யெகோவாவுக்கு நாம் எவ்விதமாக திரும்பச் செலுத்த முடியும்?
யெகோவா தேவன் கொடுப்பதில் மிகச் சிறந்த முன்மாதிரியை வைக்கிறார். அவர் மனிதகுலம் முழுவதற்கும் “ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும்” அருளிச் செய்திருக்கிறார். (அப்போஸ்தலர் 17:25) கடவுள் பொல்லாதவர்கள் மீதும் நீதிமான்கள் மீதும் தம்முடைய சூரியனை உதிக்கப்பண்ணுகிறார். (மத்தேயு 5:45) ஆம், ‘யெகோவா நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்புகிறார்.’ (அப்போஸ்தலர் 14:15–17) ஏன், “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது.”—யாக்கோபு 1:17.
கடவுளுடைய எல்லா பொருள் சம்பந்தமான ஈவுகளையும் தவிர அவர் ஆவிக்குரிய வெளிச்சத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துகிறார். (சங்கீதம் 43:3) யெகோவாவின் உண்மை பிரமாணிக்கமுள்ள ஊழியர்கள், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யின் மூலம் சரியான நேரத்தில் அவர் அளித்துவரும் ஆவிக்குரிய உணவினால், வெகுவாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள். (மத்தேயு 24:45–47) நாம் கடவுளுடைய ஆவிக்குரிய ஏற்பாடுகளிலிருந்து நன்மையடைய முடியும், ஏனென்றால் அவர், பாவமுள்ளவர்களும் மரித்துக் கொண்டிருப்பவர்களுமான மனிதர்கள் அவரோடு ஒப்புரவாவதை சாத்தியமாக்கியிருக்கிறார். எவ்வாறு? அநேகருக்காகத் தம் ஜீவனை மீட்கும் பலியாகக் கொடுத்த அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக. (மத்தேயு 20:28; ரோமர் 5:8–12) அன்புள்ள கடவுளாகிய யெகோவாவிடமிருந்து என்னே ஓர் ஈவு!—யோவான் 3:16.
எந்த ஒரு திருப்பிக்கொடுத்தலும் சாத்தியமா?
மீட்கும் பலி அளிக்கப்படுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, கடவுளால் கொடுக்கப்பட்ட இரக்கத்தையும் விடுதலையையும் உதவியையும் அத்தனை ஆழமாக போற்றினதன் காரணமாக ஆவியால் ஏவப்பட்ட சங்கீதக்காரன் இவ்விதமாகச் சொன்னார்: “கர்த்தர், [யெகோவா, NW] எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன். நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன்.”—சங்கீதம் 116:12–14.
நாம் முழு இருதயத்தோடு யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருப்போமானால், நாம் விசுவாசத்தோடு அவர் நாமத்தை நோக்கி கூப்பிட்டு அவரிடம் செய்துகொண்ட பொருத்தனைகளை அவருக்கு செலுத்துகிறோம். யெகோவாவின் சாட்சிகளாக, நாம் அவரைப் பற்றி எல்லா சமயங்களிலும் நல்லவிதமாக பேசி, அவருடைய ராஜ்யத்தின் செய்தியை அறிவிப்பதன் மூலம் நாம் அவரை ஸ்தோத்தரிக்கலாம். (சங்கீதம் 145:1, 2, 10–13; மத்தேயு 24:14) ஆனால் எல்லா காரியங்களையும் உடைமையாகக் கொண்டிருக்கும் யெகோவாவின் செல்வத்தைப் பெருக்கவோ அல்லது அவர் நமக்குச் செய்திருக்கும் எல்லா நன்மைகளுக்கும் திரும்ப செலுத்தவோ முடியாது.—1 நாளாகமம் 29:14–17.
ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்காக நன்கொடைகளை அளிப்பது, யெகோவாவுக்கு திரும்பச் செலுத்துவதற்குரிய அல்லது அவர் செல்வத்தைப் பெருக்குவதற்குரிய வழி இல்லை. என்றபோதிலும் இப்படிக் கொடுப்பது, கடவுளுக்கு நம்முடைய அன்பைக் காண்பிப்பதற்கு சந்தர்ப்பங்களை நமக்கு அளிக்கிறது. சுயநலமான தூண்டுதலினால் அல்லது விளம்பரத்துக்காக அல்லது புகழ்ச்சிக்காக இல்லாமல் தாராளமான ஆவியோடும் மெய் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்காகவும் கொடுக்கப்படும் நன்கொடைகள், கொடுப்பவருக்கு சந்தோஷத்தையும் யெகோவாவின் ஆசீர்வாதத்தையும் கொண்டுவரும். (மத்தேயு 6:1–4; அப்போஸ்தலர் 20:35) மெய் வணக்கத்தை ஆதரிக்கவும் பாத்திரமுள்ளவர்களுக்கு உதவி செய்யவும் தன்னுடைய பொருளாதார உடைமைகளிலிருந்து கொஞ்சத்தை ஒழுங்காக ஒதுக்கி வைப்பதன் மூலம், இப்படிப்பட்ட கொடுத்தலிலும், அதினால் விளையும் மகிழ்ச்சியிலும் பங்குகொள்ள ஒருவர் உறுதியாக இருக்கலாம். (1 கொரிந்தியர் 16:1, 2) இது தசமபாகம் செலுத்துவதன் மூலம் செய்யப்பட வேண்டுமா?
நீங்கள் தசமபாகம் செலுத்த வேண்டுமா?
யெகோவா மல்கியா தீர்க்கதரிசி மூலமாக இவ்விதமாகச் சொன்னார்: “என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள்.” (மல்கியா 3:10) மற்றொரு மொழிபெயர்ப்பு வாசிப்பதாவது: “முழு தசமபாகத்தை பண்டசாலைக்குள் கொண்டு வாருங்கள்.”—ஓர் அமெரிக்க மொழிபெயர்ப்பு.
தசமபாகம் என்பது ஏதோவொன்றினுடைய பத்தில் ஒரு பாகமாகும். அது ஒரு காணிக்கையாக கொடுக்கப்படும் அல்லது செலுத்தப்படும் 10 சதவீதமாக இருக்கிறது. தசமபாகம் விசேஷமாக மத சம்பந்தமான நோக்கங்களுக்காகச் செய்யப்படுகிறது. வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்காக ஒருவரின் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை கொடுப்பதை அது அர்த்தப்படுத்துகிறது.
கோத்திர தலைவனான ஆபிரகாம் (ஆபிராம்) சாலேமின் ராஜ–ஆசாரியராயிருந்த மெல்கிசேதேக்குவுக்கு கெதர்லாலேகாமேருவின் மீதும் அவனுடைய கூட்டணி மீதும் அடைந்த வெற்றியில் கொள்ளையிடப்பட்ட பொருட்களில், தசமபாகம் கொடுத்தார். (ஆதியாகமம் 14:18–20; எபிரெயர் 7:4–10) பின்னால் யாக்கோபு தனக்குள்ளவற்றில் தசமபாகம் செலுத்துவதாக பொருத்தனைப் பண்ணிக்கொண்டான். (ஆதியாகமம் 28:20–22) ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பத்தில் ஒரு பாகம் கொடுப்பது, தாமாக முன்வந்து கொடுத்தலாக இருந்தது, ஏனென்றால் அந்தப் பூர்வ கால யூதர்களுக்கு, தசம பாகம் செலுத்தும்படியாக அவர்களை கட்டுப்படுத்தும் எந்தச் சட்டங்களும் இருக்கவில்லை.
நியாயப்பிரமாணத்தின் கீழ் தசமபாகம்
யெகோவாவின் மக்களாக, இஸ்ரவேலர் தசமபாகம் சட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். ஆண்டுதோறும் ஒரு தசமபாகமே செலுத்தப்பட்டதாக ஒரு சில கல்விமான்கள் எண்ணிய போதிலும் ஆண்டு வருமானத்தில் இரண்டு பத்தில் ஒரு பாகத்தை வழங்குவதை இவை உட்படுத்தின. ஓய்வு வருஷத்தின் போது, வருமானம் எதுவும் எதிர்பார்க்கப்படாத காரணத்தால் எந்த தசமபாகமும் செலுத்தப்படவில்லை. (லேவியராகமம் 25:1–12) கடவுளுக்குச் செலுத்தப்பட்ட முதற்கனியோடுகூட தசமபாகங்கள் கூடுதலாக கொடுக்கப்பட்டன.—யாத்திராகமம் 23:19.
