வயது ஒரு தடையே அல்ல
தெற்கு ஸ்பெயினிலுள்ள மாலகாவைச் சேர்ந்த ஓர் அம்மாவும் மகளும் டிசம்பர் 19, 2009-ல் ஞானஸ்நானம் எடுத்தார்கள். அவர்கள் இருவருடைய பெயரும் ஆனா. 2009-ஆம் வருடம் ஸ்பெயினில் ஞானஸ்நானம் எடுத்த 2,352 பேரில் இவர்களும் அடங்குவர். ஆனால், இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. அதுதான் இவர்களுடைய வயது; அம்மாவுக்கு 107 வயது, மகளுக்கு 83 வயது.
யெகோவாவுக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க எது இவர்களைத் தூண்டியது? 1970-களின் துவக்கத்தில், ஆனாவை (மகள்) பக்கத்து வீட்டுப் பெண் ஒருத்தி யெகோவாவின் சாட்சி ஒருவருடைய வீட்டில் நடந்துவந்த புத்தகப் படிப்புக்கு கூப்பிடுவது வழக்கம். அவ்வப்போது ஆனா அங்கு செல்வார். இருந்தாலும், வேலை நிமித்தமாக ஆன்மீக ரீதியில் முன்னேற முடியவில்லை.
சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு, ஆனாவின் பிள்ளைகளில் சிலர் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்கள்; சில காலத்திற்குப் பிறகு அவர்கள் யெகோவாவின் சாட்சிகளானார்கள். அவர்களில் ஒருவர்தான் மாரி கார்மென்; ஒருவழியாக, அவர் தன் அம்மாவுக்கு பைபிள் மீதிருந்த ஆர்வத்தை மீண்டும் தூண்டிவிட்டு அவருக்கு பைபிள் படிப்பை ஆரம்பிக்க உதவினார். பிறகு, மாரி கார்மெனின் பாட்டி ஆனாவும் பைபிளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். கடைசியில், இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பத்துப் பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள்.
இரண்டு ஆனாக்களும், அதாவது அம்மாவும் மகளும், ஞானஸ்நானம் எடுத்த அந்நாள் அவர்களுக்கு இனிய நாளாக இருந்தது. “யெகோவா எனக்கு நிறைய நல்லது செய்திருக்கிறார், அவரைப் பற்றி அறிந்துகொள்ளும் பாக்கியத்தை அளித்திருக்கிறார்” என்று 107 வயது ஆனா சந்தோஷம் பொங்கச் சொன்னார். “இந்தப் பூமி பூஞ்சோலையாக மாறுவதற்கு முன்பே யெகோவாவுக்குச் சேவை செய்ய ஆசைப்படுகிறேன்; அவருடைய சித்தத்தைச் செய்ய வேண்டும், உடம்பில் தெம்பு இருக்கும்வரை ஆண்டவருடைய செய்தியை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும்; இதுதான் என் ஆசை” என்று மகளும் தன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டார்.
கணவரை இழந்த இந்த இருவருக்கும் கூட்டங்களில் கலந்துகொள்வது ஏன் அத்தனை ஆனந்தம்? “அவர்கள் ஒரு கூட்டத்தைக்கூட தவறவிடுவது இல்லை. காவற்கோபுர படிப்பின்போது பதில் சொல்ல எப்போதும் தயாராக இருக்கிறார்கள்” என்று அவர்களுடைய சபை மூப்பர் ஒருவர் சொல்கிறார்.
அவர்களுடைய முன்மாதிரி விதவை அன்னாளை நம் கண்முன் நிறுத்துகிறது; அவர் ‘ஆலயத்திற்கு வரத் தவறியதே இல்லை; விரதமிருந்து, மன்றாடி, இரவும் பகலும் பரிசுத்த சேவை செய்து வந்தார்.’ இதனால், குழந்தை இயேசுவைக் காணும் பாக்கியத்தைப் பெற்றார். (லூக். 2:36-38) அவருக்கு 84 வயதானபோதிலும் யெகோவாவுக்குச் சேவை செய்ய வயது ஒரு தடையாக இருக்கவில்லை; அந்த இரண்டு ஆனாக்களுக்கும் அப்படித்தான்.
பைபிள் விஷயங்களைக் கேட்க விரும்பும் வயதான உறவினர்கள் உங்களுக்கு இருக்கிறார்களா? அல்லது, வீட்டுக்கு வீடு ஊழியத்தின்போது நற்செய்திக்கு ஆர்வம் காட்டிய வயதான ஒருவரைச் சந்தித்திருக்கிறீர்களா? அப்படிப்பட்டவர்கள் இந்த அனுபவத்தில் பார்த்த ஆனாக்களைப் போல ஆகலாம்; ஏனெனில், உண்மைக் கடவுளான யெகோவாவுக்குச் சேவை செய்ய வயது ஒரு தடையே அல்ல.
[பக்கம் 25-ன் சிறுகுறிப்பு]
“யெகோவா எனக்கு நிறைய நல்லது செய்திருக்கிறார்”
[பக்கம் 25-ன் சிறுகுறிப்பு]
“இந்தப் பூமி பூஞ்சோலையாக மாறுவதற்கு முன்பே யெகோவாவுக்குச் சேவை செய்ய ஆசைப்படுகிறேன்”