ஏன் மன்னிப்பவராக இருக்க வேண்டும்?
யூத புலவரும் எழுத்தாளருமான ஜோசஃப் ஜேக்கப்ஸ் மன்னிப்பை, “எல்லா ஒழுக்கப் பாடங்களிலும் மிக அதிக உயர்ந்தது மற்றும் மிக அதிகக் கடினமானது” என ஒரு சமயம் விவரித்தார். நிச்சயமாகவே, “நான் உன்னை மன்னிக்கிறேன்” என்ற வார்த்தைகளைச் சொல்வதைப் பலர் மிகக் கடினமாகக் காண்கின்றனர்.
மன்னிப்பது, பணத்தைப்போல் இருப்பதாகத் தோன்றுகிறது. இதை மற்றவர்களின்பேரில் தாராளமாயும் இரக்கமாயும் செலவிடக்கூடும் அல்லது கஞ்சத்தனமாய்த் தனக்காகவே குவித்து வைத்துக்கொள்ளக்கூடும். முதலில் குறிப்பிட்டது கடவுளுக்கடுத்த முறை. மன்னித்தலுக்கு வருகையில் தாராளமாய்ச் செலவிடும் பழக்கங்களை நாம் வளர்க்கவேண்டும். ஏன்? ஏனெனில் கடவுள் இதை ஊக்குவிக்கிறார், மேலும் மன்னிக்காத, பழிவாங்கும் மனப்பான்மை காரியங்களை மோசமாகும்படியே செய்யும்.
“நான் கோபப்படுகிறதில்லை, சரிக்குச்சரி செய்கிறேன்!” என்று சொல்லும் சொற்களே அடிக்கடி செவியில் விழுகின்றன. வருந்தத்தக்கதாக, இந்தக் கூற்றே இன்று பலரின் வாழ்க்கையில் வழிநடத்தும் நியமமாயுள்ளது. உதாரணமாக, ஓர் அம்மாள் ஏழு ஆண்டுகளுக்குமேல் தன் அண்ணியிடம் பேச மறுத்துவிட்டாள், ஏனெனில், அவள் சொல்வதாவது, “அவள் நம்பமுடியாத அளவாக எனக்குத் தீங்கு செய்தாள், அதை அவளுக்கு மன்னிக்க என்னால் ஒருபோதும் முடியவில்லை.” வெறுப்பைக் காட்ட இவ்வாறு பேசாதிருப்பதை, குற்றப்படுத்தப்பட்டவரை மன்னிப்பு கேட்கும்படி செய்விப்பதற்கு நெம்புகோலாகவோ அல்லது தண்டிக்கும் கருவியாகவோ பயன்படுத்துகையில், பழிவாங்கும் ஆவலைத் திருப்திசெய்வது அரிதே. மாறாக, அந்தச் சச்சரவை அது நீடிக்கவே செய்து, முழுமையான மனவெறுப்பு வளரும்படியே செய்யும். கொந்தளித்துக்கொண்டிருக்கும் இந்த மனவேதனை அமர்த்தப்படாவிட்டால், பழிவாங்கும்படியான வல்லமைவாய்ந்த கொடும்பிடி, உறவுகளையும் ஒருவரின் சுகத்தையும்கூட கெடுக்கக்கூடும்.
மன்னிக்காத மனநிலையினால் உண்டாகும் தீங்கு
ஒருவர் மன்னியாதவராக இருக்கையில், இதனால் விளையும் மனப்போராட்டம் மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. இதனால், மன அழுத்தம் வினைமையான நோய்களுக்கு வழிநடத்தக்கூடும். டாக்டர் உவில்லியம் S. சட்லர் இவ்வாறு எழுதினார்: “கவலை, பயம், சச்சரவு, . . . கேடான சிந்தனை மற்றும் தூய்மைகெட்ட வாழ்க்கை ஆகியவை காரணமாகக் கண்டறியக்கூடிய, மனிதரின் நோய் மற்றும் வேதனையின் ஆச்சரியத்தை உண்டாக்கும் பெரும் சதவீதத்தை ஒரு மருத்துவர் அவ்வளவு முழுமையாக உணர்ந்தறிவதுபோல் வேறு எவரும் அறிய முடியாது.” எனினும், மெய்யாகவே மனவெழுச்சிக் கொந்தளிப்பு எவ்வளவு சேதத்தை உண்டுபண்ணுகிறது? ஒரு மருத்துவ பிரசுரம் இவ்வாறு பதிலளிக்கிறது: “ஒரு மருத்துவரிடம் சென்ற நோயாளிகளில் மூன்றில் இரண்டு பகுதியினர் மனநெருக்கடியால் உண்டான அல்லது மோசமாக்கப்பட்ட நோய்க்குறிகளைக் கொண்டிருந்தனரென்று . . . புள்ளிவிவரங்கள் காட்டின.”
