இளைஞர்களே, எதிர்காலத்திற்காக திட்டமிடுகிறீர்களா?
“உங்களைப் பற்றிய என் எண்ணங்களை நன்கு அறிவேன்; உங்களுக்கு வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் சமாதானத்தின் எண்ணங்கள் அவை, துன்பத்தின் எண்ணங்கள் அல்ல.”—எரேமியா 29:11, NW.
1, 2. இளமைக் காலத்தை வித்தியாசமான எந்தெந்த கோணங்களிலிருந்து பார்க்க முடியும்?
இளமைக் காலத்தை ஒரு பொன்னான காலம் என பெரியோர் பலர் கருதுகிறார்கள். தங்கள் வாலிப வயதில், தங்களுக்கிருந்த இளமைத் துடிப்பையும் துள்ளலையும் ஞாபகப்படுத்திப் பார்க்கிறார்கள். பெரிய பொறுப்புகள் ஏதுமின்றி சுதந்திரப் பறவைகளாய் பறந்து திரிந்த அக்காலத்தை, குதியும் கும்மாளமும் போட்ட அக்காலத்தை, எதிர்காலத்திற்கான மாபெரும் வாய்ப்புகள் தங்கள் முன் குவிந்து கிடந்த அக்காலத்தை அவர்கள் ஆசை ஆசையாக நினைத்துப் பார்க்கிறார்கள்.
2 இளைஞர்களான உங்களுக்கு வாலிபத்தைப் பற்றி வேறு விதமான அபிப்பிராயம் இருக்கலாம். பருவ வயதில் உணர்ச்சியிலும் உடலிலும் ஏற்படுகிற மாற்றங்களை சமாளிப்பதில் உங்களுக்கு பிரச்சினைகள் இருக்கலாம். பள்ளியில், நண்பர்களின் தாங்க முடியாத தொல்லையை அனுபவித்து வரலாம். போதைப் பொருள், குடி, ஒழுக்கக்கேடு ஆகியவற்றில் சிக்கிக்கொள்ளாதிருக்க கடுமையாக போராடிக் கொண்டிருக்கலாம். அதோடு, உங்களில் பலர் நடுநிலை வகிப்பு, விசுவாசம் போன்ற பல விஷயங்களில் விவாதங்களைக்கூட எதிர்ப்பட்டு வரலாம். ஆம், இளமைக் காலம் இம்சைகள் நிறைந்த காலமாக இருக்கலாம். என்றாலும், ஏராளமான வாய்ப்புகள் குவிந்து கிடக்கிற காலமாகவே அது இருக்கிறது. இப்போது கேள்வி என்னவென்றால், அந்த வாய்ப்புகளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள்?
இளமையை அனுபவியுங்கள்
3. இளைஞர்களுக்கு என்ன ஆலோசனையையும் எச்சரிப்பையும் சாலொமோன் அளித்தார்?
3 இளமைப் பருவம் சிட்டாய் பறந்துவிடும் என பெரியவர்கள் உங்களிடம் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள், அவர்கள் சொல்வது சரிதான். கொஞ்ச வருடத்திற்குள், உங்கள் இளமைப் பருவத்தை கடந்துவிடுவீர்கள். ஆகையால் இப்போதே உங்கள் இளமையை சந்தோஷமாக அனுபவியுங்கள்! சாலொமோன் ராஜாவுடைய ஆலோசனையும் அதுதான், அவர் எழுதியதாவது: “வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட.” ஆனாலும், அவர் பின்வருமாறு எச்சரித்தார்: “நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு.” அவர் மேலும் சொன்னதாவது: “இளவயதும் வாலிபமும் மாயையே.”—பிரசங்கி 11:9, 10.
4, 5. இளைஞர்கள் எதிர்காலத்திற்காக திட்டமிடுவது ஏன் ஞானமான செயல்? உதாரணத்துடன் விளக்கவும்.
