ஏன் அற்புதங்கள் மட்டுமே விசுவாசத்தை கட்டியெழுப்புவதில்லை
கண்ணால் காண்பதே உண்மை. இதுவே அநேகருடைய கருத்தாக உள்ளது. கடவுள் ஏதோவொரு அற்புதமான வழியில் தம்மை வெளிப்படுத்தினால்தான் தாங்கள் கடவுளை நம்புவோம் என்பதாக சிலர் சொல்கின்றனர். ஒருவேளை அப்படியிருக்கலாம், ஆனால் இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கை உண்மையான விசுவாசத்துக்கு வழிநடத்துமா?
இஸ்ரவேலராகிய கோராகையும் தாத்தானையும் அபிராமையும் எடுத்துக்கொள்ளுங்கள். கடவுளிடமிருந்து வந்த பிரமிப்பூட்டும் இந்த அற்புதங்களை அவர்கள் நேரில் பார்த்தவர்கள் என்பதாக பைபிள் காண்பிக்கிறது: எகிப்தின்மீது வந்த பத்து வாதைகள், சிவந்த சமுத்திரத்தின் வழியாக இஸ்ரவேல் ஜனம் தப்பியது, எகிப்திய பார்வோனும் அவனுடைய இராணுவ படையும் நிர்மூலமாக்கப்பட்டது. (யாத்திராகமம் 7:19–11:10; 12:29-32; சங்கீதம் 136:15) கோராகும் தாத்தானும் அபிராமும் யெகோவா சீனாய் மலையில் பரலோகத்திலிருந்து பேசியதையும்கூட கேட்டிருந்தார்கள். (உபாகமம் 4:11, 12) என்றபோதிலும், இந்த அற்புதங்கள் நிகழ்ந்து சிறிது காலமே சென்றிருந்தபோதிலும், இந்த மூன்று மனிதர்களும் யெகோவாவுக்கும் அவருடைய நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கும் எதிராக ஒரு கலகத்தைத் தூண்டிவிட்டனர்.—எண்ணாகமம் 16:1-35; சங்கீதம் 106:16-18.
சுமார் 40 வருடங்கள் கழித்து, பிலேயாம் என்ற தீர்க்கதரிசியும்கூட ஒரு அற்புதத்தை நேரில் பார்த்தார். தேவதூதன் குறுக்கிட்டதும்கூட கடவுளுடைய சத்துருக்களாகிய மோவாபியரின் பக்கம் சேர்ந்துகொள்வதிலிருந்து அவனைத் தடுத்து நிறுத்தவில்லை. அந்த அற்புதத்தையும் பொருட்படுத்தாமல், பிலேயாம் துணிந்து யெகோவா தேவனுக்கும் அவருடைய ஜனங்களுக்கும் எதிராக ஒரு நிலைநிற்கையை எடுத்தான். (எண்ணாகமம் 22:1-35; 2 பேதுரு 2:15, 16) என்றபோதிலும் பிலேயாமின் விசுவாசக் குறைவு, யூதாஸ்காரியோத்தின் விசுவாசக்குறைவோடு ஒப்பிடுகையில் அற்பமானதாக உள்ளது. இயேசுவின் நெருங்கிய கூட்டாளியாகவும் வரிசையாக அசாதாரணமான பல அற்புதங்களை நேரில் பார்த்தப் பின்னும், யூதாஸ் முப்பது வெள்ளி காசுகளுக்கு கிறிஸ்துவை காட்டிக்கொடுத்தான்.—மத்தேயு 26:14-16, 47-50; 27:3-5.
யூத மதத் தலைவர்களும்கூட இயேசுவின் அநேக அற்புதங்களைக் குறித்து அறிந்தவர்களாக இருந்தனர். லாசருவை அவர் உயிர்த்தெழுப்பிய பின்பு அவர்கள் பின்வருமாறும்கூட ஒப்புக்கொண்டனர்: “இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே.” ஆனால் இப்பொழுது உயிரோடிருந்த லாசருவை அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தது அவர்களுடைய இருதயங்களைக் கனியச்செய்து அவர்களில் விசுவாசத்தை உண்டுபண்ணியதா? நிச்சயமாகவே இல்லை. மாறாக, அவர்கள் இயேசு, லாசரு ஆகிய இருவரையுமே கொலைசெய்ய சதிசெய்தார்கள்!—யோவான் 11:47-53; 12:10.
