உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w05 9/15 பக். 4-7
  • இயேசு கிறிஸ்து யார்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இயேசு கிறிஸ்து யார்?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அவருடைய தொடக்கம் “அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது”
  • மனிதனாக அவருடைய வாழ்க்கை
  • இன்று இயேசு எங்கே இருக்கிறார்?
  • இயேசு கிறிஸ்து யார்?
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • இயேசு கிறிஸ்து—கடவுளால் அனுப்பப்பட்டாரா?
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
  • இயேசு கிறிஸ்து யார்?
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • இயேசு உண்மையிலேயே கடவுளுடைய குமாரனா?
    விழித்தெழு!—2006
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
w05 9/15 பக். 4-7

இயேசு கிறிஸ்து யார்?

நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசுவின் வார்த்தைகளை முதன்முதல் கேட்டபோது இளம் யூதனாகிய அந்திரேயா எப்படி மெய்சிலிர்த்துப் போயிருப்பார் என்பதை கற்பனை செய்து பாருங்கள்! தனது சகோதரனிடம் விரைந்து சென்று, “மேசியாவைக் [அதாவது கிறிஸ்துவைக்] கண்டோம்” என்று அவர் சொன்னதாக பைபிள் குறிப்பிடுகிறது. (யோவான் 1:41) எபிரெயு மற்றும் கிரேக்க மொழிகளில், “மேசியா” மற்றும் “கிறிஸ்து” என பொதுவாக மொழிபெயர்க்கப்படும் வார்த்தைகளின் அர்த்தம் “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்பதாகும். இயேசு அபிஷேகம் பண்ணப்பட்டவராக, அதாவது கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக​—⁠வாக்குப்பண்ணப்பட்ட தலைவராக​—⁠இருந்தார். (ஏசாயா 55:4) அவரைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் வேதாகமத்தில் உள்ளன, ஆகவே அந்தச் சமயத்தில் வாழ்ந்த யூதர்கள் அவரை எதிர்பார்த்திருந்தார்கள்.​—⁠லூக்கா 3:⁠15.

இயேசு உண்மையில் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று நமக்கு எப்படித் தெரியும்? பொ.ச. 29-⁠ல், இயேசுவுக்கு 30 வயதாக இருந்தபோது என்ன நடந்தது என்பதை நாம் கவனிக்கலாம். யோர்தான் நதியில் முழுக்காட்டப்படுவதற்கு முழுக்காட்டுபவரான யோவானிடம் இயேசு சென்றார். அச்சம்பவத்தை பைபிள் இவ்வாறு சொல்கிறது: “இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப் போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.” (மத்தேயு 3:16, 17) இந்த அங்கீகாரத்தைக் கேட்ட பின்பு, இயேசுவே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதில் யோவானுக்கு ஏதாவது சந்தேகம் இருந்திருக்குமா? இயேசுவின் மீது பரிசுத்த ஆவியை ஊற்றுவதன் மூலம் வரப்போகிற ராஜ்யத்தின் அரசராக இருப்பதற்கு யெகோவா தேவன் அவரை அபிஷேகம் செய்தார், அதாவது நியமித்தார். இவ்வாறு, கிறிஸ்துவாக, அதாவது அபிஷேகம் செய்யப்பட்டவராக, ஆனார். ஆனால் இயேசு எவ்வகையில் கடவுளுடைய குமாரனாக இருந்தார்? அவருடைய தொடக்கம் என்ன?

அவருடைய தொடக்கம் “அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது”

இயேசுவின் வாழ்க்கையை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். முதல் கட்டம், அவருடைய மனித பிறப்புக்கு நெடுங்காலத்திற்கு முன்பு தொடங்கியது. அவருடைய தொடக்கம் “அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது” என்று மீகா 5:2 சொல்கிறது. இயேசுதாமே இவ்வாறு கூறினார்: “நான் மேலேயிருந்து வந்தவர்”​—⁠அதாவது பரலோகத்திலிருந்து வந்தவர். (யோவான் 8:​23, திருத்திய மொழிபெயர்ப்பு) அவர் பரலோகத்தில் வல்லமை வாய்ந்த ஆவி ஆளாக இருந்தார்.

