சுயாதீனம் தேடி ஹியூகநாட்டுகள் ஓட்டம்பிடித்தல்
“ராஜாராணியின் அறைகூவல் இது. . . . இங்கே எமது ராஜ்யத்திற்குள் அடைக்கலம் நாடிவரும் அனைத்து பிரெஞ்சு புராட்டஸ்டண்டுகளுக்கும் எமது அரசு பாதுகாப்பு தரும். அது மட்டுமின்றி . . . அவர்களுக்குத் தேவைப்படும் எல்லா உதவியையும் ஒத்தாசையையும் ஆதரவையும் நியாயமான வழிகளிலும் விதங்களிலும் தர எல்லா முயற்சியும் எடுக்கப்படும். . . . இவ்வாறு இந்த ராஜ்யத்தில் இருப்பது, அவர்களது சொகுசான வாழ்க்கைக்கு எவ்விதத்திலும் பங்கம் விளைவிக்காது என்பதை இதன்மூலம் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.”
இதுவே இங்கிலாந்து ராஜா வில்லியமும், ராணி மேரியும் 1689-ம் ஆண்டு வெளியிட்டிருந்த பிரகடனம். பிரெஞ்சு புராட்டஸ்டண்டுகள், அல்லது ஹியூகநாட்டுகள் என அழைக்கப்பட்டவர்கள் ஏன் அடைக்கலம் தேட வேண்டும், ஏன் பிரான்ஸுக்கு வெளியே பாதுகாப்பை நாட வேண்டும்? அவர்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸிலிருந்து வெளியேறினார்கள். ஆனால் அதைப் பற்றி பேசி இன்று நமக்கு என்ன ஆகப்போகிறது?
பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பா கண்டம், போராலும் மதக் கலவரங்களாலும் கொடுமைக்குள்ளானது. கத்தோலிக்கருக்கும் புராட்டஸ்டண்டுகளுக்கும் இடையே ஏற்பட்ட மதப் போர்கள் (1562-1598) பிரான்ஸையும் விட்டுவைக்கவில்லை. என்றாலும் 1598-ல், பிரெஞ்சு அரசர் நான்காம் ஹென்றி சகிப்புத்தன்மைக்கான ஒரு சாசனத்தில் கையொப்பமிட்டிருந்தார். இது நான்டெஸ் சாசனம் என அழைக்கப்படுகிறது. இது புராட்டஸ்டண்டுகளாகிய ஹியூகநாட்டுகளுக்கு ஓரளவு மத சுயாதீனத்தை அளித்தது. இரு மதத்திற்குமான இந்தச் சட்டப்பூர்வ அங்கீகாரம் ஐரோப்பாவில் மட்டுமே செல்லுபடியானது. இது அமலுக்கு வந்ததிலிருந்து, 16-வது நூற்றாண்டில் 30-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக பிரான்ஸுக்கு ஆறாத வடுவை ஏற்படுத்திய மத எழுச்சிகள் ஓரளவுக்கு தலைதூக்காமல் இருந்தன.
“நிரந்தரமானது, மாற்ற முடியாதது” எனத் தோன்றிய நான்டெஸ் சாசனம், 1685-ல் ஃபாண்ட்டன்புளோ சாசனத்தால் ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு ரத்து செய்யப்பட்டதை பிரெஞ்சு தத்துவ மேதை வால்ட்டேர், “பிரான்ஸின் பெரிய அவலங்களில் ஒன்று” என்று பின்பு விளக்கினார். இதனால் சுமார் 2,00,000 ஹியூகநாட்டுகள் வேறு நாடுகளுக்கு ஓட்டம்பிடிக்க நேர்ந்தது. என்றாலும், நிலைமை இத்தோடு நின்றுவிடவில்லை. மத சகிப்புத்தன்மையை அனுமதித்த அந்த முந்தைய சாசனம் ஏன் ரத்து செய்யப்பட்டது?
ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு
நான்டெஸ் சாசனம் கிட்டத்தட்ட 90 ஆண்டுகள் அதிகாரப்பூர்வமாக அமலில் இருந்தது; என்றாலும், ‘அதற்கு 1685-ல் சாவுமணி அடிக்கப்படுவதற்கு முன்பாகவே அது செத்துக்கொண்டுதான் இருந்தது’ என்பதாக சரித்திராசிரியராய் இருக்கும் ஒரு பெண்மணி கூறுகிறார். இந்தச் சாசனம் உறுதியான ஆதாரத்தின் அடிப்படையில் இயற்றப்படவில்லை. ஆரம்பத்திலிருந்தே, கத்தோலிக்க குருக்களுக்கும் “ஆர்.பி.ஆர்.” என அழைக்கப்படும் (சீரமைக்கப்பட்ட மதம் என அழைக்கப்படுவது) புராட்டஸ்டண்ட் பிரிவினருக்கும் இடையே “பனிப்போரை” மூட்டிவிட்டது. 1598-ல் அது பிறந்தது முதல் கிட்டத்தட்ட 1630 வரை, புராட்டஸ்டண்டினருக்கும் கத்தோலிக்கருக்கும் இடையில், பொது விவாதங்களின் ரூபத்திலும், அந்தந்தப் பிரிவைச் சேர்ந்த புத்தகங்களின் ரூபத்திலுமே நான்டெஸ் சாசனத்துக்கு எதிர்ப்புப் புயல் வீசியது. என்றாலும், சகிப்பற்ற இத்தன்மை பல அம்சங்களில் தலைகாட்டியது.
1621-க்கும் 1629-க்கும் இடையில் புராட்டஸ்டண்டுகளுக்கு எதிராக போரிட்ட பிறகு, அவர்களை கத்தோலிக்கராக மாற்றும் முயற்சியில் படிப்படியான ஒடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது பிரெஞ்சு அரசு. இந்த ஒடுக்குதல், “சூரிய ராஜா” என அழைக்கப்பட்ட பதினான்காம் லூயியின் ஆட்சிக் காலத்தில் அத்துமீறிச் சென்றது. அவர்களை அடக்கி ஒடுக்க அவர் கையாண்ட முறை, நான்டெஸ் சாசனத்தை ரத்து செய்யும் அளவுக்குச் சென்றது.
ஒடுக்குதல் தீவிரமடைகிறது
புராட்டஸ்டண்ட் பிரிவினர் படிப்படியாக பல பொது உரிமைகளை இழந்தனர். ஒடுக்குதலில் இது ஒரு விதம். அதாவது, 1657-க்கும் 1685-க்கும் இடையில், சுமார் 300 விதிமுறைகளின் வடிவில் ஹியூகநாட்டுகள் ஒடுக்கப்பட்டனர். இவ்விதிமுறைகள் பெரும்பாலும் கிறிஸ்தவ குருக்களால் தூண்டிவிடப்பட்டவை. இவை அவர்களது அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதித்தன. உதாரணமாக, மருத்துவர், வழக்கறிஞர் போன்ற எண்ணற்ற வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. ஏன், மருத்துவச்சி தொழிலிலும் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அதைப் பற்றித்தான் ஒரு பெண் சரித்திராசிரியர் இவ்வாறு விவாதித்தார்: “தற்போதைய மத-அரசியல் அமைப்பை உருக்குலைக்கும் லட்சியம் கொண்ட, விசுவாசதுரோகியான ஒரு ஹியூகநாட்டை நம்பி எப்படி ஒரு உயிரை ஒப்படைக்க முடியும்?”
