முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்களாக தேவபக்தியை நாடுங்கள்
“நீயோ, தேவனுடைய மனுஷனே, . . . நீதியையும் தேவபக்தியையும் அடையும்படி நாடு.” —1 தீமோத்தேயு 6:11.
1. உங்கள் வாழ்க்கையில் அதிமுக்கியமான நாள் எது என்ற கேள்விக்கு நீங்கள் எவ்விதமாக பதிலளிப்பீர்கள்? நீங்கள் ஏன் அவ்விதமாக பதிலளிக்கிறீர்கள்?
உங்கள் வாழ்க்கையில் அதிமுக்கியமான நாள் எது? நீங்கள் முழுக்காட்டப்பட்ட யெகோவாவின் சாட்சியாக இருந்தால், ‘ஏன், நான் முழுக்காட்டுதல் பெற்ற அந்த நாள்தானே!’ என்பதாக பதிலளிப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. நிச்சயமாகவே, முழுக்காட்டுதல் உங்கள் வாழ்க்கையில் அதிமுக்கியமான படியாக இருக்கிறது. இது நீங்கள் யெகோவாவுக்கு அவருடைய சித்தத்தைச் செய்வதற்காக முழுமையானதும் நிபந்தனையற்றதுமான ஓர் ஒப்புக்கொடுத்தலைச் செய்திருக்கிறீர்கள் என்பதற்கு வெளிப்படையான அடையாளமாக இருக்கிறது. உங்கள் முழுக்காட்டுதல் மகா உன்னதக் கடவுளாகிய யெகோவாவின் ஊழியனாக நீங்கள் நியமனம் பெறும் தேதியைக் குறிக்கிறது.
2. (எ) முழுக்காட்டுதல் உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் கடைசி படி அல்ல என்பதை எவ்விதமாக விளக்கலாம்? (பி) முழுக்காட்டுதல் பெறுவதற்கு முன்பாக என்ன முக்கியமான ஆயத்தப்படிகளை நீங்கள் எடுத்தீர்கள்?
2 என்றபோதிலும் முழுக்காட்டுதல் உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் கடைசி படியாக இருக்கிறதா? நிச்சயமாக இல்லை! இதை விளக்க: அநேக தேசங்களில் ஒரு விவாக சடங்கு, திட்டமிடுதலும் தயாரிப்புமான (பொதுவாக விவாக நோக்குடன் பழகுதலான) காலப்பகுதியின் முடிவைக் குறிப்பிடுகிறது. அதே சமயத்தில், விவாகம் செய்யப்பட்ட தம்பதியாக சேர்ந்து வாழும் வாழ்க்கையின் ஓர் ஆரம்பத்தை அது குறிக்கிறது. அதேவிதமாகவே உங்கள் முழுக்காட்டுதல், தயாரிப்பு காலப்பகுதியின் உச்சக்கட்டமாக இருக்கிறது. அந்தக் காலப்பகுதியின்போது நீங்கள் முக்கியமான பல ஆயத்தப் படிகளை எடுத்தீர்கள். கடவுளையும் கிறிஸ்துவையும் பற்றிய அறிவை பெற்றுக்கொண்டீர்கள். (யோவான் 17:3) மெய்யான கடவுளாக யெகோவாவிலும், உங்கள் இரட்சகராக கிறிஸ்துவிலும் கடவுளுடைய வார்த்தையாக பைபிளிலும் நீங்கள் விசுவாசத்தை அப்பியாசிக்க ஆரம்பித்தீர்கள். (அப்போஸ்தலர் 4:12; 1 தெசலோனிக்கேயர் 2:13; எபிரெயர் 11:6) உங்கள் முந்தைய நடத்தைப் போக்கிலிருந்து மனந்திரும்பி நீதியான போக்குக்கு மாறுவதன் மூலம் உங்கள் விசுவாசத்தைச் செயலில் காண்பித்தீர்கள். (அப்போஸ்தலர் 3:19) பின்னர் நீங்கள் யெகோவாவுக்கு அவருடைய சித்தத்தைச் செய்வதற்காக உங்களை ஒப்புக்கொடுக்க தீர்மானம் செய்தீர்கள். (மத்தேயு 16:24) கடைசியாக, நீங்கள் முழுக்காட்டப்பட்டீர்கள்.—மத்தேயு 28:19, 20.
3. (எ) நம்முடைய முழுக்காட்டுதல் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த சேவையின் வாழ்க்கையின் ஆரம்பத்தைக் குறிப்பதை நாம் எவ்விதமாகக் காண்பிக்கலாம்? (பி) என்ன கேள்விகள் எழும்புகின்றன? பதில்கள் ஏன் நமக்கு ஆழ்ந்த அக்கறைக்குரியவையாக இருக்க வேண்டும்?