4 சாலொமோன் சொன்னதன் அர்த்தம் உங்களுக்கு பிடிபடுகிறதா? இதை ஓர் உதாரணத்துடன் விளக்கலாம்: ஒரு இளைஞனுக்கு ஒருவேளை சொத்தில் ஒரு பாகம் பெரும் பரிசாக கிடைக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். அதை வைத்து அவன் என்ன செய்யலாம்? ஜாலியாக இருப்பதற்கு அத்தனை பணத்தையும் அவன் மனம்போல் செலவழிக்கலாம்—இயேசு சொன்ன உவமையிலுள்ள ஊதாரி மகனைப் போல. (லூக்கா 15:11-23) ஆனால், கையிலுள்ள காசெல்லாம் கரைந்த பின் அவன் எப்படி உணருவான்? புத்தியில்லாமல் இப்படி நடந்துகொண்டேனே என நினைத்து நிச்சயமாக வருத்தப்படுவான்! மறுபட்சத்தில், தன்னுடைய எதிர்காலத்திற்கு பயன்படுகிற விதத்தில் அந்தப் பரிசின் பெரும்பகுதியை அவன் ஞானமாக எதிலாவது முதலீடு செய்திருந்தான் என வைத்துக்கொள்ளுங்கள். பல வருடங்கள் கழித்து, அந்த முதலீட்டிலிருந்து அவன் நன்மை பெறும்போது எப்படி உணருவான்? தன் இளமைப் பருவத்தை ஜாலியாக அனுபவிக்க அந்தப் பணத்தை செலவிடாமல் போனதை எண்ணி வருத்தப்படுவான் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, வருத்தப்படவே மாட்டான்!
5 உங்களுடைய வாலிப வருடங்களை கடவுளிடமிருந்து வந்துள்ள ஒரு பரிசாக நினைத்துக் கொள்ளுங்கள்; உண்மையிலேயே அவை கடவுள் தந்த பரிசுதான். அந்தப் பரிசை நீங்கள் எவ்வாறு உபயோகிக்கப் போகிறீர்கள்? எதிர்காலத்தைப் பற்றி துளியும் யோசிக்காமல், சுகபோக வாழ்க்கையிலேயே மூழ்கிப்போய் உங்கள் இளமைத் துடிப்பையும், துள்ளலையும் ஒட்டுமொத்தமாக நீங்கள் வீணாக்கிவிடலாம். அப்படி செய்வீர்களென்றால், உங்கள் விஷயத்தில் “இளவயதும் வாலிபமும்” நிச்சயமாக “மாயை” என்றே நிரூபணமாகிவிடும். அதற்கு பதிலாக, எதிர்காலத்திற்கு திட்டமிட உங்கள் இளமைக் காலத்தை நன்கு பிரயோஜனப்படுத்திக் கொள்வது எவ்வளவோ மேல் அல்லவா?
6. (அ) சாலொமோனின் எந்த அறிவுரை இளைஞர்களுக்கு வழிநடத்துதலை கொடுக்கிறது? (ஆ) இளைஞர்களுக்கு எதை அளிக்க யெகோவா விரும்புகிறார், அதிலிருந்து ஓர் இளைஞன் எவ்வாறு நன்மையடைய முடியும்?
6 உங்கள் இளமைப் பருவத்தை மிகச் சிறந்த விதத்தில் பிரயோஜனப்படுத்திக் கொள்ள உதவும் ஒரு நியமத்தை சாலொமோன் குறிப்பிட்டார். “நீ உன் வாலிபப் பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை” என அவர் சொன்னார். (பிரசங்கி 12:1) ஆம், யெகோவாவுக்கு செவிகொடுங்கள், அவருடைய சித்தத்தை செய்யுங்கள், இதுவே வெற்றியின் இரகசியம். யெகோவா பூர்வ இஸ்ரவேலருக்கு தாம் செய்ய விரும்பியதைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “உங்களைப் பற்றிய என் எண்ணங்களை நன்கு அறிவேன்; உங்களுக்கு வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் சமாதானத்தின் எண்ணங்கள் அவை, துன்பத்தின் எண்ணங்கள் அல்ல.” (எரேமியா 29:11, NW) உங்களுக்கும்கூட யெகோவா “வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும்” அளிக்க விரும்புகிறார். உங்கள் செயல்களிலும், சிந்தனைகளிலும், தீர்மானங்களிலும் அவரை நினைத்துக் கொண்டீர்களென்றால், வாக்குறுதி அளிக்கப்பட்ட அந்த வளமான எதிர்காலத்தையும், நம்பிக்கையையும் நீங்களும் அனுபவிக்கலாம்.—வெளிப்படுத்துதல் 7:16, 17; 21:3, 4.
“கடவுளிடம் நெருங்கி வாருங்கள்”
7, 8. ஓர் இளைஞன் எவ்வாறு கடவுளிடம் நெருங்கிச் செல்ல முடியும்?
7 “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவரும் உங்களிடம் நெருங்கி வருவார்” என யாக்கோபு நம்மை ஊக்கப்படுத்தியபோது, யெகோவாவை நாம் நினைத்துக்கொள்ள வேண்டும் என்றே உற்சாகப்படுத்தினார். (யாக்கோபு 4:8, NW) யெகோவாவே சிருஷ்டிகர், பரலோகப் பேரரசர், அனைவரது வணக்கத்திற்கும் துதிக்கும் தகுதியானவர். (வெளிப்படுத்துதல் 4:11) இருந்தபோதிலும், நாம் அவரிடம் நெருங்கிச் சென்றால், அவர் நம்மிடம் நெருங்கி வருவார். அவருடைய அந்த அன்பான அக்கறை உங்கள் இதயத்திற்கு இதமளிக்கவில்லையா?—மத்தேயு 22:37.
