‘யெகோவா என் கடவுள், அவரில் நான் நம்பிக்கை வைப்பேன்’
வில்லி டீல் கூறியது
நீஏன் பெத்தேலுக்குப் போக விரும்புகிறாய்?” இது 1931-ல் என் தகப்பன் கேட்ட கேள்வி, நான் பெத்தேலில் சேவிக்கத் தொடங்கும்படியான என் விருப்பத்தை அவருக்குத் தெரிவித்தபோது அவர் இவ்வாறு கேட்டார். சார்லந்தில் வாழ்ந்த, என் பெற்றோர், ஏறக்குறைய பத்து ஆண்டுகளாகச் சத்தியத்திலிருந்தவர்கள், மூன்று பையன்களான எங்களுக்கு நல்ல முன்மாதிரியை அவர்கள் வைத்தனர். சத்தியமே அவர்களுடைய முழு வாழ்க்கையாயிருந்தது, நானும் அதை என் முழு வாழ்க்கையாக்க விரும்பினேன்.
ஆனால் என் பெற்றோர் யெகோவாவையும் அவருடைய பரிசுத்த சித்தத்தையும் பற்றி எவ்வாறு கற்றறிந்தனர்? சட்டப்படி அமைக்கப்பட்ட மதத்தில் திருப்தியற்றுப்போய், அவர்கள் சத்தியத்துக்காக வெகுகாலம் நாடித்தேடினர். பல்வேறு சர்ச்சுகளையும், தனிப்பிரிவுகளையும் முயன்று பார்த்தனர், ஒவ்வொன்றாக அவை சரியானவையல்லவெனக் கண்டுபிடித்தனர்.
ஒரு நாள் ஒரு துண்டுப்பிரதி எங்கள் வீட்டுக் கதவண்டை வைக்கப்பட்டிருந்தது, அது “சிருஷ்டிப்பைப்பற்றி நிழற்பட நாடகக்கதை” [Photo-Drama of Creation] என்றழைக்கப்பட்ட, படங்களுடனும் திரைப்படச் சுருள்களுடனும் கடவுளுடைய நோக்கத்தைப்பற்றிப் பேசும் ஒரு பேச்சை அறிவித்தது. அந்த “நிழற்பட நாடகக்கதை” காண்பிக்கப்படும் சமயத்தில் என் தகப்பன் வேலை செய்ய வேண்டியிருந்தது, ஆனால், “அது ஒருவேளை ஏதாவது பயனுடையதாயிருக்கலாம்,” என்று அவர் சொல்லி, அம்மாவைப் போகும்படி ஊக்குவித்தார். அன்று மாலை அதைப் பார்த்தப் பின்பு, அம்மா ஆர்வ உணர்ச்சியுடன் இருந்தார்கள். “கடைசியாக நான் அதைக் கண்டுபிடித்துவிட்டேன்!” என்று அவர்கள் சொன்னார்கள். “நாளை மாலை நீங்கள்தாமே வந்து பாருங்கள். அதுவே நாம் தேடிக்கொண்டிருந்த சத்தியம்.” என்றார்கள். இது 1921-ல் நடந்தது.
ஆவியால்-அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாக, என் பெற்றோர் தாங்கள் மரிக்கும் வரையில் உண்மையுள்ளவர்களாக நிலைத்திருந்தனர், தகப்பன் நாஜிக்களால் பல தடவைகள் சிறைப்படுத்தப்பட்ட பின், 1944-ல் மரித்தார். அம்மா 1970-ல் மரித்தார்கள். அவர்களும் நாஜி ஆட்சியின்கீழ் நீண்டகாலம் சிறையில் செலவிட்டார்கள்.
என் பெற்றோரின் முன்மாதிரியான ஆர்வம்
என் பெற்றோர் தாங்கள் மரிக்குமுன் வெளி ஊழியத்தில் வெகு சுறுசுறுப்பாய் ஈடுபட்டனர். 1922-லிருந்து 1928 வரையில் வெளியிட்ட மாநாட்டு தீர்மான வாசகங்களை விநியோகம் செய்வதில் அம்மா முக்கியமாய் ஆர்வத்துடன் இருந்தார்கள். 1924-ல் ஏற்கப்பட்ட ஒரு தீர்மானம் மதகுருக்கள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர் என்பது பாதிரிமார்களைப்பற்றி கடுமையானக் கண்டனக்கூற்றுகள் அடங்கியிருந்தன. இதை விநியோகிப்பதற்குத் தைரியம் தேவைப்பட்டது. பிரஸ்தாபிகள் விடியற்காலையில் நாலு மணிக்கு எழுந்திருந்து, கைப்பிரதிகளைக் கதவுகளின்கீழ் போட்டுவந்தனர். நான் 12 வயதாகத்தானே இருந்தபோதிலும், அதில் பங்கெடுக்கும்படி என் பெற்றோர் என்னை அனுமதித்தார்கள். நாங்கள் பெரும்பாலும் காலையில் ஐந்து மணிக்குத் தொடங்கி, நெடுந்தொலைவிலிருந்த பிராந்தியத்துக்குப் போய்ச்சேர மிதிவண்டிகளில் மூன்று முதல் நான்கு மணிநேரங்கள் பயணப்பட்டோம். மிதிவண்டிகளைச் செடிப்புதர்களில் ஒளித்து வைத்தோம், மற்றவர்கள் கிராமத்தில் ஊழியஞ்செய்கையில் நான் அவற்றைப் பாதுகாத்துக்கொண்டிருந்தேன். பிற்பகலில் நாங்கள் மிதிவண்டிகளில் வீடு திரும்பினோம், சாயங்காலத்தில் ஒரு மணிநேரம் நடந்து கூட்டத்துக்குச் சென்றோம்.
