தூதர்கள் உங்களுக்கு எப்படி உதவுவார்கள்
தூதர்கள் உண்மையில் இருக்கிறார்கள், அதுவும் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள் என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. யெகோவா தேவனின் ஊழியராகிய தானியேல் விண்ணுலகைப் பற்றி ஒரு தரிசனம் கண்டார். அதை இப்படி அவர் விவரிக்கிறார்: ‘ஆயிரமாயிரம்பேர் [கடவுளைச்] சேவித்தார்கள்; கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்.’—தானியேல் 7:10.
இதை சற்று கவனியுங்கள். தானியேல் தூதர்களின் எண்ணிக்கையை மட்டுமே சொல்கிறதில்லை. அவர்களைப்பற்றி ஏராளமான தகவலையும் தருகிறார். அவர்கள் கடவுளுக்கு பணிவிடை செய்கிறார்கள். அவர்கள் அவருடைய ஊழியக்காரர். இதனால்தான் சங்கீதக்காரன் இவ்வாறு பாடினார்: “கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள். கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.”—சங்கீதம் 103:20, 21.
தேவதூதர்கள் பூமியில் வாழ்ந்து பின்பு விண்ணுலகிற்கு சென்றார்கள் என பைபிள் தெரிவிக்கிறதில்லை. மண்ணுலகைப் படைப்பதற்கு முன்பே யெகோவா விண்ணுலகில் தூதர்களைப் படைத்தார். கடவுள் ‘பூமிக்கு அஸ்திவாரத்தைப்போட்ட போது கடவுளின் புத்திரர் எல்லாரும் கைதட்டி ஆர்ப்பரித்தார்கள்.’—யோபு 38:4-7, NW.
தூதர்களை நம்மால் பார்க்கமுடியாது. அவர்கள் சக்திவாய்ந்தவர்கள். அறிவுக்கூர்மையுள்ள ஆவி சிருஷ்டிகள். பைபிளில் ஆவி சிருஷ்டியைப் பற்றி பேசும்போது, மாலாக் என்ற எபிரெய வார்த்தையும் ஏக்கலாஸ் என்ற கிரேக்க வார்த்தையும் “தேவதூதன்” என மொழிபெயர்க்கப்படுகின்றன. இந்த வார்த்தைகளை பைபிளில் சுமார் 400 தடவை காணலாம். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் “தூதுவர்” என்ற ஒரே அர்த்தம்தான்.
தேவதூதர்களோடு சந்திப்புகள்
தூதர்களின் வேலை தூது செல்வது. ஒருசமயம் காபிரியேல் தூதன் மரியாளுக்கு காட்சியளித்தார் என்ற விஷயம் உங்களுக்கும்கூட தெரிந்திருக்குமே. இது பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காபிரியேல், கன்னியாக இருந்த மரியாளுக்கு ஒரு மைந்தன் பிறப்பார், அவருக்கு இயேசு என்று பெயர் சூட்டவேண்டும் என்பதாக சொன்னார். (லூக்கா 1:26-33) அதற்கு பின்பு வயல்வெளியில் இருந்த சில மேய்ப்பர்களுக்கும்கூட ஒரு தேவதூதன் காட்சியளித்தார். அவர் இவ்வாறு அறிவித்தார்: “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.” (லூக்கா 2:8-11) ஆகார், ஆபிரகாம், லோத்து, யாக்கோபு, மோசே, கிதியோன், இயேசு ஆகியோருக்கும் இன்னும் பலருக்கும் தூதர்கள் தோன்றினார்கள், அவர்களுக்கு செய்திகளைக் கொண்டுவந்தார்கள் என பைபிள் பதிவு காட்டுகிறது.—ஆதியாகமம் 16:7-12; 18:1-5, 10; 19:1-3; 32:24-30; யாத்திராகமம் 3:1, 2; நியாயாதிபதிகள் 6:11-22; லூக்கா 22:39-43; எபிரெயர் 13:2.
எல்லா சமயத்திலும் கடவுளுடைய நோக்கங்கள் நிறைவேறுவதற்காகவே தேவதூதர்கள் செய்தி கொண்டுவந்தார்கள். அதில் சம்பந்தப்பட்டிருந்த மனிதர்களின் நோக்கங்கள் நிறைவேறுவதற்காக அல்ல என்பதையும் நாம் கவனிக்க தவறக்கூடாது. தூதர்கள் கடவுளுடைய பிரதிநிதிகளாக அனுப்பப்பட்டார்கள். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே வந்தார்கள். கடவுள் அவர்களை அனுப்பிய அந்த சமயத்தில் மட்டுமே வந்தார்கள். மனிதர்கள் அவர்களை வரவழைக்கவில்லை.
