“தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?”
“இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?”—ரோமர் 8:31.
1. இஸ்ரவேலருடன் எகிப்தைவிட்டுச் சென்றவர்கள் யார், அவ்வாறு செல்வதற்கு அவர்களை தூண்டியது எது?
எகிப்தில் 215 வருடங்கள் ஓடிவிட்டன, அவற்றில் பெரும்பாலும் அடிமைத்தன வாழ்க்கை! இப்போது, இஸ்ரவேலர் விடுதலை பெற்றுச் செல்கையில் ‘அவர்களோடே கூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகரும்’ புறப்பட்டு வந்தார்கள். (யாத்திராகமம் 12:38) எகிப்து தேசத்தை வாதித்த பயங்கரமான பத்து வாதைகளையும், அதன் பொய் தெய்வங்கள் கேலிக்குரியவையாக ஆக்கப்பட்டதையும் இஸ்ரவேலரல்லாத இந்த ஜனங்கள் கண்ணாரக் கண்டார்கள். அதே சமயத்தில்—குறிப்பாக நான்காவது வாதை முதற்கொண்டு—தம்முடைய ஜனங்களை காப்பாற்ற யெகோவாவுக்கு இருக்கும் திறமையையும் அவர்கள் பார்த்தார்கள். (யாத்திராகமம் 8:23, 24) யெகோவாவின் நோக்கங்களை சிறிதளவே அறிந்திருந்தபோதிலும், ஒரு விஷயத்தைக் குறித்து உறுதியாக இருந்தார்கள்: எகிப்திய தெய்வங்களால் எகிப்தியரை காப்பாற்ற முடியவில்லை, ஆனால் யெகோவாவோ இஸ்ரவேலரை காப்பாற்றுவதற்கு தமக்கு பலம் இருக்கிறது என்பதை நிரூபித்தார்.
2. இஸ்ரவேலின் வேவுகாரர்களுக்கு ராகாப் ஏன் உதவினாள், அவர்களுடைய கடவுள் மீது அவள் வைத்த நம்பிக்கை ஏன் வீண்போகவில்லை?
2 நாற்பது வருடங்களுக்குப்பின், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்கு சற்று முன்பு, மோசேக்குப் பின் வந்த யோசுவா, அத்தேசத்தை வேவுபார்ப்பதற்காக இரண்டு மனிதரை அனுப்பினார். அங்கே அவர்கள் எரிகோவில் வசிக்கும் ராகாபை சந்தித்தனர். இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள் முதல் இந்த 40 வருட காலத்தில் அவர்களை காப்பாற்ற யெகோவா செய்த வல்லமையான செயல்களைப் பற்றி அவள் கேள்விப்பட்டிருந்தாள்; ஆகவே, யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டுமானால், அவருடைய ஜனங்களுக்கு உதவ வேண்டும் என்பதை அவள் அறிந்திருந்தாள். அவளுடைய ஞானமான தீர்மானத்தால், பிற்பாடு இஸ்ரவேலர் அந்தப் பட்டணத்தைக் கைப்பற்றியபோது அவளும் அவளுடைய வீட்டாரும் பாதுகாக்கப்பட்டார்கள். அவர்களை அற்புதமாக காப்பாற்றிய விதம்தானே கடவுள் அவர்களோடிருந்தார் என்பதற்கு மறுக்க முடியாத அத்தாட்சியாக இருந்தது. ஆகவே, இஸ்ரவேலரின் கடவுளிடத்தில் ராகாப் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை.—யோசுவா 2:1, 9-13; 6:15-17, 25.
3. (அ) திரும்ப எடுப்பித்துக் கட்டப்பட்ட எரிகோ பட்டணத்துக்கு அருகே இயேசு செய்த அற்புதம் என்ன, யூத மதத் தலைவர்கள் எவ்வாறு பிரதிபலித்தார்கள்? (ஆ) யூதர்கள் சிலரும் பிற்பாடு யூதரல்லாதோர் பலரும் எதை உணர்ந்துகொண்டார்கள்?
