துயரப்படுவோருக்கு என்றாவது சமாதானம் வருமா?
உங்களுக்கு மட்டுமல்ல ஆனால் மனிதவர்க்கம் முழுவதுக்குமே உண்டாயிருக்கும் துயரங்கள் முடிவுக்கு வருவதைக் காண நீங்கள் விரும்புகிறீர்களா? இந்த உதாரணங்களை சிந்தித்துப் பாருங்கள்:
சோனியா அதிகமாக துன்பப்பட்டிருக்கிறாள்.a தன்னுடைய கணவன் பத்து வருடங்களாக முறைகேடான உறவு வைத்திருப்பதை கண்டுபிடித்தது முதற்கொண்டு அவளுக்கு வேதனையாயிருந்தது. அடுத்து அவளுடைய இளைய மகன் HIV தொற்றி எய்ட்ஸ் காரணமாக இறந்துபோனான். இரண்டு வருடங்களுக்குப் பின் அவளுடைய மற்றொரு மகனும் நோய்வாய்ப்பட்டு சீக்கிரத்தில் அவனும்கூட எய்ட்ஸ் நோயால் இறந்துபோனான். “நோயுற்றிருந்த காலத்தில் அவன் அனுபவித்த கடைசி கட்டபோராட்டம் மிகவும் நீண்டதாக இருந்தது; அவன் அதிகமான மனச்சோர்வினால் துயரத்தில் இருந்தான், தலைமுடியை இழந்துவிட்டான், சரியான பார்வையும் இல்லாமல் போனது. அது மிகவும் வருத்தமாக இருந்தது,” என்று அதை நினைவுபடுத்திக் கூறுகிறாள்.
பிரேஸிலிய பல்கலைக்கழக மாணவியான ஃபேபியானா, உலகத்திலுள்ள சமுதாய அநீதிகளைக் குறித்து கவலையுள்ளவளாக இருந்தாள். பின்பு அவளுடைய வாழ்க்கையே சோகத்தில் முழ்கியது. மனச்சோர்விலிருந்த அவளுடைய சகோதரன் தற்கொலைசெய்து கொண்டான். ஃபேபியானா வேலையை இழந்துவிட்டபோது, இப்படிப்பட்ட கஷ்டங்களை அவள் அனுபவிப்பதற்கு யாரோ ஒருவர் அவளுக்கு சூனியம் வைத்திருக்கவேண்டும் என்பதாகவும், ஆகவே அவள் ஒரு பை-டி-சான்டு-வை (பில்லிசூனியக்காரரை) சென்றுபார்க்க வேண்டும் என்பதாகவும் அவளுடைய சிநேகிதி ஒருத்தி யோசனை கூறினாள்! ஆனால் பை-டி-சான்டுவால் அவளுடைய கஷ்டங்களைப் போக்க முடியவில்லை. மாறாக, ஃபேபியானா தனக்கு ஏற்பட்டிருக்கும் துன்பங்களின் காரணமாக மீளாதுயரத்தில் வீழ்ந்துவிட்டதாக உணர்ந்தாள்.
ஆனாவின் துயரம் வாழ்க்கையில் ஆரம்ப கட்டத்திலேயே துவங்கிவிட்டது. “எனக்கு ஒரு வயதாக இருந்தபோது, என்னுடைய அம்மா என்னை அலட்சியப்படுத்திவிட்டதால் என்னுடைய பாட்டிமாதான் என்னைக் கவனித்துக்கொண்டார்கள்” என்பதாக அவள் சொல்கிறாள். ஆனாவுக்கு மூன்றே வயதாக இருக்கும்போது அவளுடைய பாட்டிமா இறந்துவிட்டார்கள். ஆனா, ரியோடி ஜனீரோவில் உள்ள அநாதை இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டாள்; அவள் அங்கே 13 வயது வரையாக இருந்தாள். “அங்கே எங்களை மிகவும் மோசமாக நடத்தினார்கள், நான் மிகவும் முரண்டுபிடிப்பவளாக ஆனேன்” என்று சொல்கிறாள். “நான் வளர்ந்துவந்த போது, ஏறக்குறைய எல்லாவற்றையுமே எதிர்க்கிறவளாக இருந்தேன்.”
துயரம் எல்லா மனிதரையும் ஏதாவது ஒரு வகையில் பாதிப்பதாக தெரிகிறது. ஆம், செய்திகளை பார்க்கும்போதும், வாசிக்கும்போதும் அல்லது கேட்கும்போதெல்லாம் அனுதினமும் நாம் மனிதர்கள் எதிர்ப்படும் சோகங்களைப் பார்க்கிறோம். மாபெரும் செய்தித்தொடர்பு வசதிகளைக் கொண்ட நம்முடைய . . . சகாப்தம், உண்மையில் இடைவிடாமல் கெட்ட செய்திகளால் நாம் தாக்கப்படுவதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாமல் செய்துவிடுகிறது,” என்பதாக டாக்டர் பட்டம் பெற்றுள்ள மேரி சிக்ஸ் விலி எழுதுகிறார். “போர்கள், இயற்கை பேரழிவுகள், தொழிற்சாலை சார்ந்த விபத்துக்கள், பயங்கரமான சாலை விபத்துக்கள், குற்றச்செயல், பயங்கரவாதம், பாலியல் துர்ப்பிரயோகம், கற்பழிப்பு, வீட்டில் வன்முறை—இவை அனைத்தும் மன அதிர்ச்சியை 20-ஆம் நூற்றாண்டின் பயங்கரமான மற்றும் அன்றாட நிகழ்ச்சியாக ஆக்கியிருக்கிறது.” மனிதரின் அனுபவத்தை கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் மிகவும் யதார்த்தமாக பின்வருமாறு சுருக்கமாக கூறினார்: “சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.”—ரோமர் 8:22.
உங்களைப்பற்றி என்ன? நீங்கள் துயரப்பட்டுக்கொண்டிருக்கிறீர்களா? என்ன துயர்தீர்ப்பை நீங்கள் எதிர்ப்பார்க்கலாம்? உண்மையான சமாதானத்தை நீங்கள் எப்போதாவது அனுபவிப்பீர்களா? சோனியாவும் ஃபேபியானாவும் ஆனாவும் உண்மையான ஆறுதலையும் நடைமுறையில் சமாதானத்தையும் கண்டார்கள்! பின்வரும் கட்டுரையில் அதைப் பற்றி நீங்கள் வாசிக்கலாம்.
[அடிக்குறிப்புகள்]
a இந்தக் கட்டுரையில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.