உண்மையான விசுவாசத்திற்கு வழிநடத்தும் பெயர்
“தெரியுமே நீங்க இயேசுவையும் நம்ப மாட்டீங்க, அவராலதான் இரட்சிக்கப்படுவோங்கிறதையும் நம்ப மாட்டீங்க” என்று யெகோவாவின் சாட்சி ஒருவரிடம் சொன்னாள் ஒரு பெண்மணி. “நீங்க உங்கள யெகோவாவின் சாட்சின்னு சொல்லிக்குவீங்க, ஆனா நான் இயேசுவுக்கு சாட்சின்னு தெரிஞ்சுக்கோங்க” என்று வீராவேசத்தோடு சொன்னார் ஒரு ஆள்.
யெகோவாவின் சாட்சிகள் இயேசுவை நம்புவதில்லை என்பதும் அவரை ஒரு பொருட்டாக கருதுவதில்லை என்பதும் சாதாரணமாக எல்லாரும் சொல்வதுதான். ஆனால் அதுவா உண்மை?
யெகோவா என்ற கடவுளுடைய பெயருக்கு யெகோவாவின் சாட்சிகள் முக்கியத்துவம் கொடுப்பது முழுக்க முழுக்க உண்மை.a பிரேஸிலில் இருக்கும் இடாமார் என்ற சாட்சி தன் பழைய நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார்: “கடவுளுடைய பெயரை தெரிஞ்சுகிட்ட அன்னிக்கு என் வாழ்க்கையே மாறிப்போச்சு. மொதமொதலா அந்தப் பெயரை படிச்சப்போ தூங்கிட்டிருந்த என்ன அது தட்டி உசுப்பிவிட்டது போல இருந்துச்சு. யெகோவாங்கிற பேரு எனக்குள்ள இனந்தெரியாத ஓர் உணர்ச்சிய ஏற்படுத்திச்சு, செயல்பட தூண்டிச்சு, என் இருதயத்தை அப்படியே நெகிழ வெச்சிடுச்சு.” அதோடு விட்டதா, “இயேசுவின் மேலிருந்த அன்பும் எனக்குள்ள கட்டுக்கடங்காமல் பெருக்கெடுக்க ஆரம்பிச்சுது” எனவும் அவர் கூறுகிறார்.
நித்திய ஜீவனைப் பெற, “தேவகுமாரனுடைய [இயேசுவினுடைய] பெயரில்” விசுவாசம் வைப்பது அவசியம் என்பதை யெகோவாவின் சாட்சிகள் உணர்ந்திருக்கிறார்கள். (1 யோவான் 5:13, NW) ‘இயேசுவின் பெயரில்’ என்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
இயேசுவின் பெயர் எதை அர்த்தப்படுத்துகிறது
‘இயேசுவின் பெயரில்’ என்பதைப் போன்ற அநேக சொற்றொடர்கள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் அல்லது ‘புதிய ஏற்பாட்டில்’ காணப்படுகின்றன. “பெயர்” என்ற வார்த்தை, இயேசுவோடு சம்பந்தப்படுத்தி 80-க்கும் அதிகமான தடவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது; அதில் சுமார் 30 தடவை அப்போஸ்தல நடபடிகளில் மட்டுமே காணப்படுகிறது. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் இயேசுவின் பெயரில் முழுக்காட்டப்பட்டனர், அவருடைய பெயரில் சுகப்படுத்தப்பட்டனர், அவருடைய பெயரில் கற்பிக்கப்பட்டனர், அவருடைய பெயரில் கூப்பிட்டனர், அவருடைய பெயருக்காக துன்பப்பட்டனர், அவருடைய பெயரை மகிமைப்படுத்தினர்.—அப்போஸ்தலர் 2:38; 3:16; 5:28; 9:14, 16; 19:17; NW.
பைபிள் டிக்ஷ்னரி ஒன்றின் பிரகாரம், “பெயர்” என்பதற்கான கிரேக்க வார்த்தையை “அதிகாரத்தை, ஆள்த்தன்மையை, பதவியை, உயர்ந்த ஸ்தானத்தை, பலத்தை, தனிச்சிறப்பை என அந்தப் பெயர் அர்த்தப்படுத்தும் அநேகத்தை குறிப்பிட” பைபிள் அடிக்கடி உபயோகிக்கிறது. எனவே இயேசுவின் பெயர், யெகோவா தேவன் நியாயத்தீர்ப்பு செய்யும் உயர்ந்த ஸ்தானத்தை, மாபெரும் அதிகாரத்தை அவருக்கு ஒப்படைத்திருப்பதைக் குறிக்கிறது. “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது” என இயேசு தாமே குறிப்பிட்டார். (மத்தேயு 28:18) பேதுருவும் யோவானும் ஒரு முடவனை குணப்படுத்தியபோது, “நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள்” என்று யூத மதத்தலைவர்கள் அவர்களிடம் கேட்டார்கள். ‘நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே அவன் அவர்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று’ பேதுரு யாவரறிய சொன்னார்; அதன்மூலம் இயேசுவின் பெயருக்குள்ள அதிகாரத்தையும் சக்தியையும் குறிப்பிட்டு பேதுரு தன் விசுவாசத்தை தைரியமாக வெளிப்படுத்தினார்.—அப்போஸ்தலர் 3:1-10; 4:5-10.