சிருஷ்டிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் ஓர் ஆரம்பம் இருந்ததால், கடவுள் தனிமையிலிருந்த ஒரு காலம் இருந்தது. என்றாலும், எண்ணிலடங்கா யுகங்களுக்கு முன்பு கடவுள் சிருஷ்டிக்கத் தொடங்கினார். அவருடைய முதல் சிருஷ்டி யார்? பைபிளின் கடைசி புத்தகம், இயேசுவை “தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதி” என அடையாளம் காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 3:​14) இயேசு ‘சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறானவர்.’ ஏனென்றால், “அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது, பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும் . . . அவரைக்கொண்டு . . . சிருஷ்டிக்கப்பட்டது.” (கொலோசெயர் 1:15, 16) ஆம், கடவுளால் நேரடியாக சிருஷ்டிக்கப்பட்ட ஒரே நபர் இயேசுவே. ஆகையால், கடவுளுடைய “ஒரே பேறான குமாரன்” என அவர் அழைக்கப்படுகிறார். (யோவான் 3:16) இந்த முதற்பேறான குமாரனுக்கு “வார்த்தை” என்ற பட்டப்பெயரும் உண்டு. (யோவான் 1:14) ஏன்? ஏனென்றால் அவர் ஒரு மனிதனாக பிறப்பதற்கு முன்பு பரலோகத்தில் கடவுளுடைய சார்பில் பேசுகிறவராய் இருந்தார்.

‘ஆதியில்’ ‘வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்டபோது’ யெகோவா தேவனுடன் அந்த “வார்த்தை” இருந்தார். ‘நமது சாயலாக மனுஷனை உண்டாக்குவோமாக’ என்று இவரிடமே கடவுள் சொன்னார். (யோவான் 1:1; ஆதியாகமம் 1:1, 26) யெகோவாவின் முதற்பேறான குமாரன் அங்கே தமது பிதாவின் அருகில் அவரோடு சுறுசுறுப்பாய் வேலை செய்து கொண்டிருந்தார். நீதிமொழிகள் 8:22-​31-⁠ல், அவர் இவ்வாறு சொல்வதாகக் குறிப்பிடப்படுகிறார்: “நான் அவர் [சிருஷ்டிகரின்] அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.”

யெகோவா தேவனும் அவருடைய ஒரே பேறான குமாரனும் ஒன்றுசேர்ந்து வேலை செய்கையில் எவ்வளவு நெருக்கமாக ஒருவரையொருவர் அறிந்திருப்பார்கள்! யுகா யுகங்களாக யெகோவாவுடன் வைத்திருந்த இந்த நெருங்கிய பந்தம் கடவுளுடைய குமாரனை ஆழமாக பாதித்தது. கீழ்ப்படிதலுள்ள இந்தக் குமாரன் தமது பிதாவான யெகோவா தேவனைப் போலவே ஆனார். சொல்லப்போனால், “அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம்” என்று கொலோசெயர் 1:15 குறிப்பிடுகிறது. நம்முடைய ஆன்மீக தேவையையும் கடவுளை அறிய வேண்டுமென்ற நம்முடைய இயல்பான ஆவலையும் திருப்தி செய்துகொள்ள இயேசுவைப் பற்றிய அறிவு ஏன் முக்கியம் என்பதற்கு இது ஒரு காரணமாக இருக்கிறது. இயேசு பூமியில் வாழ்ந்தபோது, எல்லாவற்றையும் யெகோவா எதிர்ப்பார்த்தபடியே செய்தார். ஆகையால் இயேசுவைப் பற்றி அறிவது, யெகோவாவைப் பற்றிய நம் அறிவையும் அதிகரிக்கும். (யோவான் 8:28; 14:8-10) ஆனால் இயேசு எப்படி பூமிக்கு வந்தார்?

