கடவுளில் விசுவாசம்—அதற்கு ஓர் அற்புதம் அவசியமா?
கடவுளைத் தேட ஆரம்பித்த போது ஆல்பெர்ட்டு 20 வயதுகளின் ஆரம்பத்தில் இருந்தான். அவன் பல மதங்களை ஆராய்ந்து பார்த்தான், ஆனால் அவனுக்கு அதிருப்தியே மிஞ்சியது. பைபிளின் சில பகுதிகளை வாசித்தபோது, நோவா, ஆபிரகாம், சாராள், மோசே போன்ற தனிநபர்களோடு கடவுள் எவ்விதமாகச் செயல்தொடர்பு கொண்டார் என்பதைக் கற்றறிந்தான். ஆல்பெர்ட் பைபிளின் கடவுளிடமாக கவர்ந்திழுக்கப்படுவதை உணர்ந்தான். இருந்தபோதிலும், கடவுள் உண்மையில் இருக்கிறார் என்பதை அவன் எவ்விதமாக உறுதிசெய்து கொள்ள முடியும்?
ஒருநாள் மாலை நேரத்தில் ஆல்பெர்ட் ஒதுக்கமாயிருந்த ஒரு இடத்துக்கு காரை ஓட்டிச்சென்று, “தயவுசெய்து கடவுளே, நீவிர் இருக்கிறீர் என்பதை நிரூபிப்பதற்கு ஏதாவது ஒரு அடையாளத்தை எனக்குக் கொடும்,” என்பதாக ஜெபித்தான். ஆல்பெர்ட் காத்துக்கொண்டே இருந்தான். அங்கே எதுவும் நடக்காதபோது, அவனுடைய எதிர்பார்ப்பு “ஏமாற்றமாக, சூன்யமாக, கோபமாக மாறியது” என்பதை அவன் நினைவுகூருகிறான்.
ஆல்பெர்ட்டைப் போலவே, அநேகர் கடவுளைத் தேடியது பயனில்லாமல் போனது என்பதாக நினைக்கிறார்கள். பாதிரிமாரின் பிரசங்கங்கள் அவர்களைக் குழப்பிவிட்டிருக்கலாம் அல்லது டெலிவிஷன் சுவிசேஷகரின் விற்பனைத்திறனைப் பார்த்து ஏமாந்துபோயிருக்கலாம். கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அயலார் அநேகரின் மத்தியில் காணப்படும் பாசாங்குத்தனத்தால் நிலைகுலைந்துபோய், சிலர் எதை நம்புவது என்பதைக் குறித்து நிச்சயமில்லாதவர்களாக இருக்கிறார்கள். என்றபோதிலும், பூர்வ இஸ்ரவேலில் இருந்த தாவீது அரசன் தன்னுடைய மகன் சாலொமோனுக்கு இவ்வாறு உறுதியளித்தார்: “நீ அவரைத் [கடவுளைத்] தேடினால் உனக்குத் தென்படுவார்.”—1 நாளாகமம் 28:9.
சரி, அப்படியென்றால், கடவுள் தம்மை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்? கடவுள் இருப்பதை உங்களுக்கு நிரூபிப்பதற்கு ஒரு அடையாளத்தை—இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு அனுபவத்தை—நீங்கள் எதிர்பார்க்க வேண்டுமா? டைம் பத்திரிகையில் அறிவிப்பு செய்யப்பட்டிருந்த சமீபத்திய கணிப்பு ஒன்றின்படி, அமெரிக்கர்களில் மூன்றில் இரண்டு பகுதிக்கும் மேற்பட்டவர்கள் அற்புதங்களில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். “ ‘அடையாளங்களையும் அதிசயங்களையுமே’ மையமாகக் கொண்ட வணக்கத்தையுடைய காரிஸ்மாடிக் மற்றும் பெந்தெகொஸ்தே சபைகளே அமெரிக்காவில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் சர்ச்சுகளாகும்,” என்பதாகவும்கூட கட்டுரை குறிப்பிட்டது.
கடவுளில் நம்பிக்கை வைப்பதற்கு “அடையாளங்களும் அதிசயங்களும்” நிகழுவது உண்மையில் அவசியமா? அவர் கடந்தக் காலங்களில் அற்புதங்களைப் பயன்படுத்தியுள்ளார். உதாரணத்துக்கு, கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றினோரைத் துன்புறுத்திக்கொண்டிருந்த தர்சு பட்டணத்தைச் சேர்ந்தவராகிய சவுல் எருசலேமிலிருந்து தமஸ்குவுக்குப் போகிற வழியிலே அசாதாரணமான ஒரு அனுபவத்தைப் பெற்றார். உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவோடான இந்த அற்புதமான சந்திப்பு சவுல் மதம் மாறுவதற்கு வழிநடத்தியது. (அப்போஸ்தலர் 9:1-22) இதன் காரணமாக, முன்னாளில் துன்புறுத்துகிறவராக இருந்தவர் அப்போஸ்தலனாகிய பவுலாக மாறினார்—கிறிஸ்தவத்துக்காக வாதாடுவதில் முதன்மை வாய்ந்தவரானார்!
ஆனால் அற்புதங்கள் எப்பொழுதும் இப்படிப்பட்ட சாதகமான பிரதிபலிப்பை உண்டுபண்ணுகின்றனவா? கடவுளில் உண்மையான விசுவாசமானது, ஒருவர் ஏதோ அற்புதமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதன் பேரில் சார்ந்ததாக இருக்கிறதா?
[பக்கம் 3-ன் படம்]
கடவுளுடைய குமாரன், தர்சு பட்டணத்தைச் சேர்ந்தவராகிய சவுலிடம் அற்புதமாக பேசினார். நீங்கள் ஒரு அற்புதத்தை எதிர்பார்க்க வேண்டுமா?