3 பதினைந்து நூற்றாண்டுகளுக்குப்பின், திரும்ப எடுப்பித்துக் கட்டப்பட்ட எரிகோ பட்டணத்தின் அருகே பிச்சை கேட்டுக்கொண்டிருந்த குருடனை இயேசு கிறிஸ்து சுகப்படுத்தினார். (மாற்கு 10:46-52; லூக்கா 18:35-43) தனக்கு இரங்கும்படி இயேசுவை இந்த மனிதன் கெஞ்சிக் கேட்டான். அவன் கேட்ட விதம், இயேசுவுக்கு கடவுளின் ஆதரவு இருந்ததை அவன் அறிந்திருந்ததாக காட்டுகிறது. மறுபட்சத்தில், இயேசு செய்த அற்புதங்கள், அவர் கடவுளுடைய வேலையைச் செய்துவந்தார் என்பதற்கு நிரூபணமாக இருந்ததை யூத மதத் தலைவர்களும் அவர்களைப் பின்பற்றினவர்களும் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அத்துடன், அவரிடம் அவர்கள் குற்றம் கண்டுபிடித்தனர். (மாற்கு 2:15, 16; 3:1-6; லூக்கா 7:31-35) இயேசுவை கொலை செய்தபின்பு அவர் உயிர்த்தெழுந்தார் என்ற உண்மையை அறிந்தும், அது கடவுளுடைய செயல் என்பதை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு மனமில்லை. மாறாக, ‘கர்த்தராகிய இயேசுவைக் குறித்துப் பிரசங்கிப்பதை’ நிறுத்த முயன்று, இயேசுவின் சீஷர்களை துன்புறுத்துவதில் முன்நின்று செயல்பட்டார்கள். ஆனால் யூதர்கள் சிலரும், பிற்பாடு யூதரல்லாத பலரும் இந்த சம்பவங்களுக்கு கவனம் செலுத்தி அவற்றை சரியாக சீர்தூக்கி பார்த்தனர். சுய நீதியுள்ள யூத தலைவர்களை கடவுள் நிராகரித்து, இயேசு கிறிஸ்துவின் தாழ்மையுள்ள சீஷர்களுக்கு துணை நின்றார் என்பது அவர்களுக்குத் தெளிவானது.—அப்போஸ்தலர் 11:19-21.
இன்று கடவுளுடைய ஆதரவை பெறுபவர் யார்?
4, 5. (அ) மதத்தை தேர்ந்தெடுப்பதை பற்றி மக்கள் சிலர் எப்படி உணருகிறார்கள்? (ஆ) மெய் மதத்தை கண்டுகொள்வதற்கு உதவும் முக்கிய கேள்வி என்ன?
4 சமீபத்தில் மெய் மதத்தைப் பற்றி டிவி-யில் பேட்டி அளிக்கையில் மத குரு ஒருவர் இவ்வாறு கூறினார்: “எந்த மதம், அதைக் கடைப்பிடிப்பவர்களை மிகவும் நல்லவர்களாக மாற்றுகிறதோ அந்த மதமே உண்மை மதம் என நான் அடித்துச் சொல்வேன்.” மெய் மதம் மக்களை நல்லவர்களாக்குகிறது என்பது ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம்தான். ஆனால் ஒரு மதம் ஜனங்களை நல்லவர்களாக்குகிறது என்ற உண்மைதானே அந்த மதத்திற்கு கடவுளுடைய பக்கபலம் இருக்கிறது என நிரூபிக்கிறதா? ஒரு மதம் உண்மையானதா என்பதை தீர்மானிப்பதற்கு அதுதான் ஒரே அடிப்படையா?