விசுவாசம் இயேசுவிலா இராயனிலா?
இயேசுவின் பெயரில் இத்தகைய விசுவாசத்தைக் காட்டுவதென்பது அவ்வளவு எளிதல்ல. ‘தம் நாமத்தினிமித்தம் அவர்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவார்கள்’ என இயேசு ஏற்கெனவே சொல்லியிருந்தார். (மத்தேயு 24:9) ஏன்? ஏனெனில் இயேசுவின் பெயர் ராஜாதி ராஜாவாக, கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சியாளராக அவருடைய ஸ்தானத்தை அர்த்தப்படுத்துகிறது; எல்லா தேசத்தாரும் கீழ்ப்படிதலோடு அவருக்கு சிரம்தாழ்த்த வேண்டிய நிலையில் இருக்கின்றனர். ஆனால் அதற்கு அவர்கள் மனம் இடங்கொடுப்பதில்லை.—சங்கீதம் 2:1-7.
இயேசுவின் நாளிலிருந்த மதத்தலைவர்களும் அவருக்குக் கீழ்ப்படிதலோடு அடிபணிய மறுத்தனர். “இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை” என சொல்வதன்மூலம் கடவுளுடைய குமாரனை அவர்கள் ஒதுக்கித் தள்ளினர். (யோவான் 19:13-15) மாறாக, இராயனின் பெயரில், அதாவது அந்தப் பெயர் அர்த்தப்படுத்திய பலத்திலும் அதிகாரத்திலும், ஏகாதிபத்திய அரசாங்கத்திலும் அவர்கள் தங்கள் இராஜபக்தியைக் காட்டினர். தங்கள் பதவியையும் கௌரவத்தையும் காப்பாற்றிக்கொள்ள இயேசுவை கொலை செய்யுமளவுக்கு துணிந்தனர்.—யோவான் 11:47-53.
இயேசுவின் மரணத்திற்குப் பின் பல நூற்றாண்டுகள் உருண்டோடின; தங்களை கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொண்டவர்கள், குணத்தில் அந்த யூத மதத்தலைவர்களை அச்சில் வார்த்தெடுத்தவர்களைப் போல் இருந்தனர். இந்தப் பெயர் கிறிஸ்தவர்கள், அரசாங்கத்தின் பலத்திலும் அதிகாரத்திலும் தங்கள் நம்பிக்கையை வைத்தனர்; அதன் கிளர்ச்சிகளுக்கு ஆதரவளித்தனர். அதற்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், 11-ம் நூற்றாண்டுக்குச் செல்ல வேண்டும். வேலைவெட்டியில்லாதவர்களை போர்வீரர்களாக மிலிட்யா கிறிஸ்டீ அல்லது கிறிஸ்தவ வீரர்களாக சர்ச்சு ஏற்படுத்தியது. “நீதியாக போரிட வேண்டிய பொறுப்பு கிறிஸ்தவ மண்டலத்தைச் சேர்ந்த ஆட்சியாளர்களிடமிருந்து பிடுங்கப்பட்டு சர்ச்சுக்குச் சொந்தமான இந்த கிறிஸ்தவ வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.” (தி ஆக்ஸ்ஃபர்ட் ஹிஸ்ட்ரி ஆஃப் கிறிஸ்டியானிட்டி) சிலுவைப் போரில் கலந்துகொள்வதன் மூலம், “கடவுளோடு தாங்கள் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பதாகவும் அதில் பங்கேற்பதால் தங்களுக்கு பரதீஸில் ஓர் இடத்தை நிச்சயப்படுத்திக்கொள்வதாகவும்” போப்புகளின் சில அறிக்கைகள் பெரும்பாலான சிலுவைப் போர்வீரர்களை நம்பும்படி செய்தன எனவும் அந்தப் பதிவு குறிப்பிடுகிறது.
இயேசுவிற்கு உண்மை மாறாதவராக இருந்துகொண்டே அரசியல் விவகாரங்களிலும் போர்களிலும் பங்குகொள்வதில் தவறேதும் இல்லை என சிலர் விதண்டாவாதம் செய்யலாம். எங்கெல்லாம் தீமை காணப்படுகிறதோ அங்கெல்லாம் அதை எதிர்த்து நிற்க வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமையெனவும் தேவைப்பட்டால் போரிலும் இறங்கிவிட வேண்டும் என்றும் அவர்கள் நினைக்கலாம். ஆரம்பகால கிறிஸ்தவர்களும் இப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தனரா?