இவ்வாறு தீவிரமாய் ஒடுக்கியது, 1677-ல் மிகக் கடுமையானது. ஒரு கத்தோலிக்கனை மதம் மாற்றியதற்காக ஒரு ஹியூகநாட் பிடிபட்டால், அவர் செலுத்த வேண்டிய அபராதமோ ஆயிரம் பிரெஞ்சு பவுண்டுகள். அத்துடன், வரியென்ற பெயரில் பொது மக்களைக் கொள்ளையடித்து சேர்த்த அரசு பணம், ஹியூகநாட்டுகளை மதம் மாற்ற செலவிடப்பட்டது. 1675-ல் கத்தோலிக்க குரு, பதினான்காம் லூயிக்கு 45 லட்சம் பிரெஞ்சு பவுண்டுகளை லஞ்சமாகக் கொடுத்து இவ்வாறு சொன்னார்: “இந்தப் புறமதத்தை பூண்டோடு அழிப்பதற்கு உமது அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இதற்கான உமது நன்றியை செயலில் காட்டுவீராக.” இவ்வாறு மதமாற்றம் என்ற பெயரில் ஹியூகநாட்டுகளை “வாங்கும்” உபாயத்தின் மூலம், சுமார் 10,000 பேர் கத்தோலிக்க மதத்துக்கு மூன்றே ஆண்டில் மாறிவிட்டனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
1663-ல் புராட்டஸ்டண்ட் மதத்துக்கு மாறுவது சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டது. ஹியூகநாட்டுகள் வாழும் இடத்தைப் பற்றியதிலும் கட்டுப்பாடுகள் இருந்தன. இதுபோல் எடுக்கப்பட்ட மிதமிஞ்சிய நடவடிக்கைகளுக்கு அளவே இல்லை. இதற்கு ஓர் உதாரணம், பிள்ளைகள் ஏழு வயதிலேயே அவர்களது பெற்றோர்களின் விருப்பத்துக்கு மாறாக கத்தோலிக்கராக மாறுவதற்கு இடமளித்த சட்டம். ஜெஸ்யுட்டு அல்லது கத்தோலிக்கப் பள்ளிகளில் பயிலும் ஹியூகநாட் பிள்ளைகளின் கல்விக்காக, அவர்களது பெற்றோர் கட்டாயம் பணம் செலுத்தியாக வேண்டும்.
ஹியூகநாட்டுகளை தீவிரமாய் ஒடுக்கிய மற்றொரு விதம், இரகசிய பரிசுத்த கூட்டு நிறுவனம் (Company of the Holy Sacrament) என்ற ஓர் இயக்கம். இது, பிரான்ஸில் நாலாபக்கமும் ‘விரிந்து பரந்திருந்தது’ என சரித்திராசிரியர் ஸானின் காரிசன் கருதிய ஒரு கத்தோலிக்க அமைப்பாகும். பெரும்பெரும் புள்ளிகளோடு தொடர்பு வைத்திருந்த இந்நிறுவனத்திற்கு, பணத்துக்கும் பஞ்சமில்லை; துப்பு துலக்குவதற்கும் திண்டாட்டமில்லை. இதன் உபாயங்கள் ஏராளம் ஏராளம். அதாவது, “வலுக்கட்டாயப்படுத்துவது முதல் இடைமறிப்பது வரையிலும், சூழ்ச்சி செய்வது முதல் பகிரங்கமாக கண்டனம் செய்வது வரையிலும் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி புராட்டஸ்டண்ட் சமூகத்தை வலுவிழக்கச் செய்தது” என காரிசன் விளக்குகிறார். இருந்தபோதிலும், இந்தத் துன்பப் புயல் வீசிய காலங்களிலெல்லாம், ஹியூகநாட்டுகள் குட்டக் குட்டக் குனிந்துகொண்டு, பிரான்ஸிலேயேதான் இருந்தனர். சரித்திராசிரியர் காரிசன் குறிப்பிடுவதாவது: “புராட்டஸ்டண்டுகளுக்கு எதிராக படிப்படியாக அதிகரித்த பகைமையைக் காண்கையில், பிரான்ஸை விட்டு ஓடாமல் பெருவாரியானோரால் எப்படி தாக்குப்பிடிக்க முடிந்தது என்பதைப் புரிந்துகொள்ள கடினமாக உள்ளது.” என்றபோதிலும், சுயாதீனத்தைத் தேடி ஓட்டம்பிடிக்க வேண்டிய கட்டம் வந்தது.