மனிதனாக அவருடைய வாழ்க்கை

இயேசுவை இந்தப் பூமிக்கு கடவுள் அனுப்பியபோது அவருடைய வாழ்க்கையின் இரண்டாவது கட்டம் ஆரம்பமானது. இயேசுவின் உயிரை பரலோகத்திலிருந்து உண்மையுள்ள ஒரு யூத கன்னிகையான மரியாளின் கர்ப்பத்திற்கு அற்புதமாய் மாற்றுவதன் மூலம் யெகோவா இதைச் செய்தார். இயேசுவுக்கு மனித தகப்பன் இல்லாததால், அபூரணங்கள் எதையும் அவர் சுதந்தரிக்கவில்லை. யெகோவாவின் பரிசுத்த ஆவி, அதாவது செயல்படும் சக்தி, மரியாளின் மீது வந்தது, அவருடைய வல்லமை அவள்மேல் ‘நிழலிட்டு,’ அற்புதமாக கர்ப்பந்தரிக்கும்படி செய்தது. (லூக்கா 1:34, 35) ஆகையால், மரியாள் ஒரு பரிபூரண பிள்ளையைப் பெற்றெடுத்தாள். தச்சரான யோசேப்பின் தத்துப் பிள்ளையாக, ஓர் எளிய வீட்டில் வளர்ந்தார். குடும்பத்தில் மூத்த பிள்ளையாக இருந்தார்.​—⁠ஏசாயா 7:14; மத்தேயு 1:22, 23; மாற்கு 6:⁠3.

இயேசுவின் பிள்ளை பருவத்தைப் பற்றி அதிகம் தெரியாது, ஆனால் ஒரு சம்பவம் கவனிக்கத்தக்கது. இயேசு 12 வயதாக இருந்த சமயத்தில், பஸ்காவுக்காக அவருடைய பெற்றோர் அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்றார்கள், இவ்வாறு வருடாவருடம் செல்வது வழக்கம். அங்கிருந்தபோது, ஆலயத்தில் ‘போதகர் நடுவில் உட்கார்ந்துகொண்டு, அவர்கள் பேசுகிறதைக் கேட்பதிலும், அவர்களை வினாவுவதிலும்’ அதிக நேரம் செலவழித்துக் கொண்டிருந்தார். அதோடு, ‘அவர் பேசுவதைக் கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையும் குறித்துப் பிரமித்தார்கள்.’ ஆம், சிந்தையைத் தூண்டும் ஆன்மீகக் கேள்விகளை இளைஞரான இயேசு கேட்டுக்கொண்டிருந்தது மட்டுமல்லாமல், ஆச்சரியமூட்டும் புத்திக்கூர்மையான பதில்களையும் கொடுத்துக் கொண்டிருந்தார். (லூக்கா 2:41-50) நாசரேத் பட்டணத்தில் வளர்ந்து வந்தபோது, தச்சுத் தொழிலை பயின்றார், இதை அவர் தனது வளர்ப்பு தகப்பனிடமிருந்து கற்றார் என்பதில் சந்தேகமில்லை.​—⁠மத்தேயு 13:⁠55.

இயேசு 30 வயதாகும் வரை நாசரேத்தில் வாழ்ந்தார். பின்பு முழுக்காட்டுதல் பெறுவதற்கு முழுக்காட்டுபவரான யோவானிடம் சென்றார். முழுக்காட்டப்பட்ட பின்பு, தமது ஊழியத்தைத் தீவிரமாக ஆரம்பித்தார். தம்முடைய சொந்த ஊர் முழுவதிலும் பிரயாணம் செய்து, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை மூன்றரை ஆண்டுகள் அறிவித்து வந்தார். தாம் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதற்கு அத்தாட்சி அளித்தார். எப்படி? பல அற்புதங்களைச் செய்ததன் மூலமே, அதாவது மனிதத் திறமைக்கு அப்பாற்பட்ட வல்லமை வாய்ந்த கிரியைகளை நடப்பித்ததன் மூலமே.​—⁠மத்தேயு 4:​17; லூக்கா 19:37, 38.

