50 ஆண்டுகளுக்கு மேற்பட்டு‘கடந்து வருதல்’
இம்மானுவேல் பெட்டராக்கிஸ் சொன்னபடி
பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பாக அப்போஸ்தலன் பவுல், தனித்தன்மை வாய்ந்த ஓர் அழைப்பைப் பெற்றார்: ‘நீர் மக்கெதோனியாவுக்குக் கடந்து வந்து எங்களுக்கு உதவி செய்யவேண்டும்.’ “சுவிசேஷத்தை அறிவிக்கும்படி” கிடைத்த இந்தப் புதிய வாய்ப்பை பவுல் மனமகிழ்ச்சியுடன் ஏற்றார். (அப்போஸ்தலர் 16:9, 10, தி.மொ.) எனக்குக் கிடைத்த அந்த அழைப்பு அவ்வளவு காலத்துக்கு முந்தியதாக இராதபோதிலும், 50 ஆண்டுகளுக்கு முன்பாக நான், “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்ற ஏசாயா 6:8-ல் குறிப்பிட்டுள்ள மனப்பான்மையில், புதிய பிராந்தியங்களுக்குள் ‘கடந்து வருவதற்கு’ ஒப்புக்கொண்டேன். ஓயாச் சுற்றுப்பயணி என்ற புனைப்பெயரை என்னுடைய எண்ணற்ற பயணங்கள் எனக்குக் கொண்டுவந்தன, ஆனால் என் நடவடிக்கைகள் உல்லாச சுற்றுப்பயணத்துக்குச் சற்றேனும் ஒத்தில்லை. பல சந்தர்ப்பங்களில், என் தங்கும் விடுதியில் நான் போய்ச் சேர்ந்தபோது, நான் முழங்காற்படியிட்டு, யெகோவா என்னைப் பாதுகாத்ததற்காக அவருக்கு நன்றிகூறினேன்.
நான் கிரீட்டிலுள்ள ஈராபெட்ராவில், மிகுந்த மதப்பற்றுள்ள ஆர்த்தடாக்ஸ் குடும்பம் ஒன்றில், ஜனவரி 16, 1916 அன்று பிறந்தேன். நான் குழந்தையாக இருந்த சமயத்திலிருந்தே, அம்மா என்னையும் என் மூன்று சகோதரிகளையும் ஞாயிற்றுக் கிழமையில் சர்ச்சுக்கு அழைத்துச் செல்வார்கள். என் அப்பா, வீட்டில் தங்கியிருந்து பைபிள் வாசிப்பதை மேம்பட்டதாகத் தெரிந்துகொண்டார். என் அப்பாவை நான் மிகவும் மதித்தேன், அவர் நேர்மையும், நற்குணமும், இரக்கமும் உள்ளவராக இருந்தார். நான் ஒன்பது வயதாக இருக்கையில் அவர் இறந்தது, என்னை ஆழமாய்ப் பாதித்தது.
நான் ஐந்து வயதாயிருந்தபோது, பின்வருமாறு சொன்ன ஒரு வாக்கியத்தைப் பள்ளியில் வாசித்தது எனக்கு நினைவிருக்கிறது: “நம்மைச் சுற்றியுள்ள எல்லாம் கடவுள் இருப்பதை அறிவிக்கிறது.” நான் வளர்ந்துவருகையில், இதை முற்றிலுமாக நம்பினேன். இதனால், சங்கீதம் 104:24-ஐ பொருளாகக் கொண்டு 11 வயதில் நான் ஒரு கட்டுரை எழுதத் தெரிந்துகொண்டேன்: “யெகோவா, உமது செயல்கள் எவ்வளவு திரளானவை! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர். பூமி உமது சிருஷ்டிகள் நிறைந்துள்ளது.” இயற்கையின் அதிசயங்களால் மனம் கவரப்பட்டவனாக இருந்தேன், விதைகள், அவை உண்டாகிய மரத்தின் நிழலுக்கு அப்பால் காற்றால் தூரமாய்க் கொண்டுசெல்லப்படுவதற்கு, சிறு இறக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும் அத்தகைய சிறிய காரியங்களாலுங்கூட, நான் மனங்கவரப்பட்டவனாக இருந்தேன். என் கட்டுரையை எழுதி கொடுத்து ஒரு வாரத்திற்குப் பின், என் ஆசிரியர் அதை அந்த வகுப்பு முழுவதற்கும் பிற்பாடு பள்ளி முழுவதற்கும் வாசித்தார். அந்தச் சமயத்தில், ஆசிரியர்கள் கம்யூனிஸ எண்ணங்களுக்கு எதிராகப் போரிட்டுக்கொண்டிருந்தனர், கடவுள் இருக்கிறாரென நான் ஆதரித்து விவாதித்ததைக் கேட்டதில் மகிழ்ச்சியடைந்தனர். என்னைக் குறித்ததில், சிருஷ்டிகரில் என் நம்பிக்கையை வெளிப்படுத்துவதிலேயே நான் மகிழ்ச்சியடைந்தேன்.