பின்னால், என்னைவிட இளைஞராயிருந்த எவராவது மிதிவண்டிகளைப் பாதுகாக்கும்படி விடப்பட்டனர், நான் பிரஸ்தாபிகளோடுகூட சென்றேன். ஆனால் என்னைப் பயிற்றுவிக்கும்படி ஒருவரும் எண்ணவில்லை. எந்த வீதியில் ஊழியஞ்செய்ய வேண்டுமென்று மாத்திரமே அவர்கள் எனக்குச் சொன்னார்கள்! இருதயம் படபடவென அடித்துக்கொண்டிருக்க, நான் முதல் வீட்டுக்கு மெதுவாகச் சென்றேன், வீட்டில் எவரும் இருக்கக்கூடாதென எதிர்பார்த்தேன். அந்தோ, ஓர் ஆள் கதவைத் திறந்தார். நான் பேச்சற்றுப்போனேன். நடுக்கத்துடன் வாய்க்குளறி, என் பையிலிருந்த புத்தகத்தைச் சுட்டிக் காட்டினேன். “அது ஜட்ஜ் ரதர்ஃபர்ட்டினிடமிருந்தா?” என அவர் கேட்டார். நான் திக்கித்தடுமாறி பதில்சொன்னேன். “இது, என்னிடமிராத புதிய ஒன்றா?” என்றார். “ஆம், இது புதியது,” என நான் உறுதிப்படுத்தினேன். “அப்படியானால் இது எனக்கு வேண்டும். இதன் விலை என்ன?” இது தொடர்ந்து வேலைசெய்ய எனக்குத் தைரியத்தைக் கொடுத்தது.
1924-ல் முதியோர்கள் 1925-ஐப் பற்றி அடிக்கடி பேசினார்கள். நாங்கள் ஒருமுறை பைபிள் மாணாக்கர்களின் ஒரு குடும்பத்தைப் பார்க்கச் சென்றோம், அங்கே ஒரு சகோதரன் பின்வருமாறு வினவுவதை நான் கேட்டேன்: “கர்த்தர் நம்மை எடுத்துக்கொண்டால், நம்முடைய பிள்ளைகளுக்கு என்ன ஆகும்?” அம்மா எப்போதும்போல் நம்பிக்கையுறுதியுடன்: “அவர்களைக் கவனிப்பது எவ்வாறென கர்த்தருக்குத் தெரியும்,” என்று பதிலளித்தார்கள். அந்தப் பேச்சுப்பொருள் எனக்குக் கவர்ச்சியூட்டியது. இதெல்லாம் எதைக் குறித்தது? 1925-ம் ஆண்டு வந்து சென்றுவிட்டது, ஒன்றும் நடக்கவில்லை. எனினும், என் பெற்றோர் தங்கள் ஆர்வத்தில் குன்றவில்லை.
தகப்பனின் ஞானமான அறிவுரை
கடைசியாக, 1931-ல், என் வாழ்க்கையைக்கொண்டு நான் செய்ய விரும்புவதை என் தகப்பனிடம் சொன்னேன். “நீ ஏன் பெத்தேலுக்குப் போக விரும்புகிறாய்?” என்று என் தகப்பன் பதிலுக்குக் கேட்டார். “நான் யெகோவாவைச் சேவிக்க விரும்புவதனிமித்தமே,” என்று நான் பதிலுரைத்தேன். “நீ பெத்தேலுக்கு வரும்படி ஏற்கப்படுகிறாயென வைத்துக்கொள்வோம்,” என அவர் தொடர்ந்து, “அங்கிருக்கும் சகோதரர்கள் தேவதூதர்கள் அல்லரென நீ உணருகிறாயா? அவர்கள் அபூரணர் தவறுசெய்பவர்கள். இது உன்னை ஓடிப்போக மற்றும் விசுவாசத்தையுங்கூட விட்டுவிட செய்யலாமென நான் பயப்படுகிறேன். இதைப்பற்றி கவனமாய்ச் சிந்திக்கும்படி நிச்சயமாயிரு,” என்றார்.
