நம் எதிர்காலம் தலையெழுத்துப்படியா?
கிறிஸ்தவரோ முஸ்லிமோ யூதரோ இந்துவோ, அல்லது வேறொரு மதத்தவரோ—எல்லாருமே வாழ்வில் அவலநிகழ்ச்சியை அனுபவிக்கின்றனர், அதைக் குறித்து துயரப்படுகின்றனர்.
உதாரணமாக, 1997 டிசம்பர் 6-ம் தேதி, இர்குட்ஸ்க் என்ற சைபீரிய நகரத்தில் ஒரு பயங்கர அவலநிகழ்ச்சி ஏற்பட்டது. பிரமாண்டமான AN-124 சரக்கு-விமானம் அப்பொழுதுதான் உயரே பறக்க ஆரம்பித்திருக்கும்; அந்த நேரம் பார்த்து அதன் இரண்டு என்ஜின்களுமே உயிரிழந்துவிட்டன. முழுவதும் எரிபொருள் ஏற்றப்பட்டிருந்த அந்த விமானம், ஒரு குடியிருப்பு கட்டிடத்தின்மீது இடிபோல் விழுந்தது. அக்கினி ஜூவாலைகள் அங்கிருந்த அநேக வீடுகளை சுற்றி வளைத்துக்கொண்டன; இச்சம்பவம், சூதுவாதற்ற பிள்ளைகள் உட்பட, நிராதரவான அநேக குடியிருப்பாளர்களுக்கு மரணத்தையும் காயத்தையும் ஏற்படுத்தியது.
இந்த விபத்து நடந்த சைபீரிய பகுதியில், ஒருவேளை மாறுபட்ட மதக் கருத்துடையோர் வசிக்கலாம். சிலர் கிறிஸ்தவத்தில் நம்பிக்கை வைத்திருக்கலாம், ஆனால் இந்த அவலத்திற்கு காரணம் விதியின் விளையாட்டுத்தான் என அவர்கள் இன்னமும் நினைக்கலாம். ‘இது ஆண்டவருடைய சித்தம், கொல்லப்பட்டவங்க இந்த விதத்தில் சாகாமல் இருந்திருந்தால், வேறொரு விதத்தில் செத்திருப்பாங்க—அது அவரவர் விதி’ என அவர்களும் மற்றவர்களும் உணரலாம்.
இப்படிப்பட்ட எண்ணம், வாய்விட்டு புலம்பினதாக இருந்தாலும்சரி மனசுக்குள்ளாகவே பொருமினதாக இருந்தாலும்சரி, உலகம் முழுவதிலுமுள்ள பல மதங்களில் பொதுவாக காணப்படும் ஒரு கருத்தையே பிரதிபலிக்கிறது—அதுதான் விதி. நம்முடைய பிறப்பு முதல் இறப்பு வரை, நம் எதிர்காலம் ஏதோவொரு வகையில் முன்னரே எழுதப்பட்டுவிட்டது என பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர்.
விதியில் நம்பிக்கை பல்வேறு விதங்களில் விவரிக்கப்படுகிறது, எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒன்றை வரையறுப்பது கடினமே. அடிப்படையில் பார்க்கப்போனால், விதி என்பது நடக்கிற எல்லா விஷயமும் எல்லா செயலும் எல்லா சம்பவமும்—நன்மையாக இருந்தாலும்சரி தீமையாக இருந்தாலும்சரி—தவிர்க்க முடியாதது; மனுஷனுடைய கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட மேலான ஒரு சக்தியால் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருப்பதால், நடப்பது நடந்தே தீரும் என்ற கருத்தைக் கொடுக்கிறது. இத்தகைய கருத்தை சோதிடத்திலும், இந்து மற்றும் புத்தமத கர்மாவிலும், கிறிஸ்தவமண்டலத்தின் முன்விதிக்கப்படுதல் கோட்பாட்டிலும் காணலாம். எழுதப்பட்ட ஏட்டின் மூலம் விதியையும் எதிர்காலத்தையும் கடவுட்கள் கட்டுப்படுத்தினர் என பூர்வ பாபிலோனியர் நம்பினர். இந்த “விதியின் எழுத்துருப் பலகைகளை” கட்டுப்படுத்தும் எந்தவொரு கடவுளும், மனிதர்கள், ராஜ்யங்கள், ஏன் கடவுட்களுடைய விதியையும்கூட தீர்மானிக்க முடியும் என நம்பப்பட்டது.
மனிதர்கள் ஆணாகவோ பெண்ணாகவோ, செல்வந்தராகவோ ஏழையாகவோ, துயரப்படுவோராகவோ சந்தோஷமுள்ளோராகவோ எப்படி இருக்கப்போகிறவரானாலும் சரி, அவர்களுடைய ஆயுசுகாலம் உட்பட, பிறக்கும் முன்னமே அவர்களுக்கு நேரிடும் அனைத்தையும் தெய்வீக ஆணையின் மூலம் இறைவன் தீர்மானிக்கிறார் என பல மதத்தினர் நம்புகின்றனர். இவை அனைத்தும் இறைவனின் மனதிலோ அல்லது சம்பவம் நடக்குமுன்னே ஒரு ஏட்டில் எழுதப்பட்டோ இருக்கிறது என சொல்லப்படுகிறது. இதனால் ஒரு மதவாதி துன்பம் வரும்போது “மெக்டூப்”—அதாவது விதிக்கப்பட்டுவிட்டது—என்று சொல்வது சர்வசாதாரணம்!