3 ஆனால், உங்கள் முழுக்காட்டுதல், கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தப் பரிசுத்த சேவைக்குரிய வாழ்க்கையின் முடிவாக இல்லாமல் ஆரம்பமாகவே இருக்கிறது. ஒரு பைபிள் அறிஞர் குறிப்பிட்டபடியே, கிறிஸ்தவ வாழ்க்கை ‘நீடித்த செயலற்ற நிலை பின்தொடர்ந்துவரும் குறுகிய ஓர் ஆரம்பத் துடிப்பாக’ இருக்கக்கூடாது. அப்படியானால் உங்களுடைய விஷயத்தில் முழுக்காட்டுதல் வெறுமென ‘குறுகிய ஓர் ஆரம்பத் துடிப்பை’ பிரதிநிதித்துவம் செய்வதில்லை என்பதை நீங்கள் எவ்விதமாகக் காண்பிக்கலாம்? வாழ்நாள் முழுவதும் தேவபக்தியுள்ள ஒரு வாழ்க்கைப் போக்கைப் பின்தொடருவதன் மூலம் காண்பிக்கலாம். இந்தத் தேவபக்தி என்பது என்ன? அதை நாடுவது ஏன் அவசியமாயிருக்கிறது? அதை உங்கள் வாழ்க்கையில் அதிக முழுமையாக எவ்விதமாக நீங்கள் வளர்க்கலாம்? பதில்கள் நமக்கு ஆழ்ந்த அக்கறைக்குரியவையாக இருக்க வேண்டும், ஏனென்றால், வரப்போகும் யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாளை நாம் தப்பிப்பிழைக்க வேண்டுமானால், “தேவபக்திக்குரிய கிரியை”களினால் அடையாளப்படுத்தப்பட்ட ஆட்களாக நாம் இருக்க வேண்டும்.—2 பேதுரு 3:11, 12.
தேவபக்தியின் பொருள்
4. பவுல் தீமோத்தேயுவை என்ன செய்யும்படியாக ஆலோசனைக் கூறினான்? இந்தச் சமயத்தில் தீமோத்தேயுவைப் பற்றியதில் எது உண்மையாக இருந்தது?
4 பொ.ச. 61 மற்றும் 64-க்கிடைப்பட்ட காலத்தில், அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்தவ சீஷனாகிய தீமோத்தேயுவுக்கு ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட தன்னுடைய முதல் கடிதத்தை எழுதினான். பண ஆசை உண்டுபண்ணக்கூடிய ஆபத்துகளை விவரித்தப்பின்பு, பவுல் எழுதியதாவது: “நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, . . . தேவபக்தியை அடையும்படி நாடு.” (1 தீமோத்தேயு 6:9–11) இந்தச் சமயத்தில் தீமோத்தேயு ஒருவேளை 30 வயதுகளின் ஆரம்பத்திலிருந்தது அக்கறையூட்டுவதாக இருக்கிறது. ஏற்கெனவே அவன் பவுல் அப்போஸ்தலனோடு பல இடங்களுக்குப் பிரயாணம் செய்தவனாகவும் சபைகளில் கண்காணிகளையும் உதவி ஊழியர்களையும் நியமனம் செய்யும் அதிகாரமளிக்கப்பட்டவனுமாயிருந்தான். (அப்போஸ்தலர் 16:3; 1 தீமோத்தேயு 5:22) என்றபோதிலும் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட இந்த முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவ மனிதனுக்கு தேவபக்தியை நாடும்படியாக பவுல் ஆலோசனை கூறுகிறான்.
5. “தேவபக்தி” என்ற சொற்றொடரின் பொருள் என்ன?
5 “தேவபக்தி” என்ற சொற்றொடரினால் பவுல் அர்த்தப்படுத்தியது என்ன? மூல கிரேக்க வார்த்தையாகிய யூசிபியா (eu·seʹbei·a) சொல்லர்த்தமாக “முழு அளவில் பக்தி” என்பதாக மொழிபெயர்க்கப்படலாம். அதன் பொருளைப் பற்றி நாம் வாசிப்பதாவது: “யூசிபியா சம காலத்திய கல்வெட்டு பொறிப்புகளில் அபூர்வமாகவே தனிப்பட்ட மத சம்பந்தமான பக்தியைக் குறிப்பிடும் கருத்தில் காணப்படுகிறது. . . . ஆனால் ரோமரின் காலத்திலிருந்த பிரபல கிரேக்குவில் அதன் அதிகப் பொதுவானப் பொருள் ‘உண்மைத் தவறாமை’ ஆகும். . . . கிறிஸ்தவர்களுக்கு யூசிபியா கடவுளுக்குக் காட்டும் மிக உயர்ந்த வகையான பக்தியைக் குறிக்கிறது. (நிகல் டர்னர் எழுதிய கிறிஸ்தவ வார்த்தைகள் [Christian Words]) ஆகவே வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளபடி, “தேவபக்தி” யெகோவா தேவனுக்குத் தனிப்பட்ட உண்மைத்தவறாமையோடுகூடிய பயபக்தியை அல்லது பக்தியைக் குறிப்பிடுகிறது.