நேரடியாக கடவுள்தாமே தலையிட்டதும்கூட அந்தப் பொல்லாத மனிதரில் விசுவாசத்தை உண்டுபண்ணத் தவறியது. ஒரு சமயம் இயேசு ஆலயத்தின் சுற்றுப்புறத்தில் இருந்தபோது, அவர் சப்தமாக இவ்வாறு ஜெபித்தார்: “பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும்.” யெகோவா பரலோகத்திலிருந்து இவ்வாறு சப்தமாக பதிலளித்தார்: “மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன்.” இருந்தபோதிலும், அற்புதமான இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களின் இருதயங்களில் விசுவாசத்தை உண்டுபண்ணவில்லை. பைபிள் சொல்லுகிறது: “அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை.”—யோவான் 12:28-30, 37; எபேசியர் 3:17-ஐ ஒப்பிடுக.
அற்புதங்கள் ஏன் விசுவாசத்தை கட்டியெழுப்பவில்லை
இத்தனை அநேக அற்புதங்களின் மத்தியிலும் விசுவாசக் குறைவு எவ்வாறு இருக்கமுடியும்? இயேசு தம்முடைய ஊழியத்தை ஆரம்பித்த சமயத்தில்தானே, மொத்தத்தில் யூதர்கள் “கிறிஸ்து” அல்லது மேசியாவை ‘எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்,’ என்பதை எண்ணிப்பார்க்கும்போது யூத மதத் தலைவர்கள் இயேசுவை நிராகரித்தது விசேஷமாக குழப்புவதாக இருக்கிறது. (லூக்கா 3:15) என்றபோதிலும், அந்த எதிர்பார்ப்புகள் என்னவாக இருந்தன என்பதில்தானே பிரச்சினை இருந்தது. தங்களுக்கு “உலகியல்சார்ந்த வெற்றியையும்,” “பொருளாதார செழுமையையும்” கொண்டுவரக்கூடிய ஒரு மேசியாவைப் பற்றிய எண்ணம் யூதர்களின் மனதை ஆக்ரமித்துக்கொண்டிருந்தது என்பதாக பிரபலமான ஒரு பைபிள் கல்விமான் சொல்வதை சொற்களஞ்சிய ஆசிரியர் டபிள்யூ. ஈ. வைன் மேற்கோள் காட்டுகிறார். ஆகவே பொ.ச. 29-ல் தங்கள் மத்தியில் உண்மையான மேசியாவாக தோன்றியிருந்த நாசரேத்தைச் சேர்ந்த எளிமையான, அரசியல்சாராத இயேசுவை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை. மதத் தலைவர்களும்கூட இயேசுவின் போதகங்கள் அப்போது நிலவியிருந்த சூழலை நிலைகுலையச் செய்து தங்களுடைய முக்கியத்துவமுள்ள பதவிகளுக்கு ஆபத்தானவையாக இருக்கும் என்பதாக பயப்பட்டனர். (யோவான் 11:48) முன்கூட்டியே அவர்களுக்கிருந்த அபிப்பிராயமும் சுயநலமும் இயேசுவின் அற்புதங்களுக்கு அவர்களைக் குருடாக்கியிருந்தன.
