நிலையான நட்புறவுகளை நீங்கள் அனுபவிக்கலாம்
நட்புறவுகளுக்குத் தடைகள் இருக்கின்றன. உண்மையாகவே, “கடைசிநாட்களில்” நேசமும், சுபாவ அன்பும், உண்மைப்பற்றுறுதியும் குறைவுபடும் என்பதை பைபிள் முன்னறிவித்தது. (2 தீமோத்தேயு 3:1-5; மத்தேயு 24:12) முன்சம்பவிக்காத தனிமை என்னும் கொள்ளைநோயை இந்த நிலைமைகள் கொண்டுவந்திருக்கின்றன. “என்னுடைய சுற்றுப்புறத்தில் இருப்பது நோவாவினுடைய பேழையில் இருப்பதைப் போன்றது. ஒரு தம்பதியாக நீங்கள் இல்லாவிட்டால் புறக்கணிக்கப்படுவீர்கள்” என்று ஒருவர் கூறினார். இதற்கான முழு பொறுப்பையும் தனிமையில் இருக்கும் நபர்கள்மீது சுமத்த முடியாது. உலகின் சில பாகங்களில், மக்கள் அடிக்கடி இடம்பெயர்ந்து செல்வது, குடும்பங்கள் பிளவுபடுவது, நட்பார்வமற்று இருப்பது, ஆபத்தான நகரங்கள், ஓய்வு நேரம் கணிசமாகக் குறைந்திருப்பது போன்றவையும் நிலையான நட்புறவுகளுக்கான சவால்களில் அடங்கும்.
18-ம் நூற்றாண்டின் கிராமவாசி ஒருவர், தான் ஒரு வருடத்திற்குள் அல்லது தன் வாழ்நாள் முழுவதிலும் தொடர்புகொண்ட ஆட்களைக் காட்டிலும் நவீன காலத்து நகரவாசி ஒருவர் அதிகமான ஆட்களுடன் ஒரே வாரத்திற்குள் தொடர்புகொள்பவராக இருக்கலாம்! இருப்பினும், இன்று உறவுகள் பெரும்பாலும் மேலீடாகவே உள்ளன. இடைவிடாமல் கூடிமகிழ்வதிலும் தங்களைக் குஷியாக வைத்திருக்க முயற்சிப்பதிலும் பலர் மூழ்கிவிடுகின்றனர். இருந்தபோதிலும், தவறுதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்களோடு வெறுமையான மகிழ்ச்சிக்கொண்டாட்டத்தில் ஈடுபடுவது நெருப்புக்காக முட்களைப் பயன்படுத்துவதைப்போன்றது என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். பிரசங்கி 7:5, 6 சொல்கிறது: “ஒருவன் மூடரின் பாட்டைக் கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம். மூடனின் நகைப்பு பானையின்கீழ் எரிகிற முள்ளுகளின் படபடப்பைப்போலிருக்கும்; இதுவும் மாயையே.” சற்றுநேரத்திற்கு பிரகாசமான, ஓசையுடன்கூடிய நெருப்பை முட்கள் உண்டாக்குகின்றன, ஆனால் நம்மை அனலாக வைக்கும் அளவுக்கு போதுமான பிழம்பு அந்த நெருப்புக்கு இல்லை. அதேபோன்று, கூச்சலிடும், நகைக்கும் கூட்டாளிகள் நம்மை தற்காலிகமாகக் கவனம் சிதறும்படி செய்யலாம், ஆனால் தனிமையை முழுவதுமாக அவர்கள் நீக்கமாட்டார்கள், உண்மையான நண்பர்களுக்கான நம் தேவையைப் பூர்த்திசெய்யமாட்டார்கள்.
ஏகாந்தம் தனிமையிலிருந்து வேறுபடுகிறது. நமக்குநாமே புத்துயிரூட்ட சிறிது ஏகாந்தம் தேவை, அதன் காரணமாக ஒரு நண்பனாக நாம் அதிகத்தை அளிக்க முடியும். பலர் தனிமையை எதிர்ப்படும்போது, உடனே ஏதோ ஒருவகையான மின்சாதன பொழுதுபோக்கினிடமாகத் திரும்புகிறார்கள். தனிமையைத் தவிர்க்க பெரும்பாலும் செய்யப்படும் காரியங்களில் ஒன்று தொலைக்காட்சி பார்த்தல் என்று ஒரு சுற்றாய்வு கண்டது. இருப்பினும், நீண்ட நேரம் தொலைக்காட்சியைப் பார்ப்பதுதான் தனிமையில் இருக்கையில் நாம் செய்யும் மிக தவறான காரியங்களில் ஒன்று என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்தார்கள். அது மந்தத்தையும், சலிப்பையும், பகல்கனவையும், நேரடியாக மற்றவர்களுடன் தொடர்புகொள்வதில் திறமையின்மையையும் தூண்டுகிறது.
