வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
◼ போர் முடிவதற்கு முன்பு போஜனம் செய்யும் எந்த ஒரு போர்வீரனும் சபிக்கப்பட்டவன் என்று சவுல் அரசன் சபித்த பின்பு சிறிது தேனைப் புசித்த யோனத்தான் கடவுளுடைய தயவை இழந்துவிட்டானா?
சவுலின் அவசர ஆணை இஸ்ரவேலை சாபத்தின் வரிசையில் நிறுத்தியது, ஆனால் யோனத்தான் அந்த ஆணைக்கு எதிராகச் சென்றதால் அவன் கடவுளுடைய பிரியத்தை இழந்துவிட்டான் என்று சொல்வதற்கில்லை.
இந்தச் சம்பவத்தை 1 சாமுவேல் 14:24, 25 விவரிக்கிறது. யோனத்தானின் திட்டங்களால் பக்குவப்படுத்தப்பட்ட இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு எதிராகப் போர் புரிந்து கொண்டிருந்தனர். சவுல் அரசன் சொன்னதாவது: “நான் என் சத்துருக்கள் கையிலே பழிவாங்க வேண்டும். சாயங்காலம் மட்டும் பொறுக்காமல் எவன் போஜனம் செய்கிறானோ, அவன் சபிக்கப்பட்டவன்!” (வசனம் 24) தன்னுடைய தகப்பனின் ஆணையைக் குறித்து அறியாதிருந்து யோனத்தான் கொஞ்சம் தேன் சாப்பிடுவதன் மூலம் சற்று ஊட்டமெடுத்துக் கொண்டான். களைப்பாயிருந்த மற்றப் போர்வீரர்கள் கால்நடைகளைக் கொன்று இரத்தத்தோடே அவற்றின் மாம்சத்தைப் புசித்ததன் மூலம் பாவஞ்செய்தார்கள். அந்தப் பாவம் சம்பந்தமாக சவுல் ஒரு பலிபீடத்தைக் கட்டினான். ஆனால், தன்னுடைய மகன் என்ன செய்தான் என்பது அவனுக்குத் தெரியாமலிருந்தது.
அந்தப் போரைத் தொடர்வது குறித்து சவுல் கடவுளுடைய வழிநடத்துதலை நாடியபோது, யெகோவா அவனுக்கு உத்தரவு கொடுக்கவில்லை. தும்மீமைப் (அநேகமாய்ப் புனித சீட்டு போட பயன்படுத்தப்பட்டது) பயன்படுத்தி, தன்னுடைய மகன் தனது ஆலோசிக்கப்படாத ஆணையை மீறினான் என்பதை அறிய வந்தான். ஆனால், உண்மையில், யோனத்தான் எந்தளவுக்குக் குற்றவாளியாயிருந்தான்?
முதலாவதாக, ஆணையிடும்போது அந்த அரசனின் மனநிலையை நினைவுபடுத்திப் பாருங்கள். பெலிஸ்தர் மீது கிடைத்த வெற்றிக்காக தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என்ற ஆசையை அவன் வெளிப்படுத்தவில்லை. மாறாக, “நான் என் சத்துருக்கள் கையிலே பழிவாங்க வேண்டும்! அதுமட்டும் பொறுக்காமல் போஜனம் பண்ணுகிறவன் சபிக்கப்பட்டவன்” என்று மூர்க்கமாய்ப் பேசினான். ஆம், அரச அதிகாரத்தைத் தவறாக நோக்கிய ஒரு நிலையிலிருந்து அல்லது தவறான வைராக்கியத்திலிருந்து புறப்படும் ஓர் ஆணையாக அது இருந்தது. அந்த ஆணை கடவுளுடைய ஆதரவைக் கொண்டிருக்காது. இஸ்ரவேலரின் போர் வீரர்கள் அந்தக் கால்நடைகளின் இரத்தத்தைப் புசித்துப் பாவஞ் செய்ததற்கு அந்த ஆணை ஒரு காரணமாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு ஆணையால் கட்டுப்படுத்தப்படாதவர்களாயிருந்தால், அவர்கள் உணவைக் கண்டுபிடித்திருப்பார்கள், அனால் முழு வெற்றி பெறும் வரையில் பெலிஸ்தரைத் தொடருவதற்கு பலத்தையும் உடையவர்களாயிருந்திருப்பார்கள்.