மீண்டும் பழையநிலை
நைமேகன் ஒப்பந்தமும் (1678) ராட்டஸ்பான் இடைக்கால போர் நிறுத்தமும் (1684) வெளிநாட்டுப் போரிலிருந்து அரசர் பதினான்காம் லூயியைக் காப்பாற்றியது. 1685-ல் இங்கிலீஷ் கால்வாயை ஒட்டிய தீவுகள் முழுவதும் ஒரு கத்தோலிக்கரின் கைக்கு மாறியது. பதினான்காம் லூயி இந்தப் புதிய சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டார். அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்புதான், பிரான்ஸின் கத்தோலிக்க குரு, நான்கு காலிக்கன் சட்டங்கள் என்பதை அமல்படுத்தியிருந்தார். இது போப்புக்கு இருந்த செல்வாக்கைக் கட்டுப்படுத்தியது. அதனால் பதினோராம் போப் இன்னஸன்ட், “பிரெஞ்சு சர்ச்சு, திருச்சபை பிரிவினைக் குழுவேயன்றி வேறல்ல” என கருதினார். விளைவு? இறுதியில், பதினான்காம் லூயி நான்டெஸ் சாசனத்தை ரத்து செய்ததன் பயனாக, போப்பிடம் அவருக்கு இருந்த கெட்ட பெயர் மாறி, அவருடன் மீண்டும் சுமுகமான உறவு ஏற்பட்டது.
புராட்டஸ்டண்ட் பிரிவினருக்கு எதிரான அரசரின் கொள்கைகள் வெட்டவெளிச்சமாயின. நாசுக்கான முறை (தூண்டுவது, சட்டம் இயற்றுவது) பலிக்கவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. மறுபட்சத்தில், சமீபத்திய டிராகன்னேடு முறைகள் வெற்றியடைந்தன.a ஆகவே 1685-ல், பதினான்காம் லூயி, ஃபாண்ட்டன்புளோ சாசனத்தில் கையெழுத்திட்டார். இது நான்டெஸ் சாசனத்தை ரத்து செய்தது. இத்துடன் தொடர்புடைய கொடூரமான துன்புறுத்தல், ஹியூகநாட்டுகளின் நிலைமையை, நான்டெஸ் சாசனத்துக்கு முன்பிருந்ததைவிட படுமோசமாக்கியது. அவர்கள் இப்போது என்ன செய்வார்கள்?
ஒளிவதா, எதிர்ப்பதா, ஓடுவதா?
சில ஹியூகநாட்டுகள் தங்களை யாரென வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்லை. அவர்களது ஆராதனைக் கூடங்கள் தகர்க்கப்பட்டதனாலும், பொதுவில் ஆராதனை செய்வது தடுக்கப்பட்டதனாலும், ‘வனாந்தர சர்ச்’ அல்லது ரகசிய ஆராதனை முறையைக் கையாண்டனர். ஜூலை 1686-ன் சட்டப்படி, இப்படிப்பட்ட கூட்டங்களை நடத்தினால் மரண தண்டனை விதிக்கப்படும் என்ற அபாயம் இருந்தபோதிலும் அவ்வாறு நடத்தினர். சில ஹியூகநாட்டுகள் தங்களது மதத்தை விட்டுவிட்டனர். காரணம், என்றாவது ஒருநாள் திரும்பவும் மாறிவிடலாம் என்ற நினைப்பிலேயே. அவ்வாறு மாறியவர்கள், பெயருக்கு கத்தோலிக்கராக இருந்தனர். வழிவழியாய் வந்த அவர்களது பரம்பரையும் அவர்களது அடிச்சுவட்டையே பின்பற்றியது.
அரசாங்கமோ, அவர்களது மத மாற்றத்தை ஊர்ஜிதம் செய்ய முயன்றது. வேலை கிடைக்க வேண்டுமென்றால், மதம் மாறினவர்கள் அதற்கான சான்றிதழைக் காட்ட வேண்டும். அதில், பங்குத் தந்தையின் கையொப்பம் இருக்க வேண்டும். அவர்கள் சர்ச் ஆராதனையில் கலந்துகொண்டார்களா என்பதைப் பற்றிய பதிவின் அடிப்படையிலேயே அவர் கையொப்பமிடுவார். பிள்ளைகள் ஞானஸ்நானம் பெறாமல், கத்தோலிக்க முறைமைப்படி வளர்க்கப்படாவிட்டால், அவர்களது பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படலாம். பள்ளியில் கத்தோலிக்கக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட்டது. “[பைபிள்] புத்தகப் புழுக்கள்” என அழைக்கப்பட்ட புராட்டஸ்டண்டினருக்கு, கத்தோலிக்கப் புத்தகங்களைக் கொடுப்பதற்காக அவற்றை அச்சிடும் முயற்சி மும்முரமானது. கத்தோலிக்கராக மாறிய பெருவாரியான மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை அரசாங்கம் அனுப்பி வைத்தது. கடும் நோய்வாய்ப்பட்ட எவராவது, கத்தோலிக்க மரணப்பூசைக்கு ஒத்துக்கொள்ளாமல் போய், சந்தர்ப்பவசமாக குணமடைந்தால், ஒன்று, ஆயுள் தண்டனை; இல்லாவிட்டால், ஆயுள் முழுக்க அடிமைகளாக கப்பலில் துடுப்பு வலிக்கும் தண்டனை. அவர் இறக்கையில் அவரது உடைமைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுவிடும் என்ற அவலமோ கொடுமை! குப்பைத்தொட்டிதான் அவரது கல்லறை என்ற கதியோ கொடுமையிலும் கொடுமை!