8 யெகோவாவிடம் நாம் பல வழிகளில் நெருங்கிச் செல்கிறோம். உதாரணத்திற்கு, “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்” என அப்போஸ்தலன் பவுல் சொல்கிறார். (கொலோசெயர் 4:2) வேறு வார்த்தைகளில் சொன்னால், ஜெபம் செய்வதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் அப்பா அல்லது சபையிலுள்ள சக கிறிஸ்தவர் ஒருவர் உங்கள் சார்பில் ஜெபம் செய்து முடித்த பிறகு ஆமென் சொல்லிவிடுவதோடு கடமை முடிந்ததென இருந்து விடாதீர்கள். யெகோவாவிடம் உங்கள் இருதயத்திலுள்ளவற்றை எப்போதாவது ஊற்றியிருக்கிறீர்களா, அவரிடம் உங்கள் யோசனைகள், உங்கள் பயங்கள், உங்கள் சவால்கள் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறீர்களா? யாரிடமும் சொல்லக் கூச்சப்படும் விஷயங்களை என்றைக்காவது யெகோவாவிடம் மனந்திறந்து பேசியிருக்கிறீர்களா? ஒளிவுமறைவில்லாமல், மனப்பூர்வமாய் செய்யப்படும் ஜெபங்கள் மன சமாதானத்தைத் தரும். (பிலிப்பியர் 4:6, 7) அத்தகைய ஜெபங்கள் நாம் யெகோவாவிடம் நெருங்கிச் செல்ல உதவும், அதோடு அவர் நம்மிடம் நெருங்கி வருவதை உணரும்படியும் செய்யும்.
9. ஓர் இளைஞன் எவ்வாறு யெகோவாவுக்கு செவிகொடுக்க முடியும்?
9 யெகோவாவிடம் நெருங்கிச் செல்வதற்கு மற்றொரு வழி ஆவியால் ஏவப்பட்ட பின்வரும் வார்த்தைகளில் காணப்படுகிறது: “உன் அந்திய காலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக் கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.” (நீதிமொழிகள் 19:20) ஆம், நீங்கள் யெகோவாவுக்கு செவிகொடுத்து, அவருக்கு கீழ்ப்படியும்போது, எதிர்காலத்திற்காக நன்கு திட்டமிடுகிறீர்கள் என்று அர்த்தம். யெகோவாவுக்கு செவிசாய்ப்பதை நீங்கள் எவ்வாறு வெளிக்காட்டலாம்? உண்மைதான், நீங்கள் தவறாமல் சபைக் கூட்டங்களுக்கு செல்கிறீர்கள், அங்கு சொல்லப்படும் விஷயங்களையும் கவனித்துக் கேட்கிறீர்கள், அதில் சந்தேகமே இல்லை. அதுமட்டுமா, குடும்பப் படிப்பில் கலந்துகொள்வதன் மூலம் உங்கள் ‘தகப்பனையும் தாயையும் கனப்படுத்துகிறீர்கள்.’ (எபேசியர் 6:1, 3; எபிரெயர் 10:24, 25) அதற்காக உங்களுக்கு சபாஷ் சொல்ல வேண்டும். ஆனால், கூட்டங்களுக்கு முன்கூட்டியே தயாரிப்பதற்கும், தவறாமல் பைபிள் வாசிப்பதற்கும், ஆராய்ச்சி செய்து படிப்பதற்கும் நீங்கள் ‘காலத்தை பிரயோஜனப்படுத்திக் கொள்கிறீர்களா’? ‘ஞானமுள்ளவர்கள்’ போல நடப்பதற்கு படிக்கும் காரியங்களையெல்லாம் பின்பற்ற நீங்கள் முயற்சி எடுக்கிறீர்களா? (எபேசியர் 5:15-17; சங்கீதம் 1:1-3) அவ்வாறு செய்தால், நீங்கள் யெகோவாவிடம் நெருங்கிச் செல்கிறீர்கள் என்று அர்த்தம்.
10, 11. இளைஞர்கள் யெகோவாவுக்கு செவிகொடுக்கும்போது, மாபெரும் என்ன நன்மைகள் கிடைக்கின்றன?