என் கேள்விகளுக்குப் பதில்கள்
1930-ன் தொடக்கத்தில் யெகோவாவின் சாட்சிகளோடு என் முதல் சந்திப்பு என் நினைவில் இன்னும் உயிர்ப்புள்ளதாக இருக்கிறது. கிரீட்டின் எல்லா பட்டணங்களிலும் கிராமங்களிலும் இம்மானுவேல் லியானுடாக்கீஸ் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். அவரிடமிருந்து பல சிறிய புத்தகங்களை நான் ஏற்றேன், ஆனால், மரித்தோர் எங்கே இருக்கின்றனர்? என்ற தலைப்பைக்கொண்ட ஒன்றே உண்மையில் என் கவனத்தை கவர்ந்தது. மரணத்தைப் பற்றி அத்தகைய மனக்கலக்கமான பயம் எனக்கு இருந்ததால், என் தகப்பன் மரித்த அந்த அறையில் நான் நுழையவுங்கூட மாட்டேன். இந்தச் சிறிய புத்தகத்தை நான் மறுபடியும் மறுபடியுமாக வாசித்து, மரித்தோரின் நிலைமையைப் பற்றி பைபிள் கற்பிப்பதைக் கற்றபோது, என் மூடநம்பிக்கைக்குரிய பயம் விலகிவிட்டதாக நான் உணர்ந்தேன்.
ஆண்டுக்கு ஒருமுறை கோடைகாலத்தின்போது சாட்சிகள் எங்கள் பட்டணத்துக்கு வந்து, நான் வாசிப்பதற்கு மேலுமதிக புத்தகங்களை எனக்குக் கொண்டுவந்தார்கள். வேதாகமங்களை நான் புரிந்துகொள்வது படிப்படியாக அதிகரித்தது, ஆனால், ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுக்கு நான் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தேன். எனினும், விடுவிப்பு (Deliverance) என்ற புத்தகம் ஒரு திரும்புகட்டத்தைக் குறித்தது. யெகோவாவின் அமைப்புக்கும் சாத்தானுடையதற்கும் உள்ள வேறுபாட்டை அது தெளிவாகக் காட்டினது. இந்தச் சமயத்திலிருந்து, நான் பைபிளையும் எனக்குக் கிடைக்கும் உவாட்ச் டவர் சங்கத்தின் எல்லா புத்தகங்களையும் தவறாமல் அதிக ஒழுங்காய் வாசிக்கத் தொடங்கினேன். கிரீஸில் யெகோவாவின் சாட்சிகள் தடையுத்தரவின்கீழ் இருந்ததனால், இரவில் இரகசியமாய் நான் படித்தேன். இருப்பினும், நான் கற்றுக்கொண்டிருந்ததைப் பற்றி அவ்வளவாய் ஆர்வமுள்ளவனாக இருந்ததால், அதைப் பற்றி எல்லாரிடமும் பேசாமலிருக்க என்னால் முடியவில்லை. சீக்கிரத்தில் போலீஸார் என்மீது கண்வைத்து விடாது கவனித்து, இரவிலும் பகலிலும் எந்த நேரத்திலும் திடுக்கென்று புத்தகங்களைக் கைப்பற்றும்படி சோதனையிடத் தொடங்கினர்.
1936-ல், 120 கிலோமீட்டர்கள் தூரத்திலிருந்த ஈராக்லியோனில் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்துக்கு நான் முதல் தடவையாகச் சென்றேன். சாட்சிகளைச் சந்தித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவர்களில் பெரும்பான்மையர் சாதாரண எளிய ஆட்களாக இருந்தனர், பெரும்பாலும் விவசாயிகளாக இருந்தனர், ஆனால், இதுவே சத்தியம் என்பதை நான் உறுதியாய் நம்ப அவர்கள் உதவிசெய்தனர். உடனடியாக அப்போதே யெகோவாவுக்கு என் ஒப்புக்கொடுத்தலை செய்தேன்.
என் முழுக்காட்டுதல், நான் ஒருபோதும் மறக்கமுடியாத ஒரு சம்பவம். 1938-ன்போது ஓர் இரவில், என் பைபிள் மாணாக்கரில் இருவரையும் என்னையும் சகோதரன் லியனுடாக்கீஸ், காரிருளில் கடற்கரைக்குக் கொண்டுசென்றார். ஒரு ஜெபம் செய்த பின்பு, அவர் எங்களைத் தண்ணீருக்குள் மூழ்க்கினார்.
கைதுசெய்யப்படுதல்
பிரசங்கிப்பதற்கு நான் முதல் தடவையாக வெளிச்சென்றது கவனிக்கத்தக்க நிகழ்ச்சி என்று சொல்வது மிகைப்பட்டதல்ல. மதகுருவாகியிருந்த முற்கால பள்ளி நண்பர் ஒருவரை நான் சந்தித்தேன், மிகச் சிறந்த முறையில் நாங்கள் ஒன்றாகக் கலந்துபேசினோம். ஆனால் பிற்பாடு அவர், பிஷப்பின் கட்டளைபடி, என்னை அவர் கைதுசெய்ய வேண்டும் என்று விளக்கினார். அடுத்துள்ள கிராமத்திலிருந்து போலீஸார் வந்து சேர்வதற்காக, நகரத் தலைவர் அலுவலகத்தில் நாங்கள் காத்திருக்கையில், வெளியில் ஒரு கூட்டம் கூடிவிட்டது. ஆகையால் அந்த அலுவலகத்திலிருந்த ஒரு கிரேக்க புதிய ஏற்பாட்டை நான் எடுத்து, மத்தேயு 24-ம் அதிகாரத்தின்பேரில் ஒரு பேச்சை அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினேன். முதலில் அந்த ஜனங்கள் செவிகொடுத்துக் கேட்க விரும்பவில்லை, ஆனால் அந்தக் குருவானவர் குறுக்கிட்டு, “அவர் பேசட்டும், அது நம்முடைய பைபிள்,” என்று சொன்னார். நான் ஒன்றரை மணிநேரம் பேச முடிந்தது. இவ்வாறு, ஊழியத்தில் என் முதல் நாள் என் முதல் பொதுப் பேச்சை கொடுக்கும் சந்தர்ப்பமுமாயிற்று. நான் பேசி முடித்தபோது போலீஸார் இன்னும் வந்து சேராததனால், ஒரு கும்பலான ஆட்கள் என்னை அந்தப் பட்டணத்திலிருந்து துரத்தியடிக்கும்படி செய்ய, அந்த நகரத் தலைவரும் மதகுருவும் தீர்மானித்தனர். அவர்கள் வீசியெறிந்த கற்களைத் தவிர்ப்பதற்கு, அந்த வீதியின் முதல் திருப்பத்தில், என்னால் முடிந்தளவு விரைவாக ஓடத் தொடங்கினேன்.
