நான் என்றுமே எண்ணி வருத்தப்படாத ஒரு வாழ்க்கை
பால் ஓப்ரிஸ்ட் சொன்னபடி
1912-ல் எனக்கு ஆறு வயதாக இருந்தபோது, அம்மா தன் ஐந்தாவது பிரசவத்தில் இறந்துபோனார்கள். சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், பெர்டா வைபல் என்ற ஒரு இளம் ஹெளஸ்கீப்பர், எங்களுடைய குடும்பத்தை கவனித்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். அடுத்த வருடம் அப்பா அவர்களை திருமணம் செய்துகொண்ட போது, பிள்ளைகளாகிய நாங்கள் மறுபடியுமாக ஒரு அம்மா கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்தோம்.
நாங்கள் ஸ்விட்ஸர்லாந்தில் ஜெர்மன் மொழி பேசும் ஒரு பகுதியில் ப்ரக் என்ற சிறிய நகரில் வாழ்ந்துவந்தோம். பெர்டா உண்மையான ஒரு கிறிஸ்தவராக இருந்தார்கள், எனக்கு அவர்களை மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் பைபிள் மாணாக்கர்களின் (யெகோவாவின் சாட்சிகள்) பிரசுரங்களை 1908-ல் படிக்க ஆரம்பித்திருந்தார்கள்; அவர்கள் கற்றுக்கொண்டதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வார்கள்.
1915-ல் பெர்டாவும் அப்பாவும் திருமணம் செய்துகொண்ட பின்னர், “படைப்பின் நிழற்பட நாடகம்” என்ற நிகழ்ச்சிக்கு அவர்களோடு நான் சென்றேன். ஊக்கமுள்ள பைபிள் மாணாக்கர்களின் சர்வதேச சங்கத்தின் இந்த ஸ்லைடு மற்றும் சினிமா பிலிம் காட்சி என்னுடைய மனதிலும் இருதயத்திலும் ஆழமான ஒரு பாதிப்பை விட்டுச்சென்றது. வந்திருந்த மற்ற ஆட்களின் மனதையும்கூட இது கவர்ந்திருந்தது. ப்ரக்கில் மன்றம் நிரம்பி வழிந்ததால் போலீஸார் கதவுகளை அடைத்துவிட்டு அதற்குப் பின் வந்தவர்களை அனுப்பிவிட்டனர். அப்போது அநேகர் ஏணி வைத்து ஏறி திறந்திருந்த ஒரு ஜன்னலின் வழியாக உள்ளே வர முயன்று, சிலர் அதில் வெற்றியும் பெற்றனர்.
அம்மாவின் சிறந்த முன்மாதிரி
ஐரோப்பாவில் முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தது, எதிர்காலத்தைக் குறித்து மக்கள் பயத்தில் இருந்தார்கள். இதன் காரணமாக, என் அம்மா செய்தது போல கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய ஆறுதலளிக்கும் செய்தியோடு வீட்டுக்கு வீடு செல்வது உயர்ந்த ஒரு சேவையாக இருந்தது. சில சமயங்களில் அவர்களோடு வருவதற்கு என்னை அனுமதித்தார்கள், நான் இதை வெகுவாக அனுபவித்து மகிழ்ந்தேன். 1918-ல், அம்மாவால் கடைசியாக யெகோவா தேவனுக்கு தன்னுடைய ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலமாக அடையாளப்படுத்திக் காட்ட முடிந்தது.
முழுக்காட்டப்படும்வரையாக அம்மாவுடைய வணக்க விஷயத்தில் தலையிடாத அப்பா அதற்குப் பின் அவர்களை எதிர்க்க ஆரம்பித்தார். ஒருநாள் அவர்களுடைய பைபிள் பிரசுரங்களைப் பறித்து அதை ஸ்டவ்வின்மீது அவர் எறிந்துவிட்டார். அம்மாவால் பைபிளை மாத்திரமே நெருப்பிலிருந்து காப்பாற்ற முடிந்தது. ஆனால் அடுத்து அவர்கள் செய்த காரியம் என்னை பிரமிக்கச் செய்தது. அவர்கள் அப்பாவிடம் சென்று அவரை கட்டி அணைத்துக்கொண்டார்கள். அதற்காக அவரிடமாக எந்த வன்மத்தையும் மனதில் வைக்கவில்லை.
