செய்ய” முடியாதிருந்தது. மேலுமாக பாவங்களை “என்றென்றைக்கும்” நீக்குகிற “ஒரேப் பலியான” இயேசுவுக்கு அந்த பலிகள் முன்நிழலாக இருந்தன. பரலோகத்தில் உயர்த்தப்பட்ட அந்த ஸ்தானத்திலிருந்து அவரால் இப்பொழுது அந்த பலியின் நன்மைகளை பொருத்தி பிரயோகிக்க முடிகிறது.—எபிரெயர் 10:1-4, 11-13.
“வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பம்”
7. (எ) யோவான் அதிகாரம் 6-லுள்ள இயேசுவின் வார்த்தைகளின் புதிய பின்னணி என்ன? (பி) இயேசு திரளான ஜனக்கூட்டத்தை கடிந்து கொண்டதற்கு காரணம் என்ன?
7 இப்பொழுது நாம் யோவான் 6-ம் அதிகாரத்துக்கு திருப்பிக் கொள்ளலாம். இயேசு இங்கு சொல்லும் காரியங்கள் 5-ம் அதிகாரத்தில் பதிவாகியிருப்பதன் தொடர்ச்சியாக இல்லை. சந்தர்ப்பம் இப்பொழுது வித்தியாசமாக இருக்கிறது. ஏனென்றால் மற்றொரு வருடம் கடந்துவிட்டிருக்கிறது. இப்பொழுது பொ.ச. 32-ஆக இருக்கிறது. இதன் பின்னணியில் இருப்பது, எருசலேமில் சுய நீதிமான்களாயிருந்த யூதர்கள் அல்ல. இங்கு கலிலேயாவிலிருந்த பொது மக்கள் இருந்தார்கள். இயேசு அப்பொழுது தானே ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு 5000 பேரை அற்புதமாக போஷித்திருந்தார். அடுத்த நாள் மற்றொரு இலவச உணவை எதிர்பார்த்து திரளான கூட்டம் இயேசுவின் பின்னால் வந்து கொண்டிருந்தது. ஆகவே இயேசு அவர்களிடம் இவ்விதமாகச் சொல்லுகிறார்: “நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள். அழிந்து போகிற போஜனத்திற்காக அல்ல, நித்திய ஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்.” இயேசுவில் விசுவாசம் வைக்கும் அனைவருக்கும் அத்தகைய உணவை அளிப்பதற்காக அவரை அவருடைய பிதா அனுப்பியிருந்தார். இதுவே, பூர்வ இஸ்ரவேலர் சாப்பிட்ட சொல்லர்த்தமான மன்னாவைவிட அதிக நிலையான பாதிப்புக்களையுடைய “வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பமாக” இருக்கும்.—யோவான் 6:26-32.
8. ஒருவர் எவ்விதமாக நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளக்கூடும்?
8 அந்த “உணவிலி”ருந்து பெறப்படக்கூடிய நன்மைகளை இயேசு தொடர்ந்து அவர்களுக்கு இவ்விதமாக விளக்குகிறார்: “ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். . . . குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்திய ஜீவனை அடைவதும் நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவதும் என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது.”—யோவான் 6:35-40.
9, 10. (எ) “ஜீவ அப்பம்” எவ்விதமாக மன்னாவிலிருந்து வித்தியாசமாக இருக்கிறது? (பி) யோவான் 6:42-51-ன் பிரகாரம் இயேசு யாருக்காக தம்முடைய மாம்சத்தைக் கொடுத்தார்? (சி) இவர்கள் எவ்விதமாக அவருடைய மாம்சத்தைப் புசிக்கிறார்கள்?
9 பொருளாசையுள்ள அந்த யூதர்கள் இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் இயேசுவை யோசேப்பு மற்றும் மரியாளின் குமாரனாக மாத்திரமே பார்த்தார்கள். இயேசு அவர்களை இவ்விதமாக எச்சரிக்கிறார்: “உங்களுக்குள்ளே முறுமுறுக்க வேண்டாம். என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வர மாட்டான்; கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன்.” பின்பு மறுபடியுமாக இவ்விதமாகச் சொல்லுகிறார்: “ஜீவ அப்பம் நானே, உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவை புசித்திருந்தும் மரித்தார்கள். இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே.”
