அநேகருக்கு வாயளவில்தான் விசுவாசம்
“இயேசு அதிசயமானவர்! அற்புதமானவர்!” என்று உணர்ச்சிவயப்பட்டு சொன்னார் மதப்பற்றுள்ள பிரேஸில் நாட்டு பெண்மணி. சொல்லப்போனால், இயேசுவின் பெயருக்கு இருக்கும் சக்தியை யாராலும் மறுக்க முடியாது. சரித்திர ஏடுகளைப் புரட்டினால் அவருக்காக மனமுவந்து கஷ்டப்பட்டவர்களும் இறந்தவர்களும் அநேகர் என்பது விளங்கும்.
‘இயேசுவின் நாமத்தைக் குறித்து’ அப்போஸ்தலர்களாகிய பேதுருவும் யோவானும் எருசலேமில் பிரசங்கித்தார்கள். அதற்காக அவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். அடிக்கப்பட்டார்கள். இருந்தபோதிலும், “அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போ[னார்கள்].”—அப்போஸ்தலர் 5:28, 41.
முதல் நூற்றாண்டில் இயேசுவின் பெயரை உயர்வாய் மதித்த மற்றொருவர் அந்திப்பா. “சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியா[க] . . . கொல்லப்பட்[டான்]” என பைபிளின் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்துதலில் இயேசுவே அவரைப் பற்றி குறிப்பிட்டார். (வெளிப்படுத்துதல் 2:13) பெர்கமுவிலிருந்த மற்ற கிறிஸ்தவர்களோடு சேர்ந்து அந்திப்பாவும் கிறிஸ்துவின்மீது தனக்கிருந்த விசுவாசத்தை மறுதலிக்கவில்லை. அந்திப்பா தன் உயிரையே இழக்க வேண்டிய நிலை வந்தபோதிலும் இயேசுவின் பெயருக்கு உண்மையுள்ளவராக நிரூபித்தார்!
இது சம்பவித்து சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின், பொ.ச. 155-ல், கிறிஸ்தவர் என தன்னை அழைத்துக் கொண்ட பாலிகார்ப்பும் இதே போன்ற சோதனையை எதிர்ப்பட்டார். கிறிஸ்துவை நிந்திக்கும்படி அவரிடம் கட்டளையிட்டார்கள். அப்போது, “86 வருஷமாக நான் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்து வருகிறேன், அவர் எனக்கு எந்தத் தீமையும் செய்யவில்லை. அப்படி இருக்கும்போது என்னை இரட்சித்த என் ராஜாவுக்கு எதிராக எப்படி தூஷிக்க முடியும்?” என கேட்டார். கிறிஸ்துவை நிந்திக்க மறுத்த காரணத்தால், பாலிகார்ப் உயிரோடே கழுமரத்தில் எரிக்கப்பட்டார்.
அப்போஸ்தலர்கள், அந்திப்பா, இன்னும் பலர் கிறிஸ்துவுக்காக உயிரையும் கொடுக்க முன்வந்தனர்! அவருக்கு உண்மையுள்ள சாட்சிகளென நிரூபிக்க விரும்பினர். இன்றுள்ளோரும் அப்படித்தான் இருக்கின்றனரா?
இன்று இயேசுவின் பெயருக்கிருக்கும் மதிப்பு
இன்றும் இயேசுவின் பெயருக்கு அபாரமான காந்தசக்தி இருக்கிறது. லத்தீன் அமெரிக்காவில், இயேசுவில் நம்பிக்கை வைத்திருப்பதாக சொல்லிக்கொள்ளும் சர்ச்சுகளின் எண்ணிக்கை சில வருடங்களாகவே அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பட்டிதொட்டிகளிலும்கூட ஒரு பெந்தெகொஸ்தே சர்ச்சாவது இருக்கிறது. அதேசமயத்தில் இப்படிப்பட்ட சர்ச்சுகளுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கும் கொஞ்சநஞ்சமல்ல. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், பிரேஸில் நாட்டு காங்கிரஸிலும் சட்டசபையிலும் 31 இடங்களை இந்தச் சர்ச்சுகளின் அங்கத்தினர்கள் பிடித்திருக்கின்றனர்.
அமெரிக்காவில் சமீபத்தில் தோன்றியிருக்கும் ஒரு மத பிரிவும் இயேசுவுக்கே முக்கியத்துவம் தருகிறது. அந்தப் பிரிவின் தொண்டர்கள், வாக்குத் தவறாதோர் என தங்களை அழைத்துக்கொள்கின்றனர். அவர்களது கூட்டங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை 1991-ல் 4,200 ஆக இருந்தது. 1996-ல் அது 11,00,000 ஆக அதிகரித்திருப்பதாய் 1997-ல் வெளியான டைம் பத்திரிகை அறிக்கை செய்தது. அதன் கீர்த்தனைகளின் ஒரு வரி இதுவே: “என் இரட்சகராகிய இயேசுவின் நாமத்தில் என்றென்றும் ஜெயமே.”
என்றபோதிலும் இயேசுவின் பெயரைப் பயன்படுத்தி உணர்ச்சிவசப்படுத்தியவை எப்போதுமே நல்ல நோக்கோடு செய்யப்படவில்லை. அவருடைய பெயரால் செய்யப்படும் யுத்த கரகோஷங்கள் விண்ணைப் பிளக்கின்றன. அவருடைய பெயரால் செய்யப்பட்ட அட்டூழியங்களை பட்டியலிட வேண்டுமா? இதோ சில: யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர், கிறிஸ்தவ மதத்தில் இல்லாதோர் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டனர், சர்ச்சோடு ஒத்துழைக்காதோர் துன்புறுத்தப்பட்டனர், முடமாக்கப்பட்டனர், மரத்தில் உயிரோடு எரிக்கப்பட்டனர். வெகுசமீபத்தில், பணத்திற்காகவே சுவிசேஷம் செய்வது பற்றி ஊரெங்கும் பேச்சு அடிபடுகிறது. இவையெல்லாம் இயேசுவின் பெயருக்கு களங்கத்தையும் வெறுப்பையும் அளவுக்கதிகமாய் ஏற்படுத்தியிருக்கின்றன; அந்தப் பெயரின் உண்மையான அர்த்தத்தை காணமுடியாதபடி கண்ணைக் கட்டிவிட்டன.
எனினும், இது பின்வரும் கேள்விகளை எழுப்புகிறது: இயேசுவின் பெயரில் நம்பிக்கை வைப்பதென்பது எதை அர்த்தப்படுத்துகிறது? இந்த விஷயத்தில் யெகோவாவின் சாட்சிகளின் கருத்து என்ன? பதில்களுக்காக அடுத்த கட்டுரையைப் படியுங்கள்.