உண்மையில், ஆக்கப்பூர்வமாக நமது நேரத்தைத் தனியே செலவிடுவோமாகில், ஏகாந்தம் மிகவும் மதிப்புள்ளதாகக்கூடும். இதனை நாம், வாசித்தல், கடிதம் எழுதுதல், பொருட்களை உண்டாக்குதல், ஓய்வெடுத்தல் ஆகியவற்றின் மூலம் செய்யலாம். ஆக்கப்பூர்வமான ஏகாந்தம் ஜெபிப்பதையும், பைபிள் படிப்பதையும் அதன்பேரில் தியானிப்பதையும் உட்படுத்துகிறது. (சங்கீதம் 63:6) இவையெல்லாம், மிக உயரிய நண்பராகவல்ல யெகோவா தேவனிடம் நெருங்கி செல்வதற்கான வழிகள்.
நட்புறவுகளின் வேதாகம உதாரணங்கள்
பலரிடத்தில் நட்பாக இருப்பது நல்லதாக இருப்பினும், “சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு,” என்பதாக பைபிள் நமக்கு நினைப்பூட்டுகிறது. (நீதிமொழிகள் 18:24) நம்மீது உண்மையில் அக்கறை உடைய வெகு சில நெருங்கிய நண்பர்களே நம் அனைவருக்கும் தேவை, அவர்களுடைய நட்புறவுகள் நமக்கு மகிழ்ச்சியையும் பலத்தையும் சமாதானத்தையும் அளிக்கும். இன்று, அத்தகைய உண்மையான நட்புறவுகள் ஒருவேளை அரிதாக இருந்தாலும், ஒருசில பண்டைய உதாரணங்கள் விசேஷமாக பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணமாக, தாவீதுக்கும் யோனத்தானுக்கும் இடையே நிலவிய மேலோங்கிய நட்புறவு. அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? அவர்களின் நட்புறவு ஏன் நிலைத்திருந்தது?
ஒரு காரியமானது, தாவீதும் யோனத்தானும் முக்கியமான அக்கறைகளைப் பொதுவில் கொண்டிருந்தார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவா தேவன் பேரில் ஆழமான பக்தியைக் கொண்டிருந்தார்கள். கடவுள் பேரில் தாவீதுக்கிருந்த விசுவாசத்தையும், யெகோவாவின் மக்களைக் காக்க அவர் எடுத்த நடவடிக்கைகளையும் காண்கையில், “யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான்.” (1 சாமுவேல் 18:1) அப்படியென்றால், கடவுள் பேரிலான பரஸ்பரமான அன்பு நண்பர்களை ஒருவர்பால் மற்றவரை பிணைப்பதில் உதவுகிறது.
யோனத்தானும் தாவீதும் கட்டுறுதிவாய்ந்த நபர்கள், அவர்கள் தெய்வீக நியமங்களுக்கு இசைவாக வாழ்ந்தார்கள். ஆகவேதான், ஒருவரையொருவர் மதிக்க அவர்களால் முடிந்தது. (1 சாமுவேல் 19:1-7; 20:9-14; 24:6) வேதாகம நியமங்களைப் பின்பற்றும் கடவுள் பக்தியுள்ள நண்பர்களைக் கொண்டிருந்தால் உண்மையில் நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
தாவீது யோனத்தானின் நட்புறவுக்கு மற்ற அம்சங்கள் உதவின. அவர்களின் உறவு நேர்மையானது, ஒளிவுமறைவின்றி இருந்தது; அவர்கள் ஒருவரையொருவர் நம்பினார்கள். யோனத்தான் உண்மைப்பற்றுறுதியுடன் தன் அக்கறைகளுக்கு முன்பாக தாவீதின் அக்கறைகளை வைத்தார். தாவீதுக்கு அரச பதவி வாக்களிக்கப்பட்டதற்காக அவர் பொறாமைப்படவில்லை, அதற்குமாறாக, யோனத்தான் அவரை உணர்ச்சிப்பூர்வமாகவும், ஆவிக்குரிய விதமாகவும் ஆதரித்தார். தாவீது அவரின் உதவியை ஏற்றுக்கொண்டார். (1 சாமுவேல் 23:16-18) வேதாகமத்திற்கு பொருத்தமான வழிகளில், தாவீதும் யோனத்தானும் ஒருவர்பால் மற்றவருக்கிருந்த தங்கள் நட்புறவை தெரிவித்தார்கள். அவர்களின் தெய்வீக நட்புறவு, உண்மையான அபிமானத்தையும் பாசத்தையும் அடிப்படையாகக் கொண்டது. (1 சாமுவேல் 20:41; 2 சாமுவேல் 1:26) இருவருமே கடவுளுக்கு உண்மையுடன் நிலைத்திருந்ததன் காரணமாக அது முறிந்துபோகவில்லை. அத்தகைய நியமங்களைப் பொருத்துவது உண்மையான நட்புறவுகளை வளர்ப்பதிலும் தக்கவைப்பதிலும் நமக்கு உதவும்.