உதவிக்காக தூதர்களிடம் வேண்டுதல் செய்யலாமா?
கஷ்ட காலங்களில் தூதர்களிடம் வேண்டுதல் செய்வது சரியா? சரிதான் என்றால், எந்தத் தூதரால் நமக்கு அதிக உதவி செய்யமுடியுமோ அந்தத் தூதரின் பெயரை தெரிந்துகொள்ள நாம் துடிப்போம். இதற்காகவே அநேக தூதர்களின் பெயர், பட்டம், பதவி, பொறுப்பு ஆகியவற்றை ஊகித்து சில விற்பனை புத்தகங்கள் பட்டியலிடுகின்றன. “விண்ணுலகின் டாப் டென்” என்றும் “மேற்கத்திய உலகின் பிரபல தூதர்கள்” என்றும் நீண்ட பட்டியலையே தருகிறது ஒரு புத்தகம். அந்தப் பட்டியலோடுகூட, உன் கண்களை மூடிக்கொள், தூதனின் பெயரை மெதுவாக திரும்பத் திரும்ப பலதடவை சொல், ஆழமாக இழுத்து மூச்சுவிடு, இப்படி “அவர்களோடு தொடர்புகொள்ள உன்னை தயார் செய்துகொள்” என ஆலோசனையும் கொடுக்கிறது.
ஆனால் பைபிள் இதற்கு முற்றிலும் மாறாக சொல்கிறது. கடவுளுடைய உண்மையுள்ள தூதர்கள் மிகாவேல், காபிரியேல் ஆகியோரின் பெயர்களைத்தவிர வேறு யாருடைய பெயரையும் சொல்கிறதில்லை. (தானியேல் 12:1; லூக்கா 1:26) தூதர்கள் வெறும் ஒரு சக்தியோ ஆற்றலோ இல்லை, அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பெயரைத் தாங்கிய தனிச்சிறப்பு வாய்ந்த ஆவி ஆட்கள் என்பதைக் காட்டுவதற்கு இந்தப் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம்.
ஒன்றை கவனித்திருக்கிறீர்களா? தூதர்களில் சிலர் தங்களுடைய பெயரைச் சொல்ல மறுத்திருக்கிறார்கள். யாக்கோபு ஒரு தூதனிடம் பெயரை கேட்டார். அவரோ அதை சொல்ல மறுத்துவிட்டார். (ஆதியாகமம் 32:29) அதைப் போலவே, யோசுவாவிடம் ஒரு தூதன் வந்தார். அவர் யார் என்று கேட்டபோது அவர் “கர்த்தருடைய சேனையின் அதிபதி” என்று மட்டுமே சொன்னார். (யோசுவா 5:14) சிம்சோனின் பெற்றோருக்கு ஒரு தூதன் காட்சியளித்தார். அவர்கள் அவருடைய பெயரைக் கேட்டபோது “எனது பெயரை ஏன் கேட்கின்றாய்? அது வியப்புக்கு உரியது” என்று அவர் சொன்னார். (நியாயாதிபதிகள் [நீதித் தலைவர்கள்] 13:17, 18, பொது மொழிபெயர்ப்பு) தேவதூதர்களுடைய பெயர்களின் பட்டியலை பைபிள் கொடுப்பதில்லை. இதன்மூலம் தூதர்களுக்கு அவசியமற்ற மரியாதையையும் வணக்கத்தையும் கொடுப்பதிலிருந்து நம்மைக் காக்கிறது. அவர்களிடம் விண்ணப்பம் செய்யும்படி அது போதிப்பதில்லை. இதைப் பற்றி நாம் அடுத்து சிந்திப்போம்.
கடவுளை வேண்டுதல்
ஆவி மண்டலத்தில் நடப்பவற்றைப் பற்றி நாம் என்னவெல்லாம் தெரிந்திருக்க வேண்டுமோ அவை எல்லாம் பைபிளில் எழுதப்பட்டிருக்கின்றன. “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி . . . பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 தீமோத்தேயு 3:16, 17) அநேக தூதர்களின் பெயரை நாம் தெரிந்துகொள்ளவேண்டுமென்று கடவுள் விரும்பியிருந்தால், அவருடைய வார்த்தையாகிய பைபிளில் அவர் அவற்றை நமக்கு வெளிப்படுத்தியிருப்பார். தூதர்களோடு எப்படி தொடர்புகொள்ள வேண்டும், ஜெபத்தில் அவர்களோடு எப்படி பேசவேண்டும் என்பதைப் போன்ற விஷயங்களை நமக்கு கற்பிக்க வேண்டுமென்று கடவுள் விரும்பியிருந்தால் அவற்றை பைபிளில் கண்டிப்பாக பதிவு செய்து வைத்திருப்பார்.