ஹியூகநாட்டுகளில் சிலர் தற்காப்பு ஆயுதங்களை நாடினர். மதவெறி பிடித்த ஸேவன் பகுதியில், காமஸார்டுகள் என அழைக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய ஹியூகநாட்டுகள் 1702-ல் கலகம் செய்தனர். பதுங்கியிருந்து பாய்வதும், இரவு நேரங்களில் தாக்குவதுமாய் இருந்த காமஸார்டுகளுக்குப் பாடம் கற்பிக்க, அரசாங்கப் படைகள் கிராமங்களைத் தீக்கிரையாக்கின. இப்படிப்பட்ட வெறித்தனமான தாக்குதல்கள் அரிதாக அவ்வப்பொழுது நிகழ்ந்தன. இவ்வாறு சிறிதுகாலம் கழிந்தாலும், 1710 வாக்கில் அரசர் லூயியின் வலிமைவாய்ந்த படை காமஸார்டுகளை இருந்த இடம் தெரியாமல் ஒழித்துக்கட்டிவிட்டது.
இதற்கு அஞ்சிய ஹியூகநாட்டுகள் தலைதப்பினால் போதும் என பிரான்ஸை விட்டே ஓடினர். இவ்வாறு அவர்கள் அசல் குடியேறிகள் ஆயினர். பெருவாரியான ஹியூகநாட்டுகள் சென்றபோது, பொன்னே பூவே என்று தாங்கள் வைத்திருந்த பொருட்களையெல்லாம் அம்போவென பறிகொடுத்தனர். ஏனெனில் அரசாங்கம் அவர்களது உடைமைகளைப் பறிமுதல் செய்தது. அந்தக் கொள்ளைப் பணத்தில் கத்தோலிக்க சர்ச்சுக்கும் பங்கு கிடைத்தது. ஆகவே எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடுவது ஒன்றும் அவ்வளவு எளிதாய் இருக்கவில்லை. பிரெஞ்சு அரசாங்கம் விழித்துக்கொண்டு களத்தில் இறங்கினது. அவர்கள் தப்பி ஓடும் பாதைகளையும் கப்பல்களையும் சோதனையிட்டது. பிரான்ஸிலிருந்து வெளியே செல்லும் கப்பல்களை கடற்கொள்ளையர்கள் சூறையாடினர். ஏனெனில் தப்பி ஓடுபவர்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு எக்கச்சக்கமான சன்மானம் வழங்கப்பட்டது. அவ்வாறு தப்பி ஓடும்போது பிடிபட்ட ஹியூகநாட்டுகளுக்குக் கடும் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதைவிட கொடுமை என்னவென்றால், அவர்களுக்குள்ளேயே உளவாளிகள் இருந்துகொண்டு, யாரெல்லாம் வெளியேற திட்டமிட்டிருக்கிறார்கள் என்றும், எந்த வழியாக போகப்போகிறார்கள் என்றும் காட்டிக்கொடுத்ததே. கடிதங்களை இடைமறித்தல், மோசடிகள், பித்தலாட்டங்கள், இன்னும் எத்தனை எத்தனையோ!