5 மதம் உட்பட, பல்வேறு விஷயங்களை சொந்தமாக தெரிவு செய்வதற்கு உரிமை இருப்பதை எவருமே மதித்துணர்வர். ஆனால், ஒருவருக்கு தெரிந்தெடுக்கும் உரிமை இருப்பது, அவர் நல்ல தெரிவை செய்வார் என்பதற்கு உத்தரவாதம் அளிப்பதில்லை. உதாரணமாக, ஒரு மதத்திற்கு வருபவர்களுடைய கூட்டத்தையோ அவர்களிடம் இருக்கும் பணத்தையோ அவர்கள் நடத்தும் பகட்டான கொண்டாட்டங்களையோ முன்னிட்டு, அல்லது தங்கள் சொந்த பந்தங்களை முன்னிட்டு தங்களுடைய மதத்தை சிலர் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு மதம் உண்மையானதா இல்லையா என்பதை இவற்றில் எதுவும் தீர்மானிப்பதில்லை. இதை தீர்மானிப்பதற்கு உதவும் முக்கியமான கேள்வி என்னவெனில்: கடவுளுடைய சித்தத்தை செய்ய எந்த மதம் அதன் அங்கத்தினர்களை ஊக்குவித்து, ‘தேவன் நம் பட்சத்திலிருக்கிறார்’ என அவர்கள் நம்பிக்கையோடு சொல்லும் அளவுக்கு தெய்வீக ஆதரவு இருப்பதற்குரிய உறுதியான அத்தாட்சியை அளிக்கிறது?
6. இயேசுவின் என்ன வார்த்தைகள் மெய் மற்றும் பொய் மதத்தைப் பற்றிய விஷயத்தை தெளிவாக்குகின்றன?
6 மெய் மதத்தையும் பொய் மதத்தையும் வேறுபடுத்திக் காட்டும் விதியை ஏற்படுத்தினபோது, இயேசு இவ்வாறு கூறினார்: ‘கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.’ (மத்தேயு 7:15, 16; மல்கியா 3:18) ஆகவே, மெய் மதத்தின் சில ‘கனிகளை’ அல்லது அடையாளங்களை நாம் இப்பொழுது ஆராயலாம். அதன்மூலம் இன்று யாருக்கு தெய்வீக ஆதரவு இருக்கிறது என்பதை நாம் திறந்த மனதோடு தீர்மானிக்கலாம்.
கடவுளுடைய ஆதரவை பெற்றிருப்போருக்குரிய அடையாளங்கள்
7. பைபிள் அடிப்படையிலானவற்றையே போதிக்க வேண்டும் என்பதன் அர்த்தம் என்ன?
7 அவர்களுடைய போதனைகள் பைபிள் அடிப்படையிலானவை. இயேசு சொன்னார்: “என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.” மேலுமாக, “தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்” என்றும் கூறினார். (யோவான் 7:16, 17; 8:47) நியாயமாகவே, ஒருவர் கடவுளுடைய ஆதரவைப் பெற வேண்டுமானால் கடவுள் தம்முடைய வார்த்தையில் என்ன சொல்லியிருக்கிறாரோ அதையே போதிக்க வேண்டும்; மனித ஞானத்தையும் பாரம்பரியத்தையும் சார்ந்த போதனைகளை தவிர்க்க வேண்டும்.—ஏசாயா 29:13; மத்தேயு 15:3-9; கொலோசெயர் 2:8.
8. வணக்கத்தில் கடவுளுடைய பெயரை பயன்படுத்துவது ஏன் முக்கியம்?
8 யெகோவா என்ற கடவுளுடைய பெயரை அவர்கள் பயன்படுத்துகிறார்கள், அறிவிக்கிறார்கள். ஏசாயா இவ்வாறு முன்னறிவித்தார்: “அக்காலத்திலே நீங்கள் பாடி: யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருநாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய திருச்செயல்களை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய திருநாமமே உயர்ந்ததென்று பிரஸ்தாபம் பண்ணுங்கள். யெகோவாவைத் துதித்துப்பாடுங்கள்; அவர் மகத்துவமானவைகளைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படுக.” (ஏசாயா 12:4, 5, தி.மொ.) தம் சீஷர்கள் இவ்வாறு ஜெபிக்கும்படி இயேசு கற்றுக்கொடுத்தார்: “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.” (மத்தேயு 6:9) ஆகவே, யூதராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும்சரி, கிறிஸ்தவர்கள் ‘[தேவனுடைய] நாமத்திற்கான ஒரு ஜனமாக’ சேவிக்க வேண்டியிருந்தது. (அப்போஸ்தலர் 15:14) ‘தமது நாமத்திற்கான ஒரு ஜனமாக’ இருப்பதில் பெருமிதம் அடைவோருக்கு துணைபுரிவதில் கடவுள் சந்தோஷப்படுகிறார்.