10 ஆக, “உலகத்தின் ஜீவனுக்காக”—மீட்டுக் கொள்ளப்படத்தக்க மனிதவர்க்கத்தின் முழு உலகத்துக்காக—இயேசு தம்முடைய மாம்சத்தைக் கொடுத்தார். இயேசுவினுடைய பலியின் மீட்டுக் கொள்ளும் வல்லமையில் விசுவாசத்தைக் காண்பிப்பதன் மூலம், மனிதவர்க்கத்தின் உலகில் அந்த “அப்பத்தை” அடையாள அர்த்தத்தில் “புசிக்கிறவன்” நித்திய ஜீவனுக்காக வழியினுள் பிரவேசிக்கக்கூடும். இங்கு வனாந்தரத்தில் மன்னாவை இஸ்ரவேலரோடு சேர்ந்து புசித்த “பல ஜாதியான ஜனங்கள்” இயேசுவின் “வேறே ஆடு”களாகிய திரள் கூட்டத்தாருக்கு முன்நிழலாக இருக்கிறார்கள். இவர்கள் இப்பொழுது அபிஷேகம் பண்ணப்பட்ட “தேவனுடைய இஸ்ரவேலின்” மீதியானோரோடுகூட இயேசுவின் மாம்சத்தை அடையாள அர்த்தத்தில் புசிக்கிறார்கள் இயேசுவில் பலியில் விசுவாசம் வைப்பதன் மூலம் இதை அவர்கள் செய்கிறார்கள்.—கலாத்தியர் 6:16; ரோமர் 10:9, 10.
11. இயேசுவின் மேலுமான என்ன வார்த்தைகள் யூதர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது?
11 அப்பொழுது கலிலேயாவில் இயேசு பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கிறது. அவருடைய மாம்சத்தைப் பற்றியே இன்னும் பேசிக்கொண்டிருக்கும் போது, பின்வருமாறு சொல்வதன் மூலம் இன்னும் ஒரு படி மேலே அவர் செல்லுகிறார்: “நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால், உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தை பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; நான் அவனை கடைசி நாளில் எழுப்புவேன். என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது. என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.” (யோவான் 6:53-55) நிச்சயமாகவே இது அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது! தன்னினத்தை புசிப்பது என்பது அந்த யூதர்கள் அருவருத்த காரியமாக இருந்தது மட்டுமல்லாமல், லேவியராகமம் 17:14-லுள்ள கட்டளை “எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிப்பதை” நிச்சயமாகவே தடை செய்திருந்தது.
12. (எ) இயேசு இங்கு எதை வலியுறுத்துகிறார்? (பி) இயேசுவின் உடன் சுதந்தரவாளிகளுக்கு மட்டுமே இது கட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை என்பதை என்ன வேதவசனங்கள் காண்பிக்கின்றன?
12 நித்திய ஜீவனைப் பெற விரும்பும் எவரும், இயேசு பலியாக செலுத்த இருந்த தம்முடைய பரிபூரண மனித சரீரத்திலும், சிந்த இருந்த தம்முடைய இரத்தத்திலும் விசுவாசம் வைக்க வேண்டும் என்பதை அவர் இங்கு வலியுறுத்துகிறார். (எபிரெயர் 10:5, 10; 1 பேதுரு 1:18, 19; 2:24) இந்த ஏற்பாடு இயேசுவின் உடன் சுதந்தரவாளிகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை. “மகா உபத்திரவத்தை” தப்பிப் பிழைக்கும் திரள் கூட்டத்தாரையும் இது உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் “தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்திருக்”கிறார்கள். அவர்கள் தேவனுக்கு “பரிசுத்த சேவை”யை செய்வதன் மூலம் இயேசுவின் பலியில் விசுவாசம் வைப்பதை காண்பிக்கிறார்கள். அதன் காரணமாக பூமியில் மிகவும் உபத்திரவமான ஒரு காலத்தில் இவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். அதே விதமாகதானே யோசுவா எரிகோவை அழித்தபோது, ராகாப் நீதியுள்ளவளென அறிவிக்கப்பட்டு, அதில் பாதுகாக்கப்பட்டாள்.—வெளிப்படுத்தின விசேஷம் 7:9, 10, 14, 15; யோசுவா 6:16, 17; யாக்கோபு 2:25.
