“யெகோவாவிடமிருந்து எனக்கு உதவி வரும்”
திரளானோர் யெகோவாவின் வணக்கத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்
யெகோவாவின் உன்னத வணக்கத்திடம் எல்லா தேசத்து மக்களும் திரண்டு வருவார்கள் என்று நம் நாளைப் பற்றிய பைபிள் தீர்க்கதரிசனங்கள் முன்னறிவித்தன. உதாரணமாக, “சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன்” என ஆகாய் தீர்க்கதரிசி மூலம் யெகோவா அறிவித்தார். (ஆகாய் 2:7) அதேபோல் ஏசாயா, மீகா என்ற இரு தீர்க்கதரிசிகளும் நம்முடைய நாட்களைக் குறித்து, அதாவது ‘கடைசி நாட்களைக்’ குறித்து சொன்னபோது, எல்லா தேசத்தாரும் ஜனத்தாரும் யெகோவா விரும்பும் விதத்தில் அவரை வணங்குவார்கள் என்று முன்னுரைத்தார்கள்.—ஏசாயா 2:2-4; மீகா 4:1-4.
இந்தத் தீர்க்கதரிசனங்கள் நிஜமாகவே இன்று நிறைவேறிக் கொண்டிருக்கின்றனவா? உண்மைகளைக் கொஞ்சம் அலசிப் பார்க்கலாம். கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும், 230-க்கும் அதிகமான நாடுகளில் 31,10,000-க்கும் மேலான புதியவர்கள் தங்களை யெகோவாவிற்கு ஒப்புக்கொடுத்துள்ளனர். சொல்லப்போனால், இன்று யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்துவரும் 10 பேரில் 6 பேர் கடந்த பத்தாண்டில் முழுக்காட்டுதல் பெற்றவர்கள். அதோடு, 2004-ல் சராசரியாக இரண்டு நிமிடத்திற்கு ஒருவர் என்ற விகிதத்தில், அநேகர் கடவுளுக்கு தங்களை ஒப்புக்கொடுத்து, கிறிஸ்தவ சபையில் சேர்ந்திருக்கிறார்கள்.a
முதல் நூற்றாண்டைப் போலவே இன்றும், ‘அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்புகிறார்கள்.’ ஆனால் எண்ணிக்கை அதிகரிப்பதால் மட்டுமே கடவுளுடைய ஆசீர்வாதம் இருக்கிறதென சொல்ல முடியாது. அதேசமயத்தில் அப்படிப்பட்ட அதிகரிப்பு, ‘கர்த்தருடைய கரம்’ அவரது ஜனங்களோடு இருப்பதற்கு ஓர் அத்தாட்சியாக இருக்கிறது. (அப்போஸ்தலர் 11:21) யெகோவாவை வணங்க இத்தனை லட்ச ஜனங்களைத் தூண்டியிருப்பது எது? இப்படிப்பட்ட வளர்ச்சி உங்களை எப்படித் தனிப்பட்ட விதத்தில் பாதித்திருக்கிறது?
நல்மனமுள்ளோர் கவரப்படுகிறார்கள்
“என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” என்று இயேசு நேரடியாகக் கூறினார். (யோவான் 6:44) எனவே, ‘நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்களை’ யெகோவாதான் இழுத்துக்கொள்கிறார். (அப்போஸ்தலர் 13:48) அவர் தமது பரிசுத்த ஆவியைப் பயன்படுத்தி, ஜனங்களுக்கு ஆன்மீகத் தேவையை உணர்த்துகிறார். (மத்தேயு 5:3, NW) மனம் குழம்பித் தவிப்பதால், எதிர்கால நம்பிக்கைக்காக ஏங்குவதால், அல்லது துயரம் தாக்குவதால் சிலர் கடவுளைத் தேடுகிறார்கள்; இதன் விளைவாக, மனிதர்களுக்கான அவருடைய நோக்கத்தை அறிந்துகொள்கிறார்கள்.—மாற்கு 7:26-30; லூக்கா 19:2-10.
யெகோவாவின் வணக்கத்திடம் அநேகர் ஈர்க்கப்பட்டிருப்பதற்குக் காரணம், கிறிஸ்தவ சபையின் பைபிள் கல்வித் திட்டமே. இத்திட்டத்தின் வாயிலாக தங்களுடைய மனதைக் குடைந்த கேள்விகளுக்குரிய பதில்களைப் பெற்றிருக்கிறார்கள்.
“கடவுள் இருந்தால் நடக்கிற அநியாயத்தை எல்லாம் தடுத்து நிறுத்தியிருக்க மாட்டாரா?” இதுதான், இத்தாலியிலுள்ள போதைப்பொருள் வியாபாரியான டாவிடே என்பவரை வாட்டிய கேள்வி. மத விஷயங்களைப் பற்றி பேசுவதில் அவருக்கு ஆர்வமே இல்லாவிட்டாலும் வறட்டு வாக்குவாதம் செய்யவே அந்தச் சிக்கலான கேள்வியை அவர் கேட்டார். “இதற்கு நியாயமான, அதே சமயத்தில் திருப்தியான ஒரு பதில் கிடைக்கப் போவதில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் என்னோடு பேசிய அந்த யெகோவாவின் சாட்சி ரொம்பவே பொறுமைசாலி; எல்லா விஷயங்களுக்கும் பைபிளிலிருந்தே ஆதாரம் காட்டிப் பேசினார். அந்த உரையாடல் என் வாழ்க்கையை அடியோடு மாற்றிவிட்டது” என அவர் சொல்கிறார். இன்று டாவிடே, தன் வாழ்க்கையைச் சீர்ப்படுத்திக்கொண்டு யெகோவாவைச் சேவித்து வருகிறார்.