அதற்கு பதிலாக, இயேசு கிறிஸ்து இவ்வாறு கற்பித்தார்: “நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு. . . . நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.’’ (மத்தேயு 6:6, 9) பைபிளின்படி சரியான கருத்து இதுவே: நாம் தூதர்களிடம் வேண்டுதல் செய்ய வேண்டியதில்லை, அவர்களிடம் ஜெபிக்க வேண்டியதுமில்லை; ஆனால் தூதர்களையும் படைத்தவராகிய கடவுளிடம் மட்டுமே ஜெபிக்கவேண்டும். அவருடைய பெயர் புரியாத புதிர் இல்லை, அதை அறிந்துகொள்ள தரிசனம் பார்த்து சொல்பவர் தேவையில்லை. கடவுளுடைய பெயரை மறைக்கவுங்கூட முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அது பைபிள் பதிவில் 7,000-க்கும் மேற்பட்ட தடவை காணப்படுகிறது. உதாரணமாக, விண்ணுலகத் தந்தையைக் குறித்தே சங்கீதக்காரன் “யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர்” என்று பாடினார்.—சங்கீதம் 83:17.
சரியானபடி நாம் ஜெபத்தில் யெகோவாவை அணுகினால் அவர் கட்டாயம் செவிகொடுப்பார். எவ்வளவு வேலை இருந்தாலும் அவற்றை ஒதுக்கிவிட்டு நம் ஜெபத்தைக் கேட்பார். இந்த உறுதியை பைபிள் நமக்கு தருகிறது: “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.”—2 நாளாகமம் 16:9.
தூதர்களும் ஒழுக்கமும்
செய்தித்தொடர்பு சாதனங்கள் அடிக்கடி வருணிப்பதுபோல நியாயத்தீர்ப்பு செய்வது தூதர்களுடைய வேலை இல்லை. மனிதர்களை நியாயந்தீர்க்கும் அதிகாரம் தூதர்களுக்கு கொடுக்கப்படவில்லை. யெகோவா, “நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு [இயேசு கிறிஸ்துவுக்கு] ஒப்புக்கொடுத்திருக்கிறார்.” இருந்தாலும் யெகோவாவே ‘யாவருக்கும் நியாயாதிபதியாக’ இருக்கிறார். (யோவான் 5:22; எபிரெயர் 12:23) ஆனால், நம் வாழ்க்கையை நாம் நடத்தும்முறையைக் குறித்து தூதர்களுக்கு அக்கறை இல்லை என நினைத்தோம் என்றால் அது மிகத் தவறு. இயேசு இவ்வாறு சொன்னார்: “மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது.”—லூக்கா 15:10.
நடப்பவற்றையெல்லாம் கைகட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்ப்பது தூதர்களின் வேலை இல்லை. ஏனென்றால் கடந்த காலங்களில் கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்ற அவருடன் சேர்ந்து வேலையும் செய்திருக்கிறார்கள். உதாரணமாக, பண்டைய எகிப்தின் மக்களைத் தண்டிக்க கடவுள் தூதர்களைப் பயன்படுத்தினார். சங்கீதம் 78:49-ன் பிரகாரம், (திருப்பாடல்கள், பொ.மொ.) “தம் சினத்தையும், சீற்றத்தையும் வெஞ்சினத்தையும் இன்னலையும்—அழிவு கொணரும் தூதர்க் கூட்டத்தை—அவர் ஏவினார்.” அதைப்போலவே, ஒரு இரவில் ஒரே தூதன் 1,85,000 அசீரிய போர்வீரர்களை கொன்றுபோட்டதாக பைபிள் அறிவிக்கிறது.—2 இராஜாக்கள் 19:35.
இதைப் போலவே, கடவுளுடைய நீதியுள்ள தராதரங்களுக்கு கீழ்ப்படிய விடாப்பிடியாக மறுத்து, மற்றவர்களுக்கு கெடுதல் செய்யும் ஆட்களை தூதர்கள் அழிப்பர். ‘தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படுவார்.’—2 தெசலோனிக்கேயர் 1:7, 8.
