எது சரி எது தவறென்று சொல்ல முடியுமா?
“கிட்டத்தட்ட 25 பேர நானே என் கையால கொன்னேன். . . . 24 மணிநேரமும் அது என் கண்ணு முன்னாடியே நிக்குது. கனவுலேயும் வந்து பயமுறுத்துது. . . . நான் எங்க போனாலும் யாரப் பார்த்தாலும் அது நான் கொன்னவங்களோட முகமாட்டமே இருக்குது. அது இன்னிக்குத்தான், இப்பத்தான் நடந்தமாதிரி இருக்குது. . . . நான் செஞ்சதுக்கு மன்னிப்பே இல்ல.”—வி. எஸ்.
“எதிரிய ஒழிச்சுகட்டிட்டு வான்னு எனக்கு ஆர்டர் போட்டு அனுப்பினாங்க. . . . அது ஆணா, பெண்ணா, குழந்தைகளானு நான் யோசிச்சிட்டு இருக்கல . . . என்ன செய்யனும்னு சொன்னாங்களோ அதத்தான் செஞ்சேன், என்ன கட்டள போட்டாங்களோ அத முடிச்சேன். அப்படித்தான் அன்னைக்கும் நினைச்சேன், இன்னிக்கும் நினைக்கிறேன். நான் செஞ்சது தப்புன்னு எனக்குத் தோணல.”—டபிள்யூ. சி.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு மனிதர்களும் மார்ச் 16, 1968-ல் மிக இழிவான போர்க்குற்றம் என பின்னர் கூறப்பட்டதில் பங்குகொண்டார்கள். அவர்களும், மற்ற வீரர்களும் வியட்நாமின் ஒரு சிறிய கிராமத்துக்குள் நுழைந்து ஆயிரக்கணக்கான குடிமக்களைக் கொன்று குவித்தனர். பெண்கள், பிள்ளைகள், வயதானவர்கள் என ஈவிரக்கமே இல்லாமல் கொன்றனர். ஆனால் இந்த இரண்டு வீரர்களுடைய வேறுபட்ட மனநிலையை கவனித்தீர்களா? முதலில் பேசிய வீரர் தான் செய்தவற்றைக் குறித்து உள்ளுக்குள் புழுங்கிப் புழுங்கி சாகிறார். ஆனால் இரண்டாவது நபரோ அப்படி என்ன நான் செய்துவிட்டேன் என்பதுபோல நியாயம் பேசுகிறார். ஒரே விதமான செயலைக் குறித்து இரண்டு நபர்களால் எப்படி இவ்வாறு வித்தியாசமாக உணர முடிகிறது?
இதற்கான பதிலுக்கும் மனசாட்சிக்கும் சம்பந்தம் அதிகம். மனசாட்சியா, ஆம், இது கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் மனத்திறமை. நம் செயல்களையும் உள்நோக்கங்களையும் நேர்மையான நிலையில் வைத்து தீர்ப்பு செய்வதற்கு நமக்கு உதவுகிறது. எனவே, சரி எது தவறு எது என்பதைப் பற்றிய நம் உள்ளுணர்வே மனசாட்சி.
தீர்மானங்கள் செய்கையில், “உன் மனசாட்சிக்கு எது சரினு படுதோ அத செய்யி” என்று சில ஆட்கள் எதற்கெடுத்தாலும் சொல்கிறார்கள். ஆனால், வருத்தகரமாக, மனசாட்சி எப்போதுமே நம்பத்தக்கதாக இல்லை. சொல்லப்போனால், குரூரமான அக்கிரமங்கள் நடக்கையில் அநேகர் கை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள், அதே அக்கிரமத்தை தாங்களும் செய்கிறார்கள். ஆனால், அவர்களுடைய மனசாட்சி உறுத்துவதெல்லாம் கிடையாது. (யோவான் 16:2; அப்போஸ்தலர் 8:1) ஒருமுறை ஆங்கில நாவலாசிரியர் சாமுவேல் பட்லர் இவ்வாறு குறிப்பிட்டார்: மனசாட்சி “சொல்வதைக் கேட்காவிட்டால், அதுவும் பேசுவதை நிறுத்திக் கொள்ளும்.”
உங்கள் மனசாட்சியை நம்ப முடியுமா? அதை எவ்வளவு நன்றாக பயிற்றுவிக்கிறீர்கள் என்பதில்தான் பதில் பெரிதும் சார்ந்திருக்கிறது. அதைத்தான் அடுத்த கட்டுரை காட்டும்.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
மேலேயுள்ள போர்க் காட்சி: U.S. Signal Corps photo