கிரீஸில் வெற்றிகரமான சாட்சிகொடுக்கும் வேலை
கிரீஸில் யெகோவாவின் சாட்சிகள் நெடுங்காலமாக எதிர்ப்பை எதிர்ப்பட்டிருக்கின்றனர். காவல் துறை, நீதிமன்ற, மற்றும் அரசாங்க அதிகாரிகள் சிலர், பெரும்பாலும் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் குருமாருடைய தூண்டுதலினால் சாட்சிகளைத் துன்புறுத்தியிருக்கின்றனர். சில சமயங்களில் கிரீஸின் மதமாற்ற எதிர்ப்பு சட்டம் ஒரு காரணமாகவும், மற்ற சமயங்களில், சாட்சிகள் போருக்குச் செல்லவோ அல்லது இரத்தமேற்றலை ஏற்கவோ பைபிளை ஆதாரமாகக் கொண்டு மறுத்தது காரணமாகவும் இருந்திருக்கிறது.—ஏசாயா 2:2-5; அப்போஸ்தலர் 15:28, 29.
கிரேக்க அரசாங்கத்தால் மத ஊழியராக அங்கீகரிக்கப்படுவோராயும், சிலர் சட்டத் துறை சார்ந்த பணியின் உறுப்பினராயும் இருந்த ஏறக்குறைய 200 சாட்சிகள், கிரீஸிலுள்ள நேர்மை இருதயமுடைய அதிகாரிகள் மத்தியில் உள்ள புரிந்துகொள்ளுதலை மேன்மேலும் அதிகரிப்பதற்கான ஒரு முயற்சியாக, சமீபத்தில் நாடு முழுவதிலும் நடத்திய ஒரு தனிப்பட்ட நடவடிக்கையில் ஈடுபட்டனர். கிரீஸில் யெகோவாவின் சாட்சிகள் (ஆங்கிலம்) என்ற தலைப்பைக் கொண்ட, தனிப்பட வடிவமைக்கப்பட்ட சிற்றேட்டையும், அதோடு யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் (ஆங்கிலம்) புத்தகத்தையும் அவர்கள் அளித்தனர். மேலும் யெகோவாவின் சாட்சிகளைத் துன்புறுத்துவதற்கு நேர்மையான சட்டப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை என்பதை மெய்ப்பித்துக் காட்டும் ஒரு கட்டு ஆவணங்களையும்கூட அளித்தனர். காவல் துறை தலைமை அதிகாரிகளையும், நகர மாமுதல்வர்களையும், பொது வழக்கறிஞர்களையும், மற்ற அதிகாரிகளையும் சாட்சிகள் சந்தித்தனர்.
இதற்குப் பிரதிபலிப்பு என்ன? நூற்றுக்கணக்கான நல்ல அனுபவங்கள். சில உதாரணங்களைக் கவனியுங்கள்.
மேற்கு மாசிதோனியாவில் ஒரு போலீஸ் துறையின் தலைமை அதிகாரி சகோதரர்களை வரவேற்று இவ்வாறு சொன்னார்: “நான் உங்களை நெடுங்காலமாக அறிந்திருக்கிறேன், . . . உங்கள் ஒழுங்கை நான் மெச்சுகிறேன் . . . மதமாற்ற எதிர்ப்புச் சட்டத்தில் எனக்கு சம்மதமில்லை, எனக்கு அதிகாரமிருந்தால் அதை நான் ஒழித்துவிடுவேன்.”
பல நகரங்களில் பல்வேறு காவல் துறைகளின் தலைமை அதிகாரிகள் இவற்றைப்போன்ற குறிப்புகளைக் கூறினர்: “நீங்கள் நடப்பிக்கும் சமுதாய சேவைக்காக நான் உங்களைப் போற்றுகிறேன்.” “காவல் துறையினருக்கு உங்கள் சமுதாயம் ஒருபோதும் வேலை வைப்பதில்லை; நீங்கள் ஒரு சமுதாய ஊழியத்தை நிறைவேற்றுகிறீர்கள்.” “உங்களோடு எங்களுக்குப் பிரச்சினையே கிடையாது; நாங்கள் உங்களை மதித்துப் பாராட்டுகிறோம்.”
பிரேயஸ்ஸில் அமைதிகாப்பு காவலரில் உயர் அதிகாரி ஒருவர், இயேசு கிறிஸ்துவின் மூலம் யெகோவா தேவனிடம் அவருடைய பெயரைப் பயன்படுத்தி ஜெபிக்கத் தனக்குத் தெரியும் என்று தன் கண்களில் கண்ணீரோடு சகோதரரிடம் சொன்னார். அர்மகெதோனுக்கு முன்பாக அவர்கள் துன்புறுத்தலை எதிர்பார்க்கின்றனரென்று தனக்குத் தெரியும் என்றும், அந்தச் சமயத்தில் அவர்களுக்கு உதவிசெய்ய கடவுள் தன்னைப் பயன்படுத்துவாரென்று தான் நம்புவதாகவும் சகோதரரிடம் சொன்னபோது மேலுமாக அவர்களை ஆச்சரியப்பட செய்தார்! மேலுமாகக் கலந்துபேசுவதற்கு சகோதரர் கொடுத்த அழைப்பை அவர் ஏற்றார்.