10 கடவுளால் ஏவப்பட்ட எழுத்தாளர் நீதிமொழிகள் புத்தகத்தின் ஆரம்ப வார்த்தைகளில், அந்தப் புத்தகத்தின் நோக்கம் என்ன என்பதை விளக்குகிறார். “இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து, விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப் பற்றிய உபதேசத்தை அடையலாம்; இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும்” என சொல்கிறார். (நீதிமொழிகள் 1:1-4) எனவே, நீதிமொழிகள் புத்தகத்தில் உள்ளவற்றை மட்டுமல்ல, முழு பைபிளில் உள்ளவற்றையும் வாசித்து, அவற்றை கடைப்பிடிக்கும்போது நீங்கள் நீதியையும் நேர்மையையும் வளர்த்துக் கொள்வீர்கள்; நீங்கள் அவரிடம் நெருங்கி வருவதைப் பார்த்து யெகோவாவும் சந்தோஷமடைவார். (சங்கீதம் 15:1-5) எந்தளவுக்கு நியாயத்தன்மையையும், சாமர்த்தியத்தையும், அறிவையும், சிந்திக்கும் திறமையையும் வளர்த்துக் கொள்கிறீர்களோ அந்தளவுக்கு நீங்கள் நல்ல தீர்மானங்களை எடுப்பீர்கள்.
11 ஓர் இளைஞன் இவ்வாறு ஞானமாக நடந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்ப்பது நியாயமற்றதா? இல்லை, ஏனென்றால் அநேக இளம் கிறிஸ்தவர்கள் அவ்வாறு ஞானமாய் நடக்கிறார்கள். இதன் காரணமாக, மற்றவர்கள் அவர்களை மதிக்கிறார்கள், அதோடு ‘இளைஞராக இருப்பதால் யாரும் அவர்களை மட்டமாக நினைப்பதில்லை.’ (1 தீமோத்தேயு 4:12, NW) நியாயமாகவே, அவர்களது பெற்றோர் அவர்களைக் குறித்து பெருமைப்படுகிறார்கள்; அதுமட்டுமல்ல, தம்முடைய இருதயத்தை அவர்கள் சந்தோஷப்படுத்துவதாக யெகோவாதாமே சொல்கிறார். (நீதிமொழிகள் 27:11) அவர்கள் இளைஞர்களாக இருந்தாலும், கடவுளால் ஏவப்பட்ட பின்வரும் வார்த்தைகள் அவர்களுக்கும் பொருந்துகின்றன என்பதில் அவர்கள் உறுதியோடிருக்கலாம்: “நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு [“எதிர்காலம்,” NW] சமாதானம்.”—சங்கீதம் 37:37.
நல்ல தெரிவுகளை செய்யுங்கள்
12. இளைஞர்கள் என்ன முக்கியமான ஒரு தெரிவை செய்கிறார்கள், அந்தத் தெரிவு ஏன் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும்?
12 இளமைக் காலம் தெரிவுகள் பல செய்வதற்கான காலம்; அத்தகைய தெரிவுகளில் சில நிரந்தர பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. நீங்கள் இப்போது செய்யும் சில தெரிவுகள் உங்கள் எதிர்காலத்தையே பாதிக்கலாம். ஞானமுள்ள தெரிவுகள் சந்தோஷமான, வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழி செய்யும். ஞானமற்ற தெரிவுகள் நம் முழு வாழ்க்கையையுமே பாழாக்கிவிடக்கூடும். நீங்கள் செய்ய வேண்டிய இரண்டு தெரிவுகளில் அது எவ்வளவு உண்மை என்பதை பாருங்கள். முதலாவது: யாருடன் சகவாசம் வைக்க நீங்கள் தெரிவு செய்கிறீர்கள்? அது ஏன் முக்கியமானது? கடவுளால் ஏவப்பட்ட நீதிமொழி இவ்வாறு சொல்கிறது: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” (நீதிமொழிகள் 13:20) வேறு வார்த்தைகளில் சொன்னால், நாம் யாருடன் சகவாசம் வைத்துக் கொள்கிறோமோ அவர்களைப் போலவே ஆகிவிடுவோம்; ஆம், ஒன்று ஞானமுள்ளவர்களாக ஆவோம், இல்லாவிட்டால் மூடர்களாக ஆவோம். நீங்கள் எப்படிப்பட்டவராய் ஆக விரும்புவீர்கள்?
13, 14. (அ) ஜனங்களுடன் நேரடியாக சகவாசம் வைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், வேறு எவ்வாறும்கூட சகவாசம் வைத்துக்கொள்ள முடியும்? (ஆ) இளைஞர்கள் என்ன தவறு செய்வதை தவிர்க்க வேண்டும்?