இயேசு கனிவும் ஆழ்ந்த இரக்கமுமுள்ள மனிதராகவும் விளங்கினார். முக்கியமாக, மற்றவர்களைக் கருதிய விதத்திலும் நடத்திய விதத்திலும் அவருடைய கனிவு தெளிவாகத் தெரிந்தது. இயேசு அணுக முடிந்தவராகவும் தயவுள்ளவராகவும் இருந்ததால் ஆட்கள் அவரிடம் கவர்ந்திழுக்கப்பட்டனர். சிறு பிள்ளைகளுங்கூட அவரிடம் பயமின்றி இருந்தனர். (மாற்கு 10:13-16) தாம் வாழ்ந்த காலத்தில், பெண்களை சிலர் தாழ்வாகக் கருதியபோதிலும் இயேசு அவர்களை மதிப்புடன் நடத்தினார். (யோவான் 4:9, 27) ஏழைகளும் ஒடுக்கப்படுவோரும் ‘தங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலைக்’ கண்டடைய உதவினார். (மத்தேயு 11:28-30) அவர் கற்பித்த முறை தெளிவானதாகவும் எளிமையானதாகவும் நடைமுறையானதாகவும் இருந்தது. செவிகொடுத்துக் கேட்போருக்கு மெய்க் கடவுளைப் பற்றி தெரியப்படுத்துவதற்கு இருதயப்பூர்வமான ஆவல் இருந்ததை அவர் கற்பித்த காரியங்கள் பிரதிபலித்தன.​—⁠யோவான் 17:6-8.

அற்புதங்களைச் செய்வதற்கு கடவுளுடைய பரிசுத்த ஆவியைப் பயன்படுத்தி இயேசு பரிவிரக்கத்துடன் நோயுற்றவர்களையும் துயருற்றவர்களையும் நலம்பெறச் செய்தார். (மத்தேயு 15:30, 31) உதாரணமாக, குஷ்டரோகி ஒருவன் அவரிடம் வந்து: “உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்” என்று சொன்னான். இயேசு என்ன செய்தார்? அவர் தமது கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு” என்றார். உடனே அவன் சுகமடைந்தான்.​—⁠மத்தேயு 8:​2-4.

திரளான ஜனங்கள் இயேசுவிடம் வந்து, உண்பதற்கு ஒன்றுமில்லாமல் அவருடன் மூன்று நாட்கள் தங்கியிருந்த ஒரு சந்தர்ப்பத்தையும் கவனியுங்கள். ஜனங்களுக்காக அவர் பரிதபித்து, ‘ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, நாலாயிரம் பேராயிருந்த’ அவர்களை அற்புதமாகப் போஷித்தார். (மத்தேயு 15:32-38) மற்றொரு சந்தர்ப்பத்தில், தமது நண்பர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த புயல் காற்றை அமைதிப்படுத்தினார். (மாற்கு 4:37-39) மரித்தோரை உயிர்த்தெழுப்பினார், அதாவது உயிருக்குத் திரும்பக் கொண்டுவந்தார்.a (லூக்கா 7:22; யோவான் 11:43, 44) அபூரண மனிதர் எதிர்கால நம்பிக்கையைப் பெற தமது பரிபூரண மானிட உயிரையுங்கூட மனப்பூர்வமாய் கொடுத்தார். ஜனங்கள்மீது இயேசுவுக்கு எவ்வளவு ஆழ்ந்த அன்பு!

இன்று இயேசு எங்கே இருக்கிறார்?

இயேசு 33 1/2 வயதில் வாதனையின் கழுமரத்தில் மரித்தார்.b ஆனால் மரணம் அவருடைய வாழ்க்கையின் முடிவாக இருக்கவில்லை. ஏறக்குறைய மூன்று நாட்களுக்குப் பின்பு யெகோவா தேவன் தமது குமாரனை ஓர் ஆவி ஆளாக உயிர்த்தெழுப்பியபோது, அவருடைய வாழ்க்கையின் மூன்றாவது கட்டம் தொடங்கியது. உயிர்த்தெழுதலுக்குப் பின்பு, பொ.ச. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான ஆட்களுக்கு இயேசு காட்சியளித்தார். (1 கொரிந்தியர் 15:3-8) அதன் பின்பு, ‘தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து,’ அரசதிகாரத்தைப் பெறுவதற்குக் காத்திருந்தார். (எபிரெயர் 10:12, 13) சமயம் வந்தபோது, அரசராக இயேசு ஆளத் தொடங்கினார். ஆகவே, இன்று இயேசுவை நாம் எவ்வாறு கற்பனை செய்து பார்க்க வேண்டும்? மரிக்கும் தறுவாயில் இருக்கிற, பல பாடுகள் படுகிற ஓர் ஆளாகவா? அல்லது வணங்க வேண்டிய ஒருவராகவா? இயேசு இன்று மனிதனாகவும் இல்லை, சர்வவல்லமையுள்ள கடவுளாகவும் இல்லை. மாறாக, வல்லமை வாய்ந்த ஆவி சிருஷ்டியாக, ஓர் அரசராக இருக்கிறார். வெகு சீக்கிரத்தில், தொல்லை நிறைந்த இப்பூமியின் மீது தமது ஆட்சியைத் தொடங்குவார்.