அடுத்த நாள், பிஷப்போடுகூட இரண்டு போலீஸார் வந்து, நான் வேலை செய்துகொண்டிருந்தபோது என்னைக் கைதுசெய்தார்கள். காவல் நிலையத்தில், பைபிளிலிருந்து நான் அவர்களுக்குச் சாட்சி கொடுக்க முடிந்தது, ஆனால் என் பைபிள் இலக்கியங்களில் சட்டம் தேவைப்படுத்தின பிஷப்பின் முத்திரை இல்லாததால், நான் மதமாற்றம் செய்யும் மற்றும் அதிகாரம் அளிக்கப்படாத புத்தகங்களை விநியோகிக்கும் குற்றஞ்சாட்டப்பட்டேன். விசாரணைக்காகக் காத்திருக்கும்படி விடுதலை செய்யப்பட்டேன்.
ஒரு மாதத்திற்குப் பின்பு என் விசாரணை நடந்தது. பிரசங்கிக்கும்படியான கிறிஸ்துவின் கட்டளைக்கு நான் கீழ்ப்படிந்ததைத் தவிர வேறு எதையும் நான் செய்யவில்லை என்று என் எதிர்வாத விளக்கத்தில் நான் குறிப்பிட்டேன். (மத்தேயு 28;19, 20) நீதிபதி ஏளனத்துடன் இவ்வாறு பதிலளித்தார்: “என் பிள்ளையே, அந்தக் கட்டளையைக் கொடுத்தவர் சிலுவையில் அறையப்பட்டார். துரதிஷ்டமாய், அதைப்போன்ற தண்டனையை உனக்கு அளிக்க எனக்கு அதிகாரமில்லை.” எனினும், நான் அறிந்திராத இளம் வழக்கறிஞர் ஒருவர், என் சார்பாக வழக்காடி, கம்யூனிஸமும் நாத்திகமும் இவ்வளவு அதிகமாய்ச் சூழ்ந்திருக்கையில், கடவுளுடைய வார்த்தையை ஆதரித்துப் போராட வாலிபர்கள் ஆயத்தமாய் இருப்பதைப் பற்றி நீதிமன்றம் பெருமைப்பட வேண்டும் என்று சொன்னார். பின்பு அவர் என்னிடம் வந்து, என்னைப் பற்றிய பதிவு தொகுப்பிலிருந்த, என் எழுதப்பட்ட எதிர்வாத விளக்கத்தின்பேரில் எனக்கு உள்ளப்பூர்வ பாராட்டு தெரிவித்தார். நான் மிகவும் இளைஞனாக இருந்ததன்பேரில் அவர் மனங்கவர்ந்து, இலவசமாய் என் சார்பில் வழக்காட முன்வந்தார். குறைந்த தண்டனையான மூன்று மாதங்களுக்குப் பதிலாக, பத்து நாட்கள் மாத்திரமே சிறையில் இருக்கவும் 300 டிரச்மாக்கள் அபராதம் செலுத்தவும் நான் தண்டனை அளிக்கப்பட்டேன். யெகோவாவைச் சேவிக்கும்படியும் சத்தியத்தின் சார்பாகப் போராடும்படியுமான என் தீர்மானத்தை இத்தகைய எதிர்ப்பு பலப்படுத்தவே செய்தது.
மற்றொரு சந்தர்ப்பத்தில் நான் கைதுசெய்யப்பட்டபோது, பைபிளிலிருந்த வசனங்களைச் சான்றாக எளிதில் நான் எடுத்துச் சொல்வதை நீதிபதி கவனித்தார். அவர் அந்த பிஷப்பிடம்: “நீர் உம்முடைய வேலையைச் செய்துவிட்டீர். நான் அவனைக் கவனித்துக்கொள்வேன்,” என்று சொல்லி, தன் அலுவலகத்திலிருந்து அவரைப் போகச் சொன்னார். பின்பு அவர் தன் பைபிளை வெளியெடுத்தார், அந்தப் பிற்பகல் முழுவதும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி நாங்கள் பேசினோம். இக்கட்டுகளின் மத்தியிலும் தொடர்ந்து ஊழியத்தை நிறைவேற்ற இத்தகைய சம்பவங்கள் என்னை ஊக்குவித்தன.
