ஏழைகள் பரம ஏழைகளாகிறார்கள்
“சமுதாயத்தின் அங்கத்தினர்களில் பெரும்பாலோர் ஏழைகளாகவும் நொடிந்து போனவர்களாகவும் இருந்தால் எந்த சமுதாயமும் நிச்சயம் செழித்தோங்கவும் முடியாது, சந்தோஷமாக இருக்கவும் முடியாது.”
இவ்வாறுதான் பொருளாதார வல்லுநர் ஆடம் ஸ்மித் 18-ம் நூற்றாண்டில் அறிக்கையிட்டார். அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையென்று இன்றைக்கும்கூட அநேகர் உறுதியாக நம்புகின்றனர். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இன்னும் பட்டவர்த்தனமாக தெரிகிறது. பிலிப்பைன்ஸ் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒவ்வொரு நாளும் ஒரு (ஐ.மா.) டாலருக்கும் குறைந்த பணத்திலேயே வயிற்றைக் கழுவுகிறார்கள். ஆனால் பணக்கார நாடுகளில் இருப்பவர்களோ இந்த ஒரு டாலரை பெரும்பாலும் சில நிமிஷத்தில் சம்பாதித்துவிடுகிறார்கள். “உலக மக்கள் தொகையில், பரம ஏழைகளாக இருக்கும் 5% மக்களின் வருமானத்தைவிட பெரும் பணக்காரர்களாக இருக்கும் 5% மக்களின் வருமானம் 114 தடவை அதிகம்” என ஐக்கிய நாடுகளின் மனித மேம்பாட்டு அறிக்கை 2002 (ஆங்கிலம்) கூறுகிறது.
சிலர் பெரிய பங்களாக்களில் வாழ்ந்தாலும் லட்சோப லட்சம் பேர் புறம்போக்கில்தான் வாழ்கிறார்கள்; எங்கே இடம் கிடைக்கிறதோ அங்கே ஒரு குடிசையோ குச்சிலோ போட்டுக் கொள்கிறார்கள். மற்றவர்களுக்கோ அதுவும் கிடையாது; தெருவில்தான் குடியிருக்கிறார்கள், ஏதாவது அட்டையோ பாலிதீன் பேப்பரோதான் அவர்களுடைய தரை விரிப்பு. குப்பைக் கூளங்களில் பொறுக்குவது, பார வண்டிகளை இழுப்பது என இப்படி அநேகர் ஏதாவதொரு வழியில் சம்பாதித்து தங்களுடைய வயிற்றுப் பாட்டை போக்குகிறார்கள்.
வறியோர்க்கும் வசதியுடையோர்க்கும் இடையே உள்ள இந்தப் பாகுபாடு வளர்ந்துவரும் நாடுகளுக்கு மட்டுமே உரியதல்ல. உலக வங்கி இவ்வாறு கூறுகிறது: “‘குடிசைவாழ் பகுதிகள்’ எல்லா நாடுகளிலும் சகஜமாக காணப்படுகின்றன.” வங்காள தேசம் முதல் ஐக்கிய மாகாணங்கள் வரை, சிலர் எவ்வளவுதான் செல்வச் செழிப்பாக இருந்தாலும், வாய்க்கும் கைக்கும் போராடிக் கொண்டிருப்பவர்கள் அல்லது தலைக்கு மேலே இரண்டு ஓலைகூட போட முடியாமல் கஷ்டப்படுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஐக்கிய மாகாணங்களில் செல்வந்தருக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள பிளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது என 2001 ஐ.மா. கணக்கெடுப்புக் குழு சுட்டிக் காண்பித்த அறிக்கையை த நியூ யார்க் டைம்ஸ் மேற்கோள் காட்டியது. அது இவ்வாறு குறிப்பிட்டது: “கடந்த வருடம், ஐ.மா.-வில் மிகவும் செல்வச் செழிப்பாக இருந்த மக்கள் தொகையில் இருபது சதவீதத்தினர், மற்ற எல்லாருடைய ஒட்டுமொத்த வருமானத்தில் 50 சதவீத வருமானத்தை பெற்றனர். ஏழைகளில் இருபது சதவீதத்தினரோ 3.5 சதவீத வருமானத்தையே பெற்றனர்.” எண்ணற்ற மற்ற நாடுகளிலும் இதே சூழ்நிலைமைதான், ஏன் அதைவிட மோசமாகத்தான் இருக்கிறது. உலக ஜனத்தொகையில் சுமார் 57 சதவீதத்தினர் ஒரு நாளுக்கு இரண்டு டாலருக்கும் குறைவான பணத்தை வைத்தே பிழைப்பு நடத்துகிறார்கள் என உலக வங்கி அறிக்கை காட்டியது.
இதைவிட கொடுமை என்னவென்றால், 2002-ல், சந்தேகத்திற்குரிய விதத்தில் சொத்து சேர்த்த அதிகாரிகளைப் பற்றிய அறிக்கையைக் கேட்டு லட்சக்கணக்கானோர் அதிர்ச்சியடைந்தனர். எந்தவொரு சட்டவிரோதமான செயலிலும் நேரடியாக ஈடுபடாவிட்டாலும்கூட, இந்த அதிகாரிகள் “அளவுக்கு மீறியும் அசாதாரணமான விதத்திலும் தீய வழியிலும் சொத்து சேர்த்தார்கள்” என அநேகர் உணர்ந்ததாக ஃபார்ச்சூன் என்ற பத்திரிகை குறிப்பிட்டது. ஏகப்பட்ட ஜனங்கள் வறுமையில் உழலும்போது, தனிநபர்கள் சிலர் திடீரென கோடீஸ்வரர்கள் ஆவது எந்த விதத்தில் நியாயம் என சிலர் கேட்கின்றனர்.
வறுமை என்றாவது ஒழியுமா?
இதனால், வறுமையில் வாடும் மக்களுடைய கஷ்டத்தைப் போக்குவதற்கு யாரும் எந்த முயற்சியும் செய்யவில்லை என அர்த்தமாகாது. நல்லெண்ணம் படைத்த அரசாங்க அதிகாரிகளும் உதவிக்கரம் நீட்டும் நிறுவனங்களும் மாற்றத்தை ஏற்படுத்த நிச்சயமாகவே புதுப் புதுத் திட்டங்களை பரிந்துரைத்திருக்கின்றனர். இருந்தாலும், உண்மைகள் நம்மை சோர்வடையவே செய்கின்றன. நிலைமையை முன்னேற்றுவிக்க சிறந்த முயற்சிகள் பல எடுக்கப்பட்டபோதிலும், “10, 20 ஆண்டுகளுக்கு முன்பு, அல்லது சில நாடுகளின் விஷயத்தில், 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட அநேக நாடுகள் இன்னும் ஏழ்மையை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கின்றன” என மனித மேம்பாட்டு அறிக்கை 2002 கூறுகிறது.
அப்படியானால், ஏழைகள் எந்த நம்பிக்கையுமின்றி நிர்க்கதியாக இருக்க வேண்டியதுதானா? இப்பொழுதே பயன்தரும் நடைமுறை ஞானத்தையும், நீங்கள் நினைத்துப் பார்த்திராத தீர்வுகள் சிலவற்றையும் தெரிந்துகொள்ள அடுத்த கட்டுரையை வாசிக்கும்படி உங்களை அழைக்கிறோம்.