ஆம், மனக்கசப்பு, கடும்சினம் மற்றும் பகை நிச்சயமாகவே தீங்கற்றவையாக இல்லை. எரிச்சல்தரும் இந்த மனவெழுச்சிகள், ஒரு மோட்டார் வண்டியின் உடல்பாகத்தை மெல்ல அரித்துப்போடும் துருவைப்போல் உள்ளன. அந்தக் காரின் வெளிப்புறம் அழகாகத் தோன்றலாம், ஆனால் அந்த மேல்பூசியுள்ள சாயத்தின்கீழ் சீரழித்திடும் அரிப்பு நடந்துகொண்டிருக்கிறது.
இரக்கத்துக்கு ஓர் ஆதாரம் இருக்கையில் நாம் மன்னிக்க மறுப்பதும் நமக்கு ஆவிக்குரியபிரகாரம் தீங்கு செய்யும், இது அதைப்பார்க்கிலும் முக்கியமானது. யெகோவா தேவனின் பார்வையில், நாம், இயேசுவின் உவமையில் குறிப்பிட்ட அந்த அடிமையைப்போல் ஆகிவிடக்கூடும். அந்த அடிமையின் எஜமான் ஒரு மிகப் பெரிய தொகையான கடனை அவனுக்கு மன்னித்தார். எனினும், அதோடு ஒப்பிட மிகச் சிறிய ஒரு கடனை மன்னிக்கும்படி அவனுடைய உடனொத்த அடிமை அவனிடம் கெஞ்சி கேட்டபோது, அவன் கடுமையாக நடந்து மன்னியாதவனாக இருந்தான். அவ்வாறு நாம் மன்னிக்க மனமற்றிருந்தால், யெகோவா நம்முடைய பாவங்களை மன்னிக்க மறுப்பாரென்று இயேசு தெளிவாகக் கூறினார். (மத்தேயு 18:21-35) ஆகவே, நாம் மன்னியாதவர்களாக இருந்தால், கடவுளுக்கு முன்பாக நம்முடைய சுத்தமான மனச்சாட்சியையும் நம் எதிர்கால நம்பிக்கையையும்கூட இழந்துவிடக்கூடும்! (2 தீமோத்தேயு 1:3-ஐ ஒத்துப்பாருங்கள்.) அப்படியானால், நாம் என்ன செய்யலாம்?
மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
உண்மையான மன்னிப்பு இருதயத்திலிருந்து தோன்றுகிறது. இது, தீங்குசெய்தவரின் தவறை மன்னிப்பதையும் பழிவாங்குவதற்கான எந்த எண்ணத்தையும் விட்டுவிடுவதையும் உட்படுத்துகிறது. இவ்வாறு, முடிவான நீதித்தீர்ப்பும் தேவைப்பட்டால் பழித்தீர்ப்பும் யெகோவாவின் கைகளில் விடப்படுகின்றன.—ரோமர் 12:19.
எனினும், “எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது” என்பதைக் கவனிக்க வேண்டும். அது மன்னிக்க வேண்டியதாக இருக்கும்போதும் அவ்வாறு மன்னிக்க இடமளிப்பதில்லை. (எரேமியா 17:9) இயேசுதாமே பின்வருமாறு கூறினார்: “இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.”—மத்தேயு 15:19.
நன்றிகூறும்படி, நம்முடைய இருதயம் சரியானதைச் செய்வதற்குப் பயிற்றுவிக்கப்படலாம். எனினும், நமக்குத் தேவைப்படும் இந்தப் பயிற்றுவிப்பு மேலான ஒரு ஊற்றுமூலத்திலிருந்து வரவேண்டும். இதை நாம் தனிமையாகச் செய்ய முடியாது. (எரேமியா 10:23) கடவுளால் ஏவப்பட்ட சங்கீதக்காரனான ஒருவர் இதை உணர்ந்து கடவுளுடைய வழிநடத்துதலுக்காக ஜெபித்தார். ஜெபத்தில் அவர் யெகோவாவை நோக்கி: “உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்” என்று மன்றாடி கேட்டார்.—சங்கீதம் 119:26, 27.
