எரிமலை “நிழலில்” வாழ்வும் பிரசங்கிப்பும்
“சொல்லும்போதே குலைநடுங்குகிறது. பைபிள் சொல்லும் உலக அழிவைப் போலத்தான் இதுவும் இருக்கும். நாம் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எல்லா நேரமும் யெகோவா தேவனுக்கு பிடித்தமாதிரி நடக்க வேண்டும்.” இப்படி சொன்னது விக்டர் என்ற ஒரு யெகோவாவின் சாட்சி. அவர் சொன்னது வேறெதைப் பற்றியும் அல்ல, மெக்ஸிகோவிலுள்ள போபோகாடேபெல் எரிமலைக்கு வெகு அருகாமையில் வாழ்வதைப் பற்றித்தான். அந்த எரிமலையை பொதுவாக போபோ என்று அழைக்கிறார்கள்.
குமுறிக்கொண்டிருக்கும் இந்த எரிமலை, 1994 முதற்கொண்டே சர்வதேச செய்திகளில் அடிபட்டு வந்திருக்கிறது.a எரிமலை வாயிற்கு 30 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள அனைத்தும் அதன் அகோரப் பிடியில் சிக்கியிருக்கின்றன என்பது அதிகாரிகளின் கணிப்பு. முக்கியமாய் எரிமலையின் தென் பகுதிக்கு ஆபத்து அதன் தலைவாசலில் காத்திருக்கிறது! ஏனென்றால் எரிமலை வாய் அந்தத் திசையை நோக்கியே சரிந்திருக்கிறது. அதுமட்டுமன்றி, அது கக்கும் எரிமலைக் குழம்பும் சேறும் அத்திசையில் கணக்கு வழக்கில்லாமல் அமைந்துள்ள ஆழமான பிளவுகளை நிரப்பி அவ்வழியே வழிந்தோடும்.
ஒருவேளை இந்த எரிமலை வீறுகொண்டு எழுந்து மெக்ஸிகோ நகரை ஒரு கை பார்த்துவிடுமோ என்பதே அநேகரின் நினைப்பு. அப்படி நினைப்பது சகஜம்தான் என்றாலும் மெக்ஸிகோ நகரம் உண்மையில் எரிமலையின் பிடியிலா? எரிமலைக்கு தெற்கே அமைந்துள்ள மரேலஸ் மாநிலத்தில் வாழ்பவர்களும் இப்போது நம் கண்முன்னே வருகின்றனர். அவர்கள் கதியென்ன? என்னவாகும் ஏதாகும் என்று தெரியாமல் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு எரிமலைக்குப் பக்கத்தில் வாழும் வாழ்க்கை எப்படிப்பட்டது?
எரிமலை பயமுறுத்துகிறது
போபோகாடேபெல் எரிமலையிலிருந்து வடமேற்கே சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் மெக்ஸிகோ நகரின் மையம் அமைந்திருக்கிறது. என்றாலும் அதன் சில புறநகர்களோ 40 கிலோமீட்டர் தூரத்திலேயே இருக்கின்றன. அந்தப் பெருநகர் மொத்தமும், சொல்லப்போனால் அங்கு வாழும் இரண்டு கோடி மக்களும் ஆபத்தில் இல்லை என்பதே துல்லியமான கணிப்பு. ஆனாலும் இப்பகுதி எரிமலையின் சீற்றத்திற்கு ஆளாகும் வாய்ப்பிருக்கிறது. எப்போது தெரியுமா? அந்த எரிமலை பெருமளவு சாம்பலை வாரியிறைக்கையில், காற்றும் சாதகமாக இந்தத் திசையை நோக்கி அடிக்கும்போதே.
பொதுவாகவே எரிமலைச் சாம்பல் கிழக்குப் பகுதியைத்தான் பெருமளவு ஆக்கிரமிக்கிறது. இப்பகுதியில் வெப்லா நகரும் மற்ற குட்டி குட்டி நகரங்களும் பட்டணங்களும் ஆங்காங்கே இருக்கின்றன. அங்கு வாழும் கிட்டத்தட்ட 2,00,000 பேர் பேராபத்தில் இருக்கிறார்கள். மே 11, 1997, ஞாயிற்றுக்கிழமையன்று இந்த எரிமலை டன்கணக்கான சாம்பலை வீசியடித்ததால் இப்பகுதி முழுவதும் ஒரே சாம்பல்மயமானது. கிழக்கே 300 கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள வேராக்ரூஸ் மாநிலம்வரை அது வீசியடிக்கப்பட்டதென்றால் பாருங்களேன்! எரிமலைக்கு தெற்கேயுள்ள மரேலஸ் மாநிலத்தில் நகரங்களுக்கும் பட்டணங்களுக்கும் பஞ்சமில்லை. இங்கு வாழும் சுமார் 40,000 மக்களுக்கும் எரிமலை சமாதிகட்டிவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது.
திகில் நிறைந்த இந்தச் சூழலிலும் யெகோவாவின் சாட்சிகள் வாழ்கிறார்கள், பிரசங்கிக்கவும் செய்கிறார்கள். மெக்ஸிகோ நகரில் 90,000-க்கும் அதிகமான சாட்சிகள் இருக்கிறார்கள். சுமார் 1,700 சபைகளும் இருக்கின்றன. நகருக்கு அப்பால், வடகிழக்கில், எரிமலையிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் கம்பீரமாய் வீற்றிருக்கிறது உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளைக்காரியாலயம். 800-க்கும் அதிகமானோர் இங்கு வாலண்டியர்களாக பணிபுரிகிறார்கள், இன்னும் 500 பேர் கட்டமைப்பு பணிக்காக தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். இவர்கள் யாரும் ஆபத்திற்குட்பட்ட பகுதியில் இல்லை.
மரேலஸ் மாநிலத்தில் 2,000-க்கும் மேலான யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கம் செய்துவருகிறார்கள். சுமார் 50 சபைகள் இருக்கின்றன. சில சபைகள் டெட்டெலா டெல் பால்கான், வேயாபான் ஆகிய இடங்களில் இருக்கின்றன. இவை எரிமலை எட்டிப்பிடிக்குமளவுக்கு வெறும் 20 கிலோமீட்டர் தூரத்தில்தான் இருக்கின்றன. அதோடு கிழக்கேயுள்ள வெப்லா மாநிலத்திலுள்ள கிட்டத்தட்ட 600 சாட்சிகளும் எரிமலையிலிருந்து 20-30 கிலோமீட்டர் தூரத்தில் வாழ்கிறார்கள். எரிமலை இப்பகுதியையும் குறி வைத்திருக்கிறது.
யெகோவாவின் சாட்சிகள் மும்முரம்
எரிமலையின் ஓயாத அச்சுறுத்தலின் மத்தியிலும் யெகோவாவின் சாட்சிகளது பிரசங்க வேலை ஓயவில்லை. சபைக் கூட்டங்கள் நடத்துவதிலிருந்தும் அவர்கள் ஓயவில்லை. இப்படிப்பட்ட இக்கட்டான சந்தர்ப்பங்களில்கூட அவர்கள் ஒற்றுமையுடனும் நம்பிக்கையுடனும் இருப்பதற்குக் காரணம் இக்கூட்டங்களே. (எபிரெயர் 10:24, 25) ஒரு சபை தந்த அறிக்கையின்படி, “ராஜ்யத்தைப் பற்றிய சந்தோஷமளிக்கும் செய்தியை மக்கள் இப்போது வெகு ஆர்வமாக கேட்கிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு குக்கிராமத்தில் சமீபத்தில் 18 பேர் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.”
எரிமலையிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் மற்றொரு சபை தரும் அறிக்கையை சற்று கவனிப்போம்: “சபை வேகமாக வளர்ந்திருக்கிறது. அது நவம்பர் 1996-ல் ஸ்தாபிக்கப்பட்டது. அடுத்த ஆறு மாதங்களில் 10 பேர் பிரசங்கம் செய்ய ஆரம்பிக்குமளவுக்கு முன்னேற்றம் செய்திருக்கிறார்கள். சில சாட்சிகள் எரிமலையிலிருந்து வெறும் 20 கிலோமீட்டர் தூரத்தில்தான் இருக்கிறார்கள். அங்கே கிறிஸ்தவ கூட்டங்கள் நடைபெறுகின்றன, சுமார் 40 பேர் ஆஜராகிறார்கள்.”
எரிமலைக்கு 25 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் வெப்லாவிலுள்ள சான் ஆகூஸ்டின் இக்ஸ்டாவிக்ஸ்ட்லா என்ற இடத்தில் வசிக்கும் பெண்மணிதான் மாக்டாலேனா. அவர் ரொம்ப பேரோடு பைபிள் படிப்பு நடத்திவந்தார். ஒருமுறை எரிமலை பயங்கரமாய் வெடித்துச்சிதறியபோது என்ன நடந்ததென்பதை அவர் விவரிக்கிறார்.
“உடனடியாக தப்பி ஓட வேண்டுமென சொன்னார்கள், சாம்பல் மழை வேறு. அந்த அவசரத்திலும்கூட என்னால் டோராடோ குடும்பத்தாரை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவர்களுக்கு நான் பைபிள் படிப்பை நடத்திவந்தேன். பாதுகாப்பான இடத்திற்கு கூட்டிச்செல்ல நானும் சில சகோதரர்களும் அவர்கள் வீட்டிற்கு விரைந்தோம். அருகிலிருந்த வெப்லா நகரத்தில் யெகோவாவின் சாட்சிகளது நிவாரணக் குழு ஏற்கெனவே உதவிக் கரத்தை நீட்டியிருந்தது. எங்கள் எல்லாரையும் அவர்கள் கண்ணும் கருத்துமாய் கவனித்துக்கொண்ட விதத்தைப் பார்த்து டோராடோ குடும்பத்தார் அப்படியே அசந்துவிட்டார்கள். கிறிஸ்தவ சகோதரர்கள் நாங்கள் அங்கு போய் சேருவதற்கு முன்பாகவே எங்களுக்கான தங்கும் வசதிகளை வெவ்வேறு இடங்களில் ரெடி செய்து வைத்திருந்தார்கள். நாங்கள் வீட்டைவிட்டு ரொம்ப தூரம் வந்திருந்தோம் என்றுதான் பெயர், ஆனால் ஒரு குறையும் இல்லை. இதற்கு முன்பு டோராடோ குடும்பத்தார் ராஜ்ய மன்றத்திற்கு முடிந்தபோதெல்லாம் வந்திருக்கிறார்கள், ஆனால் இப்போதோ முன்பின் தெரியாத சகோதரர்கள் காட்டின அன்பினால் திக்குமுக்காடிப்போனார்கள். சில வாரங்களுக்குப் பின்னர் நாங்கள் வீடு திரும்பினோம். அதிலிருந்து அவர்கள் ஒரு கூட்டத்தையும்கூட தவற விட்டதில்லை. சீக்கிரத்திலேயே பிரசங்கிப்பதற்கு தகுதி பெற்றார்கள். பின் அவர்களில் இரண்டு பேர் முழுக்காட்டப்பட்டார்கள். சில மாதங்கள் துணைப் பயனியர் ஊழியத்தை ருசித்த அவர்கள், இப்போதோ ஒழுங்கான பயனியர் சேவையை ருசிக்க திட்டமிடுகிறார்கள்.”
உடல் ஊனமுற்ற மார்த்தாவுக்கு வயது 20. அவள் வீடு இருப்பதோ எரிமலையிலிருந்து 21 கிலோமீட்டர் தூரத்தில்தான். அவள் தனது ஊனத்தை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு, பிரசங்கிக்க முடியாது என வீட்டிலேயே முடங்கிக்கிடக்கவில்லை. மாறாக கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பிரசங்கிப்பதற்காக பயன்படுத்துகிறாள். மூன்று வருடங்களுக்கு முன்பாக அவள் சத்தியத்தை அறிந்தாள். எரிமலை மீண்டும் விழித்துக்கொண்டதும் அப்போதுதான். அவள் மிகச் சரிவான பகுதியில் வசிப்பதால் சக்கரநாற்காலி ஒத்துவருவதில்லை. ஆகவே கழுதைமீது சவாரிசெய்தபடி பிரசங்கம் செய்கிறாள். கூட்டங்களுக்கும் கழுதை வாகனம்தான். அந்தக் கழுதைமீது ஏறி உட்காருவதற்கும் அதிலிருந்து இறங்குவதற்கும்கூட சபையிலுள்ள சகோதரிகள் அவளுக்குக் கைகொடுக்க வேண்டியிருக்கிறது. ஆகவே இப்படிப்பட்ட அன்பு மழை பொழியும் சகோதர சகோதரிகள் அடங்கிய ஒரு அமைப்பின் பாகமாக இருப்பதற்காக மார்த்தா யெகோவாவிற்கு உள்ளப்பூர்வமான நன்றி தெரிவிக்கிறாள். ஒவ்வொரு மாதமும் அவள் 15 மணிநேரங்களுக்குக் குறையாமல் பிரசங்கிக்கிறாள்.
இந்த ஒதுக்குப்புறமான பகுதிகளில், மதப் பண்டிகைகளை தங்களோடு சேர்ந்து கொண்டாடும்படி அக்கம்பக்கத்தார் யெகோவாவின் சாட்சிகளை நச்சரிக்கின்றனர். எரிமலையிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கிராமம்தான் டூல்சிங்கோ. அங்குள்ள சாட்சிகளிடம் பண்டிகைகளுக்காக நன்கொடை வசூலிப்பதற்கு ஒருவர் அமர்த்தப்பட்டிருந்தார். சகோதரர்கள் தாங்கள் அப்படிப்பட்ட பண்டிகைகளில் கலந்துகொள்ளாததற்கான காரணத்தை மிகவும் பொறுமையோடு எடுத்துச் சொன்னார்கள். ஆனால் அவர் எப்படியும் நன்கொடை வசூலித்துவிட வேண்டுமென்பதில் விடாப்பிடியாக இருந்தார். ஆகவே சகோதரர்களோடு சேர்ந்து நேரம் செலவிட ஆரம்பித்தார். இப்படியாக அவர்களது நம்பிக்கைகள் சிலவற்றையும் தெரிந்துகொண்டார். தன் சொந்த கத்தோலிக்க பைபிளிலிருந்தே விடைகளைத் தெரிந்துகொண்டதில் மனுஷருக்கு ஏகப்பட்ட சந்தோஷம். மனைவியோடும் மகளோடு கூட்டங்களுக்கு தவறாமல் வர ஆரம்பித்து இதோடு ஒரு வருடம் ஆகிறது. பிரஸ்தாபி ஆகவேண்டுமென்றும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
நீங்கள் எப்படி உஷாராயிருக்கலாம்?
இந்தப் பயங்கர போபோகாடேபெல்லைப் பற்றி எரிமலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வந்த வண்ணம் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனாலும் எப்போது என்ன நடக்குமென்று உண்மையிலேயே யாருக்கும் தெரியாது. செய்தி அறிக்கைகளையும் எரிமலையின் “நிழலில்” வசிப்போர் சொல்வதையும் வைத்துப் பார்த்தால் அது எந்த விநாடியும் கொதித்தெழலாம். ஆம், இது அபாயச்சங்கொலியேதான்! அதிகாரிகள் தீவிரம் காட்டுவதும், அபாய நிலையை துணிந்து எதிர்ப்பட எந்நேரமும் தயாராய் இருக்கவேண்டுமென நினைப்பதும் உண்மை. அதேசமயம் அவசரப்பட்டு அபாய அறிவிப்பு செய்துவிடக்கூடாது என அவர்கள் எச்சரிக்கையாய் இருப்பதும் வாஸ்தவம். ஏனென்றால் ஆபத்து வருவதற்கு முன் அனாவசியமாக எல்லாரும் வெளியேறிவிடக்கூடாது என அவர்கள் நினைக்கிறார்கள். அப்படியென்றால் நாம் என்ன செய்யவேண்டும்?
ஒரு பைபிள் நீதிமொழி என்ன சொல்கிறது தெரியுமா? “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப் போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.” (நீதிமொழிகள் 22:3) ஆகவே காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வதுதான் ஞானம். ஒன்றுமே நடக்காதென்பதுபோல் எச்சரிக்கையை காற்றில் பறக்கவிடாதீர்கள். இயற்கையின் சீற்றத்தோடு விளையாட்டா? வேண்டாம்! அந்தப் பகுதியில் வசிக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கு இது விளையாட்டல்ல.
சமீபத்தில் உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளைக்காரியாலய சகோதரர்கள் வெப்லா மாநிலத்தைச் சேர்ந்த பயணக் கண்காணிகளோடு கலந்துரையாடினார்கள். ஏனென்றால் இந்தக் கண்காணிகள் அபாயத்திற்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள சகோதரர்களை எளிதில் சென்று சந்திக்க முடியும். எரிமலையிலிருந்து 25 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் குடும்பத்தார் ஒவ்வொருவரையும் சந்திக்க பயணக் கண்காணிகளும் நிவாரணக் குழுவின் அங்கத்தினர்களும் திட்டமிட்டார்கள். எரிமலை வெடிப்பதற்குமுன் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிடுவதன் புத்திசாலித்தனம் அவர்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. 1,500 பேரை வெப்லா நகரில் குடியேற்ற போக்குவரத்துவசதி, இடவசதி என அவர்கள் செய்யாத ஏற்பாடுகளே இல்லை. சில குடும்பத்தார் மற்ற நகரங்களில் வசித்த தங்கள் உறவினர்களது வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.
உலகிற்கு ஓர் எச்சரிக்கை!
போபோகாடேபெல், புகைந்துகொண்டும் தீ கக்கிக்கொண்டும் உறுமிக்கொண்டும் இருப்பது, எப்போது வேண்டுமென்றாலும் வெடித்தெழத் தயார் என்பதற்கான தெள்ளத்தெளிவான சமிக்கை. தப்பிக்க வேண்டுமா? அதிகாரிகளின் எச்சரிக்கைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க தாமதிக்காதீர்கள். எரிமலைக்குப் பக்கத்தில் வாழும் யெகோவாவின் சாட்சிகள் இந்த விஷயத்தில் வெகு உஷார். தங்கள் உயிர்மேலுள்ள ஆசையால் மாத்திரமா? இல்லை, மற்றவர்கள் உயிர்மீதுள்ள அக்கறையாலும்தான். இது, ஆபத்தையும், காலம் கடந்துவிடும் முன்பு தப்பிக்க வேண்டுமென்பதையும் உணர மற்றவர்களுக்கு அவர்கள் உதவுவதிலிருந்து தெரிகிறது.
சொல்லப்போனால் யெகோவாவின் சாட்சிகள் எரிமலையைவிட பன்மடங்கு பயங்கரமான ஒன்றைக் குறித்தும் மகா விழிப்போடு இருக்கிறார்கள். அதற்கு பைபிள் தீர்க்கதரிசனங்களின் அடிப்படையில் உலக சம்பவங்களை எடைபோட்டுப் பார்ப்பது உதவுகிறது. எரிமலையின் செயல்பாடுகளைப் போலவே போர்கள், பூமியதிர்ச்சிகள், பஞ்சங்கள், வியாதிகள், குற்றச்செயல்கள் ஆகிய அனைத்தும் கவனிக்கத்தக்கவை. இவை அனைத்தும் ‘உலகத்தின் முடிவுக்கு’ அடையாளமென இயேசு கிறிஸ்து சொன்னார். சரியாக எந்த நாளில் முடிவு வருமென்பது யாருக்கும் தெரியாதுதான். ஆனாலும் ஒன்று மாத்திரம் நிச்சயம், அது கண்டிப்பாக வரும், அந்நாள் வெகு தூரத்தில் இல்லை.—மத்தேயு 24:3, 7-14, 32-39.
இயேசு கொடுத்த எச்சரிப்பு இதுதான்: “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.” (லூக்கா 21:34) இந்த எச்சரிப்பிற்கு ஏற்ப நடப்பதில் உலகெங்குமுள்ள மக்கள் கண்ணும் கருத்துமாக இருப்பதுதான் இன்றைக்குள்ள அவசரத் தேவை. இதுதான் புத்திசாலித்தனமும்கூட. எப்படி எரிமலையின் எச்சரிப்பு அடையாளங்களை அசட்டை செய்ய முடியாதோ, அப்படியே மனுஷகுமாரனான இயேசு கிறிஸ்துவின் வருகையினுடைய அடையாளங்களையும் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. அவர் சொன்னார்: “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.”—மத்தேயு 24:44.
[அடிக்குறிப்புகள்]
a நடுங்கவைக்கும் இந்த எரிமலையைப் பற்றி மார்ச் 8, 1997, விழித்தெழு! பத்திரிகை அறிக்கை செய்தது.
[பக்கம் 23-ன் படங்கள்]
மார்த்தாவும் (கழுதைமீது அமர்ந்திருப்பவர்) மற்றவர்களும் போபோகாடேபெலின் “நிழலில்” பிரசங்கிக்கிறார்கள்