“உங்களுக்குள்ளே ஜீவன்”
13. (எ) யோவான் 5:26 மற்றும் யோவான் 6:53-ஐ ஒப்பிடுகையில், எது கவனிக்கப்பட வேண்டும்? (பி) யோவான் 6:53-ஐ புரிந்துகொள்ள என்ன கிரேக்க இலக்கண அமைப்பு நமக்கு உதவி செய்கிறது? (சி) ஆகவே “உங்களுக்குள்ளே ஜீவனை”யுடையவர்களாயிருப்பது என்பது எதை அர்த்தப்படுத்துகிறது? இந்த வார்த்தைகள் யாருக்கு பொருந்துகின்றன?
13 யோவான் 6:53, 54-ல் இயேசு “நித்திய ஜீவனை”யும் “உங்களுக்குள்ளே ஜீவனை”யும் ஒன்றுபடுத்தி பேசுகிறார். ஆகவே இந்த சந்தர்ப்பத்தில், “உங்களுக்குள்ளே ஜீவன்” என்ற சொற்றொடரும் இயேசு யோவான் 5:26-ல் பயன்படுத்திய சொற்றொடரும் கருத்தில் வித்தியாசமாக இருப்பதாகத் தெரிகிறது. “உங்களுக்குள்ளே ஜீவன்” போன்ற அதே இலக்கண அமைப்புள்ள சொற்றொடர்கள், கிரேக்க வேதாகமத்தில் மற்ற இடங்களிலும் வருகின்றன. உதாரணமாக: “உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள்.” (மாற்கு 9:50) மற்றும் “தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.” (ரோமர் 1:27)a இந்த உதாரணங்களில், இந்த சொற்றொடர் உப்பை அல்லது ஒரு பலனை மற்றவர்களுக்கு அளிப்பதற்கு அதிகாரமளிக்கப்படுவதை அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, அது உள்ளான முழுமையை அல்லது நிறைவை அர்த்தப்படுத்துகிறது. ஆகவே யோவான் 6:53-ன் சந்தர்ப்பத்தின் பிரகாரம், “உங்களுக்குள்ளே ஜீவன்” என்பது கடைசியாக முழு நிறைவான வாழ்க்கையினுள் பிரவேசிப்பதை அர்த்தப்படுத்தும். ராஜ்ய சுதந்தரவாளிகளாகிய “சிறு மந்தை,” பரலோகங்களுக்கு உயித்தெழுப்பப்படும்போது, இதை அனுபவிக்கிறார்கள். வேறே ஆடுகளோ, ஆயிரம் வருடங்களின் முடிவுக்குப் பின்பு, அவர்கள் சோதிக்கப்பட்டு, பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனுக்கென்று நீதிமான்களாக எண்ணப்படும்போது இதை அனுபவிக்கிறார்கள்.—1 யோவான் 3:2; வெளிப்படுத்தின விசேஷம் 20:4, 5.
14. “வானத்திலிருந்து வந்த அப்பத்தினால்” வேறு யாரும் நன்மையடைவார்கள்? எவ்விதமாக?
