தேவதைகள் மேல் பைத்தியம்
“நம் ‘அனைவருக்கும்’ வழிநடத்தும், பாதுகாக்கும் தேவதைகள்/தேவதூதர்கள் உண்டு . . . அவைகளிடம் நாம் குழந்தைகளைப் போல் தஞ்சம் அடைய வேண்டும். அதாவது நாம் அவற்றை முழுமையாக நம்பி, அன்பு காட்டி, பணிவோடு நடந்துகொள்ள வேண்டும். அப்போது அவை நம்மீது ஏராளமாக ஆசீர்வாதங்களை பொழியும். நம்மோடு விளையாடும். நம்மை கவனித்துக்கொள்ளும். நம் நோயை குணமாக்கும். கண்ணுக்குத் தெரியாத கைகளால் நம்மை தொட்டு அரவணைக்கும். நாம் விரும்பியதை கொடுப்பதற்கே எப்போதும் முயற்சி செய்யும்.”—“ஏன்ஞ்ஜல் லெட்டர்ஸ்” என்ற புத்தகத்திலிருந்து.
தேவதைகள்/தேவதூதர்களைப் பற்றி இதுபோன்ற பிரபல கருத்துக்கள் ஆர்வத்தை சுண்டி இழுக்கிறது என்பது உண்மையே. “புதிய ஆன்மீகம்” என்ற கருத்து இப்போது நிலவுகிறது. அதன்படி நம் ஒவ்வொருவருக்கும் குறைந்தது ஒரு தேவதை/தேவதூதன் நியமிக்கப்பட்டுள்ளது. நமக்கு ஆறுதல் அளித்து, ஆபத்திலிருந்து காப்பாற்றுவது அதன் கடமை. உங்களது தேவதை/தேவதூதன் அபார சக்திபடைத்தது. அன்புமிக்கது. நீங்கள் அதன் சொல்கேட்டு நடக்க வேண்டும் அல்லது அதை வணங்க வேண்டும் என்றெல்லாம் அது உங்களிடம் எதிர்பார்ப்பதில்லை. அது உங்களை நியாயம் தீர்ப்பதும் இல்லை; உங்களை கண்டிப்பதும் இல்லை. அது எப்போதும் உங்கள் பக்கம்தான். உங்கள் நலனையே பெரிதாக நினைக்கும். உங்களுடைய ஒவ்வொரு ஆசையையும் நிறைவேற்ற ஆர்வத்தோடு இருக்கும். இன்று, தேவதைகள்/தேவதூதர்களைப் பற்றிய இந்த எல்லா கருத்துக்களையும் மக்கள் பலர் மனதார நம்புகிறார்கள்.
தேவதைகள் அல்லது தேவதூதர்களைப் பற்றிய நம்பிக்கை புதியதல்ல. ஆதி காலம் முதல், மக்களின் மத நம்பிக்கைகளில் தேவதைகள்/தேவதூதர்கள் முக்கியமாக இடம்பெற்றிருக்கின்றன. இதற்கு அக்காலத்து சித்திரம், சிலை, இசை ஆகிய கலைகளே சாட்சி. பண்டைய யூதர்களுடைய உடன்படிக்கை பெட்டி மற்றும் ஆலய அலங்காரத்தில் கேரூபின்கள் என்னும் ஒருவகை தேவதூதர்கள் இடம்பெற்றார்கள். இன்றும், கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளையும் கதீட்ரல்களையும் தேவதைகள்/தேவதூதர்கள் அலங்கரிக்கின்றன. அருங்காட்சியகங்களில் தேவதைகளின் ஏராளமான சிலைகளையும் சித்திரங்களையும் காணலாம்.
தேவதைகள்/தேவதூதர்கள் பிரபலம்
சமீபத்தில் ஒருசில நாடுகளில் தேவதூதர்கள் மிகவும் பிரபலமடைந்து உள்ளார்கள். இறந்துபோனவர்கள் தேவதைகள்/தேவதூதர்களாக பூமிக்கு வந்து, நன்மைகள் செய்வதைப் போல் சினிமாக்களில் காட்டுகிறார்கள். ஒரு படத்தில், பேஸ்-பால் விளையாட்டில் தோற்றுக்கொண்டிருந்த குழுவுக்கு தேவதூதர்கள் உதவுவதைப்போல் காட்டியிருந்தார்கள். இன்னொரு படத்தில், தன் காதலியை கொன்றவர்களை பழிக்குப் பழிவாங்க காதலனின் காவல் தேவதை/தேவதூதன் அவனுக்கு உதவுகிறது. இப்படி தேவதைகள்/தேவதூதர்கள் உதவி செய்வதை மையமாக கொண்ட ஒரு டிவி நிகழ்ச்சி அமெரிக்காவில் சக்கைப்போடு போடுகின்றது.