மரணத் தீர்ப்பு
1940-ல், இராணுவ சேவைக்காக நான் தெரிந்தெடுக்கப்பட்டேன். நான் அதில் ஏன் சேவிக்க முடியாதென்பதை விளக்கி ஒரு கடிதம் எழுதினேன். இரண்டு நாட்களுக்குப் பின் நான் கைதுசெய்யப்பட்டு, போலீஸாரால் கடுமையாக அடிக்கப்பட்டேன். பின்பு, அல்பேனியாவிலுள்ள போர்முனைக்கு அனுப்பப்பட்டேன், அங்கே நான் போரிட மறுத்ததால், படைத்துறை முறைமன்றத்தால் விசாரணை செய்யப்பட்டேன். நான் சரியா தவறா என்பதைப் பற்றி அறிவதில் தங்களுக்கு அக்கறையில்லை, போர்வீரர்களின் மனதில் அது என்ன பாதிப்பை உண்டாக்கும் என்பதின்பேரிலேயே தாங்கள் அக்கறையுடையவர்களென இராணுவ அதிகாரிகள் என்னிடம் சொன்னார்கள். நான் மரண தண்டனை அளிக்கப்பட்டேன், ஆனால் சட்டமுறைப்படி செல்லத்தகாத ஏதோ பழுது இருந்ததனால், எனக்குத் துயர்த்தணிவுண்டாக, என் தண்டனைத் தீர்ப்பு, பத்து ஆண்டுகள் கடின உழைப்பாக மாற்றப்பட்டது. என் வாழ்க்கையில் அடுத்த சில மாதங்களை, கிரீஸிலுள்ள இராணுவ சிறையில், மிகக் கடினமான நிலைமைகளின்கீழ் கழித்தேன். அதன் விளைவாக உண்டான உடல் பாதிப்புகளினால் நான் இன்னும் வருந்துகிறேன்.
எனினும், பிரசங்கிப்பதிலிருந்து சிறையிருப்பு என்னை நிறுத்திவிடவில்லை. நிச்சயமாகவே இல்லை! படைத்துறை சாராதவன் இராணுவ சிறைச்சாலையில் இருப்பதேன் என பலர் ஆச்சரியப்பட்டு சிந்திக்கத் தொடங்கினபோது உரையாடல்களைத் தொடங்குவது எளிதாயிருந்தது. உள்ளப்பூர்வ ஆவலுடைய ஒரு வாலிபனோடு நடந்த இந்த உரையாடல்களில் ஒன்று, சிறைச்சாலை முற்றத்தில் ஒரு பைபிள் படிப்புக்கு வழிநடத்திற்று. முப்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பின் இவரை ஓர் மாநாட்டில் மறுபடியும் சந்தித்தேன், அவர் சத்தியத்தை ஏற்று, லெஃப்காஸ் தீவில் ஒரு சபை கண்காணியாகச் சேவித்துக்கொண்டிருந்தார்.
1941-ல் ஹிட்லரின் படைகள் யுகோஸ்லாவியாவுக்குள் படையெடுத்தபோது, இன்னும் தெற்கே ப்ரிவேஸாவிலிருந்த ஒரு சிறைச்சாலைக்கு நாங்கள் மாற்றப்பட்டோம். அந்தப் பயணத்தின்போது, ஜெர்மானிய வெடிகுண்டு விமானங்களால் எங்கள் படைத்துறை வண்டித் தொடர் தாக்கப்பட்டது, கைதிகளாகிய எங்களுக்கு உணவு கொடுக்கப்படவில்லை. என்னிடமிருந்த சிறிது ரொட்டித்துண்டு தீர்ந்தபோது, நான் கடவுளிடம்: “மரணத் தீர்ப்பிலிருந்து நீர் என்னைக் காப்பாற்றின பின்பு, பசியினால் நான் சாவது உம்முடைய சித்தமானால், உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது,” என்று ஜெபித்தேன்.
அடுத்த நாள் பெயர்ப் பட்டியல் வாசிக்கப்படும்போது, ஓர் அதிகாரி என்னை தனியே அழைத்து, நான் எங்கிருந்து வந்தேன், என் பெற்றோர் யார், நான் சிறைச்சாலையில் இருப்பதேன், என்பவற்றை விசாரித்தறிந்த பின்பு, அவரைப் பின்தொடர்ந்து வரும்படி எனக்குக் கூறினார். அவர் என்னை, அந்தப் பட்டணத்திலிருந்த அதிகாரிகளுக்குரிய உணவுப்பந்திக்கு அழைத்துச் சென்று, ரொட்டியும், பாலாடைக்கட்டியும், வாட்டப்பட்ட ஆட்டிறைச்சியும் வைக்கப்பட்டிருந்த மேசைக்கு வழிநடத்தி எனக்கு வேண்டியதைச் சாப்பிடும்படி சொன்னார். ஆனால் நான், மற்ற 60 கைதிகள் பட்டினியாயிருந்ததால், சாப்பிடுவதற்கு என் மனச்சாட்சி அனுமதிக்காதென்று விளக்கினேன். அந்த அதிகாரி இவ்வாறு பதில் சொன்னார்: “நான் எல்லாரையும் போஷிக்க முடியாது! உன் தகப்பனார் என்னிடம் மிகவும் தயாளமுள்ளவராக இருந்தார். நியாயப்படி உனக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன் மற்றவர்களுக்கல்ல.” “அப்படியானால் நான் திரும்பிப் போய்விடுகிறேன்,” என்று நான் பதில் சொன்னேன். அவர் ஒரு விநாடி சிந்தித்து, பின்பு என்னால் கூடிய அளவான உணவை நிரப்பிக்கொள்ளும்படி ஒரு பெரிய பையை எனக்குத் தந்தார்.