9. (அ) மகிழ்ச்சி மெய் மதத்தினரை வேறுபடுத்திக் காட்டுவதேன்? (ஆ) மெய் மதத்தையும் பொய் மதத்தையும் ஏசாயா எப்படி வேறுபடுத்திக் காட்டுகிறார்?
9 கடவுளுடைய மகிழ்ச்சியான குணத்தை அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். “நற்செய்தியின்” (NW) ஊற்றுமூலராகிய யெகோவா ‘நித்தியானந்த தேவன்.’ (1 தீமோத்தேயு 1:11) அப்படியானால், அவருடைய வணக்கத்தாரால் எப்படி சந்தோஷமில்லாமல் அல்லது எச்சமயத்திலும் நம்பிக்கையில்லாமல் இருக்க முடியும்? உண்மை கிறிஸ்தவர்கள் அபரிமிதமான ஆவிக்குரிய உணவை தவறாமல் உட்கொண்டு வருவதால் உலக பிரச்சினைகள், தனிப்பட்ட கஷ்டங்கள் மத்தியிலும் சந்தோஷத்தை காத்துக்கொள்கிறார்கள். இவர்களை பொய் மதத்தினரிடமிருந்து ஏசாயா வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்: “கர்த்தராகிய [“யெகோவாவாகிய,” NW] ஆண்டவர் சொல்லுகிறார்: “இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள். இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மனநோவினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள்.”—ஏசாயா 65:13, 14.
10. மெய் மதத்தினர் தாங்களாகவே அடிபட்டு தெரிந்துகொள்ளும் நிலையை எவ்வாறு தவிர்க்கிறார்கள்?
10 அவர்களுடைய நடத்தைக்கும் தீர்மானங்களுக்கும் பைபிள் நியமங்களே அடிப்படை. “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” என நீதிமொழிகள் புத்தகத்தின் எழுத்தாளர் நமக்கு அறிவுரை தருகிறார். (நீதிமொழிகள் 3:5, 6) கடவுளுடைய ஞானத்தை உதறித்தள்ளும் மனிதரின் முரண்படும் கோட்பாடுகளில் நம்பிக்கை வைப்பதற்கு பதிலாக அவருடைய வழிநடத்துதலை நாடுவோருக்கு அவர் துணைபுரிகிறார். ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை கடவுளுடைய வார்த்தைக்கு இசைய அமைக்க எந்தளவுக்கு மனமுள்ளவராக இருக்கிறாரோ அந்தளவுக்கு ஒரு விஷயத்தில் தானாகவே அடிபட்டு தெரிந்துகொள்ளும் நிலையைத் தவிர்ப்பார்.—சங்கீதம் 119:33; 1 கொரிந்தியர் 1:19-21.
11. (அ) மெய் மதத்தின் அங்கத்தினர்கள் ஏன் தங்களுக்குள் குருமார், பாமரர் என்ற பாகுபாட்டை ஏற்படுத்தக் கூடாது? (ஆ) கடவுளுடைய ஜனங்களை வழிநடத்துபவர்கள் மந்தைக்கு என்ன மாதிரியை வைக்கிறார்கள்?