ஆகவே கடவுளுடைய உண்மையுள்ள தூதர்கள் அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுகிறார்கள். அவருடைய நீதியுள்ள தராதரங்களை ஆதரிக்கிறார்கள். இதன்மூலம் எப்போதும் அவருடைய சித்தத்தையே செய்கிறார்கள் என கடவுளுடைய வார்த்தை காட்டுகிறது. கடவுளுடைய தூதர்களின் உதவியை நாம் நாடினால் கடவுளுடைய சித்தம் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். பின்பு அதைச் செய்வதற்கு நம்மாலான முழு முயற்சியை எடுப்பது அவசியம்.
காவல் தூதர்கள்
தூதர்களுக்கு மானிடர்களாகிய நம்மீது அக்கறை இருக்கிறதா? அவர்கள் நம்மை பாதுகாப்பார்களா? அப்போஸ்தலன் பவுல் கேட்டார்: “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் [தூதர்கள்] அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” (எபிரெயர் 1:14) பவுலின் கேள்விக்கு ஆம் என்பதே பதில் என்பதில் சந்தேகமில்லை.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ எனும் மூன்று எபிரெயர்கள் பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சார் நிறுத்திவைத்த பொற்சிலையை வணங்க மறுத்தார்கள். அதனால் மிகவும் சூடாக்கப்பட்ட அக்கினிச்சூளையிலே தூக்கி எறியப்பட்டார்கள். அக்கினியால் கடவுளின் அந்த உண்மையுள்ள ஊழியர்களை சேதப்படுத்த முடியவில்லை. ராஜா சூளையினுள் ‘நாலு பேரை’ பார்த்தார், “நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது” என்று அவர் சொன்னார். (தானியேல் 3:25) சில வருடங்கள் கழித்து, கடவுளுக்கு உண்மையுள்ளவராக இருந்த தானியேல் சிங்கங்களின் கெபியில் போடப்பட்டார். அவரும் எந்தச் சேதமுமின்றி தப்பித்துக்கொண்டார், பின்னர் “தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்” என்று அவர் சொன்னார்.—தானியேல் 6:22.
கிறிஸ்துவின் சீஷர்கள் அடங்கிய சபை பொ.ச. முதல் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. அப்போது தூதர்கள் மறுபடியும் பூமிக்கு வந்தார்கள், அப்போஸ்தலர்களை சிறையிலிருந்து விடுவித்தார்கள். (அப்போஸ்தலர் 5:17-24; 12:6-12) கடலில் பயணம் செய்கையில் பவுல் உயிரோடு கரை திரும்புவாரா என்பதே சந்தேகமாயிருந்தது. அவர் பத்திரமாக ரோமாபுரிக்கு வந்து சேருவார் என்ற உறுதிமொழியை அவருக்கு கொடுத்தது தூதர் ஒருவரே.—அப்போஸ்தலர் 27:13-24.
கடவுளுக்கு நம்மால் பார்க்கமுடியாத தேவதூதர்களின் பெரும் சேனை இருக்கிறது. எலிசாவுக்கும் அவருடைய வேலைக்காரனுக்கும் பாதுகாப்பளிக்க இந்தச் சேனையை கடவுள் அனுப்பி வைத்தார். அதைப்போலவே தங்களுக்கும் பாதுகாப்பளிப்பார் என்பதில் யெகோவா தேவனின் இக்கால ஊழியர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. (2 இராஜாக்கள் 6:15-17) ஆம், “கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.”—சங்கீதம் 34:7; 91:11.
தூதர்கள் அறிவிக்கும் செய்தி
யெகோவா தேவனுக்கு சேவை செய்யும் ஆட்களின் நலனில் தூதர்கள் அதிக அக்கறை கொள்கிறார்கள். அதே சமயத்தில் மக்கள் யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும்பற்றி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்” என்று கூறினான்.—வெளிப்படுத்துதல் 14:6, 7.
இந்த ‘நித்திய சுவிசேஷத்தில்’ என்ன அடங்கியிருக்கிறது என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆசை இருக்கிறதா? அப்படியானால் யெகோவாவின் சாட்சிகளைக் கேளுங்கள். அதை உங்களுக்கு சொல்வதில் அவர்களுக்கு அலாதி இன்பம்.
[பக்கம் 7-ன் படங்கள்]
நடுவானில் ஒரு தூதன் அறிவிக்கிற நித்திய சுவிசேஷத்தைப் பற்றி கற்றுக்கொள்ள உங்களுக்கு ஆசையா?