சிறைச்சாலைக்கு நான் திரும்பச் சென்றபோது, அந்தப் பையைக் கீழே வைத்து: “பெரியோரே, இது உங்களுக்கு,” என்று சொன்னேன். தற்செயலாக, அந்த முந்திய சாயங்காலத்தில், அந்த மற்ற கைதிகளின் நெருக்கடிநிலைக்கு நான்தான் பொறுப்புடையவன், ஏனெனில், கன்னி மரியாளிடம் ஜெபிக்கும் அவர்களுடைய ஜெபங்களில் நான் சேர்ந்துகொள்கிறதில்லையெனக் குற்றம் சாட்டப்பட்டிருந்தேன். எனினும் கம்யூனிஸ்ட்டாக இருந்த ஒருவன் என் ஆதரவாகப் பேசியிருந்தான். இப்போது, இந்த உணவைக் கண்டதன்பேரில், அவன் மற்றவர்களை நோக்கி: “உங்கள் ‘கன்னி மரியாள்’ எங்கே? இந்த மனிதனின் காரணமாக நாம் சாவோம் என்றீர்களே, எனினும் அவனே நமக்கு உணவைக் கொண்டுவருகிறான்,” என்று சொன்னான். பின்பு அவன் என்னிடமாகத் திரும்பி: “இம்மானுவேல்! வா, நன்றிகூறி ஜெபம் செய்,” என்றான்.
அதற்குப் பின் சீக்கிரத்தில், ஜெர்மன் படை முன்னேறினதானது, சிறைச்சாலை காவலர், கைதிகளை விடுதலையாக்கிவிட்டு, தப்பியோடும்படிசெய்வித்தது, நான் மே 1941-ன் முடிவில் ஆதன்ஸ் செல்வதற்கு முன்னால், மற்ற சாட்சிகளைக் கண்டுபிடிக்க பெட்ராஸுக்குச் சென்றேன். அங்கு சிறிது உடைகளையும் பாதரட்சைகளையும் வாங்கிவிட்டு, ஓர் ஆண்டுக்கு மேற்பட்ட காலத்தில் முதல் தடவையாக குளிக்க முடிந்தது. ஜெர்மன் படை தங்கியிருப்பு முடியும் வரையில், நான் பிரசங்கிக்கையில் ஜெர்மானியர் இடைவிடாமல் என்னை நிறுத்தி வந்தனர், ஆனால் அவர்கள் ஒருபோதும் என்னை கைது செய்யவில்லை. அவர்களில் ஒருவன் இவ்வாறு சொன்னான்: “ஜெர்மனியில் யெகோவாவின் சாட்சிகளை நாங்கள் சுட்டுப்போடுகிறோம், ஆனால் இங்கே, எங்கள் சத்துருக்கள் எல்லோரும் யெகோவாவின் சாட்சிகளாக இருந்தால் நலமாயிருக்குமென விரும்புகிறோம்!”
போருக்குப் பின்னான நடவடிக்கைகள்
கிரீஸூக்குப் போதுமானப் போர் இல்லை என்பதுபோல், 1946-லிருந்து 1949 வரையாக உள்நாட்டுப் போரால் அது மேலுமாகத் தகர்க்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மரணங்கள் ஏற்பட செய்யப்பட்டது. கூட்டங்களுக்கு வெறுமனே வந்திருப்பதுதானே கைதுசெய்யப்படுவதற்கு வழிநடத்தக்கூடிய ஒரு காலத்தில், உறுதியாக நிலைத்திருக்க மிகுதியான ஊக்கமூட்டுதல் சகோதரருக்குத் தேவைப்பட்டது. சகோதரர்கள் பலர், தங்கள் நடுநிலை வகிப்புக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டனர். இவ்வாறு இருந்தும், ராஜ்ய செய்தியைப் பலர் ஏற்று செயல்பட்டனர், ஒவ்வொரு வாரமும் ஒன்று அல்லது இரண்டு முழுக்காட்டுதல்கள் நடந்தன. 1947-ல் காலை நேரங்களின்போது ஆதன்ஸில் சங்கத்தின் அலுவலகங்களில் வேலை செய்யவும், இரவில் பயணக் கண்காணியாக சபைகளைச் சந்திக்கவும் நான் தொடங்கினேன்.
1948-ல், ஐக்கிய மாகாணங்களிலுள்ள உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பயிற்சிபெற வரும்படி நான் அழைக்கப்பட்ட மகிழ்ச்சியை அனுபவித்தேன். ஆனால் ஒரு பிரச்சினை இருந்தது. என் முந்தின குற்றத்தீர்ப்புகளின் காரணமாக, நான் பயண இசைவுச்சீட்டைப் பெற முடியவில்லை. எனினும் என் பைபிள் மாணாக்கரில் ஒருவர், படைப்பெருந்தலைவர் ஒருவரோடு நட்புறவுடையவராக இருந்தார். இந்த மாணாக்கருக்கு நன்றி, சில வாரங்களுக்குள் என் பயண இசைவுச்சீட்டு எனக்குக் கிடைத்தது. ஆனால், நான் கிரீஸை விட்டுப் புறப்படுவதற்கு சிறிது காலமே இருக்கையில், தி உவாட்ச்டவர் வினியோகித்ததற்காகக் கைதுசெய்யப்பட்டேன். ஆதன்ஸிலுள்ள ஸ்டேட் செக்யூரிட்டி போலீஸின் தலைமை அதிகாரியினிடம் ஒரு போலீஸ்காரன் என்னைக் கொண்டுசென்றான். எனக்கு முற்றிலும் ஆச்சரியமுண்டாக அவர் என் அயலகத்தாரில் ஒருவராக இருந்தார்! நான் கைதுசெய்யப்பட்ட காரணத்தை போலீஸ்காரன் அவருக்கு விளக்கி, பத்திரிகைகளை அவரிடம் கொடுத்தான். என் அயலார், தன் மேசை இழுப்பறையிலிருந்து ஒரு கட்டு காவற்கோபுரம் பத்திரிகைகளை எடுத்து: “சமீப வெளியீடு என்னிடம் இல்லை. நான் ஒரு பிரதி எடுத்துக்கொள்ளலாமா?” என்று கேட்டார். இத்தகைய காரியங்களில் யெகோவாவின் கரத்தைக் காண்பதில் நான் எவ்வளவாய் மன ஆறுதலடைந்தேன்!