11 அவர்கள் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையை போன்று ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள். இயேசு இந்த நியமத்தை இவ்வாறு விளக்கினார்: “நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.” (மத்தேயு 23:8-11) அகம்பாவம் பிடித்த குருவர்க்கம் உயர்ந்த பட்டப்பெயர்களை சூட்டிக்கொண்டு, பாமரர்களுக்கு மேலாக தங்களை உயர்த்திக்கொள்கிறது, ஆனால் சபையிலுள்ள சகோதரர்கள் இதுபோன்ற காரியங்களிலிருந்து தங்களை விலக்கிக்கொள்கிறார்கள். (யோபு 32:21, 22) கடவுளுடைய மந்தையை மேய்ப்பவர்கள் இவ்வாறு செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்: “கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு செய்யுங்கள்.” (1 பேதுரு 5:2, 3) மற்றவர்களின் விசுவாசத்திற்கு தங்களை அதிகாரிகளாக வைத்துக்கொள்வதை உண்மையான கிறிஸ்தவ மேய்ப்பர்கள் தவிர்க்கிறார்கள். கடவுளுடைய சேவையில் சக வேலையாட்களாக, தங்களால் இயன்ற வரை மற்றவர்களுக்கு மாதிரியாக இருக்கவே முயலுகிறார்கள்.—2 கொரிந்தியர் 1:24.
12. தம்முடைய ஆதரவை நாடுவோர் மனித அரசாங்கங்களைக் குறித்ததில் என்ன சமநிலையான நோக்குநிலையைக் கொண்டிருக்கும்படி கடவுள் எதிர்பார்க்கிறார்?
12 அவர்கள் மனித அரசாங்கங்களுக்கு கீழ்ப்படிகிறார்கள், அதேசமயம் நடுநிலை வகிக்கிறார்கள். “மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படி”யாதவர்கள் கடவுளுடைய ஆதரவை எதிர்பார்க்க முடியாது. ஏன்? ஏனென்றால், “உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்.” (ரோமர் 13:1, 2) இருந்தாலும், முரண்படும் கருத்துக்கள் ஏற்படலாம் என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆகவேதான் அவர் இவ்வாறு சொன்னார்: “இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்.” (மாற்கு 12:17) கடவுளுடைய ஆதரவை நாடுவோர் ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேட’ வேண்டும். அதேசமயத்தில் நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது, கடவுளுக்குரிய உயர்ந்த உத்தரவாதங்களுக்கு இசைவாகவும் இருக்க வேண்டும். (மத்தேயு 6:33; அப்போஸ்தலர் 5:29) இயேசு தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு சொல்கையில், நடுநிலைமையை வலியுறுத்திக் காட்டினார்: “நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.” அவர் பிற்பாடு இவ்வாறு கூறினார்: “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல.”—யோவான் 17:16; 18:36.
13. கடவுளுடைய மக்களை அடையாளம் கண்டுகொள்வதில் அன்பு என்ன பங்கை வகிக்கிறது?
13 ‘யாவருக்கும் நன்மையுண்டாக’ உழைப்பதில் அவர்கள் பாரபட்சமற்றவர்கள். (கலாத்தியர் 6:10, NW) கிறிஸ்தவ அன்பு பாரபட்சமற்றது; நிறம், கல்வி அல்லது பொருளாதார அந்தஸ்து, தேசம், மொழி என்ற பாகுபாடில்லாமல் அனைவரையும் ஏற்றுக்கொள்கிறது. அனைவருக்கும் விசேஷமாக விசுவாசத்தில் உள்ளவர்களுக்கு நன்மையுண்டாக உழைப்பது, கடவுளின் ஆதரவை பெற்றிருப்போரை அடையாளம் கண்டுகொள்ள உதவுகிறது. இயேசு இப்படி சொன்னார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.”—யோவான் 13:35; அப்போஸ்தலர் 10:34, 35.
14. கடவுளுடைய ஆதரவை பெற்றிருப்பவர்களை ஜனங்கள் ஏற்றுக்கொள்வார்களா? விளக்குங்கள்.
