சாத்தான்மீதும் அவன் செயல்கள்மீதும் வெற்றிபெறுதல்
“ஆகையால் கடவுளுக்கு அடங்கியிருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.”—யாக்கோபு 4:7, தி.மொ.
1. ‘பொல்லாங்கனின் கை’ இன்று மனிதகுலத்தை எவ்வாறு பாதித்திருக்கிறது?
யோபு சரியாகவே கூறினார்: ‘பூமிதானே பொல்லாங்கனின் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.’ (யோபு 9:24, NW) மனித சரித்திரத்திலேயே மிக அதிகக் கொடிய காலங்களை நாம் இப்போது எதிர்ப்படுகிறோம். ஏன்? ஏனெனில் இவை பூமியின்மேல் சாத்தானின் பேய்த்தன ஆதிக்கத்தின் ‘கடைசி நாட்களாக’ இருக்கின்றன. சாத்தானின் தூண்டுதலின்கீழ், ‘பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாகிக் கொண்டிருப்பது’ ஆச்சரியமல்ல. (2 தீமோத்தேயு 3:1, 13) மேலும், துன்புறுத்தல்கள், அநியாயங்கள், கொடூரங்கள், குற்றச்செயல்கள், பொருளாதாரக் குறைவுகள், தீரா நோய்கள், முதிர்வயதின் வேதனைகள், உணர்ச்சிவேக மனச்சோர்வுகள்—இவையும் இன்னுமதிகமும் நம்மீது சோகத் துக்க பாதிப்பைக் கொண்டிருக்கலாம்.
2. இன்று சாத்தானின் தாக்குதல்களை நாம் எவ்வாறு சமாளிக்கலாம்?
2 பெரிய சத்துருவாகிய பிசாசான சாத்தான், மனிதகுலத்தின்மீதும், முக்கியமாய்க் கடவுளின் உண்மையான வணக்கத்தாரின்மீதும் கவனத்தை ஊன்றவைத்துத் தாக்கிக்கொண்டிருக்கிறான். உத்தமத்தைக் காப்போராக இருக்கக்கூடியவர்கள் எல்லாரையும் கடவுளுக்கு எதிராகத் திருப்பி, அவர்களைத் தன்னுடனும் தன் பேய்த் தூதர்களுடனுங்கூட அழிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதே அவனுடைய குறிக்கோளாக இருக்கிறது. எனினும், நாம் உத்தமத்தில் நிலைத்திருந்தால், பிசாசானவன் நம்மைவிட்டு ஓடிப்போவான் என்று உறுதிகூறப்படுகிறோம். இயேசுவைப்போல், நாம் படும் பாடுகளின்மூலம் கடவுளிடமாகக் ‘கீழ்ப்படிதலைக் கற்று,’ அவருடைய தகுதியற்ற தயவினால் நித்திய ஜீவனை அடையலாம்.—எபிரெயர் 5:7, 8; யாக்கோபு 4:7; 1 பேதுரு 5:8-10.
3, 4. (அ) வெளிப்புறமான என்ன இக்கட்டுகளோடு பவுல் போராட வேண்டியிருந்தது? (ஆ) கிறிஸ்தவ மூப்பராக பவுலின் அக்கறை என்னவாக இருந்தது?
3 அப்போஸ்தலனாகிய பவுலும் பல வழிகளில் சோதிக்கப்பட்டார். கிறிஸ்துவின் ஊழியராகத் தன் ஆதாரச் சான்றுகளைக் கூறுபவராய் அவர் இவ்வாறு எழுதினார்: “நானும் அப்படியே, அவர்களிலும் அதிகமாய் என்று . . . சொல்லுகிறேன். உழைப்பிலே அதிகமாய், காவல்களில் அதிகமாய், அடிகளில் அதிகமாய், மரண அவதிகளில் பலமுறை; ஒன்று குறைய நாற்பதடியாக ஐந்துதரம் யூதர்களால் அடிபட்டேன்; மூன்றுதரம் பிரம்படிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் அகப்பட்டேன், நடுக்கடலிலே ஒரு இராப்பகல் போக்கினேன்; பிரயாணங்களில் பலமுறை, ஆற்று மோசங்களில், கள்ளர் மோசங்களில், சுய ஜாதி மோசங்களில், புறஜாதி மோசங்களில், நகர மோசங்களில், வனாந்தர மோசங்களில், சமுத்திர மோசங்களில், கள்ளச்சகோதரர் மோசங்களில், உழைப்பு களைப்புகளில், கண் விழிப்புகளில் பலமுறை; பசிதாகங்களில், உபவாசங்களில் பலமுறை; குளிர் நிர்வாணங்களில் அதிகமாய் ஊழியக்காரனாக விளங்குகிறவன்.
