உலகெங்கும் யெகோவாவின் சாட்சிகள்—கொலம்பியா
கெலம்பியா தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு தென் அமெரிக்க நாடு. அட்லான்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகிய இரண்டும் இந்த எரிமலைகள் நிரம்பிய நாட்டின் கரையோரத்தைத் தழுவுகின்றன. தாழ்வான வெப்பமண்டல கரையோரங்கள் மற்றும் சமவெளிகளின் வெப்பம், உயர்ந்த ஆண்டிஸ் மலைத்தொடரின் பனிபடர்ந்த உச்சிகளின் குளிருக்கு ஈடுகட்டுகிறது.a
கொலம்பியா தங்கத்திற்கும் மரகதத்திற்கும் பேர்பெற்றதாக இருந்தாலும், அங்குள்ள மக்களே அதன் மிக அருமையான சொத்துக்கள். இன்று, யெகோவா தம்முடைய ஆவிக்குரிய வீட்டை மகிமையால் நிரப்புகிறார். கொலம்பியா உட்பட பூமியின் எல்லா பாகங்களிலும் அழகான, விரும்பத்தக்க வணக்கத்தார் அதனிடமாகத் திரண்டுவருகின்றனர்.—ஆகாய் 2:7.
நிறுவன அதிகாரிகள் கவரப்பட்டனர்
போகோடாவிற்கு 42 கிலோமீட்டர் வடமேற்கில், ஃபாகாடாடிவாவில் உவாட்ச் டவர் சொஸையிட்டியின் புதிய கிளை அலுவலகமும் அச்சு வசதியும் நவம்பர் 1, 1992, ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. கிளை அலுவலகத்தைச் சுற்றிப் பார்த்தது வந்திருந்தவர்கள்மீது மிக நல்ல பாதிப்பைக் கொண்டிருந்தது. சுற்றிப் பார்த்த ஒருவர், தான் வேலை செய்கிற தொழிற்சாலைக்குத் திரும்பியதும், ‘செயல்திறம், ஒழுங்கு, பணியாளர்களின் பொறுப்புணர்ச்சி ஆகியவற்றின் ஓர் அதிசயமாக’ இருக்கிற ஓர் அமைப்பைச் சென்று பார்க்கும்படி தன் மேலாளர்களை ஆர்வத்துடன் தூண்டினார். அவர்கள் அடுத்தமுறை சுற்றிப் பார்க்கச் சென்றபோது, அந்த அதிகாரிகள் மிகுந்த அக்கறை காண்பித்து, பல கேள்விகளைக் கேட்டார்கள்.
இந்த அதிகாரிகள், தங்களுடைய கண்காணிப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், முதலாள்கள்—உண்மையில், எல்லா வேலையாட்களையும்—அங்குச் சுற்றிப் பார்க்கச் செய்யவேண்டுமென விரும்பினர். ஒவ்வொரு வாரமும் 15 முதல் 25 வேலையாட்கள் வரையாகச் சுற்றிப் பார்க்க செல்லும்படி அவர்கள் திட்டமிட்டு, அங்கு வேலை செய்யும் மொத்த 1,300 பேரும் அப்பேர்ப்பட்ட ஒழுங்கமைப்பின் திறனைக் காணும்படி செய்தனர்.
அவர்களுடைய வேலையாட்களில் நூற்றுக்கணக்கானோர் கிளை அலுவலக வசதிகளைச் சுற்றிப் பார்த்திருக்கின்றனர்; யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்குப் பின்னாலிருக்கும் அமைப்பு (Jehovah’s Witnesses—The Organization Behind the Name) என்ற வீடியோவையும் கண்டுகளித்தனர். அந்த அமைப்பின் பிரமாண்டத்தினாலும் ராஜ்ய பிரசங்க வேலை உலகளாவ செய்யப்படுகிறதாலும் கவரப்பட்டவர்களாய், சொஸையிட்டியின் செயல்பாட்டு முறைகளில் பயன்படுத்தப்படுகிற உயர்ந்தளவு தொழில்நுட்பத்தைக் குறித்து அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர். அங்கிருந்து வெளியே செல்கையில், ‘பரதீஸைவிட்டு ஒரு ஒழுங்கமைப்பற்ற உலகிற்குள் திரும்பிச் செல்வது’ போன்ற உணர்வைக் கொண்டிருப்பதாக அநேகர் சொல்வதைக் கேட்க முடிகிறது.