அத்தகைய காரியத்தைக் கேட்டது என்னைத் திடுக்கிடச் செய்தது, ஆனால் சில நாட்கள் காரியங்களைச் சிந்தித்துப் பார்த்தப்பின், பெத்தேலுக்கு மனுசெய்வதற்கான என் விருப்பத்தை நான் மறுபடியும் கூறினேன். “நீ ஏன் போக விரும்புகிறாய் என்பதை மறுபடியும் எனக்குச் சொல்,” என்று அவர் சொன்னார். “நான் யெகோவாவைச் சேவிக்க விரும்புவதனிமித்தமே,” என நான் மறுபடியும் சொன்னேன். “என் மகனே, அதை ஒருபோதும் மறந்துவிடாதே. நீ அழைக்கப்பட்டால், நீ ஏன் செல்கிறாய் என்பதை நினைவில் வைத்திரு. ஏதாவது தவறை நீ கண்டால், அதைப்பற்றி மட்டுக்குமீறி கவலைப்படாதே. உன்னைத் தவறாக நடத்தினாலுங்கூட, ஓடிப்போய்விடாதே. பெத்தேலில் நீ ஏன் இருக்கிறாய் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதே—நீ யெகோவாவைச் சேவிக்க விரும்புவதனிமித்தமே! உன் வேலையில் முற்றிலும் கவனம் செலுத்தி யெகோவாவில் நம்பியிரு.”
இவ்வாறு நவம்பர் 17, 1931-ன் பிற்பகலின் தொடக்கத்தில் நான் ஸ்விட்ஸர்லாந்தில், பெர்னிலுள்ள பெத்தேலில் வந்து சேர்ந்தேன். நான் இன்னும் மூன்றுபேரோடு ஓர் அறையில் தங்கியிருந்து அச்சாலையில் வேலைசெய்து, கையால் காகிதத்தை உட்செலுத்த வேண்டிய ஒரு சிறிய அச்சடிக்கும் இயந்திரத்தை இயக்குவதற்குக் கற்றுக்கொண்டிருந்தேன். அச்சடிக்கும்படி எனக்கு நியமித்தவற்றில் முதல் உருப்படி ருமேனிய மொழியில் காவற்கோபுரம் ஆகும்.
வானத்திலிருந்து ஒரு செய்தி!
1933-ல் சங்கம், திரும்புகட்டம் (The Crisis) என்ற ஒரு சிறு புத்தகத்தைப் பிரசுரித்தது, அது ஐக்கிய மாகாணத்தில் சகோதரர் ரதர்ஃபர்ட் வானொலிமூலம் கொடுத்த மூன்றுபேச்சுகள் அடக்கியிருந்தது. இந்தச் சிறு புத்தகம் ஒரு தனிப்பட்ட முறையில் பரவலாக விநியோகிக்கப்படவிருக்கிறதென, கிளை அலுவலக ஊழியர், ஹார்பெக், ஒரு நாள் காலைபோஜனத்தின்போது பெத்தேல் குடும்பத்துக்குத் தெரிவித்தார். பெர்ன் நகரத்தின்மேல் பறக்கும், வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு சிறிய ஆகாயவிமானத்திலிருந்து விளம்பர துண்டுப்பிரதிகள் கீழே போடப்படும், அதேசமயத்தில் பிரஸ்தாபிகள் வீதிகளில் நின்று இந்தச் சிறு புத்தகத்தைப் பொதுமக்களுக்கு அளித்துக்கொண்டிருப்பார்கள். “அந்த விமானத்தில் மேலே செல்ல, வாலிப சகோதரரான உங்களில் யார் ஆயத்தமாயிருக்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார். “விருப்பமானால் உங்கள் பெயரை உடனடியாகக் கொடுங்கள்.” நான் அவ்வாறு செய்தேன், என்னைத் தெரிந்துகொண்டதாக சகோதரன் ஹார்பெக் பின்னால் அறிவித்தார்.
அந்த முக்கியமான நாளில், துண்டுப்பிரதிகள் நிறைந்த பல அட்டைப்பெட்டிகளுடன் விமானநிலையத்துக்குக் காரில் சென்றோம். விமானம் இயக்குபவருக்குப் பின்னால் நான் உட்கார்ந்து, துண்டுப்பிரதிகளை என் பக்கத்திலிருந்த இருப்பிடத்தின்மீது குவித்து வைத்துக்கொண்டேன். நுட்பத்திட்டமாக எனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளாவன: துண்டுப்பிரதிகளை நூறுநூறாகச் சுருட்டி, ஒவ்வொரு சுருளையும் பலகணி வழியாய் வெளியில் ஒரு பக்கமாகக் கூடிய எல்லா பலத்துடனும் வீசி எறி. கவனக்குறைவு அந்தத் தாள்கள் விமான வால்புறத்தில் சிக்கிக்கொள்ளச்செய்து பிரச்னைகளை உண்டுபண்ணும். ஆனால் எல்லாம் நன்றாய் முடிந்தது. இந்த ‘வானத்திலிருந்து வந்த செய்தியைக்’ காண்பது எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாக இருந்ததென பின்னால் சகோதரர்கள் சொன்னார்கள். சிலர் தங்கள் தோட்ட மலர்ப்பாத்தி துண்டுப்பிரதிகளால் மூடப்பட்டதென தொலைபேசியின்மூலம் முறையிட்டபோதிலும், விரும்பின பலன் கிடைத்தது, மிகுதியான சிறு புத்தகங்கள் அளிக்கப்பட்டன.