4 “வெளிக்காரியங்களாகிய இவைகளேயல்லாமல் எல்லாச் சபைகளையும்பற்றிய கவலையும் என்னை நாள்தோறும் நெருக்குகிறது. ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறிவிழுந்தால் என் மனம் எரியாதிருக்குமோ?” (2 கொரிந்தியர் 11:23-29, தி.மொ.) இவ்வாறு, வெளியிலிருந்து துன்புறுத்தல்களையும் இக்கட்டுகளையும் எதிர்ப்படும்போது பவுல் உத்தமத்தைக் காத்தார். மேலும் கிறிஸ்தவ மூப்பராக, சபையிலிருந்த பலவீன சகோதரரையும் சகோதரிகளையும் பலப்படுத்தி, அவர்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்ளும்படி உதவிசெய்வதில் அவர் ஆழ்ந்த அக்கறையுடையவராக இருந்தார். இன்று கிறிஸ்தவ மூப்பருக்கு எத்தகைய சிறந்த முன்மாதிரி!
துன்புறுத்தலின்கீழ் உத்தமத்தைக் காத்தல்
5. நேர்முகமானத் துன்புறுத்தலுக்குப் பதில் என்ன?
5 உத்தமத்தைத் தகர்ப்பதற்கு என்ன வழிமுறைகளைச் சாத்தான் பயன்படுத்துகிறான்? மேலே குறிப்பிட்டபடி, சாத்தானின் மிக அதிகக் கொடிய சூழ்ச்சிமுறைகளில் ஒன்று நேர்முகமானத் தூண்டிவிடுதலாகும், ஆனால் பதில் ஒன்று உண்டு. எபேசியர் 6:10, 11 நமக்கு அறிவுரை கூறுவதாவது: “கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு [அல்லது, “தந்திரச் செயல்கள்,” அடிக்குறிப்பு, NW] எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.”
6. யெகோவாவின் சாட்சிகள் ‘முற்றும் ஜெயங்கொள்கிறவர்களாய்’ வெளிவந்திருக்கின்றனர் என்று எவ்வாறு காட்டலாம்?
6 இந்தக் கடைசி நாட்களின்போது யெகோவாவின் சாட்சிகள் அடிக்கடி துன்பங்களோடு போராட வேண்டியிருந்திருக்கிறது. இவ்வாறு, பவுலுடன் நாமும் சொல்லக்கூடும்: “இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.” (ரோமர் 8:37) இது, 1933-க்கும் 1945-க்கும் இடையே நாசி சகாப்தத்தின்போது ஜெர்மனி, ஆஸ்திரியா, போலாந்து மற்றும் யுகோஸ்லாவியாவின் கான்சன்ட்ரேஷன் முகாம்களிலும், 1945-க்கும் 1989-க்கும் இடையே கிழக்கத்திய ஐரோப்பாவில் கம்யூனிஸ ஒடுக்குதலின் கீழும், இன்னும் அதிக சமீப காலங்களில் ஆப்பிரிக்காவின் பாகங்களையும் லத்தீன் அமெரிக்காவையும் தொல்லைப்படுத்தின துன்புறுத்தல்களின்போதும் யெகோவாவின் சாட்சிகளின் உத்தமத்தைப்பற்றிய பதிவால் நிரூபிக்கப்படுகிறது.
7. உத்தமத்தைக் காத்த தூண்டுவிக்கக்கூடிய என்ன முன்மாதிரிகள் எதியோபியாவிலிருந்து அறிக்கை செய்யப்பட்டன?
7 உத்தமத்தின் உணர்ச்சியூட்டும் ஒரு முன்மாதிரியை 1974-க்கும் 1991-க்கும் இடையே எதியோபியாவில் யெகோவாவின் சாட்சிகள் அளித்தனர். அரசியல் மனப்பான்மையுடைய சிறைபிடிப்போரில் ஒருவர் சிறைப்படுத்தப்பட்ட சகோதரர் ஒருவரிடம்: “உங்களை மறுபடியும் விடுதலைசெய்து செல்ல விடுவதைப் பார்க்கிலும் மிருகக்காட்சி சாலையிலிருந்து சிங்கங்களை விடுதலைசெய்வது மேலானது!” என்று சொன்னார். இந்தக் கொடூர துன்புறுத்துவோர் யெகோவாவின் ஊழியர்களைச் சித்திரவதைச் செய்தனர். பல ஆண்டுகளுக்குப் பின் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒன்று அவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றும்படி கட்டளையிட்டது. மற்றவர்களுக்கு எச்சரிக்கைக்கான ஒரு முன்மாதிரியாக, ஒரு சகோதரனின் உடல் யாவரும் காணும்படி காட்சியாக வைக்கப்பட்டது. மரணத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த மற்ற சகோதரர்கள், அதிக பரந்த நோக்கமுள்ள நீதிமன்றத்தால் விடுதலைசெய்யப்பட்டனர். ‘ஜெயங்கொண்ட’ இந்த உண்மையுள்ளவர்களில் சிலர், 1994-ம் ஆண்டின் தொடக்கத்தில், அடிஸ் அபாபாவில் “தெய்வீக போதனை” மாவட்ட மாநாட்டின் நிகழ்ச்சிநிரலில் பாகங்கள் உடையோராக இருந்தனர்.a—யோவான் 16:33; 1 கொரிந்தியர் 4:9-ஐ ஒத்துப்பாருங்கள்.