1950-ல், கிலியட்டின் 16-வது வகுப்பு, பயன்பெருக்கும் ஓர் அனுபவமாக இருந்தது. அது முடிந்தபோது, நான் சைப்ரஸுக்குச் செல்லும்படி நியமிக்கப்பட்டேன். கிரீஸில் இருந்ததைப்போல் அங்கே, பாதிரிமார்களின் எதிர்ப்பு கடுமையாக இருந்ததைக் கண்டேன். ஆர்த்தடாக்ஸ் மதகுருக்களால் மூர்க்க நிலைக்குத் தூண்டிவிடப்பட்ட மதவெறியர் கூட்டங்களை நாங்கள் அடிக்கடி எதிர்ப்பட வேண்டியதாக இருந்தது. சைப்ரஸுக்குரிய என் நுழைவுரிமை சீட்டு 1953-ல் புதுப்பிக்கப்படவில்லை, துருக்கியிலுள்ள இஸ்தான்புல்லுக்கு நான் திரும்பவும் நியமிக்கப்பட்டேன். மறுபடியுமாக இங்கேயும் சொற்ப காலமே இருந்தேன். பிரசங்க ஊழியத்தில் நல்ல பலன்கள் இருந்தபோதிலும், துருக்கிக்கும் கிரீஸுக்கும் இடையே அரசியல் மனத்தாங்கல்கள் இருந்ததானது, நான் அதை விட்டு வேறோரு நியமிப்பிடத்துக்கு—எகிப்துக்கு—செல்லவேண்டியதாக்கிற்று.
நான் சிறைச்சாலையில் இருந்தபோது, சங்கீதம் 55:6, 7 என் மனதுக்கு வரும். அதில், வனாந்தரத்துக்கு ஓடிப்போகும்படியான ஓர் ஆவலை தாவீது வெளிப்படுத்தினார். ஒருநாள் அங்கேதான் நான் இருப்பேன் என்று ஒருபோதும் கற்பனை செய்யவில்லை. 1954-ல், புகை வண்டியிலும், நைல் நதி கப்பலிலும் பல நாட்கள் சோர்வூட்டும் பயணத்துக்குப் பின், நான் சேரவேண்டிய இடத்துக்கு—சூடானிலுள்ள கார்ட்டூமுக்குக்—கடைசியாகப் போய்ச் சேர்ந்தேன். நான் செய்ய விரும்பியதெல்லாம், குளித்துவிட்டு படுக்கைக்குப் போகவேண்டுமென்பதே. ஆனால் அது நடுப்பகல் என்பதை மறந்துவிட்டேன். கூரையின்மீது நீர்ச் சேமிப்புக்கலத்தில் சேமித்து வைக்கப்பட்ட நீர், என் தலையைச் சுட்டு புண் உண்டாக்கி, அது ஆறும் வரையில் பல மாதங்கள், ஹெல்மெட் அணிந்துகொள்ளும்படி என்னை வற்புறுத்திவிட்டது.
அங்கு மிக அருகிலிருந்ததாகக் கருதக்கூடிய சபையிலிருந்து, ஆயிரத்து அறுநூறு கிலோமீட்டர்கள் தூரத்தில், அந்தச் சஹாராவின் மத்தியில் தனிமையாக ஒதுக்கப்பட்டிருப்பவனாய் நான் அடிக்கடி உணர்ந்தேன். ஆனால் யெகோவா என்னை ஆதரித்து, தொடர்ந்து நிலைத்திருக்கும்படி எனக்குப் பலத்தை அளித்தார். முற்றிலும் எதிர்பாராத மூலகாரணங்களிலிருந்து சிலசமயங்களில் ஊக்கமூட்டுதல் வந்தது. கார்ட்டூனின் பொருட்காட்சிச் சாலை கண்காணிப்பவரை நான் ஒரு நாள் சந்தித்தேன். அவர் கபடற்ற மனதுடையவராக இருந்தார், நாங்கள் சிறந்த முறையில் கலந்தாராய்ந்தோம். நான் கிரேக்கக் குலமரபிலிருந்து வந்ததை அறிந்தபோது, நான் பொருட்காட்சிச் சாலைக்குச் சென்று ஆறாவது நூற்றாண்டு சர்ச் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட கலை வேலைப்பாடமைந்த பொருட்களின்மீதிருந்த சில எழுத்துப்பொறிப்புகளை மொழிபெயர்ப்பதற்கு உதவிசெய்யக்கூடுமாவென்று என்னைக் கேட்டார். காற்றோட்டமிராத புழுக்கமான கீழ் அறையில் ஐந்து மணிநேரங்கள் செலவிட்ட பின்பு, எபிரெய நான்கெழுத்துக்கள் அடங்கிய யெகோவாவின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த மெருகிடப்பட்ட தட்டு ஒன்றைக் கண்டேன். என் மகிழ்ச்சியைக் கற்பனைசெய்து பாருங்கள்! ஐரோப்பாவில், கடவுளுடைய பெயரைச் சர்ச்சுகளில் காண்பது அரிதல்ல, ஆனால் சஹாராவின் மத்தியில் அதைக் காண்பது வெகு அசாதாரணமானது!