ஒவ்வொரு ஊழிய சிலாக்கியத்துக்காகவும் நன்றியுடனிருத்தல்
பெத்தேல் சேவையின் சந்தோஷத்துக்காகவும் மனத்திருப்திக்காகவும் நான் ஒவ்வொரு நாளும் யெகோவாவுக்கு நன்றிசெலுத்தினேன். சபையில், கூட்டத்துக்காக ராஜ்ய மன்றத்தைத் திறந்துவைக்கவும், நாற்காலிகளை ஒழுங்கான முறையில் வரிசைப்படுத்தவும், பேச்சாளரின் நிலைமேடையில் ஒரு குவளை குடிதண்ணீர் வைக்கவும் நியமிக்கப்பட்டேன். நான் இதை மிகுந்த மதிப்புக்குரியதாகக் கருதினேன்.
பெத்தேலில், நான் கடைசியாக அந்தத் தகட்டச்சு முறையான பெரிய அச்சியந்திரத்தில் வேலைசெய்தேன், இது முன்பு தி கோல்டன் ஏஜ் (இப்பொழுது விழித்தெழு!) என்ற பத்திரிகையை போலிஷ் மொழியில் அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்டது. 1934-ல் நாங்கள் இசைப்பெட்டிகளைப் பயன்படுத்தத் தொடங்கினோம், அவற்றை உண்டுபண்ணியமைப்பதில் நான் உதவிசெய்தேன். பதிவுசெய்யப்பட்ட பைபிள் பேச்சுகளுடன் வீடுவீடாகச் செல்வதில் நான் மிகுந்த சந்தோஷத்தைக் கண்டடைந்தேன். வீட்டுக்காரர்கள் பலர் இந்த நூதன சிறு பொறியமைப்பைப்பற்றி அறிய ஆர்வங்கொண்டனர். அதைக் கேட்க அடிக்கடி முழு குடும்பமும் ஒன்று கூடும், பின் ஒவ்வொருவராக நழுவிச் சென்றுவிடுவர். முழு குடும்பமும் சென்றபின்பு, நான் அடுத்த வீட்டுக்குச் செல்வேன்.
போர் நடந்த காலத்தின்போது வேலை செய்வதில் நிலைத்திருத்தல்
முதல் உலகப் போரின் பின், என் சுதேச நாடாகிய சார்லந்து ஜெர்மனியிலிருந்து பிரிக்கப்பட்டு சர்வதேச சங்கத்தின் ஆதரவின்கீழ் ஆளப்பட்டது. இவ்வாறு, சார்லந்து அதன் சொந்த தனித்துவ ஆதாரச் சான்றுகளை அளித்தது. 1935-ல் அதன் குடிமக்கள் ஜெர்மனியோடு திரும்ப இணைந்துகொள்ளும்படி விரும்புகிறார்களாவெனத் தீர்மானிக்க குடிமக்கள் அனைவரின் நேர்முக வாக்குக்குரிய கூட்டம் வைக்கப்பட்டது. சார்லந்து நாஜியின் அதிகாரத்துக்குள் வந்தால் நான் என் குடும்பத்தாரைச் சந்திக்க முடியாமற்போகுமென அறிந்து என் குடும்பத்தாரைப் பார்ப்பதற்கு இந்த வாய்ப்பை அனுகூலப்படுத்திக்கொண்டேன். நிச்சயமாகவே, அதன்பின் பல ஆண்டுகளாக, என் பெற்றோரிடமிருந்தோ என் சகோதரர்களிடமிருந்தோ நான் ஒன்றும் கேள்விப்படவில்லை.
இரண்டாம் உலகப் போரில் நேர்முகமாக உட்படுவதிலிருந்து விட்டுவைக்கப்பட்ட போதிலும், சுற்றியிருந்த நாடுகளை ஜெர்மனி ஒவ்வொன்றாய்க் கைப்பற்றிக் குடியேறினபோது, ஸ்விட்ஸர்லாந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டதாயிற்று. ஜெர்மனியைத் தவிர ஐரோப்பா முழுவதற்கும் நாங்கள் புத்தகங்களை அச்சடித்துக்கொண்டிருந்தோம், ஆனால் இப்பொழுது புத்தகங்களை அனுப்ப முடியாது. அப்பொழுது கிளை அலுவலக ஊழியராயிருந்த சகோதரர் ஜூர்க்கர், உண்மையில் நம்மிடம் பணம் எதுவுமில்லையென எங்களிடம் சொல்லி, காரியங்கள் இயல்பான நிலைக்கு வரும் வரை பெத்தேலைவிட்டு வெளியில் வேலை தேடி செய்யும்படி எங்களுக்குக் கூறினார். எனினும், உள்ளூரிலுள்ள ஏறக்குறைய ஆயிரம் பிரஸ்தாபிகளுக்காக அச்சடிக்கவேண்டியவை சில இருந்ததால், நான் தொடர்ந்திருக்கும்படி அனுமதிக்கப்பட்டேன்.
