நல்ல அக்கம்பக்கத்தார் ஒரு சொத்து
“தூரத்திலுள்ள சகோதரனிலும் சமீபத்திலுள்ள அயலகத்தாரே மேல்.”—நீதிமொழிகள் 27:10, NW.
பொது சகாப்தம் முதல் நூற்றாண்டில் ஒரு கல்விமான் இயேசுவிடம் வந்து, “என்னுடைய அயலகத்தார் யார்” என்று கேட்டார். அப்போது இயேசு அவனுடைய அயலகத்தார் யார் என்று நேரடியாக பதிலளிக்காமல் ஒருவனை எது உண்மையான அயலகத்தார் ஆக்குகிறது என்பதை சொன்னார். இயேசு சொன்ன இந்த உவமையை ஒருவேளை நீங்கள் நன்கு அறிந்திருக்கலாம். நல்ல சமாரியன் கதை என்று சொன்னதுமே பலருக்கு சட்டென்று தெரிந்துவிடும். இது லூக்கா சுவிசேஷத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படித்தான் இயேசு இந்தக் கதையைக் கூறினார்: “ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள். அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான். இப்படியிருக்க, கள்ளர் கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? [“அயலகத்தானாயிருந்தான்?” NW] உனக்கு எப்படித் தோன்றுகிறது.”—லூக்கா 10:29-36; NW.
அந்தக் கல்விமான் குறிப்பை புரிந்துகொண்டிருக்க வேண்டும். உடனடியாக, “அவனுக்கு இரக்கஞ் செய்தவனே” காயப்பட்டவனுக்கு அயலகத்தான் என சரியாக பதிலளித்தார். அதற்கு இயேசு “நீயும் போய் அந்தப்படியே செய் என்றார்.” (லூக்கா 10:37) உண்மையான அயலகத்தாராய் இருப்பது என்றால் என்ன என்பதை விளக்க எப்பேர்ப்பட்ட அருமையான உதாரணம்! இயேசுவின் நீதிக் கதை நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்ளும்படி தூண்டலாம்: ‘நான் எப்படிப்பட்ட அயலகத்தார்? என்னுடைய இனத்தை அல்லது தேசிய பின்னணியை சேர்ந்தவர்களையே அயலகத்தாராக கருதுகிறேனா? இப்படிப்பட்ட காரணங்கள், கஷ்டப்படுகிற எவருக்கும் உதவிசெய்ய வேண்டிய என் கடமையை கட்டுப்படுத்துகின்றனவா? ஒரு நல்ல அயலகத்தாராக இருக்க பிரத்தியேக முயற்சி எடுக்கிறேனா?’
எங்கே ஆரம்பிப்பது?
இந்த விஷயத்தில் முன்னேற நினைத்தால் முதலில் நம் மனப்பான்மையை மாற்றிக்கொள்வது அவசியம். ஒரு நல்ல அயலகத்தாராக இருப்பதிலேயே நம் கவனம் முழுவதும் இருக்க வேண்டும். அப்படி செய்தால் நமக்கு நல்ல அயலகத்தார் நிச்சயம் கிடைப்பார்கள். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இயேசு தம்முடைய பிரசித்திப் பெற்ற மலைப்பிரசங்கத்தில் மானிட உறவுகளில் நாம் பின்பற்ற வேண்டிய ஒரு முக்கிய நியமத்தை வலியுறுத்தினார். அவர் சொன்னதாவது: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” (மத்தேயு 7:12) மற்றவர்களை மரியாதையோடும் கண்ணியத்தோடும் தயவோடும் நடத்துவது, அவர்கள் உங்களையும் அதே விதமாக நடத்தும்படி தூண்டும்.