யூத மதத்தலைவர்களும் மற்றவர்களும் பின்னால், இயேசுவைப் பின்பற்றினோர் தெய்வீக தயவை அனுபவித்தனர் என்பதற்கு இருந்த அற்புதமான நிரூபணத்தை நிராகரித்தனர். உதாரணமாக, பிறப்பு முதற்கொண்டே சப்பாணியாக இருந்த ஒரு மனிதனை அவருடைய அப்போஸ்தலர் சுகப்படுத்தியபோது, சினங்கொண்ட யூத உயர் நீதிமன்றத்தின் உறுப்பினர்கள் இவ்வாறு கேட்டனர்: “இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வாசம்பண்ணுகிற எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது. ஆகிலும் இது அதிகமாய் ஜனத்துக்குள்ளே பரம்பாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாய்ப் பயமுறுத்தவேண்டுமென்று சொல்லிக்கொண்”டார்கள். (அப்போஸ்தலர் 3:1-8; 4:13-17) தெளிவாகவே, இந்த அதிசயமான அற்புதம் அந்த மனிதர்களின் இருதயங்களில் விசுவாசத்தை கட்டியெழுப்பவோ உண்டுபண்ணவோ இல்லை.
புகழ்பெறவேண்டும் என்ற ஆர்வமும், பெருமையும் பேராசையும் அநேகரை தங்கள் இருதயங்களை மூடிக்கொள்ளும்படியாகச் செய்திருக்கின்றன. ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் விஷயத்தில் இதுவே காரணமாக தோன்றுகிறது. பொறாமையும் பயமும் மற்ற அநேக தீங்கிழைக்கும் மனநிலைகளும் மற்றவர்களுக்கு இடையூறுகளாக இருந்திருக்கின்றன. ஒரு சமயம் கடவுளையே நேரில் தரிசிக்கும் சிலாக்கியம் பெற்றிருந்த கீழ்ப்படியாத தூதர்களான பேய்களும்கூட நம் நினைவுக்கு வருகின்றன. (மத்தேயு 18:10) அவை கடவுள் இருப்பதைக் குறித்து சந்தேகிப்பதில்லை. ஆம், “பிசாசுகளும் விசுவாசித்து, [“நம்பி,” NW] நடுங்குகின்றன.” (யாக்கோபு 2:19) என்றபோதிலும் அவை கடவுளை விசுவாசிப்பதில்லை.
உண்மையான விசுவாசம் என்பதன் அர்த்தம்
விசுவாசம் என்பது வெறும் நம்பிக்கையைக் காட்டிலும் மேலானது. அது ஏதோ ஒரு அற்புதத்தைப் பார்ப்பதால் தற்காலிகமாக ஏற்படும் உணர்ச்சிவயப்பட்ட பிரதிபலிப்பைக் காட்டிலும்கூட அதிகமானது. எபிரெயர் 11:1 இவ்வாறு சொல்லுகிறது: “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.” விசுவாசமுள்ள ஒரு நபர் தன் இருதயத்தில் யெகோவா தேவன் வாக்களித்திருக்கும் அனைத்துமே ஏற்கெனவே நிறைவேறிவிட்டதைப் போன்றதொரு உறுதியுடன் இருக்கிறார். மேலுமாக, காணப்படாத நிஜங்களுக்குண்டான மறுக்கமுடியாத அத்தாட்சிகள் அத்தனை பலமானவையாக இருப்பதால் விசுவாசம் தானே அந்த அத்தாட்சிக்கு நிகராக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆம், விசுவாசம் அத்தாட்சியின்மீது சார்ந்திருக்கிறது. மேலும் கடந்த காலங்களில், விசுவாசத்தை வளர்ப்பதில் அல்லது அதைக் கட்டியெழுப்புவதில் அற்புதங்கள் ஒரு பங்கை வகித்தன. இயேசு நடப்பித்த அடையாளங்கள் அவரே வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக இருந்தார் என்பதை மற்றவர்கள் உறுதியாக நம்பும்படிச் செய்தன. (மத்தேயு 8:16, 17; எபிரெயர் 2:2-4) அதேவிதமாகவே, அற்புதமாக சுகமளித்தல் மற்றும் அந்நிய பாஷைகளில் பேசுதல் போன்ற கடவுளுடைய பரிசுத்த ஆவி அல்லது செயல் நடப்பிக்கும் சக்தியின் இப்படிப்பட்ட வரங்கள், யூதர்களுக்கு இனிமேலும் அவருடைய தயவு இல்லை, ஆனால் இப்பொழுது அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவால் ஸ்தாபிக்கப்பட்ட கிறிஸ்தவ சபையின் மேலே யெகோவாவின் அங்கீகாரம் தங்கியிருக்கிறது என்பதை நிரூபித்தன.—1 கொரிந்தியர் 12:7-11.