இயேசு கிறிஸ்து வெள்ளைக் குதிரையின் மீது உட்கார்ந்திருக்கும் ஓர் அரசராகவும் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம் பண்ணுவதற்கு வருகிறவராகவும் வெளிப்படுத்துதல் 19:11-​16 அடையாளப்பூர்வ மொழிநடையில் விவரிக்கிறது. அவர் “புறஜாதிகளை வெட்டும்படிக்கு . . . கூர்மையான பட்டயம்” வைத்திருக்கிறார். ஆம், பொல்லாதவர்களை அழிப்பதற்கு இயேசு தமது பெரும் வல்லமையைப் பயன்படுத்துவார். பூமியில் இருந்தபோது அவர் வைத்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்குப் பிரயாசப்படுவோரைப் பற்றியென்ன? (1 பேதுரு 2:21) அவரும் அவருடைய பிதாவும் அவர்களை ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தத்தில்,’ அதாவது அர்மகெதோன் என்று அடிக்கடி அழைக்கப்படுகிற யுத்தத்தில், பாதுகாப்பார்கள்; அப்பொழுது, கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் பூமிக்குரிய பிரஜைகளாக என்றும் அவர்கள் வாழ்வார்கள்.​—⁠வெளிப்படுத்துதல் 7:9, 14; 16:14, 16; 21:3, 4.

தமது சமாதான ஆட்சியின்போது, முழு மனிதவர்க்கத்தினருக்காகவும் எப்பேர்ப்பட்ட அற்புதங்களை இயேசு நடப்பிக்கப் போகிறார்! (ஏசாயா 9:6, 7; 11:1-10) வியாதியை ஒழித்து, மரணத்தை நீக்குவார். கோடிக்கணக்கானோரை உயிர்த்தெழுப்பி, பூமியில் என்றென்றும் வாழும் வாய்ப்பைக் கொடுப்பதற்கு இயேசுவை கடவுள் பயன்படுத்துவார். (யோவான் 5:28, 29) ராஜ்ய ஆட்சியில் நம் வாழ்க்கை எவ்வளவு அதிசயமாக இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. ஆகவே, நாம் தொடர்ந்து பைபிள் அறிவைப் பெற்று, இயேசு கிறிஸ்துவுடன் நன்கு அறிமுகமாவது முக்கியம்.

[அடிக்குறிப்புகள்]

a இயேசு நடப்பித்த அற்புதங்கள் அன்று பொதுவாக அறியப்பட்டிருந்தன. ‘பல அடையாளங்களை அவர் நடப்பித்தார்’ என்பதை இயேசுவின் சத்துருக்களும் ஒப்புக்கொண்டார்கள்.​—⁠யோவான் 11:47, 48.

b கிறிஸ்து ஒரு கழுமரத்தில் மரித்தாரா அல்லது ஒரு சிலுவையில் மரித்தாரா என்பதைப் பற்றிய விளக்கத்திற்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கங்கள் 89-90-ஐக் காண்க.

[பக்கம் 7-ன் பெட்டி]

இயேசு சர்வவல்லமையுள்ள கடவுளா?

மதப்பற்றுள்ள பலர், இயேசுவை கடவுளென சொல்கின்றனர். வேறுசிலர், கடவுள் ஒரு திரித்துவம் என்று கூறுகின்றனர். இப்போதனையின்படி, “பிதாவும் கடவுள், குமாரனும் கடவுள், பரிசுத்த ஆவியும் கடவுள், ஆனால் மூன்று கடவுட்கள் அல்ல, ஒரே கடவுள்.” மூவரும் “சரிசம-நித்தியர், சரிசமமானோர்” என நம்பப்படுகிறது. (த கேத்லிக் என்ஸைக்ளோப்பீடியா) இத்தகைய கருத்துகள் சரியானவையா?