8. ‘இனப்பிரிவு சுத்திகரிப்பை’ எவ்வாறு சாத்தான் தன் நோக்கத்தைச் சாதிக்க முற்றிலும் பயன்படுத்திக்கொள்ள முயற்சிசெய்திருக்கிறான்?
8 நேரடியானத் தாக்குதலால் இத்தகைய உண்மையான பற்றுறுதியுள்ள சகோதர சகோதரிகளின் உத்தமத்தை முறிக்க முடியாமல் சாத்தான் தோல்வியடைந்தான். ஆகவே, வேறு என்ன தந்திர சூழ்ச்சிமுறைகளை அவன் பயன்படுத்துகிறான்? வெளிப்படுத்துதல் 12:12 இந்தக் கடைசி நாட்களைக் குறித்து இவ்வாறு சொல்கிறது: “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்.” கடவுளுடைய பற்றுறுதியுள்ள ஜனங்களைத் துன்புறுத்தல்களின் மூலம் அழித்துப்போட முடியாமல் தோல்வியுற்றிருப்பதால், அவன் தன் கோபாவேசத்தில் முழு ஜனத்தொகைகளையுமே படுகொலைசெய்ய முயற்சி செய்கிறான். சந்தேகமில்லாமல், மற்றவர்களோடுகூட யெகோவாவின் ஜனங்களையும் அழித்துப்போடும் நோக்கத்துடன் அவ்வாறு செய்கிறான். இவ்வாறு இனப்பிரிவு சுத்திகரிப்பு என்றழைக்கப்படுவது முன்னாள் யுகோஸ்லாவியாவின் பாகங்களில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும் லைபீரியா, புருண்டி மற்றும் ருவாண்டாவில் இன அழிவுசெய்தல் முயற்சிசெய்யப்பட்டது.
9. ஏன் சாத்தானின் தந்திர சூழ்ச்சிமுறைகள் அடிக்கடி தோல்வியடைகின்றன? உதாரணங்களைக் கொடுங்கள்.
9 எனினும், அடிக்கடி, சாத்தானின் தந்திர சூழ்ச்சிமுறைகள் அவன்மீதே திரும்பித் தாக்குகின்றன. எப்படியெனில் சாத்தானிய தொல்லைகள், நேர்மையான இருதயமுள்ள ஜனங்களைத் தங்கள் ஒரே நம்பிக்கை, யெகோவாவின் சாட்சிகள் யாவரறிய அறிவிக்கும் கடவுளுடைய ராஜ்யத்தின் பேரிலேயே தங்குகிறதென்பதை உணரும்படி விழிப்புறச் செய்கின்றன. (மத்தேயு 12:21) நிச்சயமாகவே, அக்கறையுள்ளவர்கள் ராஜ்யத்தினிடமாகத் திரண்டு வருகின்றனர்! உதாரணமாக, சண்டைச்சச்சரவு நிறைந்த போஸ்னியாவிலும் ஹெர்ஸிகோவிலும், மார்ச் 26, 1994 அன்று இயேசுவின் மரண நினைவுகூருதல் ஆசரிப்புக்கு 1,307 பேர் வந்தனர், இது முந்தின ஆண்டின் எண்ணிக்கையைப் பார்க்கிலும் 291 அதிகமானது. வந்தவர்களின் உச்ச எண்ணிக்கை சரஜெவோ (414), ஸீனிட்ஸா (223), டூஸ்லா (339), பானியா லூக்கா (255), இன்னும் மற்ற பட்டணங்களிலும் பதிவாகியிருந்தன. அருகிலிருக்கும் க்ரோயேஷியாவில் வந்திருந்தவர்களின் புதிய உச்சநிலை எண்ணிக்கை 8,326. தங்களைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் வன்முறைச் செயல்கள் அந்நாடுகளில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளை, ‘ஆண்டவர் வருமளவும் அவர் மரணத்தைப் பிரஸ்தாபித்து வரும்படியான’ கட்டளைக்குக் கீழ்ப்படிவதிலிருந்து தடுத்து வைக்கவில்லை.—1 கொரிந்தியர் 11:26, தி.மொ.
சண்டைசச்சரவு நிறைந்த ருவாண்டாவில்
10, 11. (அ) கிறிஸ்தவ ருவாண்டா என்று கருதப்படுவதில் என்ன நடந்தது? (ஆ) உண்மையுள்ள மிஷனரிகள் எவ்வாறு தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்திக் கூறினர்?