அரசாங்க அதிகாரிகள் ஆதரவாகப் பிரதிபலிக்கின்றனர்
தெஸ்ஸலேயில் நகர மாமுதல்வர் ஒருவர் அறிவிப்போர் புத்தகத்தைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “நகராட்சி நூலகத்தில் ஓர் இடம்—முதலிடம்—பெற அது தகுதியுள்ளது!” உடனடியாகவே அலமாரி ஒன்றிலிருந்து புத்தகங்களை நீக்கி, அறிவிப்போர் புத்தகத்தின் அட்டை கண்ணில்படும்படி அதை அங்கே வைத்தார்.
வட கிரீஸில், நகர மாமுதல்வர் ஒருவர், சகோதரரை அன்பான முறையில் வரவேற்று: “நீங்கள், என் நகராட்சியில் இருக்கும்படி நான் விரும்பும் மிகச் சிறந்த ஆட்கள்,” என்று சொன்னார். வட யூபியாவில் தயவுள்ள நகர மாமுதல்வர் ஒருவர் சகோதரரிடம்: “நான் ஒரு முன்னாள் படைத்தலைவன். ஆனால் உங்களை—நான் மிக அதிகமாய் மதித்துப் போற்றுகிறேன்,” என்று சொன்னார். சாட்சிகள் சொன்ன குறிப்புகளை அவர் ஆர்வத்துடன் ஒப்புக்கொண்டார். உவாட்ச் டவர் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட சில தெரிந்தெடுக்கப்பட்ட புத்தகங்களை அவர்கள் காட்டினபோது, அவர்: “அவற்றையெல்லாம் வாசிப்பதாக நான் உறுதியளித்தால், அவற்றை எனக்குத் தருவீர்களா?” என்று கேட்டார். அவர்கள்: “நிச்சயமாகவே—அவை உங்களுடையவை!” என்றார்கள். அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார், சகோதரரைப் போகவிட அவருக்கு மனமில்லை.
ஆட்டிக்காவில் புறநகர் பகுதி ஒன்றில், நகர மாமுதல்வர் ஒருவர், சகோதரர் அளித்த பிரசுரங்களை சந்தோஷமாய் ஏற்று, சொஸைட்டியின் பிரசுரங்களைத் தொடர்ந்து தனக்குக் கொண்டுவரும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டார். அவர்கள் புறப்பட்டுச் செல்கையில், அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “அரசியல்வாதிகளின்பேரில் மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்து, உண்மையான சத்தியத்துக்காக வேறு எங்காயினும் தேடுகின்றனர். உங்களிடம் சத்தியம் இருப்பதால் இப்போதிருந்து நீங்கள் அதிக சுறுசுறுப்பாய் இருப்பீர்கள் என்று நான் நிச்சயமாயிருக்கிறேன்.”
பொது வழக்கறிஞர்கள் ஆதரவாகப் பிரதிபலிக்கின்றனர்
வட கிரீஸில் உதவி பொது வழக்கறிஞர் ஒருவரை சந்தித்த சகோதரர்கள் இவ்வாறு நினைவுபடுத்திக் கூறினர்: “நம்முடைய பிரசுரங்களாலும் அளிப்பினாலும், அதோடு இரத்தமேற்றுதலின் வினைமையானப் பிரச்சினையை எதிர்ப்படுகையில் நம்முடைய ஆட்கள் உதவியற்றவர்களாக இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு நாம் எடுக்கும் முயற்சிகளாலும் அவர் மனம் கவரப்பட்டார். முடிவில் எங்களுக்கு நன்றி கூறி, அவரைச் சந்தித்து அவருக்குத் தகவல் அளிப்பதற்கு எடுத்த முயற்சிக்காக எங்களைப் போற்றினார். நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் அவர், காவல் துறையினரை அழைப்பித்து, வெளி ஊழியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு சகோதரரைக் கைது செய்யும்படி கட்டளையிட்டிருந்தார் என்று பின்னால் நாங்கள் அறிந்துகொண்டோம்.”
ஆதன்ஸில் பொது வழக்கறிஞரின் அலுவலகங்களுக்குச் சென்று சந்தித்த வழக்கறிஞர்களாயிருந்த இரண்டு சாட்சிகள், மிகப் பிரசித்திப்பெற்றவரும் விரிவாக அறியப்பட்டவருமான முதிர்ந்த பொது வழக்கறிஞர் தங்களை அணுகுவதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். அவர் இவர்களை ஒருபுறம் அழைத்துச் சென்று, மதமாற்றத்துக்கு எதிரான சட்டத்துக்கு ஆதாரம் கிடையாது என்றும், கிரேக்க நீதிமன்ற ஒழுங்கில் அது குழப்பத்தை உண்டாக்குகிறது என்றும் அவர்களிடம் கூறினார். அன்பான கைகுலுக்கலுடன் அவர் இவர்களுக்கு நன்றிகூறினார்.
