மாரி—பாலையின் பூர்வ அரசி
“ஓர் அபூர்வ கண்டுபிடிப்பின் வெற்றியை என் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டாடிவிட்டு, இரவு படுக்கச் சென்றபோது பூரிப்பில் மிதந்தேன்” என சொன்னார் பிரெஞ்சு தொல்லியல் ஆராய்ச்சியாளர் ஆன்டிரே பாரோ. 1934, ஜனவரி மாதத்தில், சிரியாவிலுள்ள யூப்ரடீஸ் நதிக்கரையில் அமைந்த அபூ கேமால் என்ற சிறிய நகரத்திற்கு அருகே டெல் ஹாரிரீ என்ற இடத்தில் பாரோவும் அவரது குழுவினரும் ஒரு சிலையைத் தோண்டி எடுத்தார்கள். “லாம்கி-மாரி, மாரியின் ராஜா, என்லிலின் பிரதான ஆசாரியர்” என்ற எழுத்துப் பொறிப்பு அதில் இருந்தது. அதைக் கண்டுபிடித்ததும் அவர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள்.
ஒருவழியாக மாரி நகரம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது! பைபிள் மாணாக்கர்களுக்கு இந்தக் கண்டுபிடிப்பு எவ்விதத்தில் ஆர்வத்துக்குரியது?
ஏன் ஆர்வத்துக்குரியது?
மாரி நகரத்தைப் பற்றி பூர்வகால பதிவுகளில் சொல்லப்பட்டிருந்தாலும் அதன் சரியான இடம் எதுவென்பது நெடுங்காலமாய் புரியாப் புதிராகவே இருந்தது. சுமேரிய வேதபாரகர்களுடைய குறிப்பின்படி, ஒருகாலத்தில் மெசொப்பொத்தாமியா முழுவதையும் ஆண்டதாகத் தோன்றும் ஒரு ராஜவம்சத்தின் தலைநகராக மாரி நகரம் விளங்கியது. யூப்ரடீஸ் நதிக்கரைகளில் கட்டப்பட்ட இந்நகரம், வணிக மார்க்கங்களின் ‘நாற்சந்தியில்,’ மிகச் சாதகமான இடத்தில் அமைந்திருந்தது. அசீரியா, மெசொப்பொத்தாமியா, அன்டாலியா, மத்தியதரைக் கடலோரப் பகுதி ஆகியவையும் பாரசீக வளைகுடாவும் இணையும் இடத்தில் அமைந்திருந்தது. மெசொப்பொத்தாமியாவில் வெகு அரிதாகவே கிடைத்த மரம், உலோகம், கல் போன்றவை இந்நகரத்தின் வழியாக எடுத்துச் செல்லப்பட்டன. இவற்றின் மீது விதிக்கப்பட்ட வரிகள் இந்நகரத்தைச் செல்வசெழிப்பில் திளைக்க வைத்தன; அந்தப் பகுதி முழுவதையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவின. ஆனால் அக்காட் நகரை ஆண்ட சர்கோன், சிரியாவைக் கைப்பற்றியபோது இதன் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
சர்கோன் வெற்றி வாகை சூடிய பிறகு சுமார் 300 ஆண்டுகளுக்குப் பல்வேறு படைத் தளபதிகள் மாரியை ஆண்டார்கள். அவர்களுடைய ஆட்சியில் இந்நகரம் மீண்டும் ஓரளவு செல்வ செழிப்புடன் திகழ்ந்தது. ஆனால் அதன் கடைசி ஆட்சியாளரான சிம்ரி-லிம் என்பவரின் காலத்திற்குள் அதன் புகழ் மங்கியது. அவர் தன்னுடைய சாம்ராஜ்யத்தை வலுப்படுத்துவதற்காக அடுத்தடுத்து பல போர்களைத் தொடுத்தார், ஒப்பந்தங்களைச் செய்தார், அநேக பெண்களை மணந்தார். ஆனால் சுமார் பொ.ச.மு. 1760-ல் பாபிலோனின் அரசன் ஹமுராபி இந்நகரத்தைக் கைப்பற்றி, இதை அழித்துப்போட்டார்; இப்படியாக, “பூர்வ உலகின் ஒளிவிளக்குகளில் ஒன்றாக திகழ்ந்த ஒரு நாகரிகத்தை” இவர் முடிவுக்குக் கொண்டு வந்ததாக பாரோ சொன்னார்.
