ஆன்மீகமும் உங்கள் ஆரோக்கியமும்
உங்களது உடல் ஆரோக்கியத்தை கவனிப்பதற்காகவே பெரும்பாலான நேரத்தை நீங்கள் ஒருவேளை செலவழித்து வரலாம். ஒவ்வொரு நாளும் எட்டு மணிநேரத்தை தூங்குவதில் செலவழிக்கலாம். பல மணிநேரத்தை சமைப்பதிலும் சாப்பிடுவதிலும் செலவழிக்கலாம். பிழைப்புக்காக எட்டு அல்லது அதற்கு அதிகமான மணிநேரத்தை செலவழிக்கலாம். உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், ஒருவேளை டாக்டரை பார்ப்பதற்கோ கைவைத்தியம் பார்ப்பதற்கோ நேரத்தையும் பணத்தையும் செலவழிக்கலாம். வீட்டை சுத்தம் செய்ய, குளிக்க, உடற்பயிற்சி செய்ய என நேரத்தை செலவழிக்கலாம்—எல்லாம் நல்ல ஆரோக்கியத்திற்காகத்தான்.
ஆனால், நல்ல ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்வதற்கு உங்களுடைய சரீர தேவைகளைக் கவனித்தால் மட்டும் போதாது. உங்களுடைய நலனில் முக்கிய பங்கு வகிக்கும் வேறொன்றும் இருக்கிறது. உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கும் ஆன்மீக ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது, அதாவது உங்கள் ஆன்மீகத்தை பொறுத்தே உங்கள் உடல் ஆரோக்கியம் இருக்கிறது என்பதை மருத்துவ ஆராய்ச்சி காண்பித்திருக்கிறது.
ஒரு நேரடித் தொடர்பு
“ஆன்மீகத்தில் அதிகமாய் ஈடுபடுவதற்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதை நேர்முக ஆராய்ச்சி காண்பித்திருக்கிறது” என ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்பர்ன் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் ஹெட்லி ஜி. பீச் கூறுகிறார். இந்தக் கண்டுபிடிப்புகளைப் பற்றி சொல்லும்போது த மெடிக்கல் ஜர்னல் ஆஃப் ஆஸ்ட்ரேலியா (MJA) இவ்வாறு குறிப்பிடுகிறது: “இரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து, பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு ஆகியவை குறைவாக இருப்பதற்கும் மதப்பற்றுக்கும் தொடர்பு இருக்கிறது.”
இது போலவே, ஐக்கிய மாகாணங்களில் வசிக்கும் 6,545 பேரை வைத்து 2002-ல் பர்கிலியிலுள்ள யுனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா (UC) நடத்திய ஓர் ஆராய்ச்சியும் கண்டுபிடித்தது. “ஆன்மீக கூட்டங்களில் எப்பொழுதாவது கலந்து கொண்டவர்களுடைய அல்லது ஒருபோதும் கலந்துகொள்ளாதவர்களுடைய இறப்பு விகிதத்தைவிட வாரத்திற்கு ஒருமுறை ஆன்மீக கூட்டங்களில் கலந்து கொண்டவர்களுடைய இறப்பு விகிதம் குறைவாக இருந்தது.” இந்த ஆராய்ச்சியின் தலைமை ஆசிரியரும் UC பர்க்லி சுகாதார பள்ளி விரிவுரையாளருமான டக் ஓமன் இவ்வாறு கூறினார்: “சமூக தொடர்புகள், புகைபிடித்தலும் உடற்பயிற்சியும் உட்பட்ட சுகாதார நடத்தைகள் போன்ற அம்சங்களை கவனத்தில் எடுத்துக்கொண்ட போதிலும்கூட, இந்த வித்தியாசத்தை நாங்கள் கண்டுபிடித்தோம்.”
வாழ்க்கையில் ஆன்மீக சிந்தையுடையவர்களுக்கு கிடைக்கும் மற்ற நன்மைகளை சுட்டிக்காட்டி, MJA இவ்வாறு கூறுகிறது: “திருமண பந்தம் அதிக ஸ்திரமாக இருப்பது, மதுபானத்தையும் போதைப் பொருட்களையும் குறைவாக பயன்படுத்துவது, தற்கொலை விகிதம் குறைவாக இருப்பது, அதோடு தற்கொலையைப் பற்றி எதிர்மறையான மனப்பான்மைகள், குறைவான கவலை, குறைவான மனச்சோர்வு, சுயநலமின்மை ஆகியவை ஆன்மீக சிந்தையுடைய மக்களிடம் காணப்படுவதாக ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் கண்டுபிடித்திருக்கின்றன.” மேலும், BMJ (முன்னாள் த பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்) இவ்வாறு அறிக்கை செய்கிறது: “ஆன்மீக நம்பிக்கையற்றவர்களைவிட பலமான ஆன்மீக நம்பிக்கையுடையவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்கள் இறந்தபின் ஏற்படும் துக்கத்தை அதிக வேகமாகவும் முழுமையாகவும் போக்கிவிடுவதாக தெரிகிறது.”
உண்மையான ஆன்மீகம் எது என்பதைக் குறித்ததில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. என்றாலும், உங்களுடைய ஆன்மீக நிலை உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் மீது நிச்சயமாகவே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சுமார் 2,000 வருடங்களுக்கு முன்னர் இயேசு கிறிஸ்து சொன்ன கூற்றுடன் இந்த அத்தாட்சி ஒத்திருக்கிறது. அவர் இவ்வாறு கூறினார்: “ஆன்மீக தேவையைப் பற்றிய உணர்வுடையவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்.” (மத்தேயு 5:3, NW) உங்களுடைய ஆன்மீக நிலை உங்களுடைய ஆரோக்கியத்தையும் சந்தோஷத்தையும் பாதிப்பதால், இவ்வாறு கேட்டுக்கொள்வது நியாயமானதே: ‘நம்பகமான ஆன்மீக வழிநடத்துதலை நான் எங்கே கண்டடைய முடியும்? ஆன்மீக சிந்தையுடைய நபராக இருப்பது என்றால் என்ன?’