1958-ல் சர்வதேச மாநாட்டிற்குப் பின்பு, நான் மண்டலக் கண்காணியாக, மத்திபத்திலும் சமீப கிழக்கிலும் மத்தியதரைக் கடலைச் சுற்றிலுமிருக்கும் 26 நாடுகளிலும் பிராந்தியங்களிலுமுள்ள சகோதரரைச் சென்று சந்திக்கும்படி நியமிக்கப்பட்டேன். அடிக்கடி இடர்ப்பாடான ஒரு நிலைமையிலிருந்து வெளியேறுவது எவ்வாறென்று நான் அறியாதிருந்தேன், ஆனால் அதிலிருந்து மீள்வதற்கான ஒரு வழியை யெகோவா எப்பொழுதும் அருளினார்.
சில நாடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாக இருக்கிற சாட்சிகளுக்கு யெகோவாவின் அமைப்பு காட்டுகிற கவனிப்பு என் மனதில் எப்போதும் ஆழ்ந்து பதிந்து வந்தது. ஒரு சந்தர்ப்பத்தில், எண்ணெய் எடுக்கிற இடத்தில் வேலை செய்யும் கிழக்கிந்திய சகோதரர் ஒருவரை நான் சந்தித்தேன். அந்த நாட்டில் அவர் மாத்திரமே ஒரே சாட்சியாக இருந்தாரெனத் தோன்றினது. அவருடைய நிலைப்பெட்டியில், வெவ்வேறுபட்ட 18 மொழிகளில் பிரசுரங்களை அவர் வைத்திருந்தார், அவற்றை தன்னோடு வேலைசெய்வோருக்கு அளித்துவந்தார். மற்ற மதங்கள் எல்லாம் கண்டிப்பாய்த் தடையுத்தரவு போடப்பட்டிருக்கும் இங்கேயுங்கூட, நற்செய்தியைப் பிரசங்கிக்கவேண்டிய தன் பொறுப்பை நம்முடைய சகோதரன் மறக்கவில்லை. அவருடைய மதத்தின் ஒரு பிரதிநிதி, அவரைக் காண்பதற்கு அனுப்பப்பட்டிருந்ததன்பேரில், அவருடைய உடனுழைப்பாளர்கள் மனங்கவரப்பட்டனர்.
1959-ம் ஆண்டில் ஸ்பெய்னுக்கும் போர்த்துகலுக்கும் சென்றேன். அந்தச் சமயத்தில் இரண்டு நாடுகளும் இராணுவ சர்வாதிகார ஆட்சிக்குள் இருந்தன. யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியம் கண்டிப்பான தடையுத்தரவின்கீழ் இருந்தது. ஒரே மாதத்தில், நூறுக்கு மேற்பட்ட கூட்டங்களை நடத்தி, இக்கட்டுகளின் மத்தியிலும் சோர்ந்து விடாதிருக்கும்படி சகோதரரை நான் ஊக்குவிக்க முடிந்தது.
இனிமேலும் தனியாக இல்லை
மணமாகாதவனாக நான், 20-க்கு மேற்பட்ட ஆண்டுகள் முழுநேர சேவையில் யெகோவாவைச் சேவித்து வந்திருந்தேன். ஆனால் நிலையான இருப்பிடமில்லாமல், இடைவிடாது பயணம் செய்வதில் நான் திடீரென்று தளர்ந்தவனாக உணர்ந்தேன். ஏறக்குறைய இந்தச் சமயத்தில்தான், டுனீஷியாவில் ஸ்பெஷல் பயனியராயிருந்த ஆனி பையானுக்கியை நான் சந்தித்தேன். 1963-ல் நாங்கள் மணம் செய்துகொண்டோம். யெகோவாவின்பேரிலும் சத்தியத்தின்பேரிலும் அவளுக்கிருந்த அன்பும், ஊழியத்தில் அவளுடைய கற்பிக்கும் கலையோடுகூடிய ஆர்வ ஈடுபாடும், மொழி அறிவும், எங்கள் மிஷனரி ஊழியத்தில், மற்றும் ஆப்பிரிக்காவின் வடக்கிலும் மேற்கிலும் இத்தாலியிலும் எங்கள் வட்டார ஊழியத்தில், உண்மையான ஆசீர்வாதமாக நிரூபித்தன.
ஆகஸ்ட் 1965-ல், செனிகலிலுள்ள டகரில் ஊழியம் செய்யும்படி என் மனைவியும் நானும் நியமிக்கப்பட்டோம். அங்கு அவ்விடத்து கிளை அலுவலகத்தை அமைக்கும் சிலாக்கியம் எனக்கு இருந்தது. செனிகல், அதன் மதசுதந்தரமளிப்புக்குத் தனிச்சிறப்பு வாய்ந்த நாடாக இருந்தது. சந்தேகமில்லாமல் அதன் தலைவர் லேயொபோல் சென்கர் அதற்குக் காரணமாக இருந்தார். மலாவியில் 1970-ன்போது ஏற்பட்ட பயங்கர துன்புறுத்தலின்போது, யெகோவாவின் சாட்சிகளின் ஆதரவாக மலாவியின் தலைவர் பன்டாவுக்கு எழுதின ஒருசில ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்களில் இவர் ஒருவர்.
