பிரிவினை நிறைந்த சர்ச்—அது எவ்வளவு மோசமானது?
“முன்சுவர் திடீரென்று விழுந்துவிட்டிருக்கும் ஒரு பாழடைந்த வீட்டில் வாழ்ந்துவரக்கூடிய பெரிய, அதிர்ச்சிக்குள்ளான குடும்பத்தைப்போல, ஒவ்வொரு அறையிலும் உண்மையில் ஒரே அமளியாக இருக்கிறது. ஜீஸஸ் சில்ட்ரன் குழுவைச் சேர்ந்தவர்கள் கஞ்சிராவைப் பலமாகக் கொட்டிக்கொண்டு கறுப்பு வண்ண பட்டு சூட்டிலிருக்கும் குறிப்பிட்ட ஒரு ஆங்கிலோ-கத்தோலிக்க ஓரினச் சேர்க்கையாளர்களைத் திட்டிக்கொண்டிருக்கின்றனர்.”—தி சண்டே டைம்ஸ், லண்டன், ஏப்ரல் 11, 1993.
இந்தக் குடும்பம் இங்கிலாந்து சர்ச்சாக (Church of England) இருக்கிறது. இந்த அமளியானது பெண்களைக் குருவர்க்கத்தில் சேர்த்துக்கொள்வதற்காகும். பெரும் ஒற்றுமையின்மையின் அந்தத் தெளிவான விவரிப்பு கிறிஸ்தவமண்டலம் முழுவதற்கும் மிக அழகாக பொருத்திக் காட்டப்படுகிறது. கீழை ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தலைவர்களும் போப்பும் பெண்களைப் பாதிரிகளாக அனுமதிக்கும் தீர்மானத்தை எதிர்த்து கண்டனம் தெரிவிப்பதன் எல்லாவற்றையும் உள்ளிட்ட விளைவானது, “கிறிஸ்தவமண்டலத்தின் மீதிபாகத்தோடு மறுபடியும் ஒருமைப்படவேண்டுமென்ற கனவு எப்போதும் இருப்பதைவிட வெகு தொலைவிலுள்ளது” என்று ஓர் அறிக்கை முடிவுக்கு வருகிறது.
சர்ச் எந்தமட்டும் பிரிவினை நிறைந்திருக்கிறது?
மத்தேயு 7:21-ல் நாம் வாசிக்கிறபடி, அநேகர் கர்த்தராக இயேசு கிறிஸ்துவின்மீது விசுவாசம் வைப்பதாய் உரிமைபாராட்டினாலும் ‘தம்முடைய பிதாவின் சித்தத்தை செய்வதில்’ தவறுவார்கள் என்று அவர் சொன்னார். மக்லீன்ஸ் பத்திரிகை குறிப்பிடுகிறது: “இரட்சிப்பை நாடும் மத்தேயுவின் வாசகர்கள் கடவுளுடைய சித்தம் உண்மையில் என்னவாக இருக்கிறது என்பதன்பேரில் குழம்பிக்கிடப்பதற்காக மன்னிக்கப்படலாம். ஏனென்றால் கிறிஸ்தவர்களும் அவர்களுடைய சர்ச்சுகளும் அந்தக் கேள்வியின்பேரில் மிகுந்த கருத்து வேறுபாட்டைக் கொண்டிருக்கின்றனர்.” கனடா மக்களிடையே எடுத்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து, அது என்ன முடிவுக்கு வந்தது என்றால், “கனடா நாட்டு கிறிஸ்தவர்களின் மதநம்பிக்கைகளிலும் பழக்கங்களிலும் கருத்து வேற்றுமை பெருமளவு” இருக்கிறது; “நிச்சயமாகவே, மதப்பிரிவுகளின் மத்தியில் இருக்கும் வித்தியாசங்களைக் காட்டிலும் ஒவ்வொரு மதப்பிரிவு அங்கத்தினர் மத்தியிலும் அதிகப்படியான வித்தியாசம் இருக்கிறது.”
அதன் ஆய்வின் பிரகாரம், செயற்கையான கருத்தடையை அவர்களுடைய சர்ச் கண்டித்தாலும் 91 சதவீத கத்தோலிக்கர் அதை உபயோகிக்க சம்மதிக்கின்றனர்; 78 சதவீத மக்கள், பெண்களைப் பாதிரிகளாக இருக்க அனுமதிக்கவேண்டும் என்று நினைக்கின்றனர்; மேலும் 41 சதவீதத்தினர் “குறிப்பிட்ட சூழ்நிலைமைகளில்” கருச்சிதைவுக்கு சம்மதம் தெரிவிக்கின்றனர். ‘இறையியல்சார்ந்த பெருவாரியான கேள்விகளின்பேரில்’ வெவ்வேறுபட்ட பிரிவினர் மத்தியிலுள்ள கருத்து வேறுபாடானது, “செல்வாக்குள்ள சர்ச்சுகளில் உண்டாகும் பிரிவினைகளின் ஆழத்தை வலியுறுத்திக் காட்டுகிறது” என்று மக்லீன்ஸ் சொல்கிறது.