முற்றிலும் ஆச்சரியமடைந்தவராய், அப்பா அமைதியாகிவிட்டார். இருப்பினும், அவ்வப்போது, அவருடைய எதிர்ப்பு எரிமலைப்போல் வெடிக்கும், அவருடைய கோபாவேசங்களை நாங்கள் சகித்துக்கொள்ள வேண்டியதாக இருந்தது.
வேலைவாய்ப்பும் ஆவிக்குரிய முன்னேற்றமும்
1924-ல், முடி திருத்தம்செய்யும் வேலையில் மூன்று ஆண்டுகால பயிற்சியை முடித்தப் பின்பு, நான் வீட்டைவிட்டு வெளியேறி ஸ்விட்ஸர்லாந்தில் பிரெஞ்சு மொழி பேசும் பகுதியில் வேலையை தேடிக்கொண்டேன். பிரெஞ்சு மொழியில் தேர்ச்சிப்பெற இது எனக்கு வாய்ப்பினை அளித்தது. இடம் மாறிச்சென்றது ஓரளவு என்னுடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடைசெய்த போதிலும், பைபிள் சத்தியத்தினிடமாக என்னுடைய அன்பை நான் ஒருபோதும் இழந்துவிடவில்லை. ஆகவே ஆறு வருடங்களுக்குப் பின் வீட்டுக்குத் திரும்பியபோது, ப்ரக்கில் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு செல்ல ஆரம்பித்தேன்.
அதற்குப் பின் விரைவில் நான் சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் இருந்த ரீன்ஃபெல்டன் என்ற ஒரு சிறிய நகரத்துக்கு இடம் மாறிச் சென்றேன். நான் என்னுடைய அக்காவின் முடிதிருத்த கடையில் வேலைசெய்துவந்தேன்; பைபிள் மாணாக்கரின் ஒரு சிறிய தொகுதியோடு கூடிவருவதன் மூலம் தொடர்ந்து நான் ஆவிக்குரியவிதமாக வளர்ச்சியடைந்து வந்தேன். ஒருநாள் வாரத்தின் மத்திபத்தில் நடைபெற்ற எங்களுடைய பைபிள் படிப்பை முடிக்கையில், பொறுப்பில் இருந்த மூப்பராகிய சகோதரர் சோடர், “ஞாயிற்றுக்கிழமை வெளி ஊழியத்தில் கலந்துகொள்ள யார் திட்டமிட்டிருக்கிறார்கள்?” என்பதாக கேட்டார். என்னை யாருடனாவது அனுப்புவார்கள், எவ்விதமாக ஊழியம் செய்வது என்பது எனக்கு காண்பிக்கப்படும் என்று நினைத்துக்கொண்டு நான் அதற்கு முன்வந்தேன்.
ஞாயிற்றுக்கிழமை அன்று நாங்கள் எங்கள் பிராந்தியத்தை வந்தடைந்தபோது, “மிஸ்டர் ஓப்ரிஸ்ட் அவ்விடத்தில் ஊழியஞ்செய்வார்” என்பதாக சகோதரர் சோடர் சொன்னார். என்னுடைய இதயம் முன்னொருபோதும் அடித்துக்கொள்ளாத வேகத்தில் படபடவென்று அடித்துக்கொண்டபோதிலும், நான் மக்களை அவர்களுடைய வீடுகளில் சந்தித்து கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பேச ஆரம்பித்தேன். (அப்போஸ்தலர் 20:20) அந்தச் சமயம் முதற்கொண்டு, இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு வருவதற்கு முன்பாக கட்டாயமாக செய்யப்பட்டே ஆகவேண்டும் என்பதாக இயேசு சொன்ன அந்தப் பிரசங்க வேலையை நிறைவேற்றுவதிலிருந்து நான் ஒருபோதும் பின்வாங்கியது இல்லை. (மத்தேயு 24:14) 1934, மார்ச் 4 அன்று, எனக்கு 28 வயதாக இருந்தபோது, நான் தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலமாக யெகோவா தேவனுக்கு என்னுடைய ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்தினேன்.