“ஆரம்பகால கிறிஸ்தவர்கள் ஆயுதம் தாங்கிய படைகளில் சேவை செய்யவில்லை” என த கிறிஸ்டியன் சென்சுரி என்ற பத்திரிகையில் வந்த கட்டுரை குறிப்பிடுகிறது. பொ.ச. 170-180-ம் ஆண்டுகள்வரை கிறிஸ்தவர்கள் படைச் சேவைகளில் பங்கெடுத்ததற்கு எந்த ஆதாரமுமில்லை என அது விவரிக்கிறது. “கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவர்கள் படையில் சேவை செய்வதை எதிர்ப்பது தளர்ந்தது” என அது மேலும் சொல்கிறது.
அதன் விளைவென்ன? “மற்ற மதத்தாரைப் போலவே எவ்வித தயக்கமும் இல்லாமல் இவர்களும் போரில் ஈடுபட்டது, கிறிஸ்தவத்திற்கு படுமோசமான இழிவை ஏற்படுத்தியது. அந்தக் கிறிஸ்தவர்கள் ஒருபுறம் தங்கள் சமாதான இரட்சகரை விசுவாசித்தார்கள் மறுபுறமோ மத அல்லது தேசிய போர்களை தீவிரமாய் ஆதரித்தார்கள்; இதுவே அவர்களுடைய விசுவாசத்தை சேதப்படுத்தியது” என குறிப்பிடுகிறது த கிறிஸ்டியன் சென்சுரி.
ஆரம்பகால கிறிஸ்தவர்களின் பாதையில் நடத்தல்
ஆரம்பகால கிறிஸ்தவர்கள் வகுத்த பாதையில் இன்றைய கிறிஸ்தவர்கள் வெற்றிநடை போட முடியுமா? முடியும் என இந்நூற்றாண்டு யெகோவாவின் சாட்சிகள் நிரூபித்திருக்கின்றனர். அவர்களைப் பற்றி ஹாலோக்காஸ்ட் எஜூக்கேஷனல் டைஜஸ்ட்டின் எடிட்டர் இவ்வாறு குறிப்பிட்டார்: “யெகோவாவின் சாட்சிகளில் எவரும் ஒருபோதும் யுத்தத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள். . . . உலக ஆட்சியாளர்கள் ஒவ்வொருவரும் இவர்களுடைய விசுவாசத்தை பின்பற்றியிருந்தால் [இரண்டாம் உலக யுத்தம்] நடந்திருக்கவே நடந்திருக்காது.”
வெகுசமீபத்தில் வட அயர்லாந்தில் கடுமையான உள்நாட்டு போர் மூண்டது; இது போன்ற போர்கள் அனைத்தையுமே நாம் தவிர்த்திருக்கலாம். சில வருடங்களுக்கு முன்பு, பெல்ஃபாஸ்ட் என்ற நகரில் புராட்டஸ்டண்ட்டினர் வாழும் பகுதியில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்துகொண்டிருந்தார். அந்தச் சாட்சி ஒரு முன்னாள் கத்தோலிக்கர் என்பதை அறிந்த வீட்டுக்காரர் கேட்டார்: “நீங்க கத்தோலிக்கரா இருந்தப்போ ஐஆர்ஏ-ஐ [அயர்லாந்தின் குடியரசு படை] ஆதரித்தீர்களா?” அம்மனிதன் கத்தோலிக்கரைக் கொல்ல துப்பாக்கியோடு செல்லுகையில் வழியில் மடக்கப்பட்டு, கைதிசெய்யப்பட்டு, அப்போதுதான் விடுதலை செய்யப்பட்டிருந்தார். எனவே தான் ஒரு கத்தோலிக்கராக இருந்தார் என சொன்னால் அவர் கொதித்தெழுந்துவிடுவார் என்பதை இந்த சாட்சி உணர்ந்தார். அந்தக் கேள்விக்கான அவருடைய பதில் இவ்வாறு இருந்தது: “நான் இப்போ கத்தோலிக்கனில்ல. நான் ஒரு யெகோவாவின் சாட்சி. உண்மை கிறிஸ்தவனான நான் எந்த அரசாங்கத்திற்காகவும் எந்த மனுஷனுக்காகவும் ஒருநாளும் யாரையும் கொல்ல மாட்டேன்.” அதைக் கேட்டதும் அந்த வீட்டுக்காரர் கைகுலுக்கி, “ஆமா, கொலை செய்யறதே தப்பு. நீங்க செய்யும் சேவையை மெச்சுகிறேன். கீப் இட் அப்” என்றார்.