10 1993-ல் 2,080 ராஜ்ய பிரஸ்தாபிகளைக் கொண்ட ருவாண்டாவில், 4,075 பேர் அதன் “தெய்வீக போதனை” மாவட்ட மாநாட்டுக்கு வந்திருந்தனர், 230 பேர் முழுக்காட்டப்பட்டனர். இவர்களில் 142 பேர் துணைப் பயனியர் சேவைக்கு உடனடியாக மனு செய்தனர். 1994-ல் நடத்தப்பட்ட பைபிள் படிப்புகள் 7,655-க்கு அதிகரித்தன—சாத்தானுக்கு விருப்பமில்லாத மிகப் பலவாயின! ஜனத்தொகையின் மிகப் பெரும்பான்மையினர் தங்களைக் கிறிஸ்தவர்களென்று சொல்லிக்கொள்கிற போதிலும் குலமரபினர் ஒருவருக்கொருவர் படுகொலைகள் செய்வதில் ஈடுபட்டனர். வாடிகனின் எல்லாசர்வேட்டோர் ரோமனோ என்ற செய்தித்தாள் பின்வருமாறு ஒப்புக்கொண்டது: “இது முற்றிலுமான இன அழிவுசெய்தல், துரதிர்ஷ்டமாய்க் கத்தோலிக்கருங்கூட அதற்குப் பொறுப்பானோராக இருக்கின்றனர்.” ஐந்து லட்சம் ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் மாண்டதாக மதிப்பிடப்பட்டது. ஏறக்குறைய 20 லட்சம் பேர் வீடற்றவர்களாக்கப்பட்டனர் அல்லது தப்பியோடும்படி வற்புறுத்தப்பட்டனர். யெகோவாவின் சாட்சிகள், வன்முறையில் ஈடுபடாதத் தங்கள் கிறிஸ்தவ நடுநிலைவகிப்பைக் காத்துக்கொண்டு ஒன்றுசேர்ந்து தங்கியிருக்க முயற்சி செய்தனர். நூற்றுக்கணக்கான நம்முடைய சகோதர சகோதரிகள் கொல்லப்பட்டனர். ஆனால் 13 பேர் கொல்லப்பட்ட 65 ராஜ்ய பிரஸ்தாபிகளுள்ள ஒரு சபையில், ஆகஸ்ட் 1994-ற்குள்ளாக கூட்டத்திற்கு ஆஜரானவர்கள் எண்ணிக்கை 170-க்கு அதிகரித்தது. மற்ற நாடுகளிலுள்ள சாட்சிகளிடமிருந்தே இடருதவிப் பொருட்கள் முதலாவதாக வந்துசேர்ந்தன. தப்பிப்பிழைத்திருப்போரின் சார்பாக நம் ஜெபங்கள் ஏறெடுக்கப்படுகின்றன.—ரோமர் 12:12; 2 தெசலோனிக்கேயர் 3:1, 2; எபிரெயர் 10:23-25.
11 ருவாண்டாவிலிருந்த மூன்று மிஷனரிகள் தப்பினர். அவர்கள் எழுதுவதாவது: “உலகமுழுவதிலிருக்கும் எங்கள் சகோதரர் இதைப்போன்ற அல்லது இன்னும் மோசமான நிலைமைகளை எதிர்ப்பட வேண்டியிருந்திருப்பதை நாங்கள் உணருகிறோம். இதெல்லாம் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் கடைசி நாட்களுக்குரிய அடையாளத்தின் பாகமென நாங்கள் அறிந்திருக்கிறோம். இருப்பினும், ஒருவர் தானே நேரில் உட்பட்டிருக்கையில், காரியங்களின் மெய்ம்மையைக் கடுமையாய் உணர்த்தி, உயிர் எவ்வளவு அருமையானதென்பதைத் தான் மதித்துணரும்படி செய்கிறது. வேதவசனங்கள் சில எங்களுக்குப் புதிய முக்கியத்துவத்தை உடையவையாகியுள்ளன. முந்தினவைகள் இனிமேலும் மனதில் தோன்றப்போகாத அந்தக் காலத்திற்காக நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறோம். இதற்கிடையில் யெகோவாவின் சேவையில் நாங்கள் சுறுசுறுப்பாய் ஈடுபட்டிருக்க விரும்புகிறோம்.”
உத்தமத்தைக் காத்துவரும் இளைஞர்
12, 13. (அ) உத்தமத்தைக் காத்த என்ன போக்கை ஓர் இளம் பெண் மேற்கொண்டாள்? (ஆ) இன்று நம் இளைஞர் ஊக்கமூட்டுதலை எங்கே கண்டடையலாம்?
