மகா வேசியின் வேடம் கலைக்கப்படுகிறது
சாத்தானின் கீழ் இருக்கும் இன்றைய உலக ஒழுங்குமுறை, “இவ்வுலகத்தின் தெய்வம்” இயக்கும் மூன்று அடிப்படைக் கூறுகளைக் கொண்டிருக்கிறது. இவைதான் அரசியல் ஆட்சி, பலமான வர்த்தக ஆதிக்கமும் செல்வாக்கும், மற்றும் மதம். சரித்திரத்தின் ஆயிரமாண்டுத் தொடரின் ஒவ்வொரு ஆட்சி முறையிலும் இந்த மூன்று அம்சங்கள்தான் இடம்பெற்று வந்திருக்கின்றன. இந்தப் பலமான சக்திகளில் எது “வேசிகளுக்குத் தாயால்” அடையாளப்படுத்தப்படுகிறது?—2 கொரிந்தியர் 4:3, 4. கத்தோலிக்கத் தமிழ் மொழிபெயர்ப்பு; வெளிப்படுத்துதல் 12:9; 17:5.
இங்கு நாம் சிந்திக்கும் யோவான் கண்ட தரிசனத்தின்படி, ஆட்சியாளர்கள், “பூமியின் ராஜாக்கள்,” அவளுடைய வேசித்தன மஞ்சத்திற்கு மனமுவந்து சென்றிருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 18:3) (இதற்குரிய சரித்திரப்பூர்வமான ஆதாரங்கள் பின்வரும் பக்கங்களில் அளிக்கப்படும்.) எனவே, மகா பாபிலோன் இந்த உலக ஒழுங்குமுறையின் அரசியலாட்சி என்ற அம்சத்தை அடையாளப்படுத்துவதற்கில்லை.
இன்று மனிதனுடைய விவகாரங்களில் அவ்வளவு முக்கியமான பாகத்தை வகிக்கும் பலமான வர்த்தகத் துறையைப் பற்றியதென்ன? அது நிச்சயமாகவே அநேக தேசங்களில் பலமான செல்வாக்கைக் கொண்டிருக்கிறது, இதனால் யார் ஏழை, யார் பணக்காரர் என்பதைத் தீர்மானிப்பதாயிருக்கிறது. இது மகா பாபிலோனாக இருக்குமா? தேவதூதன் கொடுத்த ஒரு முக்கியமான துப்பு இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கிறது. அவன் ஒரு திடுக்கிடச் செய்யும் சம்பவத்தைக் குறித்து—பாபிலோன் மீண்டும் தீய செயலுக்குத் திரும்பினதைக் குறித்து அறிவித்தான்! அவள் தன்னுடைய ஆதரவாளர்களையும் கள்ளக்காதலர்களையும் இழந்துவிடுகிறாள். அவள் தங்களுக்கு இசையாதவளாயிருப்பதைத் திடீரெனக் காண்கிறார்கள். அவளை ஒழுங்காக சந்தித்து வந்தவர்களில் “பூமியின் ராஜாக்களைத்” தவிர வேறு யாரும் இருந்தனர்? தேவதூதன் கூறுகிறான்: “அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள். பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம் பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் [இழிவான செல்வத்தின் பலத்தால், NW] ஐசுவரியவான்களானார்கள்.” ஆம், அவளுடன் வியாபாரம் செய்து கூட்டு சேர்ந்துகொள்வதன் மூலமும், அவளுடைய “இழிவான செல்வத்”தைப் பெருக்கிக்கொள்வதன் மூலமும் உலகத்தின் வர்த்தகர்கள் நன்மையடைந்திருக்கிறார்கள். எனவே அவள் உலக ரீதியில் பலமான வியாபாரத்தை அடையாளப்படுத்துவதற்கில்லை.—வெளிப்படுத்துதல் 18:3.
எனவே, பொருந்தாதவற்றை நீக்கிவிடுதல் என்ற வழிமுறையின் அடிப்படையில், அரசியல் ஆட்சியும் பலமான வர்த்தகமும் இங்கு பொருத்தமற்றதாகிவிடுகின்றன. அப்படியிருக்க, விடப்பட்டிருப்பது என்ன? “உன் சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம்போனார்களே” என்ற குற்றச்சாட்டும் பொருந்தக்கூடிய அந்தப் பலமான பகுதியாக அது இருக்க வேண்டும். அது பூர்வ பாபிலோனின் நாட்கள் முதல் தேசங்களின் சிந்தனைகளிலும் செயல்களிலும் செல்வாக்குச் செலுத்தியிருந்ததும், ஒரு சமயத்தில் வல்லமை வாய்ந்ததும், ஆனால் இப்பொழுது பலவீனமடைந்தும் வரும் ஒன்றாகும். அவள்தான் “ராஜாக்கள் மேல் ராஜ்யபாரம்பண்”ணினவள்—அதாவது, பொய் மதம்!—வெளிப்படுத்துதல் 17:18; 18:23.
ஆம், உள்ளான மதபக்தியுள்ள ஆட்களில் சிலருக்கு இது அதிர்ச்சியளிக்கக்கூடுமென்றாலும், மகா பாபிலோன், வேசிகளுக்குத் தாய், சாத்தானின் பொய் மத உலகப் பேரரசுக்கு அடையாளமாக இருக்கிறது. சரித்திரத்தினூடே அரசியல் மற்றும் நிதி சம்பந்தப்பட்ட ஆட்சிமுறையுடன் ஏதாவது ஒரு வழியில் ஒத்திணங்கிச் சென்றிருக்கும் மதங்களை அடையாளப்படுத்துகிறாள்.
போர்ப்பிரியவதி பாபிலோன்
தீர்க்கதரிசன முக்கியத்துவமுடைய காட்சியின்படி மகா பாபிலோன் தேசங்களையும், மக்களையும், கோத்திரங்களையும் மந்திர வாசகங்களாலும், புனிதத் தண்ணீர்களாலும், ஜெபங்களாலும், தேசப்பற்றைக் கொழுந்துவிட்டெரியச்செய்யும் சொற்பொழிவுகளாலும் ஆசீர்வதித்து குருதி பாயும் யுத்தங்களிலும், சிலுவைப் போர்களிலும், பழிவாங்கும் கொலைகளிலும் வழிநடத்தியிருக்கிறது.a—வெளிப்படுத்துதல் 18:24.
அவளுடைய குருவர்க்கம், விசேஷமாக அவளுடைய தனிமத குருக்கள் இரண்டு மகா யுத்தங்களிலும் மற்ற பெரிய போர்களிலும் திரளான மக்களை பீரங்கிகளுக்கு உணவாக அழிவுக்கு வழிநடத்தும் காரியத்தில் ஆட்சியாளர்களின் மனமுவந்த கருவிகளாக இருந்துவந்திருக்கின்றனர். கத்தோலிக்கர் கத்தோலிக்கரை கொன்றிருக்கின்றனர், புராட்டஸ்டான்டினர் புராட்டஸ்டான்டினரைக் கடமையுணர்வோடு சுட்டுவீழ்த்தியிருக்கின்றனர். இதனால் கடந்த இரண்டு மகா யுத்தங்களில் மட்டும் 5 முதல் 6 கோடி மக்கள் உயிரிழந்தனர்.
அறிவொளி வீசும் இந்த 20-வது நூற்றாண்டில் மத மரபுரிமை தொடந்து விரோதத்தையும் மரணத்தையுமே விளைவித்துவருகிறது—கிறிஸ்தவமண்டலத்தில் கத்தோலிக்கருக்கும் புராட்டஸ்டான்டினருக்குமிடையே மட்டுமல்ல, ஆனால் கிறிஸ்தவமல்லாத உலகிலும் முகமதிய மதத்துக்கும் யூதமதத்துக்கும், இந்து மதத்துக்கும் முகமதிய மதத்துக்கும், புத்த மதத்துக்கும் இந்து மதத்துக்கும், சீக்கிய மதத்துக்கும் இந்து மதத்துக்கும் என்பதாக மற்ற மதங்களுக்கிடையேயும் இந்நிலை இருந்துவந்திருக்கிறது.
மேலும் மதம் எப்பொழுதுமே “பூமியின் ராஜாக்களின்” மேல் பலமான செல்வாக்கைச் செலுத்த விரும்பியிருக்கிறது, அவர்களுடைய முடிவையும் அவர்களுடைய பதவிக்கு வருகிறவர்களையும் முன்தீர்மானிக்க முயன்றிருக்கிறது. நாம் சுருக்கமாக ஒருசில உதாரணங்களைக் கவனிப்போம். (w89 4⁄1)
[அடிக்குறிப்புகள்]
a “பரிசுத்த” சிலுவைப் போர்கள் (1096–1270), ஐரோப்பாவின் முப்பது ஆண்டு போர் (1618–48), இரண்டு உலக மகா யுத்தங்கள், மற்றும் இந்தியாவின் பிரிவு குறித்து ஏறக்குறைய 2,00,000 இந்துக்களும் முகமதியரும் பயங்கரமாகக் கொல்லப்பட்டது (1948) ஆகியவை மதம் இரத்தம் சிந்திய பழிக்குப் பாத்திரமாயிருக்கிறது என்பதற்கு ஒரு சில உதாரணங்கள்.
[பக்கம் 4-ன் படம்]
அரசியல், பலமான வர்த்தகம், அல்லது மதம்—இவற்றில் எது ‘மகா பாபிலோனால்’ அடையாளப்படுத்தப்படுகிறது?