கிரீஸின் வடக்கில், ஒரு பொது வழக்கறிஞர் மிக நட்புடன் பிரசுரத்தை ஏற்றார். இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகத்தின் பக்கங்களை அவர் திருப்பிக்கொண்டிருக்கையில், பொருளடக்கத்தில் பல்வேறு அதிகாரங்களைக் கண்டதன்பேரில் ஆச்சரியப்பட்டார். அவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “இந்தப் புத்தகம் அளிக்கிறவற்றை கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் முழுவதிலுமே நான் கண்டதில்லை.”
பியோஷியாவில் பொது வழக்கறிஞர் ஒருவர், கடந்த காலத்தில், சாட்சிகளின் விருப்பத்துக்கு விரோதமாக இரத்தமேற்றுதல்களுக்கு தான் கட்டளைகளைக் கொடுத்திருந்ததாக ஒப்புக்கொண்டார். ஆனால் அந்தக் காரியத்தின்பேரில் சகோதரர் அவரோடு நியாயங்காட்டி பேசின பின்பு, அவர்: “எதிர்காலத்தில் அத்தகைய கட்டளையை நான் ஒருபோதும் கொடுக்கமாட்டேன்!” என்று கூறினார். இரத்தத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தக்கூடிய எல்லாவற்றையும் ஆய்ந்தறியும்படி யெகோவாவின் சாட்சிகளுக்குரிய உள்ளூர் மருத்துவமனை தொடர்புக் குழுவை கலந்தாலோசிக்க வேண்டும் என்று அவர் தீர்மானித்தார். இளைஞர் கேட்கும் கேள்விகள் என்ற புத்தகம் ஒன்றை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
நூலக அலுவலர்கள் ஆதரவாகப் பிரதிபலிக்கின்றனர்
நூலக அலுவலர்கள் பலருக்கும் இந்தச் செய்தி கொடுக்கப்பட்டது. ஆதன்ஸிலுள்ள ஒரு நூலகத்தில், மரியாதையுள்ள அலுவலர் ஒருவர் பிரசுரங்களை ஏற்று: “உங்கள் புத்தகங்களை நீங்கள் கொண்டுவந்தது மிக நல்லது, ஏனெனில் எங்கள் நூலகத்தில் எங்களுக்கிருக்கிற புத்தகங்களில் பெரும்பான்மையானவை உங்களுக்கு எதிரானவை. . . . நூலகத்தில் உங்கள் புத்தகத்தைக் கண்டதில் மதகுரு ஒருவர் மிகக் கோபமடைந்தார். . . . அதைப்பற்றி கவலையில்லை. எல்லாருடைய அபிப்பிராயங்களும் கேட்கப்பட வேண்டும்.”
இராணுவ முகாமில் யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி அறிந்திருந்தவரான, கிரீட்டிலுள்ள நகராட்சி நூலகத்திலுள்ள ஒரு அதிகாரி, போரில் பங்குகொள்ள சாட்சிகள் மறுத்ததன்பேரில் தான் மிகவும் மனம் கவரப்பட்டிருந்ததாகவும், ‘இந்த ஆட்கள் ஏன் துன்பப்பட வேண்டும்?’ என்று விடாமல் தன்னைக் கேட்டுக்கொண்டிருந்தாகவும் சதோதரர்களிடம் சொன்னார். பிரசுரங்களை சகோதரர்களிடமிருந்து அவர் ஏற்று, அவர்களுடைய அப்போதைய அளிப்பு ஏற்பாட்டைக் குறித்து: “நீங்களே மிகச் சிறந்த வேலையைச் செய்திருக்கிறீர்கள், இதைப் பல ஆண்டுகளுக்கு முன்பாகச் செய்திருக்க வேண்டும். . . . கிரீட்டில் மிகுதியான தப்பெண்ணம் இருந்துவருகிறது,” என்று கூறினார். சீக்கிரத்தில் மறுபடியுமாகத் தன்னை வந்து பார்க்கும்படி சகோதரரைக் கேட்டுக்கொண்டார்.
இந்த விசேஷ அளிப்பு ஏற்பாட்டின்போது, 1,000-த்துக்கு மேற்பட்ட அறிவிப்போர் புத்தகங்களையும், கிரீஸில் யெகோவாவின் சாட்சிகள் என்ற சிற்றேட்டில் 1,600 பிரதிகளையும், மேலும் நூற்றுக்கணக்கான புத்தகங்களையும் பத்திரிகைகளையும் சகோதரர்கள் அளித்தனர். இன்னும் மேலாக, நூற்றுக்கணக்கான கிரேக்க அதிகாரிகளோடு நேருக்குநேராக அவர்கள் பேசினர். கிரீஸில் நேர்மையான இருதயமுள்ள அதிகாரிகள், யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி மேலும் நடுநிலையான கருத்தை ஏற்பார்களென்பது, கிரீஸிலும் உலகைச் சுற்றிலும் இருக்கிற யெகோவாவின் உண்மையுள்ள ஊழியருடைய நம்பிக்கையாக உள்ளது.