14 கடவுளுடைய சித்தத்தைச் செய்வதால் வரும் துன்புறுத்தலை சகிக்க அவர்கள் மனமுள்ளவர்கள். தம்முடைய சீஷர்களுக்கு இயேசு இந்த முன்னெச்சரிக்கையை கொடுத்தார்: “அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்.” (யோவான் 15:20; மத்தேயு 5:11, 12; 2 தீமோத்தேயு 3:12) விசுவாசத்தினாலே உலகை கண்டித்த நோவாவைப் போன்றே கடவுளுடைய ஆதரவைப் பெற்றவர்கள் எப்போதுமே பகைக்கப்பட்டிருக்கிறார்கள். (எபிரெயர் 11:7, NW) இன்றும், கடவுளுடைய ஆதரவைப் பெற விரும்புகிறவர்கள் துன்புறுத்துதலை தவிர்ப்பதற்காக கடவுளுடைய வார்த்தையின் மதிப்பைக் குறைக்கவோ அல்லது கடவுளுடைய நியமங்களை விட்டுக்கொடுக்கவோ மாட்டார்கள். கடவுளை உண்மையோடு சேவித்தால், ஜனங்கள் ‘ஆச்சரியப்பட்டு தூஷிப்பார்கள்’ என்பதை அவர்கள் அறிவர்.—1 பேதுரு 2:12; 3:16; 4:4.
உண்மைகளை சீர்தூக்கிப் பார்ப்பதற்குரிய சமயம்
15, 16. (அ) கடவுளுடைய ஆதரவை அனுபவிக்கும் மத வகுப்பாரை அடையாளம் கண்டுகொள்ள நமக்கு உதவும் கேள்விகள் என்ன? (ஆ) லட்சக்கணக்கானோர் என்ன முடிவுக்கு வந்துள்ளனர், ஏன்?
15 உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எந்த மதத் தொகுதி—அதன் போதனைகள் பெரும்பாலான மக்களின் நம்பிக்கைகளிலிருந்து வித்தியாசப்பட்டதாக இருந்தாலும்—கடவுளுடைய வார்த்தையை நெருங்க பின்பற்றுகிறது? யார் கடவுளுடைய தனிப்பட்ட பெயருக்கு முக்கியத்துவம் கொடுத்து, அப்பெயரால் தங்களை அடையாளம் காட்டுகிறார்கள்? கடவுளுடைய ராஜ்யமே மனிதரின் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே பரிகாரம் என்பதை யார் உறுதியான நம்பிக்கையோடு குறிப்பிடுகிறார்கள்? பழமைவாதிகள் என்ற பெயரெடுத்தாலும் பைபிளின் உயர்ந்த தராதரங்களை வாழ்க்கையில் பின்பற்றுகிறவர்கள் யார்? அதன் அங்கத்தினர்கள் அனைவருமே எந்தவித சம்பளமுமின்றி போதிக்கிறார்கள் என்று பெயரெடுத்த மதத் தொகுதி எது? அரசியலில் ஈடுபடாவிட்டாலும், சட்டங்களுக்குக் கீழ்ப்படியும் குடிமக்கள் என பெயர் பெற்றவர்கள் யார்? கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் கற்றுக்கொள்வதற்காக தங்களுடைய நேரத்தையும் பணத்தையும் மனமார செலவிடுபவர்கள் யார்? இந்த எல்லா காரியங்களிலும் பெயர் பெற்றவர்களாக இருந்தும், யார் இன்றுவரை பழிக்கும், கேலிக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகிறார்கள்?’
16 உலகம் முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கானோர் இந்த உண்மைகளை சீர்தூக்கிப்பார்த்து யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே மெய் மதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய மதத்தால் ஏற்பட்டிருக்கும் நன்மைகளின் அடிப்படையிலும், அவர்களுடைய போதனை மற்றும் நடத்தையின் அடிப்படையிலும் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள். (ஏசாயா 48:17) இவ்வாறு, சகரியா 8:23-ல் முன்னறிவிக்கப்பட்டிருக்கிற விதமாகவே “தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம்” என்று லட்சக்கணக்கானோர் சொல்கிறார்கள்.
17. யெகோவாவின் சாட்சிகளே மெய் மதத்தினர் என சொல்வது ஏன் அவர்களுடைய அகம்பாவத்தினால் அல்ல?