சத்தியம் எல்லா வகையினரையும் சென்றெட்டுகிறது
எல்லா வகையான மக்களும் நற்செய்தியால் சென்றெட்டப்படுகிறார்கள். (1 தீமோத்தேயு 2:3, 4) உதாரணமாக, ஒரு ஹெவி மெட்டல் ராக் இசைக் குழுவின் முன்னாள் இசை அமைப்பாளரும் தலைவருமான ஒருவர் பைபிள் சத்தியத்தை ஏற்று, தன் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்து, விரைவில் ஒரு ஒழுங்கான பயனியர் ஆனார். பின்னர் அவர் ஒரு உதவி ஊழியராக நியமிக்கப்பட்டார். அரசைக் கவிழ்க்கும் கும்பல்களின் அங்கத்தினராக இருந்த பலர், தங்களுடைய பற்றுறுதியையும் நம்பிக்கையையும் யெகோவாவின் ராஜ்யத்தில் வைக்கக் கற்றுக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் இப்போது ஒரு சமாதானமான புதிய உலகைப்பற்றிய செய்தியைப் பிரசங்கிப்பதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருக்கின்றனர்.
போதை மருந்துகளுக்கு அடிமையானோரும், அவற்றை விநியோகிப்போரும்கூட சத்தியத்திடமாகத் திரும்பியிருக்கின்றனர். இப்போது ஒரு சாட்சியாக இருக்கும் ஓர் இளைஞர் தான் வாழ்ந்துகொண்டிருந்த வாழ்க்கை முறையை விட்டுவருவதற்கு முன், ஒரு காட்டில், ஒரு போதை மருந்து தோட்டத்தையும் ஒரு கொக்கெயின் ஆய்வுக்கூடத்தையும் ஐந்து வருடங்களாக வைத்திருந்தார். அவர் பைபிள் நியமங்களைக் கற்றுக்கொள்வதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் மகிழ்ச்சியைக் கண்டிருக்கிறார். ஒரு சிறையில், பைபிளை உண்மையாகப் படித்ததன் மூலம் தூண்டுவிக்கப்பட்ட குற்றவாளியாக தீர்க்கப்பட்ட கொலையாளிகள், யெகோவா தங்களுடைய பாவங்களை மன்னிக்கும்படியும் தம்முடைய ஊழியர்களாக அவர்களை ஏற்றுக்கொள்ளும்படியும் ஊக்கமாக ஜெபிக்கிறார்கள்.
இவ்வாறு எல்லா வகையான மக்களும் ராஜ்ய செய்திக்குப் பிரதிபலிக்கின்றனர். மற்ற இடங்களைப் போலவே, கொலம்பியாவிலும், இவ்வாறாக யெகோவா தம்முடைய வீட்டை மகிமையால் நிரப்புகிறார்.
[அடிக்குறிப்புகள்]
a கூடுதலான தகவலுக்கு, 1994 யெகோவாவின் சாட்சிகளுடைய நாட்காட்டியை (1994 Calendar of Jehovah’s Witnesses) பார்க்கவும்.
[பக்கம் 8-ன் பெட்டி]
நாட்டு தகவல்கள்
1993 ஊழிய ஆண்டு
சாட்சி கொடுப்பவர்களின் உச்ச எண்ணிக்கை: 60,854
விகிதம்: 1 சாட்சிக்கு 558
நினைவு ஆசரிப்பிற்கு வந்திருந்தோர்: 2,49,271
சராசரி பயனியர் பிரஸ்தாபிகள்: 8,487
சராசரி பைபிள் படிப்புகள்: 1,00,927
முழுக்காட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை: 5,183
சபைகளின் எண்ணிக்கை: 751
கிளை அலுவலகம்: ஃபாகாடாடிவா
[பக்கம் 9-ன் படம்]
1956-ல் கிளை அலுவலக பணியாளர்களும் மிஷனரிகளும்
[பக்கம் 9-ன் படம்]
வானவெளியிலிருந்து எடுக்கப்பட்ட கிளை அலுவலக காட்சி