தேசத்தின் நிலத்தின் விளைச்சலிலும், விருட்சங்களின் கனிகளிலும் பத்தில் ஒரு பாகமும், ஆடுமாடுகளின் பெருக்கமும், பரிசுத்த ஸ்தலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தேசத்தில் சுதந்தரத்தைப் பெற்றுக்கொள்ளாத லேவியர்களிடம் கொடுக்கப்பட்டது. இவர்கள் பெற்றுக்கொண்டதில் பத்தில் ஒரு பங்கை ஆரோனிய ஆசாரியத்துவத்தை ஆதரிக்கக் கொடுத்தார்கள். தெளிவாகவே தசமபாகம் செலுத்துவதற்கு முன்பாக தானியம் போரடிக்கப்பட்டு, திராட்சை மற்றும் ஒலிவ விருட்சங்களின் கனிகள் திராட்சரசமாகவும் எண்ணெயாகவும் மாற்றப்பட்டது. விளைச்சலுக்குப் பதிலாக ஒரு இஸ்ரவேலன் பணம் கொடுக்க விரும்பினால், அவன் அதன் மதிப்போடு ஐந்தில் ஒரு பங்கை கூட்டிக்கொடுக்கும் பட்சத்தில் அவன் அவ்விதமாகச் செய்யக்கூடும்.—லேவியராகமம் 27:30–33; எண்ணாகமம் 18:21–30.
மற்றொரு தசமபாகமும்கூட ஒதுக்கிவைக்கப்பட்டதாக தெரிகிறது. பொதுவாக மக்கள் பண்டிகைகளுக்குக் கூடிவருகையில் அது ஒரு குடும்பத்தால் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்தத் தசமபாகத்தை வசதியாக கொண்டு போவதற்கு, எருசலேம் தொலை தூரமாக இருக்குமேயானால் அப்போது என்ன? அப்பொழுது தானியமும், புதிய திராட்சரசமும், எண்ணெயும் விலங்குகளும் எளிதாக எடுத்துச் செல்லப்படும் பொருட்டு அவை பணமாக்கப்பட்டன. (உபாகமம் 12:4–18; 14:22–27) ஏழு–ஆண்டு இளைப்பாறுதலின் சுழற்சியில் ஒவ்வொரு மூன்றாம் மற்றும் ஆறாம் ஆண்டின் முடிவிலும், தசமபாகம் லேவியர்களுக்காகவும் பரதேசிகளுக்காகவும், விதவைகளுக்காகவும் தகப்பனில்லாத பையன்களுக்காகவும் ஒதுக்கி வைக்கப்பட்டது.—உபாகமம் 14:28, 29; 26:12.
நியாயப்பிரமாணத்தின் கீழ், தசமபாகம் செலுத்த தவறுவதற்கு தண்டனை எதுவுமிருக்கவில்லை. மாறாக, தசமபாகங்களை அளிப்பதற்கு பலமான ஒரு தார்மீக கடமையின் கீழ் யெகோவா மக்களை வைத்தார். சில சமயங்களில், அவர்கள் அவருக்கு முழுவதுமாக செலுத்தப்பட்டாயிற்று என்பதை அறிக்கை செய்ய வேண்டும். (உபாகமம் 26:13–15) சட்டத்துக்கு மாறாக நிறுத்திவைத்துக் கொள்ளப்பட்ட எதுவும், கடவுளிடமிருந்து திருடிக் கொள்ளப்பட்டதாக கருதப்பட்டது.—மல்கியா 3:7–9.