அரவணைத்த அடைக்கலம்
ஹியூகநாட்டுகள் பிரான்ஸிலிருந்து தப்பி ஓட்டம்பிடித்ததும், அவர்களை சில நாடுகள் வருக வருகவென்று வரவேற்று உபசரித்தன. இச்செயலே ‘அடைக்கலம்’ என்று அழைக்கப்பட்டது. ஹியூகநாட்டுகள் ஹாலந்து, ஸ்விட்ஸர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குத் தப்பி ஓடினர். பின்பு சிலர் ஸ்காண்டிநேவியா, அமெரிக்கா, அயர்லாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் குடியேறினர்.
எண்ணற்ற ஐரோப்பிய நாடுகள், ஹியூகநாட்டுகளை வேறு நாடுகளில் குடியேற உதவும் சாசனங்களை இயற்றின. அவர்களை வசீகரித்த சில சலுகைகளாவன: இலவச பிரஜா உரிமை, வரிவிலக்குகள், வணிக சங்கங்களில் இலவச அங்கத்தினராதல். சரித்திராசிரியர் எலிசபெத் லாப்ரூஸ் சொல்வதன்படி, ஹியூகநாட்டுகள் பெரும்பாலும் “கட்டிளம் காளைகளாகவும், . . . துடுக்கானவர்களாகவும், அதீத தார்மீக மதிப்பும் உடைய ஆற்றல்மிக்க குடிமக்களாகவும் இருந்தனர்.” இவ்வாறு, பிரான்ஸ் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த காலத்தில், அந்நாடு பல்துறைகளிலும் சிறந்து விளங்கிய திறமைசாலிகளை இழந்தது. ஆம், “உடைமைகள், செல்வங்கள், உத்திகள்” அனைத்தும் வேற்று நாட்டுக்குப் ‘பறந்து’ போய்விட்டன. மத, அரசியல் அம்சங்களும்கூட ஹியூகநாட்டுகளுக்குத் தஞ்சம் அளிக்க கைகொடுத்தன. அது சரி, இப்படி வெளியேறிக்கொண்டே இருந்தது எங்குபோய் முடிந்தது?
நான்டெஸ் சாசனம் ரத்து செய்யப்பட்டதும் அதைத் தொடர்ந்து இழைக்கப்பட்ட கொடுமையும் சர்வதேச அளவில் நாடுகளை கொதித்தெழச் செய்தன. ஆரஞ்சு பட்டணத்தைச் சேர்ந்த வில்லியம், பிரான்ஸுக்கு எதிரான நாடுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு நெதர்லாந்தின் அரசரானார். அவர் ஹியூகநாட்டு அதிகாரிகளின் உதவியுடன், இங்கிலாந்தின் கத்தோலிக்க அரசர் இரண்டாம் ஜேம்ஸை வீழ்த்திவிட்டு பதவிக்கு வந்தார். “பதினான்காம் லூயியின் புராட்டஸ்டண்டுகளுக்கு எதிரான கொள்கையே, இரண்டாம் ஜேம்ஸ் வீழ்ச்சியடைந்ததற்கும் [மேலும்] ஆக்ஸ்பர்க் சங்கம் தோன்றுவதற்கும் முக்கிய காரணமாயிற்று. . . . [இந்த] நிகழ்ச்சிகள் ஐரோப்பிய வரலாற்றிலேயே ஒரு திருப்பு முனை. இது பிரெஞ்சு ஆதிக்கத்தை வலுவற்றதாக்கி, ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு அடிபணிய வழிவகுத்தது” என சரித்திராசிரியர் ஃபிலிப் ஸூட்டார் விளக்குகிறார்.