“அக்கம்பக்கத்தாரை நேசித்தல்” என்ற தலைப்பில் த நேஷன் சின்ஸ் 1865 என்ற பத்திரிகையின் ஆசிரியரும் எழுத்தாளருமான லிஸி ஃபண்டர்பர்க், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களோடு சிநேகத்தை வளர்த்துக்கொள்ள எளிய வழிகள் சிலவற்றை குறிப்பிட்டார். அவர் இவ்வாறு எழுதினார்: “அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் சின்ன சின்ன உபகாரங்களைச் செய்வதன் மூலம் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். . . . வாசலில் போடப்பட்டிருக்கும் செய்தித்தாளை எடுத்துக் கொடுப்பது, பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வது, கடைக்குப் போகையில் ஏதேனும் தேவைப்பட்டால் வாங்கிக் கொடுப்பது போன்றவற்றை செய்ய வேண்டும். பயத்தாலும் குற்றச்செயலாலும் மேலும்மேலும் நைந்துபோன சமுதாயத்தில் இந்த நெருக்கம் மிகவும் அவசியம்.” அவர் மேலும் இவ்வாறு கூறுகிறார்: “நீங்கள் எங்கேயாவது தொடங்கியே ஆக வேண்டும். எனவே பக்கத்து வீட்டுக்காரரிடமே ஆரம்பிக்கலாமே.”
அக்கம்பக்கத்தில் வாழ்பவர்கள் ஒருவருக்கொருவர் நல்ல மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள உதவும் விதத்தில் கனடியன் ஜியோகிராஃபிக் பத்திரிகையும் பயனுள்ள ஒரு குறிப்பைத் தந்தது. எழுத்தாளர் மார்னி ஜேக்ஸன் இவ்வாறு தன் கருத்தைத் தெரிவித்தார்: “நம் வாழ்க்கையில், குடும்ப அங்கத்தினர்களை நாமே விரும்பி தேர்ந்தெடுப்பதில்லை; அதே போலவேதான் அயலகத்தாரையும் எப்போதும் நாமே தேர்ந்தெடுப்பதில்லை. இவர்களிடம் சாதுரியமாகவும் பண்பட்டவர்களாகவும் பொறுத்துப் போகிறவர்களாகவும் நடந்துகொள்வது மிகவும் அவசியம்.”
நல்ல அயலகத்தார் —மனமுவந்து கொடுப்பவர்கள்
பக்கத்து வீட்டுக்காரரிடம் பேசுவது பலருக்கு தர்மசங்கடமான விஷயம் என்பது உண்மைதான். ஒட்டுறவின்றி ஒதுங்கி வாழ்வது அதைவிட சுலபமாக தோன்றலாம். ஆனால், ‘வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுப்பதிலே அதிக மகிழ்ச்சி’ என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 20:35, NW) ஆகவே நல்ல அயலகத்தாராக இருப்பவர் தன்னைச் சுற்றியுள்ள ஆட்களிடம் பேசி பழகுவதற்கு முயற்சி எடுப்பார். நெருங்கிய நட்புறவுகளை வளர்த்துக்கொள்ள விரும்பாவிட்டாலும், அவ்வப்போது அவரிடம் நாலு வார்த்தை பேசுவதற்கு முயற்சி எடுப்பார். சிநேகபான்மையான புன்முறுவலுடன் அல்லது வேறு ஏதாவது சைகையுடன் அதை ஆரம்பிக்கலாம்.
மேற்குறிப்பிடப்பட்டபடி, அக்கம்பக்கத்தார் ஒருவருக்கொருவர் செய்யும் ‘சின்ன சின்ன உபகாரங்கள்’தான் அயலகத்தார் நட்போடு பழகவும், அந்த நட்புறவைக் காக்கவும் உண்மையில் கைகொடுக்கும். ஆகவே உங்கள் அயலகத்தாருக்கு சின்ன சின்ன விஷயத்தில் எப்படி தயவு காட்டலாம் என்பதை எண்ணிப் பார்ப்பது நல்லது. இதனால் ஒற்றுமையும் பரஸ்பர மரியாதையும் பலப்படும். மேலும் அப்படிச் செய்தால், “நன்மை செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே” என்ற பைபிளின் புத்திமதியை நாம் பின்பற்றுவோம்.—நீதிமொழிகள் 3:27; யாக்கோபு 2:14-17.