13 சகவாசம் என்றதுமே, ஜனங்களோடு சகவாசம் வைத்துக்கொள்வது ஒருவேளை உங்கள் நினைவுக்கு வரும். அது சரிதான், ஆனால் அதுமட்டுமே சகவாசம் அல்ல, அதில் இன்னும் அதிகம் உட்பட்டிருக்கிறது. நீங்கள் டிவி நிகழ்ச்சி ஒன்றை காணும்போதோ, மியூஸிக்கை கேட்கும்போதோ, ஒரு நாவலை படிக்கும்போதோ, ஒரு சினிமாவை பார்க்கும்போதோ, அல்லது இன்டர்நெட்டில் சில விஷயங்களை அலசும்போதோ சகவாசம் வைத்துக் கொள்கிறீர்கள். அத்தகைய சகவாசம், வன்முறையையும் ஒழுக்கக்கேட்டையும் விரும்பும் மனச்சாய்வுக்கு தீனி போடுவதாக அல்லது போதை மருந்துகளையும் குடியையும் ‘ருசிக்கும்படி’ ஊக்குவிப்பதாக, அல்லது பைபிள் நியமங்களுக்கு முரணான வேறு ஏதோவொரு காரியத்தில் ஈடுபட வைப்பதாக இருந்தால், நீங்கள் ‘மதிகெட்டவனோடு’—யெகோவா என்ற ஒருவர் இல்லவே இல்லை என்பது போல நடந்துகொள்கிற மதிகெட்டவனோடு—சகவாசம் வைத்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.—சங்கீதம் 14:1.
14 கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்வதாலும், சபைக் காரியங்களில் சுறுசுறுப்பாக ஈடுபடுவதாலும் ஒருவேளை நீங்கள் இவ்வாறு நினைக்கலாம்: ‘எப்படிப்பட்ட வன்முறைப் படத்தைப் பார்த்தாலும் சரி, நல்ல டியூனையுடைய ஆனால், இழிவான வார்த்தைகள் நிறைந்த மியூஸிக்கை கேட்டாலும் சரி, அவை என்னை கொஞ்சமும் பாதிக்காது.’ அதே போல, இன்டர்நெட்டிலுள்ள ஒரு வெப் சைட்டுக்கு சென்று ஆபாசக் காட்சிகளை மடமடவென பார்ப்பதில் அப்படியென்ன கெடுதி ஏற்பட்டு விடப்போகிறது என்றுகூட ஒருவேளை நினைக்கலாம். நீங்கள் நினைப்பது தவறு என அப்போஸ்தலன் பவுலே உங்களிடம் சொல்கிறார். “ஆகாத சம்பாஷணைகள் [“சகவாசங்கள்,” NW] நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்” என்று அவர் கூறுகிறார். (1 கொரிந்தியர் 15:33) வருத்தகரமாக, திறமைமிக்க இளம் கிறிஸ்தவர்களில் அநேகர் ஞானமற்ற சகவாசத்தினால் தங்களுடைய நல்ல பழக்கவழக்கங்களை கெடுத்திருக்கிறார்கள். ஆகையால், அத்தகைய கெட்ட சகவாசங்களை அறவே விட்டு விலகியிருக்க தீர்மானமாயிருங்கள். அப்படி செய்தீர்களென்றால், அப்போஸ்தலன் பவுலுடைய ஆலோசனைக்கு செவிசாய்க்கிறீர்கள் என்று அர்த்தம்; அவர் சொன்னதாவது: “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.”—ரோமர் 12:2.
15. இளைஞர்கள் செய்ய வேண்டிய இரண்டாவது தெரிவு என்ன, இந்த விஷயத்தில் என்ன அழுத்தங்களை அவர்கள் எதிர்ப்படுகிறார்கள்?
15 உங்களுக்கு முன் இருக்கும் இரண்டாவது தெரிவு இதோ: பள்ளிப் படிப்பை முடித்ததும் என்ன செய்வதென்று தீர்மானிக்க வேண்டியிருக்கும். வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ள ஒரு நாட்டில் வசிக்கிறீர்களென்றால், அங்கு கிடைக்கும் அருமையான ஒரு வேலையில் எப்படியும் சேர்ந்துவிட வேண்டுமென்ற உந்துதல் உங்களுக்கு ஏற்படலாம். ஒரு பணக்கார நாட்டில் வசிக்கிறீர்களென்றால், அங்கு ஏகப்பட்ட வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கலாம், அவற்றில் சில மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கலாம். பாதுகாப்பான, ஏன் கைநிறைய சம்பளம்கூட கிடைக்கும் ஒரு வேலையில் சேரும்படி உங்கள் டீச்சர்களோ உங்கள் பெற்றோர்களோ நல்லெண்ணத்தோடு உங்களை வற்புறுத்தலாம். என்றாலும், அப்படிப்பட்ட ஒரு வேலைக்காக நீங்கள் பயிற்சி பெறும்போது யெகோவாவுக்கு நீங்கள் செலவிடும் நேரம் ரொம்பவே குறைந்துவிடக்கூடும்.