ஜூலை 5, 1940-ஐ பெத்தேல் குடும்பம் ஒருபோதும் மறந்துவிடாது. பகல் சாப்பாடு முடிந்தவுடன் ஓர் இராணுவ வண்டி வந்துநின்றது. போர்ச்சேவகர்கள் அதிலிருந்து வெளியில் குதித்து பெத்தேலுக்குள் பாய்ந்து புகுந்தனர். அசையாமல் நிற்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, எங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே ஒவ்வொரு, ஆயுதந்தரித்த போர்ச்சேவகன் காவல்செய்தான். கட்டடத்தின் மீதிபாகத்தைச் சோதனையிடுகையில் எங்களைச் சாப்பாட்டு அறைக்குள் விரட்டிச்சென்றனர். இராணுவ சேவையை மறுக்கும்படி நாங்கள் மற்றவர்களுக்குச் சொல்வதாக அதிகாரிகள் சந்தேகப்பட்டனர், ஆனால் அவர்கள் எந்த அத்தாட்சியையும் காணவில்லை.
போர் ஆண்டுகளின்போது, தண் மற்றும் ஃபரட்டிகென் என்ற இரு இடங்களிலும் நான் சபை ஊழியனாக இருந்தேன். இது என் வார இறுதி திட்டம் முழு நிறைவாயிருப்பதைக் குறித்தது. ஒவ்வொரு சனிக்கிழமையும், பகல் சாப்பாட்டுக்குப் பின் 30 மைல்கள் என் மிதிவண்டியை ஓட்டி ஃபரட்டிகெனுக்குச் சென்றேன், அங்கே மாலையில் நான் காவற்கோபுர படிப்பை நடத்தினேன். ஞாயிறு காலையில் பிரஸ்தாபிகளோடு வெளி ஊழியத்துக்குச் சென்றேன். பின்பு, பிற்பகலின் தொடக்கத்தில், சபை புத்தகப் படிப்பை நடத்தும்படி இன்டெர்லேக்கனுக்குச் சென்றேன், பிந்திய பிற்பகலில் ஸ்பீட்ஸில் ஒரு குடும்ப பைபிள் படிப்பு நடத்துவதற்குச் சென்றேன். அந்த நாளை முடிக்க, தண்ணில் காவற்கோபுர படிப்பை நடத்தினேன்.
என் எல்லா வேலைகளையும் முடித்து, பிந்திய இரவில், நான் பெர்னுக்குத் திரும்பப் பயணப்படுகையில் ஆழ்ந்த மனத்திருப்தியடைந்தவனாகப் பாடிக்கொண்டும் விசிலடித்துக்கொண்டும் சென்றேன். கார்கள் சொற்பமாயிருந்தன அவற்றை நான் அதிகம் எதிர்ப்படவில்லை. வழியில் குன்று நிரம்பிய இயற்கைக்காட்சி, போரின் முழு விளக்கணைப்பில் இருள்மூடியதாய், அசைவின்றி அமைதியாய் இருந்து, நிலா ஒளியில் இடையிடையே மினுமினுங்கியது. அந்த வார இறுதிகள் என் வாழ்க்கையை எவ்வளவாய்ப் பயன் நிறைவுள்ளதாக்கி, என் பலத்தைப் புதுப்பித்தன!
எதிர்பாராத பலன்களைக் கொண்டுவந்த ஒரு சந்திப்பு
1945-ன் இலையுதிர் காலத்தின்போது, சகோதரர் நார் எங்களைப் பார்க்க வந்தார். ஒரு நாள் நான் சுழல்முறை அச்சுப்பொறியின்மேல் நின்றுகொண்டிருக்கையில் அவர் தொழிற்சாலைக்குள் பிரவேசித்தார். “கீழே இறங்கி வா!” என்று அவர் அழைத்தார். “கிலியட் பள்ளிக்கு வர விரும்புவாயா?” எனக் கேட்டார். நான் திகைப்பினால் பேச்சற்றுப்போனேன். “நீங்கள் என்னை அதற்குத் தகுதியுடையவனென்று நினைத்தால் நான் வருவதற்குச் சந்தோஷப்பட வேண்டும்,” என்று பதிலுரைத்தேன். 1946-ன் தளிர்ப்புப் பருவத்தின்போது சகோதரர் ஃபிரெட் போரீஸுக்கும், சகோதரி ஆலிஸ் பெர்னருக்கும், எனக்கும் அழைப்புகள் வந்தன. ஆனால் சார்லந்தில் பிறந்ததனால், நான் நாடற்றவனாக இருந்தேன். ஆகையால் தனிப்பட்ட நுழையுரிமை புறவரிக்குறிப்புக்காக அமெரிக்க ஐக்கிய மாகாணத்திலுள்ள வாஷிங்டன், D.C.-க்கு மனு செய்ய வேண்டியதாயிற்று.
