ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
இயேசுவின் ஆடுகள் அவருடைய சத்தத்திற்குச் செவிசாய்க்கின்றன
பூமியின் எல்லா பகுதிகளுக்கும் பிரசங்க வேலை விரிவாக்கப்படுகையில், யெகோவா தமது ஊழியர்களைத் தம்முடைய தூதர்கள் மூலமாகச் செம்மறியாடு போன்றவர்களிடமாக வழிநடத்துகிறார். அவர்கள் இயேசுவின் சத்தத்தைக் கேட்டு, நித்திய ஜீவனை நோக்காகக் கொண்டு அவரைச் சேவிக்க கற்றுக்கொள்கிறார்கள். யோவான் 10:27, 28-ல் இயேசு, “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்,” என்று சொன்னார். மடகாஸ்கரிலுள்ள நேர்மை இருதயமுள்ள ஆட்கள் இயேசுவின் சத்தத்திற்கு எவ்வாறு செவிசாய்த்தனர் என்பதைக் கவனியுங்கள்.
யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் தன்னுடைய நோய்வாய்பட்ட தந்தையை சோதித்துப்பார்க்க வந்த மருத்துவருக்கு, நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் மற்றும் உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் என்ற புத்தகங்களின் பிரதிகளை கொடுத்தார்.
அந்த மருத்துவர் ஒரு புராட்டஸ்டன்டாக, சாட்சிகளை மிகவும் எதிர்ப்பவராக இருந்தார்; ஆனால் அவர் அந்தப் புத்தகத்தை வாசித்து வசனங்களைத் தன்னுடைய சொந்த பைபிளில் ஒப்பிட்டுப் பார்த்தார். கத்தோலிக்கரும் ஒரு மருத்துவருமான அவரது மனைவி, அந்த இளமை புத்தகம் விசேஷமாக அவளுக்கென்றே எழுதப்பட்டதாகத் தோன்றியதால் அதை அவள் பல முறைகள் வாசித்ததாகக் கூறினாள். சங்கத்தின், 1914-ன் முக்கியத்துவத்தைப்பற்றிய பைபிள் அடிப்படையான விளக்கம் அவர்கள் இருவரையும் கவர்ந்தது. அந்தக் கணவன் தனக்கு அப்புத்தகங்களைக் கொடுத்த சாட்சியோடு தொடர்புகொண்டார். அந்தச் சாட்சி, உயிர்—அது எப்படி இங்கு வந்தது? பரிணாமத்தின் மூலமா சிருஷ்டிப்பின் மூலமா? என்ற புத்தகத்தை அவருக்குக் கொடுத்து, அவரையும் அவருடைய மனைவியையும் சந்தித்து அவர்களுடைய கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காக ஏற்பாடுகளைச் செய்தார். அவர்களைச் சந்தித்தபோது அந்தத் தம்பதிகளோடும் அவர்களுடைய மூன்று பிள்ளைகளோடும் ஓர் ஒழுங்கான பைபிள் படிப்பை ஆரம்பித்தார். பைபிளைப் புரிந்துகொள்வதில் விரைவான முன்னேற்றம் இருந்தது.
முதல் படிப்பிற்குப்பின், முழு குடும்பமும் ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்குச் செல்லத் தொடங்கினர்; அதைத் தொடர்ந்து சீக்கிரமாக தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேர்ந்துகொண்டனர். பிள்ளைகளுடைய நடத்தையில் நல்ல முன்னேற்றங்கள் இருந்தன. அவர்களுடைய பைபிள் படிப்பு மூலமாக, பிறந்த நாட்களையும் மற்ற மதசார்பான விடுமுறைகளையும் கொண்டாடுவது கிறிஸ்தவதன்மையற்றது என்பதைக் கற்றறிந்ததால் அவற்றை அநுசரிப்பதை நிறுத்தினர். அந்தப் பொருளின்பேரில் பைபிள் படிப்பில் அதுவரையாகக் கலந்தாலோசிக்கப்படாதபோதிலும், ஓர் உறவினருக்கு இரத்தமளிக்க மறுத்துவிட்டார் அந்தக் கணவர். விரைவில் அவருடைய கராத்தே சீருடை அலமாரியிலிருந்து மறைந்துவிட்டது; அதைத் தன் பிள்ளைகளுக்கு உடைகள் தைப்பதற்காக தையல்காரரிடம் அனுப்பியிருந்தார். ஜாதகங்கள்பற்றிய எல்லா புத்தகங்களையும் பத்திரிகைகளையும் அவர் எரித்துவிட்டார். படிப்பைத் தொடங்கி மூன்றே மாதங்களில், கணவனும் மனைவியும் அவரவர் தங்களுடைய சர்ச்சுகளிலிருந்து விலகிவிட்டு, பிரசங்கவேலையில் பங்கெடுப்பதற்கான அவர்களுடைய விருப்பத்தைத் தெரியப்படுத்தினர். இப்போது அவர்கள் முழுக்காட்டுதல் பெற்றுவிட்டனர்.