தசமபாகம் பாரமான ஓர் ஏற்பாடாக இருக்கவில்லை. உண்மையில், இஸ்ரவேலர் இந்தச் சட்டங்களைக் கைகொண்ட போது, அவர்கள் செல்வச் செழிப்போடு இருந்தார்கள். மெய் வணக்கத்துக்கு எவ்விதமாக பொருள் சம்பந்தமான ஏற்பாடுகளைச் செய்வது என்பதன் பேரில் மட்டுக்கு மீறிய முக்கியத்துவத்தை வைக்காமல் தசமபாகம் மெய் வணக்கத்தை முன்னேற்றுவித்தது. ஆகவே, தசமபாக ஏற்பாடு இஸ்ரவேலில் இருந்த அனைவருடைய நன்மைக்காகவும் இருந்தது. ஆனால் தசமபாகம் செலுத்துவது கிறிஸ்தவர்களுக்குரியதா?
கிறிஸ்தவர்கள் தசமபாகம் செலுத்த வேண்டுமா?
கொஞ்ச காலம், கிறிஸ்தவமண்டலத்தின் எல்லைக்குள், தசமபாகம் செலுத்துவது வழக்கமாக இருந்து வந்தது. தி என்சைக்ளோப்பீடியா அமெரிக்கானா இவ்விதமாகச் சொல்கிறது: “இது . . . படிப்படியாக 6-ம் நூற்றாண்டுக்குள் வழக்கமாகிவிட்டது. 567-ல் டூர்ஸின் குழுவும், 585-ல் மக்கானின் இரண்டாம் குழுவும் தசமபாகம் செலுத்துவதை வெளிப்படையாக பரிந்துரை செய்தது. . . . துர்ப்பிரயோகங்கள் சர்வசாதாரணமாகிவிட்டன. குறிப்பாக தசமபாகம் தண்டல் செய்யும் உரிமை பாமர மக்களுக்கு கொடுக்கப்பட்ட அல்லது விற்கப்பட்ட போது அவ்விதமாக இருந்தது. ஏழாம் போப் கிரிகோரியின் காலம் முதல் ஆரம்பித்து, இந்தப் பழக்கம் சட்ட விரோதமானதாக அறிவிப்பு செய்யப்பட்டது. அநேக பாமர மக்கள் தங்கள் தசமபாக உரிமைகளை துறவி மடங்களுக்கும் கத்தீட்ரல் குருக்களின் தொகுதிகளுக்கும் அளித்துவிட்டனர். சீர்திருத்த இயக்கம் தசமபாகத்தை ஒழிக்கவில்லை, பழக்கம் ரோமன் கத்தோலிக்க சர்ச்சிலும் புராட்டஸ்டன்ட் தேசங்களிலும் தொடர்ந்து இருந்து வந்தது.” தசமபாகம் செலுத்துவது பல்வேறு தேசங்களில் ஒழிக்கப்பட்டது அல்லது படிப்படியாக மாற்றீடு செய்யப்பட்டது. இப்பொழுது வெகு சில மதங்களே இதை கடைபிடிக்கின்றன.
அப்படியென்றால், கிறிஸ்தவர்கள் தசமபாகம் செலுத்துவது அவசியமா? தன்னுடைய பைபிள் சொல்தொகுதி விளக்கப் பட்டியலில் அலெக்ஸாண்டர் க்ரூடன் இவ்விதமாகச் சொன்னார்: “நம்முடைய இரட்சகரோ அல்லது அவருடைய அப்போஸ்தலர்களோ, இந்தத் தசமபாக விஷயத்தில் எதையும் கட்டளையிடவில்லை.” ஆம், கிறிஸ்தவர்கள் தசமபாகம் செலுத்த கட்டளையிடப்படவில்லை. தசமபாக ஏற்பாட்டோடுகூட மோசேயின் நியாயப்பிரமாணத்தை இயேசுவினுடைய வாதனையின் கழுமரத்தில் அறைந்து கடவுள்தாமே அதை முடிவுக்குக் கொண்டு வந்தார். (ரோமர் 6:14; கொலோசெயர் 2:13, 14) ஆகவே சபை செலவுகளுக்குண்டான செலவுகளுக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை கொடுக்க கட்டளையிடப்படுவதற்குப் பதிலாக, கிறிஸ்தவர்கள் மனமுவந்து நன்கொடைகளை அளிக்க வேண்டும்.