இரண்டு வருடங்களுக்குப் பின் ஸ்விட்ஸர்லாந்தில் இத்தாலிய மொழி பேசும் பகுதியான லுகானோ என்ற ஒரு நகரில் முடி திருத்தம் செய்யும் ஒரு வேலையைத் தேடிக்கொண்டேன். இத்தாலிய மொழியை நான் சிறிதே அறிந்திருந்த போதிலும் உடனடியாக அங்கே நற்செய்தியைப் பிரசங்கிக்க ஆரம்பித்தேன். இருந்தபோதிலும், ஊழியத்தில் நான் கலந்துகொண்ட அந்த முதல் ஞாயிறு அன்று எடுத்துச் சென்றிருந்த 20 சிறு புத்தகங்களையும் அளித்துவிட்டேன்; காவற்கோபுரம் படிப்பதற்கு அக்கறையுள்ள சில ஆட்களை ஒரு தொகுதியாக கூட்டிச்சேர்க்கவும் என்னால் முடிந்தது. கடைசியில் இவர்களில் அநேகர் முழுக்காட்டப்பட்டார்கள், பிப்ரவரி 1937-ல், லுகானோவில் நாங்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு சபையை ஸ்தாபித்தோம்.
இரண்டு மாதங்களுக்குப் பின்னர், ஏப்ரல் 1937-ல், என்னுடைய வாழ்க்கையை வெகுவாக மாற்றிய ஒரு கடிதத்தை நான் பெற்றுக்கொண்டேன். பெத்தேலில் சேவைசெய்வதற்கான ஒரு அழைப்பாக அது இருந்தது; ஒரு தேசத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை கட்டடம் இவ்வாறு தான் அழைக்கப்படுகிறது. நான் உடனடியாக அழைப்பை ஏற்றுக்கொண்டேன்—பின்னோக்கிப் பார்த்து நான் ஒருபோதும் வருந்தாத ஒரு தீர்மானம் அது. இவ்விதமாகவே முழுநேர ஊழியத்தில் என்னுடைய 60 ஆண்டுகால பணி ஆரம்பமானது.
தொல்லைகள் நிறைந்த காலங்களில் பெத்தேல் சேவை
அந்தச் சமயத்தில் ஸ்விட்ஸர்லாந்தின் தலைநகரான பெர்ன் நகரில் பெத்தேல் இருந்தது. அங்கே நாங்கள் 14 மொழிகளில் புத்தகங்கள், சிறு புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளை அச்சிட்டோம்; இவை ஐரோப்பா முழுவதற்கும் அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு சமயம் நான் அச்சிடப்பட்ட பிரசுரங்களை இரயில் நிலையத்துக்கு தள்ளுவண்டியில் எடுத்துச்சென்றேன், ஏனென்றால் அந்நாட்களில் எங்களிடம் எப்போதும் ஒரு வேன் இருக்கவில்லை. பெத்தேலில் என்னுடைய முதல் பணி அச்சுக் கோர்க்கும் இலாகாவில் இருந்தது; அங்கே நாங்கள் அச்சு வேலைக்காக ஈய அச்சுக்கட்டைகளை இணைப்போம். விரைவில் வரவேற்பாளராக வேலை செய்ய ஆரம்பித்தேன், நிச்சயமாகவே பெத்தேல் குடும்பத்துக்கு முடி திருத்துபவனாகவும் பணிபுரிந்தேன்.
செப்டம்பர் 1939-ல் இரண்டாம் உலகப் போர் துவங்கினது, நாசிக்களின் தாக்குதல் ஐரோப்பா முழுவதிலும் திகிலைப் பரப்பியது. யுத்தம் செய்துகொண்டிருந்த தேசங்களின் மத்தியில் ஸ்விட்ஸர்லாந்து நடுநிலைமை வகித்த ஒரு தேசமாக இருந்தது. ஆரம்பத்தில் எந்தத் தடையுமின்றி நாங்கள் எங்களுடைய கிறிஸ்தவ ஊழியத்தை தொடர்ந்து செய்துவந்தோம். பின்னர், ஜூலை 5, 1940-ல் பிற்பகல் இரண்டு மணிக்கு வரவேற்பாளராக வேலை செய்துகொண்டிருக்கையில் துப்பாக்கி முனையில் குத்துவாள் பொருத்தப்பட்ட துப்பாக்கியுடைய ஒரு வீரனோடுகூட ஒருவர் தோன்றினார்.