16, 17. வேலையை தெரிந்தெடுப்பதில் சமநிலையோடு இருப்பதற்கு வெவ்வேறு வசனங்கள் ஓர் இளைஞருக்கு எப்படி உதவலாம் என்பதை விளக்கவும்.
16 ஒரு தீர்மானம் எடுப்பதற்கு முன் மறக்காமல் அது பற்றி பைபிள் என்ன சொல்கிறதென்று கவனியுங்கள். அன்றாட வாழ்க்கைக்காக வேலை செய்யும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது, இவ்வாறு நம் தேவைகளை நாமே கவனித்துக்கொள்ள வேண்டுமென அது சொல்கிறது. (2 தெசலோனிக்கேயர் 3:10-12) இருந்தபோதிலும், ஒரு வேலையை தெரிவு செய்வதில் வேறு விஷயங்களும் உட்பட்டுள்ளன. பின்வரும் வசனங்களை வாசித்து, ஓர் இளைஞர் வேலையை தெரிந்தெடுப்பதில் சமநிலையோடு இருப்பதற்கு அவை எப்படி உதவுகின்றன என்பதை சிந்தித்துப் பார்க்கும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறோம்: நீதிமொழிகள் 30:8, 9; பிரசங்கி 7:11, 12; மத்தேயு 6:33; 1 கொரிந்தியர் 7:31; 1 தீமோத்தேயு 6:9, 10. இவ்வசனங்களை வாசித்ததும், வேலை சம்பந்தப்பட்டதில் யெகோவாவின் நோக்குநிலை என்ன என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா?
17 யெகோவாவின் சேவைக்கு நாம் தரும் இடத்தை உலகப்பிரகாரமான வேலை எடுத்துக்கொள்ளக் கூடாது. உயர்நிலைப் பள்ளிப் படிப்புக்குப் பின் போதுமான சம்பளம் கிடைக்கிற வேலையை உங்களால் பெற முடியுமென்றால், அது நல்லது. உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததும், கூடுதலான பயிற்சி ஏதாவது உங்களுக்கு தேவைப்படுமானால், அது உங்கள் பெற்றோரோடு கலந்துபேச வேண்டிய ஒரு விஷயம். என்றாலும், ‘அதிமுக்கியமான காரியங்களை’ மறந்துவிடாதீர்கள்—ஆம், ஆவிக்குரிய காரியங்களை மறந்துவிடாதீர்கள். (பிலிப்பியர் 1:9, 10, NW) எரேமியாவின் செயலரான பாருக் செய்த அதே தவறை நீங்களும் செய்துவிடாதீர்கள். அவர் தன்னுடைய ஊழிய சிலாக்கியத்தைப் போற்றத் தவறினார், ‘தனக்கென பெரிய காரியங்களைத் தேட’ ஆரம்பித்தார். (எரேமியா 45:5) யெகோவாவிடம் நெருங்கிச் செல்வதற்கு இவ்வுலகத்திலுள்ள எந்தப் ‘பெரிய காரியமும்’ தனக்கு உதவாது என்பதையும், எருசலேமின் அழிவிலிருந்து தன்னை காப்பாற்றாது என்பதையும் அவர் ஒரு கணம் மறந்து விட்டிருந்தார். இன்று நமக்கும் அது பொருந்தும்.
ஆவிக்குரிய காரியங்களுக்கு மதிப்பு கொடுங்கள்
18, 19. (அ) உங்கள் அக்கம்பக்கத்தில் உள்ள பெரும்பாலோர் எதனால் அவதிப்படுகிறார்கள், அவர்களைப் பற்றி நீங்கள் எப்படி உணர வேண்டும்? (ஆ) அநேகருக்கு ஏன் ஆவிக்குரிய பசி எடுப்பதில்லை?
18 பஞ்சத்தால் பீடிக்கப்பட்ட நாடுகளிலுள்ள குழந்தைகளின் படங்களை நீங்கள் மீடியாவில் பார்த்திருக்கிறீர்களா? அப்படி பார்த்திருந்தீர்கள் என்றால், கண்டிப்பாக உங்கள் நெஞ்சம் உருகியிருக்கும். உங்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களைப் பார்க்கும்போதும் உங்களுக்கு அதே போல மனம் உருகுகிறதா? ஆனால் எதற்காக அவர்களைப் பார்த்து மனம் உருக வேண்டும்? ஏனென்றால், அவர்களிலும் பெரும்பாலோர் பட்டினியில் வாடிக்கிடக்கிறார்கள். ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைத்த அந்தப் பஞ்சத்தினால் அவர்கள் அவதிப்படுகிறார்கள்: “நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.”—ஆமோஸ் 8:11.
