உங்கள் எதிர்காலம் எதன் கட்டுப்பாட்டில்?
“எதிர்காலத்தை கட்டுப்படுத்தும் திறமையைப் பொறுத்தவரை, மிருகங்களைவிட மனிதர்கள் ஒன்றும் மேலானவர்கள் அல்ல” என்பதாக பரிணாமவாதி ஜான் க்ரே எழுதுகிறார். ஆனால் ஒரு மாறுபட்ட கருத்தை, ஒரு புத்திசாலி மனிதனின் யூத மத வழிகாட்டி என்ற ஆங்கில நூலில் ஆசிரியர் ஷ்ம்யூலி போட்டியாக் குறிப்பிடுகிறார். அதாவது, “மனிதன் ஒரு மிருகமல்ல. ஆகையால், அவனுடைய எதிர்காலம் எப்போதும் அவனுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது” என்கிறார்.
எனினும், ஜான் க்ரே சொல்வதை அநேகர் ஒத்துக்கொள்கிறார்கள். வெல்ல முடியாத இயற்கை சக்திகள் மனிதரின் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்துவதாக அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் மற்றவர்களோ, தன் எதிர்காலத்தைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் திறனோடுதான் மனிதன் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறான் என்பதாக நினைக்கிறார்கள்.
இன்னும் சிலர், வலிமை மிகுந்த மனித சக்திகள் தங்கள் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்துவதாக நினைக்கிறார்கள். எழுத்தாளர் ராய் வெதர்ஃபோர்ட் சொன்னபடி, “உலகத்திலிருக்கும் பெரும்பாலோருக்கு, அதிலும் முக்கியமாக, அநேக பெண்களுக்கு . . . தங்களுடைய வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பே இல்லை. மற்றவர்கள் அவர்களை ஒடுக்குவதும் சுரண்டிப் பிழைப்பதும் தான் இதற்கான காரணங்கள் என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.” (நியதிவாத கோட்பாட்டின் உட்கருத்துகள் [ஆங்கிலம்]) போட்டா போட்டிபோடும் அரசியலாலும் இராணுவ சக்திகளாலும் தங்கள் எதிர்கால கனவுகள் எல்லாம் கலைந்து போனதை அநேகர் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள்.
இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் தங்கள் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்துவதாக நினைத்ததால், அநேகர் நிர்க்கதியாக நிற்பதாய் காலங்காலமாக உணர்ந்திருக்கிறார்கள். “எதிர்கால நம்பிக்கை என்பதெல்லாம் வீண், ஏனெனில் விதியை வெல்ல மனிதனால் முடியவே முடியாது என்று பூர்வ கிரேக்கர்கள் உறுதியாக நம்பினார்கள்” என போட்டியாக் கூறுகிறார். குருட்டாம்போக்கில் முடிவெடுக்கும் தேவதைகளால் ஒவ்வொரு மனிதனுடைய விதியும் தீர்மானிக்கப்படுவதாக அவர்கள் நினைத்தார்கள். ஒருவர் எப்போது மரிப்பார் என்பதை மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் அவர் என்னென்ன வேதனைகளையும் துன்பங்களையும் அனுபவிப்பார் என்பதையும்கூட அத்தேவதைகள் தீர்மானித்ததாக அவர்கள் நம்பினார்கள்.
மனிதனுடைய எதிர்காலம் அவனையும் மீறிய ஒரு சக்தியால் கட்டுப்படுத்தப்படுகிறது என்ற நம்பிக்கை இன்று எங்கும் காணப்படுகிறது. உதாரணமாக, அநேக மக்கள் ஊழ்வினையை அல்லது விதியை நம்புகிறார்கள். அதாவது, எல்லாருடைய செயல்களின் முடிவையும், ஒருவர் சாகப் போகும் நேரத்தையும்கூட கடவுள் முன்தீர்மானித்து விட்டார் என்பதாக அவர்கள் சொல்கிறார்கள். சர்வ வல்லமையுள்ள கடவுள், “ஒரு மனிதன் கடைசியில் இரட்சிக்கப்படுவானா, தண்டிக்கப்படுவானா என்பதை முன்குறித்துவிட்டார்” என்ற கருத்தை முன்விதிக்கப்படுதல் கோட்பாடு பரப்புகிறது. கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொள்ளும் அநேகரும்கூட இக்கோட்பாட்டை ஆதரிக்கிறார்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்கு அப்பாற்பட்ட சக்திகளால் உங்கள் எதிர்காலம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு விட்டதா? “சில நேரங்களில் மனிதர்களே தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் எஜமானர்களாக இருக்கின்றனர்” என்று எழுதிய ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளில் ஏதேனும் உண்மை உள்ளதா? இவ்விஷயத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள்.