உலகம் பயத்தின் பிடியில் இருக்கிறது
காரில் வைக்கப்பட்ட மிகப் பெரிய குண்டுவெடிப்பு ஒன்று, பிப்ரவரி 26, 1993 அன்று, நியூ யார்க் நகரத்திலுள்ள 110-மாடி உலக வர்த்தக மையத்தை (World Trade Center) தாக்கியது. ஆயிரக்கணக்கான பணியாளர்கள், திடீரென்று இயங்க மறுத்த லிஃப்டுகளில் சிக்கிக்கொள்ளவோ புகை நிரம்பிய மாடிப்படிகளின் வழியாக இறங்கி ஓடவோ வேண்டியதாயிற்று. இந்தப் பயங்கரமான உலகில் இப்பொழுது மட்டுமீறிய வகையிலிருக்கும் பயத்தை அவர்கள் உணர்ந்தனர்.
பல தேசங்களிலுள்ள மக்கள் வெடிகுண்டுகளால் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றனர். அயர்லாந்து, லெபனான் போன்ற நாடுகளில் அவை சர்வ சாதாரணமாகிவிட்டன. ஏன், மார்ச் 12, 1993 அன்று, இந்தியாவிலுள்ள பம்பாயில் ஒரே நாளிலே 13 குண்டுகள் வெடித்து, சுமார் 200 பேரைக் கொன்றன! பார்வையாளர் ஒருவர் சொன்னார்: “பம்பாய் முழுவதும் பீதியடைந்திருக்கிறது.” நியூஸ்வீக் பத்திரிகையின்படி, காரில் வைக்கப்பட்ட குண்டுவெடிப்புகள் “அவ்வளவு சர்வ சாதாரணமாகச் சம்பவிப்பதால், இன்னும் அதிக அச்சுறுத்தலையே உருவாக்குகின்றன.”
அணுசக்தி சார்ந்த பயங்கள் தொடர்கின்றன
அணுமின் உலைகள் வெடிகுண்டுகளின் தாக்குதலுக்குள்ளாகும் என்ற பயம் இருக்கிறது. அணுமின் நிலையம் ஒன்று வெற்றிகரமாகத் தாக்கப்பட்டால், கணக்கிடப்பட முடியாத சேதத்தையும் வேதனையையும் உண்டாக்க முடியும். ஐக்கிய மாகாணங்களிலுள்ள த்ரீ மைல் ஐலன்ட் அணுமின் நிலையத்தில் ஒரு பாதுகாப்பு வாயில் வழியாக ஒருவர் தன் காரை ஓட்டிச் செல்ல முயன்றது இந்தப் பயத்திற்குச் சான்று பகருவதாய் இருந்தது.
பயங்கரவாதிகளும், அதிகாரப் பசியுள்ள ஆட்சியாளர்களும் அணு ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வார்கள் என்று அநேகர் பயப்படுகின்றனர். வேலையின்றி இருக்கும் ஆயிரக்கணக்கான சோவியத் அணு அறிவியலாளர்கள் தங்கள் திறமைகளை விற்க முயலுவார்கள் என்று சிலர் பயப்படுகின்றனர். மேலுமாக, அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தமும் (START) மற்ற ஒப்பந்தங்களும், போர் சம்பந்தப்பட்ட அணு ஆயுதங்களின் அதிகப்படியான குறைப்பை உட்படுத்தினாலும், அப்படிப்பட்ட ஒப்பந்தங்கள் பல வருடங்களானாலும் அமல்படுத்தித் தீராது. அதற்கிடையில், ஏதாவதொரு வெறித்தனமான திடீர் சம்பவத்தால் இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதன் சாத்தியம் மலையின்மீது எழும்பியிருக்கும் அச்சுறுத்தும் புயல்மேகம் போல திரண்டு நிற்கவேண்டும்.
வன்முறை பயத்தை ஏற்படுத்துகிறது
வன்முறையான குற்றச்செயலின் பரவலான அதிகரிப்பு, வீடுகளிலும் தெருக்களிலும் மக்களைப் பயமுள்ளவர்களாக்குகிறது. மதிப்பிடப்பட்ட சுமார் 23,200 அமெரிக்கர்கள், 1990-ல் கொல்லப்பட்டனர். உதாரணமாக, சிகாகோ நகரில், கிராக் கொக்கெயின் உபயோகத்தின் அதிகரிப்பு, ஒரு வருடத்தில் சுமார் 700 கொலைகளுக்குக் காரணமாய் இருந்தது. சில நகரங்களின் குறிப்பிட்ட பகுதிகள் போர்க்களங்களாக மாறியிருக்கின்றன; பிள்ளைகள் உட்பட, அவ்வழியே கடந்து செல்வோர், எதிரெதிர் குண்டுவீச்சு தாக்குதல்களில் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஒரு பத்திரிகை இவ்வாறு சொல்லுகிறது: “நடுத்தரமான நகரங்களில் வன்முறை விரைவாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. . . . [ஐக்கிய மாகாணங்கள்] எங்குமுள்ள சமுதாயங்கள், போதை மருந்துகளாலும் இளம் போக்கிரிகளாலும் நிரம்பியிருப்பதால், எவரும் விட்டுவைக்கப்படுவதில்லை. ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு 4 அமெரிக்க குடும்பங்களில் ஒன்று, வன்முறையான குற்றச்செயல் ஒன்றையோ திருட்டையோ அனுபவிக்கிறது.”—ஐ.மா.செய்தி மற்றும் உலக அறிக்கை, (U.S.News & World Report), அக்டோபர் 7, 1991.