நன்றியோடு பெற்றுக்கொள்பவர்களே நல்ல அயலகத்தார்
உதவியையும் பரிசுகளையும் பெறுகையில் எல்லாருமே நன்றியோடு ஏற்றுக்கொள்கிறார்கள் என்று சொல்ல முடிந்தால் நன்றாக இருக்கும். எப்போதுமே அது உண்மையல்ல என்பதே வேதனையான விஷயம். உதவிக்கரம் நீட்டும் சமயங்களிலும் நல்ல எண்ணத்தோடு பரிசுகள் கொடுக்கையிலும் சிலர் நன்றிகெட்டத்தனமாய் நடந்துகொள்கையில் ‘இதுவே கடைசி தடவை!’ என்று கொடுப்பவர் மனதில் நினைப்பார். சில சமயங்களில் உங்கள் அயலகத்தாரைப் பார்த்து புன்னகைத்து ‘ஹலோ’ சொன்னாலும் அல்லது கையசைத்தாலும் அவர் ஏதோ பெயருக்கு தலையாட்டிவிட்டு போகலாம்.
ஆனால் பலருடைய விஷயத்தில், மேலோட்டமாக பார்க்கையில் உதவி பெறுபவர் நன்றிகெட்டவரைப் போல் தோன்றினாலும் உண்மையில் அப்படியல்ல. ஒருவேளை அவருடைய கலாச்சார பின்னணியால் தயக்கம் காட்டலாம் அல்லது சங்கடமாக உணரலாம். இதனால் அவர் ஆர்வமில்லாதவரைப் போல் நடந்துகொள்ளலாம், நட்பற்ற விதத்தில் நடந்துகொள்வதாக நமக்கு தோன்றலாம். மறுபட்சத்தில், இந்த நன்றிகெட்ட உலகில், நீங்கள் நட்போடு பழகுவது சிலருக்கு வித்தியாசமாக படலாம், அவர்கள் உங்களை சந்தேக கண்ணோடு பார்க்கலாம். அப்படிப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெறுவது முதலாவது அவசியம். ஆகவே நட்பை வளர்க்க நேரமும் பொறுமையும் தேவை. ஆனால் மனமுவந்து கொடுப்பவர்களாகவும் நன்றியோடு பெற்றுக்கொள்பவர்களாகவும் இருக்கும் கலையை கற்றுக்கொள்ளும் அயலகத்தார், சமாதானமும் சந்தோஷமும் நிலவும் நட்பான சூழலை உருவாக்க முடியும்.
கஷ்ட காலத்தில்
கஷ்ட காலத்திலேயே முக்கியமாக ஒரு நல்ல அயலகத்தார் மதிப்புமிக்க சொத்தாக இருப்பார். துன்பம் வரும்போதுதான் அயலகத்தாரின் நட்புணர்வு எத்தகையது என்பது வெளிப்படுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் அக்கம்பக்கத்தார் செய்த தன்னலமற்ற சேவைகளைப் பற்றிய பதிவுகள் ஏராளம் ஏராளம். அனைவருக்கும் பொதுவாக சோக சம்பவங்கள் தாக்கும்போது யாரும் கேட்காமலே அயலகத்தார் ஒத்துழைத்து ஒருவருக்கொருவர் உதவ முன்வருகின்றனர். மனம் ஒத்துப்போகாதவர்கள்கூட பெரும்பாலும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்கின்றனர்.
உதாரணமாக, 1999-ல் துருக்கியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் பரம எதிரிகளாக இருந்தவர்களும் ஒற்றுமையை வெளிக்காட்டினர். “துருக்கியர்களை வெறுத்து ஒதுக்கும்படி எங்களுக்கு பல காலமாக கற்றுக்கொடுக்கப்பட்டது” என்று கிரேக்க எழுத்தாளர் அனா ஸ்டாரீயூ என்பவர் ஆதன்ஸ் செய்தித்தாள் ஒன்றில் எழுதினார். “ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட மிகுந்த வேதனை எங்களுக்கு சந்தோஷத்தைத் தரவில்லை. செத்துக்கிடந்த சின்னஞ்சிறுசுகளைப் பார்த்தபோது நாங்கள் வருத்தப்பட்டு, வாய்விட்டு கதறினோம், ஜென்ம பகையெல்லாம் போன இடமே தெரியவில்லை.” மீட்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்ட போதிலும், கிரேக்க மீட்புப் பணி குழுவினர் இடிபாடுகளில் சிக்கி தவிப்பவர்களை விடாமல் தேடிக்கொண்டே இருந்தார்கள்.