உங்கள் விலைமதிப்புள்ள பொருட்களால் யெகோவாவைக் கனம்பண்ணுங்கள்
நிச்சயமாகவே மெய் வணக்கத்தை முன்னேற்றுவிக்க ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய வருமானத்தில் பத்தில் ஒரு பாகத்தைக் கொடுக்க தானாகவே தெரிந்து கொள்வானேயாகில், இப்படிப்பட்ட நன்கொடைகளைச் செய்வதற்கு எந்த வேதப்பூர்வமான ஆட்சேபணையும் இருக்காது. தன்னுடைய நன்கொடையோடு அனுப்பிய கடிதத்தில் பாப்புவா நியு கின்னியிலுள்ள ஒரு 15 வயது பையன் எதினான்: “நான் சிறுவனாக இருந்தபோது என் அப்பா என்னிடம், ‘நீ வேலை செய்ய ஆரம்பிக்கும்போது, முதற்கனியை நீ யெகோவாவுக்குக் கொடுக்க வேண்டும்’ என்பதாகச் சொல்வதுண்டு. யெகோவாவை கனப்படுத்த முதற்கனியை கொடுக்க வேண்டும் என்பதாகச் சொல்லும் நீதிமொழிகள் 3:1, 9-ன் வார்த்தைகள் என் நினைவில் இருக்கிறது. ஆகவே இதைச் செய்ய நான் வாக்களித்தேன், இப்பொழுது என் வாக்கை நான் நிறைவேற்ற வேண்டும். ராஜ்ய வேலைக்கு உதவி செய்ய இந்தப் பணத்தை அனுப்ப நான் சந்தோஷப்படுகிறேன்.” இப்படிப்பட்ட ஒரு வாக்கை செய்யும்படியாக பைபிள் கிறிஸ்தவர்களை அழைப்பதில்லை. என்றபோதிலும், தாராளமாக கொடுப்பது, மெய் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதில் ஆழ்ந்த அக்கறையை காண்பிப்பதற்கு ஒரு மிகச் சிறந்த வழியாக இருக்கிறது.
ஒரு கிறிஸ்தவன் யெகோவா தேவனுடைய வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்கு அளிக்கும் நன்கொடைகளின் பேரில் எந்த ஒரு திட்டவட்டமான வரையறையை வைக்காதிருக்க தெரிந்துகொள்ளக்கூடும். இதை விளக்க: யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு மாநாட்டில், வயதான இரண்டு சகோதரிகள், ராஜ்ய வேலைக்கு அளிக்கப்படக்கூடிய நன்கொடைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். மாநாடு நடக்குமிடத்தில் உணவைப் பெற்றுக்கொள்வதற்காகும் செலவை நன்கொடையாக அளிக்கும் பொருட்டு, அதற்கு எவ்வளவு ஆகும் என்பதாக அவர்களில் 87 வயதுள்ள ஒரு சகோதரி கேட்டார்கள். 90 வயதான மற்றொரு சகோதரி இவ்விதமாகச் சொன்னார்கள்: ‘எவ்வளவு கொடுப்பது தகுதியாக இருக்கும் என்பதாக நீங்கள் நினைக்கிறீர்களோ அதையும்—கொஞ்சம் அதிகமும் கொடுங்கள்.’ இந்த வயதான சகோதரி என்னே ஒரு நேர்த்தியான மனநிலையைக் காண்பித்தார்கள்!