எவ்வாறு நட்புறவுகளை வளர்க்கலாம்
உண்மையான நண்பர்களைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? வெகுதூரத்தில் நீங்கள் தேடவேண்டியதில்லை. நீங்கள் வழக்கமாகத் தொடர்புகொள்பவர்களில் சிலர் உங்களுடைய நண்பர்களாக ஆகலாம், அவர்களுக்கும் உங்கள் நட்புறவு தேவையாக இருக்கலாம். உடன் கிறிஸ்தவர்களைப் பொறுத்தமட்டில் விசேஷமாக, “விசாலமாகுங்கள்” என்ற பவுலின் புத்திமதியைப் பொருத்துவது ஞானமானது. (2 கொரிந்தியர் 6:11-13, NW) இருப்பினும், நண்பராக்குவதற்கான உங்களுடைய ஒவ்வொரு முயற்சியும் ஆழமான பிணைப்பை ஏற்படுத்தவில்லை என்றால் விரக்தியடையாதீர்கள். பொதுவாகவே, நட்புறவு உருவாக கொஞ்சம் காலம் எடுக்கும், அனைத்து உறவுகளும் ஒரேயளவில் ஆழமாக இருப்பதில்லை. (பிரசங்கி 11:1, 2, 6) உண்மையில், களங்கமில்லா நட்புறவை அனுபவிப்பதற்காக நாம் தன்னலமற்றவர்களாக இருக்கவேண்டும், இயேசுவினுடைய ஆலோசனையைப் பின்பற்றவேண்டிய தேவையும் இருக்கிறது: “மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.”—மத்தேயு 7:12.
உங்களுடைய நட்புறவு யாருக்குத் தேவை? உங்கள் சம வயதை ஒத்தவர்களைத் தவிர, இளம் வயதினர் அல்லது முதிர் வயதினரைப் பற்றியது என்ன? தாவீதுக்கும் யோனத்தானுக்கும், ரூத்துக்கும் நகோமிக்கும், பவுலுக்கும் தீமோத்தேயுவுக்கும் இடையே இருந்த நட்புறவுகளில், வயது வித்தியாசம் உட்பட்டிருந்தது. (ரூத் 1:16, 17; 1 கொரிந்தியர் 4:17) உங்கள் நட்புறவை விதவைகளிடமும் திருமணமாகாத மற்ற ஆட்களிடமும் விரிவாக்க முடியுமா? உங்களுடைய சுற்றுவட்டாரத்தில் புதிதாக வந்துள்ளவர்களைக் குறித்துங்கூட யோசித்துப்பாருங்கள். அவர்கள் வீடுமாறி வந்ததாலோ தங்களுடைய வாழ்க்கைப் பாணியை மாற்றியதாலோ ஒருவேளை தங்களுடைய பெரும்பாலான அல்லது அனைத்து நண்பர்களின் கூட்டுறவைப் பறிகொடுத்திருப்பார்கள். மற்றவர்கள் உங்களை நாடிவருவதற்காகக் காத்திருக்காதீர்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தால், “சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம் பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்,” என்ற பவுலின் ஆலோசனையைப் பொருத்துவதன் மூலம் நிலையான நட்புறவுகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.—ரோமர் 12:10.
நட்புறவுகளை, கொடுக்கும் வழிகளில் ஒன்று என நாம் நினைக்கலாம். நாம் கொடுப்பதை அப்பியாசித்தால், ஆட்களும் நமக்குக் கொடுப்பார்கள் என்பதாக இயேசு கூறினார். வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதில் அதிக மகிழ்ச்சி இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். (லூக்கா 6:38; அப்போஸ்தலர் 20:35) வித்தியாசமான பின்னணியிலிருந்து வந்த ஆட்களைச் சந்தித்திருக்கிறீர்களா? கடவுளின் வணக்கத்தைப் பொதுவில் கொண்டிருந்தால், வெவ்வேறு கலாச்சாரங்களிலிருந்து வந்த மக்களால் உண்மையான, நிலையான நட்புறவுகளை உருவாக்கமுடியும் என்பதை யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச மாநாடுகள் நிரூபித்திருக்கின்றன.