மற்றொரு சங்கீதத்தின்படி, பூர்வ இஸ்ரவேலின் அரசன் தாவீது யெகோவாவின் ‘வழியை உணரலானார்.’ அதை அவர் நேரடியாக அனுபவித்து அதிலிருந்து கற்றார். ஆகவே, அவர் இவ்வாறு கூற முடிந்தது: “யெகோவா உருக்கமும் இரக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல யெகோவா தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.”—சங்கீதம் 103:8, 13, தி.மொ.
தாவீதைப்போல் நாமும் கற்றுக்கொள்ள வேண்டும். கடவுளுடைய மன்னிக்கும் பரிபூரண முன்மாதிரியையும், அதோடுகூட அவருடைய குமாரனுடையதையும் ஜெபத்துடன் படித்தறிய வேண்டும். இவ்வாறு, இருதயத்திலிருந்து மன்னிப்பதற்கு நாம் கற்றுக்கொள்ளலாம்.
எனினும், சிலர் இவ்வாறு கேட்கலாம்: வினைமையான பாவத்தைப்பற்றியதென்ன? எல்லா பாவங்களையும் மன்னிக்க வேண்டுமா?
சமநிலையை நாடுதல்
ஒருவருக்குப் பெரும்தீங்கு செய்யப்பட்டுவிட்டால், அந்த மனவேதனை மிகக் கடுமையாயிருக்கக்கூடும். முக்கியமாய், குற்றமற்ற ஒருவர் வினைமையான பாவத்துக்குப் பலியாகையில் இவ்வாறுள்ளது. ‘என்னை வேண்டுமென்றே வஞ்சித்து எனக்குக் கடும்தீங்குசெய்த ஒருவரை நான் எவ்வாறு மன்னிக்க முடியும்?’ சபைநீக்கம் செய்யப்படுவதற்குத் தகுதியான பெரும்பாவமாக இருக்கும் காரியத்தில், அதற்கு பலியானவர் மத்தேயு 18:15-17-ன் அறிவுரையைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம்.
எவ்வாறாயினும் அந்தத் தீங்குசெய்தவரின்பேரில் அதிகம் சார்ந்திருக்கலாம். அந்தத் தவறு செய்ததிலிருந்து உள்ளப்பூர்வமான மனந்திரும்புதலின் ஏதாவது அறிகுறி இருந்ததா? அந்தப் பாவி மாறியிருக்கிறாரா? ஒருவேளை உண்மையான திருத்தங்கள் செய்ய முயற்சியும்கூட செய்தாரா? உண்மையில் பயங்கரமான பாவங்களின் காரியத்திலுங்கூட இத்தகைய மனந்திரும்புதல் யெகோவாவின் பார்வையில் மன்னிப்புக்குக் காரணமாயுள்ளது. உதாரணமாக, இஸ்ரவேலின் சரித்திரத்தில் மிக அதிக பொல்லாத அரசர்களில் ஒருவரான மனாசேயை யெகோவா மன்னித்தார். எந்த ஆதாரத்தின்பேரில்? மனாசே முடிவில் தன்னைத் தாழ்த்தி தன் பொல்லாத வழிகளைவிட்டு மனந்திரும்பினதால் கடவுள் அவ்வாறு மன்னித்தார்.—2 நாளாகமம் 33:12, 13.
பைபிளில் உண்மையான மனந்திரும்புதல், மனப்பான்மையில் உண்மையான மாற்றத்தையும் செய்த எந்தக் குற்றங்களின்பேரிலும் இருதயப்பூர்வமான விசாரத்தையும் உட்படுத்துகிறது. தகுந்ததாயும் கூடியதாயும் இருந்தால், அந்தப் பாவத்துக்கு பலியானவருக்கு அந்தத் தீங்குக்கான எதிர்மாற்றீடு செய்ய முயற்சியெடுப்பதோடுகூட மனந்திரும்புதல் சேர்ந்து வருகிறது. (லூக்கா 19:7-10; 2 கொரிந்தியர் 7:11) அத்தகைய மனந்திரும்புதல் இல்லையெனில், யெகோவா மன்னிக்கிறதில்லை.a மேலும், ஒருமுறை ஆவிக்குரியபிரகாரம் அறிவொளியூட்டப்பட்டு ஆனால் இப்போது வேண்டுமென்றே, மனந்திரும்புதலில்லாமல் பழக்கமாய்த் தவறுசெய்வோரைக் கிறிஸ்தவர்கள் மன்னிக்கும்படி கடவுள் எதிர்பார்க்கிறதில்லை. (எபிரெயர் 10:26-31) மிதமீறிய காரியங்களில், மன்னிப்பு தகுதியற்றதாயிருக்கலாம்.—சங்கீதம் 139:21, 22; எசேக்கியேல் 18:30-32.