யெகோவா தேவனே படைப்பாளர். (வெளிப்படுத்துதல் 4:11) அவருக்கு ஆரம்பமோ முடிவோ இல்லை, அவரே சர்வவல்லவர். (சங்கீதம் 90:⁠2) மறுபட்சத்தில், இயேசுவுக்கோ ஓர் ஆரம்பம் இருந்தது. (கொலோசெயர் 1:15, 16) கடவுளைத் தமது பிதா என்று குறிப்பிட்டு, இயேசு இவ்வாறு கூறினார்: “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.” (யோவான் 14:28) சில விஷயங்கள் தமக்கும் தெரியாது, தேவதூதர்களுக்கும் தெரியாது, பிதா ஒருவருக்கே தெரியும் என்றும் இயேசு விளக்கினார்.​—⁠மாற்கு 13:⁠32.

மேலும், இயேசு தமது பிதாவிடம் இவ்வாறு ஜெபித்தார்: “என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது.” (லூக்கா 22:42) மேலான ஒருவர் இல்லையென்றால், இயேசு யாரிடம்தான் ஜெபித்துக் கொண்டிருந்தார்? அதோடு, மரித்தோரிலிருந்து இயேசுவை உயிர்த்தெழுப்பியது கடவுளே, அவராகவே உயிர்த்தெழவில்லை. (அப்போஸ்தலர் 2:32) ஆகையால், இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பும்சரி, பூமியிலிருந்த சமயத்திலும்சரி, பிதாவும் குமாரனும் சமமானவர்கள் அல்ல என தெளிவாகத் தெரிகிறது. இயேசு பரலோகத்திற்கு ஏறிச்சென்ற பிறகு என்ன ஆனது? ஒன்று கொரிந்தியர் 11:3 இவ்வாறு கூறுகிறது: ‘கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறார்.’ சொல்லப்போனால், குமாரன் எப்பொழுதும் கடவுளுக்குக் கீழ்ப்பட்டிருப்பார். (1 கொரிந்தியர் 15:⁠28) எனவே, இயேசு சர்வவல்லமையுள்ள கடவுள் அல்ல, மாறாக கடவுளுடைய குமாரன் என்று வேதவசனங்கள் காட்டுகின்றன.

திரித்துவத்தின் மூன்றாம் நபர் என பொதுவாக அழைக்கப்படும் பரிசுத்த ஆவி ஓர் ஆளல்ல. கடவுளிடம் ஜெபிக்கையில், சங்கீதக்காரன் இவ்வாறு கூறினார்: “நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்.” (சங்கீதம் 104:30) இந்த ஆவி கடவுள்தாமே அல்ல; அவர் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறாரோ அதையெல்லாம் செய்வதற்கு அவர் அனுப்பும் சக்தி. அதன் மூலமே இந்த வானத்தையும் பூமியையும் அதிலுள்ள எல்லா ஜீவராசிகளையும் கடவுள் படைத்தார். (ஆதியாகமம் 1:2; சங்கீதம் 33:6, NW) பைபிளை எழுதிய மனிதரை ஏவுவதற்கு கடவுள் தமது பரிசுத்த ஆவியைப் பயன்படுத்தினார். (2 பேதுரு 1:20, 21) அப்படியானால், திரித்துவம் ஒரு பைபிள் போதனை அல்ல.c “நம்முடைய கடவுளாகிய யெகோவா ஒரே யெகோவா” என பைபிள் கூறுகிறது.​—⁠உபாகமம் 6:⁠4, NW.

[அடிக்குறிப்பு]

c கூடுதலான தகவலுக்கு, நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? என்ற சிற்றேட்டைக் காண்க. இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 5-ன் படம்]

இயேசு முழுக்காட்டுதல் பெற்ற சமயத்தில் கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்டவராக ஆனார்

[பக்கம் 7-ன் படம்]

கடவுள் நியமித்த ஊழியத்தைச் செய்ய இயேசு தமது சக்தியை செலவிட்டார்

[பக்கம் 7-ன் படம்]

இயேசு இன்றைக்கு வல்லமை வாய்ந்த அரசராகத் திகழ்கிறார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்