ஆவியின் அற்புதமான வரங்களில் தீர்க்கதரிசனம் சொல்லும் திறமையும்கூட அடங்கியிருந்தது. அவிசுவாசிகள் இந்த அற்புதத்தைக் கவனித்தபோது, சிலர் யெகோவாவை வணங்கும்படியாக தூண்டப்பட்டு இவ்வாறு சொன்னார்கள்: “தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறார்.” (1 கொரிந்தியர் 14:22-25) என்றபோதிலும், அற்புதங்கள் கிறிஸ்தவ வணக்கத்தின் ஒரு நிலையான அம்சமாக இருக்கவேண்டும் என்று யெகோவா தேவன் நோக்கங்கொள்ளவில்லை. ஆதலால், அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம்.” (1 கொரிந்தியர் 13:8) ஆதாரங்களின் அடிப்படையில், இந்த வரங்கள் அப்போஸ்தலரின் மரணத்தோடும் அவர்களிடமிருந்து இப்படிப்பட்ட வரங்களைப் பெற்றுக்கொண்டவர்களின் மரணத்தோடும் முடிவுக்கு வந்தன.
அப்படியென்றால் விசுவாசத்துக்கு எந்த ஆதாரமுமின்றி மக்கள் விடப்படுவார்களா? இல்லை, ஏனென்றால் பவுல் இவ்வாறு சொன்னார்: “அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் [கடவுள்] தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை.” (அப்போஸ்தலர் 14:17) ஆம், நம்மைச் சுற்றியுள்ள அத்தாட்சிக்கு தங்கள் மனங்களையும் இருதயங்களையும் திறப்பதற்கு மனமுள்ள நேர்மை இருதயமுள்ள ஆட்களுக்கு, யெகோவா தேவனின் “காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் [கடவுளை மறுதலிப்பவர்கள்] போக்குச்சொல்ல இடமில்லை.”—ரோமர் 1:20.
கடவுள் இருக்கிறார் என்று வெறுமனே நம்புவது மாத்திரமே போதாது. பவுல் இவ்வாறு துரிதப்படுத்தினார்: “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” (ரோமர் 12:2) வேதவாக்கியங்களை இந்தப் பத்திரிகையைப் போன்ற கிறிஸ்தவ பிரசுரங்களின் உதவியோடு ஊக்கமாக படிப்பதன் மூலமாக இதைச் செய்யமுடியும். கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் திருத்தமான அறிவை ஆதாரமாகக் கொண்ட விசுவாசம் பலவீனமானதாக அல்லது உறுதிசெய்யப்படாததாக இல்லை. கடவுளுடைய சித்தத்தைப் பகுத்துணர்ந்து அதை விசுவாசத்தோடு செய்கிறவர்கள் கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்கிறார்கள்.—ரோமர் 12:1.
கண்ணால் பார்க்காவிட்டாலும் நம்புவது
மரித்தோரிலிருந்து இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டதை விசுவாசிப்பது அப்போஸ்தலனாகிய தோமாவுக்கு கடினமாயிருந்தது. “அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன்,” என்று தோமா சொன்னார். கழுமரத்தில் அறையப்பட்ட காயங்களை உடைய ஒரு உடலில் இயேசு பின்னால் காட்சியளித்தபோது தோமா இந்த அற்புதத்துக்கு சாதகமாக பிரதிபலித்தார். என்றபோதிலும் இயேசு சொன்னார்: “காணாதிருந்தும் விசுவாசிக்கிறவன் பாக்கியவான்.”—யோவான் 20:25-29.