ஹமுராபியின் படையினர் மாரியை தரைமட்டமாக்கியபோது தங்களை அறியாமலேயே, இன்றைய தொல்லியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் சரித்திராசிரியர்களுக்கும் மாபெரும் உதவியைச் செய்தார்கள். சுடப்படாத களிமண் செங்கல் சுவர்களைத் தகர்த்தபோது, சில கட்டடங்களை 15 அடி உயரத்திற்கு இடிபாடுகளால் மூடினார்கள்; இவ்வாறு காலத்தின் கோலத்தால் சிதைவுறாதபடி அவை பாதுகாக்கப்பட வழிசெய்தார்கள். பண்டைய நாகரிகத்தைப் பற்றி தகவலளிக்கும் ஆலயங்கள், அரண்மனைகள் ஆகியவற்றின் இடிபாடுகளையும் எண்ணற்ற கலைப்பொருட்களையும், ஆயிரக்கணக்கான எழுத்துப் பொறிப்புகளையும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்திருக்கிறார்கள்.
மாரியின் இடிபாடுகள் நமக்கு ஏன் ஆர்வத்துக்குரியவை? முற்பிதாவாகிய ஆபிரகாம் வாழ்ந்த காலத்தைச் சற்று எண்ணிப் பாருங்கள். இவர் பொ.ச.மு. 2018-ல் பிறந்தார், அதாவது, ஜலப்பிரளயத்திற்குப் பிறகு 352 ஆண்டுகள் கழித்துப் பிறந்தார். இவர் நோவாவின் சந்ததியில் பத்தாவது தலைமுறையைச் சேர்ந்தவராக இருந்தார். கடவுளுடைய கட்டளையின்படி ஊர் என்ற தன் சொந்த நகரத்தை விட்டு ஆரான் என்ற இடத்திற்குச் சென்றார். பொ.ச.மு. 1943-ல் 75 வயதாக இருந்தபோது இவர் ஆரானிலிருந்து புறப்பட்டு கானான் தேசத்துக்குச் சென்றார். “மாரி நகரம் இருந்த காலத்தில், ஆபிரகாம் ஊர் நகரத்திலிருந்து [கானானிலுள்ள] எருசலேமுக்குப் புறப்பட்டு சென்றார்” என இத்தாலியைச் சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் பாவோலோ மாடீயை சொல்கிறார். எனவே மாரியின் கண்டுபிடிப்பு, கடவுளுடைய உண்மை ஊழியரான ஆபிரகாம் வாழ்ந்த காலத்தைக் கற்பனை செய்து பார்க்க நமக்கு உதவும் என்பதால் மதிப்புமிக்கதாய் இருக்கிறது.a—ஆதியாகமம் 11:10–12:4.
இடிபாடுகள் எதை வெளிப்படுத்துகின்றன?