வாழ்க்கையின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் தேடி அலைந்த வேறு சிலர், யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பிடம் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு, குரோஷியாவிலுள்ள ஜாக்ரெப்பில் மனோதத்துவ மருத்துவராக பணியாற்றும் ஒரு பெண்ணுக்கும்கூட மனநோய் ஏற்பட்டது; ஆகவே, சிகிச்சை பெறுவதற்காக மற்றொரு பிரபல மனோதத்துவ நிபுணரை சந்தித்தார். அந்த நிபுணரோ, மருந்துமாத்திரை தருவதற்குப் பதிலாக ஜாக்ரெபிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தின் போன் நம்பரையும், தனக்குத் தெரிந்த ஒரு யெகோவாவின் சாட்சியுடைய பெயரையும் கொடுத்து இப்படிச் சொன்னார்: “இவர்களால் உங்களுக்கு உதவி செய்ய முடியும் என்று நினைக்கிறேன். ஒருவேளை உங்களை நான் சர்ச்சுக்குப் போகச்சொன்னால் அங்கு நீங்கள் வெறும் உயிரில்லாத சிலைகளைத்தான் பார்ப்பீர்கள். அங்கே யாரும் யாருடனும் பேச மாட்டார்கள். ஆன்மீக இருளே சூழ்ந்திருக்கும். ஆகவே சர்ச்சுக்கு போவதால் எந்தப் பிரயோஜனமும் இருக்காது. என்னுடைய மற்ற நோயாளிகளையும்கூட யெகோவாவின் சாட்சிகளிடம் அனுப்பினேன். நீங்களும் அவர்களிடம் போவதுதான் நல்லது.” இதைக் கேட்டு அந்தப் பெண்ணிற்கு ஆச்சரியமாகிவிட்டது. பிறகு, யெகோவாவின் சாட்சிகள் அவரை அன்போடு சந்தித்து பைபிளைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்கள். சில வாரங்களிலேயே இந்த மனோதத்துவ மருத்துவர் புன்னகையோடு இவ்வாறு சொன்னார்: ‘கடவுளுடைய நோக்கத்தைப் பற்றி தெரிந்துகொண்டது என் வாழ்க்கைக்கு அர்த்தத்தை அளித்தது.’—பிரசங்கி 12:13.
ஏதேனும் துயரம் தாக்குகையில் பைபிள் சத்தியத்தால் மட்டுமே உண்மையான ஆறுதலைத் தரமுடியும் என்பதை அநேகர் கண்டுணர்ந்திருக்கிறார்கள். கிரீஸில், ஏழு வயது பையன் ஒருவன் பள்ளியின் மொட்டை மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்துபோனான். சில மாதங்களுக்குப் பிறகு, இரண்டு சாட்சிகள் அந்தப் பையனின் தாயைச் சந்தித்து உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றி விளக்கி அவருக்கு ஆறுதல் சொன்னார்கள். (யோவான் 5:28, 29) அதைக் கேட்டவுடன் அந்தத் தாய் கதறிக்கதறி அழ ஆரம்பித்துவிட்டார். பிறகு, “பைபிளைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள உங்களுக்கு விருப்பம் இருந்தால் நாங்கள் எப்போது வரலாம்?” என அந்தச் சகோதரிகள் கேட்டார்கள். அதற்கு அவர், “இப்போதே வரலாம்” என்று சொல்லி உடனடியாக அவர்களை வீட்டிற்குள்ளே அழைத்துச் சென்றார். ஒரு பைபிள் படிப்பும் ஆரம்பிக்கப்பட்டது. இன்று அவருடைய முழு குடும்பமும் யெகோவாவைச் சேவிக்கிறார்கள்.
உங்களுக்கு இதில் பங்கிருக்கிறதா?
இதுபோன்ற சம்பவங்கள் உலகெங்கும் நடந்து வருகின்றன. பற்பல தேசங்களைச் சேர்ந்த பெருங்கூட்டமான உண்மை வணக்கத்தாரை யெகோவா கூட்டிச்சேர்த்தும் பயிற்றுவித்தும் வருகிறார். சர்வதேச கூட்டத்தாரான இவர்கள், இந்தப் பொல்லாத உலகிற்கு வரப்போகும் அழிவிலிருந்து தப்பித்து, நீதியுள்ள புதிய உலகத்தில் வாழப்போகும் சந்தோஷமான எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.—2 பேதுரு 3:13.
யெகோவா தேவனுடைய ஆசீர்வாதத்தால் வரலாறு காணாத இந்தக் கூட்டிச்சேர்க்கும் வேலை மாபெரும் வெற்றியை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருக்கிறது. (ஏசாயா 55:10, 11; மத்தேயு 24:3, 14) நீங்கள் இந்தச் சாட்சி கொடுக்கும் வேலையில் வைராக்கியமாக ஈடுபடுகிறீர்களா? அப்படி ஈடுபட்டால் கடவுளுடைய துணை உங்களுக்கு எப்போதும் இருக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கலாம். அதோடு, “யெகோவாவிடமிருந்து எனக்கு உதவி வரும்” என்ற சங்கீதக்காரனின் வார்த்தைகளை நீங்களும் எதிரொலிக்கலாம்.—சங்கீதம் 121:2, NW.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டர் 2005-ல் செப்டம்பர்/அக்டோபர் பக்கத்தைக் காண்க.
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
“என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்”—யோவான் 6:44
[பக்கம் 8-ன் பெட்டி]
இந்த அதிகரிப்பிற்குக் காரணம் யார்?
“கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா”—சங்கீதம் 127:1.
“தேவனே விளையச் செய்தார். அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச் செய்கிற தேவனாலே எல்லாமாகும்.”—1 கொரிந்தியர் 3:6, 7.