நட்புறவுகளைப் பழுதுபடாமல் வைத்திருத்தல்
கவலைக்கிடமாக, நண்பர்கள் என கருதப்பட்டவர்கள் சில நேரங்களில் ஒருவருக்கொருவர் வேதனையை உண்டாக்குகிறார்கள். உண்மையான நண்பர் என கருதப்பட்டவரிடமிருந்து வெளிப்படும் மிகவும் வேதனைதரும் காரியங்களில் தீய புறங்கூறலும் நம்பிக்கைதுரோகமும் போற்றுதல் இன்மையும் அடங்கும். அத்தகைய சூழ்நிலையில் என்ன செய்யலாம்?
நல்ல முன்மாதிரியை வையுங்கள். தேவையற்ற வேதனை உண்டாக்குவதைத் தவிர்க்க உங்களால் இயன்ற அனைத்தையும் செய்யுங்கள். நண்பர்கள் ஒருவரின் குறைகளை மற்றவர் கேலிசெய்வது சில இடங்களில் பிரபலமாக உள்ளது. ஆனால், ஒருவேளை அவர்கள் பெயரளவில் “விளையாட்டுக்காக” என்றாலும்கூட, முரட்டுத்தனமாக நடத்துவதோ தந்திரமாக இருப்பதோ நண்பர்களை நெருங்கிவர செய்யாது.—நீதிமொழிகள் 26:18, 19.
நட்புறவுகளை நீடிக்கச்செய்ய கடினமாக உழைக்கவும். நண்பர்கள் ஒருவருக்கொருவர் அதிகத்தை எதிர்பார்க்கும்போது, சில சமயங்களில் மனத்தாங்கல் ஏற்படலாம். நண்பர் ஒருவர் வியாதிப்பட்டிருந்தாலோ பெரும் பிரச்சினையில் மூழ்கியிருந்தாலோ எப்போதும்போல் ஆர்வத்தை ஒருவேளை காட்ட இயலாது. அப்படியானால், அந்தச் சமயங்களில் புரிந்துகொள்ளுதலோடும் ஆதரவோடும் இருக்க முயற்சி செய்யுங்கள்.
பிரச்சினைகளை விரைவாகவும் கனிவாகவும் போக்கிடுங்கள். கூடுமானால் அதனை எவரும் அறியாவண்ணம் செய்யுங்கள். (மத்தேயு 5:23, 24; 18:15) ஒரு நல்ல உறவு நீடிக்க நீங்கள் விரும்புவதை உங்கள் நண்பர் அறிந்திருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். உண்மையான நண்பர்கள் ஒருவரையொருவர் மன்னிப்பார்கள். (கொலோசெயர் 3:13) சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிக்கும் நண்பனைப்போல் நீங்கள் இருப்பீர்களா?
நட்புறவுகளைப்பற்றி வாசிப்பதும் யோசிப்பதும் வெறும் துவக்கமே. நாம் ஒருவேளை தனிமையை எதிர்ப்பட்டுக்கொண்டிருந்தால், பொருத்தமான நடவடிக்கையை எடுப்போமாக, வெகுவிரைவில் நாம் தனிமையில் இருக்கமாட்டோம். நாம் கடினமாக முயன்றால், உண்மையான நண்பர்களைக் கண்டடைய முடியும். அவர்களில் சிலருடன், விசேஷமான பிணைப்பை நாம் உருவாக்குவோம். ஆனாலும், மிக உயரிய நண்பரான கடவுளின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. யெகோவா மாத்திரம் நம்மை முழுமையாக அறிந்துள்ளார், புரிந்துகொண்டுள்ளார், ஆதரிக்கிறார். (சங்கீதம் 139:1-4, 23, 24) மேலுமாக, அவருடைய வார்த்தை மகத்தான எதிர்கால நம்பிக்கையை அளிக்கிறது—ஒரு புதிய உலகம், அதில் உண்மையான நண்பர்களை என்றுமாகக் கொண்டிருக்க முடியும்.—2 பேதுரு 3:13.
[பக்கம் 5-ன் படங்கள்]
தாவீதும் யோனத்தானும் உண்மையான நட்புறவை அனுபவித்தார்கள், எனவே நாமும் அனுபவிப்போம்