மெசொப்பொத்தாமியாவைப் போலவே மாரியிலும் மதம் தழைத்தோங்கியது. கடவுட்களை வணங்குவது மனிதனின் கடமையென கருதப்பட்டது. பொதுவாக எந்த முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்கு முன்பும் கடவுட்களின் விருப்பத்தை அறியும் பழக்கமிருந்தது. ஆறு ஆலயங்களின் இடிபாடுகளை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். சிங்கங்களின் ஆலயமும் (பைபிளில் குறிப்பிடப்படும் தாகோனின் ஆலயமென இதை சிலர் கருதுகிறார்கள்) கருவள தேவதையான இஷ்டார், சூரிய கடவுள் ஷாமாஷ் ஆகியோரின் வழிபாட்டு தலங்களும் அவற்றுள் அடங்கும். ஆரம்பத்தில் இந்த ஆலயங்களில் தெய்வ சிலை இருந்தது, இதற்குப் படையல்களும் பிரார்த்தனைகளும் ஏறெடுக்கப்பட்டன. பக்தர்கள் மலர்ந்த முகத்துடன் ஜெபம் செய்வது போன்ற தங்கள் உருவங்களை ஆலய இருக்கைகளில் வைத்தார்கள்; இவ்வாறு செய்வதன் மூலம் தாங்கள் தொடர்ந்து வழிபட்டுக்கொண்டே இருப்பதாக நினைத்தார்கள். “பக்தரின் அந்த உருவம், இன்று கத்தோலிக்கர் வழிபாட்டில் பயன்படுத்தும் மெழுகுவர்த்தியைப் போல அந்தப் பக்தரைப் பிரதிநிதித்துவம் செய்தது, சொல்லப்போனால் மெழுகுவர்த்தியைவிட சிறந்த விதத்தில் பிரதிநிதித்துவம் செய்தது” என பாரோ குறிப்பிட்டார்.
டெல் ஹாரிரீயில் கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகவும் கண்கவர்ந்த ஒன்று, பிரமாண்டமான ஓர் அரண்மனையின் இடிபாடுகளாகும்; அந்த அரண்மனையில் கடைசியாக வசித்தவர் சிம்ரி-லிம் என்ற அரசர். ஆகவே அவரது பெயரிலேயே அது அழைக்கப்படுகிறது. பிரான்சு நாட்டு தொல்லியல் ஆராய்ச்சியாளர் ல்வீ-யூக் வான்சான் என்பவர் இதை “பூர்வ கிழக்கத்திய கட்டடக் கலையின் மணிக்கல்” என வர்ணித்தார். ஆறு ஏக்கருக்கும் அதிக பரப்பளவில் வீற்றிருந்த இக்கட்டடத்தில் சுமார் 300 அறைகளும் முற்றங்களும் இருந்தன. பழங்காலத்தில்கூட இந்த அரண்மனை உலக அற்புதங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. “அது அந்தளவுக்குச் சிறப்புற்று விளங்கியதால், சிரியாவின் கடற்கரைப் பகுதியிலிருந்த உகரிட் நகரத்தை ஆண்ட அரசர், ‘சிம்ரி-லின்னின் அரண்மனையைப்’ பார்ப்பதற்கென்றே தன் மகனை 600 கிலோமீட்டர் தொலைவுக்குத் தயங்காமல் அனுப்பி வைத்தார்” என ஷார்ஷ் ரூ என்பவர் பூர்வ ஈராக் என்ற தன் ஆங்கில புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
அந்த அரண்மனையின் கோட்டைக்கு ஒரேவொரு நுழைவாயில் இருந்தது; அதன் இரு புறமும் கோபுரங்கள் உயர்ந்தோங்கி நின்றன. விஜயம் செய்தோர் அதன் வழியே சென்று விஸ்தாரமான முற்றத்தை அடைந்தார்கள். அங்கு உயர்ந்த மேடையின் மீதிருந்த சிங்காசனத்தில் மாரியின் கடைசி அரசன் சிம்ரி-லிம் அமர்ந்து படைத்துறை, வணிகம், அரசியல் விவகாரங்கள், நியாய விசாரணைகள் ஆகியவற்றை கவனித்துக்கொண்டார்; அதோடு விஜயம் செய்தோரையும் பிற நாட்டு தூதுவர்களையும் சந்தித்தார். விருந்தினர் தங்குவதற்கு அறைகள் இருந்தன; அவர்களுக்கு அரசர் எப்போதும் பிரமாதமான விருந்துகள் அளித்து மகிழ்வித்தார். அவ்விருந்தில், வறுத்த, வாட்டிய அல்லது வேக வைத்த மாட்டுக் கறி, ஆட்டுக் கறி, மான் கறி, மீன் கறி ஆகியவையும் கோழிக் கறி, வாத்துக் கறி போன்றவையும் இடம்பெற்றன; இவை அனைத்தும், காரமான பூண்டு சாஸுகள், வகை வகையான காய்கறிகள், சீஸுகள் ஆகியவற்றுடன் பரிமாறப்பட்டன. உணவுக்குப் பிறகு, ஃபிரெஷ்ஷான பழங்கள், உலர்ந்த பழங்கள் அல்லது சர்க்கரையில் தோய்க்கப்பட்ட பழங்கள் ஆகியவையும், அழகிய வடிவமுடைய பாத்திரங்களில் சுடப்பட்ட கேக்குகளும் பரிமாறப்பட்டன. தாகத்தைத் தணிப்பதற்கு பியர் அல்லது வைன் வழங்கப்பட்டது.