12 சத்தியத்தினிமித்தம் குடும்ப உறுப்பினரால் வெறுத்துத் தள்ளப்படுவோர் “நூறத்தனையாக” பலனளிக்கப்படுவரென்று இயேசு குறிப்பாகத் தெரிவித்தார். (மாற்கு 10:29, 30) இது, வடக்கத்திய ஆப்பிரிக்காவிலுள்ள பத்து வயது பெண்ணாகிய என்டல்யாவைக் குறித்ததில் உண்மையாயிருந்தது. கடவுளுடைய பெயரை—யெகோவா என்பதை—தான் கேட்டவுடன் நேசித்தாள். அவள் யெகோவாவின் சாட்சிகளுடன் படித்து 90 நிமிடங்கள் நடந்து கூட்டங்களுக்குச் செல்வாள், திரும்பிவருகையிலும் அவ்வாறே நடப்பாள். அவளை எதிர்த்த அவளுடைய குடும்பத்தார், கூட்டத்திலிருந்து திரும்பிவருகையில் வீட்டுக்குள் வரவிடாமல் கதவை அடைத்து வெளியிலேயே இருக்க விட்டபோதிலும் அவள் தவறவில்லை. 13 வயதில் வீடுவீடாகப் பிரசங்கிக்கத் தொடங்கினாள், குடும்பத்தின் எதிர்ப்பு கடுமையாயிற்று. ஒரு நாள் உறவினர்கள் அவள் கைகளையும் பாதங்களையும் கட்டி கடும் சூரிய வெப்பத்தில் ஏழு மணிநேரங்கள் கிடக்கும்படி விட்டனர். அவ்வப்போது அழுக்குத் தண்ணீரையும் அவள்மீது ஊற்றினர். அவளைக் கொடூரமாய் அவர்கள் அடித்து, அவளுடைய கண்களில் ஒன்றையும் கெடுத்துப்போட்டனர், கடைசியாக வீட்டிலிருந்தும் அவளைத் துரத்திவிட்டனர். எனினும், அவள் ஒரு மருத்துவமனையில் வேலையைக் கண்டடைந்து முடிவில் மருத்துவ தாதியாகத் தகுதிபெற்றாள். தன் 20-ம் வயதில் அவள் முழுக்காட்டப்பட்டு துணைப் பயனியராக உடனடியாய்ப் பதிவுசெய்துகொண்டாள். அவளுடைய உத்தம நிலைநிற்கையால் மனங்கவரப்பட்டு, அவளுடைய குடும்பத்தினர் அவளைத் திரும்பத் தங்கள் வீட்டுக்குள் வரவேற்றனர், அவர்களில் ஒன்பது பேர் வீட்டு பைபிள் படிப்புகளை ஏற்றனர்.
13 என்டல்யா, 116-ம் சங்கீதம், முக்கியமாய் 1-4 வசனங்களிலிருந்து மிகுந்த ஊக்கமூட்டுதலைப் பெற்றாள். இதை அவள் மறுபடியும் மறுபடியுமாக வாசித்தாள்: “யெகோவா என் சத்தத்தையும் என் விண்ணப்பங்களையும் கேட்டருளினார், அவரில் அன்புகூருகிறேன். அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தருளினார். உயிருள்ளளவும் நான் அவரைத் தொழுதுகொள்ளுவேன். மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டன; பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தன; இக்கட்டையும் துயரத்தையும் அடைந்தேன். அப்பொழுது நான் யெகோவாவின் திருநாமத்தைக் கூப்பிட்டு, யெகோவா, என் ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன்.” யெகோவா இத்தகைய ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார்!
14. போலாந்து நாட்டினரான சாட்சிகள் எவ்வாறு தலைசிறந்த உத்தமத்தைக் காட்டினர்?
14 இயேசுவின் நாளில் இருந்ததுபோல், துன்புறுத்தலைத் தூண்டி எழுப்புவதற்கு, மதவெறியைச் சாத்தான் அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறான்—ஆனால் வெற்றியடையவில்லை. 1994 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தரப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டபடி போலாந்திலுள்ள நம் சகோதரர்களின் முன்மாதிரி தலைசிறந்ததாயுள்ளது. இளைஞருங்கூட உத்தமத்தைக் காப்போராகத் தங்களை நிரூபிக்கும்படி தேவைப்படுத்தப்பட்டனர். 1946-ல், அத்தகையோரில் 15 வயதான ஒரு பெண்ணுக்கு இவ்வாறு சொல்லப்பட்டது: “கத்தோலிக்க சிலுவை அடையாளம் போடு. இல்லையேல் துப்பாக்கிக்குண்டு உனக்குக் காத்திருக்கிறது!” உத்தமத்தைக் காத்ததினால், அவளை ஒரு காட்டுக்குள் இழுத்துச்சென்று, பயங்கரமாய்ச் சித்திரவதைசெய்து சுட்டுக்கொன்றனர்.—மத்தேயு 4:9, 10-ஐ ஒத்துப்பாருங்கள்.
சாத்தானின் மற்ற தந்திர சூழ்ச்சிகள்
15, 16. (அ) சாத்தானின் பேய்த்தனக் கொள்கை என்ன, நாம் அவனை எவ்வாறு எதிர்த்து நிற்கலாம்? (ஆ) ஏன் நம் இளைஞர் இடறிவிழ வேண்டியதில்லை?