ஹியூகநாட்டுகள் ஐரோப்பாவின் கலாச்சாரத்தில் முக்கியப் பங்கு வகித்தனர். இலக்கியம் படைக்க தங்களுக்குப் புதிதாக கிடைத்த சுதந்திரத்தைப் பயன்படுத்தினர். இந்த இலக்கியங்கள், அறிவொளியூட்டும் தத்துவத்தையும் மத சகிப்புத்தன்மை சம்பந்தமான கருத்துக்களையும் உருப்படுத்த உதவின. உதாரணமாக, பிரெஞ்சு புராட்டஸ்டண்டினர் ஒருவர், ஜான் லாக் என்ற ஆங்கில தத்துவ மேதையின் புத்தகங்களை மொழிபெயர்த்தார். அவற்றில் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட கருத்துக்கள் அடங்கியிருந்தன. மற்ற புராட்டஸ்டண்ட் எழுத்தாளர்கள், மனசாட்சியின்படி செயல்பட சுயாதீனம் தேவை என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். இந்தக் கருத்துக்கள், ஆட்சியாளர்களுக்கு கீழ்ப்படிய வேண்டியதாய் இருந்தாலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் தேவையில்லை என்றும், முக்கியமாக, அவர்களுக்கும் மக்களுக்கும் இடையேயான ஒப்பந்தம் மீறப்படுகையில் கீழ்ப்படிய அவசியமில்லை என்றும் எடுத்துரைத்தன. இவ்வாறு, நான்டெஸ் சாசனத்தை ரத்து செய்தது, “பிரெஞ்சு புரட்சி ஏற்பட்டதற்கான தெளிவான காரணிகளில் ஒன்று” என சரித்திராசிரியர் சார்லஸ் ரீட் விளக்குகிறார்.
கற்றுக்கொண்ட பாடம்?
அரசர் பதினான்காம் லூயிக்கு ராணுவ ஆலோசகராய் இருந்த மார்க்விஸ் ட வோபான், இந்தத் துன்பப் புயலால் ஏற்பட்ட சேதங்களையும் திறமை படைத்த மக்கள் போனதால் அரசுக்கு நேர்ந்த இழப்பையும் கண்டு, நான்டெஸ் சாசனத்தை புதுப்பிக்கும்படியாக அரசரை வலியுறுத்தி, “இதய மாற்றம் கடவுளுக்கே உரியது” என்று கூறினார். ஆகவே பிரெஞ்சு அரசு இந்தப் பாடத்தை ஏன் கற்றுக்கொள்ளவில்லை? அதன் தீர்மானத்தை ஏன் மாற்றிக்கொள்ளவில்லை? நிச்சயமாகவே, தன் அரசு கவிழ்ந்துவிடும் என அரசர் நினைத்தது இதற்கு ஒரு காரணம். அதுமட்டுமன்றி, 17-வது நூற்றாண்டில் பிரான்ஸில் ஏற்பட்ட கத்தோலிக்க மறுமலர்ச்சியையும் மத சகிப்புத்தன்மை இன்மையையும் சாதகமாக்கிக் கொள்வது சௌகரியமாய் இருந்தது.
நான்டெஸ் சாசன ரத்தின் எதிரொலியாக நடந்த நிகழ்ச்சிகளைப் பார்த்தவர்கள், “ஒரு சமுதாயம் எந்தளவுக்கு மத கதம்பத்தை அனுமதித்து பொறுத்துப் போக முடியும்?” என்று கேட்டிருக்கின்றனர். உண்மையில், சரித்திராசிரியர்கள் குறிப்பிட்டுள்ளபடி, ஹியூகநாட்டுகளின் வரலாற்றை நினைக்கையில், “அதிகார பிரயோகத்தையும் அதன் தாறுமாறுகளையும்” பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. இன்றைய சமுதாயங்களில் பற்பல இனங்களும் மதங்களும் பெருகிவருகையில், சுயாதீனம் தேடி ஹியூகநாட்டுகள் ஓட்டம்பிடித்தது வேதனையூட்டும் ஒன்றை உணர்த்துகிறது; அதாவது, சர்ச்சின் கைப்பாவையாகும் அரசியல், மக்களின் மிகச் சிறந்த நலனுக்காக என்று முந்திக்கொண்டு செயல்படும்போது என்ன அவலம் விளையும் என்பதையே நினைப்பூட்டுகிறது.
[அடிக்குறிப்பு]
a பக்கம் 28-ல் உள்ள பெட்டியைக் காண்க.
[பக்கம் 28-ன் பெட்டி]
டிராகன்னேடு
குலைநடுங்கச் செய்யும் மதமாற்றம்
டிராகூன்கள் என அழைக்கப்பட்டவர்கள், “பிரமாதமான மிஷனரிகள்” என்று சிலர் நினைத்தனர். ஹியூகநாட்டுகளின் மத்தியிலோ, அவர்கள் பீதியைக் கிளப்பிவிட்டனர். சில சந்தர்ப்பங்களில், அவர்கள் வரப்போகிறார்கள் என்ற செய்தி கேட்டதுமே, ஹியூகநாட்டுகள் வசிக்கும் கிராமம் கூண்டோடு கத்தோலிக்க மதத்துக்கு மாறிவிடும். சரி, யார் இந்த டிராகூன்கள்?