6. ஒரு கிறிஸ்தவன் எவ்விதமாகத் தன்னுடைய தேவபக்திக்கு அத்தாட்சியை அளிக்கிறான்?
6 ஆனால் இந்தத் தேவபக்தி வெறுமென வணக்கத்துக்குரிய ஓர் உணர்ச்சி அல்ல. “கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது” போலவே, தேவபக்தியும்கூட ஒருவருடைய வாழ்க்கையில் வெளிக்காட்டப்பட வேண்டும். (யாக்கோபு 2:26) புதிய ஏற்பாடு வார்த்தைகளில் (New Testament Words) வில்லியம் பார்க்ளே இவ்விதமாக எழுதுகிறார்: “[யூசிபியாவும் அது சம்பந்தப்பட்ட வார்த்தைகளும்] அந்தப் பயமும் பக்தியுமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது மாத்திரமல்லாமல், அவை அந்தப் பயத்தோடு பொருந்தியிருக்கும் வணக்கத்தையும் அந்தப் பக்தியோடு பொருந்தியிருக்கும் சுறுசுறுப்பான கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கையையும்கூட குறித்துக் காட்டுகின்றன.” யூசிபியா மேலுமாக “வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் கடவுளைப் பற்றிய மிக நடைமுறையான உணர்வு” என்பதாக விவரிக்கப்படுகிறது. (மைக்கல் க்ரீன் எழுதிய பேதுருவின் இரண்டாவது கடிதமும் யூதாவின் கடிதமும் [The Second Epistle General of Peter and the General Epistle of Jude]) அப்படியென்றால் கிறிஸ்தவன் தன்னுடைய வாழ்க்கையை நடத்தும் விதத்தின் மூலம் யெகோவாவிடமாக தனக்கிருக்கும் தனிப்பட்ட பற்றுதலுக்கு அத்தாட்சியை அளித்திட வேண்டும்.—1 தீமோத்தேயு 2:2; 2 பேதுரு 3:11.
சுறுசுறுப்பான முயற்சி தேவை
7. தீமோத்தேயு முழுக்காட்டப்பட்டவனாயிருந்த போதிலும் தேவபக்தியை “நாடும்”படியாக அவனை துரிதப்படுத்திய போது, பவுல் எதை அர்த்தப்படுத்தினான்?
7 ஆனால் தேவபக்தியை வளர்ப்பதிலும் வெளிகாட்டுவதிலும் உட்பட்டிருப்பது என்ன? அது வெறுமென முழுக்காட்டுதல் பெற்றுக்கொள்ளும் ஒரு காரியமாக இருக்கிறதா? முழுக்காட்டப்பட்டவனாயிருந்த போதிலும், தீமோத்தேயு அதை “அடையும்படி நாடு” [சொல்லர்த்தமாக ‘நாடிக்கொண்டிரு’]a என்று துரிதப்படுத்தப்பட்டான். (1 தீமோத்தேயு 6:11, கிங்டம் இன்டர்லீனியர் [Kingdom Interlinear]) சீஷனாகிய தீமோத்தேயுவுக்குத் தேவபக்தி குறைவுபடுவதாக பவுல் சொல்லிக்கொண்டில்லை என்பது தெளிவாக இருக்கிறது. மாறாக, அதை உள்ளார்வத்தோடும் வைராக்கியத்தோடும் தொடர்ந்து நாடிக்கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தை அவன் மனதில் பதிய வைத்துக்கொண்டிருந்தான். (பிலிப்பியர் 3:14 ஒப்பிடவும்.) தெளிவாகவே இது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்க வேண்டிய ஒரு முயற்சியாகும். தீமோத்தேயு மற்ற எல்லா முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்களையும் போலவே, தேவபக்தியை விளங்கப்பண்ணுவதில் தொடர்ந்து முன்னேறலாம்.
8. ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்கள் தேவபக்தியை நாடுவதற்கு சுறுசுறுப்பான முயற்சி தேவை என்பதை பேதுரு எவ்விதமாக காண்பித்தான்?
8 தேவபக்தியை நாடுவதற்கு, ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவனுக்கு சுறுசுறுப்பான முயற்சி தேவையாக இருக்கிறது. ‘தெய்வீக சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்’ எதிர்பார்ப்பைக் கொண்டிருந்த முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில் அப்போஸ்தலனாகிய பேதுரு சொன்னதாவது: “இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும் தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும் இச்சையடக்கத்தோடே பொறுமையையும் பொறுமையோடே தேவபக்தியையும் கூட்டி வழங்குங்கள்.” (2 பேதுரு 1:4–6) தெளிவாகவே முழுக்காட்டுதலுக்கு நம்மைநாமே அளிப்பதற்கு ஓரளவு விசுவாசம் தேவையாக இருக்கிறது. என்றபோதிலும் முழுக்காட்டுதலைத் தொடர்ந்து வெறுமென அடையாள கிறிஸ்தவத்தில் நம்மைநாமே திருப்திப்படுத்திக் கொண்டு கடந்த கால முயற்சியில் தொடர்ந்து சென்றுக்கொண்டிருக்க முடியாது. மாறாக, கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் முன்னேற்றம் செய்யும்போது, தேவபக்தி உட்பட, நம்முடைய விசுவாசத்துக்கு கூட்டி வழங்கப்படக்கூடிய மற்ற சிறந்த குணாதிசயங்களை வளர்த்துக்கொண்டிருக்க வேண்டும். இது நம்முடைய பங்கில் ஊக்கமான முயற்சியைத் தேவைப்படுத்துகிறது என்பதாக பேதுரு சொல்லுகிறான்.
9. (எ) “கூட்டி வழங்கு” என்பதற்குரிய கிரேக்க வார்த்தை எவ்விதமாக தேவபக்தியை வளர்த்துக்கொள்ளத் தேவைப்படும் முயற்சியின் அளவைத் தெளிவாக்குகிறது? (பி) என்ன செய்யும்படியாக பேதுரு நம்மைத் துரிதப்படுத்துகிறான்?
9 “கூட்டி வழங்குவதற்கு” பேதுரு பயன்படுத்தும் கிரேக்க வார்த்தையாகிய எபிகோரிகியோ [e·pi·kho·re·geʹo]-வுக்கு அக்கறையூட்டும் பின்னணி இருக்கிறது. தேவைப்படும் முயற்சியின் அளவை இது தெளிவாக்குகிறது. இது “பாடகர் குழு தலைவன்” என்ற நேர்பொருள் கொண்ட (‘கோரிகாஸ்’ [kho·re·gosʹ]) என்ற பெயர்சொல்லிலிருந்து வருகிறது. இது ஒரு நாடகத்தை மேடையில் நடித்துக்காட்டுவதற்காக பாடகர் குழு ஒன்றை பயிற்றுவித்து அதைப் பராமரிப்பதற்காகும் செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்ளும் ஒருவரை குறிப்பிடுகிறது. இப்படிப்பட்ட மனிதர்கள் தங்கள் நகரத்தை நேசித்ததன் காரணமாக இந்தப் பொறுப்பை மனமுவந்து ஏற்றுக்கொண்டு இதற்காகும் செலவுகளுக்கு தங்கள் சொந்தப் பணத்தைச் செலவு செய்தார்கள். மிக நேர்த்தியான நிகழ்ச்சிக்குத் தேவைப்பட்ட அனைத்தையும் ஏற்பாடு செய்வதற்காக தாராளமாகச் செலவு செய்வது இவர்களுக்குப் பெருமிதமாக இருந்தது. இந்த வார்த்தை “நிறைவாக வழங்க, ஏற்படுத்திக் கொடுக்க” என்று பொருள்பட வளர்ந்தது. (2 பேதுரு 1:11-ஐ ஒப்பிடவும்.) ஆகவே பேதுரு வெறுமென ஓரளவான தேவபக்தியை அல்ல, ஆனால் விலையேறப்பெற்ற இந்தக் குணாதிசயத்தின் சாத்தியமான முழு அளவு உயிர்ப்பண்பை நமக்கு வழங்கிக் கொள்ளும்படியாக துரிதப்படுத்துகிறான்.
10, 11 (எ) தேவபக்தியை வளர்ப்பதற்கும் விளங்கப்பண்ணுவதற்கும் ஏன் முயற்சி தேவையாக இருக்கிறது? (பி) போராட்டத்தில் நாம் எவ்விதமாக வெற்றி பெறலாம்?