குறித்தக் காலத்தில் மற்றவர்கள் சென்றுவிட்டனர், நானோ என் மனுவுக்குப் பதில் வரக் காத்திருக்க வேண்டியிருந்தது. செப்டம்பர் 4-ல் பள்ளித் தொடங்கினபோது, நான் இன்னும் ஸ்விட்ஸர்லாந்தில் இருந்தேன், படிப்படியாய் நம்பிக்கை இழந்துகொண்டிருந்தேன். பின்பு ஐ.மா. அயல்நாட்டுப் பிரதிநிதி அலுவலகம், தொலைபேசியில் அழைத்து, என் நுழைவுரிமை புறவரிக் குறிப்பு வந்துவிட்டதென எனக்குத் தெரிவித்தனர். நான் உடனடியாக பயண ஏற்பாடுகள் செய்வதில் ஈடுபட்டேன், கடைசியில், மார்சேல்ஸிலிருந்து நியு யார்க்குக்குச் செல்லும் படைக்கப்பலில் தூங்குவதற்கான ஓர் இடம் கிடைத்தது. எத்தகைய அனுபவம் அது! அந்த அத்தாஸ் II மட்டுக்கு மீறிய ஆட்கள் நெருக்கமுடையதாக இருந்தது. ஒரு திறந்த அறையில் எனக்கு ஒரு படுக்கை ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. கடல்நோக்கிப் பயணப்பட்ட இரண்டாவது நாளில், இயந்திர அறையில் ஒரு திடீர்வெடி அந்தக் கப்பலை இயங்காதபடி நிறுத்திப்போட்டது. நாங்கள் மூழ்கிப்போகக்கூடுமென பயந்து, பிரயாணிகளும் கப்பலோட்டிகளின் தொகுதியினரும் மன உலைவு கொண்டனர். இது உயிர்த்தெழுதலைப்பற்றிச் சாட்சி கொடுக்க எனக்கு அதிசயமான வாய்ப்பை அளித்தது.
கப்பலைப் பழுதுபார்க்க இரண்டு நாட்கள் எடுத்தன, அதன்பின் நாங்கள் குறைந்த வேகத்தில் தொடர்ந்து பயணப்பட்டோம். 18 நாட்களுக்குப் பின் நாங்கள் நியு யார்க்கை அடைந்தோம், ஆனால் கப்பல்துறை வேலையாளர்கள் வேலை நிறுத்தஞ் செய்ததால், கப்பலில்தானே தொடர்ந்திருக்கும்படி வற்புறுத்தப்பட்ட நிலைக்குள்ளானோம். ஒப்பந்தப் பேச்சுகளுக்குப் பின், நாங்கள் கடைசியாகக் கப்பலைவிட்டு வெளியிரங்க முடிந்தது. இந்தச் சூழ்நிலைமையைப்பற்றி நான் சங்கத்துக்குத் தந்தியடித்திருந்தேன், சுங்க வரி, நாட்டில் நுழைவது சம்பந்தப்பட்டவற்றைச் சரிசெய்து வெளியேறினபின், ஒருவர்: “மிஸ்டர் டீல் நீர்தானா?” என்று என்னிடம் கேட்டார்? அவர் சகோதரர் நாரின் உதவியாளர்களில் ஒருவர், அவர் என்னை கிலியட் பள்ளிக்கு அருகில் உள்ள இத்தாக்காவுக்குச் செல்லும் இரவு ரயில் வண்டியில் ஏற்றினார், அடுத்த நாள் காலை எட்டு மணிக்குச் சற்றுப்பின் அங்கு போய்ச் சேர்ந்தேன். கடைசியாக அங்கு சேர்ந்து, கிலியட்டின் முதல் சர்வதேச வகுப்புக்குச் சென்றதில் நான் எவ்வளவு ஆனந்தக் கிளர்ச்சியுற்றேன்!
இக்கட்டுகளின் மத்தியில் சகித்துநிலைத்திருத்தல்
பிப்ரவரி 9, 1947 அன்று கிலியட்டின் எட்டாவது வகுப்பின் கல்விப்பட்டமளிப்பு நடந்தது, எல்லாரும் ஆர்வ எதிர்பார்ப்பு உணர்ச்சிநிலையில் இருந்தனர். நாம் எங்கே அனுப்பப்படுவோம்? என் “பாகம்” ஜெர்மனியிலுள்ள வீஸ்பேடெனில் சங்கத்தின் புதிதாய்த் திறந்த அச்சாலையில் விழுந்தது. (சங்கீதம் 16:6, தி.மொ.) தேவைப்படும் நுழைவுரிமை அனுமதிச்சீட்டுகளுக்காக மனு செய்யும்படி நான் பெர்னுக்குத் திரும்பினேன், ஆனால் ஜெர்மனியிலிருந்த ஐ.மா. குடியிருப்புப் படைகள், போருக்கு முன்னால் அங்கு வாழ்ந்திருந்த ஆட்களுக்கு மாத்திரமே அதில் நுழைவதற்கு அனுமதி கொடுத்தனர். நான் அங்கு வாழாததால், எனக்கு புரூக்லின் தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு புதிய நியமிப்பு தேவைப்பட்டது. அது ஸ்விட்ஸர்லாந்தில் வட்டார வேலையாக அமைந்தது, இதை நான் யெகோவாவில் முழு நம்பிக்கை வைத்து ஏற்றேன். ஆனால் இந்த நியமிப்புக்காக நான் காத்திருக்கையில், பெத்தேலைப் பார்க்கவந்த மூன்று சகோதரிகளுக்கு பெத்தேலைச் சுற்றிக் காட்டும்படி ஒரு நாள் எனக்குச் சொல்லப்பட்டது. அவர்களில் ஒரு சகோதரி மார்த்தே மெல் என்ற பெயர்கொண்ட பயனியர்.