பேரழிவுகளுக்குப் பின் மீட்புப் பணியில் ஈடுபடுவது அயலகத்தார் செய்யும் மிக உன்னதமும் வீரதீரமுமான அன்பின் செயல். அப்படியிருக்க, பேராபத்துக்கு முன் அயலகத்தாரின் உயிரைக் காப்பாற்ற அவர்களை எச்சரிப்பது அதைவிட அதிக மதிப்பு வாய்ந்த அன்பின் செயல். வரப்போகும் பேராபத்துக்களைக் குறித்து அயலகத்தாரை எச்சரிப்பவர்கள் பெரும்பாலும் வரவேற்கப்படுவதில்லை என்பதே வரலாறு காட்டும் வருந்தத்தக்க உண்மை. அதற்கு காரணம் என்னவென்றால், எச்சரிக்கை கொடுக்கும்போது வரப்போகும் பேராபத்தின் அறிகுறிகள் தெள்ளத் தெளிவாக தென்படுவதில்லை. எச்சரிப்பவர்களை மக்கள் பெரும்பாலும் சந்தேகிக்கின்றனர். ஆபத்தான சூழ்நிலையில் இருப்பதை அறியாதவர்களுக்கு உதவ முயலுகிறவருடைய பங்கில் விடாமுயற்சியும் சுயதியாகமும் அவசியம்.
அயலகத்தாருக்குச் செய்யக்கூடிய மிகப் பெரிய உதவி
இயற்கை சேதத்தைவிட பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் சம்பவத்தை இன்று மனிதகுலம் சந்திக்க உள்ளது. அது சர்வ வல்லமையுள்ள கடவுள் நடப்பிக்கப் போவதாக முன்னறிவிக்கப்பட்டுள்ள செயலாகும். அப்போது பூமியிலிருந்து குற்றச்செயலும் அக்கிரமமும் அதோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் ஒழித்துக்கட்டப்படும். (வெளிப்படுத்துதல் 16:16; 21:3, 4) மிக முக்கியமான இந்தச் சம்பவம் ஒருவேளை நடக்கலாம் என நினைக்க வேண்டாம், இது நிச்சயம் நடக்கும்! உலகை உலுக்கப்போகும் இந்த சம்பவத்திலிருந்து தப்பிப்பிழைக்க உதவும் அறிவை எத்தனை பேரிடம் பகிர்ந்துகொள்ள முடியுமோ அத்தனை பேரிடம் பகிர்ந்து கொள்ள யெகோவாவின் சாட்சிகள் ஆவலாக இருக்கின்றனர். இதனால் உலகெங்கும் அவர்கள் விடாமுயற்சியோடு பிரசங்க வேலையை செய்துவருகின்றனர்; இது யாவரும் அறிந்ததே. (மத்தேயு 24:14) கடவுளையும் அயலகத்தாரையும் நேசிப்பதால் இதை அவர்கள் மனப்பூர்வமாக செய்கின்றனர்.
ஆகவே சாட்சிகள் உங்களை வீட்டிலோ அல்லது வேறு இடத்திலோ சந்தித்துப் பேச விரும்பினால் தப்பெண்ணத்தினால் அல்லது எரிச்சலினால் அவர்கள் சொல்வதைக் கேட்க தவறிவிடாதீர்கள். அவர்கள் நல்ல அயலகத்தாராக இருக்க முயற்சி செய்பவர்கள். ஆகவே பைபிளை அவர்களோடு சேர்ந்து படிப்பதற்கு அவர்கள் விடுக்கும் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். அயலகத்தார் அனைவரும் சமாதானத்தோடு சேர்ந்து வாழும் காலம் வெகு விரைவில் வரும் என்ற உறுதியை கடவுளுடைய வார்த்தை எப்படி அளிக்கிறது என்பதை கற்றறியுங்கள். அப்போது, நாம் அனைவரும் உண்மையில் விரும்பும் சுமுகமான உறவுகளுக்கு முட்டுக்கட்டையாய் இருக்கும் இன, மத, வகுப்பு வேறுபாடுகள் இனியும் இல்லாமல் போகும்.
[பக்கம் 6, 7-ன் படங்கள்]
உங்களுடைய அக்கம்பக்கத்தாருக்கு தயவான செயல்களை செய்வது நல்லது
[படத்திற்கான நன்றி]
உலகம்: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.