10 ஆனால் தேவபக்தியை வளர்ப்பதற்கும் விளங்கப்பண்ணுவதற்கும் ஏன் இப்படிப்பட்ட முயற்சி தேவையாக இருக்கிறது? ஒரு காரியம் என்னவெனில், வீழ்ந்துபோன மாம்சத்துக்கு எதிராக போராட்டம் இருந்துகொண்டிருக்கிறது. “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லாததாயி”ருப்பதன் காரணமாக, கடவுளுக்குச் சுறுசுறுப்பான கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கையைத் தொடருவது எளிதல்ல. (ஆதியாகமம் 8:21; ரோமர் 7:21–23) “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” என்பதாக அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறான். (2 தீமோத்தேயு 3:12) ஆம், கடவுளுக்குப் பிரியமாயிருக்கும் வகையில் வாழ முயற்சி செய்யும் கிறிஸ்தவன் உலகத்திலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும். அவனுக்கு வித்தியாசமான தராதரங்களின் தொகுதியும் வித்தியாசமான குறிக்கோள்களும் இருக்கின்றன. இயேசு எச்சரித்தவிதமாகவே, இது பொல்லாத உலகின் பகையைத் தூண்டிவிடுகிறது.—யோவான் 15:19; 1 பேதுரு 4:4.
11 என்றபோதிலும் போராட்டத்தில் நாம் வெற்றி பெறமுடியும், ஏனென்றால் “யெகோவா தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்க அறிந்திருக்கிறார்.” (2 பேதுரு 2:9, NW) ஆனால் நாம் தொடர்ந்து தேவபக்தியை நாடுவதன் மூலம் நம்முடைய பங்கைச் செய்ய வேண்டும்.
தேவபக்தியை வளர்த்தல்
12. தேவபக்தியை முழு அளவில் விருத்தி செய்வதற்கு தேவைப்படுவது என்ன என்பதைப் பேதுரு எவ்விதமாக சுட்டிக்காண்பிக்கிறான்?
12 அப்படியென்றால் நீங்கள் எவ்விதமாக இந்தத் தேவபக்தியை முழு அளவில் வளர்க்கலாம்? பேதுரு அப்போஸ்தலன் ஓர் உதவிக் குறிப்பைத் தருகிறான். 2 பேதுரு 1:5, 6-ல் நம்முடைய விசுவாசத்துக்குக் கூட்டி வழங்கப்பட வேண்டிய குணாதிசயங்களை வரிசையாகக் குறிப்பிடுகையில், தேவபக்திக்கு முன்பாக அறிவை குறிப்பிடுகிறான். இதற்கு முன்னால் இதே அதிகாரத்தில் அவன் எழுதியதாவது: “தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும் அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினது.” (2 பேதுரு 1:3) இவ்விதமாக பேதுரு தேவபக்தியை யெகோவாவைப் பற்றிய திருத்தமான அறிவோடு சம்பந்தப்படுத்துகிறான்.
13. தேவபக்தியை வளர்ப்பதில் ஏன் திருத்தமான அறிவு இன்றியமையாததாக இருக்கிறது?
13 உண்மையில் திருத்தமான அறிவில்லாமல் தேவபக்தியை வளர்ப்பது கூடாத காரியமாகும். ஏன்? சரி, தேவபக்தி என்பது தனிப்பட்ட விதமாக யெகோவாவிடமாகவும் அது நாம் நம்முடைய வாழ்க்கையை நடத்தும் விதத்தினால் சான்றளிக்கப்படுகிறது என்பதையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இதன்காரணமாகவே, யெகோவா தேவனைப் பற்றிய திருத்தமான அறிவு இன்றியமையாததாகும், ஏனென்றால் அது அவருடைய குணாதிசயங்களோடும் அவருடைய வழிகளோடும் முழுமையாக அறிமுகமாகி, அவரைத் தனிப்பட்டவராக மிக நெருக்கமாக அறிந்துகொள்வதை உட்படுத்துகிறது. அதைப் பார்க்கிலும் அதிகமாக, அவருடைய மாதிரியைப் பின்பற்றக் கடினமாய் உழைப்பதை உட்படுத்துகிறது. (எபேசியர் 5:1) யெகோவாவைப் பற்றி கற்றறிவதிலும் அவருடைய வழிகளையும் அவருடைய குணாதிசயங்களையும் நம்முடைய வாழ்க்கையில் பிரதிபலிப்பதிலும் நாம் எவ்வளவு அதிகமாக முன்னேறுகிறோமோ அவ்வளவு அதிகமாக அவரை அறியவருகிறோம். (2 கொரிந்தியர் 3:18; 1 யோவான் 2:3-6-ஐ ஒப்பிடவும்.) இது, யெகோவாவின் அருமையான குணங்களுக்கு ஆழ்ந்தப் போற்றுதலில், தேவபக்தியின் முழு அளவில் விளைவடைகிறது.
14. திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்ள நம்முடைய தனிப்பட்ட படிப்பு திட்டத்தில் எது சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்? ஏன்?
14 நீங்கள் எவ்விதமாக திருத்தமான அறிவைப் பெற்றுக் கொள்ளுகிறீர்கள்? குறுக்குவழிகள் கிடையாது. திருத்தமான அறிவைப் பெற்றுக் கொள்ள நாம் கடவுளுடைய வார்த்தையையும் பைபிள் ஆதாரமுள்ள பிரசுரங்களையும் ஊக்கமாகப் படிக்க வேண்டும். இப்படிப்பட்ட தனிப்பட்டப் படிப்பில், தேவராஜ்ய ஊழியப்பள்ளியின் சம்பந்தமாக அட்டவணையில் குறிக்கப்பட்டிருப்பது போல ஒழுங்கான பைபிள் வாசிப்பு திட்டம் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். (சங்கீதம் 1:2) பைபிள் யெகோவாவிடமிருந்து வந்த பரிசாக இருப்பதன் காரணமாக, தனிப்பட்ட பைபிள் படிப்பின் மூலமாக நாம் என்ன செய்கிறோம் என்பது நாம் அந்தப் பரிசை எவ்வளவு போற்றுகிறோம் என்பதைக் காண்பிப்பதாக இருக்கிறது. உங்கள் தனிப்பட்ட படிப்பு பழக்கங்கள் யெகோவாவின் ஆவிக்குரிய ஏற்பாடுகளுக்கு உங்களுடைய போற்றுதலின் ஆழத்தைப் பற்றி என்ன வெளிப்படுத்துகின்றன?—சங்கீதம் 119:97.
15, 16. (எ) தனிப்பட்ட பைபிள் படிப்புக்கு ஆவிக்குரிய பசியார்வத்தை வளர்த்துக் கொள்ள நமக்கு எது உதவக்கூடும்? (பி) தனிப்பட்ட படிப்பு நாம் தேவபக்தியை வளர்த்துக்கொள்வதில் விளைவடைய வேண்டுமானால் கடவுளுடைய வார்த்தையின் ஒரு பகுதியை வாசிக்கையில் என்ன செய்யப்படவேண்டும்?
15 வாசிப்பதும் படிப்பதும் சிலருக்கு எளிதாக இருப்பதில்லை என்பது ஒப்புக்கொள்ளப்படத்தக்கதே. ஆனால் நேரம் மற்றும் முயற்சியின் மூலமாக, தனிப்பட்ட பைபிள் படிப்புக்கு ஆவிக்குரிய ஒரு பசியார்வத்தை நீங்கள் வளர்த்துக்கொள்ள முடியும். (1 பேதுரு 2:2) யெகோவா உங்களுக்காகச் செய்திருக்கும், செய்துகொண்டிருக்கும் மற்றும் செய்யப்போகும் அனைத்துக் காரியங்களையும் போற்றுதலோடு நீங்கள் சிந்தித்துப்பார்க்கையில், உங்கள் இருதயம் அவரைப் பற்றி கற்றறிய முடிகிற அனைத்தையும் கற்றறிய உங்களைத் தூண்டும்.—சங்கீதம் 25:4.
16 ஆனால் இப்படிப்பட்ட தனிப்பட்ட படிப்பு நீங்கள் தேவபக்தியை வளர்த்துக் கொள்வதில் விளைவடைய வேண்டுமானால், உங்களுடைய நோக்கம் வெறுமென பக்கங்களை முடிப்பதாக அல்லது உங்கள் மனதைத் தகவலால் நிரப்பிக் கொள்வதாக இருக்கமுடியாது. மாறாக, கடவுளுடைய வார்த்தையின் ஒரு பகுதியை நீங்கள் வாசிக்கையில், பின்வருவதுபோன்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டு பொருளின் பேரில் சிந்தனை செய்ய நீங்கள் நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்: ‘யெகோவாவின் கனிவான குணாதிசயங்களையும் வழிகளையும் பற்றி இது எனக்கு என்ன கற்பிக்கிறது? இந்த அம்சங்களில் நான் எவ்விதமாக அதிகமாக யெகோவாவைப் போன்றிருக்க முடியும்?’