14 மற்றவர்களும்கூட, “வானத்திலிருந்து வந்த அப்பத்தினால்” நன்மையடையக்கூடும். ‘தம் மாம்சத்தைப் புசித்து தம் இரத்தத்தை பானம் பண்ணாகிறவன்’ மரிப்பானேயானால் “அவனை கடைசி நாளில் எழுப்புவேன்” என்பதாக இயேசு சொன்னார். மரணத்தில் நித்திரையடைந்தவர்களாய் இருக்கும் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் “கடைசி எக்காளம்” தொனிக்கும்போது எழுப்பப்படுகிறார்கள். இது ராஜ்ய மகிமையில் இயேசு கிறிஸ்து “பிரசன்னமாகும்” போது நடைபெறுகிறது. (1 கொரிந்தியர் 15:52; 2 தீமோத்தேயு 4:1, 8) ஆனால் மரணத்தில் நித்திரை அடையும் “வேறே ஆடு”களைப் பற்றி என்ன? லாசருவின் மரணத்தின்போது மார்த்தாள் சொன்ன வார்த்தைகள் இங்கு கவனிக்கப்படத்தக்கது. ஏனென்றால், அந்த சமயத்திலிருந்த, கடவுள் பயமுள்ள யூதர்களுக்கு வெறும் பூமிக்குரிய உயிர்த்தெழுதலில் தானே நம்பிக்கை இருந்தது. மார்த்தாள் தன்னுடைய விசுவாசத்தை பின்வரும் வார்த்தைகளில் வெளியிட்டாள்: “உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் [லாசருவும்] உயிர்த்தெழந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்.” (யோவான் 11:24) ஆகவே இப்பொழுது கிறிஸ்துவின் பிரசன்னத்தின்போது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், மரணத்தில் நித்திரையடைந்திருக்கும் “திரள் கூட்டத்”தாரிலுள்ள உண்மையுள்ளவர்கள், இங்கு பூமியில் உயிர்த்தெழுந்து வருவார்கள் என்ற நம்பிக்கையோடிருக்கலாம். இவர்கள், நித்திய ஜீவனின் குறிக்கோளோடு “வானத்திலிருந்து வந்த அப்பத்தை” மறுபடியும் புசிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். என்ன மகத்தான ஒரு நம்பிக்கையாக இது இருக்கிறது! இயேசுதாமே மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதினால் இந்த நம்பிக்கை உறுதியாகிறது.—1 கொரிந்தியர் 15:3-8.
“கிறிஸ்துவிலே நிலைத்திருத்தல்”
15. “கிறிஸ்துவில் நிலைத்திருத்தல்” என்ற இயேசுவின் வார்த்தைகள் யாருக்கு பொருந்துகின்றன? நீங்கள் ஏன் அவ்விதமாக பதிலளிக்கிறீர்கள்?
15 இயேசு தொடர்ந்து சொல்லுகிறார்: “என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான். நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.” (யோவான் 6:56) அப்படியென்றால், “தங்களுக்குள்ளே ஜீவனைக்” கொண்டிருக்கும் எதிர்பார்ப்பையுடையவராய் இயேசுவில் பலியில் விசுவாசம் வைக்கும் “எவருடைய” விஷயத்திலும் இது உண்மையாகவே இருக்கிறது. இத்தகைய விசுவாசத்தை விளங்கப்பண்ணும் அனைவரும் இயேசுவில் “நிலைத்திருக்க”க் கூடும். ஆனால் இயேசுவைப் போலவே பரலோக உயிர்த்தெழுதலைப் பெற்றுக் கொள்ளும் அவருடைய மணவாட்டியின் அங்கத்தினர்களான அவருடைய உடன் சுதந்தரவாளிகள் “கிறிஸ்துவில் நிலைத்திருக்கும்” அர்த்தத்தில், பூமிக்குரிய நம்பிக்கைகளையுடைய “திரள் கூட்டத்தார்” அவரில் நிலைத்திருப்பதில்லை. (ரோமர் 8:1, 10; 1 கொரிந்தியர் 1:2; 2 கொரிந்தியர் 5:17; 11:2; கலாத்தியர் 3:28, 29; எபேசியர் 1:1, 4, 11; பிலிப்பியர் 3:8-11) சிறு மந்தையினரின் விஷயத்தில் உண்மையாக இருப்பது போலவே, “தேவனுடைய பரிபூரணமான சித்தத்தை” அறிந்திருப்பதிலும் அதை செய்வதிலும் பூமிக்குரிய நம்பிக்கைகளையுடைய அனைவரும் பிதாவோடும் குமாரனோடும் முழுமையாக ஒத்திசைந்திருப்பவர்களாக இருக்க முடியும். உண்மையில் அவ்விதமாக இருக்கவும் வேண்டும்.—ரோமர் 12:2; யோவான் 17:21-ஐ ஒப்பிடவும்.