17 தங்களுக்கு மட்டுமே கடவுளுடைய ஆதரவு இருக்கிறது என அகம்பாவத்தினாலா யெகோவாவின் சாட்சிகள் கூறுகிறார்கள்? சொல்லப்போனால், எகிப்திய மதங்களுக்கு மத்தியில் வாழ்ந்தபோதிலும், இஸ்ரவேலர் தங்களுக்கு கடவுளுடைய ஆதரவு இருக்கிறது என எப்படிச் சொன்னார்களோ, அல்லது யூத மதத் தலைவர்களுக்கு அல்லாமல் தங்களுக்கே கடவுளுடைய ஆதரவு இருக்கிறது என முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எப்படிச் சொன்னார்களோ அப்படியே இவர்களும் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது சரியே என உண்மைகள் நிரூபிக்கின்றன. இந்த முடிவின் காலத்தில் தம்முடைய உண்மையுள்ள சீஷர்கள் என்ன வேலையை செய்வார்கள் என பின்வருமாறு இயேசு முன்னறிவித்தாரோ அந்த வேலையை 235 தேசங்களிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் செய்து வருகிறார்கள்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.”—மத்தேயு 24:14.
18, 19. (அ) யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிர்ப்பு வந்தாலும் அவர்கள் ஏன் பிரசங்க வேலையை நிறுத்த வேண்டியதில்லை? (ஆ) சாட்சிகளுக்கு கடவுள் பக்கபலமாக இருக்கிறார் என்பதை சங்கீதம் 41:11 எப்படி ஆதரிக்கிறது?
18 தங்களுடைய வேலைக்கு முட்டுக்கட்டையாக துன்புறுத்தலோ அல்லது எதிர்ப்போ வந்தாலும் யெகோவாவின் சாட்சிகள் இந்த வேலையை தொடர்ந்து செய்துவருவார்கள். யெகோவாவின் வேலையை கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டும், செய்து முடிக்கப்படும். கடந்த நூற்றாண்டில், யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய வேலையை செய்வதற்கு தடையாக மற்றவர்கள் எடுத்த எல்லா முயற்சிகளும் முடிவில் தோல்வியில்தான் விளைவடைந்தன. ஏனென்றால் யெகோவா இவ்வாறு வாக்குறுதி அளித்திருக்கிறார்: “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்திரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிற[து].”—ஏசாயா 54:17.
19 யெகோவாவின் சாட்சிகள் என்றுமில்லாத அளவுக்கு—உலகமே எதிர்த்து நிற்கிறபோதிலும்—அதிக பலத்தோடும் சுறுசுறுப்போடும் இருப்பதே அவர்கள் செய்யும் வேலைக்கு யெகோவாவின் பக்கபலம் இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது. தாவீது அரசன் இவ்வாறு பாடினார்: “என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்.” (சங்கீதம் 41:11; 56:9, 11) யெகோவாவின் ஜனங்களை சத்துருக்கள் ஒருபோதும் வெல்ல முடியாது. ஏனென்றால் அவர்களுடைய தலைவராகிய இயேசு கிறிஸ்து இறுதி வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்!
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• கடவுளுடைய ஆதரவை பெற்றவர்களைப் பற்றிய பூர்வகால உதாரணங்கள் சில யாவை?
• மெய் மதத்தை கண்டுகொள்ள உதவும் அடையாளங்கள் சில யாவை?
• யெகோவாவின் சாட்சிகளுக்கு கடவுளுடைய ஆதரவு இருக்கிறது என நீங்கள் ஏன் தனிப்பட்ட விதமாக உறுதியாக சொல்வீர்கள்?
[பக்கம் 13-ன் படம்]
கடவுளுடைய ஆதரவை விரும்புகிறவர்களின் போதனைகள் பைபிளின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்
[பக்கம் 15-ன் படம்]
கிறிஸ்தவ மூப்பர்கள் மந்தைக்கு மாதிரிகளாக திகழ்கிறார்கள்