◻ தாய்லாந்தில் உள்ள ஒரு பெண் சத்தியத்தைத் தேடினாள். ஒரு புத்தமதத்தவளாக இருந்தாலும், மிகுந்த மாய்மாலத்தையும் பேராசையையும் கண்டதன் காரணமாக தன்னுடைய மதத்தில் அவள் அவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தது கிடையாது. தவிர, அங்கு அவளுக்கு வெறுப்பூட்டும் அநேக பழக்கங்கள் இருந்தன. இவை யாவற்றையும் குறித்து அவள் சோர்வுற்றிருந்தாள்.
பின்பு, அண்டை வீட்டிலுள்ள ஒருவர் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தைக் கண்டறியும்படி சிபாரிசு செய்து ஒரு பெந்தெகொஸ்து சர்ச்சுக்கு அழைத்துக்கொண்டுபோனார். எனினும், ஆராதனையின்போது, வந்திருந்த அனைவரும் சப்தமான குரலில் ஜெபித்ததால் ஏற்பட்ட சப்தம் காரணமாக அவ்விடத்தைவிட்டு வீடு செல்ல வேண்டும் என்ற ஒரு பலமான ஆவல் அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டது. அதுவே அந்தச் சர்ச்சுக்கு அவள் சென்ற கடைசி தடவையாகும்.
பின்னர், ஒரு ரோமன் கத்தோலிக்க சர்ச்சை சென்று பார்த்தாள். இருந்தாலும், பலமுறைகள் அங்கு சென்றபின் திரும்பவும் மாய்மாலம் மற்றும் பேராசையும் மதகுருவின் சுகபோக வாழ்க்கைமுறையும் தெரியவந்தது. அவள் வெறுப்படைந்து அங்கு செல்வதையும் நிறுத்திவிட்டாள். அவள் ஏன் விட்டுச்சென்றாள் என்பதையறிய அந்த மதகுரு ஆர்வமுள்ளவராய் இருந்தார். காரணத்தை அறிந்தபின் கேலியாக அவர் கூறினார்: “உண்மையிலே கண்டிப்பான ஒரு மக்களைச் சேர விரும்பினால் யெகோவாவின் சாட்சிகளிடம் செல்லுங்கள்.” அவள் கேட்டாள்: “அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” அந்த மதகுரு பதிலளித்தார்: “அவர்கள் நீர் வழங்கீட்டு நிறுவனத்தின் அருகில் இருக்கிறார்கள்.” அடுத்த நாள் அவர்களைத் தேடிகண்டுபிடிக்கும் முயற்சியில் அவள் வெற்றிபெறவில்லை. ஏமாற்றமடைந்தபோதிலும் எப்போதும் யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி நினைத்துக்கொண்டே இருந்தாள்.
ஒருநாள் அண்டை வீட்டிலுள்ள ஒருவர் மற்றொருவரிடம் கேலியாக, “விரைவில் நீயும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராகிவிடுவாய்!” என்று சொல்வதைத் தற்செயலாகக் கேட்டாள். அதைக் கேட்டதும், அப்பெண் அந்த அண்டை வீட்டாரிடம் விரைந்து சென்று, “இந்தப் பக்கத்தில் யெகோவாவின் சாட்சிகள் இருக்கிறார்களா?” என்று கேட்டாள். “ஆம்,” என்ற பதில் கிடைத்தது. “சிலர் இந்தச் சுற்றுவட்டாரத்தில் வீடுவீடாகப் பிரசங்கித்துக்கொண்டு வருவார்கள். அவர்களுடைய சுத்தமான மற்றும் நேர்த்தியான உடுத்தும் முறையிலிருந்தே அவர்களை அடையாளங்காணலாம்.” உடனே அவர்களைக் கண்டுபிடிப்பதற்காக ஓடினாள். முதலில் அவர்களைக் காணமுடியவில்லை, ஆனால் வீடு திரும்புவதற்காக நடக்கும்போது, நேர்த்தியாக உடையணிந்த இரு பெண்கள் ஒருவருடன் சம்பாஷித்துக்கொண்டிருப்பதைக் கவனித்தாள். அவர்களை அணுகி அவர்கள் யெகோவாவின் சாட்சிகளாவென்று கேட்டாள். தாங்கள் அவர்களே என்று கூறியதும் “தயவுசெய்து என் வீட்டிற்கு வாருங்கள். நான் உங்களுடன் பேசவேண்டும்,” என்று மன்றாடினாள்.
ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது; குடும்ப அங்கத்தினரின் எதிர்ப்பு, ஏளனம் இருந்தபோதிலும், இந்தப் பெண் கூட்டங்களுக்கு வரவும் உறவினர்களுக்கு சாட்சிபகரவும் தொடங்கிவிட்டாள்.
இயேசு உண்மையில் அவருடைய ஆடுகளை அறிந்திருக்கிறார்; நீதியான புதிய உலகிற்குள் தப்பிப்பிழைப்பதற்காக அவர்களைத் தன்னுடைய அமைப்பினுள் கூட்டிச்சேர்த்துவருகிறார்.