இயேசுவின் பெயரில் விசுவாசம் வைப்பதன் அர்த்தம்
இயேசுவின் பெயரில் விசுவாசம் வைத்திருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு யுத்தத்தில் ஈடுபடாமல் இருந்தால் மாத்திரம் போதாது. கிறிஸ்து கொடுத்த எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படியவும் வேண்டும். “நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்” என்றார் இயேசு; அவருடைய கட்டளைகளில் ஒன்று நாம் “ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டு[ம்]” என்பது. (யோவான் 15:14, 17) அன்பு மற்றவர்களுக்கு நல்லதை மட்டுமே செய்யத் தூண்டும். அது, இன, மத, சமூக தப்பெண்ணம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. இயேசு அதன்படி நமக்கு வாழ்ந்துகாட்டினர்.
இயேசுவின் காலத்திலிருந்த யூதர்களும் சமாரியர்களும் ஏறிட்டும்பார்க்காதளவுக்கு ஒருவரோடொருவர் ஒட்டாமல் வாழ்ந்தார்கள். இயேசுவோ வித்தியாசமாக வாழ்ந்து காட்டினார்; அவர் பேதம் பார்க்காமல் ஒரு சமாரியப் பெண்ணிடம் பேசினார். அதன் விளைவாக அவளும் மற்ற அநேகரும் அவருடைய பெயரில் விசுவாசம் வைத்தார்கள். (யோவான் 4:39) தம்முடைய சீஷர்கள், “எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும்” தமக்கு சாட்சிகளாயிருப்பார்கள் எனவும் இயேசு குறிப்பிட்டார். (அப்போஸ்தலர் 1:8) அவர் அளித்த உயிர் காக்கும் செய்தி யூதர்களுக்கு மட்டுமே அல்ல. எனவே கொர்நேலியு என்ற ரோம நூற்றுக்கதிபதியை சென்று சந்திக்கும்படி பேதுருவிடம் சொல்லப்பட்டது. வேறு இனத்தவரை சென்று சந்திப்பது யூதர்களின் சட்டப்படி தவறு. இருந்தபோதிலும், ‘எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும்’ நினைக்கக்கூடாதென தேவன் அவருக்கு உணர்த்தியிருந்தார்.—அப்போஸ்தலர் 10:28.
இயேசு காட்டிய பாதையில் நடப்பவர்களாக யெகோவாவின் சாட்சிகள் எல்லாருக்கும் உதவுகிறார்கள்; இன, மத அல்லது பொருளாதார ரீதியில் வித்தியாசப்பட்டவர்களாக இருக்கும் எவரும் இயேசுவின் பெயரினால் வரும் இரட்சிப்பைக் குறித்து கற்றுக்கொள்ள உதவுகிறார்கள். அவர் பெயரில் இருக்கும் விசுவாசம், ‘கர்த்தராகிய இயேசுவை வெளிப்படையாக அறிவிப்பதற்கு’ அவர்களைத் தூண்டுகிறது. (ரோமர் 10:8, 9) இயேசுவின் பெயரில் விசுவாசம் வைக்க நீங்களும் கற்றுக்கொள்வதற்கு அவர்கள் உதவிக்கரம் நீட்டுகையில் தயங்காமல் அதைப் பற்றிக்கொள்ளும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம்.
மதிப்பு, மரியாதை, கீழ்ப்படிதல் போன்ற உணர்ச்சிகளை இயேசுவின் பெயர் உண்மையிலேயே தூண்டவேண்டும். “இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கு . . . பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்[ண]” வேண்டும் என அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டார். (பிலிப்பியர் 2:10, 11) இன்று பூமியிலுள்ள பெரும்பாலானோர் இயேசுவின் ஆட்சியை ஏற்க மனமற்றவர்களாக இருக்கின்றனர். எல்லாரும் கீழ்ப்படிய வேண்டிய காலம் இதோ வருகிறது; கீழ்ப்படியாதோர் அழிந்துபோவர். (2 தெசலோனிக்கேயர் 1:6-8, 10) இயேசுவின் கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிவதன்மூலம் அவருடைய பெயரில் விசுவாசம் வைப்பதற்கு இதுவே காலம்.
[அடிக்குறிப்புகள்]
a கூடுதலான தகவலுக்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் 1984-ல் பிரசுரிக்கப்பட்ட கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும் என்ற சிற்றேட்டில் பக்கங்கள் 28-31-ஐக் காண்க.
[பக்கம் 6-ன் படம்]
இயேசுவின் பெயரில் லட்சக்கணக்கானோர் கொலை செய்திருக்கின்றனர், கொல்லவும்பட்டிருக்கின்றனர்
[பக்கம் 7-ன் படம்]
இன தப்பெண்ணங்களை இயேசு மனதில் வைத்திருக்கவில்லை. நீங்களும் அப்படித்தானே?