15 “ஆட்சிசெய் அல்லது அழி” என்பதே நிச்சயமாகச் சாத்தானின் பேய்த்தனக் கொள்கையாயுள்ளது! அவன் தன் படைக்கலச்சாலையில் கொடூர போராயுதங்கள் பலவற்றை வைத்திருக்கிறான். ஆகவே, அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எச்சரிப்பது ஆச்சரியமல்ல: “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.” (எபேசியர் 6:12, 13) பொருளாசைகள், இழிவான பொழுதுபோக்கும் பிரச்சாரமும், சாத்தானிய இசை, பள்ளியில் சகாக்களின் வற்புறுத்தல், போதைப்பொருள் துர்ப்பழக்கம், குடிவெறி—இவற்றில் எதுவாயினும் நம் வாழ்க்கையைப் பாழாக்கக்கூடும். ஆகையால், இந்த அப்போஸ்தலன் மேலும் தொடர்ந்து: “பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்” என்று அறிவுரை கூறுகிறார்.—எபேசியர் 6:16.
16 சாத்தான் இந்த உலகத்தை மூழ்கவைக்கும் கட்டற்ற இசையைக் கருதுகையில் இன்று இது முக்கியமாய்த் தேவைப்படுகிறதெனத் தோன்றுகிறது. சில காரியங்களில் சாத்தானிய வணக்கத்தோடு நேரடியானத் தொடர்பு உள்ளது. சான் டியகோ (அ.ஐ.மா.) மாநில முதன்மை அதிகாரியின் அலுவலகத்திலிருந்து வந்த ஓர் அறிக்கை பின்வருமாறு கூறியது: “இங்கே எங்களுக்கு ஓர் இசையரங்கு நிகழ்ச்சி நடந்தது, அதில் அந்த இசைக்கருவியாளர் குழு 15,000 சிறுவர்களை ‘னாதத்சா’ (Natas)—அதாவது, சாத்தான் (Satan) என்பது பின்னிருந்து முன்னாக எழுத்துக் கூட்டப்பட்டுள்ளது—பாடுவோராகக் கொண்டிருந்தது.” சாத்தானிய வணக்கமானது, பருவ வயதினர் இடறி உள்ளே விழும் ஒரு குழியாக விவரிக்கப்பட்டுள்ளது, “ஏனெனில் அவர்கள் மனக்கசப்புற்றும், கோபத்துடனும் தனிமையாயும் அலைந்துதிரிந்து கொண்டிருக்கின்றனர்.” கிறிஸ்தவ சபையிலுள்ள இளைஞரே, நீங்கள் இடறிவிழ வேண்டியதில்லை! சாத்தானின் அம்புகள் ஒருபோதும் ஊடுருவக்கூடாத ஆவிக்குரிய போர்க்கவசத்தை யெகோவா உங்களுக்கு அருளுகிறார்.—சங்கீதம் 16:8, 9.
17. உணர்ச்சிவசப்பட்ட மனச்சோர்வை எவ்வாறு வென்று மேற்கொள்ளலாம்?
17 சாத்தானின் அக்கினியாஸ்திரங்கள், உணர்ச்சிவேகங்களைத் தாக்கி காரியங்களைச் சாதித்துக்கொள்ளும்படி திட்டமிடப்பட்டிருக்கின்றன. உடல் சம்பந்த நோய் அல்லது ஆழ்ந்த மனச்சோர்வுநிலை போன்ற வாழ்க்கையின் நெருக்கடிகளின் மூலம், தான் பயனற்றவனென்ற ஓர் உணர்ச்சியைக் கொண்டிருக்கும்படி நம் சத்துருவானவன் சிலரைச் செய்விக்கக்கூடும். கடவுளுடைய சேவையில் பல மணிநேரங்கள் தான் செலவிட முடியாதிருப்பதனால் அல்லது சபை கூட்டங்கள் சிலவற்றிற்கு வரத் தவறுவதால் ஒருவர் மனவாட்டமுடையவராகலாம். மூப்பர்களும் தயவான இருதயமுள்ள மற்ற சகோதர சகோதரிகளும் காட்டும் அன்புள்ள கவனிப்பு கடினமான மனநெருக்கடிநிலைகளைப் போக்கும்படி உதவிசெய்யலாம். தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களை யெகோவா நேசிக்கிறார் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள். (1 யோவான் 4:16, 19) சங்கீதம் 55:22 (NW) இவ்வாறு கூறுகிறது: “யெகோவாவின்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.”
18. எந்தச் சாத்தானிய தந்திரங்களோடு சிலர் போராட வேண்டியுள்ளது?
18 சாத்தானின் சூழ்ச்சித் “தந்திரங்கள்” சமீபத்தில் இன்னுமொரு வகையில் தோன்றியுள்ளன. சில நாடுகளில் பருவ வயதினர் பலர், தாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்தபோது, சாத்தானிய வணக்கத்தார் கொடுவெறிக் காமங்கொண்டு தங்களைத் தவறாகப் பயன்படுத்தினரென்ற உணர்ச்சியில் ஆழ்த்தும் வரம்புமீறிய எண்ணங்களை அனுபவித்திருக்கின்றனர். இத்தகைய எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன? விரிவான ஆராய்ச்சி செய்தும், உலகப்பிரகாரமான நிபுணரின் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று வெகுவாய் வேறுபடுகின்றன. சிலர் அத்தகைய எண்ணங்களை உண்மையான ஞாபகங்களெனக் கருதுகின்றனர், மற்றவர்கள்—கேள்விக்குரிய வசியத்துயில்முறை மருத்துவத்தால் ஒருவேளை உட்செலுத்தப்பட்ட—கற்பனைத் தோற்றங்கள் எனக் கருதுகின்றனர். மற்றும் சிலர், சிறு பிள்ளைப் பருவத்தின் ஏதோ உணர்வதிர்ச்சிக் கோளாரினால் தூண்டப்படுகிற ஒருவகை மருட்சியெனக் கருதுகின்றனர்.