யெகோவாவின் மக்கள் தங்களுக்குரிய அனைத்தையும் அவருக்கு ஒப்புகொடுத்துவிட்டிருப்பதால், அவர்கள் மெய் வணக்கத்தை ஆதரிப்பதற்கு பணம் சம்பந்தமாக நன்கொடைகளையும் மற்ற உதவிகளையும் சந்தோஷமாகச் செய்கிறார்கள். (2 கொரிந்தியர் 8:12 ஒப்பிடவும்.) உண்மையில் கொடுப்பதில் கிறிஸ்தவ முறை யெகோவாவின் வணக்கத்துக்கு ஆழ்ந்த போற்றுதலை காண்பிப்பதற்கு சந்தர்ப்பங்களை அளிக்கிறது. இப்படிப்பட்ட கொடுத்தல், தசமபாகத்துக்கு அல்லது பத்தில் ஒரு பாகத்துக்கு கட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை, மேலும் ஒரு தனி நபர் ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்கு அதிகத்தைக் கொடுக்க தூண்டப்படும் சந்தர்ப்பங்கள் இருக்கலாம்.—மத்தேயு 6:33.
அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார்: “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.” (2 கொரிந்தியர் 9:7) மெய் வணக்கத்தை ஆதரிப்பதற்கு நீங்கள் உற்சாகமாயும் தாராளமாயும் கொடுப்பீர்களேயானால், நீங்கள் நன்றாயிருப்பீர்கள், ஏனென்றால் ஒரு ஞானமுள்ள நீதிமொழி இவ்வாறு சொல்கிறது: “உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் [யெகோவாவை, NW] கனம்பண்ணு. அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.”—நீதிமொழிகள் 3:9, 10.
நாம் மகா உன்னதமானவரின் செல்வத்தைப் பெருக்க முடியாது. எல்லா பொன்னும், வெள்ளியும், ஆயிரமாயிரமான மலைகளின் காட்டு ஜீவன்களும், எண்ணிலடங்கா விலைமதிப்புள்ள பொருட்களும் அவருடையவைகள். (சங்கீதம் 50:10–12) அவர் நமக்கு செய்திருக்கும் எல்லா நன்மைகளுக்கும் நாம் ஒருபோதும் திரும்ப செலுத்த முடியாது. ஆனால் அவருக்கும் அவருடைய துதிக்காக பரிசுத்த சேவை செய்யும் சிலாக்கியத்துக்கும் நம்முடைய ஆழ்ந்த போற்றுதலை நாம் காண்பிக்கலாம். மெய் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்கு தாராளமாக கொடுத்து, அன்பும் உதார குணமுமுள்ள கடவுளாகிய யெகோவாவை கனம் பண்ணுகிறவர்களுக்கு ஐசுவரியமான ஆசீர்வாதங்கள் ஏராளமாக கிடைக்கும் என்பதைக் குறித்து நாம் நிச்சயமாயிருக்கலாம்.—2 கொரிந்தியர் 9:11. (w91 12/1)
[பக்கம் 31-ன் பெட்டி]
சிலர் எப்படி ராஜ்யவேலைக்கு நன்கொடை அளிக்கிறார்கள்
◻ உலகளாவிய வேலைக்கு நன்கொடைகள்: அநேகர் “சங்கத்தின் உலகளாவிய வேலைக்காக நன்கொடைகள்—மத்தேயு 24:14.” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் நன்கொடை பெட்டிகளில் சேர்ப்பித்துவிடுவதற்கு ஒரு தொகையை வைத்துவிடுகிறார்கள் அல்லது அதை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கிவிடுகிறார்கள். ஒவ்வொரு மாதமும் சபைகள் இந்தத் தொகையை அருகாமையிலுள்ள காவற்கோபுரம் சங்கத்துக்கு அனுப்பிவைக்கிறது.
◻ வெகுமதிகள்: பணமாக மனமுவந்து கொடுக்கப்படும் நன்கொடைகள் நேரடியாக உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு (Watch Tower Bible and Tract Society of Pennsylvania, 25 Columbia Heights, Brooklyn, New York, 11201) அல்லது உள்ளூரிலுள்ள கிளைக்காரியாலயத்துக்கு அனுப்பப்படலாம். நகை அல்லது மற்ற விலைமதிப்புள்ள பொருட்களும்கூட நன்கொடையாக அளிக்கப்படலாம். இவை எவ்வித நிபந்தனையும் இல்லாத ஒரு நன்கொடை என்பதைத் தெரிவிக்கும் சுருக்கமான ஒரு கடிதம் இந்த நன்கொடைகளோடு சேர்ந்து வர வேண்டும்.
◻ நிபந்தனைக்குட்பட்ட நன்கொடை ஏற்பாடு: நன்கொடையாளரின் மரணம் வரையாக உவாட்ச் டவர் சொஸைட்டியின் பொறுப்பாண்மையில் வைத்துக்கொள்ளும்படியாகப் பணம் கொடுக்கப்படலாம். இந்தப் பணம் சொந்த தேவை ஏற்பட்டால் நன்கொடையாளருக்குத் திருப்பித் தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடு இது அளிக்கப்படக் கூடும்.
◻ காப்புறுதி (இன்சூரன்ஸ்): ஓர் ஆயுள்–காப்புறுதி திட்டத்தின் அல்லது ஓய்வு/ஊதியத் திட்டத்தின் அனுபவ பாத்தியத்தை உடையதாக உவாட்ச் டவர் சொஸைட்டி பெயரிடப்படலாம். இத்தகைய ஏற்பாடுகள் யாவற்றையும் குறித்து சங்கத்துக்குத் தகவல் தெரிவித்திட வேண்டும்.
◻ வங்கி கணக்குகள்: வங்கி கணக்குகள், வைப்புத் தொகை சான்றிதழ்கள், அல்லது தனிநபரின் ஓய்வுஊதிய கணக்குகள், உள்ளூர் வங்கி தேவைகளுக்கேற்ப சங்கத்தின் பொறுப்பாண்மையில் வைக்கப்படலாம் அல்லது மரணம் நேரிடுகையில் உவாட்ச் டவர் சங்கம் இதை பெற்றுக்கொள்ளும்படி செய்யப்படலாம். இத்தகைய ஏற்பாடுகள் குறித்து சங்கத்துக்கு தகவல் தெரிவித்திட வேண்டும்.
◻ பங்குகளும் கடன் பத்திரங்களும்: பங்குகளும் கடன் பத்திரங்களும் நிபந்தனையில்லாத ஒரு வெகுமதியாகவோ அல்லது வருமானம் தொடர்ந்து நன்கொடையாளருக்குக் கொடுக்கப்படும் என்ற ஏற்பாட்டின் கீழோ உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு அளிக்கப்படலாம்.
◻ நிலம், கட்டிட மனைகள்: விற்கப்படக்கூடிய நிலம், கட்டிட மனைகள் நிபந்தனையில்லாத ஒரு வெகுமதியாக உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு அளிக்கப்படலாம் அல்லது நன்கொடையாளர் தமது வாழ்நாள் முழுவதும் வைத்திருக்கக்கூடிய உடைமையாக, அவனுடைய அல்லது அவளுடைய வாழ்நாளின் போது தொடர்ந்து அவ்விடத்தை வைத்துக்கொண்டிருக்கும் ஏற்பாட்டோடு இது செய்யப்படலாம். எந்த நிலம், கட்டிட மனைகளையும் சங்கத்துக்கு மாற்றுவதற்கு முன்பாக ஒருவர் சங்கத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும்.
◻ உயில்களும் நம்பிக்கை பொறுப்புறுதிகளும்: சொத்து அல்லது பணம் சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்பட்ட ஓர் உயில் மூலமாக உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு ஒப்படைக்கப்படலாம் அல்லது ஒரு பொறுப்பாண்மை ஏற்பாட்டில் அனுபவ பாத்தியத்தை உடையதாக பெயரிடப்படலாம். மத அமைப்புக்கு நன்மை தரும் ஒரு பொறுப்பாண்மை ஒருசில வரி சலுகைகளை அளிக்கக்கூடும். உயில் அல்லது பொறுப்பாண்மை ஒப்பந்தத்தின் நகல் ஒன்று சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
இதன் பேரில் கூடுதலான தகவல்களுக்கு உவாட்ச் டவர் பைபிள் சொஸைட்டிக்கு (Watch Tower Bible and Tract Society of India, H–58 Old Khandala Road. Lonavla 410 401, Mah.) எழுதிக்கேட்கவும்.