சவுலின் ஆணையை யோனத்தான் (அறியாமையில்) மீறினான் என்பதைத் தீர்மானிக்கவே தேவன் தும்மீமைப் பயன்படுத்துவதை அனுமதித்தார், ஆனால் அந்த அவசர ஆணையை அவர் அங்கீகரித்தார் என்பதை இது குறிக்காது. கடவுள் யோனத்தானைக் குற்றவாளியாகக் கருதினார் என்று பதிவு எந்த இடத்திலும் குறிப்பிடுவதில்லை. தன்னுடைய தகப்பனின் ஆணையை மீறினதற்கான தண்டனையைப் பெற்றுக்கொள்ள யோனத்தான் மனமுள்ளவனாயிருந்தான் என்றாலும், யோனத்தான் உயிர்வாழ அனுமதிக்கப்படுவதற்கான சூழ்நிலை அங்கு இருந்தது. யோனத்தானின் “தேவன் துணைநிற்க” இந்தப் பலமான காரியத்தைச் செய்தான் என்று இஸ்ரவேலப் போர்வீரர்கள் சொன்னார்கள். அதைப் பின்தொடர்ந்த ஆண்டுகளில் சவுல் ஒன்றன் பின் ஒன்றாகக் குற்றமிழைத்துக்கொண்டிருக்கையில் யோனத்தான் தொடர்ந்து யெகோவாவின் தயவை உடையவனாயிருந்தான்.
◼ சிம்சோன் மற்றும் கிதியோன் போன்று எத்தனை நியாயாதிபதிகள் இருந்தனர்?
நியாயாதிபதிகளை எண்ணிப்பார்க்கும்போது உங்களுடைய கணக்கு, சில இஸ்ரவேலரை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள் என்பதைச் சார்ந்ததாயிருக்கிறது. ஆனால், யோசுவாவுக்கும் சாமுவேலுக்கும் இடையில் 12 பேர் நியாயாதிபதிகளாகச் சேவித்தனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
மோசே மற்றும் யோசுவாவின் நாட்களில் சபையிலிருந்த சில முதிர்ந்த மனிதர் நீதிசம்பந்தப்பட்ட காரியங்களை விசாரிப்பதற்கும் தீர்மானங்கள் எடுப்பதற்கும் தெரிந்துகொள்ளப்பட்டதனால் இந்தக் கருத்தில் அவர்கள் நியாயாதிபதிகளாக இருந்தனர். (யாத்திராகமம் 18:21, 22; யோசுவா 8:33; 23:2) யோசுவாவின் மரணத்திற்குப் பின்பு இஸ்ரவேலர் உண்மை வணக்கத்திலிருந்து விழுந்துவிட்டதால் மற்றவர்களுடைய கொடுமைக்கு ஆளானார்கள். நியாயாதிபதிகள் 2:16 கூறுகிறது: “யெகோவா நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணினார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்கள்.” யெகோவா தேவன் முதலாவதாக “ஒத்னியேல் என்ற பெயர்கொண்டவனை நியாயாதிபதியாக அல்லது ‘இரட்சகராக’ எழுப்பினார். அதற்குப் பின்பு வந்தவர்கள் எகூத், சம்கார், பாராக், கிதியோன், தோலா, யாவீர், யெப்தா, இப்சான், ஏலோன், அப்தோன், மற்றும் சிம்சோன்.
இந்தப் பன்னிரண்டு பேரைத் தவிர நியாயம் விசாரித்தல் சம்பந்தமாகப் பைபிள் தெபோராள், ஏலி மற்றும் சாமுவேலையும் குறிப்பிடுகிறது. (நியாயாதிபதிகள் 4:4; 1 சாமுவேல் 4:16-18; 7:15, 16) என்றபோதிலும் தெபோராள் முதலில் தீர்க்கதரிசினி என்பதாக அழைக்கப்படுகிறாள், மற்றும் நியாயாதிபதியாகிய பாராக்குடன் தொடர்புப்படுத்திப் பேசப்படுகிறாள்; மக்களை ஒடுக்குதலிலிருந்து விடுவிப்பதில் பாராக் தலைமைத்தாங்கினான். அதுபோல், ஏலி முக்கியமாக ஒரு பிரதான ஆசாரியனாக இருந்தான், போர் மூலமாக இஸ்ரவேலுக்கு விடுதலையளித்த ஒரு ‘இரட்சகனாக’ இல்லை. (நெகேமியா 9:27) எனவே இஸ்ரவேலரை நியாயம் விசாரிக்கும் காரியத்தில் தெபோராளும் ஏலியும் ஒரு பங்கையுடையவர்களாயிருந்தபோதிலும், அடிப்படையில் நியாயாதிபதிகளாக ‘எழுப்பப்பட்ட’ அந்தப் 12 பேர்கொண்ட பட்டியலில் சேர்க்கப்படாததற்குக் காரணம் இருக்கிறது. “சாமுவேல் தீர்க்கதரிசி வரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை ஏற்படுத்தி வந்தார்” என்று அப்போஸ்தலர் 13:20 கூறுகிறது. இது நியாயாதிபதிகளின் காலம் என்று அறியப்பட்டிருக்கும் காலப்பகுதியை மட்டுப்படுத்துகிறது, மற்றும் சாமுவேலும் அவனுடைய குமாரர்களும் ஏன் நியாயாதிபதிகளின் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை என்பதையும் காட்டுகிறது.—1 சாமுவேல் 8:1. (w86 6/1)