தேவதூதர்கள் நம் மத்தியில் இருக்கின்றனரா?
அது அதிவேகமாக நடந்துவிட்டது. சிந்தனையில் ஆழமாக மூழ்கி, தான் இருக்கும் சூழ்நிலையை முழுவதுமாக மறந்து மெரிலின் இரயில் பாதை மேல் நிதானமாக நடைபோட்டாள். தீடீரென ‘கடகட’ என்று உருளும் பெரும் சப்தம் ஒன்றை அவள் கேட்டாள். அவள் மேலே பார்த்தாள், இரயில் தன்னை நோக்கி வந்துகொண்டிருக்கும் பாதையில் தான் நேரடியாக நின்றுகொண்டிருப்பதை அவள் கண்டாள்! மெரிலின் பயத்தால் ஸ்தம்பித்துப் போனாள். அந்த இரயில் அவ்வளவு அருகாமையில் இருந்ததால், எஞ்ஜின் டிரைவரின் நீலநிறக்கண்களையும் திகிலால் தாக்கப்பட்டிருந்த முகத்தையும் அவளால் பார்க்க முடிந்தது. அடுத்து என்ன நடந்தது என்பதை மெரிலின் மறக்கவேயில்லை. “பின்னாலிருந்து என்னை ஒரு இராட்சதன் தள்ளியது போல் எனக்குத் தோன்றியது” என்று அவள் சொன்னாள். “நான் இரயில் பாதையிலிருந்து தூக்கி எறியப்பட்டு அதற்கு சற்று அப்பால் கரிந்து போயிருந்த நிலக்கரி மேல் சென்று விழுந்தேன்.” சிறிது காயம் ஏற்பட்ட நிலையில், தன்னைக் காப்பாற்றிய நபருக்கு நன்றி சொல்ல மெரிலின் எழுந்தாள்—ஆனால் எவருமே கண்ணுக்குத் தென்படவில்லை! அவளுடைய முடிவு? “என்னைக் காவல் காத்துக்கொண்டிருந்த தேவதூதர் என் உயிரைப் பாதுகாத்தார். அது வேறு யாராகத்தான் இருந்திருக்க முடியும்?” என்று மெரிலின் சொல்கிறாள்.
எதையுமே ஆராயாது ஏற்க விரும்பாத மனப்பான்மை கொண்ட உலகம் திடீரென தேவதூதர்கள் பேரில் அதன் முழுக்கவனத்தையும் செலுத்துவது போல் தோன்றுகிறது. சமீப ஆண்டுகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், கலையரங்க நாடகங்கள் போன்றவற்றில் வானுலகத்துக்குரிய நபர்களைப் பற்றிய தலைப்புகள் பேரில் நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன. மத சம்பந்தமான புத்தகங்கள் அதிகமாக விற்பனையாகும் பட்டியலில் தேவதூதர்களைப் பற்றிய புத்தகங்கள் முதலிடத்தை வகிக்கின்றன. தேவதூதர் சங்கங்கள், கருத்தரங்குகள், செய்திமடல்கள் போன்றவையும்கூட இருக்கின்றன. உங்களுக்கு உதவிசெய்ய பயிலரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன—‘தேவதூதர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு’ என்று அதை ஒரு கட்டுரை சொல்கிறது.
தேவதூதர்களின் இயக்கத்தை வசதியாக அனுகூலப்படுத்திக்கொண்டு சந்தர்ப்பவாத வணிகர்கள் எண்ணற்ற நுகர்வோர் பொருட்களுக்கு வாடிக்கை பிடிக்கின்றனர். “தேவதூதர்களின் உருவங்கள் போடப்பட்ட எந்தப் பொருளாக இருந்தாலும்சரி அது அதிக லாபம் தரும் பொருளாக உள்ளது” என்று ஐக்கிய மாகாணங்களில் உள்ள கடை பங்குதாரர் ஒருவர் கூறுகிறார். தேவதூதர்களைப் பற்றி அநேக புத்தகங்கள் விற்பனையாவது மட்டுமல்லாமல், “தேவதூதர்களின் உருவச்சிலைகள், ஆடைகளில் ஆபரணங்களாக குத்தும் பின்கள், பொம்மைகள், டி-ஷர்ட்டுகள், விளம்பரங்கள் மற்றும் வாழ்த்து செய்திகள் அனுப்பும் கார்டுகள்” முதலியவற்றை அவர் பட்டியலிடுகிறார்—இவையனைத்தும் பெருந்திரளாக பணத்தைக் குவிக்கின்றன. ஒரு பத்திரிகை எழுத்தாளர் அதை “அமோக லாபங்கள்” என்று அழைக்கிறார்.
ஆனால் இது ஒரு அர்த்தமற்ற பாணி மட்டுமல்ல என்று தேவதூதர்களை ஆதரித்துப் பேசுபவர்கள் அழுத்தமாகக் கூறுகின்றனர். அவர்கள் சொல்வதை ஆதரிப்பதற்கு, அநேக அத்தாட்சிகளை அளிக்கின்றனர்—தேவதூதர்களோடு அவர்கள் கொண்டிருந்த “மெய்-வாழ்க்கை” சந்திப்புகள். மனித வடிவில் ஒரு தேவதூதனைக் கண்டதாக சிலர் சொல்கின்றனர். மற்றவர்கள் ஒரு வெளிச்சத்தைக் கண்டதாகவும், ஒரு குரலைக் கேட்டதாகவும், தேவதூதர்களின் பிரசன்னத்தை உணர்ந்ததாகவும் அல்லது தேவதூதருக்குரிய தூண்டுதலை உணர்ந்ததாகவும் நம்புகின்றனர். மெரிலினைப் போன்று அநேகர் ஒரு தேவதூதன் தங்களுடைய உயிரைப் பாதுகாத்ததாக சொல்கின்றனர்.
என்ன நடந்துகொண்டிருக்கிறது? “ஆவிக்குரியத்தன்மையில் ஒரு புத்தெழுச்சி நடந்துகொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்” என்று “மீமானிட” சந்திப்புகளின் பேரில் இரண்டு புத்தகங்களை எழுதியிருக்கும் ஜான் வெஸ்ட்டர் ஆன்டர்சன் சொல்கிறார். மற்றொரு புத்தகத்தை எழுதுவதற்கு உதவிய அல்மா டேனியல் அதை ஒரு படி கூடுதலாக எடுத்துச் செல்கிறார். “அநேகமநேக ஆட்களை சென்றெட்டுவதற்காக தேவதூதர்கள் தங்களைப் பற்றி மற்றவர்கள் அறிந்துகொள்ளும்படி செய்ய வேண்டும் என்ற கட்டளையின் கீழ்” இப்போது இருக்கின்றனர் என்று அவர்கள் சொல்கிறார்கள். “நாம் அவர்களைக் குறித்து அவ்வளவு அதிகமாகக் காண்பதற்கு காரணம் என்னவென்றால், அவர்கள் அவ்விதமாக அறியப்படும்படி விரும்புகின்றனர். அதை அவர்கள் செய்கின்றனர்.”
இது உண்மையாகவே அப்படியா? அல்லது தேவதூதர்கள் பேரில் தற்போது உள்ள கவர்ச்சிக்குப் பின்னால் வேறு ஏதாவது உள்ளதா? இதைக் கண்டுபிடிப்பதற்கு நாம் கடவுளுடைய வார்த்தையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். தேவதூதர்களைப் பற்றிய உண்மை பைபிளில் அடங்கியுள்ளது. அதை நாம் பார்ப்போம்.