17. ஓசியா புத்தகத்திலிருந்து யெகோவாவின் இரக்கத்தைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (பி) யெகோவாவின் இரக்கத்தைப் பற்றி சிந்திப்பது நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்?
17 ஓர் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சில காலத்துக்கு முன்பு தேவராஜ்ய ஊழியப்பள்ளியில் நம்முடைய பைபிள் வாசிப்புப் பகுதி ஓசியா புத்தகம் முழுவதுமாக இருந்தது. இந்தப் பைபிள் புத்தகம் முழுவதையும் வாசித்தப்பிறகு, நீங்கள் உங்களை இவ்விதமாகக் கேட்டுக்கொள்ளலாம்: ‘ஒரு நபராக யெகோவாவைப் பற்றி—அவருடைய குணாதிசயங்களையும் வழிகளையும் பற்றி—இந்தப் புத்தகத்திலிருந்து நான் என்ன கற்றுக்கொள்கிறேன்?’ நாம் ஓசியா புத்தகத்திலிருந்து யெகோவாவின் உருக்கமான இரக்கத்தைப் பற்றி அதிகத்தைக் கற்றுக்கொள்ளுகிறோம் என்பதைப் பின்னால் வந்த பைபிள் எழுத்தாளர்களால் இது பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம் காண்பிக்கிறது. (மத்தேயு 9:13,-ஐ ஓசியா 6:6-உடனும் ரோமர் 9:22–26-ஐ ஓசியா 1:10 மற்றும் 2:21–23-உடனும் ஒப்பிடவும்.) இஸ்ரவேலுக்கு இரக்கத்தைக் காண்பிக்க யெகோவா மனமுள்ளவராக இருந்தது, ஓசியா அவனுடைய மனைவியாகிய கோமேரிடம் கொண்டிருந்த செயல் தொடர்புகளால் தெளிவுபடுத்தப்பட்டது. (ஓசியா 1:2; 3:1–5) இரத்தஞ்சிந்துதலும் கொள்ளையிடுவதும் விபசாரமும் விக்கிரகாராதனையும் இஸ்ரவேலில் மிகுந்து காணப்பட்ட போதிலும் யெகோவா ‘இஸ்ரவேலரோடு பட்சமாய்ப் பேசினார்.’ (ஓசியா 2:13, 14; 4:2) இப்பேர்ப்பட்ட ஓர் இரக்கத்தைக் காண்பிக்க யெகோவா கடமைப்பட்டில்லை. ஆனால் இஸ்ரவேலர் இருதயப்பூர்வமான மனந்திரும்புதலை விளங்கப் பண்ணி பாவமுள்ள தங்களுடைய போக்கிலிருந்து திரும்பும் பட்சத்தில் அவர் தம்முடைய “சொந்த சித்தத்தின்படி” அப்படிச் செய்வார். (ஓசியா 14:4; ஓசியா 3:3-ஐ ஒப்பிடவும்.) யெகோவாவின் அசாதாரணமான இரக்கத்தின் பேரில் நீங்கள் இவ்விதமாக சிந்தனை செய்யும்போது, அது உங்கள் இருதயத்தைத் தூண்டி அவரிடமாக உங்களுடைய சொந்தப் பற்றுதலைப் பலப்படுத்துவதாக இருக்கும்.
18. ஓசியாவில் வலியுறுத்தப்பட்டுள்ளபடி யெகோவாவின் இரக்கத்தைக் குறித்து சிந்தித்தப் பின்பு உங்களை நீங்களே என்ன கேட்டுக் கொள்ளலாம்?
18 ஆனால் அதிகம் தேவைப்படுவதாக இருக்கும். “இரக்கமுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” என்பதாக இயேசு சொன்னார். (மத்தேயு 5:7, NW) ஆகவே ஓசியா புத்தகத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளபடி யெகோவாவின் இரக்கத்தைக் குறித்து சிந்தித்தப் பின்பு, உங்களைப் பின்வருமாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘மற்றவர்களோடு கொள்ளும் என்னுடைய செயல்தொடர்புகளில் நான் எவ்விதமாக யெகோவாவின் இரக்கத்தை மேம்பட்ட வகையில் பின்பற்றலாம்? எனக்கு விரோதமாக பாவஞ் செய்துவிட்ட அல்லது என்னைக் கோபப்படுத்திவிட்ட ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ மன்னிப்புக் கேட்கையில் நான், “மனமகிழ்ச்சியோடு” மன்னிக்கிறேனா?’ (ரோமர் 12:8; எபேசியர் 4:32) சபையில் நியமிக்கப்பட்ட ஒரு மூப்பராக நீங்கள் சேவிப்பீர்களென்றால், உங்களை நீங்களே இவ்விதமாகக் கேட்டுக்கொள்ளலாம்: ‘நீதிவிசாரணைச் சம்பந்தப்பட்ட காரியங்களைக் கையாளுகையில், குறிப்பாக தவறு செய்தவர், இருதயப்பூர்வமான மனந்திரும்புதலுக்கு உண்மையான அத்தாட்சியைக் கொடுக்கையில் “மன்னிக்கத் தயாராக இருக்கும்” யெகோவாவை நான் எவ்விதமாக நல்ல விதத்தில் பின்பற்றலாம்?’ (சங்கீதம் 86:5; நீதிமொழிகள் 28:13) ‘இரக்கம் காண்பிப்பதற்கு அடிப்படையாக நான் எதைப் பார்க்க வேண்டும்?’—ஓசியா 5:4 மற்றும் 7:14-ஐ ஒப்பிடவும்.