இன்னும் என்னவென்றால், கடவுள் முன்னரே எல்லாவற்றையும் அறிந்திருப்பதால், அவருக்கு யார் கீழ்ப்படிவார், யார் கீழ்ப்படியமாட்டார் என்பதையும்கூட அவர்தான் தீர்மானிக்க வேண்டும் என நியாயவிவாதம் செய்யப்படுகிறது. ஒரு நபர் பிறப்பதற்கு முன்பாகவே, பரதீஸில் நித்திய பேரின்பத்திற்கு விதிக்கப்பட்டிருக்கிறாரா அல்லது நித்திய அழிவை அடைவாரா என்பதை கடவுள் ஏற்கெனவே தீர்மானித்துவிட்டார் என இறைப்பற்றுள்ளோர் அநேகர் நம்புகின்றனர்.
கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் சிலவற்றில் கற்பிக்கப்படும் முன்விதிக்கப்படுதல் என்ற கோட்பாட்டைப் போலவே இது தொனிப்பதாக நீங்கள் உணரலாம். 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு சீர்திருத்தவாதி ஜான் கால்வின் என்பவரே முன்விதிக்கப்படுதல் கோட்பாட்டின் முதன்மை புராட்டஸ்டண்ட் ஆதரவாளர். முன்விதிக்கப்படுதலை “தேவனுடைய நித்திய ஆணை, அதன்மூலம் ஒவ்வொரு மனிதனுக்கும் தாம் செய்ய விரும்பியதை அவர் தீர்மானித்தார். அனைவரும் ஒரே நிலையில் படைக்கப்படவில்லை, ஆனால் சிலருக்கு நித்திய ஜீவனும் மற்றவர்களுக்கு நித்திய அழிவும் முன்னரே குறிக்கப்பட்டுள்ளது” என அவர் வரையறுத்தார். கால்வின் மேலும் இவ்வாறு உறுதியாக கூறினார்: “முதல் மனுஷன் தவறியதையும் அவனுடைய எதிர்காலம் நாசமடைவதையும் தேவன் முன்னறிந்திருந்தார், அது மட்டுமல்லாமல் தம்முடைய சுயவிருப்பத்திற்காகவே அதை முன்விதித்தார்.”
என்றபோதிலும், முன்விதித்தலை அல்லது விதிக்கொள்கையை போதிக்கிற மதத்தைச் சேர்ந்த எல்லா அங்கத்தினர்களும் தனிப்பட்ட விதத்தில் அதை நம்புவதில்லை. மத நூல்கள் மனிதனுடைய சுயாதீனத்தைப் பற்றி குறிப்பிடுவதை சரியாகவே சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். சொல்லப்போனால், மனித செயல்கள் அவனுடைய சுயதெரிவின் விளைவுகளாக இருந்தாலும்சரி அல்லது கடவுளால் முன்னரே தீர்மானிக்கப்பட்டவையாக இருந்தாலும்சரி, அவற்றைக் குறித்து பெரும் சர்ச்சை இருந்து வந்திருக்கிறது. உதாரணமாக, மனிதனுடைய செயல்களுக்காக நீதியுள்ள கடவுள் அவனை பொறுப்புள்ளவனாகவும் கணக்குக்கொடுக்க வேண்டியவனாகவும் ஆக்குவதால், தெரிவுசெய்வதற்கும் செயல்படுவதற்கும் மனிதனுக்கு சுயாதீனம் இருக்க வேண்டுமென சிலர் வாதாடியிருக்கின்றனர். மனிதனுடைய செயல்களை கடவுள் உண்டாக்குகிறார், ஆனால் அந்த மனிதன் எப்படியோ அவற்றைப் “பெற்றுக்கொண்டு” அவற்றிற்காக பொறுப்புள்ளவனாகிறான் என மற்றவர்கள் சொல்லியிருக்கின்றனர். எனினும், பொதுவாக சொல்லப்போனால், நம்முடைய அன்றாட வாழ்வில் நடைபெறும் பெரியதும் சிறியதுமாகிய எல்லா சம்பவமும் ஆண்டவனால் ஆணையிடப்பட்டிருக்கிறது என பலர் நம்புகின்றனர்.
நீங்கள் என்ன நம்புகிறீர்கள்? உங்களுடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை கடவுள் ஏற்கெனவே தீர்மானித்துவிட்டாரா? மனிதருக்கு உண்மையிலேயே சுயாதீனம், அதாவது தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய நடவடிக்கைகளின் பேரில் தெரிவுசெய்யும் திறமை இருக்கிறதா? எந்தளவுக்கு நம்முடைய விதி நம் சொந்த செயல்களின் பேரில் சார்ந்திருக்கிறது? இந்தக் கேள்விகளுக்குப் பின்வரும் கட்டுரை பதிலளிக்கும்.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
SEL/Sipa Press