19. (அ) என்ன எண்ணங்களோடு யோபு போராட வேண்டியிருந்தது? (ஆ) மூப்பர்கள் எவ்வாறு எலிகூவின் முன்மாதிரியைப் பின்பற்றலாம்?
19 கடவுளுடைய ஊழியராகிய யோபு, எலிப்பாஸ் மற்றும் சோப்பாரின் மூலமாகச் சாத்தான் அளித்த ‘மனங்கலங்கச் செய்யும் எண்ணங்களோடு’ போராட வேண்டியிருந்ததென்பது கவனத்தைத் தூண்டுவதாக உள்ளது. (யோபு 4:13-18, NW; 20:2, 3) இவ்வாறு யோபு ‘சஞ்சலத்தை’ அனுபவித்தார், இது அவருடைய மனதைத் துன்புறுத்தின ‘பயங்கரங்களைப்’ பற்றி ‘சொல்தடுமாறி’ தன்போக்கில் பேசுவதில் விளைவடைந்தது. (யோபு 6:2-4; 30:15, 16) யோபு சொல்வதை எலிகூ அமைதியாய்க் கேட்டுக்கொண்டிருந்து, காரியங்களைப் பற்றியதில் யெகோவாவின் சர்வஞான கருத்தைக் காணும்படி அவருக்கு உள்ளப்பூர்வமாய் உதவிசெய்தார். அவ்வாறே இன்று, தெளிந்துணர்வுள்ள மூப்பர்கள் துன்பப்படுகிறவர்களுக்கு மேலுமாக ‘தொல்லையைக்’ கூட்டாமல், அவர்களுக்காகக் கவலையுள்ளோராக இருக்கின்றனரென்று காட்டுகின்றனர். மாறாக, எலிகூவைப்போல், அவர்கள் பொறுமையுடன் அவர்களுக்குச் செவிகொடுத்துக் கேட்டு பின்பு கடவுளுடைய வார்த்தையாகிய சாந்தப்படுத்தும் எண்ணெய்யைப் பயன்படுத்துகின்றனர். (யோபு 33:1-3, 7; யாக்கோபு 5:13-15) இவ்வாறு, உண்மையான அல்லது கற்பனையான உணர்வதிர்ச்சிகளால் தன் உணர்ச்சிவேகங்கள் தொல்லைப்படுத்தப்படுபவராக இருக்கும் ஒருவர், அல்லது யோபு இருந்ததுபோல் ‘சொப்பனங்களாலும் தரிசனங்களாலும் திகிலடைந்திருப்பவர்,’ சாந்தப்படுத்தும் வேதப்பூர்வ ஆறுதலைச் சபைக்குள் கண்டடையலாம்.—யோபு 7:14; யாக்கோபு 4:7.
20. மனக்கலக்கமடைந்திருக்கும் கிறிஸ்தவர்களுக்குத் தங்கள் ஆவிக்குரிய அமைதிநிலையைக் காத்துக்கொள்ள எவ்வாறு உதவிசெய்யலாம்?
20 ஒரு முறையிலோ மற்றொரு முறையிலோ, இந்தப் பயங்கர எண்ணங்களுக்குப் பின்னால் சாத்தான் இருக்கிறான் என்று தற்போது கிறிஸ்தவன் நிச்சயமாயிருக்கலாம். சபையிலுள்ள சிலர் இவ்வகையில் துன்பப்பட்டால், அத்தகைய திகிலூட்டும் மன அழுத்தங்கள், அவர்களுடைய ஆவிக்குரிய அமைதிநிலையைக் குலைப்பதற்கு அது சாத்தானால் செய்யப்படும் நேர்முக முயற்சியென்பதைக் காண அவர்கள் ஞானமுள்ளோராக இருப்பர். அவர்களுக்குப் பொறுமையும் பகுத்துணர்வுமுள்ள வேதப்பூர்வ ஆதரவும் தேவை. துயரத்தை அனுபவிப்போர், ஜெபத்துடன் யெகோவாவிடம் செல்வதன்மூலமும் ஆவிக்குரிய மேய்ப்பரின் உதவியிலிருந்து பயனடைவதன்மூலமும், இயல்புக்கு மிஞ்சிய வல்லமையைத் தங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வர். (ஏசாயா 32:2; 2 கொரிந்தியர் 4:7, 8, NW) இவ்வாறு அவர்கள் உண்மையுடன் சகித்து நிலைத்திருக்கக்கூடியவராவர், மேலும் உள்நுழையும் தீங்கான எண்ணங்கள் சபையின் சமாதானத்தைப் பாதிக்க அனுமதிப்பதற்கு மறுப்பர். (யாக்கோபு 3:17, 18) ஆம், “அப்பாலே போ சாத்தானே” என்று இயேசு சொன்னபோது காட்டின அதே மனப்பான்மையைக் காட்டி, பிசாசுக்கு எதிர்த்து நிற்கக் கூடியோராக இருப்பர்.—மத்தேயு 4:10; யாக்கோபு 4:7.