மன்னிப்பு கூடியதாக இருந்தாலும் இல்லாவிடினும் வினைமையான பாவத்துக்குப் பலியானவர் மற்றொரு கேள்வியைச் சிந்திக்க வேண்டும்: இந்தக் காரியம் முழுமையாய்த் தீர்க்கப்படும் வரையில், நான் தீவிரமாய்த் தீங்குணர்ந்து கோபத்துடன், கடும் மனவெழுச்சி கலவரத்தில் தொடர்ந்திருக்க வேண்டுமா? ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். அரசன் தாவீது, தன் சேனாதிபதியாகிய யோவாப், “தன்னைப்பார்க்கிலும் [யோவாபைப்பார்க்கிலும்] நீதியும் நற்குணமுமுள்ள இரண்டுபே”ரான அப்னேரையும் அமாசாவையும் கொலைசெய்தபோது, கடும் வருத்த உணர்ச்சியடைந்தார். (1 இராஜாக்கள் 2:32) தாவீது தன் கோபத்தையும் கடும் மனக்கசப்பையும் வாய்முறையாய் வெளிப்படுத்திக் கூறினார், சந்தேகமில்லாமல் ஜெபத்தில் யெகோவாவிடமும் கூறினார். எனினும், காலப்போக்கில், தாவீதினுடைய உணர்ச்சிகளின் கடுமை பெரும்பாலும் அமர்ந்தது. தன் நாட்களின் முடிவுவரை அந்தக் கடும் கோபத்தால் அவர் ஆளப்படவில்லை. யோவாபுடன் அவர் தொடர்ந்து உழைத்துக்கொண்டும் இருந்தார், ஆனால் அவர், மனந்திரும்பாத இந்தக் கொலைபாதகனை வெறுமனே மன்னித்து விட்டுவிடவில்லை. முடிவில் நீதிசெய்யப்படும்படி தாவீது பார்த்துக்கொண்டார்.—2 சாமுவேல் 3:28-39; 1 இராஜாக்கள் 2:5, 6.
மற்றவர்களின் வினைமையான பாவங்களால் தீங்குசெய்யப்பட்டவர்கள் தங்கள் முதல் கோபத்திலிருந்து அமர்வதற்கு சிறிது காலமும் முயற்சியும் எடுக்கலாம். தீங்குசெய்தவர் தன் தவறை ஒப்புக்கொண்டு மனந்திரும்புகையில் மனக்காயம் ஆறும் போக்கு பெரும்பாலும் எளிதாயிருக்கலாம். எனினும், தவறுசெய்தவரின் போக்கு என்னவாயினும், பாவத்துக்குப் பலியான குற்றமற்றவர், யெகோவாவின் நீதியையும் ஞானத்தையும் பற்றிய தன் அறிவிலும் கிறிஸ்தவ சபையிலும் ஆறுதலையும் தேறுதலையும் கண்டடையக் கூடியவராக இருக்க வேண்டும்.
ஒரு பாவியை நீங்கள் மன்னிக்கையில், அந்தப் பாவத்தைப் பொருட்படுத்தாது தள்ளிவிடுகிறீர்களென்று பொருள்படுகிறதில்லை என்பதையும் உணருங்கள். கிறிஸ்தவனுக்கு மன்னிப்பானது, அந்தக் காரியத்தை யெகோவாவின் கைகளில் நம்பிக்கையுடன் விட்டுவிடுவதைக் குறிக்கிறது. அவரே சர்வலோகம் முழுவதற்கும் நீதியுள்ள நியாயாதிபதி. அதற்குரிய சரியான காலத்தில் அவர் நீதியை நிறைவேற்றுவார். அது நம்பிக்கைத்துரோகிகளான “வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும்” நியாயந்தீர்ப்பதையும் உட்படுத்தும்.—எபிரெயர் 13:4.
மன்னிப்பதன் நன்மைகள்
சங்கீதக்காரனாகிய தாவீது பின்வருமாறு பாடினார்: யெகோவாவே, “நீர் நல்லவர், மன்னிக்கச் சித்தமாயிருக்கிறவர்; உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாரிடத்திலும் மிகுந்த கிருபையுடையவர்.” (சங்கீதம் 86:5, தி.மொ.) நீங்கள் யெகோவாவைப்போல் “மன்னிக்கச் சித்தமாயிருக்கி”றீர்களா? பல நன்மைகள் உண்டு.