19 உண்மைதான், அந்த ஆவிக்குரிய பஞ்சத்தில் அடிபட்டுக் கிடக்கிறவர்களில் பெரும்பாலோர் ‘தங்கள் ஆவிக்குரிய தேவைகளை உணராதிருக்கிறார்கள்.’ (மத்தேயு 5:3, NW) அநேகருக்கு ஆன்மீகப் பசியே இருப்பதில்லை. இன்னும் சிலரோ தாங்கள் நன்கு சாப்பிட்டு திருப்தியாய் இருப்பதாகக்கூட உணரக்கூடும். அப்படி அவர்கள் உணர்ந்தால், அவர்கள் ஒன்றுக்கும் உதவாத ‘உலகத்தின் ஞானத்தை’ புசிப்பதே அதற்கு காரணம்; அந்த ஞானமானது பொருளாசையையும், விஞ்ஞான கணிப்புகளையும், நல்லொழுக்கத்தைப் பற்றிய சொந்த அபிப்பிராயங்களையும், அது போன்ற வேறு பல காரியங்களையும் உள்ளடக்குகிறது. நவீன “ஞானம்” பைபிள் போதனைகளை பழம்பாணியாக ஆக்கிவிடுகிறதென சிலர் நினைக்கிறார்கள். ஆனால், “உலகமானது சுய ஞானத்தினாலே தேவனை அறியாதிருக்”கிறது. இந்த உலகத்தின் ஞானம் கடவுளிடம் நெருங்கிச் செல்ல உங்களுக்கு உதவாது. அது கடவுளுடைய கண்களில் ‘பைத்தியக்காரத்தனமாகவே’ இருக்கிறது.—1 கொரிந்தியர் 1:20, 21; 3:19.
20. யெகோவாவை வணங்காத ஜனங்களை பின்பற்ற நினைப்பது ஏன் விவேகமானதல்ல?
20 பசியில் வாடும் பிள்ளைகளின் படங்களைப் பார்க்கும்போது, அவர்களைப் போல இருக்க வேண்டுமென்று விரும்புவீர்களா? நிச்சயமாக இல்லை! என்றாலும், கிறிஸ்தவ குடும்பங்களிலுள்ள சில இளைஞர்கள், தங்களை சுற்றிலுமுள்ள ஆவிக்குரிய பஞ்சத்தில் பீடிக்கப்பட்டவர்களைப் போல இருக்கவே விரும்புகிறார்கள். உலகப்பிரகாரமான வாலிபர்கள் சுதந்திரப் பறவைகளாய் ஜாலியாக தங்கள் வாழ்க்கையை அனுபவிக்கிறார்களென அப்படிப்பட்ட கிறிஸ்தவ இளைஞர்கள் நினைக்கிறார்கள் போலும். ஆனால் இந்த உலக வாலிபர்கள் யெகோவாவை விட்டு வெகு தூரத்திலிருப்பதை அவர்கள் மறந்துவிட்டிருக்கிறார்கள். (எபேசியர் 4:17, 18) ஆவிக்குரிய பஞ்சத்தின் மோசமான பாதிப்புகளைக்கூட அவர்கள் மறந்துவிட்டிருக்கிறார்கள். அத்தகைய கெட்ட பாதிப்புகளில் சில: பருவ வயதில் தேவையற்ற கருத்தரித்தல், புகைபிடித்தல், போதை மருந்து துஷ்பிரயோகம் செய்தல், குடிவெறி, ஒழுக்கக்கேடு ஆகியவற்றால் உடலாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்படுதல் போன்றவை ஆகும். ஆவிக்குரிய பஞ்சம் ஏற்படும்போது, கலக மனப்பான்மையும் விரக்தியும் கூடவே தொற்றிக்கொண்டு விடுகின்றன, அதோடு வாழ்க்கையில் குறிக்கோளே இல்லாமல் போய்விடுகிறது.
21. யெகோவாவை வணங்காதவர்களின் தவறான மனப்பாங்குகளைப் பின்பற்றாதபடி நம்மை நாமே எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம்?