யெகோவாவின் நிறைவான ஆசீர்வாதம்
1951-ல், நான் கிலியடிலிருந்து சைப்ரஸுக்குச் சென்றபோது, ஏழு பெட்டிகளுடன் பயணப்பட்டேன். துருக்கி செல்ல புறப்பட்டபோது, ஐந்து பெட்டிகளே இருந்தன. ஆனால் இவ்வளவு அதிகமாகப் பயணப்படுகையில், 20 கிலோகிராம் (44 பவுண்டு) அளவான பயணப்பொருள் கட்டுப்பாட்டுக்கு நான் பழக்கப்பட வேண்டியதாக இருந்தது. இதில் என் கோப்புகளும் என் சிறிய தட்டச்சுப்பொறியும் அடங்கியிருந்தது. அப்போது உவாட்ச் டவர் சங்கத்தின் முதல்வராயிருந்த சகோதரர் நாரிடம் ஒரு நாள் நான் இவ்வாறு சொன்னேன்: “நீர் என்னை பொருளாசையிலிருந்து பாதுகாக்கிறீர். 20 கிலோகிராம் உடைமைகளுடன் நான் வாழும்படி செய்கிறீர். நான் திருப்தியுடன் இருக்கிறேன்.” மிகுதியான பொருட்கள் இல்லாததனால் வருந்துபவனாக நான் ஒருபோதும் உணரவில்லை.
நாடுகளில் உள்நுழைவதும் வெளியேறுவதுமே என் பயணங்களின்போது முக்கிய பிரச்சினையாக இருந்தது. ஊழியம் தடையுத்தரவு போடப்பட்டிருந்த ஒரு நாட்டில், சுங்க அதிகாரி ஒருவர் என் காகிதத் தொகுப்புகளைக் கிளறிப்பார்க்கத் தொடங்கினார். இது, அந்த நாட்டிலிருந்த சாட்சிகளுக்கு ஆபத்து உண்டாக்கக் கூடியது. ஆகவே நான், என் மனைவியினிடமிருந்து வந்த ஒரு கடிதத்தை என் சட்டைப் பையிலிருந்து எடுத்து, அந்தச் சுங்க அதிகாரியினிடம்: “கடிதங்கள் வாசிப்பது உமக்குப் பிரியமாயிருப்பதாக நான் காண்கிறேன். அந்தக் காகிதத் தொகுப்புகளில் இல்லாத, என் மனைவியினிடமிருந்து வந்த இந்தக் கடிதத்தையும் நீர் வாசிக்க விரும்புவீரா?” என்றேன். மனம் தடுமாறியவராய், அவர் எனக்கு அனுமதி அளித்துவிட்டு போய்விட்டார்.
1982 முதற்கொண்டு என் மனைவியும் நானும் பிரான்ஸுக்குத் தெற்கேயுள்ள நைஸில் மிஷனரிகளாகச் சேவித்துக்கொண்டிருக்கிறோம். உடல்நலத் தளர்வினால், முன்னால் நான் செய்துவந்த அளவாக இனிமேலும் என்னால் செய்ய முடிகிறதில்லை. ஆனால் எங்கள் மகிழ்ச்சி குறைந்துவிட்டதென்று அது குறிக்கிறதில்லை. ‘எங்கள் உழைப்பு பயனற்றதாக இல்லை,’ என்று நாங்கள் கண்டிருக்கிறோம். (1 கொரிந்தியர் 15:58, NW) ஆண்டுகளினூடே யாருடனெல்லாம் நான் படிப்பு நடத்தும் சிலாக்கியம் எனக்கு கிடைத்ததோ அந்த ஆட்களும், மேலும், என் குடும்பத்தில் 40-க்கு மேற்பட்ட நபரும், யெகோவாவை உண்மையுடன் சேவித்துக்கொண்டிருப்பதைக் காணும் மகிழ்ச்சியை உடையவனாக நான் இருக்கிறேன்.
‘கடந்து வந்த’ என் வாழ்க்கை, தவிர்க்க முடியாததாக்கின தியாகங்களைக் குறித்து நான் எவ்வகையிலும் வருந்துகிறதில்லை. எவ்வாறாயினும், நாம் செய்யும் தியாகங்களில் எதுவும், யெகோவாவும் அவருடைய குமாரன், இயேசு கிறிஸ்துவும் நமக்காகச் செய்தவற்றிற்கு ஒப்பாகாது. நான் சத்தியத்தை அறிந்திருந்த, கடந்த 60-க்கு மேற்பட்ட ஆண்டுகளை நான் சிந்தித்துப் பார்க்கையில், யெகோவா என்னை நிறைவாய் ஆசீர்வதித்திருக்கிறார் என்று நான் சொல்ல முடியும். நீதிமொழிகள் 10:22 சொல்லுகிறபடி, “கர்த்தரின் [“யெகோவாவின்,” NW] ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்.”
சந்தேகமில்லாமல், யெகோவாவின் “அன்புள்ள இரக்கமே ஜீவனைப் பார்க்கிலும் மேம்பட்டது.” (சங்கீதம் 63:3) முதிர்வயதின் தொல்லைகள் தொடர்ந்து பெருகிக்கொண்டு வருகையில், தேவாவியால் ஏவப்பட்ட சங்கீதக்காரனின் இந்த வார்த்தைகள் என் ஜெபங்களில் அடிக்கடி சொல்லப்படுகின்றன: “யெகோவா, உம்மில் நம்பிக்கைவைத்திருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கப்படாதபடி செய்யும். யெகோவாவாகிய ஆண்டவரே, நான் ஆவலோடு காத்திருக்கிறவர் நீரே; என் சிறுவயதுதொடங்கி நான் நம்பிக்கை வைத்திருக்கிறவர் நீரே. கடவுளே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்துவந்தீர்; இதுவரைக்கும் உமது அதிசயங்களை அறிவித்துவந்தேன். முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும், என்னைக் கைவிடீராக.”—சங்கீதம் 71:1, 5, 17, 18, தி.மொ.
[பக்கம் 25-ன் படம்]
இன்று, என் மனைவி ஆனியுடன்