டிராகூன்கள் பலத்த ஆயுதம் தாங்கிய வீரர்கள். இவர்களது நோக்கம், உண்ட வீட்டுக்கே இரண்டகம் பண்ணுவது. அதாவது, ஹியூகநாட்டுகளின் வீடுகளிலேயே தங்கியிருந்து, அவர்களையே மிரட்டுவது. இவ்விதமாக டிராகூன்களைப் பயன்படுத்துவதற்குப் பெயர்தான் டிராகன்னேடு. அந்தக் குடும்பத்தினரின் பாரத்தை அதிகரிக்க, அவர்களது சக்திக்கு மிஞ்சி அதிகப்படியான வீரர்கள் அவர்களோடு தங்கவைக்கப்பட்டனர். எப்படியெல்லாம் தங்களால் முடியுமோ அப்படியெல்லாம் இக்குடும்பங்களைக் கொடுமைப்படுத்த டிராகூன்களுக்கு அதிகாரம் இருந்தது; அவர்களது தூக்கத்தைக் கெடுத்தனர்; அவர்களது உடைமைகளையெல்லாம் சூறையாடினர். அவர்கள் புராட்டஸ்டண்ட் மதத்தைத் துறந்துவிட்டால், மறுநிமிடமே இடத்தைக் காலி செய்துவிட்டனர்.
டிராகன்னேடுகள் மேற்கு பிரான்ஸிலுள்ள ப்வாட்டூவில் 1681-ல் மதம் மாற்றுவதில் தங்கள் கைவரிசையைக் காட்ட பயன்படுத்தப்பட்டனர். இந்தப் பகுதியில் பெருவாரியான ஹியூகநாட்டுகள் வசித்தனர். சில மாதங்களுக்குள்ளாகவே 30,000 முதல் 35,000 பேர் கொத்தாக மதம் மாறினர். இதுதான் 1685-ல் ஹியூகநாட்டுகள் வசிக்கும் மற்ற குடியிருப்புப் பகுதிகளிலும் நடந்தது. சில மாதங்களுக்குள்ளாகவே, 3,00,000 முதல் 4,00,000 பேர் தங்கள் மதத்தைத் துறந்துவிட்டனர். சரித்திராசிரியர் ஸான் கேன்யார் சொல்வதன்படி, டிராகன்னேடுகளின் வெற்றி, “[மத சகிப்புத்தன்மையை வலியுறுத்தும் நான்டெஸ் சாசனம்] ரத்து செய்யப்படுவதற்கு அடிகோலியது; ஏனெனில் இப்போது அது முடியுமென தோன்றியது.”
[படத்திற்கான நன்றி]
© Cliché Bibliothèque Nationale de France, Paris
[பக்கம் 25-ன் படம்]
மதக் கொடுமையிலிருந்து விடுதலை விரும்பிய பிரெஞ்சு புராட்டஸ்டண்டுகளுக்கு 1689-ம் ஆண்டைய பிரகடனம் அடைக்கலம் அளித்தது
[படத்திற்கான நன்றி]
ஹியூகநாட் நூல்நிலைய அனுமதியுடன், ஹியூகநாட் சொஸைட்டி ஆஃப் கிரேட் பிரிட்டன் அண்ட் அயர்லேண்ட், லண்டன்
[பக்கம் 26-ன் படம்]
நான்டெஸ் சாசனத்தின் ரத்து, 1685 (ரத்து அறிக்கையின் முதல் பக்கம் காட்டப்பட்டுள்ளது)
[படத்திற்கான நன்றி]
Documents conservés au Centre Historique des Archives nationales à Paris
[பக்கம் 26-ன் படம்]
பல புராட்டஸ்டண்ட் கோயில்கள் அழிக்கப்பட்டன
[படத்திற்கான நன்றி]
© Cliché Bibliothèque Nationale de France, Paris