16. (எ) கிறிஸ்துவின் பலியில் விசுவாசம் வைக்கும் அனைவரும் என்ன இன்றியமையாத விதங்களில் இயேசுவில் நிலைத்திருக்கிறவர்களாக இருக்கிறார்கள்? (பி) நோக்கத்திலும் முயற்சியிலும் அவர்கள் இசைவாய் இருப்பது எவ்விதமாக காட்டப்படுகிறது?
16 இதன் காரணமாக, இன்று கிறிஸ்துவின் மாம்சம் மற்றும் இரத்தத்தின் பலியின் மதிப்பு, அதில் விசுவாசம் வைக்கும் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்ளும் அனைவரும் இன்றியமையாத விதங்களில் இயேசுவில் “நிலைத்திருக்கக்” கூடும். அனைவருமே யெகோவா தேவனின் சர்வலோக குடும்பத்தின் பாகமாக ஆகிறார்கள். கொடிய இந்த “கடைசி நாட்களில்” அவர்கள் உலகம் முழுவதிலும் நம்பிக்கையிலும் நோக்கத்திலும் நடவடிக்கையிலும் ஒரு ஐக்கியத்தை அனுபவித்துக் களிக்கிறார்கள். இயேசுவில் விசுவாசத்தை அப்பியாசித்து, அவர்கள் பூமியின் மீது இயேசு செய்ததைக் காட்டிலும் செயல் பரப்பில் “பெரிய கிரியைகளை”ச் செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்த சமயத்தில் யெகோவாவின் வேலையை செய்துவரும் ஆட்களில் லட்சக்கணக்கான திரள் கூட்டத்தார் இப்பொழுது 99.7 சதவிகிதமாக இருக்கிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய காரியம். நோக்கத்திலும் உழைப்பிலும் அவர்கள் இசைவாய் இருப்பது உலகம் முழுவதிலும் கொடுக்கப்படும் மகத்தான சாட்சியிலும் காவற்கோபுர சங்கத்தின் கட்டிட திட்டங்களுக்கு கொடுக்கப்படும் மனமார்ந்த ஆதரவிலும் காட்டப்படுகிறது. (சங்கீதம் 110:3) மனிதவர்க்கத்தின் உலகில் இன்னும் எத்தனைப் பேர் விசுவாசித்து இந்த விலைமதிப்புள்ள ஐக்கியத்தினுள் வருவார்கள் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒரு விஷயமாகும். அண்மையில் கிடைத்துள்ள தகவலின்படி 30,24,131 சுறுசுறுப்பான சாட்சிகள் இருக்கிறார்கள்.
17. ஞாபகார்த்த ஆசரிப்புக்கு ஆஜராயிருக்கும் அனைவருமே என்ன குறிப்புகளை போற்றுகிறவர்களாக இருக்க வேண்டும்?