இரட்டைத் தராதரங்கள்
ஒழுக்கம் சம்பந்தப்பட்டதில் இரட்டைத் தராதரங்களும் முரண்பட்ட தராதரங்களும் இருக்கின்றன. சிலர் பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பதாக ஒப்புக்கொள்கின்றனர், மற்றவர்களோ அலட்சியப்படுத்துகின்றனர். உதாரணமாக, டோரன்டோவின் மெட்ரோபாலிட்டன் சர்ச்சிலுள்ள இரண்டு பெண்புணர்ச்சியாளர்களுக்கு நடந்த “கல்யாண” வைபவம் கடவுளுடைய சித்தத்துக்கு இசைவாக இருந்ததா? கல்யாணமான ஆட்கள் அவ்வாறு நினைத்தது தெளிவாக இருக்கிறது. “வெளிப்படையாகவும் கடவுளுக்கு முன்பாகவும் எங்களுக்குள்ள காதலை நாங்கள் கொண்டாட விரும்புகிறோம்,” என்று அவர்கள் சொன்னார்கள்.
ஒரு பத்திரிகையாளர், “புகார் மேல் புகாரிடப்பட்டு, பிள்ளைகளோடு முறைதகாப்புணர்ச்சி கொள்ளும் பாதிரிமார்களை, எவ்வாறு ஒரு கத்தோலிக்க ஆர்ச்பிஷப் பூசைக்கு உதவும் பையன்களடங்கிய (altar boys) இன்னொரு வித்தியாசப்பட்ட தொகுதியைச் சந்திப்பதற்கு மற்றொரு சர்ச்சுக்கு மாற்றினார்” என்று கேட்டார். ஆண்ட்ரூ கிரீலி பாதிரியானவர், 2,000 முதல் 4,000 பாதிரிமார்கள் 1,00,000 வயதுவராத பிள்ளைகளைக் கெடுத்திருக்கக்கூடும் என்றும், பெரும்பாலான சமயங்களில் அதைக் குறித்து ஒன்றுமே செய்யப்படவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
ஒருமித்திராத சர்ச் ஒருமித்திராத மக்களை உண்டாக்குகிறது. பால்கன்ஸில், கிறிஸ்து தங்களுடைய “நியாயமான” போரில் இருக்கிறாரென்று செர்பிய மற்றும் குரோவேஷிய “கிறிஸ்தவர்கள்” நினைக்கின்றனர். பெரும்பான்மையர் போரில் சிலுவைகளை அணிகின்றனர்; ஒருவர், “போர் அதிதீவிரமாக நடந்துகொண்டிருக்கையில் சிலுவையை எப்பொழுதும் தன்னுடைய வாயில் வைத்திருந்ததாக” அறிக்கைசெய்யப்படுகிறது.
“உங்களுக்குள் பிரிவினைகள் இருக்கக்கூடாது”
பைபிள் சில காரியங்களை மனச்சாட்சிக்கு விட்டுவிடுகிறது என்பது உண்மைதான், ஆனால் இத்தகைய பிரிவினையை இது அனுமதிக்கக்கூடாது. அப்போஸ்தலன் பவுல் தெளிவாக குறிப்பிடுகிறார்: “நீங்களெல்லாரும் ஒருமனதாக பேசி [செயல்பட] வேண்டும், மேலும் உங்களுக்குள் பிரிவினைகள் இருக்கக்கூடாது.”—1 கொரிந்தியர் 1:10, NW; எபேசியர் 4:15, 16.
அப்போஸ்தலன் பவுல் அவ்வார்த்தைகளை எழுதி சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு ‘கிறிஸ்தவத்தின்மீது’ உண்மையான ஒரு கண்ணோட்டம் செலுத்துவதானது, சில அதிமுக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. “கிறிஸ்தவர்கள்” ஏன் இப்படி பிரிவுனையுற்றிருக்கின்றனர்? இத்தகைய பிரிவினை நிறைந்த சர்ச் நீடித்திருக்க முடியுமா? ஒருமித்த கிறிஸ்தவமண்டலம் என்றாவது இருக்குமா? அடுத்த கட்டுரை இக்கேள்விகளை சிந்திக்கும்.
[பக்கம் 3-ன் படம்]
கருச்சிதைவுக்கு எதிராக பாதிரிமார்கள் ஆர்ப்பாட்டம்
[படத்திற்கான நன்றி]
Cover and above: Eleftherios/Sipa Press