“சூரிச்சர் எங்கே இருக்கிறார்?” என்பதாக அந்த மனிதர் சத்தமாக கேட்டார். பிரான்ஸ் சூரிச்சர் அந்தச் சமயத்தில் ஸ்விட்ஸர்லாந்தில் எங்களுடைய பிரசங்க வேலைக்கு கிளை கண்காணியாக இருந்தார்.
“அவரை பார்க்க வந்திருப்பவர் யார் என்பதை நான் அவருக்கு தெரிவிக்கலாமா?” என்பதாக கேட்டேன். உடனடியாக அவர்கள் என்னைப் பிடித்து படிக்கட்டுகளில் மேலே இழுத்துச்சென்று, அவர்களை நான் சூரிச்சர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதாக வற்புறுத்தினர்.
முழு பெத்தேல் குடும்பமும்—நாங்கள் சுமார் 40 பேர் இருந்தோம்—சாப்பாட்டு அறையில் கூடிவரும்படியாக கட்டளையிடப்பட்டோம். எவரும் தப்பியோட முயலாதபடிக்கு கட்டடத்திற்கு வெளியே நான்கு இயந்திர துப்பாக்கிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. உள்ளே, சுமார் 50 போர் வீரர்கள் கட்டடத்தில் சோதனைப் போட ஆரம்பித்தார்கள். எதிர்பார்ப்புக்கு நேர் மாறாக, யெகோவாவின் சாட்சிகள் இராணுவ சேவை எதிர்ப்பை முன்னேற்றுவிப்பதில் உட்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருந்தபோதிலும், ஏராளமான பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஐந்து இராணுவ டிரக்குகளில் எடுத்துச் செல்லப்பட்டன.
காவற்கோபுரம் அரசாங்க அதிகாரிகளால் தணிக்கைச் செய்யப்படுவதை நாங்கள் அனுமதிக்க மறுத்தபோது, ஸ்விட்ஸர்லாந்தில் அது வெளியிடப்படுவது நிறுத்தப்பட்டது. அப்படியென்றால் பெத்தேலில் வேலை செய்ய குறைந்த எண்ணிக்கையான ஆட்களே தேவைப்பட்டார்கள்; ஆகவே குடும்பத்தின் இளம் அங்கத்தினர்கள் பயனியர்களாக அங்கிருந்து செல்ல உற்சாகப்படுத்தப்பட்டார்கள்; முழுநேர பிரசங்க வேலையில் ஈடுபடும் யெகோவாவின் சாட்சிகள் இவ்விதமாகத் தான் அழைக்கப்படுகிறார்கள்.
யுத்த காலத்தின்போது பயனியர் ஊழியம் செய்தல்
ஜூலை 1940-ல் ஸ்விட்ஸர்லாந்தில் லுகானோவிற்கு அருகில் இத்தாலிய மொழி பேசும் பிராந்தியத்துக்கு நான் திரும்பினேன்; பெத்தேலுக்கு செல்வதற்கு முன்னால் நான் வாழ்ந்த இடமாக இது இருந்தது. பாஸிஸத்தின் பலமான செல்வாக்கிற்கு ஆளான தீவிரமான கத்தோலிக்கர் வாழும் பிராந்தியமே நான் பயனியர் செய்வதற்கு எனக்குக் கொடுக்கப்பட்ட பிராந்தியமாக இருந்தது.
ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் போலீஸார் என்னை தடுத்து என்னுடைய பிரசங்க வேலையை நிறுத்திக்கொள்ளும்படியாக என்னை வற்புறுத்துவார்கள். ஒரு தோட்டத்தின் வாயிலில் நான் ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருக்கையில், சாதாரண உடையில் இருந்த ஒரு மனிதன் பின்னாலிருந்து வந்து என்னைப் பிடித்து ஒரு ரோந்து காரில் ஏற்றி லுகானோவுக்கு அழைத்துச் சென்றார். அங்கே என்னை போலீஸிடம் ஒப்படைத்துவிட்டார். நான் விசாரிக்கப்பட்டபோது, யெகோவா தேவன் பிரசங்கிக்கும்படியாக கட்டளையிட்டிருக்கிறார் என்பதை விளக்கினேன்.