நான் மார்த்தேயை மணஞ்செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் மற்றும் நாங்கள் முழுநேர ஊழியத்தில் தொடர்ந்திருக்க விரும்புகிறோமெனவும், பெர்னிலிருந்த கிளை அலுவலகத்துக்கு, மே 1949-ல் தெரிவித்தேன். இதற்குப் பதில்? ஒழுங்கான பயனியர் ஊழியத்தைத் தவிர வேறு சிலாக்கியங்கள் கிடையாது. ஜூன் 1949-ல் எங்கள் திருமணத்துக்குப் பின் இதை பீயலில் செய்யத் தொடங்கினோம். பேச்சுகள் கொடுக்க நான் அனுமதிக்கப்படவில்லை, வரவிருந்த மாநாட்டுக்கு வரும் பிரதிநிதிகளுக்கு இடவசதிகள் தேடுவதற்குங்கூட அனுமதிக்கப்படவில்லை, இந்தச் சிலாக்கியத்துக்கு எங்கள் வட்டாரக் கண்காணியால் நாங்கள் சிபாரிசு செய்யப்பட்டிருந்தபோதிலும் அவ்வாறிருந்தது. நாங்கள் பயனியர்களாக இருந்தபோதிலும், பலர் எங்களைச் சபைநீக்கம் செய்யப்பட்டவர்களைப்போல் நடத்தி, அதற்குமேலும் எங்களுக்கு வரவேற்று மகிழ்ச்சியுங்கூட தெரிவிப்பதில்லை.
எனினும், மணம் செய்துகொள்வது வேத எழுத்துக்களுக்கு முரணாக இல்லையென நாங்கள் அறிந்திருந்தோம், ஆகவே ஜெபத்தில் அடைக்கலம் புகுந்து யெகோவாவில் எங்கள் நம்பிக்கையை வைத்திருந்தோம். உண்மையில் இவ்வாறு நடத்தினது சங்கத்தின் கருத்தைப் பிரதிபலித்ததல்ல. அது அமைப்புக்குரிய வழிகாட்டுக் குறிப்புகளைத் தவறாகப் பொருத்திப் பயன்படுத்தினதன் விளைவேயாகும்.
சகோதரர் நார் திரும்ப வருகிறார்
1951-ல், சகோதரர் நார் மறுபடியும் ஒருமுறை ஸ்விட்ஸர்லாந்துக்கு வந்தார். அவர் பேச்சு கொடுத்தப் பின்பு, என்னிடம் பேச விரும்புவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. மனதில் ஓரளவு பயமிருந்தபோதிலும், அவர் என்னைப் பார்க்க விரும்பினதற்காக நான் மகிழ்ச்சியடைந்தேன். ஜெனீவாவில் திறக்கும்படி எண்ணியுள்ள மிஷனரி வீட்டில் ஒரு நியமிப்பை ஏற்க நாங்கள் மனமுள்ளவர்களாக இருப்போமாவென அவர் கேட்டார். இயல்பாகவே நாங்கள் பெருமகிழ்ச்சியடைந்தோம், பீயலைவிட்டுப் போவது வருத்தமற்றிராததெனினும். அடுத்த நாள் சகோதரர் நாரிடமிருந்து மேலுமான ஒரு வேண்டுகோள் எங்களுக்குக் கிடைத்தது. ஸ்விட்ஸர்லாந்தில் வட்டார ஊழியத்துக்கு மேலுமான கவனிப்புத் தேவைப்படுவதால் அந்த ஊழியத்தைத் திரும்ப ஏற்க நாங்கள் மனமுடையோரா? என்பதே. நாங்கள் உடனடியாக ஒப்புக்கொண்டோம். அளிக்கப்படும் எந்த வேலைநியமிப்பையும் ஏற்கவேண்டுமென்பதே எப்பொழுதும் என் மனப்பான்மை.
கிழக்கு ஸ்விட்ஸர்லாந்தில் வட்டார ஊழியத்தில் எங்கள் வேலைநடவடிக்கை மிகுதியாய் ஆசீர்வதிக்கப்பட்டது. எங்கள் உடைமைகளையெல்லாம் இரண்டு கைப்பெட்டிகளில் சுமந்துகொண்டு, சபைகளுக்கு ரயில் வண்டியில் பயணப்பட்டோம். அந்நாட்களில் ஒரு சிலருக்கே கார்கள் இருந்ததால், சகோதரர் பெரும்பாலும் மிதிவண்டிகளுடன் ரயில் நிலையத்தில் எங்களைச் சந்தித்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு சகோதரர் நாங்கள் பயன்படுத்துவதற்கு ஒரு காரை எங்கள் பொறுப்பில் விட்டார், இது எங்கள் சேவையை ஓரளவு எளிதாக்கிற்று.