அரண்மனையில் சுகாதார வசதிகளும் இருந்தன. குளியலறைகளில் செம்பழுப்பு நிற குளியல் தொட்டிகளும் இருக்கையற்ற கழிவறைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அறைகளின் தரையும் சுவர்களின் கீழ்ப்பகுதியும் சேதமடையாதிருக்க நிலக்கீல் பூசப்பட்டிருந்தது. செங்கற்களால் கட்டப்பட்ட சாக்கடைகள் வழியாக கழிவுநீர் வெளியேற்றப்பட்டது, நீர் கசியாதிருக்க நிலக்கீல் பூசப்பட்ட களிமண் குழாய்கள், சுமார் 3,500 வருடங்களுக்குப் பிறகு இன்னமும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளன. அந்தப்புர நாயகிகளில் மூவர் கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டபோது கெடுபிடி கட்டளைகள் பின்பற்றப்பட்டன. அத்தகைய பெண்கள் தனி அறையில் வைக்கப்பட்டார்கள். “யாரும் அவர்களுடைய கோப்பையில் குடிக்கக் கூடாது, அவர்களுடன் சேர்ந்து சாப்பிடக் கூடாது, அவர்களுடைய இருக்கையில் அமரக் கூடாது” என கட்டளையிடப்பட்டது.
ஆவணங்கள் எதைக் காட்டுகின்றன?
பாரோவும் அவரது குழுவினரும் சேர்ந்து அக்காடியன் மொழியில் ஆப்புவடிவ எழுத்துக்களில் எழுதப்பட்ட சுமார் 20,000 பலகை துண்டுகளைக் கண்டுபிடித்தார்கள். இந்தப் பலகை துண்டுகளில் கடிதங்களும், நிர்வாகம் மற்றும் பொருளாதாரம் பற்றிய உரைகளும் காணப்பட்டன. இந்த ஆவணங்களில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே பிரசுரிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவை 28 தொகுப்புகளாக உள்ளன. அவற்றால் என்ன பயன்? “மாரி நகரின் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன், மெசொப்பொத்தாமியாவிலும் சிரியாவிலும் பொ.ச.மு. 2000-க்குச் சற்று பிறகு இருந்த நிர்வாக அமைப்பு முறை, அன்றாட வாழ்க்கை முறை, அவற்றின் சரித்திரம் ஆகியவற்றைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாதிருந்தது. இந்தக் கண்டுபிடிப்பின் வாயிலாக சரித்திரத்தை அப்படியே துல்லியமாக தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது” என ஷான்-க்லோட் மார்கரான் சொல்கிறார்; இவர் மாரி தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் குழுவின் இயக்குநர் ஆவார். ஆவணங்களில் “குறிப்பிடப்பட்டுள்ள மக்களுக்கும் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கும் முற்பிதாக்களுக்கும் இடையே ஆச்சரியப்படத்தக்க விதத்தில் ஒற்றுமைகள் இருப்பதை அவை வெளிப்படுத்துகின்றன” என பாரோ சொன்னார்.