இன்று, லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் “தரிசித்து நடவாமல், விசுவாசித்து நட”க்கிறார்கள். (2 கொரிந்தியர் 5:7) பைபிளில் பதிவுசெய்யப்பட்டுள்ள அற்புதங்களை அவர்கள் பார்த்திராவிட்டாலும், இவை நடந்தன என்பதாக அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். சாட்சிகள் கடவுளிலும் அவருடைய வார்த்தையிலும் விசுவாசத்தைக் காண்பிக்கிறார்கள். அவருடைய ஆவியின் உதவியோடு, பைபிளின் போதனைகளையும் அதன் முதன்மையான பொருளையும்—அவருடைய பரலோக ராஜ்யத்தின் மூலமாக யெகோவா தேவனின் அரசுரிமை மெய்ப்பித்துக்காட்டப்படும் என்பதையும்—அவர்களால் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. (மத்தேயு 6:9, 10; 2 தீமோத்தேயு 3:16, 17) இந்த உண்மையான கிறிஸ்தவர்கள் பைபிளின் ஞானமுள்ள புத்திமதியை வாழ்க்கையில் உபயோகித்து மிகுதியாக நன்மைகளைப் பெற்றுக்கொள்கின்றனர். (சங்கீதம் 119:105; ஏசாயா 48:17, 18) பைபிள் தீர்க்கதரிசனங்கள் நம்முடைய காலத்தை ‘கடைசி நாட்கள்’ என்பதாக அடையாளப்படுத்துகின்றன என்பதற்குரிய மறுக்கமுடியாத அத்தாட்சியை அவர்கள் ஏற்றுக்கொண்டு, கடவுளுடைய வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகம் சமீபத்தில் இருக்கிறது என்பதில் விசுவாசம் வைக்கின்றனர். (2 தீமோத்தேயு 3:1-5; மத்தேயு 24:3-14; 2 பேதுரு 3:13) கடவுளைப் பற்றிய அறிவை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வது அவர்களுக்கு சந்தோஷமான அனுபவமாக இருக்கிறது. (நீதிமொழிகள் 2:1-5) கடவுளைத் தேடுகிறவர்கள் வேதவாக்கியங்களைப் படிப்பதன் மூலமாக மாத்திரமே அவரை உண்மையில் கண்டடையமுடியும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.—அப்போஸ்தலர் 17:26, 27.
முந்தைய கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த ஆல்பெர்ட்டை உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒரு அற்புதம் நிகழும்படியாக கேட்டு அவன் செய்த ஜெபம் பதிலளிக்கப்படாமல் போனபின், சில நாட்களுக்குப் பிறகு, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் அவனை சந்தித்தார், இவர் பைபிள் அடிப்படையில் எழுதப்பட்ட சில இலக்கியங்களை அவனிடம் விட்டுச்சென்ற ஒரு வயதான பெண்மணியாக இருந்தார். அதற்குப்பின், ஆல்பெர்ட் ஒரு இலவச வீட்டு பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டான். பைபிளின் செய்தியை அவன் நன்கு அறிந்துகொள்ள ஆரம்பித்தபோது, அவனுடைய ஏமாற்றம் எழுச்சியாக மாறியது. கடைசியாக தான் கடவுளைக் கண்டுபிடித்துவிட்டதை அவன் உணர ஆரம்பித்தான்.
வேதவாக்கியங்கள் இவ்வாறு துரிதப்படுத்துகின்றன: “கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.” (ஏசாயா 55:6) கடவுளிடமிருந்து நவீன நாளைய ஒரு அற்புதத்துக்காக காத்திருப்பதன் மூலமாக அல்ல, ஆனால் அவருடைய வார்த்தையிலிருந்து திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்வதன் மூலமாக இதை நீங்கள் செய்யலாம். இது அவசியமாக உள்ளது, ஏனென்றால் அற்புதங்கள் மட்டுமே விசுவாசத்தைக் கட்டியெழுப்புவதில்லை.
[பக்கம் 5-ன் படம்]
லாசருவின் அற்புதமான உயிர்த்தெழுதலும்கூட இயேசுவின் விரோதிகளை விசுவாசத்தைக் காண்பிக்கும்படியாக தூண்டவில்லை
[பக்கம் 7-ன் படங்கள்]
விசுவாசமானது பைபிளின் திருத்தமான அறிவின்பேரில் சார்ந்திருக்க வேண்டும்