உங்களைக் காப்பதற்கென்று ஒரு தூதரா?
உங்களுக்கென்று ஒரு காவல் தூதர் இருக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நிறைய பேருக்கு இப்படிப்பட்ட நம்பிக்கை இருக்கிறது. கனடாவின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு பெண்ணுக்கு விசேஷ வரம் இருப்பதாக சொல்லுகிறார்கள். உங்கள் முழு பெயரையும் 8,000 ரூபாயையும் கொடுத்துவிட்டால் உங்கள் காவல் தூதரை அறிமுகப்படுத்தி வைப்பதாக அவள் சொல்கிறாள். முதலில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி, அதன் ஒளியை உற்றுப்பார்த்து தியானம் செய்கிறாள். பிறகு உங்களுடைய காவல் தூதர் அவளுக்கு தரிசனமாகி, ஏதோ செய்தியை தெரிவித்ததாக சொல்கிறாள். அது மட்டுமா? உங்கள் காவல் தூதர் எப்படி இருப்பார் என்பதையும் வரைந்து காட்டுகிறாள்.
இதைக் கேட்டவுடன் சிலருக்கு பிரெஞ்சு நாட்டு அரசன் ஒன்பதாம் லூயியின் கதை நினைவுக்கு வரலாம். தூதர்களின் தலைவர் மிக்கேல் சம்மனசுவின் இறக்கையிலிருந்து விழுந்த விலையுயர்ந்த சிறகுகள் இவருக்கு கிடைத்ததாக ஒரு கதை உண்டு. இந்தக் கதையை நம்பாத சிலரும்கூட அந்தக் கனடா நாட்டுப் பெண் சொல்வதை உடனடியாக நம்பிவிடுகின்றனர்.
தூதர்களிடம் வசீகரிக்கப்படும் மக்கள்
சமீப காலங்களில் தூதர்களிடம் மக்களுக்கு பெரும் கவர்ச்சி ஏற்பட்டுள்ளது. டெலிவிஷன், திரைப்படங்கள், புத்தகங்கள், பத்திரிகைகள், செய்தி மடல்கள் எல்லாவற்றிலும் இந்தச் செய்தி அடிபடுகிறது. அது என்ன செய்தி? பெரும்நோய் தாக்கியவர்களுக்கும், மீளா துயரில் மூழ்கியவர்களுக்கும் தூதர்கள் ஆறுதலளிக்கிறார்களாம். ஞானத்தை அருள்கிறார்களாம், சாவின் கோரப்பிடியிலிருந்தும்கூட காப்பாற்றுகிறார்களாம். ஐக்கிய மாகாணங்களில், வாரந்தோறும் ஒரு டிவி தொடர் ஒளிபரப்பாகிறது. இதை விரும்பிப் பார்க்கும் நேயர்கள் சுமார் 2 கோடி பேர். தேவதூதர்கள் மக்களின் வாழ்வில் தலையிட்டு நல்லது செய்வதாக அத்தொடர் சித்தரிக்கிறது. ஒரு புத்தக கடையில் தூதர்களின் புகழ்பாடும் புத்தகங்கள் 400-க்கும் அதிகமாக கிடைக்கின்றன.
சமீபத்தில் வெளியான ஒரு புத்தகம் போர்வீரர்களின் உயிர்களை காவல் தூதர்கள் காப்பாற்றியதைக் குறித்த வீரதீர கதைகளை விவரிக்கிறது. வாகனங்களில் ஒட்டப்படும் காவல் தூதர் ஸ்டிக்கர்கள் டிரைவர்களை காப்பதாக தெரிவிக்கின்றன. தூதர்களைப்பற்றி நிறைய தெரிந்துகொள்ளுங்கள், அதற்கு நாங்கள் உதவிசெய்கிறோம் என்று சங்கங்களும் மாநாடுகளும் கருத்தரங்குகளும் உற்சாகக்குரல் கொடுக்கின்றன.
ஐலீன் ஃபிரீமேன் தூதர்களைப் பற்றி மூன்று புத்தகங்களை எழுதியிருக்கிறார். தூதர்களின் சிறப்புகளை மட்டுமே கூறும் ஒரு பத்திரிகையையும் பிரசுரிக்கிறார். அவர் எழுதுகிறதாவது: “விண்ணுலகில் இருப்பதைப் போலவே மண்ணுலகிலும் காவல் தூதர்கள் இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். விண்ணுலகில் கடவுளைத் துதிப்பது மட்டுமே இவர்களின் வேலை இல்லை. மண்ணுலகின் மைந்தர்களையும் உயிரினங்கள் அனைத்தையும் காப்பாற்றுவதும் இவர்களின் கடமையே. நாம் கருவில் உருவானவுடனே நமக்கென்று காவல் தூதர் ஒருவர் நியமிக்கப்படுகிறார். கருவாக தாயின் வயிற்றில் வளர்ந்து, மண்ணுலகில் ஜனித்து, பெரிய ஆளாகி, உலக வாழ்வை அனுபவித்து, கடைசியில் விண்ணுலக பதவியை அடையும்வரை நம்மைக் கண்காணித்து வருகிறார்.” காவல் தூதர்களைப் பற்றி மக்களுடைய கருத்து இதுவே.
இன்னல்களும் தொல்லைகளும் நிறைந்த இக்காலங்களில், நம் அருகேயே இருந்து நம்மைக் கண்மணிபோல் காக்கும் காவல் தூதர்கள் இருப்பதை நம்புவது மனதுக்கு என்னே ஆறுதலளிக்கிறது. கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் இதைப் பற்றி என்ன சொல்கிறது? தூதர்களோடு தொடர்புகொள்ள நாம் முயலலாமா? நம்முடைய ஒழுக்க தராதரங்களையும் மத நம்பிக்கைகளையும் பற்றி அவர்களுக்கு அக்கறை இருக்கிறதா? அவர்களிடமிருந்து என்ன உதவியை நாம் எதிர்பார்க்கலாம்? பின்வரும் கட்டுரை இக்கேள்விகளுக்கு பதிலளிக்கும்.