தேவதைகள்/தேவதூதர்களைப் பற்றிய பாடல்களும் பெருக்கெடுக்கின்றன. கடந்த சில பத்தாண்டுகளில், அமெரிக்காவில் மட்டும், பத்து பாடல்களில் ஒருபாடல் தேவதை/தேவதூதனைப் பற்றி பாடிய பிரபல பாடலாகும். 1990-களின் மத்தியில், 120-க்கு மேல் “தேவதை சிறு-கடைகள்” அமெரிக்காவில் திறக்கப்பட்டுள்ளன. இக்கடைகளில், தேவதை உருவம் பொறிக்கப்பட்ட சிறுசிறு சிலைகள், டாலர்கள், பேப்பர், பேனா போன்ற ஸ்டேஷ்னரிகள் ஆகியவற்றை விற்பதோடு, தேவதை உருவத்தால் அலங்கரிக்கப்பட்ட குழந்தைகள் விளையாடும் கிலுகிலுப்பையும் விற்கிறார்கள். விண்ணுலகிலிருந்து வரும் இந்தத் தேவதைககள்/தேவதூதர்களோடு மனிதர்கள் எப்படி தொடர்புகொள்ளலாம் என்பதை கற்று தருவதற்காக கருத்தரங்கங்கள் நடத்தப்படுகின்றன. நோட்டீஸ்கள் விநியோகிக்கப்படுகின்றன. தேவதூதர்களை கண்டதாக கதைகளைக் கூறும் மக்களை பத்திரிகைகள், செய்தித்தாள்கள், ரேடியோ, டிவி பேட்டி காண்கின்றன.
பல நூறு புத்தகங்கள்
தேவதூதர்களைப் பற்றி புத்தகங்கள் புற்றீசல் போல வெளிவந்த வண்ணம் உள்ளன. நியூயார்க் நகரிலுள்ள ஒரு பெரிய புத்தக கடையில் தேவதூதர்களைப் பற்றி, குறிப்பாக காவல் தூதர்களை பற்றி 500-க்கு மேல் பல்வேறு புத்தகங்கள் கிடைக்கின்றன. காவல் தூதர்களுடன் எப்படி தொடர்பு கொள்வது, அவர்களின் பெயர்களை எப்படி அறிந்துகொள்வது, அவர்களோடு எப்படி பேசுவது, அவர் தரும் உதவிகளை எப்படி பட்டியலிடுவது ஆகிய விவரங்களை தெரிந்துகொள்ள முடியும் என்ற வாக்குறுதியை இப்புத்தகங்கள் வாசகருக்கு தருகின்றன. இப்புத்தகங்களில் தேவதூதர்களைப் பற்றி நிறைய கதைகளும் உண்டு. அவற்றில் சில: தேவைப்படும் நேரத்தில் தேவதூதர்கள் தோன்றினார்கள். அசுர வேகத்தில் மோதவரும் காரிடமிருந்து மக்களை தேவதூதர்கள் அலேக்காக தூக்கி காப்பற்றினார்கள். உயிர்க்கொல்லி நோயை குணமாக்கினார்கள். துயரத்தில் இருந்தவர்களுக்கு ஆறுதல் தந்தார்கள். போர்க்களத்தில் வீரர்களை பாதுகாத்தார்கள். இப்படியெல்லாம் சேவை செய்யும் இத்தூதர்கள், மனிதர்கள் தவறுசெய்யும்போது, “தவறுக்கான மனவருத்தத்தையோ, திருந்திவிட்டதற்கான அடையாளத்தையோ எதிர்பார்ப்பதில்லை. அல்லது [மனிதர்கள்] கோட்பாடுகளுக்கு அடிபணிந்து நடக்கவேண்டும் என்றும் அவர்கள் எதிப்பாப்ப்பதில்லை.” ஆகவே, இந்தக் காலத்தில், தேவதூதர்களுடன் இப்படிப்பட்ட “சந்திப்புகள்” மக்கள் திருந்தும் வாய்ப்பு கம்மி. தேவதூதர்களை சந்தித்ததாக கூறும் மக்களுக்கு ஒருவித இனிய உணர்வு மட்டுமே மிஞ்சியிருக்கிறது.
அழுத்தங்களாலும், தொல்லைகளாலும் விழிப்பிதுங்கி தவிக்கும் இன்றைய மக்களுக்கு, இதுபோன்ற கதைகள் இனிய தாலாட்டு. ஆனால் இவற்றை நம்பலாமா? இதில் நாம் கவனிக்க வேண்டியது ஏதேனும் உள்ளதா?
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
பலர் தேவதைகள்/ தேவதூதர்களை பார்த்ததாக நினைக்கிறார்கள்