17 1986 ஞாபகார்த்த ஆசரிப்புக்கு இன்னும் அநேக அக்கறையுள்ள ஆட்கள் வந்திருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. லட்சக்கணக்கான “வேறே ஆடுகளும்” எண்ணிக்கையில் குறைந்து கொண்டிருக்கும் “சிறு மந்தை”யின் ஒரு சில ஆயிரம் பேரும் ஆஜராயிருந்திருப்பார்கள். கிறிஸ்துவின் மூலமாக யெகோவா செய்திருக்கும் அன்பான ஏற்பாட்டுக்கு அனைவரும் ஆழ்ந்த போற்றுதலையுடையவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்துவின் மாம்சமும் இரத்தமும் எத்தனை இன்றியமையாதவையாக இருக்கின்றன என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ளுகிறார்கள். ஆனால் அனைவருமே தாங்கள் எங்கே நிற்கிறோம் என்பதை தெளிவாக பகுத்துணருகிறவர்களாக இருக்க வேண்டும். ஞாபகார்த்த அடையாளச் சின்னங்களில் பங்குகொள்வதுதானே நித்திய ஜீவனை அளித்துவிடுவது கிடையாது. இவை இயேசுவின் பலிக்கு அடையாளங்களாகவே இருக்கின்றன. இவை “புதிய உடன்படிக்கை”யின் சம்பந்மதாகவே முதலில் பிரயோகிக்கப்படுகின்றன. அந்த உடன்படிக்கையினுள் எடுத்துக் கொள்ளப்படும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் மாத்திரமே அடையாளச் சின்னங்களில் பங்குகொள்வது தகுதியானதாக இருக்கிறது. ஒருவர் அந்த புதிய உடன்படிக்கையில் இருக்கிறார் அல்லது அதில் இல்லை. புதிய உடன்படிக்கையில் இல்லாத, இயேசுவால் ராஜ்யத்துக்கான ஒரு உடன்படிக்கைக்குள் எடுத்துக் கொள்ளப்படாதவர்கள் ஞாபகார்த்த சின்னங்களில் பங்குகொள்வதில்லை. ஆனாலும்கூட பலி செலுத்தப்பட்ட இயேசுவின் மாம்சமும் இரத்தமும் தங்களுக்கு எத்தனை முக்கியமானதாக இருக்கிறது என்பதை அவர்களும் ஒப்புக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். (லூக்கா 22:14-20; 28-30) இந்தப் பலியின் மூலமாகவே அவர்கள் பூமியின்மீது நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள முடியும்.
18. இயேசுவின் பலி அர்த்தப்படுத்தும் அனைத்துக் காரியங்களையும் தெளிவாக பகுத்துணருவதனால் என்ன மகிழ்ச்சி கிடைக்கிறது?
18 ஆகவே இயேசுவின் பலி, மனிதவர்க்கத்துக்கு எதையெல்லாம் அர்த்தப்படுத்துகிறது என்பதை தெளிவாக பகுத்துணர்ந்து, ஞாபகார்த்த ஆசரிப்பை நாம் அணுகவேண்டும். “சிறு மந்தை”யிலுள்ளவர்கள் அவர்களுடைய அழைப்பை உயர்வாக மதித்து காப்பாற்றிக் கொள்ளக் கடவர்கள். எண்ணிக்கையில் வளர்ந்துவரும் “வேறே ஆடு”களாக திரள் கூட்டத்தார் ‘தங்களுக்குள்ளே ஜீவனை’ பரிபூரண பூமிக்குரிய வாழ்க்கையை கொண்டிருக்கும் எதிர்பார்ப்பில் களிகூரட்டும். இப்பொழுதே பிதாவோடும் குமாரனோடும், பூமியின் மீது எண்ணிக்கையில் குறைந்துவரும் அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரோடும் தங்களுடைய ஐக்கியத்தை அவர்கள் உயர்வாக போற்றி வருகிறார்கள். “ஜீவ அப்பம்” இப்பொழுது அனைவருக்கும் கிடைப்பதைப் பற்றி நாம் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறோம்! (w85 2/15)
[அடிக்குறிப்புகள்]
a மத்தேயு 3:9; 9:3; 13:21; மாற்கு 5:30; 6:51; லூக்கா 7:39, 49; 12:17; 18:4; யோவான் 5:42; 11:38; அப்போஸ்தலர் 10:17; 2 கொரிந்தியர் 1:9.
விமர்சன கேள்விகள்
◻ பொ.ச. 32-ல் இயேசு என்ன இரண்டு விதமாக மன்னாவைப்பற்றி பேசினார்? யாருக்கு அளிக்கப்பட்டதாக?
◻ இயேசு யாரை தம்முடைய மாம்சத்தைப் புசித்து இரத்தத்தை பானம் பண்ணும்படியாக அழைக்கிறார்? இதை அவர்கள் எவ்விதமாகச் செய்கிறார்கள்?
◻ “உங்களுக்குள்ளே ஜீவனை”யுடையவர்களாய் இருப்பதன் அர்த்தமென்ன? இது எவ்விதமாக எப்பொழுது பெறப்படுகிறது?
◻ “ஜீவ அப்பத்தின்” சம்பந்தமாக இப்பொழுது என்ன ஒரு மகிழ்ச்சியில் அனைவருமே பங்குகொள்ளலாம்?