முதலாவதாக, மற்றவர்களுக்கு மன்னிப்பது நல்ல உறவுகளை முன்னேற்றுவிக்கிறது. “ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” என்று பைபிள் கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்துகிறது.—எபேசியர் 4:32.
இரண்டாவதாக, மன்னிப்பது சமாதானத்தைக் கொண்டுவருகிறது. இது உடனொத்த மனிதரிடம் சமாதானமாயிருப்பதை மட்டுமல்ல, உள்ளான மனசமாதானத்தையும் கொண்டுவருகிறது.—ரோமர் 14:19; கொலோசெயர் 3:13-15.
மூன்றாவதாக, மற்றவர்களுக்கு மன்னிப்பது, நாம்தாமே மன்னிப்பு தேவைப்படுவோராக இருப்பதை நமக்கு நினைப்பூட்ட உதவிசெய்கிறது. ஆம், “எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகி”யிருக்கிறார்கள்.—ரோமர் 3:23.
முடிவாக, மற்றவர்களுக்கு மன்னிப்பது நம்முடைய பாவங்களைக் கடவுள் மன்னிப்பதற்கு வழியைச் செவ்வையாக்குகிறது. இயேசு சொன்னதாவது: “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரம பிதா உங்களுக்கும் மன்னிப்பார்.”—மத்தேயு 6:14.
இயேசுவின் மரணத்துக்குரிய அந்தப் பிற்பகலில், அவருடைய மனதிலிருந்த பல காரியங்களைக் கற்பனைசெய்து பாருங்கள். தம் சீஷர்களைப்பற்றியும், பிரசங்க ஊழியத்தைப்பற்றியும், முக்கியமாய் யெகோவாவிடமாகத் தம் உத்தமத்தைக் காத்தலைப்பற்றியும் அவர் கவலையுடையவராக இருந்தார். எனினும், வாதனையின் கழுமரத்தில் அவர் கடுமையாக வேதனை அனுபவிக்கும்போதும் எதைப்பற்றி பேசினார்? “பிதாவே இவர்களுக்கு மன்னியும்” என்பது அவருடைய கடைசி வார்த்தைகளில் அடங்கியிருந்தது. (லூக்கா 23:34) நாம் ஒருவருக்கொருவர் இருதயத்திலிருந்து மன்னிப்பதால் இயேசுவின் பரிபூரண முன்மாதிரியைப் பின்பற்றலாம்.
[அடிக்குறிப்புகள்]
a எனினும், மன்னிப்பு அளிப்பதாவென்பதைத் தீர்மானிக்கையில் மற்ற உண்மைகளையும் யெகோவா நிச்சயமாகவே கவனிக்கிறார். உதாரணமாக, தவறு செய்தவன் கடவுளுடைய தராதரங்களைப்பற்றி அறியாதிருந்தால், அத்தகைய அறியாமை குற்றப்பழியின் பாரத்தைக் குறைக்கலாம். தம்மைக் கொல்வோரை மன்னிக்கும்படி இயேசு தம்முடைய பிதாவைக் கேட்டபோது, இயேசு, தம்மைக் கொன்ற ரோமப் போர்ச் சேவகருக்காகப் பேசினதாய்த் தெரிகிறது. அவர் உண்மையில் யார் என்று அவர்கள் அறியாதிருந்ததால் ‘தாங்கள் செய்தது இன்னதென்று அறியாதிருந்தார்கள்.’ எனினும், அந்தக் கொலை செய்யப்படுவதற்குக் காரணராக இருந்த மதத் தலைவர்களே மேலும் அதிகமான குற்றப்பழியை உடையோராக இருந்தனர்—அவர்களில் பலருக்கு மன்னிப்பு கூடியதாயில்லை.—யோவான் 11:45-53; அப்போஸ்தலர் 17:30-ஐ ஒத்துப்பாருங்கள்.
[பக்கம் 5-ன் படங்கள்]
மன்னியாத அடிமையைப்பற்றிய இயேசுவின் உவமையின் குறிப்பை நீங்கள் அறிந்துகொண்டீர்களா?
[பக்கம் 7-ன் படங்கள்]
மற்றவர்களுக்கு மன்னிப்பது நல்ல உறவுகளை முன்னேற்றுவித்து மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது