நம்பிக்கையான மனநிலையைக் கொண்டிருங்கள்
வசந்த காலத்தில் ஒரு விடியற்காலை. மத்திய கிழக்குக் கதிரவன் ஒளிக்கதிர்களை வீசிட, துர்ச்செய்தி ஒன்றைத் தகப்பனார் கேட்கிறார். அவருடைய 22 வயது மூத்த மகன், இரவில் ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டான்.
அந்தச் செய்திக்கு நீங்கள் எப்படிப் பிரதிபலித்திருப்பீர்கள்? மத்திய கிழக்குக் குடும்பங்களைப் போன்று இந்தக் குடும்பமும் அதிக அன்புடன் நெருங்கி வாழ்பவர்களாதலால், பெற்றோர் அதிகமாக மனம் நொடிந்துவிட்டனர். இந்தப் பேரிழப்பை அவர்களால் தாங்கமுடியாத நிலையில் கடுமையாக வேதனைப்படுவார்கள் என்பது இயல்பான ஒரு காரியம். என்றபோதிலும் அந்தச் சமுதாயம் ஆச்சரியப்படத்தக்கதாக, அவர்கள் முதல் நாளிலேயே நம்பிக்கையான மனநிலையை வெளிக்காட்டினர். விசனத்தில் ஆழ்ந்தவர்களாயிருந்தாலும், யெகோவா தம்முடைய குறித்த காலத்தில் மகனை உயிர்த்தெழுப்புவார் என்பதில் பலமான நம்பிக்கைக் கொண்டிருந்தார்கள். கடவுள் வாக்குக்கொடுத்திருக்கிற “இனி மரணமும் இல்லாத” புதிய ஒழுங்குக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 21:4) பல ஆண்டுகள் கழிந்தும், அந்தப் பெற்றோரின் மனநிலையையும் நல்ல முன்மாதிக்குரிய விசுவாசத்தையும் குறித்து அவர்களை அறிந்த குடும்பங்கள் இன்றும் பேசுகின்றனர்.
நம்பிக்கையான ஒரு மனநிலையைக் கொண்டிருப்பது என்பதன் அர்த்தம் என்ன? சூழ்நிலைகள் மாறினாலும் நம்பிக்கையான மனநிலைகொண்ட ஒருவர் தன்னைச் சமநிலையாகக் காத்துக்கொள்ளுகிறார். கடுமையான சோதனையின் கட்டங்களிலும் அவன் நம்பிக்கையிழந்த கருத்துக்களுக்கு அல்லது எண்ணங்களுக்கு இடம் கொடுப்பதில்லை. இது எப்படிக் கூடிய காரியம்? இதற்கு விடை காண சில பைபிள் உதாரணங்களைக் கவனிப்போமாக.
மனிதருக்குப் பயப்படுகிற பயத்தை எதிர்ப்படும்போது
பொ.ச.மு. 1512-ம் ஆண்டில், இஸ்ரவேலர் பாரான் வனாந்தரத்திலிருந்தபோது வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைப் போய் பார்த்துவரும்படியாக மோசே வேவுகாரர்களை அனுப்பினான். (எண்ணாகமம் 13:17-20) வேவுகாரர்கள் எல்லோருமே அவர்களுடைய பத்து கோத்திரத்துப் பிரபுக்களாவர்—நல்ல முன்மாதிரிகளாக இருக்கவேண்டிய செல்வாக்குமிகுந்த மனிதர்களாவர். (எண்ணாகமம் 13:1, 2) ஆனால் வெட்கத்திற்குரிய காரியம், 40 நாட்களுக்குப் பின்பு அவர்களில் 10 பேர் கெட்ட அறிக்கையைக் கொடுத்ததால் இஸ்ரவேலர் யெகோவாவின் வழிநடத்துதலுக்கு எதிராகக் கலகஞ்செய்து எகிப்துக்குக் திரும்பிப்போக விரும்பினர்! அந்த வேவுகாரர்கள் “அந்தத் தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்,” “நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது,” என்றனர்.——எண்ணாகமம் 13:28, 31.
என்னே நம்பிக்கையற்ற ஒரு மனநிலை! எஞ்சியிருந்த வேவுகாரராகிய யோசுவா மற்றும் காலேபின் நம்பிக்கையான மனநிலையில் என்னே ஒரு முரண்பாடு! “நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்துச் சோதித்த தேசம் மகா நல்ல தேசம். யெகோவா நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்.” (எண்ணாகமம் 14:7, 8; 13:30) அந்தத் தேசத்தை வேவு பார்த்த இருசாராரும் ஒரே காரியங்களைப் பார்த்தனர். ஆனால் மனநிலையில் என்னே ஒரு வித்தியாசம்! அந்தப் பத்து வேவுகாரர்களின் நம்பிக்கையற்ற மனநிலை முழு தேசத்தையும் பாதித்தது, அவர்கள் முறுமுறுக்க ஆரம்பித்தனர். இதன் விளைவு, 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் வனாந்தரத்திலேயே மரித்துவிட்டனர். யெகோவாவில் நம்பிக்கையாயிருந்த யோசுவாவும் காலேபும் மட்டுமே வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்கும் வாய்ப்பைக் கொண்டிருந்தனர். (எண்ணாகமம் 14:22-30) துன்புறுத்தலும் எதிர்ப்பும் வரும்போது அல்லது அதிகரிக்கும்போது நாம் உண்மையுள்ளவர்களாகவும் நம்பிக்கையான மனநிலையுடையவர்களாகவும் நிலைத்திருப்பதற்கு அவர்களுடைய முன்மாதிரி நமக்கு உற்சாகமளிப்பதாய் இருக்க வேண்டும்.
பல ஆண்டுகளாகத் தடையுத்தரவு இருந்துவந்த ஒரு நாட்டில் விசேஷ பயனியர் ஒருவர் சிறையிலடைக்கப்பட்டு கடுமையாக துன்புறுத்தப்பட்டார். அவர் கூறுவதாவது: “சிறை அதிகாரிகள் என்னை எவ்வளவுக்கெவ்வளவு கடுமையாக நடத்தினார்களோ, அவ்வளவுக்கவ்வளவு நான் யெகோவாவிடம் நெருங்கியிருப்பதாக உணர்ந்தேன். ராஜ்ய பாடல்களைப் பாடினேன். எனக்குத் தெரிந்த எல்லா வசனங்களையும் நினைவுபடுத்திப் பார்த்தேன். யெகோவா இந்தக் காரியங்களை அனுமதிப்பவராயிருந்தாலும், அவர் எந்த நேரமும் என்னை விடுதலை செய்ய முடியும் என்பதை உணர்ந்தேன். இந்த எல்லாக் காரியங்களுமே, நான் நம்பிக்கையான ஒரு மனநிலையைக் கொண்டிருக்க எனக்கு உதவியது. அப்போஸ்தலர்களைப் போல, யெகோவாவின் சர்வவல்லமையுள்ள நாமத்திற்காக நான் அடிக்கப்படுவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன். யெகோவா என்னைப் பலப்படுத்த வேண்டுமென்று நான் தொடர்ந்து ஜெபம் செய்தேன். அவர் எனக்குத் துணை நின்றார், எனவேதான் அவர்கள் கொடுத்த முதல் அடி மட்டுமே எனக்கு வேதனையாக இருந்தது. மற்ற சிறைவாசிகளிடம் பேசுவதற்கு எனக்குக் கிடைத்த எல்லா சந்தர்ப்பத்தையும் நான் பயன்படுத்தினேன்.”
சிறையிலிருந்து விடுதலையான பின்பு இந்தக் கிறிஸ்தவன் சொன்னதாவது: “நம்முடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதாலும், அவருக்கு உண்மையாய் நிலைத்திருப்போம் என்று வாக்களித்திருப்பதாலும், எந்த ஒரு கஷ்டம் ஏற்பட்டாலும் அவரைத் தொடர்ந்து சேவிக்க வேண்டும். நம்முடைய வணக்கத்திற்கும் முழுமையான பக்திக்கும் அவர் பாத்திரமுள்ளவர்.”
எதிர்காலத்திலே நாமுங்கூட அதுபோன்ற எதிர்ப்பை எதிர்படக்கூடும். நமக்கு மனிதர் பயம் இல்லாமலிருக்க நாம் தீர்மானமாயிருப்போமாக. நம்பிக்கையான மனநிலையைக் கொண்டிருங்கள், அப்பொழுது யோசுவா மற்றும் காலேப் விஷயத்தில் இருந்ததுபோல, நமக்கும் பல ஆசீர்வாதங்களும் நற்பலன்களும் அருளப்படும்.
ஊழிய சிலாக்கியங்கள் இழக்கப்படும்போது
இஸ்ரவேல் தேசத்தின் தலைவனாகிய மோசேதான் அந்த 12 வேவுகாரர்களையும் அனுப்பினான். அவன்தான் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வழிநடத்தி வந்தவன், எனவே வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கும் வழிநடத்திச் செல்வதை எதிர்பார்த்திருந்தான் என்பதில் சந்தேகமிருப்பதற்கில்லை. எற்போதிலும், மோசே சற்று எரிச்சலடைந்தவனாய், யெகோவாவை மகிமைப்படுத்தத் தவறிவிட்டான், அந்தச் சிலாக்கியத்தையும் இழந்துவிட்டான். (எண்ணாகமம் 20:2-13) அப்பொழுது மோசே எப்படிப் பிரதிபலித்தான்? தான் பின்னால் இயற்றிய ஒரு பாடலில் அவன் பின்வருமாறு சொன்னான்: “யெகோவா திருநாமம் பிரசித்தம் பண்ணுவேன் . . . அவரே கன்மலை, அவர் செயல் உத்தமம், அவர் வழிகளெல்லாம் நியாயம். நம்பத்தக்க கடவுள் அவரே; மோசஞ்செய்யார். அவர் நீதியும் நேர்மையுமுள்ளவர்.” (உபாகமம் 32:3, 4, தி.மொ.) ஒரு விசேஷித்த ஊழிய சிலாக்கியத்தை இழந்தபோதிலும் மோசேக்கு இந்த நம்பிக்கையான மனநிலையை என்னென்று சொல்வது!
இதுபோன்ற ஒரு நிலையை நாம் எதிர்ப்பட வேண்டியதாயிருந்தால், மோசேயின் இந்த அனுபவத்தை நினைவுபடுத்திப் பார்ப்பது நமக்கு உதவியாக இருக்கும். ஒருவேளை சபையிலுள்ள மூப்பர்குழு ஒரு மூப்பரையோ அல்லது ஒரு உதவி ஊழியனையோ எடுத்துவிடுவதை சிபார்சு செய்யக்கூடும், ஒருவேளை அவன் ஒன்று அல்லது அதற்கும் அதிகமான வேதப்பூர்வமான தகுதிகளில் குறைவுபடுவதால் அப்படியாகக்கூடும். தன்னை அந்த ஊழிய சிலாக்கியத்திலிருந்து எடுத்துவிடுவது நியாயமற்றது என்பதாக அந்தச் சகோதரர் உணரக்கூடும், அதனால் கலக்கமுற்று தேவையற்ற சில குழப்பங்களை ஏற்படுத்தக்கூடும். நம்பிக்கையற்ற மனநிலையுடையவராய், முறுமுறுக்கவும், மற்றவர்களில் குற்றங்காணவும், புறங்கூறவுங்கூடும். கடைசியில் கூட்டத்திற்கு வருவதையும் பிரசங்க ஊழியத்தில் பங்குகொள்வதையும் நிறுத்திவிடக்கூடும். பரிதாபமான நிலைக்கு மாறாக, நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொண்டு, குறிப்பிட்ட ஊழிய சிலாக்கியத்திலிருந்து எடுக்கப்படுவதைச் சிட்டையாக அல்லது யெகோவாவுக்கு மேன்மையான ஒரு ஊழியனாக ஆவதற்கு ஒரு பயிற்றுவிப்பாகக் கருதுவது எவ்வளவு சிறந்தது. அவர் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் தியானிப்பதற்கும் அவரை முழுமையாகச் சேவிப்பதற்கு வேண்டிய தகுதிகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கும் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படிச் செய்தவர்களில் பலர் பின்னால் கூடுதலான ஊழிய சிலாக்கியங்களினால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள்.—எபிரெயர் 12:11.
எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும்போது
வாழ்க்கை எதிர்பாராத மாற்றங்கள் நிறைந்தது, இவற்றால் சிலர் ஏமாற்றத்தை அடையலாம், நம்பிக்கையற்ற மனநிலையுடையவராகலாம். அன்மையில் எதிர்பார்த்த விதமாகக் காரியங்கள் நடக்கவில்லை என்பதைக் கண்ட நீங்கள் அதற்கு எப்படிப் பிரதிபலித்தீர்கள்? அனுமதித்தால் சிறிய சாதாரண சம்பவங்களுங்கூட நம்மைச் சோர்வுக்குள்ளாக்கிவிடும். ஆனால் இதை மறந்துவிட வேண்டாம்: நம்பிக்கையான மனநிலையைக் கொண்டிருப்பது மாற்றம் கண்டிருக்கும் நிலைமையை நல்ல விதத்தில் எதிர்பட உங்களுக்கு உதவியாக இருக்கும்.
ரூத் ஒரு நல்ல முன்மாதிரி. தனது வாழ்க்கையில் வெகு சீக்கிரத்தில் விதவையான அவள் தனது மாமியாராகிய நகோமியுடன் இஸ்ரவேலுக்குத் திரும்புகிறாள். அந்தச் சமயத்தில் பஞ்சம் தளர்ந்தது. வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளைக் கொடுப்பதற்குக்கூட கணவன் இல்லாத நிலையிலும் ரூத் நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொண்டாள். தானும் தனது மாமியாரும் உண்ண உணவுக்காக வயலில் அறுவடை செய்தவர்கள் போன பின்பு எஞ்சிவிடப்பட்டதைப் பொறுக்கிக்கொள்வதற்காகச் சந்தோஷமாகப் புறப்பட்டாள். கடினமான உழைப்பு அவளை மனஞ்சோர வைக்கவில்லை. தனது கணவனை இழந்துவிட்டதையும், தனது குடும்பத்தாரையும் நண்பர்களையும் விட்டு தூரத்தில் வாழ்வதையும் குறித்துக் கவலைப்பட்டுக்கொண்டு ஒரு நம்பிக்கையற்ற மனநிலையை வளர்க்கவில்லை. பதிவு காண்பிக்கிறபடி அவளுடைய அருமையானத் தெரிவுக்காக யெகோவா அவளை அபரிமிதமாக ஆசீர்வதித்தார்.—ரூத் 4:13-17.
நம்பிக்கையான மனநிலையைக் கொண்டிருப்பது எப்படி
நம்பிக்கையான மனநிலையைக் கொண்டிருப்பது சிலருக்கு மிகவும் கடினம். நாம் வாழும் இந்த இக்கட்டான காலங்களில் வாழ்க்கையின் கவலைகள் ஒருவருடைய மகிழ்ச்சியைப் பரித்துக்கொள்ளும்—மிக முக்கியமாக நச்சரிக்கும் பிரச்னைகள் தொடர்ந்திருக்கும்போது. என்றாலும், சாதகமற்ற சூழ்நிலைகளிலும் ஒருவர் நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்ள முடியும். மிகவும் கடுமையான சூழ்நிலைகளில் சிலர் அவ்விதம் இருந்திருக்கின்றனர். நாமும் எப்படி அதுபோல இருக்கலாம்?
எதிர்மாறான காரியங்களைக் குறித்துச் சிந்திக்காமலிருக்க முற்படுங்கள். பெரிய கஷ்டங்களிலும் நம்பிக்கையான அம்சங்களைக் காணமுடியும். அப்போஸ்தலர்கள் அடிக்கடி துன்புறுத்தப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர், ஆனாலும் யெகோவாவை துதிக்கமுடிந்த காரியத்தில் மகிழ்ச்சியைக் கண்டனர். (அப்போஸ்தலர் 13:50-52; 14:19-22; 16:22-25) அவர்களும் யெகோவாவின் உண்மையுள்ள மற்ற ஊழியர்களும் சோதனையின் காலங்களில் என்ன செய்தார்கள் என்பதைத் தியானித்து, நம்முடைய சொந்த வாழ்க்கைக்குப் பாடம் படித்துக்கொள்ளலாம். அவர்கள் ஏன் மன மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையான மனநிலையுள்ளவர்களாகவும் இருந்தனர்? ஏனென்றால் அவர்கள் யெகோவாவில் முழு நம்பிக்கையும் விசுவாசமும் உடையவர்களாயிருந்தனர். அவர் உயிர்த்தெழுப்பும் வல்லமையுடையவர், தகுந்த பலனளிக்கக்கூடியவர் என்று பலமாக நம்பினார்கள். (வெளிப்படுத்துதல் 2:10) அதுபோல யெகோவாவின் நீதியான புதிய ஒழுங்குமுறையிலிருக்கும் உங்கள் நம்பிக்கையை மனதில் தெளிவாக வைத்திருங்கள்.—எபிரெயர் 12:2-ஐ ஒப்பிடவும்.
நம்மை நாமே சோதித்துப் பார்த்துக்கொள்வது நல்லது, இல்லாவிட்டால் எதிர்மாறான எண்ணம் நம்முடைய இருதயங்களில் வேர்கொள்ள ஆரம்பித்துவிடும். நாம் சோர்வடையும்போது யெகோவாவுடன் நெருங்கி இருப்பதும் அவருடைய உதவிக்காக ஜெபிப்பதும் எவ்வளவு நன்மையானது! (சங்கீதம் 62:8) பக்தி விருத்திக்கேதுவான உதவியை மூப்பர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம். மனத்தாழ்மை மற்றும் கீழ்ப்படிதலின் ஆவியை வளர்த்துக்கொள்ளுங்கள். (சங்கீதம் 119:69, 70) வாழ்க்கையில் ஆரோக்கியமான, அடையக்கூடிய இலக்குகளைக் கொண்டிருங்கள். இந்த ஆலோசனைகள் எல்லாமே ஒரு நம்பிக்கையான மனநிலையைக் கொண்டிருப்பதற்கும் ‘நம்முடைய இருதயங்களையும் நம்முடைய சிந்தைகளையும் காத்துக்கொள்ளும்’ “தேவ சமாதானத்தை” உடையவர்களாயிருக்கவும் நமக்கு உதவியாயிருக்கும்.—பிலிப்பியர் 4:6, 7.
நம்பிக்கையான ஒரு மனநிலையை எல்லா சமயத்திலும் கொண்டிருப்பது எளிய காரியமல்ல. என்றபோதிலும், தொடர்ந்த முயற்சியாலும் பலமான விசுவாசத்தால் தூண்டப்படுவதாலும் அப்படிப்பட்ட மனநிலையை வளர்க்க முடியும். எனவே, நம்முடைய சூழ்நிலை என்னவாக இருந்தாலுஞ்சரி, நாமெல்லோருமே நம்பிக்கையான மனநிலையைக் கொண்டிருக்க தீர்மானமாயிருக்கலாம். அது நமக்கு நஷ்டத்தைக் குறிக்காது, மாறாக, இப்பொழுதும் எதிர்காலத்திலும் நமக்கு மகிழ்ச்சியுள்ள பல நற்பலன்களில் விளைவடையும். (w86 6/1)
[பக்கம் 29-ன் படம்]
நம்பிக்கையான மனநிலையைக் கொண்டிருங்கள், உங்களுக்குப் பல நற்பலன்களும் ஆசீர்வாதங்களும் இருக்கும்