மாரியில் கண்டெடுக்கப்பட்ட பலகை துண்டுகள், சில பைபிள் பதிவுகளைப் புரிந்துகொள்ளவும் உதவின. உதாரணமாக, பகைவனின் நாயகிகளைச் சொந்தம் கொண்டாடுவது “அக்கால அரசர்களின் முக்கிய வாழ்க்கைப் பாணியாக இருந்தது” என்பதை அந்தப் பலகை துண்டுகள் சுட்டிக் காட்டுகின்றன. தாவீது ராஜாவின் வைப்பாட்டிகளுடன் உறவுகொள்ளும்படி அவரது மகன் அப்சலோமுக்கு, விசுவாச துரோகியான அகித்தோப்பேல் கொடுத்த ஆலோசனை புதியது ஒன்றும் அல்ல என்பது இதிலிருந்து தெரிகிறது.—2 சாமுவேல் 16:21, 22.
1933 முதற்கொண்டு டெல் ஹாரிரீயில் 41 தடவை தொல்லியல் ஆகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. எனினும் 270 ஏக்கர் பரப்பளவுள்ள மாரி நகரில் இதுவரை 20 ஏக்கர் மட்டுமே ஆராயப்பட்டுள்ளது. பாலையின் பூர்வ அரசியான மாரியில், வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் ஒருவேளை இனியும் வெளிச்சத்துக்கு வரலாம்.
[அடிக்குறிப்பு]
a பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்பட்டதற்குப் பிறகு பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்ட யூத கைதிகள் இந்த மாரியின் இடிபாடுகளின் ஓரமாக நடந்து சென்றிருக்கலாம்.
[பக்கம் 10-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பாரசீக வளைகுடா
ஊர்
மெசொப்பொத்தாமியா
யூப்ரடீஸ்
மாரி
அசீரியா
ஆரான்
அன்டாலியா
கானான்
எருசலேம்
மத்தியதரைக் கடல் (மகா கடல்)
[பக்கம் 11-ன் படம்]
இந்த ஆவணத்தில், மாரியின் அரசன் இயாஹ்டுன்-லிம் தன் கட்டுமான பணியைப் பற்றி பெருமையடித்துக் கொண்டான்
[பக்கம் 11-ன் படம்]
லாம்கி-மாரியின் இந்தச் சிலையைக் கண்டுபிடித்தது மாரியின் இருப்பிடத்தை துல்லியமாக அடையாளம் காண வழிசெய்தது
[பக்கம் 12-ன் படம்]
மாரியின் அதிகாரியான எபிஹீல், ஜெபிப்பது போல்
[பக்கம் 12-ன் படம்]
அரண்மனையிலுள்ள மேடை, தேவதையின் சிலை இதில் வைக்கப்பட்டிருக்கலாம்
[பக்கம் 12-ன் படம்]
மாரியின் இடிபாடுகள், சுடப்படாத களிமண் செங்கல் கட்டுமானம்
[பக்கம் 12-ன் படம்]
அரண்மனை குளியலறை
[பக்கம் 13-ன் படம்]
மாரியைக் கைப்பற்றிய நாராம்-சின் என்பவரின் வெற்றியைப் பறைசாற்றும் பூர்வ கற்பாளம்
[பக்கம் 13-ன் படம்]
அரண்மனை இடிபாடுகளில், ஆப்புவடிவ எழுத்துக்களிலுள்ள சுமார் 20,000 பலகை துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன
[பக்கம் 10-ன் படத்திற்கான நன்றி]
© Mission archéologique française de Tell Hariri - Mari (Syrie)
[பக்கம் 11-ன் படங்களுக்கான நன்றி]
ஆவணம்: Musée du Louvre, Paris; சிலை: © Mission archéologique française de Tell Hariri - Mari (Syrie)
[பக்கம் 12-ன் படங்களுக்கான நன்றி]
சிலை: Musée du Louvre, Paris; மேடையும் குளியலறையும்: © Mission archéologique française de Tell Hariri - Mari (Syrie)
[பக்கம் 13-ன் படங்களுக்கான நன்றி]
வெற்றி நினைவுச் சின்னம்: Musée du Louvre, Paris; அரண்மனை இடிபாடுகள்: © Mission archéologique française de Tell Hariri - Mari (Syrie)