“இங்கே பூமியில் நாங்கள்தான் கட்டளையிடுவோம்” என்பதாக அதிகாரி கர்வமாக பதிலளித்தார். “பரலோகத்தில் கடவுள் கட்டளையிட்டுக்கொள்ளலாம்!”
போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில் “சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய்” இருக்கும்படியாக இயேசு கொடுத்த புத்திமதிக்கு நாங்கள் செவிசாய்ப்பது விசேஷமாக இன்றியமையாததாக இருந்தது. (மத்தேயு 10:16) இதன் காரணமாக, பெரும்பாலான என்னுடைய பிரசுரங்களை நான் என்னுடைய சட்டையின் உள் பாக்கெட்டில் மறைத்து வைத்தேன். நான் எதையும் தொலைத்துவிடாதிருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்வதற்காக முட்டிக்கு கீழே இறுக்கமாக இருந்த அரைக்கால் சட்டையை அணிந்திருந்தேன்.
காலம் சென்றபோது நான் என்காடின் பள்ளத்தாக்குக்குச் செல்லும்படியாக சொல்லப்பட்டேன்; அங்கேயும் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு தொடர்ந்தது. கிழக்கு ஸ்விஸ் ஆல்ப்ஸில் இது ஒரு அழகிய பள்ளத்தாக்கு குளிர்காலத்தின் போது பனிக்கட்டியில் இது புதைந்திருக்கும்; பிராந்தியத்தில் சுற்றிலும் செல்வதற்கு எனக்கு உதவிசெய்ய என்னுடைய பனி சறுக்கு வண்டியை நான் கேட்டு பெற்றுக்கொண்டேன்.
வெகு குளிரான குளிர்காலத்தில் பனி சறுக்கு வண்டியில் பயணம் செய்கையில் கையுறைகள் இன்றியமையாதவையாகும். அடிக்கடி பயன்படுத்திய காரணத்தால் என்னுடையது சீக்கிரத்தில் கிழிந்துபோனது. கையால் பின்னப்பட்ட ஒரு ஸ்வெட்டரும் அனல்தரும் கையுறைகளையும் கொண்ட ஒரு முற்றிலும் எதிர்பார்க்கப்படாத ஒரு பார்சல் ஒருநாள் தபாலில் வந்தபோது நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருந்தேன்! பெர்னியில் நான் முன்னிருந்த சபையிலுள்ள ஒரு கிறிஸ்தவ சகோதரி அதைப் பின்னி அனுப்பியிருந்தார்கள். இப்பொழுதும்கூட அதைப் பற்றி சிந்திக்கையில், நான் நன்றியுணர்வால் நெகிழ்ந்து போகிறேன்.
சந்தோஷமான பல சிலாக்கியங்கள்
1943-ல் ஸ்விட்ஸர்லாந்து சகஜ நிலைக்கு திரும்ப ஆரம்பித்தது; நான் பெத்தேலில் சேவைசெய்ய திரும்பவும் அழைக்கப்பட்டேன். சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் இருந்த லாசேனில் பிரெஞ்சு மொழி பேசும் சபையில் சில பிரச்சினைகள் இருந்த காரணத்தால், கடவுளுடைய அமைப்பைக் குறித்து சரியான ஒரு நோக்குநிலையைப் பெற்றுக்கொள்ள பிரஸ்தாபிகளுக்கு உதவிசெய்ய அந்த நகரத்தை தவறாமல் சென்று சந்திக்கும் வேலைப்பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது.
பின்னால் ஸ்விட்ஸர்லாந்திலுள்ள எல்லா பிரெஞ்சு சபைகளையும் சந்திக்கும் வட்டார கண்காணியாக கொஞ்ச காலம் சேவித்தேன். வாரத்தின் ஆரம்பத்தில் நான் பெத்தேலில் வேலைசெய்தேன்; ஆனால் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளை ஆவிக்குரிய வகையில் உதவியாக இருப்பதற்காக பல்வேறு சபைகளைச் சந்திப்பதில் செலவழித்தேன். கூடுதலாக, 1960-ல் பிரெஞ்சு மொழி பேசும் சபை ஒன்று பெர்னில் அமைக்கப்பட்டபோது நான் அதன் நடத்தும் கண்காணியாக ஆனேன். பெத்தேல், பெர்னிலிருந்து தற்போது அது இருக்கும் அந்த அழகான இடமாகிய துன் நகருக்கு மாற்றப்படும் வரையாக, 1970 வரையாக, இவ்வாறே செய்து வந்தேன்.
