ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
சகிப்புத்தன்மை மலாவியில் கடவுளுடைய ஆசீர்வாதத்தை கொண்டு வருகிறது
யோசேப்பு யெகோவாவின் உண்மையுள்ள ஊழியராக இருந்தார். (எபிரெயர் 11:22) அவர் சகிப்புத்தன்மைக்கும் பெயர் பெற்றவர். தன்னுடைய சொந்த சகோதரர்களாலேயே நம்பிக்கைத் துரோகமிழைக்கப்பட்டார்; இரண்டு முறை அடிமையாக விற்கப்பட்டார்; பிறகு பொய் குற்றச்சாட்டில் சிறையில் போடப்பட்டார்; இருந்தபோதிலும்கூட, அவர் மனமுடைந்து போகவில்லை. மாறாக, யெகோவாவின் ஆசீர்வாதத்தை தாழ்மையுடன் எதிர்நோக்கியவராக, உபத்திரவங்களை வருடக்கணக்காக பொறுமையுடன் சகித்தார்.—ஆதியாகமம் 37:23-28, 36; 39:11-20.
அதைப்போலவே இன்றும்கூட, மலாவியிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய ஆசீர்வாதத்திற்காக பொறுமையுடன் காத்திருந்தனர். இந்தக் கிறிஸ்தவ சாட்சிகள் 26 ஆண்டுகளாக, அரசாங்கத் தடையுத்தரவுகள், கடுமையான எதிர்ப்புகள், அநேக அட்டூழியங்கள் ஆகியவற்றை பொறுமையாக சகித்தனர். ஆனால், அவர்களுடைய சகிப்புத்தன்மைக்கு பலன் கிடைத்திருக்கிறது!
1967-ம் ஆண்டின் இறுதியில், மலாவியில் துன்புறுத்துதல் தொடங்கியபோது, சுமார் 18,000 ராஜ்ய பிரஸ்தாபிகளே இருந்தனர். ஆனால், 1997-ன் ஊழிய ஆண்டு 38,393 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையுடன் துவங்கியதை சாட்சிகள் அறிந்தபோது அவர்களுக்கிருந்த சந்தோஷத்தை கற்பனை செய்து பாருங்கள்—தடையுத்தரவுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் இரண்டு மடங்குக்கும் அதிகம்! கூடுதலாக, மலாவியில் நடந்த 13 “தேவ சமாதான தூதுவர்கள்” மாவட்ட மாநாடுகளுக்கு கூடிவந்திருந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,17,000-க்கும் அதிகமாக இருந்தது. உண்மையில், யெகோவா அவர்களுடைய விசுவாசத்தையும் சகிப்புத்தன்மையையும் ஆசீர்வதித்திருக்கிறார்.
மாசாக்கா என்ற இளைஞனின் அனுபவம், இத்தகைய ஆசீர்வாதத்திற்கு ஒரு உதாரணம். மாசாக்கா, யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிப்பதற்கு ஒத்துக்கொண்டபோது அவனுடைய பெற்றோர் நிலைகுலைந்து போனார்கள். “சாட்சியாக ஆகணும்னு நீ நெனச்சா, வீட்டவிட்டு போயிடு” என்று அவர்கள் சொன்னார்கள். இருந்தபோதிலும், அவன் இத்தகைய மிரட்டலுக்கு பயந்து தன்னுடைய படிப்பை நிறுத்திவிடவில்லை. இதைப் பார்த்த அவனது பெற்றோர், அவனுடைய எல்லா துணிமணிகளையும் அவனிடமிருந்து பறித்துக் கொண்டனர். ஆகவே, சாட்சிகள் அவனுக்கு இன்னும் கொஞ்சம் உடைகளை வாங்கி கொடுத்தனர். மாசாக்காவின் பெற்றோர் இதை அறிந்தபோது, “சாட்சிகள் உன்ன வெச்சு காப்பாத்துவாங்கன்னா, நீ இங்க இருக்க வேண்டாம், அவங்ககூடவே இருந்துக்க” என்று சொல்லிவிட்டனர். நிலைமையை கவனமாக சிந்தித்துப் பார்த்தபிறகு, மாசாக்கா வீட்டைவிட்டு வெளியேறினான்; உள்ளூர் சபையிலிருந்த ஒரு சாட்சி குடும்பத்தார் அவனுக்கு தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தனர்.
மாசாக்காவின் பெற்றோர், அவ்வளவு அதிகமாய் ஆத்திரமடைந்ததால் சாட்சிகளுடைய முகத்திலேயே விழிக்கக்கூடாதென்கிற எண்ணத்தில் அந்த இடத்தைவிட்டே போய்விட தீர்மானித்தனர். உண்மையில், மாசாக்கா இதனால் அதிக வருத்தமடைந்தான்; ஆனாலும், “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்” என்று குறிப்பிடும் சங்கீதம் 27:10-ஐ சகோதரர்கள் அவனுடன் கலந்தாலோசித்தபோது, அதிக ஆறுதலடைந்தான்.
காலப்போக்கில், மாசாக்காவின் பெற்றோருடைய மனம் கொஞ்சம் இளகியது. எனவே அவன் தன்னுடைய வீட்டுக்கு திரும்பிச் செல்ல தீர்மானித்தான். யெகோவாவை சேவிப்பதற்கான தங்கள் மகனின் திடதீர்மானம் அவர்களை அந்தளவுக்கு ஆழமாக ஒருவேளை பாதித்திருக்கலாம்; ஏனென்றால் யெகோவாவின் சாட்சிகளோடு தாங்களும் பைபிளை படிக்கவேண்டுமென அவர்கள் விரும்பினரே! அதோடு “தேவ சமாதான தூதுவர்கள்” மாவட்ட மாநாட்டில் மூன்று நாளுமே கலந்து கொண்டனர்; அதில் கலந்துகொண்ட பிறகு, “உண்மையாகவே இதுதான் கடவுளுடைய அமைப்பு” என்று சொல்லும்படியாக அவர்கள் தூண்டப்பட்டனர்.
ஆம், எதிர்ப்பு கடும் சோதனைமிக்கதாக இருக்கலாம்; ஆனால், கடவுளுடைய உத்தமமுள்ள தூதுவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை. “உபத்திரவம் பொறுமையையும், பொறுமை அங்கீகரிக்கப்பட்ட நிலையையும், உண்டாக்குகிறதென்று” அறிந்தவர்களாக அவர்கள் தைரியத்துடன் முன்னோக்கி செல்கிறார்கள். (ரோமர் 5:3, 4, NW) மலாவியிலுள்ள யெகோவாவின் சாட்சிகள், சகிப்புத்தன்மை கடவுளுடைய ஆசீர்வாதத்தை கொண்டு வருகிறது என்று சரியாகவே உறுதியளிக்க முடியும்.