21. சாத்தானின் வஞ்சக வழிகளைக் குறித்து வேதவாக்கியங்கள் எவ்வாறு எச்சரிக்கின்றன?
21 அப்போஸ்தலன் பவுல் 2 கொரிந்தியர் 11:3-ல் பின்வருமாறு எச்சரித்தபடி, சாத்தானின் நோக்கமானது எப்படியாவது நம் மனதைக் கெடுத்துப்போட வேண்டுமென்பதே என்று நாம் அறிந்திருக்கிறோம்: “சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.” கடவுளிடமிருந்து தொடர்பகற்றப்பட்டிருக்கும் தற்போதைய மாம்சமான எல்லாரின் அல்லது மனித சமுதாயத்தின் சீர்குலைந்த நிலை, நோவாவின் நாளின் கேடுகெட்ட வன்முறைச் செயல்களில் ஈடுபட்ட இனக்கலப்புப் பிறவியரான ‘அடித்து வீழ்த்துபவர்களால்’ தூண்டப்பட்ட இழிவான செயலை நமக்கு நினைப்பூட்டுகிறது. (ஆதியாகமம் 6:4, 12, 13, அடிக்குறிப்பு, NW; லூக்கா 17:26) ஆகையால், சாத்தான் தன் கோபாவேசத்தை முக்கியமாய்க் கடவுளுடைய ஜனங்களுக்கு எதிராக வெளிப்படுத்துவதற்குத் தந்திரச் செயல்களையும் வஞ்சக வழிவகைகளையும் மேற்கொள்வது ஆச்சரியமல்ல.—1 பேதுரு 5:8; வெளிப்படுத்துதல் 12:17.
22. சாத்தான் நீக்கப்பட்டுப்போயிருக்க, என்ன ஆசீர்வாதங்களை எதிர்பார்க்கலாம்?
22 பைபிள் புத்தகமாகிய யோபின் முடிவான அதிகாரங்களில் சாத்தான் குறிப்பிடப்படுகிறதுமில்லை. மனிதர் கடவுளிடமாக உத்தமத்தைக் காக்க முடியாதென்ற அவனுடைய பொல்லாத சவால், யோபின் உத்தமநிலைநிற்கையால் பொய்யென நிரூபிக்கப்பட்டது. அவ்வாறே, சமீப எதிர்காலத்தில் உத்தமத்தைக் காப்போரின் ஒரு “திரள் கூட்டம்,” ‘பெரிதான உபத்திரவத்திலிருந்து வெளி வருகையில்’ சாத்தான் அபிஸ்ஸுக்கு உட்படுத்தப்படுவான். உண்மையுள்ள யோபு உட்பட, விசுவாசமுள்ளோரான ஆண்களும் பெண்களும், யோபுக்குப் பலனளிக்கப்பட்டதைப் பார்க்கிலும் மகத்தான பரதீஸிய ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழும்படி அந்தத் ‘திரள் கூட்டத்தைச்’ சேர்ந்துகொள்வர்!—வெளிப்படுத்துதல் 7:9-17, தி.மொ.; 20:1-3, 11-13; யோபு 14:13.
[அடிக்குறிப்புகள்]
a 1992 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தரப் புத்தகம் (ஆங்கிலம்), பக்கம் 177-ஐப் பாருங்கள்.
மறுபார்வைக் கேள்விகள்
◻ உத்தமத்தைக் காக்கும் என்ன சிறந்த முன்மாதிரிகளை யோபு, இயேசு மற்றும் பவுல் வைத்தனர்?
◻ உத்தமத்தைக் காத்தவர்கள் எவ்வாறு சாத்தானைத் தைரியமாய் எதிர்ப்பட்டனர்?
◻ சாத்தானின் தந்திர சூழ்ச்சிகளை இளைஞர் எவ்வாறு எதிர்க்கலாம்?
◻ சாத்தானிய தந்திரங்களைச் சமாளிக்க என்ன செய்யலாம்?
[பக்கம் 7-ன் படம்]
எதியோபியாவில், கொல்லப்பட்ட தங்கள் தகப்பன்மாரின் முன்மாதிரியைப் பின்பற்றி மெஸ்வாட், யோலான் என்பவர்கள் யெகோவாவை முழுநேரமாகச் சேவிக்கின்றனர்
[பக்கம் 7-ன் படம்]
வடக்கத்திய ஆப்பிரிக்காவில் உத்தமத்தைக் காத்த இளம் பெண், என்டல்யா