19, 20. (எ) முழுமையான முறையில் பைபிள் படிப்பு செய்யப்படுகையில் விளைவு என்னவாக இருக்கிறது? (பி) தேவபக்தியை வளர்த்துக்கொள்வதில் கூடுதலான என்ன உதவி இருக்கிறது? அடுத்தக் கட்டுரை எதைச் சிந்திக்க இருக்கிறது?
19 உங்கள் தனிப்பட்ட பைபிள் படிப்பு இப்படி முழுமையான முறையில் செய்யப்படும் போது எத்தனை பலனளிப்பதாக இருக்கிறது! உங்கள் இருதயம் யெகோவாவின் விலையேறப்பெற்ற குணாதிசயங்களுக்காக போற்றுதலால் பொங்கி எழும். உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து இந்தக் குணாதிசயங்களை பின்பற்றுவதற்கு நீங்கள் முயற்சி செய்து வருவதன் மூலம் நீங்கள் யெகோவாவிடமுள்ள உங்கள் தனிப்பட்ட பற்றுதலை பலப்படுத்திக் கொள்வீர்கள். இதன் மூலமாக நீங்கள் யெகோவாவின் ஒப்புக்கொடுத்த முழுக்காட்டப்பட்ட ஊழியனாக தேவபக்தியை நாடிக்கொண்டிருப்பீர்கள்.—1 தீமோத்தேயு 6:11.
20 விலைமதிப்புள்ள இந்தக் குணாதிசயத்தை வளர்த்துக் கொள்வதில் கூடுதலான ஓர் உதவியை இயேசு கிறிஸ்துவில்—தேவபக்தியின் பரிபூரண முன்மாதிரியில்—காணமுடியும். இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுவது எவ்விதமாக தேவபக்தியை வளர்ப்பதிலும் விளங்கப்பண்ணுவதிலும் உங்களுக்கு உதவக்கூடும்? இதையும் இது சம்பந்தப்பட்ட மற்ற கேள்விகளையும் பின்வரும் கட்டுரை சிந்திக்க இருக்கிறது. (w90 3/1)
[அடிக்குறிப்புகள்]
a டயக்கோ [di·oʹko] (“நாடு”) என்ற கிரேக்க வார்த்தையைக் குறித்து இலக்கிய எழுத்துக்களில், இந்த வார்த்தை “சொல்லர்த்தமாக, துரத்திச் செல்வதை, பின்தொடர்ந்து செல்வதை, நாடிச் செல்வதை அர்த்தப்படுத்துகிறது . . . என்றும் அடையாள அர்த்தத்தில் எதையோ ஒன்றை வைராக்கியத்தோடு நாடுவதை, எதையோ அடைய முயற்சிசெய்வதை அர்த்தப்படுத்துகிறது” என்றும் புதிய ஏற்பாடு இறையியலின் புதிய சர்வதேச அகராதி [The New International Dictionary of New Testament Theology] விளக்குகிறது.
நீங்கள் எவ்விதமாக பதிலளிப்பீர்கள்?
◻ முழுக்காட்டுதல் ஏன் உங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் கடைசி படி அல்ல?
◻ “தேவபக்தி” என்பதன் பொருள் என்ன? அதற்கு அத்தாட்சியை நீங்கள் எவ்விதமாக அளிக்கிறீர்கள்?
◻ தேவபக்தியை வளர்த்துக்கொள்வதற்கு ஏன் சுறுசுறுப்பான முயற்சி தேவையாக இருக்கிறது?
◻ முழு அளவில் நீங்கள் எவ்விதமாக தேவபக்தியை வளர்த்துக் கொள்ளலாம்?