துன்னில் இத்தாலிய மொழி பேசும் சாட்சிகளின் ஒரு சிறிய தொகுதியைக் காண்பதில் நான் மகிழ்ச்சியடைந்தேன்; அவர்களோடு வேலை செய்ய ஆரம்பித்தேன். காலம் சென்றபோது ஒரு சபை அங்கே உருவானது; இளம் சகோதரர்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தகுதியுள்ளவர்களாக ஆகும் வரையாக பல ஆண்டுகளுக்கு நான் அதனுடைய நடத்தும் கண்காணியாக சேவித்தேன்.
யெகோவாவின் மக்களுடைய சர்வ தேச மாநாடுகளில் ஆஜராயிருப்பதையே விசேஷமாக சந்தோஷமான ஒரு சிலாக்கியமாக நான் கருதியிருக்கிறேன். உதாரணமாக, 1950-ல் நியூ யார்க்கிலுள்ள யாங்கி ஸ்டேடியத்தில் நினைவை விட்டு நீங்காத அந்தத் தேவாட்சி அதிகரிப்பு அசெம்பிளி நடைபெற்றது. நியூ யார்க்கிலுள்ள ப்ரூக்ளினில் யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமைக் காரியாலயத்தைச் சென்று பார்வையிட்டது என் மனதைவிட்டு நீங்காத ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்த வருடம் இங்கிலாந்திலுள்ள லண்டனில் சுத்தமான வணக்கம் அசெம்பிளியில் சகோதரர் மில்டன் ஜி. ஹென்ஷெல் கொடுத்த பேச்சையும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும்” என்ற இயேசுவின் வார்த்தைகளை அவருடைய பேச்சு உயர்த்திக் காண்பித்தது. (லூக்கா 19:40) சகோதரர் ஹென்ஷெல், “கல்லுகள் கூப்பிடவேண்டுமா?” என்பதாக கேட்டார். “வேண்டாம்!” என்பதாக குரல்கொடுத்த ஆயிரக்கணக்கானோரின் அந்த முழக்கம் இன்னும் என்னுடைய காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
1937-ல் நான் பெத்தேலுக்கு திரும்பிச் சென்றபோது, ஒரு சிறிய தொகையை மாத்திரமே பெற்றுக்கொள்வதை அறிந்து, என் அப்பா “வயதான காலத்தில் நீ எப்படியப்பா பிழைத்துக்கொள்வாய்?” என்பதாக கவலையோடு கேட்டார். சங்கீதக்காரனாகிய தாவீதின் வார்த்தைகளை மேற்கோள் காட்டுவதன் மூலமாக நான் பதிலளித்தேன். “நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை.” (சங்கீதம் 37:25) இந்த வார்த்தைகள் என்னுடைய விஷயத்தில் நிச்சயமாகவே நிறைவேறியிருக்கின்றன.
பெர்டா வைபல் 80-க்கும் அதிகமான ஆண்டுகளுக்கும் முன்பாக அப்பாவை திருமணம் செய்துகொண்டதற்காகவும் அவர்களுடைய முன்மாதிரி மற்றும் வழிநடத்துதலின் மூலமாக யெகோவாவையும் அவருடைய குணங்களையும் அறிய வந்ததற்காகவும் நான் எத்தனை சந்தோஷமாயிருக்கிறேன்! குடும்பத்தில் மற்ற அங்கத்தினர்கள் அவர்களைப் பரிகாசம் செய்தபோதிலும், 1983-ல் இறக்கும் வரையாக அவர்கள் யெகோவாவை உண்மையுடன் சேவித்தார்கள். தன்னுடைய கடவுளாகிய யெகோவாவை சேவித்ததைக் குறித்து அவர்கள் ஒருபோதும் வருந்தியது கிடையாது; அதேபோலவே திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து என்னுடைய வாழ்க்கையை முழுமையாக யெகோவாவின் சேவையில் அர்ப்பணித்ததற்காக நான் ஒருபோதும் வருந்தியது கிடையாது.
[பக்கம் 25-ன் படம்]
பெத்தேலில் வேலைசெய்தல்