21 ஆகையால், நீங்கள் பள்ளியிலிருக்கும்போது, யெகோவாவின் வணக்கத்தாராக இல்லாதவர்களுடைய மனப்பான்மை உங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள். (2 கொரிந்தியர் 4:17, 18) சிலர் ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து ஏளனமாக பேசுவார்கள். அதுமட்டுமல்ல, ஒழுக்கக்கேடாக நடப்பதும், குடித்து வெறிப்பதும், கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதும் இயல்பானதே என்பதாக மீடியாவும் சூட்சுமமாக பிரச்சாரம் செய்யும். அத்தகைய செல்வாக்கிற்கு எதிராக போராடுங்கள். “விசுவாசமும் நல்மனச்சாட்சியும்” உள்ள ஜனங்களோடு தவறாமல் கூட்டுறவு கொள்ளுங்கள். “கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும்” இருங்கள். (1 தீமோத்தேயு 1:18; 1 கொரிந்தியர் 15:58) ராஜ்ய மன்றத்திலும், வெளி ஊழியத்திலும் மும்முரமாக ஈடுபடுங்கள். பள்ளியில் படிக்கும் காலத்தில், அவ்வப்போது துணைப் பயனியர் ஊழியம் செய்யுங்கள். உங்களுடைய ஆவிக்குரிய நோக்குநிலைக்கு இவ்விதத்தில் வலுவூட்டுங்கள்; இப்படி செய்வீர்களென்றால் ஒருபோதும் தடுமாறி விழ மாட்டீர்கள்.—2 தீமோத்தேயு 4:5.
22, 23. (அ) கிறிஸ்தவ இளைஞர் மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாத தீர்மானங்களை ஏன் பொதுவாக எடுக்கிறார்கள்? (ஆ) இளைஞர்கள் என்ன செய்ய உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்?
22 ஆவிக்குரிய நோக்குநிலையில் நீங்கள் எடுக்கும் தீர்மானங்களை ஒருவேளை மற்றவர்கள் புரிந்துகொள்ளாதிருக்கலாம். உதாரணத்திற்கு, கிறிஸ்தவ இளைஞன் ஒருவன் இசையமைப்பதில் கெட்டிக்காரன், அதுமட்டுமல்ல தன் பள்ளிப் பாடங்களில் எல்லாவற்றிலுமே அவன் முதல் மாணவனாகவும் திகழ்ந்தான். தன் பள்ளிப் படிப்பை முடித்ததும், தன் அப்பாவோடுகூட ஜன்னல்களை சுத்தம் செய்கிற வேலையில் சேர்ந்தான்; காரணம்? முழுநேர ஊழியத்தை அதாவது பயனியர் சேவையைத் தன் வாழ்க்கைப் பணியாக ஏற்பதற்கு அது வசதியாக இருக்கும் என்பதால் அந்த வேலையை தெரிந்தெடுத்தான். அவன் எடுத்த அந்தத் தீர்மானத்தை அவனுடைய டீச்சர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை; ஆனால் நீங்கள் யெகோவாவிடம் நெருங்கி வந்திருந்தால் அதற்கான காரணத்தை புரிந்திருப்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம்.
23 இளமைப் பருவத்தின் பொன்னான வளங்களை எப்படி உபயோகிப்பது என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்கையில், ‘நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்வதற்காக வருங்காலத்திற்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக சேர்த்து வையுங்கள்.’ (1 தீமோத்தேயு 6:19) உங்கள் இளமைப் பருவத்தில் மட்டுமல்ல, வாழ்க்கை பூராவும் ‘உங்கள் சிருஷ்டிகரை நினைத்துக்கொள்ள’ தீர்மானமாயிருங்கள். வெற்றிகரமான எதிர்காலத்திற்கு—முடிவற்ற ஓர் எதிர்காலத்திற்கு—நன்கு திட்டமிட அதுதான் ஒரே வழி.
உங்கள் முடிவு என்ன?
• எதிர்காலத்திற்காக திட்டமிடுவதற்கு கடவுளால் ஏவப்பட்ட எந்த ஆலோசனை இளைஞர்களுக்கு உதவுகிறது?
• ஓர் இளைஞன் ‘கடவுளிடம் நெருங்கிச் செல்வதற்கான’ சில வழிகள் யாவை?
• ஓர் இளைஞன் தன் எதிர்காலத்தை பாதிக்கிற என்ன சில தீர்மானங்களை செய்கிறான்?
[பக்கம் 15-ன் படங்கள்]
தனிப்பட்ட நாட்டங்கள் உங்கள் இளமைத் துடிப்பையும் துள்ளலையும் உறிஞ்சுவதற்கு அனுமதித்து விடுவீர்களா?
[பக்கம் 16, 17-ன் படம்]
ஞானமுள்ள இளம் கிறிஸ்தவர்கள் தங்கள் ஆவிக்குரிய பார்வையை தெளிவாக வைக்கிறார்கள்