எதிர்பாராத சில புதிய நிகழ்ச்சிகள்
1964-ல் என் மனைவியும் நானும் கிலியட்டின் 40-வது வகுப்புக்கு அழைக்கப்பட்டது எத்தகைய இன்ப மனக்கிளர்ச்சியாயிருந்தது, அது விரிவாய்ப் பல காரியங்களைக் கற்ற, பத்துமாத படிப்புத்திட்ட வகுப்பில் கடைசியானது, இப்பொழுது இது எட்டு மாதங்கள் நீடிக்கும்படி குறைக்கப்பட்டுள்ளது. மார்த்தே விரைவில் ஆங்கிலம் கற்கவேண்டியிருந்தது, ஆனால் அவள் இதை மெச்சிக்கொள்ளத்தக்கவாறு சமாளித்துக்கொண்டாள். நாங்கள் எங்கே அனுப்பப்படுவோம் என்பதைக் குறித்து ஊகிப்பது முற்றிக்கொண்டிருந்தது. என்னுடைய மனநிலையானது: ‘அது ஓர் எழுதுமேசைக்குப் பின்னால் இராதவரையில், என்னை எங்கு நியமித்தாலும் கவலையில்லை’ என்பதே!
ஆனால் அதுவே நடந்தது! செப்டம்பர் 13, 1965-ல் கல்விப்பட்டம் பெறும் நாளில் நான் ஸ்விட்ஸர்லாந்தின் கிளை அலுவலக ஊழியனாக நியமிக்கப்பட்டேன். மார்த்தேக்கு பெத்தேல் புதிய அனுபவமாயிருக்கும். எனக்கு, அது “கடவுளுடைய வீட்டுக்குத்” திரும்ப செல்வதைக் குறித்தது, 1931-லிருந்து 1946 வரை நான் சேவித்த அச்சாலைக்கு அல்ல, ஆனால் அலுவலகத்துக்குள் செல்வதாகும். நான் கற்கவேண்டிய பல புதிய காரியங்கள் இருந்தன, ஆனால் யெகோவாவின் உதவியால் நான் அவ்வாறு செய்ய முடிந்தது.
பின்னால் பார்வை செலுத்துதல்
நான் செய்யவேண்டுமென்று என் தகப்பன் சொன்னபடியே, முழுநேர சேவையின் 60 ஆண்டுகளினூடேயும், நான் யெகோவாவில் முற்றிலும் நம்பிக்கை வைத்திருந்தேன். யெகோவா பலவகையான ஆசீர்வாதங்களைப் பொழிந்திருக்கிறார். மனமுறிவுற்றச் சமயங்களில் அல்லது வேலைநியமிப்புகள் சமாளிக்க முடியாதென்ற நிலைக்குப் பயமுறுத்துகையில் மார்த்தே ஊக்கமூட்டுதலின் மிகப்பெரும் தூண்டுமூலமாக இருந்திருக்கிறாள். உண்மையாகவே அவள் யெகோவாவில் முழு திடநம்பிக்கை வைத்திருக்கும் பற்றுறுதியுள்ள துணை.
நான் அனுபவித்து மகிழ்ந்த பல ஊழிய சிலாக்கியங்களுக்காக யெகோவாவுக்குத் துதியுண்டாவதாக! தண்ணில் நான் இன்னும் கிளை ஆலோசனைக் குழுவில் ஒத்திசைவாளராகச் சேவிக்கிறேன், மற்றும் மண்டலக் கண்காணியாகப் பல தடவைகள் பயணப்பட்டிருக்கிறேன். செய்யும்படி நான் கேட்கப்பட்டது எதுவாயினும், வழிநடத்துதலுக்காக நான் எப்பொழுதும் யெகோவாவை நோக்கியிருந்தேன். என் பல தவறுகளையும் குறைபாடுகளையும், யெகோவா கிறிஸ்துவின்மூலம் எனக்கு மன்னித்துவிட்டாரென நான் உறுதியாய் நம்புகிறேன். அவருக்கு மிகப் பிரியமான முறையில் நான் தொடர்ந்து நடப்பேனாக. ‘என் கடவுள், அவரில் நான் நம்பிக்கை வைப்பேன்’ என அவரை நான் இடைவிடாமல் நோக்கியிருக்கையில், அவர் என் நடைகளைத் தொடர்ந்து வழிநடத்துவாராக.—சங்கீதம் 91:2. (w-91 11/1)
[பக்கம் 25-ன் படத்தில் வில்லி மற்றும் மார்த்தே டீல்]
[பக்கம் 27-ன் படம்]
சகோதரர் டீல், பெத்தேல் வாழ்க்கையின் தொடக்கத்தில்