கற்பழிப்பு பற்றிய பயம் பெண்களை அச்சவுணர்வுடன் இருக்கச் செய்கிறது. பிரான்ஸில் 1985-லிருந்து 1990-க்குள், அறிக்கை செய்யப்பட்ட கற்பழிப்புகளில் 62 சதவீத அதிகரிப்பு இருந்தது. கனடாவில் ஆறு வருடங்களுக்குள் பாலின தாக்குதல்கள் 27,000-மாக இரட்டித்தன. ஜெர்மனி, ஒவ்வொரு ஏழு நிமிடத்திலும் ஒரு பெண்ணின் மீது நடத்தப்பட்ட ஒரு பாலின தாக்குதலை அறிக்கைசெய்தது.
பிள்ளைகளும் தங்கள் பாதுகாப்பைக் குறித்துப் பயப்படுகின்றனர். ஐக்கிய மாகாணங்களில் “நான்காம், ஐந்தாம் வகுப்பு சிறுவர்கள்கூட, தங்களிடம் ஆயுதங்களை உடையவர்களாய் இருக்கிறார்கள், ஆசிரியர்களும் பள்ளி அதிகாரிகளும் பயப்படுகிறார்கள்,” என்று நியூஸ்வீக் அறிக்கை செய்கிறது. பெரிய நகரப்பள்ளி மாவட்டங்களில் கால்வாசி, உலோகங்காணிகளை (metal detectors) பயன்படுத்தும் அளவிற்கு நிலைமை அவ்வளவு மோசமானதாக இருக்கிறது. ஆனால் உறுதிபூண்ட இளைஞர், ஜன்னல்கள் வழியாக மற்றவர்களுக்குத் துப்பாக்கிகளைக் கடத்துவதன்மூலம், இவற்றினூடேயும் ஒரு வழியைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள்.
எய்ட்ஸ் பற்றிய பயம்
அதிகதிகமான மக்கள் எய்ட்ஸ் தொற்றுவதைப்பற்றி பயமுள்ளவர்களாக இருக்கின்றனர். ஐக்கிய மாகாணங்களில் மட்டும் 2,30,000-ற்கும் மேலான நோயாளிகள் இருந்திருக்கின்றனர். 15 முதல் 24 வயதுள்ளோர் மத்தியில் மரணத்திற்கான மேலோங்கி நிற்கும் காரணங்களில் எய்ட்ஸ் ஆறாவதாகி இருக்கிறது. “எதிர்காலம் இன்னுமதிக பரவலாகும் நோய் பற்றிய அச்சுறுத்தலான எதிர்நோக்கைக் கொண்டிருக்கிறது,” என்று நியூஸ்வீக் சொல்லுகிறது.
நாட்டியம், நாடகம், திரைப்படங்கள், இசை, நவீன பாணிகள், தொலைக்காட்சி, கலை, மற்றும் இவைபோன்ற துறைகளிலுள்ள மக்கள் மத்தியில் எய்ட்ஸ் மூலமாக ஏற்படும் மரணம் அதிகப்படியாகச் சம்பவிக்கிறது. இதழியல், கலை, பொழுதுபோக்கு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள 25 முதல் 44 வயதுக்குட்பட்ட பாரிஸைச் சேர்ந்த ஆண்களில் 60 சதவீதத்தினரின் மரணம் எய்ட்ஸ் காரணமாகவே இருந்தது என்று அறிக்கை ஒன்று குறிப்பிட்டது. உலகமெங்கும் எண்பது லட்சத்திலிருந்து ஒரு கோடி மக்கள் வரையாக HIV-யால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவிக்கிறது. WHO-வின் இயக்குநர் ஒருவரான டாக்டர் மைக்கல் மெர்ஸன் சொல்கிறார்: “உலகைச் சுற்றிலும் HIV பாதிப்பின் எண்ணிக்கை, முக்கியமாக வளர்ச்சியடையும் நாடுகளில் விரைவாக மோசமாகிக்கொண்டிருப்பது இப்போது தெளிவாக இருக்கிறது.”
நிச்சயமாகவே, சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்டதும், மற்ற பயங்களும் இருக்கின்றன. இருந்தாலும், மேற்சொல்லப்பட்ட அறிக்கைகள் மட்டுமே, உலகம் பயத்தின் பிடியிலிருக்கிறது என்பதைத் தெளிவாக்குகின்றன. இதைக் குறித்து விசேஷ முக்கியத்துவம் வாய்ந்த ஏதாவது இருக்கிறதா? நாம் எப்போதாவது பயத்திலிருந்து விடுதலையை அனுபவிக்கும்படி எதிர்பார்க்க முடியுமா?